அத்தியாயம் 4
“அம்மா பசிக்குது” என்று கூறியவாறே, சமையல் அறையில் நுழைந்தாள் நம் கதையின் நாயகி ஒளிர்மதி..
“உனக்கு பிடிச்ச அடையும் அவியலும் தான் இன்றைக்கு டின்னர்” என்று கூறிய அவளின் சித்தி வேணியினை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தவாறே..”என் வேணி அம்மா தான் எப்பவுமே பெஸ்ட் கல்யாணி அம்மாவ விட” என்று கூறியவளின் தலையில் கொட்டு வைத்தார் அவளின் அம்மா கல்யாணி..
“ஆ” என்று கத்தியவள் வேணியிடம், “பார்த்தீங்களா மா இந்த அம்மாக்கு பொறமைய” என்று கூற..
அங்கு நடந்தவற்றை கேட்டபடிய உள்ளே நுழைந்த அவளின் தங்கை கயல்விழியோ கல்யாணியை பின்னிருந்து அணைத்தவாறே “எனக்கு என் கல்யாணி அம்மா பண்ற கல் தோசையும் வடகறியும் தான் தேவாமிர்தம்” என்று கூற,
“என் செல்லத்துக்கு நாளைக்கு கல் தோசையும் வடகறியும் செஞ்சு தாரேன்” என்று கன்னம் கிள்ளினார் கல்யாணி..
“உனக்கு தோசை வேணுமங்குறதுக்காக அம்மாக்கு ஐஸ் எல்லாம் வைக்காத” என்று கூறிய ஒளிர்மதியிடம்..
“இப்ப உனக்கு பொறமையா இருக்கா” என்று கேட்ட கயல்விழியை பார்த்து..
“என் வீட்டு கன்னுகுட்டி என்னோடு மல்லுகட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி” என்று ஒளிர்மதி பாடியவாறே அவள் நெஞ்சில் கை வைக்க.. அவளின் செயலில் அனைவரும் சிரித்தனர். அவர்களை முறைத்தவாறே சமையல் அறையின் வாயிலில் நின்றார் அவ்வீட்டிற்கே மூத்த பெண்மணியும் தலைவியுமான மதியரசி..
அவரை முதலில் கவனித்த கல்யாணி “அத்தை எதுவும் வேணுமா?” என்று கேட்க..
அவரோ “ஆமா கொஞ்சம் அமைதி.. இது நான் தியானம் பண்ற நேரம்னு தெரியாதா?
இப்படிதான் அடுத்தவங்களுக்கு தொந்தரவு கொடுக்குற மாதிரி சத்தம் போடுவீங்களா?” என்று கேட்டு கொண்டே அங்கு நின்ற ஒளிர்மதியை பார்த்தவர்..
“பசிச்சா மட்டும் தான் கிச்சனுக்கு வரணுமா? இவ்வளவு நாள் படிக்கிறேன்னு சமைக்க கத்துக்கல இனிமேலாவது கத்துக்க.. போற இடத்தில வீட்டுல உள்ளவங்களுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுத்துறாத” என்று கூற..
அவரை பார்த்த ஒளிர்மதியோ “எனக்கு வேலை கிடைச்சிருக்கு நாளைக்கு வேலைல சேர போறேன்” என்று கூற..
அவளை பார்த்து “யாரை கேட்டு வேலைக்கு போகுற முடிவு எடுத்த? என்று கேட்க..
ஒளிர்மதியோ “பாட்டி நான் கஷ்ட்டபட்டு படிச்சது, இப்ப வேலைக்கு போகணும்னு முடிவு எடுத்தது, எனக்குனு ஒரு அடையாளம் வேணுங்கிறதுக்காக” என்று கூற..
“குடும்பம் தான் பொண்ணுங்களோட அடையாளம்” என்று அவர் அழுத்தி கூற..
“நான் காண்ட்ராக்ட் சைன் பண்ணிட்டேன் அங்க ஒரு வருடம் வேலை செஞ்சுதான் ஆகணும் அப்பாகிட்ட கேட்டு தான் பண்ணினேன்” என்று ஒளிர்மதி கூற..
அவருக்கோ தன்னை யாரும் மதிக்கவில்லை என்ற கோபத்துடன் ஹாலில் அமர்ந்து விட்டார்..
ஒளிர்மதியின் அருகில் வந்த கல்யாணியோ “நீ பாட்டிகிட்ட சரிக்கு சரி நின்று பேசுறது தப்பு, பாட்டிகிட்ட மன்னிப்பு கேளு” என்று கூற..
“நான் தப்பா எதுவும் பேசல மா” என்று ஒளிர்மதி கூற..
“இந்த வீட்டுல உனக்கு விருப்பம் இல்லாத எந்த விஷயமும் நடக்கிறது இல்ல, நீ வேலைக்கு போகுற விஷயத்தை பாட்டிக்கிட்ட அப்பாவே சொல்லி புரிய வச்சிருப்பார்.. இப்ப பாட்டிக்கு நாங்க எல்லாரும் அவங்ககிட்ட கேட்காம முடிவு எடுத்ததா நினைப்பாங்க” என்று கூற..
அப்பாவும் பாட்டிகிட்ட இன்றைக்கு பேசுறதா சொன்னாங்க நான்தான் அவசரப்பட்டு பேசிட்டேன் என்று எண்ணியவாறே பாட்டி அருகே வந்தவள்..
“பாட்டி என்னை மன்னிச்சிருங்க” என்று அவள் கூற, அந்நேரம் அவ்வீட்டின் ஆண்கள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தனர்..
அவர்களுக்கு மதியரசியின் கோபத்தை கண்டவுடன் ஏதோ பிரச்சனை என்று ஊகித்தவர்களாக அவரின் அருகே வந்தனர்..
அவர்களை கண்ட மதியரசியோ “எனக்கு வயசாகிட்டதால எல்லா முடிவையும் நீங்களே எடுத்திட்டு கடைசியில் என்கிட்ட தெரியபடுத்தினா போதும் என்று நினைச்சீட்டீங்களா?” என்று அவர் கோபத்தோடு வினவ..
அவரின் மூத்த மகனும், ஒளிர்மதியின் அப்பாவும் ஆன விஜயராகவன் “அம்மா உங்க அனுமதி இல்லாம நாங்கள் எந்த முடிவும் எடுக்கலமா” என்று கூற..
“மதி வேலைக்கு போகுற முடிவு உன் சம்மதம் இல்லாம எடுத்தாளா?” என்று கேட்க..
மதியரசியை நோக்கிய விஜயராகவனோ “அம்மா அவ யுனிவர்சிட்டி ரேங்க் கோல்டர் ஆண்ட் கோல்ட்மெடலிஸ்ட்.. அவ கஷ்டபட்டு படிச்சது வீணா போக நான் விரும்பலமா” என்க..
மதியரசியோ “அவளை யாரு இவ்ளோ கஷ்டபட சொன்னது.. ஒரு டிகிரி முடிச்சு கல்யாணம் பண்ணிட்டு குடும்பம் குழந்தைங்கனு வாழ வேண்டியதான.. ” என்று கூற..
“பாட்டி” என்ற ஒளிர்மதியின் அழைப்பையும் கேளாதது போல் தனதறைக்கு சென்றுவிட்டார்..
கலங்கிய விழிகளோடு நின்றிருந்த ஒளிர்மதியின் அருகே வந்த விஜயராகவனோ அவளை அணைத்து விடுவித்தவர் “பாட்டிக்கிட்ட நான் பேசிட்டு வரேன்மா” என்றவர் அவளிடம் புன்னகை ஒன்றை உதிர்த்தவாறே தனது தாயின் அறையை நோக்கி சென்றார்..
ஒளிர்மதியின் அருகே வந்த அவளின் அண்ணன் இளந்தீரன் “அப்பா பேச போயிருக்கார்ல இனி அவர் பார்த்துப்பார்.. நீ அழாத பார்க்க சகிக்கல” என்று அவன் அவளை சிரிக்க வைக்க முயல, அவனை முறைத்த ஒளிர்மதி தனதறைக்குள் நுழைந்து விட்டாள்..
இளந்தீரனின் தலையில் கொட்டிய கல்யாணியோ “டேய் அவக்கிட்ட வம்பு பண்ணாம இருக்க முடியாதா” என்று கேட்க “அம்மா நான் அவ மைண்ட கன்வர்ட் பண்ணதான் அவக்கிட்ட அப்படி சொன்னேன்” என்று கூற..
கல்யாணியோ “அவளை சமாதானம் பண்ணு அப்பதான் நைட் உனக்கு சாப்பாடு” என்று கூற..
“ஐயோ! அம்மா வளர்ற பையனோட வயித்துக்கு வஞ்சகம் பண்ணாதீங்க” என்று கூற.. அவனை முறைத்த கல்யாணியோ அவனை அடிப்பதற்காக அருகே என்ன இருக்கு என்று தேட.. கயல்விழியோ சமையல் அறையில் இருந்து கரண்டியை எடுத்து வந்து கல்யாணியிடம் நீட்ட.. அதில் பதறியவனோ “ச்ச இந்த வீட்ல பொண்ணா பிறந்தாதான் கேட்டதெல்லாம் கிடைக்கும் போல.. ஆணா பிறந்து தப்பு பண்ணிட்டேன்.. இப்ப என்ன அவளை சமாதானம் பண்ணனும் அவ்ளோதான” என்று கூறியபடியே ஒளிர்மதியின் அறையில் நுழைந்தவனை கண்டு ஹாலில் இருந்த அனைவரும் சிரித்தனர்…
மதியரசியின் அறையில் நுழைந்த விஜயராகவனோ யோசனையோடு அமர்ந்திருந்த தனது அன்னையை நோக்கி “அம்மா” என்று அழைக்க விஜயராகவனை கண்டுக்கொள்ளாமல் எழுந்தவர் உன் பொண்ணு வேலைக்கு போகுறத தவிர வேறு ஏதாவது பேசணும்னா நாம பேசலாம்” என்று தன் முகம் கூட காணாது பேசும் அன்னையை கண்டு மனம் வருந்தினாலும் ஒரு தந்தையாக தனது மகளின் வேதனையே பெரிதாக தோன்றியது அவருக்கு..
” அம்மா உங்க பேத்தி உங்களே மாதிரி புத்திசாலி அவ திறமைய பாழாக்க எனக்கு விருப்பம் இல்லமா” என்று கூற..
“புத்திசாலியான உன் அம்மா வாழ்க்கையில தோற்று போனவ” என்று விரக்தியாக கூற..
அவரின் வேதனையை உணர்ந்த விஜயராகவனோ “அம்மா நம்ம வாழ்க்கையில் என்ன நடந்திருந்தாலும் அதுல உங்க தப்பு எதுவும் இல்ல. உங்களை நினைச்சு நாங்க எப்பவுமே பெருமைதான் பட்டிருக்கோம்” என்று கூறிய தன் மகனை பார்த்து உயிரற்ற புன்னகை சிந்தியாவாறே அறையிலிருந்து வெளியே வந்தவர் ஒளிர்மதியை அழைத்து வரக்கூற.. கயல்விழியும் தனது அக்கா அறை நோக்கி சென்றாள்..
ஒளிர்மதியின் அறையில் நுழைந்த இளந்தீரனோ தலையணையில் முகம் புதைத்து அழும் தங்கையின் அருகே சென்றவன் “மதிமா எழுந்திரு” என்க..
ஒளிர்மதியோ “நான் இன்னும் அழுதிட்டுதான் இருக்கேன். என் முகம் பார்க்க சகிக்காதுல உனக்கு” என்று கூற..
அவள் கூறும் தோரணையில் வந்த சிரிப்பினை அடக்கியவாறே “என் தங்கச்சி அழும் போது கூட ஐஸ்வர்யா ராய் மாதிரி அழகா இருக்க” என்று கேலியாய் கூற..
அவனை நோக்கி அருகே மேஜையில் இருந்த பூச்சாடியை எடுத்து வீச முயற்ச்சிக்க அவள் கையை பிடித்து தடுத்தவன் “வேண்டாம் வலிக்கும் அப்புறம் அழுதிடுவேன்” என்று வடிவேல் பாணியில் கூற அதனை பார்த்து சிரித்துவிட்டாள் ஒளிர்மதி..
அவள் சிரிப்பதை பார்த்த இளந்தீரன் அப்போ “நீ சமாதானம் ஆகிட்டியா” என்று கேட்க இல்லையென தலையாட்டியவள் “எனக்கு ஐஸ்கீரிம் வாங்கிதா பார்க்கலாம்” என்று கூற.. அவனும் சரியென்று தலையாட்டினான்..
“அண்ணா பாட்டிக்கிட்ட பேசி அப்பா சம்மதம் வாங்கிடுவாங்க.. ஆனால் பாட்டியோட நிபந்தனை என்னவாக இருக்கும்.” என்று கேட்க அவளை யோசனையாக பார்த்தவனோ “பாட்டியோட நிபந்தனை எதுவாக இருந்தாலும் நீ சமாளிச்சிடுவ” என்று கூற..
“தெரியல” என்று கூறவும் அவள் அறையில் நுழைந்த கயல்விழியோ “அக்கா பாட்டி உன்னை கூப்பிட்டாங்க” என்று கூற..
“வரேன்” என்று கூறிக்கொண்டே மதியரசி தனது தலையில் இறக்க போகும் இடியை பற்றி அறியாமல் ஹாலை நோக்கி நடக்கலானாள்…