இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 26

5
(5)

 சந்திரா, நல்லசிவம் இறந்து இன்றோடு நாற்பது நாட்கள் கழிந்திருந்தன. கொஞ்சம் கொஞ்சமாய் பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருந்தனர் செம்பா குடும்பத்தினர்.

செம்பா தேறி வர முக்கிய காரணம் ஹரிணிதான். “தித்தி, தித்தி” என தன் மழலை குரலில் அவள் மனதினை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றிவிட்டிருந்தாள்.

ரஞ்சியை சந்திரா இருந்தால் எப்படி பார்ப்பாரோ அதே போல் பார்த்துகொண்டிருந்தார் ராசாத்தி.

ரஞ்சி அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, நடந்ததை பேசி எதையும் மாற்ற முடியாது ரஞ்சி. நீ உன் புருஷன் குழந்தையோட எப்பவும் போல நல்லா இருக்கனும் என்றவருக்குதான் அண்ணண் அண்ணி இல்லாமல் தனிமை கொன்றது. சிலநேரம் தனிமையில் உட்கார்ந்து அழுவார். கோகி, செம்பா ரஞ்சி மூவரும் ஒன்றாக உட்கார்ந்து எதையாவது பேசுவர். ஆனால் ராசாத்தியோ அண்ணண், அண்ணி நினைவிலேயே அமர்ந்திருப்பார்.

அப்போது செம்பா வீட்டிற்கு வந்தனர் பாலாவும், சமரும்.

“உள்ளே வாங்க” என்றாள் ரஞ்சி. இருவரும் வீட்டில் வந்து அமர, காபி கொண்டு கொடுத்தாள் கோகி.

“என்னங்க ஹாஸ்பிடல் கட்டுற வேலை ஆரம்பிச்சிட்டிங்களா” என பாலாவிடம் கேட்க…

“ஆமா ரஞ்சி. இப்போதான் தொடங்கியிருக்கு, முழுசா முடிய‌ எப்படியும் ஏழு மாதமாவது ஆகும்.”

அதேநேரம் செம்பா பாலாவை பார்த்து முறைக்க அவளிடம் வந்தவன் “உன்னோட கோபம் எனக்கு புரியிது பாப்பா. வேற வழியில்லாமல்தான் இப்படி பண்ணோம். நீயே சொல்லு எங்க கல்யாணம் நம்ம வீட்டு சம்மததோட நடக்குமா? என்க…

செம்பா யோசித்தாள்.

பாலா விரக்தியாய் புன்னகைத்தபடி, உனக்கே நடக்காதுன்னு தோணுதுல்ல, எங்க கல்யாணம் நடந்தால் எவ்வளவு பிரச்சனை வரும்னு தெரியும். ஆனால் அது எங்க மனசுக்கு தெரியலை‌ பாப்பா. ரஞ்சியை யாருக்கும் விட்டு கொடுக்க எனக்கு மனசு வரலை. மனசுல ஆசையை வளர்த்து விட்டு ஏமாத்துறது, பெரிய பாவம்னு தோணுச்சி யாரை பற்றியும் யோசிக்காமல் கல்யாணம் பண்ணிட்டேன். நான் பண்ணது தவறுதான் புரியிது” என்றான் பாலா.

உடனே ரஞ்சி “அப்போ கூட பாலா மாமா நம்ம வீட்ல சொல்லலாம்னு தான் சொன்னார். நான்தான் யாருக்கும் தெரிய வேணாம். ஏற்கனவே என் குடும்பத்தை அசிங்கமா பேசுற உங்கம்மா இன்னும் கேவலமா பேசுவாங்கன்னு சொன்னேன். அதான் யார்கிட்டேயும் சொல்லல. அப்புறம் சமர் அண்ணாவுக்கு இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் அவருக்கு தெரியும். அது வரைக்கும் என்னை கல்யாணம் செய்ததை மறைத்துதான் வைத்திருந்தார். இவங்க இந்த ஊருக்கு வரும்போது நான் இங்கே இருக்குறது நான் சொல்லாமல் யார்கிட்டேயும் சொல்லகூடாதுன்னு சத்தியம் வாங்கித்தான் அனுப்பினேன். இப்போ ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் சமர் அண்ணா உன்னை விரும்புறதாகவும் பொண்ணு கேட்க போறதாகவும் என்கிட்ட சொன்னாங்க. அப்போ நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவேயில்லை செம்பா. அதுக்கு அப்புறம்தான் அப்பாகிட்ட பேசினேன். சீக்கிரம் உங்க எல்லாரையும் பார்க்க வருவேன்னு சொன்னேன். சொன்ன மாதிரி நான் வந்துட்டேன். ஆனால் அவங்கதான் என் முகத்துல முழிக்க கூடாதுன்னு ஒரேடியாக எனக்கு பெரிய தண்டனை கொடுத்துட்டு போய்ட்டாங்க” என அழுதாள் ரஞ்சி.

“வயித்துல பாப்பா இருக்கு அழாதக்கா” என செம்பா சமாதானம் செய்தாள்.

 “தம்பி நீங்க கோயம்புத்தூர் கிளம்பனும்ல, எங்களால் உங்க வேலையும் கெடுதே” என்றார் ராசாத்தி

“கிளம்பனும் சித்தி. செம்பா மனதளவில் தயாராகனும்ல”,

“செம்பா ஏன் தயாராகனும்” என ரஞ்சி கேட்க..

“என்ன மறந்துட்டியா? அவள் இப்போ சமர் பொண்டாட்டி” என்றதும்

“ஐயோ ஆமால்ல, நான் ஒரு பைத்தியம் என்றவள் சமரிடம் சாரிண்ணா” என்றாள்.

சமர், செம்பாவை பார்க்க அவள் முழித்தபடி நின்றாள்.

“என்ன பாப்பா உன் புருஷன்கூட ஊருக்கு போற ஐடியா இல்லையா”

“மாமா அது”.

“அவள் வருவாள் தம்பி. நீங்க கவலைபடாதிங்க என்றார் ராசாத்தி”.

“அத்தை‌” என கலங்க

“செம்பா உனக்கு நான் அறிவுரை சொல்லனும்னு இல்லை. எங்க எல்லாரையும் பார்த்துகிட்டவள் நீ. கல்யாணம் ஆனதும் புருஷன் வீடுதான் பொண்டாட்டிக்கு நிரந்தரம். உன்னோட வாழ்க்கையை வாழுற வழியை பார். அம்மா, அப்பா வாழ்ந்த வீட்டை விட்டு போக உனக்கு கஷ்டமாகத்தான் இருக்கும் எனக்கு புரியுது. ஆனால் உன் வாழ்க்கையை நீதான் வாழனும். என் அண்ணனும் அண்ணியும் உனக்கு எப்பவும் துணையா இருப்பாங்க” என்றார்.

“அம்மா‌ செம்பா மட்டும் எங்ககூட வரலை, நீங்களும்தான்” என்றதும்‌ செம்பாவின் முகம் பொலிவை காட்டியது.

“நாங்க ஏன் தம்பி.?”

“செம்பா என்கூட வந்ததுக்கு அப்புறம்‌ நீங்களும் கோகியும் இங்கே தனியா இருந்து என்ன பண்ண போறிங்க…?” என சமர் கேட்க

“தம்பி வீடு வாசலை போட்டு நான் எங்கே வர?”

“அம்மா உங்க பையனும் இங்கே அவ்வளவா வருவது இல்லை. நேற்று வந்தவர் காலையிலே கிளம்பிட்டார். வீடு வாசலை, ஆள் வச்சி பார்த்துக்கலாம். நீங்க என்கூட கிளம்புங்க” என்றான் சமர் உறுதியாய்…

“ஆமா அத்தை நீங்களும் என்கூட வாங்களேன். அம்மாவும் அப்பாவும்‌ உங்க உருவத்துல என்கூட இருக்குற மாதிரி இருக்கும்” என செம்பா சொன்னதும்,

“சமர் அண்ணா நாங்க உங்க கூட வர்றோம். என்னைக்கு கிளம்பனும் சொல்லுங்க” என்றாள் கோகி.

“நாளைக்கு காலையில் கிளம்புறோம்” கோகி

‘சரி நான் எனக்கு தேவையான பொருளை எடுத்து வைக்க போறேன்” என வீட்டிற்குள் ஓடினாள்.

“தம்பி நாங்க அங்கே வந்து எங்கே தங்குவது.”

“என்னம்மா‌ இப்படி கேக்குறிங்க, நம்ம வீட்ல தான்”

“இல்லப்பா நாங்க தனியா இருக்கனும்னு நினைக்கிறேன்”.

“புரியலைம்மா‌” என சமர் கேட்க…

“எப்படியும் இனிமே நான் அங்கேதான் இருக்க போறேன். அப்படிங்குறப்போ செம்பாவுக்கு அம்மா வீடுன்னு ஒன்னு இருக்கனும்ல, நானும் உங்களோட இருந்தால் அது சரியா வராது தம்பி” என்றார்.

“சமர் நாங்க இருக்குற வீட்டு பக்கத்துல ஒரு வீடு காலியாக இருக்கு. அங்கே சித்தி, கோகியை தங்க வச்சிடலாம், ப்ராப்ளம் முடிந்தது.”

“சரிம்மா நீங்க சொன்ன மாதிரியே உங்களுக்கு தனியா வீடும் ரெடி இப்போ வறிங்கதானே”

“வறேன்ப்பா, வாங்க சாப்பிடலாம்” என இருவருக்கும் உணவு பறிமாறியவர்

“பாலா” என அழைக்க…

“சொல்லுங்க சித்தி” என்றான்.

“ரஞ்சியை உங்க வீட்டுக்கு கூப்பிட்டு போறியா இல்லை, இங்கே இருந்தே கோயம்புத்தூர் கிளம்ப போறிங்களா”

“எங்க வீட்டுக்கு போகனும் சித்தி‌, போய்ட்டு உடனே வரனும்”.

“உங்க அம்மா ரஞ்சி வர சம்மதிப்பாங்களா?”

“அவங்க சம்மதிக்கிறாங்க சம்மதிக்கலை, இங்கேதான் இருக்கபோறேன்னு நான் முடிவு பண்ணிட்டேன்” என்றாள் ரஞ்சி.

“என்னடி பேசுற ரஞ்சி” என ராசாத்தி கேட்க

“என் அப்பா அம்மாவை எவ்வளவு அசிங்கமா பேசிருப்பாங்க. நாங்க அந்த வீட்டுக்குள்ளேயே காலை வைக்ககூடாதுன்னு நினைச்சாங்கல்ல, ஆனால் இப்போ நிலமையை பாத்திங்களா?, யார் வரகூடாதுன்னு சொன்னாங்களோ அவதான் அவங்க வீட்டு மருமகள். முதல்ல இங்கே இருக்கக் கூடாதுன்னுதான் அத்தை நினைத்தேன். அப்பா இறந்த அன்னைக்கு அப்பாவை பார்த்து பேசிருக்காங்க. அதை பார்த்த ஒருத்தர் நேற்றே என்கிட்ட சொன்னார். இவங்க என்ன வார்த்தை பேசியிருந்தால் என் அப்பா மனசளவுல நொந்து இறந்திருப்பார். அதுக்கு அவங்களுக்கு தண்டனையே, இந்த ஒன்னும் இல்லாத பிச்சைக்காரி அந்த வீட்டோட மகாராணியா வாழுறதுதான். அவங்க கண்ணுமுன்னாடியே நடமாடுவேன். எல்லாத்தையும் என் கைக்குள் கொண்டு வரனும். அதுக்கு நான் அந்த வீட்டுக்கு போகனும்”. அத்தை

“பொண்ணுக்கு இவ்வளவு கோபம் ஆகாதுடிம்மா” என்றார் ராசாத்தி.

“இரண்டு பொண்ணு வச்சிருக்க, எவன்கூட ஓடி சிரழிஞ்சி போவாளுங்களோன்னு சொன்னாங்கல்ல, ஆமா நான் ஓடித்தான் போனேன். அதுக்கு காரணம் அவங்கதானே. இன்னைக்கு நான் சீரழியல என் புருஷன், அவங்க பையன் என்னை நல்லாதான் வச்சிருக்கார். சந்திரா பொண்ணுங்க ரெண்டு பேரும் அவங்க விருப்பபட்டவனை கட்டிட்டு நல்லாதான் வாழுறோம். அதை அவங்க கண்ணால் பார்க்கனும்” அத்தை.

“உன்னோட கோபம் நியாயமானதுதான். என் அண்ணண் செய்த தவறால் எல்லாம் மாறிடுச்சி ரஞ்சி. அதை விடு குடும்பம் நல்லா வாழுறதும் நாசமா போனதும் பொண்ணுங்க கையில்தான் இருக்குன்னு சொல்வாங்க. என் அண்ணண் பொண்ணுங்க ஒரு குடும்பத்தை அழிக்க மாட்டாங்க அந்த நம்பிக்கை இருக்கு.” என்றார்

“சரிதான் அத்தை. நான் எதுவும் பண்ண போறது இல்லை. அந்த வீட்ல‌ என் புருஷனோடு வாழ போறேன் அவ்வளவுதான். அதுக்கே அவங்களுக்கு அட்டாக் வராமல் இருந்தால் சரிதான்.”

“உங்க மூனு பேர் வாழ்க்கையில் நல்லது நடந்தால் சந்தோஷம்தான் இனிமே என் வாழ்க்கை உங்களுக்காகத்தான்” என்றார் ராசாத்தி.

சாப்பிட்டு முடித்த பாலா ரஞ்சியிடம் “கிளம்பு அம்மா வீட்டுக்கு போய்ட்டு உடனே வந்துடலாம் நானும் சமரும் வெளியே போகனும்” என்றான்.

சரியென்ற ரஞ்சி தன் மகளை தயார் செய்துகொண்டு பாலாவுடன் அவன் வீட்டிற்கு கிளம்பினாள்.

சமர் செம்பாவை தேடி வர வெளியே தனியாக அமர்ந்திருந்தாள். அவள் பக்கத்தில் வந்து அமர அவன் தோள் சாய்ந்தாள்

‘என்னடா?”

“ஒன்னும் இல்லைங்க. சும்மா அப்படியே வெளியே வந்தேன் இங்கே இருந்துட்டேன்”.

“உனக்கு விரும்பும் இல்லன்னா, நீ வர வேணாம். இங்கேயே இரு. வாரத்துக்கு ஒரு தடவை உன்னை வந்து பார்த்துட்டு போறேன்”

“நான் அதை பற்றி யோசிக்கலைங்க. நான் உங்க கூட வாழனும்தான் ஆசைபட்டேன். உங்க அம்மா அப்பா கிட்ட இருந்து பிரிக்கனும்னு நினைக்கலை. நான் உங்க வீட்ல வாழுறதுலதான்‌ உங்க மறியாதையே இருக்கு. அப்புறம் என் அப்பா, அம்மா என் கூடவே தான் இருப்பாங்க. என்னை விட்டு எங்கேயும் போகமாட்டாங்க. இப்போ நான்‌ யோசிச்சது ரஞ்சி அக்காவை‌ பற்றிதான். நிறைமாதமா இருக்காங்க. எப்போ வேணாலும் குழந்தை பிறக்கலாம். அப்படி இருக்குறப்போ‌ எப்படி அக்காவை விட்டு வர்றதுன்னு யோசிக்கிறேன்”.

“ராசாத்திம்மா பாத்துக்கறேன்னு சொல்லிட்டாங்க.”

“அக்கா இங்கே இருக்க போறதா சொன்னாலே, ராசாத்தி அத்தை நம்ம கூட வறப்போறாங்கல்ல”

“ரஞ்சி இங்கேதான் இருக்க போறாள். ஆனால் இப்போ இல்லை‌. குழந்தை பிறந்ததுக்கு அப்புறம்தான் இங்கே வருவாள். அதுக்குள்ள ஹாஸ்பிடல் வேலையும் முடிந்துவிடும். அதை இங்கே இருந்து பாலா பார்த்துப்பான்”

“ ஓஹ்‌.. சரிங்க ஆத்வி அக்கா கிட்ட இருந்து ஏதாவது தகவல் கிடைச்சதா‌?”.

“ஆத்வி இங்கே இல்லை. அவங்க மாமா பேமிலியில் ஒரு பங்சன் பாரின் போய்ருக்காள். ஒரு மாதம் ஆகப்போகுது. இன்னும் நான்கு நாள்ல வந்துடறதா சொன்னாள்.”

“ குகன் மாமாவை கல்யாணம் பண்ணுற எண்ணத்தில் இருக்காங்களா?”

“வந்தால்தான் தெரியும். அவள் மனநிலை எப்படி மாறி இருக்கு” என்று.

“குகன் அண்ணா அம்மாவுக்கு ஆப்ரேஷன் முடிந்ததுல்லங்க…?”

“ஆமா நீ வேலை பார்த்த ஹாஸ்பிடல்லதான் பண்ணாங்க. ஆப்ரேஷன் பண்ணிட்டு அவங்களை கவனிக்கிறதுக்கு செவிலியரை ஏற்பாடு செய்துவிட்டுதான் ஆத்வி கிளம்பினாள்.”

“சரி செம்பா. ஹாஸ்பிடல் கட்டுறதுக்காக சில பொருள்கள் வாங்க வேண்டியது இருக்கு. அது விஷயமா நானும் பாலாவும் வெளியே போறோம். நீ உனக்கு தேவையான பொருள் மட்டும் எடுத்து வை. மற்றதெல்லாம் அங்கே போய் வாங்கிக்கலாம். அப்புறம் நான் வர ரொம்ப நேரம்‌ ஆகும்‌. காத்திருக்காமல் தூங்கிடு‌, என்றவன் பாலாவை அழைக்க அவன் வீட்டிற்கு கிளம்பினான்.

பாலா ரஞ்சி இருவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர். ரஞ்சி அமர்ந்திருந்ததை பார்த்து கற்பகத்தின் உடலெல்லாம் எறிந்தது. அவர் பார்க்க வேண்டுமென கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தாள்.

 அதை பார்க்க முடியாமல் ஹரிணியை தூக்கிகொண்டு வெளியே வந்துவிட்டார் கற்பகம். ஹரிணிக்கு விளையாட்டு காட்டியபடி இருக்க, அங்கே மங்கை வந்தாள்.

“என்னம்மா இங்கே நிற்கிற, உன் மகனை எங்கே நாக்கை புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டாதான் என் மனசு ஆறும். நேற்று அந்த இடத்துல பேசவேண்டாம்னு விட்டுட்டேன்.”

“உள்ளே தான் இருக்கான்” என்றதும் “இரு பேசிட்டு வாறேன்” என சீறிக்கொண்டு உள்ளே வந்தாள். அங்கே ஹாலில் அமர்ந்திருந்த ரஞ்சியை கண்டு “ஏய் பிச்சைக்கார நாயே! யார் வீட்ல யார் இருக்குறது” என பேசி முடிப்பதற்குள் அவள் கண்ணம் தீயாய் எறிந்தது. அடித்தது யாரென பார்க்க நாராயணண், மங்கை இருவரும் நின்றிருந்தார்.

மங்கையை பார்க்க “நான் இல்லை‌ என் மாமாதான்” என்றாள் நாராயணனை கை காட்டியபடி‌‌….

அறையில் இருந்த பாலா மங்கையின் சத்தம் கேட்டு வருவதற்குள் அடித்திருந்தார்.

“அப்பா உங்களுக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு, இவளுக்காக‌ என்னை அடிக்கிறிங்க” என மங்கை சத்தமிட

“ஆமா, இத்தனை நாள் பைத்தியம் பிடிச்சிருந்தது இப்போ தெளிவாகிடுச்சி” என்றவரிடம்

“என்ன உங்க தங்கச்சி மகள், வந்த தைரியத்துல பேசுறிங்களா? இருங்க, அம்மாவை கூப்பிட்டு வந்து உங்களை என்ன பண்றேன்னு பாருங்க” என கத்தி கூப்பாடு போட…

“ஹேய்! என சத்தத்தோடு மங்கையின் முன் காதை குடைந்தபடி “ என் வீட்ல என்ன சத்தம்? வந்தியா சாப்டியா போனியான்னு இரு, இந்த சத்தம் போடுற வேலையெல்லாம் வேணாம். அப்பூறம் இது என் வீடு. யார் வீடு சொல்லு, என் வீடு. நல்லா உன் தலையில் ஏற்றிக்கோ. இனிமே இங்கே வர்றதா இருந்தால் கொஞ்சம் அடக்கி வாசி. இல்லை இப்போ மாமா உன்னை அடிச்சதை, நான் அடிக்க வேண்டியது இருக்கும் எப்படி வசதி” என்றாள் ரஞ்சி.

மங்கை, கற்பகம் நடப்பதை பார்த்துகொண்டு நிற்பதை கவனித்தாள். அம்மா பேசாமல் அமைதியாக நிற்குறாங்க, அப்போ இனிமே இந்த வீட்டில் நம்ம பேச்சி எடுபடாது என பேசாமல் நின்றுவிட்டாள். கற்பகம் ரஞ்சி நடந்து கொள்வதைதான் பார்த்தபடி நின்றார். நாராயணணிடமும்‌ இனிமே‌ பழையபடி பேசமுடியாது. அவர் மருமகளுக்கு அரணாக அவர் இருப்பார் என்பதை நன்றாக உணர்ந்த கற்பகம் முதல்முறையாக வாயடைத்து நின்றார்.

அடுத்தநாள் விடியலில் மொத்த குடும்பமும் கோயம்புத்தூர் நோக்கி பயணத்தை தொடங்கியது.

சமர் வீட்டிற்கு வந்து சேர மாலை நான்கு மணி ஆனது. வாசலில் ஆரத்தி தட்டோடு நின்றிருந்தார் வைஷ்ணவி.

சமரின் வீடு பெரிய மாளிகை போல காட்சியளித்தது. வீட்டை மிரட்சியோடு பார்த்தவளை தோளோடு அணைத்தான் சமர். இருவருக்கும் ஆரத்தி எடுத்த வைஷ்ணவி, செம்பாவின் கரங்களை பிடித்து “நம்ம வீடுதான் உள்ளே வா” என்றார். வேறு எந்த சம்பிரதாயங்களும் நடைபெறவில்லை.

ராசாத்தியிடம் “நாளைக்கு நல்ல நாள். சமர் செம்பா கல்யாணம் எப்படி நடந்ததுன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். அதனால், கோவில்ல வச்சி சிம்பிளா தாலி கோக்குற பங்சன் வச்சிடலாம்”. என நேத்ரனும், வைஷ்ணவியும் பேச, எல்லாரும் சம்மதித்தனர்.

வைஷ்ணவி, நேத்ரன் பழகிய விதத்தில் சுத்தமாக பயம் விலகி அவர்களோடு நன்றாக பேச ஆரம்பித்தாள். தன் போட்ட வட்டத்தில் இருந்து வெளியே வந்து எல்லாரிடமும் சிரித்து பேசி, பழக ஆரம்பித்திருக்கிறாள் செம்பா.

ஆதவன் மெதுவாக இருளை நீக்கி வெளிச்சத்தை பரப்பி கொண்டிருந்தான்.

சமர், செம்பா இருவரும் தனி தனி அறையில் தயாராகி வெளியே வர அவளை புடவையில் கண்டு விழி விரித்தான். பச்சை வண்ண பட்டு புடவையில், அளவான ஆபரணங்கள் அணிந்து எந்த வித முகப்பூச்சும் இல்லாமல், கார் கூந்தலில் மவ்லிச்சரம் வைத்து அழகோவியமாய் நின்றவளை காண சமருக்கு இரு கண்கள் போதவில்லை..

செம்பாவும் சமரை பார்த்து லேசாக இதழ்விரித்தாள்.

“அண்ணா சைட் அடிச்சது போதும், வாங்க கோவில் போலாம்” என கோகி அழைத்துகொண்டு கார் இருக்கும் இடத்திற்கு வந்தாள்.

மொத்த குடும்பமும் கோவிலுக்கு சென்றது. அங்கே ஆத்வி, கோகுல், வித்யா, தினேஷ் நால்வரின் பெற்றோரும் வந்திருந்தனர். மணமக்கள் இருவரையும் மணப்பலகையில் அமரவைத்து பூஜை ஆரம்பமானது. சடங்குகள், சம்பிரதாயங்கள் முடிய, தங்கசங்கிலியில் மாங்கல்யம் கோர்த்து சமரிடம் கொடுக்க செம்பாவின் கழுத்தில் அணிவித்தான். எல்லாரும் அட்சதை தூவி ஆசிர்வதித்தனர். பின் உச்சி வகுட்டில் குங்குமம் வைத்து, பெண்ணவள் பாதவிரலில் மெட்டி அணிவித்தான். அதற்குப்பிறகு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினர். விழாவிற்கு வந்தவர்களுக்கு கோவிலில் மதிய உணவு ஏற்பாடு செய்யபட்டிருக்க, சமரும் செம்பாவும் பந்தி பரிமாறி அவர்களும் அங்கேயே சாப்பிட்டனர்.

நல்ல நேரத்தில் கோவிலில் இருந்து சமரின் வீட்டிற்கு வந்தனர். இன்றும் ஆரத்தி எடுத்துதான் மணமக்களை விட்டிற்குள் விட்டார் வைஷ்ணவி. அந்த

வீட்டின் மருமகளாக சாமியறையில் விளக்கேற்றி, தன் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தாள் செம்பா சமரஜித்ரன்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!