2.விடிய மறுக்கும் இரவே 🥀

4.9
(85)

விடியல் – 02

அந்த வீடு முழுவதும் இருளில் மூழ்கி இருந்தது.

அந்த நள்ளிரவு நேரத்தில் பேய் கூட உறங்கி இருக்கும்.

ஆனால் நம் நாயகியோ பால்கனியில் அமர்ந்திருந்து தன் தொலைபேசியுடன் போராடிக் கொண்டிருந்தாள்.

அவள் வர்ணா.!

பார்த்ததும் அனைவரையும் வசீகரிக்கும் பேரழகி.

குறும்புகளின் முடிசூடா இளவரசி.

தொடைவரை ஒரு ஷார்ட்ஸும் மெல்லிய தொளதொளவென்று இருந்த தன் தந்தையின் பெரிய டிஷர்டையும் அணிந்திருந்தவளின் பார்வையோ தன்னுடைய அலைபேசியில் பதிந்திருந்தது.

“லவ் லெட்டர் கொடுக்கும் போது என்னெல்லாம் சொன்னான்… ‘பேபி உனக்காக உயிரையே கொடுப்பேன். அந்த நிலவையே கொண்டு வருவேன்’னு சொன்னானே…

நான் என்ன அந்த நிலாவையா கேட்டேன். என்னோட ஒரே ஒரு ப்ராஜெக்ட்டை மட்டும்தானே பண்ணிக் கொடுக்க சொன்னேன். இன்னும் அந்த ப்ராஜெக்ட்டை முடிக்காம இந்த பன்னி என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு தெரியலையே…

இதோ பண்ணி முடிச்சுட்டு மெசேஜ் பண்றேன்னு சொன்னான். பட் இன்னும் ஒத்த மெசேஜ் கூட அந்த பஃபல்லோகிட்ட இருந்து வரல.

அச்சச்சோ இவன நம்பி இவன்கிட்ட கொடுத்ததே தப்போ…?

போனவாரம் நம்ம பின்னாடி சுத்துனானே அந்த முகேஷ்கிட்ட கொடுத்திருந்தா கூட பண்ணி முடிச்சிருப்பான் போல…

நம்ம பின்னாடி சுத்துறவனுங்களுக்கு எல்லாம் வாய் மட்டும்தான் ஜாஸ்தி… அப்படி பண்ணுவேன் இப்படி பண்ணுவேன்னு சொல்றானுங்களே தவிர எதுவுமே பண்றானுங்க இல்ல..” என சலித்துக் கொண்டாள் அவள்.

கிட்டத்தட்ட 60 பக்கம் எழுதி முடிக்க வேண்டிய ப்ராஜெக்ட் அது.

சோம்பேறித்தனத்தின் உச்சத்தில் இருக்கும் நம் நாயகி வர்ணாவோ கல்லூரியில் காதல் வார்த்தைகளைக் கூறி அவளின் பின்னே சுற்றிய மாதவன் என்பவனிடம் “நீ உன்னோட உசுர எல்லாம் கொடுக்கத் தேவல… என்னோட ப்ராஜெக்ட்டை மட்டும் டைம்குள்ள பண்ணிக் கொடு… நல்ல மார்க்ஸ் வந்தா உன்ன லவ் பண்ணலாமா வேணாமான்னு யோசிக்கிறேன்..” எனக் கூறி அவனிடம் தன் வேலையை ஒப்படைத்து இருந்தாள்.

இதோ நள்ளிரவு ஆகிவிட்டது.

அவனிடமிருந்து இன்னும் குறுஞ்செய்தி வரவில்லை.

‘ஒருவேளை தூங்கிட்டானோ..?’

பதறிப் போனவள் அவனுடைய எண்ணுக்கு தன் அலைபேசியில் இருந்து அழைப்பு எடுத்தாள்.

அவன் அவளுடைய அழைப்பை ஏற்கவே இல்லை.

“டேய் எரும… உன்னால முடியுமா முடியாதா..?” என இவள் கோபத்துடன் குறுஞ்செய்தி அனுப்பி வைக்க,

“பேபி அஞ்சு பக்கத்துக்கு மேல எழுத முடியலடி..” என பதில் அனுப்பி வைத்திருந்தான் அவன்.

“அட நாசமா போனவனே நீ ரிஜக்டட்..” என பதிலை அனுப்பிவிட்டு தன் தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டாள் அவள்.

“ஐயோ அந்த ப்ரொஃபஸர் நாளைக்கு என்ன வச்சு செய்யப் போறாரு..” என இவள் பதறிக் கொண்டிருக்க அவள் இருந்த பிளாட்டிற்கு எதிராக இருந்த பிளாட்டின் பல்கனியில் இருந்து சட்டென ஒருவன் கீழே இருந்த ஃப்ளோரின் பால்கனிக்கு பாய்ந்தான்.

“ஐயோ..” எனப் பதறியவள் அவன் சேஃபாக அடி எதுவும் இல்லாமல் அடுத்த பால்கனியில் தரையிறங்கியதை கண்டு விழி விரித்தாள்.

அவனோ இது எல்லாம் எனக்கு சர்வ சாதாரணம் என்பது போல பன்னிரண்டாவது தளத்தில் இருந்த பால்கனியிலிருந்து பத்தாவது தளத்திற்கு சட்டென பாய இவளுக்கோ உயிர் ஊசல் ஆடியது போல இருந்தது.

ஒவ்வொரு முறை அவன் குதித்து குதித்து அடுத்த தளத்திற்கு மாறும்போதெல்லாம் இவள்தான் பயந்தாள்.

ஆனால் அவனோ வெகு சாதாரணமாக தளங்களைத் தாண்டியவன் கீழே தரைக்கு வந்து அவர்களுடைய பில்டிங் இருந்த பால்கனியின் மேலே குழாய் மூலமாக ஏறத் தொடங்க இவளுக்கோ இதயத்துடிப்பு அதிகரித்தது.

‘ஓ மை காட்.. ஸ்பைடர் மேன் மாதிரி இவ்வளவு பாஸ்ட்டா மேல ஏறி வர்றானே.. யாரா இருக்கும்…? போலீஸுக்கு போன் பண்ணிடலாமா..?’ என எண்ணியவள் இப்போது அவன் எந்த தளத்தில் இருக்கிறான் என்பதை பார்ப்பதற்காக கீழே குனிந்தாள்.

ஆனால் அவனைக் கீழே எந்த பல்கனியிலும் காணவே இல்லை.

‘போய்ட்டானோ..’ என எண்ணியவாறு அவள் திரும்ப அவளின் பின்னே குறுங்கத்தியுடன் நின்றிருந்தான் அந்த திடகாத்திரமான ஆண்மகன்.

அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

“கத்தினா கழுத்த அறுத்துறுவேன்…” என்றான் அவன் அழுத்தமான குரலில்.

“ப்ளீஸ் ப்ளீஸ் இப்போ என்ன கொன்னுடாதீங்க… ஒரு பத்து நிமிஷம் என் சோக கதையை கேட்டுட்டு அதுக்கப்புறம் என் கழுத்தை அறுத்துடுங்க.. எப்படியும் நாளைக்கு அந்த ப்ரொஃபஸர் என்ன சாவடிச்சிடுவாரு.. அவர்கிட்ட திட்டு வாங்கி சாகறதுக்கு நிஜமாகவே செத்துடலாம்..” என புலம்பினாள் அவள்.

அவனோ ‘பைத்தியமா இவ..?’ என்பதைப் போல அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

தன் கரத்திலிருந்த குறுங்கத்தியை பாக்கெட்டினுள் வைத்தவன்,

“இந்த மிட்நைட்ல தூங்காம என்ன பண்ற..?” எனக் கேட்டான்.

“ஹலோ சார் அதெல்லாம் நீங்க எதுக்கு கேக்குறீங்க..? இது என்னோட வீடு.. என்னோட பால்கனி… நான் தூங்குவேன்.. தூங்காம இந்த பால்கனிலேயே மட்டமல்லாக்க படுத்திருப்பேன்.. உங்களுக்கு என்ன..? திருடதானே வந்தீங்க..? சத்தியமா இந்த ரூம்ல பத்து பைசா இல்ல.

எங்க அப்பா ரூமைக் கண்டுபிடிச்சு அங்க போனீங்கன்னா ஏதாவது பல்க்கா எடுத்துக்கலாம்.. முடிஞ்சா போகும்போது எனக்கு ஒரு ஆயிரம் ரூபா கொடுத்துட்டுப் போங்க.. பாக்கெட்மணி கேட்டா எங்க அப்பா கொடுக்கவே மாட்டேங்குறாரு..” என்றவளின் பேச்சில் கொலை செய்ய வந்தவனோ குழம்பிப் போனான்.

அவளுடைய பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது.

“வாவ் நான் திருடத்தான் வந்தேன்னு எப்படி இவ்ளோ ஷார்ப்பா கண்டுபிடிச்ச..?”

“முசப் பிடிக்கிற நாய மூஞ்ச பாத்தா தெரியாதா..?” என்றாள் அவள்.

அவளுடைய கரத்தில் இருந்த ஃபோனைப் பறித்து எடுத்தவன் அதில் டார்ச் லைட்டை ஆன் செய்து அவளுடைய முகத்தில் அடித்தான்.

நிஜமாகவே அந்த வெளிச்சத்தில் தெரிந்த வர்ணாவின் முகத்தைக் கண்டவனுக்கோ ஒரு நொடி சர்வமும் அடங்கியது போல இருந்தது.

என்ன ஒரு அழகான வதனம்..

அடர்த்தியான அவளுடைய இரண்டு புருவங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருப்பதை வியந்து பார்த்தவன் அவளுடைய சிவந்த கீழ் உதட்டில் சிறு மச்சம் இருப்பதையும் கண்டு அசந்துதான் போனான்.

பேரழகே பொறாமை கொள்ளும் அழகு.

அவளோ டார்ச் வெளிச்சத்தில் கண்களை சுருக்கி தன் உதட்டை சுழிக்க அவளுடைய ஒரு பக்க கன்னத்தில் தோன்றியது குழி.

அப்பப்பா அவளின் முகத்தின் ஒவ்வொரு அசைவுக்கும் அவளுடைய அழகின் பரிமாணம் அதிகரிப்பதை உணர்ந்தவன் சட்டென அந்த டார்ச் வெளிச்சத்தை அணைத்தான்.

“இப்ப திருட வர்றவங்க வீட்டுக்காரங்களோட முகத்தைப் பார்த்துதான் திருடுவாங்களோ..?” என அவள் கேட்டதும் அவளுடைய ஃபோனை அவளிடம் கொடுத்தவன்

“என்ன பண்றது மேடம் வாழ்க்கையே ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஒரு வேளை சாப்பாட்டுக்கு பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை.. அதனாலதான் இப்படி திருடி சம்பாதிக்கிறேன்..

இன்னைக்கு நான் திருடலன்னா நாளைக்கு நானும் என்னோட தம்பியும் பட்டினி கிடந்து சாகணும்..” என பொய்யை அள்ளிவிட்டான் அவன்.

இம்முறை டார்ச்சை ஆன் செய்து அவனுடைய முகத்திற்கு நேராக அடித்துப் பார்த்தாள் அவள்.

திடீரென தன்னை நோக்கி திரும்பிய வெளிச்சத்தில் விழிகளை சுருக்கிக் கொண்டவன் மாஸ்க் அணிந்திருந்தான்.

“என்ன திருடரே முகத்தை காட்ட மாட்டீங்களா..?” என அவள் கேட்க அவனுக்கோ மறைக்கத் தோன்றவில்லை.

தன் முகத்தில் இருந்த மாஸ்கை கழட்டியவன் அவளையே பார்க்க அவனுடைய கூர்மையான விழிகளையும் கம்பீரமான முகத்தையும் பார்த்தவளுக்கு திருடன் போலவா இருக்கின்றான் என்ற எண்ணம்தான் மனதிற்குள் எழுந்தது.

‘செம ஹாண்ட்ஸம்மா இருக்கானே..’. ன எண்ணிக் கொண்டவள் அவனுடைய கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியில் வைரம் பதிக்கப்பட்ட நங்கூரப் பெண்டனைப் பார்த்து அதிர்ந்து போனாள்.

அவனுடைய கரத்திலோ விலையுயர்ந்த கைக்கடிகாரம் இருந்தது.

அவனுடைய ஆடைகள் அவன் அணிந்திருந்த ஷூ என ஒவ்வொன்றாக தன்னுடைய ஃபோனின் டார்ச்சை அசைத்து அசைத்து அனைத்தையும் பார்த்தவளுக்கு “அடப்பாவி இன்னைக்கு திருடலன்னா நாளைக்கு சாப்பிடவே காசு இல்லன்னு சொல்லிட்டு இவ்வளவு ரிச்சா இருக்கியே..” என அதிர்ந்தவாறு கேட்டாள்.

“இந்த செயின் தங்கம் இல்ல..” என மீண்டும் பொய் கூறினான் அவன்.

“ஆனா இந்தப் பென்டன் டைமண்ட் மாதிரி இருக்கே…” சந்தேகமாகக் கேட்டாள் அவள்.

“அப்படியா இருக்கு..? இது நார்மல் கல்லு..” என்றான் அவன்.

“அப்போ இந்த ஸ்மார்ட் வாட்ச்..?”

“அது அந்த பக்கத்து வீட்டுல தூக்கிட்டு வந்தேன்..”

“உன்னோட டிரெஸ் எல்லாம் பிராண்டட்டா இருக்கே..”

“அப்படியா தெரியுது..? இதெல்லாம் ரோட்டு கடைல நூறு ரூபாய்க்கு வாங்கினேன்…”

“இந்த ஷு…?” என அவள் சந்தேகமாகப் பார்த்தவாறு கேட்க,

“ஏம்மா ஒரு திருடன் ஷு கூட போடக் கூடாதா..?” என அழுது விடுபவன் போல அவன் கேட்டு வைக்க,

“சரி சரி பீல் பண்ணாதப்பா.. உன்ன பாத்தா பணக்கார திருடன் மாதிரி இருக்கு…” என்றாள் வர்ணா.

“இப்படி இருந்தாதானே நம்மளப் பாத்தா யாருக்கும் திருடன்னு சந்தேகம் வராது.. அதனாலதான் இப்படி ரெடி ஆகி வந்திருக்கேன்..” என்றான் அவன்.

“சரிதான்..” என்றாள் அவள்.

“சரி எவ்வளவு நேரம்தான் இப்படியே நின்னுட்டு பேசுறது வா உன் ரூமுக்குள்ள போய் பேசலாம்..” என அவன் அவளை அழைக்க அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

“யோவ் நான் எதுக்குயா உன்னை ரூமுக்குள்ள கூட்டிட்டுப் போகணும்..? நான்தான் சொன்னேன்ல இந்த ரூம்ல 10 பைசா கூட தேறாது… நானே நாளைக்கு காலைல காலேஜ் போறதுக்கு எங்க அம்மாகிட்ட தான் பிச்சை எடுக்கணும்…” என்றாள் அவள்.

“சேச்சே என்னோட சோக கதையெல்லாம் கேட்ட தேவதைமா நீ… உன்கிட்ட போய் திருடுவேனா…?

ஒவ்வொரு பால்கனியா பாஞ்சு பாஞ்சு வந்து கால் வலிக்குது… கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்னு கேட்டேன்… அது சரி நீ இந்த மிட்நைட்ல இங்க என்ன பண்ற.. தூங்கலையா..?”

“அது ஒரு பெரிய சோகக்கதை. ப்ராஜெக்ட் நாளைக்கு சப்மிட் பண்ணனும்.. அதை பண்றதுக்கு சோம்பேறித்தனத்துல என் பின்னாடி சுத்துனவன்கிட்ட பண்ணச் சொல்லி சொன்னேன்.. அவன் கடைசி நேரத்தில் முடியாதுன்னு சொல்லி கழுத்தை அறுத்துட்டான் ராஸ்கல்…

என்கிட்ட நோட்ஸ் வேற இல்ல.. 60 பக்கம் எழுதணும்.. என்ன பண்றதுன்னே தெரியல. அதான் தூங்கல..” என்றாள் அவள்.

“உன்ன பாத்தா பார்பி கேர்ள் மாதிரி இருக்க… ஆனா பண்றது எல்லாம் கேடி வேலை.. ஒருத்தன் லவ்வ சொன்னா அவனை இப்படித்தான் யூஸ் பண்ணுவியா..?”

“லவ்வ சொல்றவன் லவ்வ மட்டும் சொல்லணும்.. உனக்காக உசுரையே கொடுப்பேன் நிலாவையே கொண்டு வருவேன்னு சொன்னா என்ன பண்றது..? அதான் செக் பண்ணினேன்..”

வாய்விட்டு சிரித்தான் அவன்.

“சரி என்ன ப்ராஜெக்ட்ன்னு சொல்லு.. எனக்குத் தெரிஞ்சா ஹெல்ப் பண்றேன்…”

“அதெல்லாம் உனக்கு தெரிய சான்சே இல்ல..” என்றாள் அவள்.

“நீ சொல்லு எனக்கு தெரியுமா தெரியலையான்னு அப்புறமா பார்க்கலாம்..”

“அர்பன் யூத் அண்ட் தி சேஞ்சிங் ஃபாமிலி ஸ்ட்ரக்சர்ஸ். இதான் என் ப்ராஜெக்ட்டோட ஹெடிங்.

அதாவது யங்ஸ்டர்ஸ் எப்படி அவங்களோட ஃபேமிலிகிட்ட இருந்து விலகுறாங்க..” என அவள் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்க,

“எனக்கு இங்கிலீஷ் தெரியும்..” என்றான் அவன் அழுத்தமாக.

“ஓஹோ நீ படிச்ச திருடனா..?” எனக் கேட்டாள் அவள்.

“உன் ஃபோன குடு.. ரெக்கார்டிங் ஆன் பண்ணு… நான் முக்கியமான பாய்ண்ட்ஸ் சொல்றேன்.. அது எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணிட்டு அத கேட்டுக் கேட்டு ப்ராஜெக்ட் எழுது..”

அவளோ இவன் அப்படி என்ன குறிப்புகளை கூறி விடப் போகின்றான் என்பது போல அலட்சியமாக தன்னுடைய அலைபேசியை எடுத்து ரெக்கார்டிங்கை ஆன் செய்துவிட்டு “சரி வா உள்ள போகலாம்..” என அவனை உள்ளே அழைத்தாள்.

தன்னுடைய அறைக்குள் சென்று மின் விளக்கை அவள் ஒளிரச் செய்ததும் அவனுடைய தோற்றம் அவளுக்கு முழுதாகத் தெரிந்தது.

மிகவும் வசதியானவன் போல இருந்தது அவனுடைய தோற்றம்.

படிக்கட்டு தேகம் கண்டிப்பாக இருக்கும் என்பதை அவனுடைய வெளிப்புறத் தோற்றத்தைப் பார்த்தே கண்டு கொண்டவள் “சாப்பிடவே காசு இல்லன்னு சொன்ன. சிக்ஸ் பேக்ஸ் எல்லாம் உனக்கு இருக்கும் போலையே..” எனக் கேட்டாள்.

“டெய்லி இப்படி பல்கனி பல்கனியா தாவித்தாவி சிக்ஸ் பேக்ஸ் வந்துருச்சு..” என்றான் அவன் சிரிக்காமல்.

“ஓஹ் சரி..” என நம்பிவிட்டாள் அவள்.

அவனுடைய பார்வையோ அவள் மீதுதான் இருந்தது.

நடமாடும் தேவதை போல தெரிந்தாள் அவள்.

அவளுக்கே தெரியாமல் அவளுடைய அழகை ரசித்தவன் அவள் ரெக்கார்டை ஆன் செய்ய வேகமாக அவளுடைய ப்ராஜெக்ட்டுக்கு தேவையான குறிப்புகளை சொல்லத் தொடங்கினான்.

அவன் கூறக் கூற அவளுடைய விழிகளோ அதிர்ந்து விரிந்தன.

“வாவ் செம பாய்ண்ட்ஸ்” என்றாள் அவள் உற்சாகக் குரலில்.

அவளுக்கு தேவையானவற்றை கூறி முடித்ததும் ரெக்கார்டரை ஆஃப் செய்யச் சொன்னவன்,

“இதைக் கொஞ்சம் விளக்கி எழுது.. 60 பேச் என்ன 100 பேச்சே எழுதலாம்..” என்றான் அவன்.

“முடிஞ்சா நீயே எழுதிக் கொடுத்துட்டு போகலாமே..” என்றாள் அவள் அத்தனை பற்களையும் காட்டிச் சிரித்தபடி.

“ஏம்மா உனக்கு ப்ராஜெக்ட் எழுதி கொடுத்துட்டு நாளைக்கு என்ன பட்டினி கிடக்க சொல்றியா..? நான் இப்பவே போய் திருடணும்..” என அவன் பாவமாகக் கூற,

அவனைப் பாவமாக பார்த்தவள் “ஒரு நிமிஷம் இரு..” எனக் கூறி தன்னுடைய கல்லூரி பையைத் திறந்து அதற்குள் இருந்த 100 ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

“நூறு ரூபாய்க்கு பிரியாணி கிடைக்கும்.. நாளைக்கு பிரியாணி வாங்கி சாப்பிட்டுக்கோ..” என அவனுக்கு அவள் அந்த நூறு ரூபாயை கொடுக்க அவனுடைய பார்வையோ அவளை ஆழ்ந்து பார்த்தது.

“இல்ல வேணாம் நீயே வச்சுக்கோ..” என்றான் அவன்.

“எப்படியும் நாளைக்கு நான் எங்க அம்மா கிட்ட பாக்கெட் மணி வாங்குவேன்.. எனக்கு பிரச்சனை இல்லை.. நீ வச்சுக்கோ..” என மீண்டும் அவனிடம் கொடுக்க மறுக்காது அவள் கொடுத்த நூறு ரூபாயை வாங்கித் தன்னுடைய பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டான் அவன்.

அவனிடம் இருக்கும் சொத்து மதிப்பு பாவம் அவளுக்குத் தெரியவில்லை.

“சரி நீ ப்ராஜெக்ட் எழுது நான் போய் ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கிறேன்..” என்றவன் வந்த வேகத்திலேயே அவளுடைய அறையை விட்டு வெளியே பல்கனிக்கு வந்தவன் சர்ட்டென கீழே குதித்து விட பதறிப் போய் கீழே எட்டிப் பார்த்தவளுடைய கண்களுக்கு அவன் தென்படவில்லை.

மாயமாக மறைந்து போனான் அவன்.

“அச்சச்சோ அவன் பேர கேட்கவே இல்லையே…

சரி ஸ்பைடர் மேன்னு கூப்பிடலாம்..” என்றவள் அவன் பேசிய ரெக்கார்டரை எடுத்து அதைக் கேட்டவாறு எழுத ஆரம்பித்தாள்.

(நம்ம ஏசிபி பொண்டாட்டி நந்தினிக்கு என்ன ஆச்சுன்னு அடுத்த அத்தியாயத்துல பார்க்கலாம்..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 85

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!