உயிர் தொடும் உறவே -32

5
(5)

உயிர் 32

 

இரவு முழுவதும் தூங்காமல் காய்ச்சலில் அனத்திக் கொண்டே இருந்தாள் மீனாட்சி.

குளிர் காலம் வேறு…. காய்ச்சலால் இன்னும் அதிகமாக அவளது உடல் குளிரத் தொடங்கியது.

சற்று நேரத்தில் அவளது உடல் முழுவதும் தூக்கிப்போட ஆரம்பித்தது‌.

அருகில் அமர்ந்திருந்த ஆதி பதறியபடி அவளருகே சென்று அமர்ந்து அவளது கைகளை பிடித்துக் கொண்டான்‌‌.

“ என்னாச்சு மீனாட்சி…? என்ன செய்யுது…?” என்றான்‌

“ரொம்….ப குளி…ரிது….”என்றாள் உதடுகள் நடுங்க.

இத்தனைக்கும் ரெண்டு கம்பளியை அவள் மீது போர்த்தியிருந்தான்.

அதனை மீறி குளிரத் தொடங்கியது அவளுக்கு.

அவளது தோள்களைப்‌ பிடித்து கொண்டு அமர்ந்திருந்தான்.

குளிருக்கு இன்னமும் அவள் அவனுடன் ஒன்றவே, வேறு வழியின்றி அவளுடைய போர்வையை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டு போர்வையை இருவரது மேல் போர்த்திக் கொண்டான் ஆதி.

அவன் உடலலிருந்த வெப்பம் அவளுக்கு மெதுவாக கடத்தப்பட…இதமாக இருந்தது அவளுக்கு..அவனை இன்னும் தன்னுடன் இறுக்கிக் கொண்டாள்.

காய்ச்சலின் வேகத்தில் அவனைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தாள்.

ஆடவன் நிலைமையோ கவலைக்கிடமாக இருந்தது.

இங்குமங்கும் கட்டிலில் அவனை இழுத்துக் கொண்டு புரண்டுக் கொண்டிருந்தாள்.

உடல்வலி வேறு அவளை நிலையான இடத்தில் படுத்துக் கொள்ள விடவில்லை.

புடவை தான் அணிந்திருந்தாள்.

கண்டபடி கலைந்திருந்தது புடவை.

உடல் தூக்கிப் போட…அவளை நன்றாகவே தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டான்.

முதன்முறையாக அவ்வளவு நெருக்கத்தில் மனைவியின் முகம்.

காய்ச்சலால் சிவந்திருந்தது அவள்‌ முகம். உதடுகள் காய்ந்து போய் இருந்தன.

வாகாக படுத்துக் கொள்வதற்கு அவனது அகண்ட மார்பு உதவி செய்யவே…கால்களை தூக்கி அவன் மீது போட்டுக்கொண்டு அவனை அணைத்துக் கொண்டு படுத்தாள்.

அவனுக்கோ உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர சிரமமாக இருந்தது.

இருப்பினும் அவளது உடல்நிலை கண்முன் வந்ததால் அவனது உணர்வுகள் அடங்கிக் தான் போனது.

அவளை அணைத்தபடியே உறங்கிக் தான் போனான் ஆதி.

நெடு நாளைக்குப் பிறகு‌ நிம்மதியான உறக்கம் அவனுக்கு.

மனைவியின் அருகாமையே அவனுக்கு ஒரு வித அமைதியை தந்தது.

மறுநாள் மெதுவாக கண் விழித்து பார்த்தாள் மீனாட்சி.

பஞ்சு போல் தலையணை சுகமாக இருக்கவே  அவனது மார்பில் முகத்தை வைத்து தேய்த்தபடி மறுபடியும் கண்களை மூடினாள்.

கன்னத்தில் ஏதோ உறுத்தவே சட்டென்று தலையை தூக்கிப்‌ பார்த்தாள் மீனாட்சி.

ஆதி தான் அவளை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தான்.

அவளது கைகள் அவன் முதுகிற்கு‌ அடியில் சிக்கியிருந்தது.

அதிர்ந்து போய் கைகளை மெதுவாக எடுத்தவள் வேகமாக எழ முற்பட்டாள்.

அவளது புடவை முந்தானை நெகிழ்ந்து போய் அவனது மார்பில் விழுந்தது.

“அய்யோ…!” என அவள் கத்தியதில் உறக்கம்‌ கலைந்து கண்‌ முழித்தான் ஆதி.

மெதுவாக நிமிர்ந்து அவளைப்‌ பார்க்க, அவளோ அவன் மேல் விழுந்த முந்தானையை எடுத்து தன் மீது சுற்றிக் கொண்டிருந்தாள்.

மெதுவாக எழுந்தவனுக்கு இரவு முழுவதும் அவளுடனே உறங்கியிருந்தது நினைவுக்கு வந்தது.

இரவு அவளை அணைத்துக் கொண்டு உருண்டது வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது.

அவளது ஆடையும்‌ கலைந்திருந்தது.

அவள் கோபமாக ஏதோ கூற வரும் முன்பே, “அம்மா…! தாயே….நைட் நீ  காய்ச்சல்ல ரொம்பவே அனத்த ஆரம்பிச்சுட்ட…உடம்பு தூக்கிக் தூக்கி போட்டுச்சு…அதான் உன்னை அணைச்சிட்டு படுத்து இருந்தேன்…அப்படியே தூங்கி போயிட்டேன்…மத்தபடி நீ நினைக்கிற மாதிரி விவகாரமா எதுவும் நடக்கலை…தயவு செய்து ஏதாவது சொல்லி என்னை காயப்படுத்திடாதே…இப்பவும் சொல்றேன் உன் மனசு எப்ப என்னைய ஏத்துக்க தயாராகுதோ…அப்ப வாழ்க்கையை தொடங்கலாம்…சரி…நீ ப்ரஷ் பண்ணிட்டு இங்கேயே இரு..பாலும் ப்ரெட்டும்‌ எடுத்துட்டு வர்றேன்…உடம்பு சரியானதுக்கு அப்பறம் நீயே சமைச்சுக்கோ…”எனக் கூறி‌ விட்டு நகர முயன்றான்.

“எனக்கு இட்லியும் கார‌ச் சட்னியும் சாப்பிடனும்ன்னு தோணுது…பாலெல்லாம்‌வேணாம் …வாந்தி வருது…”என்றாள்.

“சொல்றத கேளு மீனாட்சி…உடம்பு கொஞ்சம் சரியாகட்டும்‌ டி…அப்பறம் காரமா சாப்பிடலாம்…இப்ப நான் கொடுக்கறதை சாப்டுக்கோ…” என்றான் கெஞ்சுதலாக.

ஏனோ முதன்முதலாக அவனது வார்த்தையை மறுத்துப் ‌பேச‌ தோன்றாமல் அமைதியாக இருந்தாள்.

பத்து நாட்கள் கடந்தது.

ஓரளவிற்கு மீனாட்சியின் உடல்நிலை தேறியது.

அவளது வேலைகளை பார்த்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

கல்லூரி வாழ்க்கை அவளுக்கு பழகிப்போனது.

கல்லூரியில் நடந்தவற்றை ஆதியிடம் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அவர்கள் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இயல்பான உரையாடல் ஆரோக்கியமான உறவிற்கு வித்திட்டது.

வாரம் இரு நாட்கள் அவளை தனது நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று அவள் பாடமாக படிப்பதை செயல் முறையாக செய்யச் சொன்னான்‌.

நிறுவனத்தின் சிறு சிறு கணக்குகளை எழுதுவது…நிர்வாக மேலாண்மை எப்படி இருக்க வேண்டும்…போன்றவற்றை அவளுக்கு விளக்கிக் கூறினான்.

“ மீனாட்சி…நான் ‌ஒண்ணு ‌கேப்பேன்…. முடியாதுன்னு சொல்லிடாதே ப்ளீஸ்…” என்றான்.

அவளோ யோசனையுடன், “ சொல்லுங்க…” என்றாள்.

“இந்த கோர்ஸ் முடிஞ்சதுக்கப்பறம்‌, இன்னோரு‌ சிக்ஸ் மன்த்ஸ் அட்வான்ஸ்டு அக்கவுண்டிங் அண்ட் மேனேஜ்மென்ட் கோர்ஸ் இருக்கு…அதைப்‌படி.. இன்டெப்த் நாலேட்ஜ் வந்துடும் ‌உனக்கு…அப்பறம் ஃபாரின் கிளையண்ட்ஸ் ஹேண்டலிங் ,ரியல் டைம் சிஸ்டம் மேனேஜ்மென்ட்டை நான் உனக்குச் சொல்லித் தர்றேன்.. இன்னும் ஓன் இயர்ல நம்ம கம்பெனிலயே நீ ஜூனியர் லெவல்ல வெர்க் பண்ண ஆரம்பிச்சுடலாம்…என்ன சொல்ற…? உனக்கு ஓகே வா..?”என்றான்.

அவனருகே வந்தவள், “இப்ப‌ எல்லா விஷயத்துக்கும் என்னோட விருப்பத்தை கேட்டு நிக்குற நீங்க..இதே மாதிரி அன்னைக்கு என்னோட விருப்பத்தை கேட்டிருந்தீகன்னா…நல்லா இருந்துருக்குமே…! தெனம் தெனம் உங்களை‌ வெறுக்கவும் முடியாம…விரும்பி ஏத்துக்கவும்‌ முடியாம தவிச்சி போய் கிடக்கேன். ஏன் நீங்க அவ்வளவு கெட்டவரா மாறிப் போனீங்க..? இப்ப நான் பண்ணனும்…எனக்காக இவ்வளவு பாத்து பாத்து பண்றதுனால உங்களை ஏத்துக்கிட்டு வாழ ஆரம்பிக்கனுமா…? இல்லை செஞ்ச தப்பை காலம் முழுக்க சொல்லிக் காட்டி….உங்களை கஷ்டப்படுத்திட்டே இருக்கனுமா…? சொல்லுங்களேன்…?” என‌ப் பரிதாபமாக அவனைப் பார்த்தாள்.

ஆதிக்கு அவளது மனநிலை புரிந்தது.

“இங்க பாரு மீனாட்சி…இந்த மாதிரி நல்லது பண்ணிதான் உன்னை இம்ப்ரெஸ் பண்ணனும்னு இல்லை. படிப்பு பொண்ணுங்களுக்கு என்னைக்காயிருந்தாலும் கைக் கொடுக்கும். உன் கிட்ட இருக்குற திறமையை கொஞ்சம் நீ வளர்த்து கிட்டா நல்லாயிருக்கும்னு தோணிச்சி….அதான் உன்னை படிக்கச் சொன்னேன். வீட்டுல தனியா இருந்தன்னா உன் மனசு இன்னும் குழம்பித்தான் போகும். வெளி உலகத்தை கொஞ்சம் பாரு…நாலு விதமான மனுஷங்களோடு பேசிக் பழகு…உனக்குன்னு ஒரு அடிப்படை அடையாளத்தை உருவாக்கிக்கோ. அது உனக்கு செல்ஃப் கான்பிடன்ஸ கொடுக்கும். அதுக்காக நான் செய்றேனே தவிர…உனக்கு நான் இவ்வளவு செய்யறேன்‌…பதிலுக்கு நீ என் கூட வந்து வாழுன்னு சொல்ல…கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா‌ இருக்குறது கஷ்டமாகத்தான் இருக்கு…ஆனா நீ …உன்‌ மனசு..‌என்னை …என் தொடுகைய இயல்பா ஏத்துக்குதோ…அப்ப‌ வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்….அப்பறம்…உன்னோட விஷயத்துல மட்டுந்தான் நான் கெட்டது பண்ணிருககேன் . எங்க உன்னை இழந்துடுவேனோன்னு பயம்…மனசு பூராவும் பயம்…. உன்னையே விட்டுட்டேன் கூடாதுன்ற வெறி…வேற எதைப் பத்தியும் என்னை யோசிக்கவே விடல…தப்புதான்..முடிஞ்சா…மன்னிச்சிடு…” என்றவன் வெளியேறினான்.

அவனது வார்த்தைகளில் இருந்த வலியையும் அவனையும் புரிந்து கொள்ள ஆரம்பித்தாள் மீனாட்சி.

மெல்ல மெல்ல அவளது மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்தான் ஆதி.

ஆனாலும் இருவருக்குள்ளும் ஏதோ ஒரு தடுப்பு இருந்தது. அதை உடைத்தெறிய ஏதேனும் ஒன்று நடந்தாக வேண்டும் அல்லவா…?

கள்ளிக்குடியில்…

சாய்வாக நாற்காலியில் அமர்ந்திருந்தார் சங்கர பாண்டியன்.

பாண்டியன் அவரருகில் வந்து நின்றான்.

“ ம்ம்..க்கும்…” எனத் தொண்டையை செருமினான்.

நிமிர்ந்து பார்த்தவர்,  “என்ன..லே…தொண்ட சரியில்லையோ…?” என்றபடி நீரைக் குடித்தார்.

கடுப்பானான் பாண்டியன்.

“ அதெல்லாம் ஒண்ணுமில்லை…நான் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்…நீங்க தான் போய் பொண்ணு கேக்கணும்.” என்றான் சாதாரணமாக.

தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தவருக்கு புரையேர, தலையை தட்டியபடி அவனை முறைத்துப் பார்த்தார்.

“என்ன முறைக்கீக…?நீங்களா என்னோட கல்யாணப் பேச்சை எடுக்க மாட்டீக…எனக்கும் வயசாகிட்டே போவுது…வாழ்க்கையில சில..பல நல்லது கெட்டது நான் பாக்க வேணாமா…? நீங்களும் பேரன்…பேத்தி எடுக்கனும்ல…”என்று கூறி அவரது இரத்த அழுத்தத்தை எகிற வைத்தான்.

“ ஏண்டா…! பெத்த அப்பங்கிட்ட பேசுற பேச்சா இது…?”என்றார் கடுப்பாக.

“ ஏன் …நீரு…மட்டும் காலத்துல கல்யாணம் கட்டி ரெண்டு புள்ளைகளை அடுத்தடுத்து பெக்கலை…? நான் மட்டும் மரத்தடி சாமியார் மாதிரி இருக்கனுமா…?* என்றான்.

“ யாரு…நீயா…? மரத்தடி சாமியார்…? கள்ளச்‌ சாமியார் டா நீயு…” என‌ முணுமுணுத்துக் கொண்டார்.

“என்னத்தை முணுமுணுக்கிறீரு..?” என்றான்.

இதற்குமேல் அவனிடம் வாயைத் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ள தயாரில்லை.

எனவே கோமதியை அழைத்து விஷயத்தை கூறினார்.

இப்போதெல்லாம் அவரிடம் சிறிது மாற்றம் தென்பட்டது.

முக்கிய விஷயங்களை மனைவியின் முன் பேசி…அபிப்பிராயம் கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டார்.

சமையலில் சிறு சிறு உதவிகளை கோமதி மறுக்க மறுக்க செய்து கொடுக்க ஆரம்பித்திருந்தார்.

பெண்களை மதிக்கவும், தேவையற்ற வார்த்தைளை தவிர்க்கவும் செய்தார்.

முக்கியமாக மனைவியின் காலத்திற்கு பிறகு அவரது நிலையையும் நிதர்சனத்தையும் கோமதி அன்று கூறியதிலிருந்தே அவரிடம் மாற்றம் தெரிந்தது.

உண்மை அவரைச் சுட்டதோ..? என்னவோ..?

அவனிடம், “ யாரு பொண்ணு…?” என்றார்.

அவன் அமைதியாக நிற்கவே,

சங்கர‌ பாண்டியன் மீண்டும் கேட்டார் , “யாரு பொண்ணு…? ஏன் அமைதியா நிக்க…?”என்றார்.

அவனோ நிதானமாக, “நம்ம புகழினி தான். ஈஸ்வரனோ ட தங்கச்சி தான்…அது மட்டுமில்ல நீங்க தான் போய் பொண்ணு கேக்கணும்…” என்றான் தீர்க்கமாக.

அவர் படக்கென்று எழுந்துவிட்டார்.

“ என்ன ல சொல்லுத..? திரும்பவும் பிரச்சினை பண்ணறீகளோ…?” என்றார் கோபத்துடன்.

பாண்டியனோ நிதானமாக, “ இல்லை வருசக்கணக்கா இருக்குற பிரச்சினையை தீர்க்க வழி சொல்லுதேன்…நீங்க ஆரம்பிச்ச‌ பிரச்சினையை நீங்களே முடிச்சி வைங்க…புகழினியை இழந்துட்டு நிக்க மாட்டான் இந்த பாண்டியன். இந்த ஜென்மத்துல அவ தான் எனக்கு பொண்டாட்டி…எதுக்காவும்…யாருக்காகவும் விட்டுட மாட்டேன்…முக்கியமா நீங்க தான் எங்க கல்யாணத்தை முன்னிருந்து நடத்தணும்…” என்றான்‌

சங்கர பாண்டியனுக்கோ ஆத்திரம் ஒருபுறம் இயலாமை ஒருபுறம்.‌

மறுத்துப் பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஏற்கனவே மீனாட்சியின் திருமணத்தினால் ஏற்பட்ட பாதிப்பே அவரை பேச்சிழக்க வைத்திருந்தது.

ஆனாலும் ஈஸ்வரனிடம் இறங்கிப் போகும் அளவிற்கும் மனதில்லை அவருக்கு.

பாண்டியனை முறைத்துக் கொண்டே நின்றிருந்தார்.

“ என்ன பதிலையே காணோம்…?” என்றான் பாண்டியன்.

பல்லைக் கடித்துக் கொண்டு, “ யோசனை பண்றேன்…” எனக் கூறி விட்டு வெளியே சென்றுவிட்டார்.

பாண்டியனின்‌ அருகே வந்த கோமதி , “நிஜமாத்தான் சொல்லுதியா பாண்டியா…? இது ஒத்து வருமா…? திரும்பவும் பிரச்சினை வராதே‌..?” என்றார் கலக்கத்துடன்.

“ வராது ம்மா…அவரே ஒத்துக்குவாரு…வேற வழியே இல்லை அவருக்கு…” எனக் கூறினான்.

ஈஸ்வரனது வீட்டில் புகழினி அண்ணனின் முன்பு நின்றிருந்தாள்.

ஈஸ்வரனது முகம் இறுகிப்‌ போய் இருந்தது.

பாண்டியனை விரும்புவதாக கூறிவிட்டாள் புகழினி.

“ அண்ணே…! ப்ளீஸ் புரிஞ்சிக்க…” என்றாள்‌ புகழினி‌.

அவளது தாயாரோ , “ஏன்டி…இதுக்குத்தேன்‌ உன்னை இம்புட்டு பாடுபட்டு படிக்க வைச்சானா…? இப்படி அவன் எல்லாத்தையும் விட்டுட்டு நிக்க அந்த ஆளு‌தான் காரணம். திரும்பவும் அந்தாள் கிட்டயே போய் அவனை அவமானப்பட வைக்க நினைக்கிறியா…? அம்புட்டு கல் நெஞ்சுகாரியா போயிட்டியா புகழு….?. வேணாம்‌ டி…அந்த வீட்டு சவகாசமே வேணாம்….விட்டுடு…உங்கண்ணன் ஒரு நல்ல இடமா பாத்து உன்னையே கட்டிக்கொடுப்பான். திரும்பவும் அவனை தலை குனிய வைச்சிடாத‌…. உன்னையே கையெடுத்து கும்பிடுதேன்..”என்றார்.

“அவரை என்னால விட‌ முடியாதும்மா…இல்லன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்…நான்  இப்படியே இருந்துட்டு போறேன்‌‌…என்னை விட்டுடுங்க…”என்றாள்

“ என்னடி திமிரெடுத்த கழுதை…கூட கூட திமிரா பேசுத… “என்று அறைந்து விட்டார்.

கன்னத்தைப் பிடித்து கொண்டு நின்றிருந்தாள் புகழினி.

ஈஸ்வரனது மனதில் பெரும் போராட்டமே நடந்து கொண்டிருந்தது.

அவனாலும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத செயல் அல்லவா…?

‌‌

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!