சிந்தையுள் சிதையும் தேனே..! ( எபி லாக்)

4.8
(11)

எபி லாக்

அன்றைய நாள் இரவு ஏற்பட்ட பெரும் ஆபத்திலிருந்து தப்பித்த பிறகு கருணாகரனும், காயத்ரியும், நிவேதாவும் மனதில் ஏற்பட்ட பூகம்பத்தை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

அந்த கோரமான சம்பவம் இரண்டு நாட்களாக அல்லாமல் பல வாரங்களாகவே அவர்களின் நினைவில் நிழலாடிக் கொண்டே இருந்தது.

ஒவ்வொரு நொடியும் அந்த சம்பவம் நினைவுக்கு வரும்போது, “இது உண்மையிலேயே நடந்ததா?” என்று அவர்கள் தங்களையே கேட்கும் நிலை ஏற்பட்டது. ஆம் அனைத்தும் ஒரு கனவு போல் சில நொடிகளில் நடந்து முடிந்தது.

ஆனாலும், அந்தக் குழப்பங்களின் நடுவே ஒரு பெரும் மகிழ்ச்சி அவர்களின் வாழ்க்கையில் நுழைந்திருந்தது.

இவ்வளவு காலமும் தங்களுக்கு ஒரே ஒரு மகள் தான் என்று எண்ணியிருந்த கருணாகரனுக்கும் காயத்ரிக்கும், இன்னொரு மகள் அதுவும் காவல்துறையில் பணி புரிகின்றாள் என்ற செய்தியைக் கேட்டதும் பெருமையையும், மகிழ்ச்சியையும் அவர்களது மனதிற்கு மருந்திட்டது.

இது அவர்களின் குடும்பத்திற்கு ஒரு புதிய அத்தியாயம் போல இருந்தது.

முதலில் மகிழ்மதி, சிறிதளவாகவே கருணாகரன், காயத்ரியுடன் ஒன்றத் தொடங்கியவள்.

அவர்கள் காட்டும் அளவில்லாத அன்பில் கரைந்து தயக்கம் மறைந்து சில நாட்களில், அந்த உறவு இயல்பாகவே வளரத் தொடங்கியது.

ஒரு பெற்றோர் தனது காணாமல் போன மகளை மீண்டும் கண்டுபிடித்த மகிழ்ச்சியோடு, கருணாகரனும் காயத்ரியும் அவளை விட்டுப் சிறிதும் பிரியாமல் எந்நேரமும் அவளை கண்ணில் இருந்து அகலாமல் பார்த்துக் கொண்டனர்.

அந்த பாசம் மகிழ்மதியின் மனதில் ஆழமான தடத்தை பதிக்கத் தொடங்கியது.

நிவேதா மட்டும் மனதளவில் சற்றே தடுமாற்றத்துடன் இருந்தாள்.

‘எனக்கு அக்கா இருக்கிறாளா? இத்தனை நாளாக இல்லாத உறவை திடீரென்று எப்படி ஏற்றுக் கொள்வது…?’ என்ற குழப்பம் அவளை விட்டு விலகவில்லை.

ஆனால், மகிழ்மதியின் சிரிப்பும், அவளது நகைச்சுவையும், சிறு சிறு பரிவும் அந்தச் சுவற்றை மெதுவாக உடைத்து எறிந்தது.

ஒரு சில வார்த்தைகள் மட்டும் பரிமாறியிருந்த இருவரும், பின்பு நீண்ட உரையாடல்களில் மூழ்கத் தொடங்கினர்.

அதன் பிறகு, அவர்கள் சாதாரண சகோதரிகள் அல்ல, உண்மையான நண்பர்களைப் போல மாறிவிட்டனர்.

காலம் மெதுவாக நகர்ந்தது.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கடந்தன.

அந்தக் குடும்பம் மெதுவாக மீண்டும் தங்களின் இயல்பான வாழ்வில் திரும்பிக் கொண்டிருந்தது.

நிவேதாவின் தலையில் அடிபட்ட காயம் முழுவதும் ஆறிவிட்டது; நினைவிழப்பு போன்ற குழப்பம் எதுவும் இல்லை.

மகிழ்மதியும், அந்த சம்பவத்தால் தலையில் ஏற்பட்ட காயம் முற்றிலும் குணமடைந்து இருந்தது.

இப்போது, அந்த வீடு மீண்டும் சிரிப்பு, பேச்சு, சின்ன சின்ன வாதங்கள், பாசம் என அனைத்தும் கலந்த ஒரு சந்தோஷமான இல்லமாக மாறியிருந்தது.

கருணாகரன் மாலை நேரங்களில் வீட்டின் முன் வராண்டாவில் உட்கார்ந்து, மகிழ்மதியும் நிவேதாவும் ஒன்றாகச் சிரித்து, விளையாடி, காயத்ரியுடன் கலாட்டா செய்வதைப் பார்க்கும்போது, அவனது கண்களில் மகிழ்ச்சியின் கண்ணீர் துளிர்த்தது.

‘எத்தனை வருடங்கள் கழித்தும், கடவுள் நம்மை விட்டுவிடவில்லை… நம்ம குடும்பம் மீண்டும் முழுமையடைந்து விட்டது..’ என்று மனதளவில் நினைத்து மகிழ்ச்சியடைந்தான்.

எல்லாம் சர்வசாதாரணமாக அமைந்து, அந்த இல்லம் சிரிப்பாலும், பாசத்தாலும் நிரம்பி இருந்த தருணத்தில், திடீரென்று ஒரு செய்தி அந்த அமைதியை கலைத்தது.

மகிழ்மதி முற்றிலும் குணமடைந்திருந்ததால், அவள் பிறந்து வளர்ந்த தனது சொந்த ஊரிலேயே அவளது முதல் பதவி நியமனம் கிடைத்திருந்ததல்லவா அங்கேயே தொடர்ந்து வேலை செய்யும்படி கடிதம் வந்திருந்தது.

இந்தச் செய்தியை கமிஷனர் சொன்னபோது, அவள் உள்ளம் ஒரு நிமிடம் குலைந்து போனது.

‘மீண்டும் ஒரு பிரிவு…’ என்று மனதில் தோன்றிய எண்ணம் அவளது மனதை அழுத்தியது.

பாசத்திற்கு முன்பு தனது கடமையை மறுக்க முடியாது என்பதால், கருணாகரனையும் காயத்ரியையும் நோக்கி, மெதுவாக தன் பணிக்கட்டளை பற்றி அன்பாக எடுத்துக் கூறினாள்.

அந்த வார்த்தையை கேட்டவுடன் காயத்ரியின் முகத்தில் கவலை சூழ்ந்து கொண்டது.

‘இத்தனை வருடங்களுக்கு பிறகு மறுபடியும் பிரிவா..?’ என்ற வலி அவளது கண்களில் படர்ந்தது.

கருணாகரனும் தன்னிடம் இருந்த உறுதியை மறைத்துக் கொள்ள முடியாமல் நிசப்தமாய் தலைகுனிந்தார்.

அப்போதுதான், பல நாட்களாக மனதில் வைத்திருந்த கேள்வியை மகிழ்மதி தயக்கத்துடன் வாய் திறந்து கேட்டாள்.

“அம்மா…” என்று தொடங்கி சிறிது இடைவெளியுடன் தயங்கி நின்றவள்,

“அன்னைக்கு நீங்க எப்படி அந்த பயங்கரமான இடத்துக்கு வந்தீங்க? நான் அதை எதிர்பார்க்கல எப்படி சிங்காரத்தோட கையில மாட்டினீங்க நான் ரொம்ப நாளா அத கேக்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன்..?”

அந்த கேள்வி கேட்டவுடன், காயத்ரியின் கண்களில் ஒரு புயல் வீசியது போலிருந்தது.

மனம் மீண்டும் பாதிக்கப்படக்கூடும் என்று பயப்பட்ட மகிழ்மதி, கேள்வியை மிகுந்த கவனத்தோடு கேட்டிருந்தாலும், காயத்ரியின் உள்ளத்தில் அந்தச் சம்பவம் இன்னும் பசுமையாகவே இருந்தது.

‘அன்னைக்கு…’ என்று தொடங்கிய காயத்ரியின் குரல் நடுங்கியது.

“நான் சமையல் செய்து கொண்டிருந்தேன் அப்போ வெளியிலிருந்து யாரோ கூப்பிடுற சத்தம் கேட்டது எட்டிப் பார்த்தா… தலையில் கட்டோட நிவேதா வாசலில நின்னிருந்தா.

அந்தக் கணம்… என் தலையே இடிந்து விழுவது போல, ஒரே குழப்பமா இருந்துச்சு

அவளுக்கு உடம்பு சரியாகிடுச்சே பிறகு எப்படி திரும்பவும் தலையில கட்டோட வந்திருக்கா

ஆனா அப்போ என்னை நானே அறியாமல் தவறாக நம்பிட்டேன்.

அப்போ எனக்கு உண்மையாகவே நீ தான் நிவேதாவாக இருந்தான்னு எனக்கு தெரியாது தானே நான் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க நிவேதா ஓடி வந்து என்ன கட்டி அணைத்த அந்த நொடியில, என் உயிரே பறந்த மாதிரி இருந்துச்சு

அதே நேரம், வாசலிலிருந்த சிங்காரம்… அவன்தான் உங்க மாமன்… சிரிச்சுக்கிட்டே உள்ளே வந்தான்

அந்த பயங்கரமானவன் சொத்தை எப்படியும் கைப்பற்றலாம் என்று நினைச்சு… எங்களை எல்லாரையும் அடிச்சு அந்த பேக்டரிக்கே இழுத்துச் சென்றான்.”

காயத்ரியின் குரல் கனத்தது.

“ஆனா மகளே, அங்க தான் எனக்கு தெரிஞ்சது நிவேதா வேற, மகிழ்மதி வேறன்னு…

உன் வாயிலிருந்து சொன்ன அந்த வார்த்தைகளில் தான் அவனோட பாவங்கள் ஒவ்வொன்றையும் நான் அறிந்தேன்

எத்தனை வருடங்கள் கழிச்சு தான், என் கண்களால உன்ன பார்க்க முடிஞ்சிருக்கு.

என் உள்ளம் பல வருடங்களாக தவம் பண்ணி செய்த புண்ணியங்கள் தான் உன்ன திரும்பி என்கிட்ட கொண்டுவந்து சேர்த்து இருக்கு

அப்படிக் கூறி, காயத்ரி மகிழ்மதியைக் கட்டியணைத்தாள்.

அவளது கன்னத்தில், நெற்றியில் என்று முத்தங்களை மழையாகப் பொழிந்தார்.

மகிழ்மதியின் கண்களும் நீரால் நனையும் போது, அந்தத் தாயும் மகளும் இடையே பிரிவின் வலி மறைந்து, பாசத்தின் பெருங்கடல் மட்டுமே எஞ்சியது.

மகிழ்மதி அப்போதுதான் ஒரு விடயத்தை நன்றாக அறிந்தாள்.

‘நான் மருத்துவமனையில் யாருக்கும் தெரியாமல் நிவேதாவை சிகிச்சை அளித்து பாதுகாத்து வைத்தது எப்படியோ யார் மூலமோ சிங்காரத்திற்கு தெரிந்துவிட்டது அதுதான் தங்கையை கடத்தி வந்து இவர்கள் அனைவர் மூலமாக என்னை மிரட்ட எண்ணி இவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றான்..’ என்று முற்றிலும் அவளுக்கு தெளிவானது.

மகிழ்மதி கமிஷனர் அலுவலகத்துக்குள் சென்று தனது பணிப் பொறுப்புகளை அறிக்கை செய்து ஒப்படைத்து விட்டு, கையில் நியமனக் கடிதத்துடன் வெளியே வந்தாள்.

மனது நிறைய சிந்தனைகளால் கனிந்திருந்தாலும் முகத்தில் எப்போதும் போல அந்த தன்னம்பிக்கை கம்பீரமாகத் தெரிந்தது.

அந்த நேரம், காக்கிச்சட்டையுடன் அழகாக அவனுக்கே தனித்துவமான கம்பீரத்துடன் கார்த்திகேயன் நேராக அவள் முன் வந்து நின்றான்.

அவனது கண்களில் எப்போதும் இருப்பது போல ஒரு பாசமிக்க நம்பிக்கையும், உதடுகளில் குறும்பு கலந்த சிரிப்பும் தெரிந்தன.

“என்ன மகிழ்மதி… ஊருக்கு புறப்படுறீங்க போல?” என்று கிண்டலுடன் கேட்ட அவனது குரலில் சிறு குறும்புத்தனம் ஒளிந்து இருந்தது.

மகிழ்மதி கண்களை சற்று கூர்மையாக்கி, சீரியஸான முகத்தோடு அவனைப் பார்த்தாள்.

பின் சிரிப்பை மறைக்க முடியாமல் உதட்டில் ஒரு குறும் புன்னகை மலர வைத்துக் கொண்டு,

“இல்லங்க… லண்டனுக்கு ஹனிமூன் போறேன்…” என்று அவளும் கொஞ்சமும் குறையாத குறும்புடன் சிரித்தபடி கூறினாள்.

அவளது வார்த்தையைக் கேட்ட கார்த்திகேயனின் முகம் ஒரு நொடி வியப்பில் திளைத்தது. உடனே தலையை சாய்த்தபடி சிரித்து,

“அடடா… ஹனிமூனா? சரி… ஆனா அதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு சின்ன டூட்டி இருக்கு ஒரு கப் காப்பி… வித் ஹேன்சம் போலீஸ் ஆபீசர்!” என்று சிரித்தபடி அவன் அனுமதி கேட்டபடி அவன் தனது கையால் வழியைச் சுட்டிக் காட்டினான்.

மகிழ்மதி முகத்தில் சிரிப்பை மறைக்க முடியாமல், தலையை ஆட்டி, சம்மதம் தெரிவித்தவள் அவன் காட்டிய வழியிலேயே நடந்து சென்றாள்.

அவளது நடைப்பாதை நிதானமாக இருந்தாலும், உள்ளுக்குள் பசுமையாக மலரும் பாசத்தை ஒளித்துக் கொண்டது.

கமிஷனர் அலுவலகத்திற்கு அருகிலிருந்த அமைதியான காபி ஷாப்பில் இருவரும் எதிரே அமர்ந்திருந்தனர்.

சூடாக ஆவியெழுந்து கொண்டிருந்த தேநீரை அருந்தாமல் பார்த்துக் கொண்டிருந்த மகிழ்மதியின் மனதில் பல கேள்விகள் அலைமோதின.

கண்களை சற்றுத் தாழ்த்தியவள் சிந்தனையுடன்,

“கார்த்திகேயான் எனக்கு ஒரு சந்தேகம்,” என்றாள் மெதுவாக.

கார்த்திகேயன் தனது கப்பை மேசையில் வைத்துவிட்டு, புன்னகையுடன் அவளை பார்த்தான்.

“என்ன சந்தேகம்? சொல்லுங்க… தாராளமா தீர்த்து வைக்கலாம்.”

மகிழ்மதி ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்துக் கொண்டு,

“அந்த ஃபேக்டரில எங்களை ரகசியமான ஒரு குடோனுக்குள்ள தான் அடைச்சு வச்சிருந்தாங்க சும்மா யாராவது தேடினாலும் அந்த குடோனைக் கண்டுபிடித்திருக்க முடியாது… ஏனென்றால் அது நிலத்துக்கடியில் இருந்துச்சு

வெளியே வந்த பிறகுதான் எனக்கே அது புரிஞ்சது அந்த இடம் ரொம்ப பாதுகாப்பா இருந்தது மேலோட்டமா தேடியிருந்தீங்கன்னா… கண்டுபிடித்திருக்கவே முடியாது

ஆனா நீங்க எப்படி அந்த இடத்தை கண்டுபிடிச்சீங்க? அதே சமயம்… நான் அங்க போனது உங்களுக்கு எப்படி தெரியும்?

நான் வேற டீம் ஆபீசர்களுக்குத் தான் தகவல் கொடுத்தேன்! இத்தனை மணி நேரத்துக்குப் பிறகு நான் வரலன்னா உடனே அந்த இடத்த ரவுண்டப் பண்ணுங்கன்னு சொல்லி இருந்தேன் ஆனா அவங்க அந்த நேரத்துக்கு வரல அதற்கான காரணம் கேட்டா கமிஷனர் கூட தெளிவான பதில் சொல்லல இது எல்லாம் எப்படி நடந்துச்சு..?” என்று புரியாமல் தவித்தபடி கேட்டாள்.

அவள் குரலில் குழப்பமும், சிறிது வேதனையும் கலந்து இருந்தது.

கார்த்திகேயன் சிறிது புன்னகைத்தபடி,

“அப்படியா… இது ஒரு சின்ன விஷயம்..” என்று சற்று குறும்பாகக் கூறியவனை மகிழ்மதி புரியாமல் பார்த்தாள்.

அவன் நிதானமாக,

“சரி… அதுக்கு முன்னாடி ஒரு வேலை பண்ணு உன்னோட மோதிரத்தை கழட்டித் தா.”

“மோதிரமா?” என்று அவள் வியப்புடன் கேட்டாள்.

அவள் பருவம் எய்திய வயதிலிருந்து எப்போதும் அணிந்து கொண்டிருந்த அந்த சிவப்பு கல் பொருத்தப்பட்ட மோதிரத்தை மெதுவாக விரலிலிருந்து கழற்றிக்கொடுத்தாள்.

அதைப் பெற்றுக் கொண்ட கார்த்திகேயன், புன்னகையுடன் கல்லின் மேற்பரப்பை அழுத்தினான்.

ஒரு நொடியில், அந்த அழகிய சிவப்பு கல்லுக்குள் மறைந்திருந்த சிறிய கருவி வெளியில் ஒளிர்ந்தது.

மகிழ்மதி அதிர்ச்சியில் மூழ்கிப் போனாள்.

“இது… என்ன?”

“இதுதான் உன் கேள்விகளுக்கான பதில்,” என்று அமைதியாகக் கூறினான் கார்த்திகேயன்.

“வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு சாதாரண கல்லோட மோதிரம் மாதிரி தான் தெரியும் ஆனா உண்மையிலேயே இது ஒரு சென்சார் கருவி உன் இடம், உன் அசைவும்… எல்லாம் எனக்கு சிக்னல் அனுப்பிக்கொண்டே இருக்கும் அதனால்தான் நீங்க எங்கு இருக்கீங்க, நான் நொடியில் கண்டுபிடிச்சேன்.”

மகிழ்மதி திகைத்து அவனை பார்த்தவள்,

“இது எப்படி என்னோட சிறு வயது மோதிரத்துல..”

கார்த்திகேயன் மெதுவாக சிரித்தான்.

“ஆக்சிடென்ட்டுக்கு பிறகு எனக்கு உன் மேல சந்தேகம் அதிகமா இருந்துச்சு..” என்று கூற மகிழ்மதி முறைத்தாள்.

“சாரி.. சாரி.. அப்போ நான் உன்ன நிவேதான்னு தான் நினைச்சேன் அதனால உன்னை கண்காணிக்க நான் செய்த ஏற்பாடு தான் இது..”

“ஹூம்… ஒரளவுக்கு அந்த மோதிரம் என்னுயிர காப்பாற்றி இருக்கு..”

“இல்ல மகிழ்மதி உண்மையில சொல்லணும்னா… உன்னோட தைரியமும், மனவலிமையும் தான் உன்னை காப்பாத்திச்சு நீ மட்டும் அந்த பேப்பர்ல சைன் வெச்சி இருந்தா உடனே உன்னை உன் குடும்பத்தை சுட்டுக் கொன்னு இருப்பாங்க அவங்களுக்கு ஒவ்வொரு கதையா சொல்லி அவங்களை குழப்பி நேரத்தை கடத்தினது உன்னோட சாமர்த்தியம் மட்டும்தான்.. அதோட நீங்க செட் பண்ணி வச்சிருந்த போலீஸ் டீம் ரகுவரனுக்கு நல்லா தெரிஞ்ச ஆபிஸர் அதனால ரகுவரன் அந்த ஆப்ரேஷன் ரகசியமா கேன்சல் பண்ண சொல்லி ஆர்டர் போட்டுட்டார் அதுதான் கமிஷனர் உங்ககிட்ட அதை பத்தி விரிவா சொல்லல..” என்று அவன் கூறியதும் அந்தத் தருணம், காபி ஷாப்பின் சுவர்களுக்குள் ஒரு இனிய அமைதி நிலவியது.

“சரி மகிழ்மதி… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நீங்க நல்லபடியா ஊருக்கு போயிட்டு வாங்க,” என்று கார்த்திகேயன் மெதுவாகக் கூறினான்.

அந்த வார்த்தைகளை கேட்ட மகிழ்மதியின் முகத்தில் சிறு ஏமாற்றம் தெரிந்தது.

அவன் கண்களை சிறு எதிர்பார்ப்புடன் பார்த்தபடி,

“அப்போ… அவ்வளவுதானா..?” என்று கேட்டாள்.

கார்த்திகேயன் சிரிப்புடன்,

“ஆமா, அவ்வளவுதான் அதுதான் நீங்க கேட்டதுக்கு நான் முழுமையா பதில் சொல்லிட்டேனே…”

இந்தச் சொல்லுக்குள் ஒளிந்திருந்த சுவாரஸ்யமும், எளிமையும் மகிழ்மதிக்கு போதவில்லை. அவள் எதிர்பார்த்திருந்த வார்த்தைகள் வரவில்லை. சிறு கோபமும், மனக்கசப்பும் மனதில் எழுந்தது. மேசையில் இருந்த கப்பை மெதுவாகத் வைத்து விட்டு, ஒன்றும் பேசாமல் அவள் எழுந்து அங்கிருந்து நகர்ந்தாள்.

கார்த்திகேயன் அவள் கோபத்துடன் செல்வதை புன்னகையுடன் ரசித்துக்கொண்டு,

“அங்கே போனதும் என்ன மறந்துடாதீங்க… நம்மளோட நட்பு இன்னும் தொடரும்னு நம்புறேன் இன்ஸ்பெக்டர் அம்மா..”

அந்த வார்த்தைகள் அவளது மனத்தில் எங்கோ மறைந்திருந்த புயலை சற்றே அடக்கியது. திரும்பிப் பார்த்தவளது கண்களில் இன்னும் குறும்பும், சினமும் கலந்து இருந்தாலும், உதடுகளில் துளியளவு புன்னகை தெரிந்தது. தலை அசைத்தபடி, எந்த வார்த்தையும் சொல்லாமல் அவள் வெளியே சென்றாள்.

*****************************************************

நான்கு வருடங்களுக்கு பின்…

காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது!

மகிழ்மதி காவல்துறையில் அயராது உழைத்து பல சாதனைகள் புரிந்திருந்தாள்.

கார்த்திகேயனும் உயர்ந்த பதவியில் இருந்தான். ஆனால் அவர்களின் நட்பு மட்டும் காலத்தோடு வாடவில்லை. மாறாக, அது வேரூன்றி வலுவான மரமாக வளர்ந்தது. கடிதங்கள், தொலைபேசி உரையாடல்கள், அவ்வப்போது சந்திப்புகள் இவை எல்லாம் அவர்களை நெருக்கமாக இணைத்தன.

முன்பு ஒரு எளிய நட்பாக இருந்தது… இப்போது அது வளர்ந்து காதலாக மலர்ந்தது.

இருவருக்கும் நான்கு வருடங்கள் கழித்து திருமணம் நிச்சயிக்கப்பட்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணத்தின் பின்பு கார்த்திகேயன் மகிழ்மதியின் ஊருக்கு போஸ்டிங்கை மாற்றி சென்று விட்டான்.

விடுமுறைக்கு அடிக்கடி காயத்ரி கருணாகரனை பார்க்க வந்து செல்வர்.

அந்த நேரம் வீடே பெரும் கொண்டாட்டமாக இருக்கும். கார்த்திகேயன் தனது அம்மாவை தன்னுடனே கொண்டு போய் ஊரில் வைத்துக் கொண்டான்.

மகிழ்மதியும் அவரை தன் தாய் போல பத்திரமாக கவனித்துக் கொண்டாள்.

நிவேதாவும் முன்பை விட மிகவும் பொறுப்பாக கருணாகரனின் தொழிலில் ஒன்றை தனது கையில் எடுத்துக்கொண்டு அதில் பல முன்னேற்றங்களை ஈட்டிக் கொண்டிருந்தாள்.

டாக்டர் விக்ரம், சிங்காரவேலனின் மகன் விக்ரம், ரகுவரன், சேகர் அனைவருக்கும் ஆயுள் தண்டனை கிடைத்தது.

அவர்கள் தங்களது தப்பை எண்ணி மிகவும் வருந்தினர்.

கார்த்திகேயன், மகிழ்மதியின் அளவிட முடியாத காதலும் பாசமும் தாங்கிய பார்வையில் மூழ்கியபோது, அவனது உள்ளம் இதுவரை அறியாத ஓர் இனிய நிம்மதியில் திளைத்தது.

நட்பின் உறுதியிலிருந்து மலர்ந்த இந்த அன்பு, அவர்களின் வாழ்க்கையை மேலும் ஒளிமயமாக்கியது.

மகிழ்மதியின் சிரிப்பில் அவனுக்குத் தெரியாத சுகம் இருந்தது.

அவளது அன்பின் ஆழம், அவன் இதயத்தில் ஊற்றப்பட்ட தேனாக அவனை முழுவதும் இனிமையாக்கியது.

அதுவே அவர்களுக்குள் சிந்தையுள் சிதையும் தேனாக இனிமையான காதல் மலர்ந்தது.

ஹாய் நண்பர்களே..

இனிதே கதையின் நிறைவடைந்து விட்டது.

இந்தக் கதை பற்றிய விமர்சனங்களை சரி பிழைகளை தாராளமாக என்னிடம் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

என்றும் உங்கள்

அன்புத்தோழி..

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!