அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அறிமுகம்

5
(13)

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அறிமுகம்

– சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

கதையின் நாயகன் – ஆதித்ய வர்மன் – பெரிய தொழிலதிபன்…

ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனிஸ் சேர்மன்..

ஆறடி உயரத்தில் ஆண் மகனுக்குரிய இலக்கணம் அத்தனையும் உடலிலும் முகத்திலும் செதுக்கப்பட்டவன்.. ஒரு ஆண்மகன் எப்படி இருக்க வேண்டும் என முதன் முதலில் கடவுள் செய்து வைத்த உதாரண புருஷனின் உடலமைப்புடன் இருந்தான் உருவத்தில்..

ஆனால் உள்ளத்திலோ..

கடுமையானவன்… தீயாய் வேலை செய்பவன்.. இறுக்கம் மிகுந்தவன்.. புன்னகை என்பது மருந்துக்கும் கூட முகத்தில் இருக்காது.. அவன் புன்னகைக்கும் ஒரே ஒரு நபர் அவன் தந்தை மட்டுமே.. இப்படி இருப்பதாலேயே அவனுக்கு அவன் அலுவலகத்தில் பல பட்டபெயர்கள் உண்டு.. சிடுமூஞ்சி.. உம்மணாமூஞ்சி.. ரிங் மாஸ்டர்.. ருத்ரமூர்த்தி.. நரசிம்ம அவதாரம்.. டைகர்.. மிருகம்…அரக்கன்…ராட்சசன்.. அசுரன்.. என்று பல பெயர்கள் சொல்லி அவன் முன்னே பதுங்கி பதுங்கி வேலை செய்பவர்கள் எல்லாம் அவன் பின்னே அவனை இகழ்ந்து பேசி அழைத்த பெயர்கள் இவை..

வேலை என்று வந்து விட்டால் தீயாய் செய்வான்.. அவன் ஒவ்வொரு வேலையும் அவ்வளவு சரியாக இருக்கும்.. “பர்ஃபெக்ட்” என்று சொல்லுக்கு இலக்கணமாய் அவனுடைய அத்தனை வேலைகளும் இருக்கும்.. தன்னை சுற்றி இருப்பவர்களும் அப்படியே வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பான்.. அப்படி செய்யவில்லை என்றால் உடனே அவர்களை கூப்பிட்டு சரமாரியாக அவர்களை வெளுத்து வாங்குவதில் அவன் மன்னன்… அப்படி அவனிடம் வாங்கி கட்டிக் கொண்டவர்கள் வெளியே வரும் போது “எங்கிருந்துதான் இவ்வளோ கெட்ட வார்த்தைகளை கத்துக்கிட்டு வர்றானோ தெரியல.. காதுல இரத்தம் வந்துடுச்சு..” என்றபடி புலம்பிக்கொண்டே வெளியே வருவார்கள்..

ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு கடுமையாக இருக்கிறானோ அவ்வளவு தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு வாரி வழங்குவான்.. அவன் எதிர்பார்த்தபடி அவர்கள் வேலை மிகச் சரியாக இருந்தால் அவனை விட அவர்களை வேறு யாரும் நன்றாக கவனித்து விட முடியாது.. ஊக்கத்தொகை, சலுகைகள் என அவர்களுக்கு ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்வான்..

இப்படி ஒரு குணம் உள்ள இந்த மனிதனுக்கு இன்னும் ஒரு முகமும் இருக்கிறது.. பெண் என்றால் பேயும் இறங்கும் என்று சொல்வார்கள்.. ஆனால் இந்த அசுரனுக்கு பெண் வாடையே ஆகாது.. பெண் என்பவள் ஆணை ஏமாற்றவே படைக்கப்பட்டவள் என்று நம்பினான்… தன்னுடைய அலுவலகங்கள் அத்தனையிலும் வெறும் ஆண்களை மட்டுமே பணித்திருக்கிறான்.. அவனுக்கு இருக்கும் ஆறு அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் ஆண்களே வேலைக்கு அமர்த்தப்பட்டு இருந்தார்கள்..

அவன் இருக்கும் இடத்தில் சுற்றி ஒரு பெண் கூட இருக்க மாட்டாள்..

அவன் வெறுக்கும் இன்னொரு விஷயம் காதல் என்னும் வார்த்தை… காதல் என்று ஒன்று கிடையவே கிடையாது என்று நம்புபவன்.. உலகத்தில் இரண்டே விஷயங்கள் தான் – ஒன்று காமம்.. இன்னொன்று பணம்.. இவை இரண்டிற்காக மட்டுமே காதல் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி அனைவரும், முக்கியமாக பெண்கள் ஆண்களை ஏமாற்றுகிறார்கள் என்று அவன் மனதில் கல்லில் செதுக்கிய எழுத்தாய் பதிந்திருந்தது..

இப்படி அவன் எண்ணுவதற்கு முழுகாரணம்… ஒரே காரணம்.. அவன் அம்மா ஷீலா.. அவனுடைய தந்தை சைலேந்திர வர்மன் வாழ்க்கையின் மிக அடி மட்டத்திலிருந்து வளர்ந்தவர்.. அப்போதுதான் வியாபாரத்தை தொடங்கி ஒரே ஒரு தொழிற்சாலையை வைத்து நடத்திக் கொண்டு சிறிது லாபமீட்டிக் கொண்டிருந்தார்..

ஷீலா அவரை மணந்து வந்த புதிதில் அவரிடம் ஆசையாக தான் இருந்தாள்.. அவள் ஒரு எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவள்.. அது போன்ற ஒரு எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவளை சைலேந்திர வர்மனிடம் இருந்த பணமும் அதனால் கிடைக்கப் போகும் பகட்டான வாழ்க்கையும் ஈர்த்தது..

அதனால் ஒர்  மனைவியாய்  கணவனுக்குரிய அத்தனை அன்பையும் காதலையும் திருமணமான முதல் 5 வருடங்களில்  வழங்கிக் கொண்டுதான் இருந்தாள்..  அவள் தந்த இந்த பொய்யான அன்பின் காதலின் விளைவாக திருமணமான அடுத்த வருடம் ஆதித்யவர்மன் அவர்களுக்கு மகனாய் பிறந்திருந்தான்.. ஆனால் போக போக அவளுடைய நடவடிக்கை மாறியது.. சைலேந்திர வர்மன் மிகவும் எளிமையான மனிதர்.. அவரைப் பார்த்தால் பணம் படைத்தவர் என்று இன்றும் சொல்ல முடியாது..

ஆனால் ஷீலாவோ அவருக்கு நேர் எதிராக கிளப், பார்ட்டி என்று சுத்த ஆரம்பித்தாள்.. அப்படித்தான் ஆதித்யவர்மனுக்கு ஐந்து வயது ஆகி இருக்கையில் அவனை சிறிதும் கவனிக்காமல் இப்படி சுற்றிக் கொண்டிருந்தவளுக்கு ஜெகன் என்ற பெரும் பணக்காரனிடம் பழக்கம் ஏற்பட்டது..

அவன் அப்போதே பெரும் கோடீஸ்வரராக இருந்தார்.. அது மட்டுமின்றி அத்தனை கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாக இருந்தார்.. புகை பிடிப்பது, பார்ட்டிகளுக்கு செல்வது, பெண்களை நாடிச் செல்வது என்ற அத்தனை பழக்கங்களும் கொண்டிருந்தான்..

ஷீலாவுக்கு அவனுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கவே கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனதை மாற்றி அவள் மனதில் ஆசை காட்டி முழுதுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான் அந்த பணம் பஞைத்தவன்…

ஒரு கொடுமையான நாளில் ஷீலா தன் கணவனையும் ஐந்து வயது மகனையும் விட்டுவிட்டு அவனுடனேயே சென்று விட்டாள்.. அவன் மனைவி அப்போது உயிருடன் இருக்கவில்லை.. மிதுன் என்ற ஒரு மகன் மட்டும் இருந்தான்.. தன் வயிற்றில் பிறந்த ஆதித்யவர்மாவை திரும்பியும் பார்க்காத ஷீலா மிதுனை விழுந்து விழுந்து கவனித்தாள்..

மறந்தும் ஷீலா அதன் பிறகு ஆதித்யவர்மன் பக்கமோ சைலேந்திரவர்மன் பக்கமோ திரும்பி கூட பார்க்கவில்லை..

அவன் பள்ளிக்கு செல்லும் போதும் அவன் வெளியே செல்லும்போதும் நண்பர்களை காணும் பொழுதும் உறவுகளை காணும் பொழுதும் அவர்கள் அவனை கேலி செய்தது… அவன் அன்னைக்கு ஓடுகாலி.. கேடு கெட்டவள் என்று பல பட்ட பெயர்களை வைத்து அவன் காது படவே சொன்னது.. அவன் மனதை ரணமாக்கி இருந்தது..

ஆதித்ய வர்மன் பெண்களை வெறுப்பதற்கும்.. காதல் மேல் நம்பிக்கையே இல்லாமல் இருப்பதற்கும்.. அவன் வாழ்வில் நடந்த அதுவும் சிறு வயதில் பசுமரத்தாணி போல அவன் மனதில் பதிந்த இந்த நிகழ்வுகளே காரணம்.. ஆனால் சைலேந்திர வர்மன் அவனை கொண்டாடி வளர்த்தார்.. அன்னையின் அவசியமே தெரியாத அளவு அன்னையின் பாசத்தையும் வழங்கி அவனை தோழனாக பாவித்து வளர்த்தார்..

இன்னொரு திருமணம் செய்து கொள்ளாமல் தன் வாழ்க்கையையே அவனுக்காக அர்ப்பணித்த அவன் தந்தை தான் அவன் வாழ்வில் அவனுக்கு மிக முக்கியமானவர்.. அவர் சொல்லும் சொல்லவனுக்கு வேத வாக்கு.. அவருக்காக தன் உயிரையும் கொடுக்க எப்போதும் தயாராக இருப்பான் அவன்.. அப்படிப்பட்ட பிணைப்பு இருந்தது அந்த தந்தைக்கும் மகனுக்கும் இடையில்…

###########

கதையின் நாயகி – அல்லி மலர் – 21 வயது இளம் யுவதி.. அழகானவள்.. அன்பானவள்.. காதல் திருமணம் செய்து கொண்டு அந்த காதல் திருமணத்தின் பரிசாய் இவளை பெற்றெடுத்த செழியன் தாமரை தம்பதியர் வளர்த்த மகள்..

21 வருடமாய் அவர்களுக்குள் இருக்கும் காதலை பார்த்து பார்த்து வளர்ந்தவள் அவர்களைப் போலவே தானும் ஒரு ஆண் மகனை கண்ணோடு கண்ணோக்கி காதல் கொண்டு மாலை அணிந்து மணமுடித்து அவனோடு உயிரும் உணர்வும் கலக்க… முடிவில்லாக் காதல் கொண்டு சேர வேண்டும் என கற்பனை செய்து கொண்டு வாழ்பவள்..

கல்லூரி படிப்பை முடித்தவள் வேலை தேடும் படலத்தில் ஈடுபட்டிருக்கிறாள்..

படிப்பில் அவள் சுட்டி.. கல்லூரியிலேயே முதலாவதாக வந்தாள்.. எந்த வேலை செய்தாலும் அதை மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் செய்ய பழகியவள்..

அவள் கல்லூரி பேராசிரியர்களுக்கு மிகவும் பிடித்த மாணவி..

கல்லூரி படிக்கும் போது அவள் அழகில் மயங்கி எவ்வளவோ பணக்கார வீட்டு பிள்ளைகள் அவளிடம் வந்து காதல் சொல்ல அதை எல்லாம் புறக்கணித்தவள்.. அவள் தோழி வித்யாவிடம் “எனக்குன்னு பொறந்திருக்கிறவனை நான் இன்னும் பார்க்கல வித்யா.. நிச்சயமா அவன் கண்ணை பார்த்தாலே தெரியும்.. எனக்கு மட்டும்னு இப்படி ஒருத்தன் வரும்போது நான் காதலிச்சு கல்யாணம் பண்ணுவேன்..” இப்படி தனக்கு வந்த காதல் கோரிக்கைகளை நிராகரித்ததற்கு காரணம் சொல்லிக் கொண்டிருந்தாள்..

தப்பான பார்வை கொண்ட ஆண்களை கண்டுபிடிப்பதில் வல்லவள் .. தவறான பார்வை கொண்டு தன்னிடம் பழக வரும் ஆண்களை தீயாய் எரிப்பாள்.. அவளை சுற்றி இருப்பவர்கள் அவளை ஒரு நெருப்பு என்றே சொல்வார்கள்.. பெண்களை மதிக்கும் ஆணே ஒரு ஆணுக்கு இலக்கணமாய் இருப்பவன் என்று அவள் நம்பினாள்.

செழியன் புடவை வியாபாரம் செய்யும் வியாபாரி.. சிறிய துணிக்கடை வைத்திருந்தார்.. தாமரை இல்லத்தரசி… அவருக்கு துணையாக இருந்து சில சமயம் அவர் வியாபாரத்தையும் கூட இருந்து கவனித்துக் கொண்டாள்.. பணம் குறைவாக இருந்தாலும் அவர்கள் வீட்டில் சந்தோஷத்திற்கும் அன்புக்கும் குறைவே இல்லை..

கஷ்டப்பட்டு தன் மகளை ஒரு பட்டதாரி ஆக்கியதில் செழியனுக்கு பெருமை.. அவள் படிப்புக்காக அங்கங்கே கடன் வாங்கி இருந்தாலும் அதை மகளிடம் சொல்லிக் கொள்ள மாட்டார்.. அவள் மனம் கஷ்டப்படும் என்று அதை சொல்லாமல் கடையில் வந்த பணம் என்றே சொல்லுவார்..

ஆனால் மகளுக்கோ அவர் படும் கஷ்டம் புரியாமல் இல்லை.. தன் அன்னை சிறு சிறு தையல்கள் செய்து அக்கம் பக்கத்தினவர்களுக்கு கொடுத்து பணம் சம்பாதிப்பதை அவள் பார்த்திருந்தாள்.. கடை வியாபாரத்தையும் விடுமுறை நாட்களில்  அவ்வப்போது அவளும் போய் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.. அந்த கடையில் பெரிய வியாபாரம் எதுவும் நடக்கவில்லை என்று அவளுக்கு தெரியும்..

தந்தை கடன் வாங்கி தன்னை படிக்க வைப்பதை தன்னிடமிருந்து மறைக்கிறார்.. என்று தெரிந்ததால் தான் இப்போது அவசரமாக அவளுக்கு வேலைக்கு சென்றே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருந்தாள்.. தன் படிப்புக்கேற்றார் போல் ஒரு வேலை அமைந்தால் தன் தந்தைக்கு ஏற்பட்டிருக்கும் கடன் சுமையை குறைக்க முடியும் என்று அவள் எண்ணினாள்..

காதல் மேல் நம்பிக்கை இல்லாமலும் பெண்களை வெறுப்பவனும் ஆன நாயகனும் பாரதியின் நேர் கொண்ட பார்வை உடைய புதுமைப்பெண்ணாய் அதே சமயம் தியாக உணர்வும் அன்பும் கொண்டு காதலை முழுதாக நம்பும் நமது கதாநாயகியும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கப் போகிறார்கள்.. அவர்கள் அப்படி சந்திக்கும்போது அல்லது மோதிக்கொள்ளும் போது எழும் தீப்பொறியானது காதலை விளைவிக்

கிறதா அல்லது கசப்பை விளைவிக்கிறதா என்று பார்ப்போம்..

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!