காலை கதிரவன் பூமியை தன் ஒளிக் கிரணங்களால் “வாடி ராசாத்தி” என அணைத்துக் கொண்டிருந்தான்..
அந்த சிறிய வீட்டின் முன்னே அழகாக கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.. அவள்.. அல்லிமலர்.. பேருக்கு ஏற்றார் போல் அல்லி மலர் போலவே மென்மையாக அழகாக இருந்தாள்.. உதடு ஏதோ பாடலை மெலிதாக முணுமுணுத்துக் கொண்டிருந்தது..
“எந்த சாலைக்குள்
போகின்றான்
மீசை வைத்த
பையன் அவன்..
ஆறடி உயரம்
அழகிய உருவம்
ஆப்பிள் போலே
இருப்பானே..”
அழகாய் பாடிக்கொண்டிருந்தாள்..
அழகாக வாசல் நிறைய கோலம் போட்டவள் எழுந்து தான் போட்ட கோலத்தை பார்த்து திருப்தி அடைந்து “டேய் சுப்பு… எப்படிடா இருக்கு கோலம்?”
அங்கு ஓரமாக நின்றிருந்த நாய்க்குட்டியிடம் கேட்டாள்.. அதுவும் பதில் சொல்வது போல் வள் வள் என குறைத்து விட்டு ஓடியது..
“சுப்பு கூட கோலம் சூப்பரா இருக்குன்னு சர்டிஃபிகேட் கொடுத்துட்டான்.. ஓகே அல்லி செல்லம்… வா.. போய் உள்ளே வேலை எல்லாம் பார்க்கலாம்”
உள்ளே போக திரும்பியவள் பக்கத்து வீட்டு பாட்டி குரல் கேட்டு திரும்பினாள்…
“அடி அல்லிமா.. செத்த இப்படி வந்துட்டு போயேன்” தழுதழுத்த குரலில் அழைத்தாள் அந்த பாட்டி..
“இதோ வரேன் பாட்டி..”
துள்ளி குதித்து ஓடியவள்.. “என்ன பாட்டி மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடுறீங்களா? போன வாரம் வாங்கி கொடுத்தேனே.. டைமுக்கு சாப்பிடுறீங்களா இல்லையா?”
அவள் அக்கறையாய் விசாரிக்க “அதெல்லாம் டைமுக்கு சாப்பிடறேன்டிமா.. ஆனா இப்ப வேற ஒரு கஷ்டம் வந்துடுத்து” அங்கலாய்த்தாள் பாட்டி…
“ஏன் பாட்டி.. மாத்திரை சாப்பிட்டும் உடம்பு சரியா போகலையா? டாக்டர் கிட்ட போகணுமா? நான் வேணா நம்ம மஹாதேவன் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகட்டுமா?”
“அது இல்லடா.. ஒரு வாரமா முட்டி வலி ஜாஸ்தியா இருக்கு.. இந்த டிவில ஏதோ அட்வர்டைஸ்மென்ட் போடுறாங்க.. முட்டி வலிக்கு ஒரு தைலம்.. அதை வாங்கிட்டு வரணும்.. என் புள்ளையாண்டான்கிட்ட மூணு நாளா கத்திண்டிருக்கேன்.. அவனும் காதுல போட்டுக்கல.. என் பேரனும் கண்டுக்கமாட்டேங்கிறான்.. தடிமாடு மாதிரி ரெண்டு பேர் இருக்காங்க வீட்ல.. ஒருத்தனும் எனக்கு ஒன்னும் செய்யமாட்டேங்கறானுங்க… ஒன்னுத்துக்கும் பிரயோஜனம் இல்லை அவனுங்களால.. ரொம்ப கேட்டா வாய்க்கு வந்தபடி கத்தறானுங்க.. வயசானவன்னு கூட பார்க்காம அவங்க அப்படி பேசறப்போ பூமிக்கு பாரம்.. சோத்துக்கு கேடுன்னு எதுக்கு தான் இன்னும் இந்த உயிரை வெச்சுண்டு இருக்கோம்னு தோணறதுடிம்மா.. நீதாண்டி கண்ணு.. அப்பப்போ எனக்கு பார்த்து பார்த்து செய்யற.. கொஞ்சம் அந்த தைலத்தை வாங்கிட்டு வர முடியுமா?” வாஞ்சையாக அவள் கன்னத்தை தடவியபடி கேட்டார்.
“அவங்களுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கும் பாட்டி.. அவங்க பேசறதை எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க.. ஆமா.. எந்த மருந்து பாட்டி? இந்த ஆர்த்தோ ஹெர்ப்னு டிவில போடறாங்களே.. அந்த தைலமா?”
அவள் கேட்கவும் “அது தான் அது தான்.. கொஞ்சம் வாங்கிண்டு வந்து குடுக்குறியாம்மா?”
அவள் முகத்தை சுற்றி திருஷ்டி கழிப்பது போல செய்து தன் கன்னத்தில் விரல்களை வைத்து சொடுக்கியவள் “என் ராசாத்தி.. உன்னை எவ்வளவு நல்லா வளர்த்திருக்காங்க உங்க அம்மா அப்பா? இப்படி சுத்தி இருக்கிற அத்தனை பேருக்கும் நீ அன்பை மட்டும் தான் கொடுக்கிற.. ரோட்ல போற நாய்க்குட்டிக்கு சாப்பாடு போடுற.. அதோட பேசுற.. அன்னிக்கு ஒரு வயசான கிழவி அங்க துணிமணி சரியா போடாம உக்கார்ந்து இருந்தா.. அவளை கூட்டிண்டு போய் ஒரு முதியோர் இல்லத்தில சேர்த்தே.. நீ பண்ற நல்லதுக்கெல்லாம் சேர்த்து உனக்கு ராஜ வாழ்க்கை அமையும்மா.. உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவன் உன்னை மஹாராணி மாதிரி உள்ளங்கையில வச்சு தாங்கறவனா இருப்பான் பாரு.. உன் மேல தன் உயிரையே வெச்சிருப்பான்.. இது இந்த பாட்டியோட ஆசீர்வாதம்” என்றாள் பாட்டி குரல் தழுதழுக்க..
“ஐயோ பாட்டி.. நீங்க எதுக்கு இவ்வளவு ஃபீல் பண்றீங்க? இதுல என்ன இருக்கு? நான் என்ன உங்களுக்காக தனியாவா கடைக்கு போறேன்.. அந்த பக்கம் போகும் போது அப்படியே உங்களுக்கும் வாங்கிட்டு வர போறேன்.. அவ்வளவுதான்.. இதெல்லாம் போய் பெரிய விஷயமா சொல்லிக்கிட்டு.. சரி பாட்டி.. அம்மாவுக்கு போய் ஹெல்ப் பண்ணனும்.. உள்ள வேலை இருக்கு.. நான் போயிட்டு வரேன்.. அப்பா வேற கடைக்கு கிளம்பிடுவாரு..” சொல்லிவிட்டு குதித்துக் கொண்டு உள்ளே போனாள்..
உள்ளே அவள் அம்மா காபி போட்டுக் கொண்டிருக்கவும் அந்த மணம் மூக்கை துளைத்தது.. “அம்மா உன்னை மாதிரி யாருமே காஃபி போட முடியாது.. வாசல்ல வந்து அடிக்குது வாசனை.. காப்பியை கொடு.. அப்பாவுக்கு கொடுத்துட்டு நானும் குடிக்கிறேன்”
அவளிடம் இருந்து தட்டில் இரண்டு காபி கோப்பைகளை வாங்கி எடுத்துக் கொண்டு தன் தந்தையை தேடி சென்றாள் அல்லி…
அவர் வரவேற்பறையில் அமர்ந்தபடி தன் கடையின் கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தார்.. நேரே சென்று அவரிடமிருந்து அந்த கணக்கு புத்தகத்தை பிடுங்கி எடுத்து வைத்தாள்..
“முதல்ல காபி குடிங்க.. அதுக்கப்புறம் இந்த கணக்கெல்லாம் பார்க்கலாம்.. அப்பதான் இன்னும் மூளை நல்லா வேலை செய்யும்.. இல்லேன்னா கணக்கு தப்பு தப்பா போயிரும்..”
“ஏய் வாலு.. எனக்கு காபி சாப்பிடலைன்னா கணக்கு வராதுன்னு சொல்றியா?” என்றார் அவர் அவள் தலையில் லேசாக தட்டி..
“அப்படி சொல்லல.. இன்னும் நல்லா வரும்னு சொன்னேன்.. எங்க அப்பா கணக்குல எவ்வளவு புலின்னு எனக்கு தெரியாதா?” அவர் அணைப்பில் அமர்ந்தபடி அவரிடம் ஒரு காபி கோப்பையை கொடுத்தபடி சொன்னாள்..
இன்னொரு காபி கோப்பையை எடுத்து அவசரமாக காபியை பருகியவள் எதிரே இருந்த செய்தித்தாளை எடுத்து வேலை வாய்ப்பு பக்கத்தை திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள்..
“ஆரம்பிச்சிட்டியா? வேலை தேடறதுக்கு? என்னடா அவசரம் உனக்கு இப்போ வேலைக்கு போகணும்னு? கொஞ்ச நாள் ஜாலியா இருக்க கூடாதா?”
அவள் தலையை வாஞ்சையுடன் வருடியபடி சொன்னார் அவர்..
“அப்பா.. காலேஜ் முடிச்சு கையோட சூட்டோட சூடா வேலைக்கு போயிட்ணும்பா… அப்பதான் இன்ட்ரஸ்ட் இருக்கும்.. கொஞ்ச நாள் வீட்டுல இருந்துட்டேன்னா அப்புறம் சோம்பேறி ஆயிடுவேன்.. “
அவருக்கு பதில் சொல்லிக் கொண்டே செய்தித்தாளை பார்த்துக் கொண்டு இருந்தவள் கண்களை ஒரு விளம்பரம் ஈர்த்தது.. அது ஒரு வாக்கின் இன்டர்வியூ… அன்று காலை 10 மணிக்கு அந்த நேர்காணல் நடப்பதாக இருந்தது..
“இந்த இன்டர்வியூக்கு போகலாமே” என்றவள் அந்த முகவரியை குறித்து வைத்துக் கொண்டாள்… அந்த விளம்பரத்தில் ஓரத்தில் ஒரு சிறிய அறிவிப்பு இருந்ததை படிக்க தவறி இருந்தாள் அவள்..
ஆனால் அப்படி அதை படிக்காமல் தவறவிட்டது அவள் வாழ்க்கையில் பெரிய மாற்றததை விளைவிக்க போகிறது என்பது அவளுக்கு தெரியாது.. அவள் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி போடப் போகும் நிகழ்வுகள் நடப்பதற்கான முதல் காட்சியை அந்த விளம்பரத்தின் மூலம் தொடங்கி வைத்து இருந்தது விதி..
காபி கோப்பைகளை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று வைத்தவள் அந்த நேர்காணலுக்கு கிளம்பி சென்றாள்..
####################
“ஆதித்யா குரூப் ஆப் கம்பெனிஸ்” அந்த எட்டடுக்கு மாளிகையில் எட்டாவது மாடியில் இருந்த தன் அறையில் ஆதித்யா யாரையோ சரமாரியாக திட்டிக் கொண்டிருந்தான்..
“ப்ளடி ஹெல்.. எத்தனை முறை சொன்னேன்.? அந்த நோட்டை கொஞ்சம் பெருசா போட்டா தான் என்ன? இர்ரெஸ்பான்ஸிபிள் இடியட்ஸ்.. நான் அதுக்கு எவ்வளவு இம்பார்ட்டன்ஸ் கொடுப்பேன்னு இங்க இருக்குற எல்லாருக்கும் தெரியும்.. அப்படி இருந்தும் அதை கண்ணுக்கு தெரியாத மாதிரி போட்டு வச்சிருக்கீங்க.. இந்த இன்டர்வியூ ஆட் கொடுக்கும்போதே நான் முக்கியமா போட சொன்னது இந்த ஒரு பாயிண்ட்டை தான்.. ஆனா அதை இவ்வளவு சின்னதா போட்டா என்ன அர்த்தம்? ஆஃபீஸ்க்கு வரும்போது காதுல என்ன ஈயத்தை காய்ச்சி ஊத்திட்டு வருவீங்களா? உங்களுக்கு எல்லாம் எவ்வளவு சொன்னாலும் புரியாதா? நீங்கள்லாம் வேலை பார்க்க வரீங்களா இல்ல வேற எங்கேயோ உங்க கவனத்தை வச்சிக்கிட்டு சும்மா டைம்பாஸ் பண்ண வரிங்களா இங்க?” காச் மூச் என்று கத்திக் கொண்டு வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்து கொண்டிருந்தான் ஆதித்யா…
“ஆக்சுவலி அந்த ஏட் செக்ஷன்ல இருக்குற எம்பிளாயி புதுசா ஜாயின் பண்ணி இருக்காரு.. அவருக்கு இதோட இம்பார்ட்டென்ஸ் தெரியல.. அதனால அதை சின்னதா போட்டுட்டாரு.. முன்னாடி இருந்தவரு எப்பவுமே அதை பெருசா தான் போடுவாரு.. ஆனா இவரு..” இழுத்தபடி அவனுடைய பாவப்பட்ட மேனேஜர் அருண் அவனை சமாளித்துக் கொண்டிருந்தான்..
“புல்ஷிட்.. அருண்.. ஒரு மேனேஜர் மாதிரி பேசு.. அஞ்சாங்கிளாஸ் பையன் மாதிரி பேசாத.. புதுசா ஒரு எம்பிளாயி ஜாயின் பண்றாங்கன்னா அவங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லி புரிய வைக்க வேண்டியதும் அவங்களுக்கு கத்துக் கொடுக்க வேண்டியதும் யாரோட வேலை? இனிமே இதெல்லாம் கூட நான் வந்து பக்கத்துல உக்காந்து பார்க்கணுமா? நீங்கள்லாம் என்னதான் பின்ன வேலை செஞ்சு கிழிக்கறீங்க? முன்னாடி இருந்த எம்பிளாயீ ரிலீவ் ஆகறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் ஒக்காந்து புதுசா வந்த எம்ப்ளாயீக்கு சொல்லிக் கொடுக்கணும்ன்ற பேசிக் சென்ஸ் கூட கிடையாதா இந்த கம்பெனியில வேலை செய்றவங்களுக்கு? நீங்க எல்லாம் வேலைக்கு வரீங்களா? சும்மா காத்து வாங்க வரிங்களா? இங்க நல்லா ஏசி ரூம்ல சுகமா ஜாலியா எட்டு மணி நேரம் உட்கார்ந்துட்டு போலாம்னு வரிங்களா?”
அவன் பாரபட்சம் பார்க்காமல் ஒவ்வொருவராக எல்லாரையும் சரமாரியாக வாயில் போட்டு அரைத்துக் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டு இருந்தான்.. வழக்கம் போல் எல்லோர் சார்பாகவும் அந்த அனல் தெறிக்கும் வசை மழையை தானே ஒற்றை ஆளாய் தாங்கி சமாளித்து கொண்டு இருந்தான் அருண்..
“பாஸ்.. நிச்சயமா இன்டர்வியூல நீங்க அந்த நோட்ல போட்டா மாதிரி தான் வருவாங்க.. வேற யாரும் வர மாட்டாங்க.. அதுக்கு நான் கியாரண்டி” அவனை சமாதான படுத்தும் விதமாக சொன்னான் அருண்.
என்ன விஷயம் என்றால் அவன் நிறுவனத்தில் இன்று ஒரு வாக்கின் இன்டர்வியூ நடக்க இருந்தது.. அதற்கு ஆண்களை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று முக்கியமாக போட சொல்லி இருந்தான்.. அவன் அப்படி சொல்லி இருக்க அதை சின்ன அளவில் போட்டதுதான் இப்போது அவன் கோபத்துக்கு காரணம்..
அந்த விளம்பரத்தில் எல்லா விஷயங்களையும் விட அந்த ஒரு விஷயம் மட்டும் முக்கியமாய் பெரிதாய் கவனத்தை ஈர்க்குமாறு இருக்க வேண்டும் என்பது அவனுடைய உத்தரவு.. ஆனால் இந்த முறை ஒரு புது பணியாளரால் அது மிகச் சிறிய அளவில் போடப்பட்டது தான் அவன் கோபத்துக்கு காரணம்..
“தப்பித்தவறி இன்டர்வியூல ஏதாவது ஒரு பொண்ணை பார்த்தேன்.. உங்க எல்லாருக்கும் வேலை போயிரும்..” அருணை மிரட்டி விட்டு அந்த நேர்காணல் நடக்கும் இடத்திற்கு வேக வேகமாக சென்றான் ஆதித்யா..
அருணும் “அப்பாடா.. இன்னிக்கு ஹிட்லர் கிட்ட இருந்து ரொம்ப அடி வாங்காம தப்பிச்சாச்சு..” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு
நேர்காணலுக்கான வேலைகளை செய்ய போனான்.. ஆனால் அவன் நேரமோ என்னவோ.. அந்த நேர்காணலுக்கு தான் நம் நாயகி அல்லி மலர் வந்து நின்றாள்..