38. தொடட்டுமா தொல்லை நீக்க

4.9
(98)

தொல்லை – 38

இனி கதிரைப் பற்றியோ மதுராவைப் பற்றியோ சிந்திக்கவே கூடாது என்ற உறுதியோடு தரையில் படுத்திருந்தாள் அஞ்சலி.

அழுது அழுது அவளுக்கு கண்ணீர் சுரப்பிகள் வற்றிப் போயிருந்தன.

என்னதான் அவர்களைப் பற்றி சிந்திக்கக் கூடாது என மூளைக்கு அவள் கட்டளை விதித்தாலும் கூட அந்தக் கட்டளை எல்லாம் கட்டுப்பாடுகள் இன்றி கரைந்து போய்விட அவர்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தாள் அவள்.

மதுராவும் மாமாவும் சேர்ந்து எங்கோ சென்றுவிட்டார்கள் என்பது அவளுடைய மனதிற்கு உறுதியாகத் தெரிந்தாலும் கண்ணால் பார்த்துவிட்டால் அடுத்த முடிவை எடுப்பது சுலபமாக இருக்கும் என எண்ணியவள் மெல்ல எழுந்து அமர்ந்தாள்.

நேரம் இரவு பதினொரு மணியைக் காட்டியது.

அழுது வீங்கிச் சிவந்து போயிருந்த முகத்தை நீரால் கழுவிவிட்டு தன் அறையை விட்டு வெளியே வந்தவள் நேராக மதுராவின் அறைக்குச் சென்று கதவைத் தட்டினாள்.

எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

அவள் இந்த அறையில் இல்லை என்றதும் அவளுடைய சந்தேகம் ஊர்ஜிதமானது.

இந்த மிகப்பெரிய ரிசார்ட்டில் அவர்கள் இருவரும் எந்த அறையில் இருக்கிறார்கள் அல்லது எங்கே இருப்பார்கள் என்று அவளுக்குத் தெரியவில்லை.

வெளியே சென்று அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு அவளுக்கு தெம்பும் இல்லை.

‘விடிந்ததும் இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்…’ என நினைத்தவளுக்கு நெஞ்சு அடைத்துக் கொண்டு வந்தது.

வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் மீண்டும் தன் அறைக்கே செல்லலாம் என்ற எண்ணத்தில் திரும்பினாள்.

“ஏய்… அஞ்சலி… நீ இங்கே என்ன பண்ற…? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதானே நான் உன்னை கதிர்கூட பார்த்தேன்…? ஓஹ் ஓகே… ஓகே… அப்போ அங்க கதிர் கூட இருந்தது மதுராவா…?” என இன்று காலையில் சந்தித்த பெண் ஒருவர் அவளிடம் கேட்டார்.

அவ்வளவுதான்… அஞ்சலி உடைந்து விட்டாள்.

“உன்னோட ட்ரெஸ்ஸ பார்த்தா நீ அஞ்சலின்னுதான் தோணுது… இல்ல… நான்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேனா…? நீ அஞ்சலியா… மதுராவா…?” என அவர் சந்தேகத்துடன் மீண்டும் கேட்க,

“நா… நான்… அஞ்சலி…” என மெல்ல முனகினாள் அவள்.

“என்னால கண்டுபிடிக்கவே முடியல… நீதான் கதிர் கூட இருக்கேன்னு நினைச்சேன்… ட்ரெஸ் கொஞ்சம் மாடர்னா இருந்துச்சா… ஒருவேளை நைட் பார்ட்டின்னு மாடர்ன் ட்ரெஸ் போட்டிருக்கியோன்னு நினைச்சேன்… இங்க வந்ததுக்கு அப்புறம்தான் தெரியுது அது நீ இல்ல மதுரான்னு.. ஓகே… ஓகே… கதிர் நல்லா என்ஜாய் பண்றான் போல…” எனச் சிரித்துவிட்டு அவர் கடந்து சென்றுவிட அஞ்சலிக்கு அந்த இடத்தை விட்டு அசையவே முடியவில்லை.

மொத்தமாக பலம் இழந்து துவண்டு போனாள் அவள்.

‘என் மாமாவா இப்படி…? கல்யாணம் முடிஞ்சப்புறம் கூட என் அனுமதிக்காக எவ்வளவு நாளா காத்திருந்தார்… தவறா அத்துமீறி கூட என்னைத் தொட்டதில்லையே… அப்படிப்பட்டவர் ஏன் இப்படித் தடுமாறிப் போனார்…? அக்காவைப் பிடித்திருந்தால் நேரடியாக என்னிடம் கூளி இருக்கலாமே… நா.. நான் விலகிப் போயிருப்பேனே… என்னையும் இங்கே அழைத்து வந்து ஏன் இப்படி ஒரு சித்திரவதையை எனக்குக் கொடுக்க வேண்டும்…?

நான் அழும்போதெல்லாம் அவ்வளவு அக்கறை காட்டினாரே… நான் தான் முக்கியம்னு சொன்னாரே… அனைத்தும் பொய்யா…? ஏன் இந்த கபட நாடகம்…?’

மதுராவின் அறையின் முன்பு நின்று மருகியவாறு அழுது கொண்டே நின்றாள் அவள்.

அவளுக்கு சுற்றம் மறந்து போனது.

அந்த வழியே வந்த ஹோட்டல் ஊழியர் ஒருவரோ “என்னாச்சு மேடம்…? ஏதாவது வேணுமா…? இல்ல… ஏதாவது பிரச்சனையா…?” என அவளிடம் அக்கறையுடன் விசாரித்தார்.

அப்போதுதான் தான் இன்னும் அதே இடத்தில் நின்று அநாதை போல அழுது கொண்டிருக்கிறோம் என்ற அவலம் அவளுக்கு உரைத்தது.

மறுப்பாக தலையசைத்துவிட்டு வேகமாக அந்த ஹோட்டலை விட்டு வெளியே வந்தவள் இருளில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடலை நோக்கி அழுதவாறே நடக்கத் தொடங்கினாள்.

அவளுடைய மஞ்சள் நிற துப்பட்டா கடல் அலையின் காற்றில் படபடத்தது.

அந்த ஊழியனோ இன்று சிரித்த முகத்துடன் கதிருடன் உணவை ரசித்து உண்டு கொண்டிருந்த பெண் இப்போது தேம்பித் தேம்பி அழுதபடி கடலை நோக்கி செல்வதைக் கண்டு அதிர்ந்து போனான்.

அடுத்த நொடியே அந்த ஹோட்டலில் தங்கியிருந்த அனைவரின் தகவல்கள் இருக்கும் கோப்பை எடுத்தவன் கதிரின் அலைபேசி எண்ணைக் கண்டு பிடித்து அந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்தான்.

ரிங் சென்றதே தவிர மறு புறத்தில் இருந்து கதிர் அந்த அழைப்பை ஏற்கவேயில்லை.

*****

“ஹேய் இனி நீ எனக்குதான் சொந்தம்..” என மதுராவைப் பார்த்தவாறு கூறினான் அந்த டீலர்‌.

மதுராவின் பயந்த பார்வையோ கதிரை நோக்கித் திரும்பியது.

தன்னைப் பணயம் வைத்து தோற்றுவிட்டு “சாரி மதுரா… இந்த முறை லக் என் பக்கம் இல்லை போல… நீ அவர் கூடவே கிளம்பிரு…” என்றவாறு கதிர் எழுந்து கொள்ள மதுராவுக்கு கால்கள் கிடுகிடுவென நடுங்கத் தொடங்கின.

தன்னருகே காவலர்கள் என்ற பெயரில் நிற்கும் இந்தத் தடியர்களைத் தாண்டி தப்பித்துச் செல்ல முடியாது என்று அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.

“சூதாடி என்னை வித்துட்டு போறியே டா… நீ எல்லாம் நல்லா இருப்பியா…? உன்னை நம்பி வந்தேன்ல… என்னை நானே செருப்பால அடிச்சுக்கணும்… நானாவது பரவால்ல… ஆமா நான் பணத்துக்காகத்தான் வந்தேன்… உன்னோட வாழ்க்கையைப் பார்த்து நல்லா வாழணும்னு ஆசைப்பட்டு வந்தேன்… ஆனா உன்னை நம்பி வந்திருக்கிற அஞ்சலியைப் பத்தியாவது நீ யோசிச்சு பார்த்தியா…? என்ன மாதிரி அவளையும் நீ விக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்…? உன்னை எல்லாம் போலீஸ்ல புடிச்சு கொடுக்கலைன்னா என் பேரு மதுரா இல்ல…” என கோபத்தில் திட்டியவள் இறுதியில் கதறி அழுதாள்.

“ப்ளீஸ்… என்னை விட சொல்லு… இங்க இருக்க யாரையுமே எனக்கு தெரியாது… பயமா இருக்கு… தயவு செஞ்சு… என்னை விட சொல்லு…” என்று மிகவும் கெஞ்சிக் கதறினாள்.

“சாரி கேம் இஸ் ஓவர்..” என்றான் கதிர்.

அவளுக்கோ தலை சுற்றியது.

உடலில் வியர்வை ஆறாக வழிந்தது.

“காட்ஸ் இந்த பொண்ணை இழுத்துட்டுப் போய் என்னோட ரூம்ல லாக் பண்ணுங்க..” என உத்தரவிட்டான் அந்த டீலர்.

அந்நேரம் “அவளை விட்ருங்க…” என அழுத்தமான குரல் ஒலித்தது.

கதிரின் பார்வை சற்று தள்ளி நின்ற ஒரு ஆடவனின் மீது விழுந்தது.

மதுராவோ அந்த பரிச்சயமான குரலில் வேகமாகத் திரும்பிப் பார்த்தாள்.

அங்கே இறுகிய தோற்றத்துடன் நின்றிருந்தான் அர்ஜுன்.

“அர்ஜுன்…” என்று அலறியவளுக்கு எப்படித்தான் அத்தனை வேகம் வந்ததோ… தன்னைப் பிடித்திருந்த இருவரையும் ஒரே தள்ளாக தள்ளிவிட்டு அர்ஜுனை நோக்கி வேகமாகப் பாய்ந்து ஓடியவள் அவனை இறுக அணைத்து கதறி அழத் தொடங்கினாள்.

“என்னை எப்படியாவது இங்கிருந்து கூட்டிட்டு போ… எனக்கு பயமா இருக்கு… இவங்க என்னை கூட்டிட்டு போறேன்னு சொல்றாங்க… தயவு செஞ்சு… என்னை எங்கேயாவது கூட்டிட்டு போ… ப்ளீஸ் காப்பாத்து…” என துடிதுடித்து கதறி அழுதவளை அணைத்துக் கொண்டான் அர்ஜுன்.

“பயப்படாத மது… நான் வந்துட்டேன்ல… பயப்படாத… நாம இங்கிருந்து போய்டலாம்…” என்று அவளைச் சமாதானப்படுத்த முயற்சித்தான் அவன்.

ஆனால் அவளுக்கு உடல் நடுக்கம் குறையவே இல்லை.

எங்கே அர்ஜுனை விட்டுப் பிரிந்தால் இந்த பவுன்ஸர்கள் மீண்டும் என்னை இழுத்துச் சென்றுவிடுவார்களோ என்ற பயம் அவளை ஆக்கிரமித்தது.

விழிகளில் கண்ணீர் வழிந்து முக்கெல்லாம் சிந்தி ஆளே மாறிப் போயிருந்தாள் அவள்.

எப்படியாவது இந்த சூழ்நிலையிலிருந்து தப்பித்துச் செல்ல வேண்டும் என்ற கதறலோடு போராடிக் கொண்டிருந்த மதுராவை அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்வேலன்.

தன் கையணைப்புக்குள் கதறிக் கொண்டிருந்த மதுவின் கரத்தை இறுகப் பற்றிய அர்ஜுன் “வா… போகலாம்…” என்றவாறு அவளை அழைத்துக் கொண்டு அந்த பார்ட்டி நடக்கும் இடத்தை விட்டு வெளியேற முயன்றான்.

அதே கணம் கதிரின் சிந்தனையைத் திசை திருப்பும் வகையில் அவனுடைய அலைபேசி ஒலித்தது.

ஏற்கனவே இதே எண்ணிலிருந்து மூன்று முறைகளுக்கு மேலாக அழைப்பு வந்து கொண்டிருந்ததால் ‘ஏதும் அவசரமாக இருக்குமோ…’ என்று எண்ணியவாறு அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தான் அவன்.

மறுபக்கம் அந்த ஹோட்டல் ஊழியர் கூறிய வார்த்தைகளில் அதிர்ந்து போனான்.

“வாட்…? இப்போ அவ எங்க இருக்கா…? உங்களுக்குத் தெரியுமா…?” என அந்த இடமே அதிரும் வகையில் கத்தினான் அவன்.

அங்கே இருந்த அனைவரின் பார்வையும் கதிரின் மீது திரும்பியது.

ஒலித்துக் கொண்டிருந்த பாடல் சட்டென நிறுத்தப்பட்டது.

“இடியட்… அவ அழுதுகிட்டே போனான்னா… அவளை ஸ்டாப் பண்ணி நிக்க வைக்க வேண்டியதுதானே…? ஐயோ… என் அம்மு…” எனக் கதறியவன் அடுத்த நொடியே அந்த இடத்தை விட்டுப் பாய்ந்து ஓடினான்.

அவனை அதிர்ந்து பார்த்தாள் மதுரா.

அஞ்சலிக்கு ஒன்று என்றதும் இவன் பதறிக்கொண்டு இந்த போதையிலும் இப்படி ஓடுகிறானே…

அவளுடைய விழிகள் விரிந்தன.

அடுத்த நொடி “அஞ்சுக்கு என்ன ஆச்சு அர்ஜுன்…?” என்று பதறினாள் அவள்.

“தெரியல மது.. போய் பார்க்கலாம்…” என்றவாறு மதுராவை அழைத்துக் கொண்டு கடற்கரை நோக்கி வேகமாகச் சென்றான் அர்ஜுன்.

‘கதிரோடு நான் வந்தது அஞ்சலிக்கு தெரிஞ்சிருக்குமோ…? அதனால தான் ஏதும் தவறான முடிவு எடுத்துட்டாளோ…?’ என எண்ணியவளுக்கு பகீரென இருந்தது.

நெஞ்சம் நடுங்கியது.

அவளை கதிரின் வாழ்க்கையிலிருந்து துரத்த நினைச்சேனே தவிர இந்த உலகத்தை விட்டு துரத்த நினைக்கலையே… ஐயோ..

நடக்க முடியாமல் அவளுடைய கால்கள் மடங்கின.

தடுமாறி தரையில் மண்டியிட்டு அமர்ந்த மதுராவுக்கு அழுகை அழுகையாக வந்தது.

“என்னால யாரையும் பேஸ் பண்ண முடியாது அர்ஜுன்… ப்ளீஸ்… எப்படியாவது அஞ்சுக்கு ஹெல்ப் பண்ணு… அவளுக்கு என்ன ஆச்சுன்னு பாரு அர்ஜுன்…” என்று விம்மி வெடித்து அழுதவளைப் பார்த்து திணறிப் போனான் அர்ஜுன்.

அதே நேரம் மின்னல் வேகத்தில் ஓடி கடற்கரையை வந்தடைந்த கதிருக்கு கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.

அந்தக் கரையில் அஞ்சலியின் செருப்புகள் கிடப்பதைக் கண்டவனின் இதயம் பந்தயக் குதிரை போல தடதடத்தது.

“இல்ல… அவ மறுபடியும் ரூமுக்கு போயிருப்பா… இப்படி தப்பான முடிவு எடுக்க மாட்டா…” எனத் திணறியவாறு கூறியவனின் பார்வை அவளைத் தேடி அலச சற்று தொலைவில் கடல் அலையில் மிதந்தது அஞ்சலியின் மஞ்சள் நிற துப்பட்டா.

அந்த இருளில் கூட அந்த மஞ்சள் நிற துப்பட்டா பிரகாசமாக பளீரெனத் தெரிய “அம்மூஊஊ…” என்ற கதறலுடன் கதிர் கடலுக்குள் பாய்ந்தான்.

💜💜

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 98

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “38. தொடட்டுமா தொல்லை நீக்க”

  1. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.👌👌👌👏👏👏👏🤩🤩🤩😍😍😍🥰🥰❤️❤️❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!