தீனா சொன்னதை எந்த நம்பிக்கையில் நம்பினாள் என்று அவளுக்கே தெரியாது. ஆனால் அவன் வார்த்தைகள் உண்மை என்று அவளின் உள் மனம் சொன்னது. ப்ரீத்தியின் விஷயத்தில் அவன் பொய் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை என்று அதே மனம் வக்காலத்து வாங்கியது.
அதனால்தான் மானசா இந்த முறையும் குழந்தைக்காக தன்னை அர்பணிக்க தயாராகி விட்டாள். ஆனால் அது தீனாவுக்கு பிடிக்கவில்லை.
அவள் நினைத்தால் இப்போது கூட அவனை விட்டுவிட்டு கிளம்பலாம். எந்த வகையிலும் அவளை கேள்வி கேட்க அவனுக்கு உரிமை இல்லை. ஆனால் எதன் காரணமாக அவனை விரும்புகிறோம் என்று இவளுக்கே தெரியவில்லை. அவன் ஒரு வாரம் பட்டினி கிடந்தது காதல் ஆகாது, அது வெறும் பிடிவாதம். அவன் நம்மிடம் காட்டியது நேசம் கிடையாது ஆளுமை.
மாறிக்கொண்டிருந்த தனது மனதை பார்த்து அவளுக்கே கோபம்தான்.
“நீ ஆல்ரெடி என் பொண்டாட்டி. நீ என்னோடு வாழ்ந்துதான் ஆகணும்..” என்றவனை நக்கலாக பார்த்தாள்.
“நான் என் சொத்துகளை கூட உனக்காக எழுதி வச்சேன்..” என்றவனை இப்போதும் அதே போல் பார்த்தாள்.
“இந்த குழந்தையை வளர்த்துக்கலாம். ஆனா நீ தாய்ப்பால் தர கூடாது..” என்றான்.
“நான் உன் கன்ட்ரோல்ல கிடையாது. இது உன்னோட குழந்தை இல்லன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா இந்த மேரேஜ் டிராமா எதுவும் செய்யாம இந்த குழந்தையை தூக்கிட்டு நேரா நான் என் வீட்டுக்கு போயிருப்பேன். நீ சரியான பிராடு.. இப்ப கூட என்னால் உன்னை நம்ப முடியல..” என்றாள்.
இவன் பார்வையால் கெஞ்சினான். என்னை நம்பு என்றான்.
“இது என்னோட உயிர் உடல் ஆன்மா. இதை நான் என்ன வேணா செய்வேன்..” என்றவள் குழந்தையை பார்த்து விட்டு “என் பிரெண்ட் ஒழுக்கம் கெட்டவன்னு சொல்ற இல்ல? இந்த குழந்தைக்கு அப்பா யாருன்னு அவ சொல்லி இருப்பாளே. அதை சொல்லு..” என்றாள்.
தீனா விழித்தான்.
“என்ன பார்வை? நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு…” என்றாள் மானசா.
“எனக்கு தெரியாது. உன் பிரண்ட் என்கிட்ட எதையும் சொல்லல..” என்றவன் தன் வாழ்க்கையில் நடந்த திருமணத்தை பற்றி இவளிடம் விவரித்தான்.
சில பல மாதங்களுக்கு முன்னால் அம்மா இவனுக்கு நிறைய இடங்களில் பெண் தேடிக் கொண்டிருந்தாள்.
பார்க்கும் பெண்கள் எல்லாம் அம்மாவையும் தீனாவையும் பிரிக்கும் வேலைதான் பார்த்தார்கள்.
நகை வேண்டும் பணம் வேண்டும் என்று கேட்ட பெண்களுக்கு மத்தியில் இவன் தேடி சென்ற பெண்கள் எல்லாம் சக்கர நாற்காலியில் இருக்கும் ஒரு மாமியார் வேண்டாம் என்று சொன்னார்கள்.
‘உங்க அம்மாவை எங்களால் கவனிக்க முடியாது. அவங்களை முதியோர் இல்லத்துல சேர்த்துட்டு வாங்க. அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்..’ என்றுதான் சொன்னார்கள்.
சுலோச்சனாவுக்கு பயம். மகனுக்கு இந்த பெண்களை திருமணம் செய்து வைத்தால் பிறகு இவனை மயக்கி பெண் வீட்டாரோடு வைத்துக் கொள்வார்களோ, நம் மகனை நாம் பார்க்க முடியாமலேயே போய் விடுமோ என்று பயந்து விட்டாள்.
அதனால் வெகு நாள் யோசித்து பார்த்தாள். ‘ஒரு அனாதை பெண்ணை திருமணம் செய்து வைத்தால் இந்த வீட்டோடு அவள் இருப்பாள். நம்மையும் நம் மகனையும் அவள் பிரிக்க மாட்டாள்!’ என்ற முடிவுக்கு வந்தாள்.
அப்படிப்பட்ட பெண்ணை தேடி அனாதை ஆசிரமங்களுக்கும் சென்றாள். ஆனால் எந்த பெண்ணையும் இவளுக்கு பிடிக்கவில்லை.
அப்படி இருக்கும்போதுதான் ஒரு நாள் கோவிலுக்கு போய் இருந்தாள். கோவிலில் சோகமாய் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை பார்த்ததும் அவளுக்கு பிடித்து விட்டது. தீனாவுக்கு எப்படி மானசாவை பார்த்ததும் பார்த்த நொடி காதல் வந்ததோ அதுபோல சுலோச்சனாவுக்கு பார்த்த நொடி ப்ரீத்தியின் மீது நேசம் வந்துவிட்டது.
‘இவ்வளவு அழகான பெண்ணாக இருக்கிறாளே! நம் பையனுக்கு இவள்தான் பொருத்தம்!’ என்று நினைத்து அவளிடம் சென்று பேசினாள்.
‘ப்ரீத்தியும் நான் ஒரு அனாதை!’ என்று சொல்லி விடவும் ‘என் வீட்டுக்கு வா!’ என்று அவளை இங்கே அழைத்து வந்து விட்டாள்.
‘இந்த பொண்ணை எனக்கு பிடிச்சிருக்கு. நீ கல்யாணம் பண்ணிக்க..’ என்றாள்.
தீனா அவள் குட்டையா நெட்டையா கருப்பா சிவப்பா என்று கூட பார்க்காமல் சரியென்று தலையாட்டினான். அடுத்த சில தினங்களில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது.
முதலிரவு நேரத்தில் அவளோடு பேசி பழக தொடங்கினான் இவன். ஆனால் அவள் தயங்கி தயங்கி பேசினாள்.
வெட்கப்படுகிறாள் என்றுதான் நினைத்தான். ஆனால் முதலிரவு நாளில் அவள் உண்மையை சொல்லி விட்டாள்.
இவனின் காலில் விழுந்தவள் “நான் வெர்ஜின் கிடையாது. என்னை ஒருத்தன் ஏமாத்தி கை விட்டுட்டான். என்னை வெறுக்காதிங்க..” என்று கெஞ்சினாள்.
அவள் சொன்னது இவனுக்கு நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
“இதை நீ ஏன் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லல?” என்று கோபத்தோடு கேட்டான்.
“பயமா இருந்தது. இந்த வீட்டைத் தவிர எனக்கு வேற அடைக்கலம் இல்லை..” என்று அழுதாள்.
இவனுக்கு அவள் மீது எக்கச்சக்கமாக வெறுப்பு வந்தது. எவனோ ஒருவன் ஏமாற்றியது பிரச்சனை கிடையாது. ஆனால் அவள் தன்னை ஏமாற்றியது பிரச்சனைதான். நம்மை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டாள் என்று கோபப்பட்டவனுக்கு இதை அம்மாவிடம் சொல்லவும் மனம் வரவில்லை.
நம் மகளின் வாழ்க்கை இனியாவது நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் திருமணம் செய்து வைத்திருக்கிறாள் அம்மா. இப்போது இப்படி ஒருத்தி ஏமாற்றிவிட்டாள் என்று தெரிந்தால் அம்மாவின் மனம் என்ன பாடுபடும்?
அம்மாவுக்காகதான் இந்த விஷயத்தை அவன் மறைத்தான்.
ஆனால் அதற்காக அவளுக்கு வாழ்க்கை தரும் அளவுக்கு அவன் தாராள மனப்பான்மை உள்ளவன் அல்ல. அவள் முன்பே சொல்லி இருந்தால் கூட போனால் போகிறது என்று மன்னித்து விட்டு வாழ்ந்திருப்பான். ஆனால் ஏமாற்றி திருமணம் செய்துள்ளாள். நம் அம்மாவின் பலவீனத்தை பயன்படுத்தி உள்ளாள். இவளை நேசித்தால் நம்மை விட பெரிய முட்டாள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைத்தான்.
அதன் பிறகு ஒரே அறையில் இருந்தாலும் இருவரின் படுக்கையும் வேறு வேறாகதான் இருந்தது.
திருமணமாகி நான்கு நாட்கள் கூட ஆகியிருக்கவில்லை. அதற்குள் அவள் வாந்தி எடுத்து விட்டாள். அதை சுலோச்சனா பார்க்கவில்லை இவன் பார்த்துவிட்டான்.
அவள் மீதான வெறுப்பு இன்னும் கூடிவிட்டது.
மீண்டும் இவன் காலில் விழுந்தவள் “இந்த குழந்தை பிறக்கும் வரை மட்டும் இந்த வீட்டுல எனக்கு இடம் கொடுங்க. அப்புறம் நான் உங்க அம்மாகிட்ட உண்மையை சொல்லி இந்த வீட்டை விட்டு போயிடுறேன்..” என்று கெஞ்சினாள்.
அவளின் வார்த்தைகளை நம்புவதற்கு இவனுக்கு கொஞ்சம் கூட மனமில்லை. ஆனாலும் பிறக்காத ஒரு கருவுக்காக இரக்கம் காட்டினான்.
அவன் வேண்டுமென்று நினைத்திருந்தால் பிரீத்தி குழந்தையை கலைத்துவிட்டு இவனை மயக்கும் வேலையை பார்த்திருப்பாள். ஆனால் அவளுக்கு தன் வயிற்றில் உதித்த அந்த கருவின் மீது பேரன்பு பிறந்து விட்டது. நாட்கள் ஓடியது. சுலோச்சனா விஷயத்தை அறிந்து குழந்தை தன் மகனுடையது என்று நினைத்து சந்தோஷப்பட்டாள். அம்மாவுடைய பொய் சந்தோஷத்தை பார்க்கும் போது இவனுக்கு கஷ்டமாக இருந்தது.
அப்படியே நாட்கள் ஓட ஒரு நாள் ப்ரீத்திக்கு குழந்தையும் பிறந்து விட்டது.
தீனா பொதுவாகவே ஓரளவு இரக்க குணம் கொண்டவன்தான். ஆனால் ப்ரீத்தி விஷயத்தில் அவனுக்கு வெறுப்பு மட்டும்தான் தலைக்கு மேல் ஏறி இருந்தது. அப்படி இருந்தும் கூட பிரசவ நேரத்தில் அவளின் உயிரை காப்பாற்ற முடியாது என்ற மருத்துவர் சொன்னபோது ‘எவ்வளவு வேணாலும் செலவு பண்றேன். அவ உயிரை காப்பாத்துங்க டாக்டர்..’ என்று சொல்லியிருந்தான்.
ஆனால் அப்படி சொல்லி இருந்தும் அவள் இறந்தே போய்விட்டாள்.
வாழ்க்கையையே வெறுத்து போய் அவன் வாழ்ந்து கொண்டிருந்த போதுதான் மானசாவை பார்த்திருந்தான். இறந்து போனவளின் மீதான வெறுப்பு கூட மறந்து போய்விட்டது. விளக்கை பார்த்த விட்டில் பூச்சி போல அவளிடம் தன்னை தொலைத்து விட்டான்.
எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று அவனின் மனம் அவன் உயிரை எடுத்தது. ஊராரைப் பொறுத்தவரை இப்போதுதான் மனைவி இறந்து போயிருக்கிறாள். இப்போது இன்னொரு பெண்ணிடம் அன்பை எதிர்பார்ப்பது மிகவும் ஆபத்தானது என்று கூட அவனுக்கு தெரியும். ஆனால் எந்த விஷயத்தையும் இதயம் கேட்கவில்லை. அவள் வேண்டும் என்பதை தவிர அவனிடம் வேறு சிந்தனையே இல்லை. அதனால்தான் அத்தனை கிறுக்குத்தனங்களையும் செய்து அவளை தன் மனைவியாக்கி இருந்தான்.
அவனுக்கு இந்த குழந்தையை ஹாஸ்டலுக்கு அனுப்புவதோ இல்லை கொல்வதோ விருப்பம் கிடையாது. அந்த அளவுக்கு அவனுக்கு கல் மனதும் கிடையாது.
தனக்கு தெரிந்த விஷயத்தை எல்லாம் இப்போது மானசாவிடம் சொல்லி முடித்தான்.
மானசாவுக்கு தன் தோழியை ஏமாற்றியது யார் என்ற கேள்விதான் மனதுக்குள் முதலில் வந்து நின்றது.
“இந்த குழந்தையோட அப்பா யாருன்னு எனக்கு தெரியாது. ஆனா இந்த குழந்தைக்கு அம்மாவா நீ இருந்தா அப்பாவா நான் இருப்பேன். பால் மட்டும் வேண்டாம்..” என்று அப்போதும் அதையே சொன்னான்.
இவள் அவனை கண்டுகொள்ளாமல் அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.
இவன் குழந்தையின் இருபுறமும் தலையணைகளை எடுத்து வைத்துவிட்டு அவள் பின்னால் ஓடி வந்தான்.
“வீட்டை விட்டு போக போறியா? நீ இல்லன்னா என்னால வாழவே முடியாது மானசா..” என்று சொன்னான்.
தன் காதுகளை தேய்த்து விட்டவள் “போதும் நிறுத்துடா. இதையே சொல்லி சொல்லி எனக்கு காது வலியே வர வச்சிட்ட..” என்று அதட்டினாள்.
வேலையாட்கள் இவர்கள் இருவரையும் திரும்பி பார்த்தார்கள்.
இவன் அவர்களை கவனிக்காமல் “என்னோடு இருப்பேன்னு சொல்லு. இல்லன்னா நான் உன்னை டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருப்பேன்..” என்றான்.
அவனின் ரூமின் முன்னால் வந்து நின்றவள் இடுப்பில் கையை வைத்தபடி இவன் புறம் திரும்பிப் பார்த்தாள். “என்ன சார் சொன்னிங்க?” என்று கேட்டாள்.
ஓர் அடி பின்னால் தள்ளி நின்றவன் “எனக்கு நீ வேணும். இல்லன்னா எனக்கு பைத்தியம் பிடிச்சிடும்..” என்று விழிகளால் மீண்டும் கெஞ்சினான்.
“விட்டுப் போகல. கொஞ்சம் வாயை மூடிட்டு இரு..” என்றவள் கதவைத் திறந்தாள்.
அவனைப் பிடித்திருக்கிறது என்பதையும் தாண்டி தோழி இவனுக்கு செய்த துரோகத்திற்கு நாம் இவனோடு வாழ்ந்தாவது அந்த பாவ கணக்கை சரி செய்ய வேண்டும் என்று தோன்றியது இவளுக்கு.
அவனின் அறையில் இருந்த கப்போர்டை திறந்தாள். அங்கிருந்த உடைகளை எல்லாம் அள்ளி எறிந்து விட்டு ஏதாவது கிடைக்குமா என்று தேடினாள்.
“என்ன பண்ற?” என்றபடி அருகில் வந்து நின்றான் தீனா.
“என் பிரெண்டை ஏமாத்தியது யாருன்னு எனக்கு தெரிஞ்சாகணும். அவ எதாவது டைரி வச்சி எழுதிட்டு இருந்தாளா? அவ போன் எங்கே?” என்று கேட்டாள்.
அந்த ரூம் முழுக்க தேடியும் டைரி போல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அவளின் செல்போன் தீனாவிடம்தான் இருந்தது. அதை எடுத்து வந்து இவளிடம் கொடுத்தான்.
அதன் பாஸ்வேர்டை இவள் சிலமுறை யூகித்து விட்டு டைப் செய்தாள்.
சோபாவில் அமர்ந்தவள் செல்போனில் என்ன இருக்கிறது என்று தேட ஆரம்பித்தாள். அருகில் அமர்ந்த தீனா அவளின் நெஞ்சின் மீது கரம் பதித்தான்.
இவள் திரும்பிப் பார்த்து நெருப்பாக அவனை முறைத்தாள்.
“ஐ அம் யுவர் ஹஸ்பண்ட்..” என்று நினைவு படுத்தியவன் “இந்த மாதிரி செயற்கையா ஒரு விஷயத்தை கொண்டு வரும் போது அதுக்கு எவ்வளவு பக்க விளைவுகள் இருக்கும்? நீ
ஏன் இப்படி பண்ற. எனக்கு ரொம்ப பொசசிவ்வா இருக்கு..” என்று சொல்லி தலையை பிடித்தான்.