அத்தியாயம் 5
இரு சக்கர வாகனத்தில் தனது அண்ணனின் பின் அமர்ந்திருந்த ஒளிர்மதியின் காதுகளில் அவளது பாட்டி மதியரசியின் வார்த்தைகளே திரும்ப திரும்ப ஒலித்தன..
தனது தங்கையின் யோசனையான முகத்தினை கண்ணாடியினூடே கண்ட தீரன் தனது வாகனத்தை ஓரமாக நிறுத்தினான்..
“ஐஸ்கீரிம் கடை அதுக்குள்ள வந்துடுச்சா” என்று கேட்டவாறே வண்டியில் இருந்து இறங்கியவள் கடையை தேடினாள். “அண்ணா ஐஸ்கீரிம் கடை இங்க இல்லை இன்னும் கொஞ்சம் தள்ளி போகனும். நீ ஏன் இங்க நிப்பாட்டின? வண்டில ஏதும் பிரச்சனையா..? ”
“பிரச்சனை வண்டில இல்ல என் தங்கச்சியோட மனசுல..”
“எப்ப இருந்து நீ ரைம்மிங்கா பேச ஆரம்பிச்ச..”
“பச் பேச்ச மாத்தாத..”
“என்கிட்ட என்ன பிரச்சனை இருக்கு..?”
“அதான் அந்த ஹிட்லர் நீ வேலைக்கு போறதுக்கு ஒரு கண்டீசன் போட்டுச்சே..”
“பாட்டிய திட்டாத அண்ணா..”
“அந்த ஹிட்லருக்கு என்னதான் பிரச்சனை? முதல்ல உனக்கு பிடிச்ச படிப்ப படிக்கிறதுக்கு ஒரு கண்டிஷன். இப்ப நீ வேலைக்கு போறதுக்கு ஒரு கண்டிஷன் கடுப்பா இருக்கு..”
“பாட்டிக்கு ஏதாச்சும் காரணம் இருக்கலாம்..”
“என்ன காரணம்..? அந்த ஹிட்லருக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாத..”
தனது அண்ணனின் கோபம் கண்ட ஒளிர்மதி “அண்ணா என்னை சமாதானம் படுத்த ஐஸ்க்ரீம் வாங்கி தரேன்னு சொன்ன இப்ப உன்னை சமாதானம் பண்ண நான் உனக்கு ஐஸ்கீரிம் வாங்கி தரனும் போல..” என்று கூறியவள் “பாட்டி சொன்னத பத்தி அப்புறம் பேசலாம். ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம ரெண்டு பேரும் வெளிய வந்திருக்கோம் இப்ப இந்த நிமிஷத்தை நாம சந்தோஷமா என்ஜாய் பண்ணுவோம்..”என்று கூற..
இளந்தீரனுக்கும் அதுவே சரியென்று பட்டதால் தனது இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்தவன் தனது தங்கையை ஏற்றிக்கொண்டு ஐஸ்க்ரீம் கடை நோக்கி செல்ல ஆரம்பித்தான்..
தங்களது அலுவலகத்திலிருந்து கிளம்பிய சக்கரவர்த்தி குடும்பத்தினர் தனது இல்லத்தை அடைந்தனர். அவர்களது வருகையை வழி மேல் விழி வைத்து காத்திருந்த அவ்வீட்டின் இரு பெரியவர்களுக்கும் தனது மகன் மருமகள் தங்களது இரு மகன்களுடன் வீட்டிற்க்குள் நுழைவதை கண்டு மகிழ்ந்தனர். அவர்களுக்கோ நான்கு வருடங்கள் கழித்து பார்க்கும் வருணைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டவர்கள் அவனை ஓடிச்சென்று அணைத்து கொண்டனர்..
அவர்களுடன் தேவிகாவும் “என்னையும் சேத்துக்கோங்க..” என்றவாறே கட்டிக்கொண்டார்..
இவர்களை பார்த்து பொய்யாக கோபம் கொண்ட சூர்யாவும் “பாட்டி, தாத்தா..” என்று அழைத்துக்கொண்டே அவர்களை நோக்கி வந்தவன் “என்னை மறந்துட்டீங்க..” என்றுக் கூற. அவனை பார்த்த சக்கரவர்த்தியோ “நீயும் ஜோதில வந்து ஐக்கியம் ஆகிக்கோடா..” என்று கூறியவாறே அவனையும் சேர்த்து அணைத்துக் கொண்டார்..
“இது நம்ம வீடா இல்ல விக்ரமன் சார் படமா..?” என்று கேட்டவாறே சோபாவில் அமர்ந்தார் தேவ். அவரை முறைத்த சொர்ணம்மாளோ “கண்ணு வைக்காதடா..” என்று கூற..
“ஆமா! அங்க கால் வைக்கவே இடம் இல்லை இதுல கண்ணு வேற வைக்கனுமா?” என்று கேட்டாலும் அவருக்கும் சில வருடங்களுக்கு பிறகு தனது குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக ஒரே இடத்தில் இருப்பது மகிழ்ச்சியே..
சொர்ணம்மாளும் “கட்டிபிடிச்சதெல்லாம் போதும் போய் ஃபிரஷ் ஆகிட்டு வாங்க சாப்பிடலாம்” என்று கூறியவாறே தனது அணைப்பை தளர்த்த அனைவரும் தத்தமது அறைக்கு சென்றனர்..
தனது அறைக்குள் நுழைந்த வருணுக்கோ தனது குடும்பம் தன்னிடம் இயல்பாக பேசியதில் குற்ற உணர்ச்சியே அதிகம் ஆனது. அவர்கள் கோபமாக திட்டி இருந்தால் கூட அவனுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைத்திருக்கும், ஆனால் தன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் அவர்கள் காட்டும் அன்பினை எப்படி ஏற்றுக்கொள்ள என்றும் புரியவில்லை. ஏதேதோ யோசித்தவன் பின் குளித்துவிட்டு சாப்பிடுவதற்காக கீழே சென்றான்..
சாப்பாட்டு மேஜையில் உணவுகள் அனைத்தும் சூர்யா மற்றும் வருணுக்கு பிடித்தவையாகவே இருந்தன. அனைவரும் ஒன்றாக உணவருந்திய பின் தோட்டத்தில் சென்று அமர்ந்தனர். பின்பு சக்கரவர்த்தி ஆஃபிஸில் நடந்ததை பற்றி வினவ சூர்யாவும் “தாத்தா நம்ம மேனஜர் வர்மா க்ருப்ஸ் கூட சேர்ந்து நம்ம தொழிலாளர்களை போராட்டம் பண்ண தூண்டிருக்காங்க. வேற எந்த பிரச்சனைனாலும் பரவாயில்லை சம்பளம் குறைவுனு சொன்னதால நானே ஒரு டிடக்டிவ் அரெஞ்ச் பண்ணி விசாரிச்சப்ப தான் தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைவா கொடுக்கிறது தெரிஞ்சது. அப்புறம் நம்ம கம்பெனியோட அக்கவுண்ட்ஸ் அப்புறம் இதுல சம்பந்தபட்டவங்களோட பேங்க் டிடெயில் எல்லாம் செக் பண்ணுனதுக்கு அப்புறம் தான் நான் இந்தியாவுக்கு வந்தேன். நான் வரப்போறது முன்னாடியே தெரிஞ்சா அவங்க அலார்ட் ஆகிடுவாங்கன்னுதான் யாருக்கும் தகவல் சொல்லல” என்று கூறினான்..
“அப்ப வட இந்தியால இருந்து வரப்போற தொழிலாளர்களை என்ன பண்ணப்போற?” என்று தேவ் கேட்டார்..
“அவங்கள தற்காலிகமா தான் வேலைக்கு எடுத்திருக்கேன். நம்ம பெண்டிங் வொர்க் முடிஞ்சதும் அவங்களுக்கு வேற இடத்துல வேலை ஏற்பாடு பண்ணி கொடுத்திடுவேன்”..
இவர்களின் பேச்சில் சலிப்படைந்த சொர்ணம்மாளோ “ஆஃபிஸ் விஷயங்களை பத்தி அப்புறம் பேசுங்க. இப்ப விட்டு விஷயங்களை பேசலாம்” என்று கூற. .
“என்ன விஷயம் பாட்டி?” என்று சூர்யா கேட்டான்..
“எப்படா நான் கொள்ளு பாட்டி ஆகுறது? நீ யாரையாச்சும் லவ் பண்றியா இல்லை நாங்களே உனக்கு பொண்ணு பாக்கட்டுமா?”
“பாட்டி எனக்கு காதலிக்கலாம் நேரமில்லை”
“அப்ப பொண்ணு பாக்கட்டுமா?”
“அதெல்லாம் கொஞ்ச நாள் போகட்டும் பாட்டி. நீங்க கல்யாணம் பத்தி பேசினீங்க மறுபடியும் நான் லண்டன் ஓடிடுவேன்” என்று செல்லமாக மிரட்டினான்..
“நீ செஞ்சாலும் செய்வடா” என்று கூறியவாறே அவனின் தலையில் கொட்டு வைத்தார்..
தனது குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தாலும் வருண் ஒரு பார்வையாளராகவே இருந்தான். அவனின் ஒட்டாத தன்மையால் அங்கிருந்தவர்கள் மனம் வருந்தினாலும் தங்களது அருகாமை அவனை பழைய வருணாக மாற்றும் என்று நம்பினர்..
சூர்யாவோ வருணை பார்த்து “ஐஸ்கீரிம் சாப்பிட வரீயா? என்று கேட்க..
“இந்த நேரத்திலயா?” என்று வருண் கேட்க..
“நைட் டைம் ஐஸ்க்ரீம் சாப்பிட்டா அதோட டேஸ்ட்டே வேற மாதிரி இருக்கும் வா” என்று வருணையும் தன்னுடன் அழைத்து சென்றான்..
“டேய் எங்களுக்கும் வாங்கிட்டு வாங்கடா” என்று சக்கரவர்த்தி கூற..
அவரை முறைத்த சொர்ணம்மாளோ “ஒழுங்கா டயட் ஃபாலோ பண்ணுங்க” என்று கூற..
“ஐயோ! அதை மறந்திட்டேனே இதுக்கு தான் பொண்டாட்டி வேணுங்கிறது” என்று சக்கரவர்த்தி கூற..
இவர்களின் செல்ல சண்டையை ரசித்தவாறே அமர்ந்திருந்த தேவிகாவும் “அத்தைமா டைம் ஆகிடுச்சு வாங்க போய் தூங்கலாம்” என்று கூற அனைவரும் வீட்டிற்குள்ளே சென்றனர்..
இளந்தீரனும் ஒளிர்மதியும் ஐஸ்கீரிம் கடையை வந்தடைந்தனர். இளந்தீரனின் அலைப்பேசி ஒலிக்கவே அதனை எடுத்து பார்த்தவனுக்கு மிக முக்கிய அழைப்பு என்பதால் ஒளிர்மதியிடம் ஐஸ்கீரிம் கடைக்கு செல்லுமாறு கூறியவன் அழைப்பை எடுத்து பேசலானான்..
ஒளிர்மதியும் கடைக்கு சென்று அவர்கள் இருவருக்கும் விருப்பமான ஐஸ்க்ரீம் வாங்கி கொண்டு திரும்பிய போது கால் தவறியதால் எதிரே வந்த ஆடவனின் மீது மோத அவள் கையிலிருந்த ஐஸ்க்ரீமோ அவன் மீது விழுந்து உருகி வழிந்தது..
” ஐயம் சாரி” என்று கூறிக்கொண்டே அவள் நிமர்ந்து பார்க்க அவள் எதிரே நின்றது என்னவோ அவளின் உள்ளம் கவர்ந்த அவளின் சீனியர் சூர்யா தான்..
“சாரி கேட்குறத எப்ப நிறுத்த போற” என்று கேட்டவாறே அவளை அவன் நெருங்கி வர அவளுக்கோ அவனின் நெருக்கத்தில் மூச்சடைத்தது. பின் நோக்கி நகர்ந்தவளை அவள் இடைப்பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் “சாரி இப்படி கேட்க கூடாது” என்று கூறியவாறே அவளை இறுக்கி அணைக்க அவன் சட்டையில் இருந்த ஐஸ்க்ரீம் கறை இப்பொழுது அவளின் உடை மீதும் இருந்தது..
அவன் அணைப்பில் இருந்து வெளி வந்தவள் சுற்றி பார்க்க அவ்விடத்தில் இவர்களை தவிர ஒருவரும் இல்லை. இளந்தீரனை மறைத்தவாறே வாகனம் ஒன்று நின்றிருந்ததால் அவனுக்குமே எதுவும் தெரியவில்லை. தன்னை குனிந்து பார்த்தவள் பின் சூர்யாவை முறைத்தவாறே “பப்ளிக் ப்ளேஸ்ல இப்படிதான் பிகேவ் பண்ணுவீங்களா?” என்று கேட்க..
“அப்ப நம்ம தனியா இருந்தா எப்படினாலும் பிகேவ் பண்ணலாமா?” என்று அவனிடமிருந்து குதர்க்கமாக கேள்வி வரவே அவனை முறைத்தவள் அங்கிருந்து நகர பார்க்க “இன்னும் என்னை லவ் பண்ணுறீயா?” என்ற கேள்வியில் அதிர்ந்து விழித்தவள் இல்லையென தலையாட்டினாள்..
“அப்ப சரி இனிமேல் லவ் பண்ணு” என்று கூற..
அவனை முறைத்தவாறே “அதுக்கு வேற ஆளை பாருங்க” என்று கூறியவள் திரும்பி நடக்க, அவளை வழி மறைத்தவன் “சரி என்னோட ஃபர்ஸ்ட் கிஸ்ஸ திருப்பி தா இல்லன என்னை லவ் பண்ணு சாய்ஸ் இஸ் யுவர்ஸ்” என்று கூற..
நம்ம அண்ணனுக்கு இப்படி எல்லாம் பேச வருமா என்று அதிர்ந்து நின்றது என்னவோ சூர்யாவை தேடி வந்த வருண் தான்.