கனவு -25
“உனக்கு எவ்வளவு துணிவு இருந்தால் என் கண் முன்னையே என்னுடைய அமையாவை கொள்ளத் துணிவாய்.
யார் கொடுத்தது உனக்கு இந்த அதிகாரத்தை”
என்று அவளுடைய உடலில் இருந்து வாளை உருவினான் கௌதமாதித்தன். அவனுடைய இரு விழிகளோ தீப்பிழம்பாக கொதித்தன.
கீழே விழுந்து கிடந்த சேனபதி சாயராவோ வயிற்றில் குருதி வழிந்து கொண்டிருக்க அதை ஒரு கையால் அழுத்திப் பிடித்தவள்,
“அரசே நான் யார் என்று உங்களுக்கு தெரியாது இத்தனை ஆண்டுகளாக தங்களை மட்டுமே மனதில் நினைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தவள் நான்.
அப்படி இருக்கும் பொழுது திடீரென என்னுடைய இடத்திற்கு இவள் வந்தால் அதை எவ்வாறு என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்”
“என்ன பிதற்றுகிறாய் பேதை பெண்ணே இவள் என்னுடைய உயிரானவள்”
என்று கர்ஜித்தான் கௌதமாதித்தன்.
“அரசே நான் தங்களுடைய அன்னையின் தமையனின் புதல்வியாவேன் சிறு வயது முதலே தங்களைத்தான் என் கணவராக வரப்போகிறீர்கள் என்று கேள்வியுற்றதிலிருந்து தங்களை மட்டுமே மனதார நேசித்துக் கொண்டு வாழ்ந்து வந்தவள் நான்.
ஆனால் தாங்கள் என்னை பற்றி சிறிதும் நினைத்துப் பார்க்காமல் இதோ இந்த ஒன்னும் இல்லாதவள் அமையாதேவியை திருமணம் செய்து உள்ளீர்கள் இது தங்களுக்கே நியாயமா படுகிறதா.
ஆகையால் தான் நான் இவ்வாறு செய்து அவளை உங்கள் வாழ்வில் இருந்து ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டு நான் அங்கு வர நினைத்தேன் ஆனால் இவள் அனைத்தையும் பாழாக்கி விட்டாள் இவளை கொல்லாமல் விடமாட்டேன்”
என்று உரைக்க தன் கையில் உள்ள வாளை அவளுடைய கழுத்துக்கு நேராக உயர்த்தி பிடித்தவன்,
“இங்கு பார் நீ சொல்வது அனைத்தும் உண்மையாக கூட இருந்திருக்கலாம் ஆனால் நீ தேர்ந்தெடுத்த பாதை மிகவும் தவறான பாதை அதுவும் என்னுடைய அமையாதேவியை என்னிடம் இருந்து பிரிக்கவா நினைத்தாய் அது எந்த காலத்திலையும் நிகழாது.
அந்த சிவன் சக்திக்கு தன்னுடைய பாதி உடலை கொடுத்தது போல் என்னுடைய அமையாதேவிக்கு என்னுடைய பாதி உடலை அல்ல என்னை முழுவதுமாக அவளுக்கு தந்து விட்டேன்”
என்று கர்வமாக கூறினான் கௌதமாதித்தன்.
அவன் கூறியதை கேட்டு அருகில் இருந்த அமையாதேவிக்கோ கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகின.
தன்னுடைய கணவன் என்ற பெருமிதம் அவளுக்கு உண்டானது.
அவனுடைய காலில் விழ போனவளை தடுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.
அதை பார்த்த சேனபதி சாயராவின் விழிகளோ கோபத்தில் கொப்பளித்தன.
“நடக்காது அரசே எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க விடமாட்டேன் அது எதுவாக இருந்தாலும் சரி இந்த சாயரா ஆசை வைத்து விட்டால் அது எனக்கே சொந்தமாக வேண்டும்”
என்று கூறிக் கொண்டிருந்தவள்
அங்கு சுவற்றில் மாட்டி இருக்கும் மற்றும் ஒரு வாளை உருவி எடுத்து கண் இமைக்கும் கணத்தில் அமையாதேவியின் நெஞ்சில் இறக்கினாள் சேனபதி சாயரா.
“மன்னாஆஆஆ” என்றவாறு கீழே சரிந்தாள் அமையாதேவி.
அந்தக் காட்சியை கண்டு கௌதமாதித்தனின் உடல் முழுவதும்
கோபத்தின் நெருப்பு பரவியது.
அவனது உள்ளம் சிதறி, இரத்தக் கண்ணீராய் வழிந்தன..
“சாயராஆஆஆஆ” என்று குரல் வெடித்தது.
அந்தக் குரல் கேட்டு வானமே நடுங்கியது போலிருந்தது.
அவன் கையில் இருந்த வாள் மின்னலாய் உயர்ந்தது.
அவனின் பார்வையில் இனி கருணை இல்லை,
அவனின் கரத்தில் இனி தயக்கம் இல்லை.
அடுத்த கணமே, அந்த வாள் சாயராவின் மார்பை கிழித்தது.
அவள் கண்களில் இருந்த வெற்றிக் கர்வம் சிதறி,
அவளது முகத்தில் அதிர்ச்சி பரவியது.
கௌதமாதித்தன் தனது கண்களில் எரியும் தீப்பொறியுடன் சாயராவை நோக்கினான்.
“சாய்ரா காதல் என்றால் வசிய மந்திரங்களால் பிறக்கும் மாயை அல்ல.
அது உயிரின் ஆழத்தில் வேரூன்றும் பந்தம்.
புராணங்கள் சொல்வதுண்டு
சிவனும் சக்தியும் பிரிக்க முடியாத சக்தி.
ஆண்டாளும் ரங்கமன்னனும் உடல் தாண்டி ஆன்மா கொண்ட பாசம்
அது தான் உண்மையான காதல்.
என்னை உன் மந்திரத்தால் கட்டியிருக்கலாம்…
ஆனால் என் உள்ளம் எப்போதுமே அவளைத்தான் தேடியது.
அமையாதேவியோடு இணைந்த பாசம்,
எந்த வசியத்தையும் உடைத்தெறியும்.
நான் அவளுடையவன்.
அவளும் என்னுடையவள்.
இந்தக் காதலை யாராலும் பிரிக்க முடியாது”
அவன் குரல் இடியாய் முழங்க, சாயராவின் கண்களில் எரியும் தீக்கும் எதிராக, அவனுடைய சொற்களே ஆயுதமாயின.
அமையாதேவியை நோக்கி கையை நீட்டிய அந்த கர்வம்
அவன் நம்பிக்கையோடு கூடிய காதல் வலிமையின் சின்னமாக ஒளிர்ந்தது.
சேனபதி சாயராவின் கண்கள் எரியும் அக்னியாக மின்னின.
கௌதமாதித்தன் கர்வமாகக் கூறிய காதல் வாக்குகளை கேட்டதும், அவள் உதடுகளில் விஷம் கலந்த சிரிப்பு பரவியது.
“அரசே
இந்த ஜென்மத்தில் உன்னை என் வசப்படுத்த முடியாமல் போனதே என் தோல்வி.
ஆனால் காதலின் வலிமையை நீ சுட்டிக் காட்டிய அந்த நொடியில்
நான் சாபமாக மாறுகிறேன்.
இந்த ஜென்மத்தில் இல்லையென்றாலும்,
வருங்கால ஜென்மங்களில் கூட நான் உன்னோடு இணைந்தே தீருவேன்.
அமையாதேவியுடன் உன் பந்தம் எவ்வளவு உறுதியானதாயிருந்தாலும்,
அதை முறியடிக்கிற விதி நான் தான்.
இதனை நன்றாக நினைவில் வைத்துக் கொள், அரசே
நான் உன் வாழ்வின் நிழல்.
காலங்கள் மாறினாலும், என் பாசத்தின் சங்கிலியிலிருந்து தப்ப முடியாது”
கௌதமாதித்தனின் குரலுக்கு இணையாக சேனபதி சாயராவின் குரலும் அங்கு இடியென இடித்தது.
கௌதமாதித்தன் தனது பார்வையை கூர்மையாய் சாயராவின் கண்களில் பதித்தான்.
அமையாதேவியின் கையை உறுதியாகக் கவ்வியவாறு, அவன் சப்தமின்றி, ஆனாலும் வலிமையோடு சொன்னான்.
“சாயரா
சாபம், வசியம், சூழ்ச்சி எதுவாக இருந்தாலும்,
என் உள்ளம் அமையாதேவியோடு இணைந்த பாசத்தை யாராலும் உடைக்க முடியாது.
இந்த ஜென்மம் மட்டும் அல்ல
வருங்கால ஜென்மங்கள் அனைத்திலும் கூட,
என் உயிர் அமையாதேவியோடு தான் இணைந்திருக்கும்.
அது என் உயிரின் சத்தியம்.
உன் கோபம் தீ போல எரியட்டும்,
ஆனால் எரியும் தீயில் கூட எங்கள் காதல் அழியாது.
ஏனெனில், பாசமே பாசத்தின் மீது வெற்றி பெறும்
அதுவே விதியின் உண்மை”
அவன் வார்த்தைகளின் உறுதி வாளின் கூர்மை போல சாயராவை வெட்டி சென்றது.
அவளது முகம் புளகாங்கிதம் கலந்த கோபத்தில் பிளந்தது.
ஆனால் அமையாதேவி, கண்களில் கண்ணீருடன்,
அவனின் கையை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
அவளுடைய ஜீவனோ கொஞ்சம் கொஞ்சமாக உடலை விட்டு பிரிய தயாராக இருந்து கொண்டிருந்தது.
“சாய்ரா
என் காதலின் சத்தியத்தைக் குலைக்க நினைத்தது உன் தவறு.
இந்த உலகில் பாசத்துக்கு மேலான ஆயுதம் எதுவும் இல்லை என்பதை
இப்போதே உணர்ந்து கொள்”
என்று அவன் உச்சக்குரலில் முழங்க,
அவனின் கரத்தில் இருந்த வாள் மீண்டும் மின்னல் போல உயர்ந்தது.
அடுத்த கணமே அந்த வாள் சாய்ராவின் சிரசை கொய்து சென்றது.
இரத்த துளிகள் தரையில் பட்டு பரவின.
சாய்ராவின் கண்கள் இன்னும் கோபத்தால் எரிந்தபடியே இருந்தன.
ஆனால் அவளுடைய உதடுகள் ஒரு இறுதி வார்த்தையைச் சொன்னன.
“அரசே காதல் என்னை தோற்கடித்திருக்கலாம்…
ஆனால் என் ஆவி உன்னைத் தேடி வரும்
மறு ஜென்மங்களிலும்.
உன்னை விட்டேனோ என்று ஒருநாளும் நினைக்காதே”
அந்த குரலுடன், அவளின் உயிர் பறந்து போனது.
சேனபதி சாய்ராவின் வாள் அமையாதேவியின் நெஞ்சை கிழித்துக்கொண்ட அந்தக் கணம்
அவளது மூச்சு திணறியது.
இரத்தம் உதடுகளின் வழியே வழிந்தது.
கண்கள் மெதுவாக மூடப்படத் தொடங்கின.
ஆனால், அவள் கடைசி வலிமையுடன்
கௌதமாதித்தனின் கரத்தைப் பிடித்தாள்.
“மன்னா
உங்களோடு கழித்த அந்தச் சிறிய நாட்களே
என் முழு ஜென்மத்தின் அர்த்தம்…
அடுத்த பிறவியிலும்
உங்களை மீண்டும் அடைந்து விடுவேன்
என்னை மறக்காதீர்கள்”
அவளது குரல் மெலிதாகக் குறைந்தது.
உதடுகள் சிரித்தவாறே உறைந்தன.
உயிரின் ஒளி அவளது கண்களில் அணைந்து போனது.
அந்தக் காட்சியை கண்ட கௌதமாதித்தனின் உள்ளம்
ஆயிரம் துண்டுகளாய் சிதறியது.
உலகமே அவனை விட்டு விலகிவிட்டது போலிருந்தது.
அவனது இரத்தம் ததும்பிய வாள் கீழே விழுந்தது.
கண்ணீரால் நனைந்த முகத்தில்
ஒரே ஒரு தீர்மானம் மட்டும்.
“உன் உயிரை இல்லாமல்
எனக்கு இந்த வாழ்வு அர்த்தமற்றது, அமையாதேவி.
அடுத்த பிறவியில் உன்னுடன் சேர்ந்தே வாழ்வேன்”
என்றவன் கணமும் சிந்திக்காமல்
தனது நெஞ்சில் வாளை ஆழமாகக் குத்திக்கொண்டான்.
அவனது மூச்சு சிதறிய அந்தக் கணமே,
அமையாதேவியின் அருகே விழுந்து, இறுதி முத்தமாக அவளது இதழில் இதழ் பதித்தான்.
இருவரின் இரத்தம் ஒன்றாய் கலந்தது.
இருவரின் ஆன்மா காற்றோடு பறந்து,
ஒரே சத்தியத்துடன் சென்றது.
“இந்த ஜென்மம் மட்டும் அல்ல,
மறு ஜென்மங்களிலும் உன்னோடு தான் என் உயிர் இணைந்திருக்கும், அமையாதேவி”
என்று அவன் அவளிடம் சொன்ன கணம் இருவருடைய உயிரும் ஒரே சமயம் பிரிந்து அவர்களுடைய
காதலின் நிரந்தர சத்தியத்துக்கு முத்திரை பதித்தது.
அவர்கள் இருவருடைய கைகளும் இணைந்து இருக்க அதற்குள் அடைக்கலமாக இருந்தது அவர்களின் காதலின் சின்னமான இருவரின் உருவம் கொண்ட அந்த நாணயம்.