அமெரிக்காவில் இருந்து வந்த விமானம் இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. ஏர்போர்ட்டில் இருந்த வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்தான் ரோஹித்.
“தாய் மண்ணே வணக்கம்… தாய் மண்ணே வணக்கம்…” என்று பாட்டு பாடியவாறு வெளியே வந்தவன் அங்கிருந்த டாக்ஸி ஒன்றை அழைத்து கிருத்திஷ் சொன்ன அட்ரஸை அவரிடம் சொன்னான். அவரும் அழைத்துச் செல்வதாக கூற டாக்ஸியில் ஏறி இருந்தான். டாக்ஸியில் இருந்து கிருத்திஷிற்கு கால் பண்ணினான்.
“ப்ரோ நான் வந்துட்டேன். டாக்ஸில இருக்கேன்.” என்றான்.
“பத்திரமா போ சின்னு. அங்க போயிட்டு இங்க இருந்த மாதிரி அங்க உன்னோட விளையாட்டுத் தனத்தை காட்டிராத.”
“ஓகே அண்ணா. கண்டிப்பா முயற்சி பண்றேன்.” என்று சிரித்தான்.
“உன்னை எல்லாம் திருத்தவே முடியாது.” என்று தலையில் அடித்துக்கொண்டான் கிருத்திஷ்.
“இங்க பாருங்க ப்ரோ எனக்கு ஏதாச்சும் சொன்னீங்க, அப்புறம் உங்களோட கிஃப்ட்டை அண்ணிக்கிட்ட கொடுக்க மாட்டேன்.” என்றான்.
“அப்படி சொல்லி என்னை ப்ளாக்மெயில் பண்றீங்களா? சரி சரி.. எனக்கும் டைம் வரும்ல அப்போ பார்த்துக்கிறன்.” என்ற கிருத்திஷ், “பார்த்து போடானு.” சொல்லி ஃபோனை வைத்து விட்டான்.
ரோகித் சிரித்துக் கொண்டான். சில மணி நேரங்களின் பின்னர் பார்வதி இருக்கும் வீட்டின் வாசலில் வந்து நின்றது அந்த டாக்ஸி. அன்னத்தின் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டிருந்தார் பார்வதி. அப்போது என்ன வண்டி சத்தம் கேக்குது. இந்த நேரத்தில யாரா இருக்கும்?” என்றார் வேலுச்சாமி.
“அண்ணேன் என் பையன் வந்துட்டான் போல இருக்கு.” என்ற பார்வதி, “அன்னம் மற்ற கையில ரோஹித்தை அழைச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் வச்சு விடுறேன்.” என்றவர் வெளியே செல்ல அங்கே ரோஹித் நின்றிருந்தான். அவனைப் பார்த்து, “சின்னு..” என்றார்.
டாக்ஸிகாரனிடம் பணத்தை கொடுத்துவிட்டு திரும்பிய ரோஹித் ஓடி வந்து பார்வதியை அணைத்துக் கொண்டான்.
“அம்மா ஐ அம் ரியலி மிஸ் யூ..” என்று பார்வதியின் கன்னங்களில் முத்தம் வைக்க பார்வதியோ அவனின் தலையை வருடி விட்டு அவன் நெற்றியில் முத்தம் வைத்தார். “என் சின்னு நல்லா இருக்கியா?”
“நல்லா இருக்கேன் அம்மா.. உங்கள தான் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன்..” என்றவன் கண்களும் கலங்கத்தான் செய்தது.
அவன் எவ்வளவு விளையாட்டு பிள்ளையாக இருந்தாலும் தாய் என்றால் அவனுக்கு உயிர். சிறுவயதில் இருந்தே பார்வதியுடனே ஒட்டிக் கொண்டிருப்பான். நீண்ட நாட்களின் பின் தாயைப் பார்த்ததும் வந்த கண்ணீர் அது. அவனின் கண்ணீரை துடைத்து விட்ட பார்வதி, “சரி அதுதான் அம்மாகிட்ட வந்துட்டே இல்ல அப்புறம் எதுக்கு அழுற சின்னு. வா உள்ள போலாம்.” என்று அவனை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தார்.
வேலுச்சாமியைக் காட்டி, “இவர் தான் எங்க அண்ணன். இப்போ உன் அண்ணனோட மாமனார்.”
“ஹாய் மாமா.” என்று சொல்லிவிட்டு அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டான்.
“நல்லா இருப்பா.. நல்லா இரு..” என்று அவனை தூக்கி விட்டார் வேலுச்சாமி.
“அம்மா எங்க அண்ணி, அந்த நக்கீரனுக்கு வாக்கப்பட்ட புண்ணியவதி எங்கம்மா?” என்று நாடகப் பணியில் அவரிடம் கேட்க, அவனது பேச்சில் சிரித்த அன்னத்தின் குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்த ரோஹித், “அடடா என்ன அழகா சிரிக்கிறாங்க இவங்களா என் அண்ணி?”
“ஆமா இவ தான் உன் அண்ணி. நம்ம வீட்டோட மூத்த மருமக.” என்றதும் வேகமாக அன்னத்திடம் வந்த ரோஹித் அவள் காலில் தடாலென விழுந்தான்.
“அண்ணி ரொம்ப நன்றி அண்ணி.” அவன் தனது காலில் விழுந்ததை பார்த்த அன்னம், “ஐயோ எந்திரிங்க. நீங்க என்ன விட வயசுல பெரியவங்க. நீங்க என் கால்ல விழலாமா எந்திரிங்க.” என்றாள்.
அன்னத்தை நிமிர்ந்து பார்த்த ரோஹித், “வயசுல வேணும்னா நான் பெரியவனா இருக்கலாம். ஆனா நீங்க என் அண்ணனோட மனைவி. அதனால தப்பில்ல அண்ணி. நீங்க மட்டும் எங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்காம இருந்திருந்தா என் வாழ்க்கையே போயிருக்கும்.” என்று பொய்யாக கண்ணீர் வடித்தான்.
அதை பார்த்த அன்னம், “என்ன சொல்றீங்க?” என்றாள்.
“ஆமா அண்ணி, நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன். எங்க அப்பா உன் அண்ணனுக்கு கல்யாணம் நடந்தா தான் உனக்கு நடக்கும்னு சொல்லிட்டாரு. அவன் இருக்கிறதை பார்த்திட்டு அவனுக்கு எங்க கல்யாணம் நடக்கப்போகுதுனு நானும் பார்த்துட்டு இருந்தேன். சரி நம்ம வாழ்க்கையே இனிமே அவ்வளவுதான்னு நினைச்சேன். ஆனா தெய்வ மாதிரி நீங்க வந்து என் அண்ணன் கையால தாலி வாங்கி கட்டிக்கிட்டீங்க. உங்க புண்ணியதால என் ரூட்டு கிளியர் ஆயிட்டு.” என்றான்.
“டேய் வந்ததும் உன் வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டியா? அவ பாவம் நீ சொல்றது கேட்டு பயப்பட போறா.” என்றார் பார்வதி.
“ஏன் தம்பி அப்பா மாப்பிள்ளைக்கு அம்புட்டு கோபம் வருமா?”
“நல்லா கேட்டீங்க மாமா, கோவம் வருமா வா? அண்ணனோட கோபத்துக்கு முன்னால யாரும் நிக்க முடியாது. அப்படிப்பட்ட அவன் இன்னைக்கு என்ன காரியம் பண்ணான்னு தெரியுமா?”
“என்னப்பா எதுவும் பிரச்சனையா?” என்றார் பார்வதி பதறியபடி.
“என்ன பிரச்சனைனா கேக்குறீங்க அண்ணா அண்ணிக்கு ஒரு கிப்ட் எங்கிட்ட கொடுத்து அனுப்பி இருக்கான்.”
“என்னது கிப்ட்டா? அதுவும் கிருத்திஷா?”
“ஆமா அம்மா உங்க பையனேதான். நீங்க என்ன நினைச்சீங்க? அந்நியன் அப்படியே ரெமோவா மாறிட்டு வர்றான் அம்மா.”
“ஏன்டா என் பிள்ளை மேல கண்ணு வைக்கிற? அவன் எப்படி இருந்தாலும் என் பிள்ளை தான். என்ன மம்மி இப்படி கட்சி மாறிட்டீங்க? இவ்வளவு நாளும் என்னை கொஞ்சிட்டு இப்போ அண்ணாவை கொஞ்சிட்டு இருக்கீங்க. இப்படி எல்லாம் பண்ணா அண்ணிக்கிட்ட கிப்ட்டை கொடுக்க மாட்டேன் பாருங்க.”
“எனக்கென உன் அண்ணியாச்சு நீயாச்சு பாத்துக்கோ.”
“அண்ணி அண்ணன் கொடுத்த கிப்ட் வேணுமா?” என்று அன்னத்தின் முன்னால் வந்து நின்று கேட்டான் ரோஹித்.
அன்னம் அவனிடம், “ஆமா கொழுந்தனாரே அதை குடுங்க.” என்று சொன்னாள்.
உடனே அவன், “இப்போதான் அண்ணி என்ன அழகா கொழுந்தனார்னு கூப்பிட்டிருக்காங்க. அதுக்காகவே இந்த கிப்ட்டை உங்களுக்கு தர்றேன் அண்ணி.” என்று அந்த கிப்ட்டை அவளிடம் கொடுத்தான்.
ரோஹித் கொடுத்த கிப்ட்டை பிரிக்க ஆரம்பித்தாள் அன்னம். அதுவும் மெதுவாக அவள் அந்த கிப்ட்டிற்கு வலிக்காது போல பிரித்தாள். இதைப் பார்த்த ரோஹித், “அண்ணி சீக்கிரமா பிரிங்க. அது என்னனு தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு.”
“இருங்க இருங்க..” என்றவள் அதை மெதுவாகவே பிரித்து முடித்தாள். அதை ஓபன் பண்ணி பார்க்க அதற்குள் ஸ்மார்ட் நவீன ரக தொலைபேசி இருந்தது.
“அம்மா பாருமா அண்ணாவை. அண்ணியோட பேசணும்னே போன் வாங்கி அனுப்பி இருக்கிறான். எப்பவும் உன் போன்ல பேச முடியாதுன்னு. எப்படிப்பட்டவர் கில்லாடினு பாருமா உன் பையன்.”
“நல்ல வேலை பண்ணான். நானுமே அவன்கிட்ட சொல்லனும்னே இருந்தன். ஆனா மறந்துட்டேன். அவளுக்கு ஒரு போன் வேணும் தானேடா அவ நினைச்ச நேரம் அவ புருஷன் கூட பேசுறதுக்கு.. எப்ப பாரு நானே போனை கொண்டு குடுத்துட்டு இருக்க முடியாதுல. நல்ல வேலை பார்த்தா என் பையன்.” என்று மறுபடியும் கிருத்திஷைப் புகழ்ந்தார் பார்வதி.
“போதும் அம்மா போதும்.. உங்க பிள்ளை புகழ்ந்து போதும். அண்ணி குடுங்க நான் அதை ஓபன் பண்ணி தரேன்.” என்றவன் அந்த போனை எடுத்து எல்லாவற்றையும் செய்து கொடுத்தான்.
“இப்போ அண்ணா கால் பண்ணா நீங்க தாராளமா பேசலாம்.” என்றான். அன்னம் அந்த போனை வாங்கி திருப்பி திருப்பி பார்த்து, அதை தொட்டு பார்த்துக் கொண்டு இருந்தாள். இதைப் பார்த்து மகிழ்ந்தார் வேலுச்சாமி.
அதே நேரத்தில் ரோகித்தின் போன் அடித்தது, “உன் அண்ணனாத்தான் இருப்பேன் பாரு.” என்றார் பார்வதி. அவனும் எடுத்துப் பார்த்து, “சரியா சொன்னீங்க அம்மா. அண்ணாதான் கால் பண்றான். ஹலோ…” என்றான்.
“ரோஹித் வீட்டிற்கு போய்டியா?”
“போய்ட்டேன் அண்ணா.”
“சரி அண்ணிக்கிட்ட கிப்ட்டை குடுத்தியா ரோஹித்?”
“என்ன கிப்ட்டா… ஓ மை காட்.. அண்ணா கிப்ட்டை ஏர்போர்ட்டில விட்டுட்டு வந்துட்டேன். ரியலி சாரி அண்ணா.”
“வாட் போனை ஏர்போர்ட்ல விட்டுட்டியா? ஏய் என்ன வேலை பார்த்து வச்சிருக்க? உன்னை நம்பி கொடுத்தேன்ல என்னை சொல்லணும்.”
“இல்ல அண்ணா திங்ஸ் எடுக்கற அவசரத்துல அதை விட்டுட்டேன். என்னை மன்னிச்சிடு அண்ணா. நான் வேணுமா அண்ணிக்கு அதைவிட காஸ்ட்லியான ஒரு போனை இங்கேயே வாங்கி குடுக்கிறேன்.” என்றான்.
அதற்கு அந்த பக்கம் இருந்த கிருத்திஷ், “கிப்ட் வாங்கி கொடுக்கிறது முக்கியம் இல்ல. நான் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் என் ஃவைப்கு வாங்கிக் கொடுத்தது. நீ என் கண்ணுக்கு முன்னுக்கு வந்திடாத.” என்று கோபத்தில் கத்த ஆரம்பித்தான் கிருத்திஷ்.
இந்தப் பக்கம் ரோகித் சிரிக்க, பார்வதி அவனிடம், “விளையாடாதடா.” என்ற சொல்லி பார்வதி ரோகித்திடம் இருந்த போனை வாங்கி, “எப்பா ராஜா உன் பொண்டாட்டிக்கு நீ அனுப்பி வைச்ச போனை நல்ல படியா குடுத்தாச்சு. இனிமே உன் பொண்டாட்டி கூட நீ எப்ப வேணும்னாலும் எத்தனை மணிநேரம்னாலும் பேசலாம்.” என்றார் பார்வதி.
“ஓகே அம்மா. என்னூ டென்ஷன் படுத்துறதிலேயே இருக்கான் ரோஹித். அவன் இங்க வரட்டும் நான் ஒரு வழி பண்றேன் அவனை. சரி நான் அப்புறம் பேசுறேன் அம்மா.” என்று போனை வைத்து விட்டான்.