சோதிக்காதே சொர்க்கமே 22

4.9
(14)
22
அவனின் நிலையில் இருந்து பார்க்கும்போது அவனின் வேதனை என்னவென்று இவளுக்கு புரிந்தது. ப்ரீத்திக்காக அவன் தனது ஒன்பது மாத வாழ்க்கையை தியாகம் செய்தான். அம்மாவிடம் உண்மையைக் கூட சொல்லாமல் மறைத்தான். ப்ரீத்தியின் கர்ப்ப காலத்தில் நிறைய செலவு செய்திருக்கிறான். அந்த குழந்தைக்காக உழைத்து தர கூட தயாராக இருக்கிறான். ஆனால் தன் குழந்தைக்கு மட்டுமே சொந்தமான ஒன்றை இந்த குழந்தைக்கு தருவதற்கு அவனுக்கு கொஞ்சமும் இஷ்டமில்லை.
அவனின் முகத்தை பார்த்த மானசா செல்போனை ஓரம் வைத்தாள். அவளுக்கு அவனின் காயம் புரிந்தது. அதைவிட முக்கியமாக அவனின் கண்ணீர் இவளுக்கு வலியை தந்தது.
அவன் வெளிப்படுத்திய விதம் வேண்டுமானால் தவறாய் இருக்கலாம். ஆனால் அவனின் காதல் உண்மை. ப்ரீத்தி இறந்ததுமே அம்மாவிடம் உண்மையை சொல்ல காத்திருந்தான் இவன். ஆனால் மானசாவை பார்த்த கணம் அவனின் எண்ணம் முழுக்க தலைகீழாய் மாறிவிட்டது. அவள் தன் வீடு வர வேண்டும் என்பதற்காகவே குழந்தையை தன் வீட்டுக்கு எடுத்து போனான்.
உண்மையைச் சொல்லி அதன் பிறகு அவளோடு பேசி பழகி இருந்தால் அவளின் காதலை நிச்சயம் பெற்று இருக்கலாம். ஆனால் அதற்கு கூட விடாமல் அவனின் அவசரம் அவனை படுத்தி எடுத்து விட்டது. அத்தனையையும் புரிந்து கொள்ள முடிந்தது இவளால்.
அவனின் முகத்தை அள்ளினாள். அவனை தன் முகம் பார்க்க வைத்தவள் “நீ கவலைப்படும் அளவுக்கு எதுவுமில்லை. நீ‌‌ என் மேல எந்த அளவுக்கு லவ்வை வச்சிருக்கியோ அதே அளவுக்கு நான் அந்த குழந்தை மேல அன்பை வச்சிருக்கேன்..” என்றாள்.
அவனுக்கு அது புரியாமல் இல்லை.
அவனின் கையை எடுத்து தன் நெஞ்சின் மீது வைத்தவள் “உள்ளே இருக்கும் மனசையே உங்கிட்ட கொடுக்கிறேன். இந்த ஒரு விஷயத்துல என்னை என் போக்குல விட்டுடேன். உனக்கும் எனக்கும் குழந்தை பிறந்தாலும் அதையும் இதே பாசத்தோடு வளர்ப்பேன். என்னை நம்பு..” என்றாள்‌.
தோழியின் குழந்தையை உயிராக நினைப்பவள் தன் குழந்தையை அதற்கு மேலாகவே நினைப்பாள். ஆனால் இந்த பொசசிவ்? இதை எப்படி அவளுக்கு புரிய வைப்பது?
அவனின் இமை ஓரம் தேங்கி நின்றிருந்த கண்ணீரை பார்த்தவள் “ப்ரீத்தி என்னோட உயிர் தோழி. அவளுக்காக உயிரை கொடுக்க கூட நான் தயங்க மாட்டேன். இது எனக்கு பெரிய விஷயம் கிடையாது. நான் ஒன்னும் உனக்கோ உன் குழந்தைக்கோ துரோகம் செய்யல. என் நட்புக்கு நன்றி கடன் தீர்ப்பதா நினைச்சிக்க..” என்றாள்.
அவனின் பார்வை அவளின் நெஞ்சை தொட்டது.
“இது மூலம் என்னோட அழகு ஒன்னும் குறையாது. அப்படி அழகே குறைஞ்சா கூட அந்த அழகு வாழ்க்கை முழுக்க நிலைக்க போறது கிடையாது. ஒரு பச்சை குழந்தைக்கு பசி தீர்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்கு அதை பாரு..” என்றாள்.
“தாய்ப்பால் தர நான் ஆட்களை வர சொல்றேன்..” கரகரத்த குரலோடு சொன்னான்.
குழந்தையே இவன்தானா என்பது போல் இருந்தது இவனின் பிடிவாதம்.
அவனின் கேசத்தை கோதியவள் “நான் இந்த குழந்தைக்கு பசியாத்தும் போது உனக்கு எவ்வளவு பொசசிவ் இருக்கோ அதைவிட ஆயிரம் மடங்கு பொசசிவ் என் குழந்தை வேற யார்கிட்டயாவது பசி தீர்க்கும் போது எனக்கு வருது. நானும் ப்ரீத்தியும் இரட்டை பிறவி போல. எங்களோட நட்பை உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது‌. அவளோட குழந்தை என்னோட குழந்தைதான். என்னோட தாய்மையை உன்னால புரிஞ்சுக்க முடியலன்னா உன்னோட காதலுக்கு எந்த அர்த்தமும் கிடையாது..” என்றாள்.
இவனின் உதடுகள் துடித்தது. அங்கிருந்து எழுந்தவன் எதுவும் சொல்லாமல் நடந்தான்.
“குழந்தையை ஏதாவது பண்ண போறியா?” இவன் சந்தேகமாக கேட்க, “இல்ல கொஞ்சம் மைண்ட் டிஸ்டர்பா இருக்கு. எங்காவது வெளியே போய்ட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
அவன் வார்த்தைகளை நம்பினாள்.
அவள் ப்ரீத்தியின் போனை ஆராய்ந்தாள். போனில் பெரிதாக இன்பர்மேஷன் இல்லை. ஆனால் சில மேற்கோள்களை புகைப்படங்களாக சேகரித்து வைத்திருந்தாள்.
காதலே பொய் என்று முக்கால்வாசி மேற்கோள்கள் சொல்லின. எவனிடமோ ஏமாந்து விட்டாள் என்பதுதான் இவளுக்கே தெரியுமே! யார் ஏமாற்றியது என்பதுதானே இப்போதைய தேடல்.
ஒரு சிலவற்றில் நட்பையும் திட்டியிருந்தது அந்த மேற்கோள்கள்.
இவள் வாட்சப்பை திறந்தாள். அவள் நம்பருக்கு அவளே அனுப்பிக் கொண்ட சில செய்திகள் அதில் இருந்தன.
மானசா அதை முதலில் இருந்து படிக்க ஆரம்பித்தாள்.
“நான் அவனை எவ்வளவு நம்பினேன்!? இப்படி ஏமாத்திட்டானே! அப்படி என்ன என்கிட்ட குறையை கண்டான்? அதுவும் அவன் என்னை ஏமாத்தியது கூட பரவால்ல. என் பிரெண்டுக்கே மறுபடியும் ப்ரபோஸ் பண்ணிட்டானே!” என்று புலம்பி வைத்திருந்தாள்.
அதை படித்ததுமே மானசாவுக்கு ஆள் யாரென்று புரிந்து விட்டது. இருப்பினும் விசயத்தை கன்பார்ம் செய்து கொள்வதற்காக தொடர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.
இதயம் அவளுக்கு பலவீனமாக துடித்தது. அவனா அது என்று நம்பவே முடியவில்லை. எப்போதும் நம்மை மறுத்து பேசாத தோழி இந்த விசயத்தில் சண்டை போட்டு வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வந்து விட்டாள். இதற்கான காரணத்தை அப்போதே யூகித்து இருக்க வேண்டும். முட்டாள் போல் இருந்து விட்டேனே என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.
சில மெஸேஜ்களுக்கு பிறகு ஒரு செய்தி இருந்தது.
“ஏன் வினோத் இப்படி பண்ண? நான் உனக்கு என்னடா துரோகம் பண்ணேன்? நீ கேட்டதும் உனக்கு நோ கூட சொல்லலியே! என்னை பிரேக்அப் பண்ண உனக்கு எப்படி மனசு வந்தது?” என்று கேட்டிருந்தாள். இந்த செய்தியை டைப் செய்யும்போது தோழி எவ்வளவு அழுதிருப்பாள் என்பதை இவளால் யூகிக்க முடிந்தது.
இவளுக்கும் விழிகளில் தண்ணீர் துளிர்த்தது.
அந்த போனை ஓரம் வைத்தவள் தன் போனை எடுத்து வினோத்துக்கு போன் செய்தாள். அவன் போனை எடுக்கவில்லை. தன்னோடு படித்த தோழிகளுக்கு போன் செய்தாள்.
அவர்கள் சொன்ன விசயம் கேட்டு இவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
தீனா சோகத்தோடு தோட்டத்தில் திரிந்தான். அவளின் மனதை மாற்ற முடியாது என்று அவனுக்கு தெரிந்து விட்டது. இதயம் வலித்தது. இதற்கு பதிலாக அவன் எதை வேண்டுமானாலும் ஈடாக தர தயாராக இருந்தான்.
அவள் முழுக்க முழுக்க நமக்கு சொந்தம் என்று அவனின் மனம். ஆனால் அவளின் புத்தி, அவளின் ஆன்மா அது அவளுக்குதான் சொந்தம். எதார்த்தம் முகத்தின் மீது சாட்டையை எடுத்து வீசியது.
“தீனா..” மானசாவின் குரலில் திரும்பி பார்த்தான். அவளாக அழைத்திருக்கிறாள். இவனுக்கு ஆச்சரியத்தில் பேச்சே வரவில்லை.
அருகில் வந்து அவனின் கையைப் பிடித்தவள் “என்னோடு வா. நமக்கு முக்கியமான வேலை இருக்கு..” என்று சொல்லி அவனை தன்னோடு இழுத்துப் போனாள்.
அவள் கூப்பிட்டால் இவன் எங்கு வேண்டுமானாலும் செல்வான்.
அவனை கொண்டு வந்து காரின் அருகில் நிறுத்தியவள் “காரை எடு..” என்றாள்.
இவன் மறு வார்த்தை பேசாமல் காரில் ஏறி அமர்ந்தான். அதை ஸ்டார்ட்டும் செய்தான்.
“கல்யாணி கல்யாண மண்டபம்.. இங்கே போ..” என்றாள்.
இவன் காரை எடுக்காமல் அவளின் முகத்தை பயத்தோடு பார்த்தான். “அங்கே போன பிறகு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்க போறியா?” என்று கேட்டான்.
“என்னை கெட்ட வார்த்தை பேச வைக்காத. ஒழுங்கா சொல்வதை செய்..” என்று சீறினாள்.
கேள்வி கேட்கும் தகுதி நமக்கு இல்லை என்று உள்ளுக்குள் சோகமானவன் காரை எடுத்தான்.
மானசா தன் தோழிகளுக்கு போன் செய்து மீண்டும் ஏதேதோ விசாரித்தாள். வினோத் என்று பேசிக்கொண்டாள்.
ஒருவேளை அந்த வினோத் மீது அவளுக்கு ஒருதலையாய் காதல் இருந்திருக்குமோ என்று இவன் பயப்பட ஆரம்பித்தான். என்னதான் அவளைப் பார்த்த அடுத்த நாளே அவளுக்கு காதலர்கள் யாரும் இல்லை என்று கண்டுபிடித்து விட்டாலும் கூட அந்த டிடெக்டிவ் இந்த வினோத் விஷயத்தில் தவறி இருப்பாரோ என்று இவனுக்கு பயம்.
இருபது நிமிட பயணத்திற்குப் பிறகு திருமண மண்டபத்தின் முன்னால் கார் வந்து நின்றது.
மானசா காரில் இருந்து இறங்கி உள்ளே ஓடினாள். வெளியே மணமக்கள் பெயரில் வினோத் என்ற பெயரும் இருந்தது. அதைப் பார்த்துவிட்டு மனைவியை பின்தொடர்ந்து ஓடினான் தீனா.
உள்ளே ரிசப்ஷனுக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது.‌
வினோத்துக்கு மூன்று நாட்கள் முன்பே திருமணம் நடந்து விட்டது.
வெளியே பேனரில் வினோத்தின் முகத்தை பார்த்து இருந்தான் தீனா. பார்வைக்கு மிகவும் இளைஞனாக தெரிந்தான்.
தீனா சம்பாதித்து முடிக்கவே இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது. இவனுக்கு பெண்களுக்கு கேட்க போகும் இடமெல்லாம் ஆயிரத்தியெட்டு கண்டிஷன்களை போட்டார்கள். அப்படி இருக்கையில் இந்த வினோத் மாதிரியான இளைஞர்களுக்கு யார்தான் பெண் கொடுப்பது என்று தீனாவுக்கு சுத்தமாய் தெரியவில்லை.
உள்ளே ஓரளவு கூட்டம் இருந்தது. மானசா அங்கே சிலரிடம் ஏதேதோ விசாரித்தாள். மணமகன் அறைக்கு ஓடினாள். தீனா அவளை விட வேகமாய் ஓடினான்.
கண்ணாடியின் முன்னால் நின்று அலங்காரம் செய்து கொண்டிருந்த வினோத் வாசலில் யாரோ வந்து நிற்கவும் திரும்பி பார்த்தான்.
மானசாவை பார்த்ததும் புருவத்தை சுருக்கினான்.
“ஹாய் மானசா..” கட்டில் அமர்ந்திருந்த வினோத்தின் நண்பர்கள் இவளுக்கு கையாட்டினார்கள்.
உள்ளே வந்த மானசா “நான் உன்கிட்ட தனியா பேசணும்..” என்றாள் வினோத்திடம்.
சென்ட் எடுத்து உடம்பு முழுக்க அடித்துக்கொண்டு திரும்பிப் பார்த்தவன் “என்ன என்னோட லவ்வை ஏத்துக்காம போனதுக்காக இப்ப ஃபீல் பண்றியா? இப்ப உன்னை ஏத்துக்கணும்ன்னு கேட்க வந்திருக்கியா? சாரிம்மா. எனக்கு மேரேஜ் ஆயிடுச்சி. அதுவும் லவ் மேரேஜ்..” என்றான்.‌
பற்களை கடித்தவள் “ப்ரீத்தி விஷயமா உன்கிட்ட பேசணும்.” என்றாள்.
அவனின் முகம் மாறியது. நண்பர்கள் புறம் திரும்பியவன் “கொஞ்சம் வெளியே இருங்க..” என்று சொன்னான்.
“எங்களுக்கு தெரியாத ரகசியமா?” என்று நக்கலாக கேட்டுவிட்டு நண்பர்கள் அங்கிருந்து சென்றார்கள்.
வினோத் தீனாவை பார்த்தான். “யார் நீங்க? இங்கே என்ன பண்றிங்க?” என்று விசாரித்தான்.
“அவர் என்னோட ஹஸ்பண்ட்தான்..” என்ற மானசா “கதவை சாத்துங்க..” என்று கணவனிடம் சொன்னாள்.
அவனும் மறு பேச்சு பேசாமல் உடனே கதவை தாழிட்டான்.
வினோத்தின் புறம் திரும்பியவள் ஓங்கி அவனின் கன்னத்தில் அறைந்தாள். அவன் ஆத்திரத்தோடு இவளை அடிக்க வர, தீனா பாய்ந்து வந்து அவனை பின்னால் தள்ளினான்.
“இவனுக்கும் ப்ரீத்திக்கும் என்ன சம்பந்தம்?” என்று மனைவியிடம் கேட்டான் தீனா.
“என் பிரெண்டை ஏமாத்தி குழந்தை கொடுத்தது இவன்தான்..” என்றவளுக்கு அவ்வளவு கோபம் வந்தது. காதலில் கொஞ்சம் கூட உறுதியோடு இல்லை. தவறை செய்துவிட்டு அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. இப்படிப்பட்டவனை நம்பி ஏமாந்ததற்காக இவளுக்கு பிரீத்தியின் மீதுதான் கோபம் வந்தது.
கன்னத்தைப் பிடித்த வினோத் “நான் ஒன்னும் ஏமாத்தல? அவளுக்கு மயக்க மருந்து ஒன்னும் தரல. அவதான் ஆசையில் மயங்கினா. நான்தான் வேணும்ன்னு வந்து விழுந்தா..” என்று சொன்னான்.
அவனின் தொடையில் ஒரு உதையை விட்டாள் மானசா.
“உன்னோட பொண்டாட்டிகிட்டயும் அவளோட குடும்பத்துகிட்டையும் போய் இதை சொல்றேன். அவங்ககிட்டயும் இதே பதிலை சொல்வியான்னு பார்க்கலாம்..” என்றாள்.
அவள் கதவை நோக்கி நடக்க, ஓடி வந்து அவளை கால்களை பிடித்தான் வினோத்.
“ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு பணக்கார பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கேன். இந்த விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சா என்னை உயிரோடு கொளுத்திடுவாங்க. ப்ளீஸ் உங்கிட்ட கெஞ்சி கேக்கிறேன். என்னோட கல்யாண வாழ்க்கையை கெடுக்காத. வேணும்ன்னா நாலு அடி கூட அடிச்சிக்க..” என்றான்.
தொடரும்

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!