விடியல் – 04
இரவு 12 மணியைத் தொட்டிருந்தது.
தன்னுடைய பல்கனியில் நின்று எங்காவது அந்த ஸ்பைடர்மேன் தெரிகின்றானா என எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ணா.
கிட்டத்தட்ட அரை மணி நேரமாக அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு முகம் வாடிப் போனது.
சட்டென தன் தலையில் தானே கொட்டிக்கொண்டாள் அவள்.
“இந்த ஸ்பைடர் மேன் அடிக்கடி இந்த பக்கம்தான் திருட வருவான்னு இல்லையே… இன்னைக்கு வேற ஏதாவது ஏரியாக்கு திருட போயிட்டான் போல… பட் நான் எப்படி அவன்கிட்ட தேங்க்ஸ் சொல்றது…? அவன் கொடுத்த பாயின்ஸ் எல்லாம் செமையா இருந்துச்சுன்னு அந்த சொட்டத் தலை ப்ரொபஸர் என்னைப் பாராட்டினதை நான் எப்படி அவன் கிட்ட சொல்றது…?”
சோர்வுடன் அவன் வரமாட்டான் என்பதை உறுதி செய்துகொண்டு பல்கனியிலிருந்து தன்னுடைய படுக்கையில் வந்து விழுந்தவள் உறங்க முயற்சித்தாள்.
ஆனால் அடுத்த இரண்டு நிமிடத்தில் அவளுடைய பல்கனியில் ஏதோ சத்தம் கேட்க சட்டென எழுந்து மின்விளக்குகளை ஒளிரச் செய்தவளின் முகம் மலர்ந்தது.
“ஹேய் ஸ்பைடர் மேன் வந்துட்டியா… வா வா…” என அவள் ஆர்ப்பாட்டமாக வரவேற்க.
“வாட் ஸ்பைடர் மேனா…?” எனக் கேட்டான் அவன்.
“நீதான்… உன்னோட பேரை சொல்லவே இல்லையே… நேத்து நீ செஞ்ச சாகசத்தை எல்லாம் பார்த்து நானே உனக்கு ஸ்பைடர்மேன்னு பேரு வெச்சிட்டேன்…”
“ஊப்ஸ்… எனக்கு அயர்ன் மேன்தான் பிடிக்கும்…” என்றான் அவன்.
“வாவ் செம… எனக்கும் அயர்ன் மேன் பிடிக்கும்… அத விட ஹல்க், தோர் பிடிக்கும்…” என அவளுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோக்களை கூறினாள் வர்ணா.
அவளைப் பார்த்து சிரித்தவாறு தன் முகமூடியைக் கழற்றினான் அவன்.
“பரவாயில்லையே… உனக்கு செம தைரியம்தான்… நேத்து இதே இடத்துல திருடிட்டு மறுபடியும் எங்க ஏரியாக்கே வந்திருக்கியே…”
“இன்னைக்கு உன்ன பாக்கத்தான் வந்தேன்…” என்றான் அவன்.
“எதுக்கு மறுபடியும் என்கிட்ட இருந்து 100 ரூபா வாங்கலாம்னு வந்தியா…? அதெல்லாம் என்கிட்ட எதிர்பார்க்காத… நேத்து எனக்கு நோட்ஸ் சொல்லிக் கொடுத்தேன்னு உணர்ச்சிவசப்பட்டு பணத்தைக் கொடுத்துட்டேன்… காலேஜ்ல வச்சு அவசரப்பட்டு கொடுத்துட்டோம்னு ரொம்ப கவலையா இருந்துச்சு…” என்றாள் அவள்.
அடிப்பாவி என்பதைப் போல அவளைப் பார்த்து வைத்தான் அவன்.
“நான் ஒன்னும் உன்னோட நூறு ரூபாய்க்காக வரல… ப்ராஜெக்ட் பத்தி கேட்கலாம்னு வந்தேன்… சப்மிட் பண்ணியா இல்லையா…?”
“கலக்கிட்டேன் தெரியுமா…” என்றவளை அவன் சந்தேகமாகப் பார்க்க,
“சரி சரி… பாதிதான் எழுதினேன்… 40 பக்கம் எழுதி முடிச்சதும் எனக்கே தெரியாம தூக்கம் வந்திருச்சு… இன்னைக்கு காலேஜ்ல சார் ரொம்ப திட்டினாரு… பட் நான் எழுதினத காமிச்சதும் அப்படியே ஷாக் ஆயிட்டாரு… பாயிண்ட்ஸ் எல்லாம் செமையா இருக்குன்னு சொன்னாரு… எக்ஸ்ட்ரா 2 டேஸ் டைம் எடுத்தாலும் பரவால்ல இதை ப்ராப்பரா முடிச்சு கொடுக்க சொல்லி சொல்லிருக்காரு தெரியுமா..? ஆரம்பத்துல அவ்ளோ கடுப்பா திட்டின மனுஷனே என்னப் பாராட்டி அனுப்பி வச்சாரு… இதெல்லாம் உன்னாலதான்… தேங்க்யூ சோ மச்…” என்றாள் அவள்.
“ஆக மேடம்… இன்னைக்கு ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணல…”
“ஹி ஹி… இல்ல…”
“சரி… நாளைக்காவது சப்மிட் பண்ணுவீங்களா…?”
“நாளைக்கு கண்டிப்பா பண்ணிடுவேன்…” என கன்னக் குழி விழ சிரித்தவளை இரசனையாகப் பார்த்தவன் “குட்…” என்றான்.
“சரி… நைட் திருட போனியே… உனக்கு ஏதாவது கிடைச்சுதா…”
“எதுவுமே கிடைக்கல மேடம்…” என்றான் அவன் சோகமாக.
“அச்சச்சோ… என்ன இப்போ எல்லாரும் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இருக்காங்க… வீட்ல எந்த பணமும் வைக்கலைன்னா உன்ன மாதிரி திருடனுங்க எல்லாரும் எப்படி பொழப்பு நடத்துறதாம்…?” என குறைப்பட்டுக் கொண்டாள் அவள்.
அவனுக்கோ சிரிப்பு வந்தது.
தொண்டையைச் செருமி சமாளித்துக் கொண்டவன் “ஏதோ நீங்க கொடுத்த நூறு ரூபாய்லதான் என் வயிறு நிரம்பிச்சு மேடாஆம்…” என இழுத்துச் சொன்னான் அவன்.
அவளுக்கோ அவனைப் பார்க்க பாவமாக இருந்தது.
“உன்ன பாத்தாலும் பாவமாதான் இருக்கு ஸ்பைடர் மேன்…”
“அப்ப இன்னைக்கும் ஒரு நூறு ரூபா கொடுக்க முடியுமா…”
“அடிங்க… நானே பாவம்… பச்சை மண்ணு என்கிட்ட இருந்து காசு புடுங்க பார்க்கிறியா…”
“சரிதான்…” என்றான் அவன்.
“பணம் எல்லாம் கொடுக்க முடியாது… வேணும்னா நான் இன்னைக்கு குல்ஃபி பண்ணினேன்… உனக்கு அது வேணுமா…” என அவள் கேட்க,
“நீ பண்ணியா…?” எனக் கேட்டான் அவன்.
“ஆமா… எனக்கு குல்ஃபின்னா ரொம்ப பிடிக்கும்… காலேஜ் முடிச்சு வந்ததும் நானே பண்ணினேன்…”
“சரி… கொடு…”
“அப்போ நான் வரும் வரைக்கும் இங்கேயே வெயிட் பண்ணு… கீழே பிரிட்ஜ்ல இருக்கு… ஓடிப் போய் எடுத்துட்டு வந்துடுறேன்…”
“சரி…” என்றான் அவன்.
அவ்ளோ வேகமாக திரும்பியவள் சட்டென தன் இடுப்பில் கரத்தைப் பதித்தவாறு அவனை அழுத்தமாகப் பார்த்தாள்.
“டேய் ஸ்பைடர் மேன்… உன்னோட வேலைய என்கிட்ட காட்டணும்னு நினைச்ச தொலைச்சிடுவேன்… எந்த பொருளையும் ஆட்டைய போடாம இங்கேயே சமத்தா நிக்கணும்… சரியா…?”
“சரிங்க மேடம்…”
“ஏதாவது பொருள் காணாம போச்சுன்னா நாளைக்கு முட்ட மந்திரிச்சு வச்சுருவேன்…” என்றாள் அவள்.
“ஹா ஹா… சத்தியமா திருட மாட்டேன்… நீ போய் குல்ஃபியை கொண்டு வா…” என்றான் அவன்.
அவளோ வேகமாக கீழே ஓடிச் சென்றவள் பிரிட்ஜைத் திறந்து குல்ஃபியை எடுத்துவிட்டு அதே வேகத்தில் திரும்பியவள் தன்னுடைய அன்னையின் அறையைக் கடக்க,
“ஏய்… இந்த நேரத்துல தூங்காம என்னடி பண்ற…” என வெளியே வந்தவர் கேட்டார்.
“ஐயையோ லேடி டான் எழந்துட்டாங்களா..?” எனப் பதறியவள் காதே கேளாதவள் போல தன்னுடைய அறைக்குள் நுழைந்து விட,
குல்ஃபியுடன் மூச்சு வாங்க ஓடி வந்து அறைக்குள் நின்றவளை புருவம் உயர்த்திப் பார்த்தான் அவன்.
“என்ன ஆச்சு… எதுக்கு ஒலிம்பிக் ரேஸ்ல ஓடுற மாதிரி இப்படி மூச்சு வாங்குற…”
“ஐயோ… லேடி டான்… சே எங்க அம்மா எந்திரிச்சிட்டாங்க…” என அவள் கூறி முடிக்கவில்லை அவளுடைய அறைக்கதவு தட்டப்பட்டது.
“அய்யய்யோ… கிழிஞ்சு போச்சு… என் சோலி முடிஞ்சு… ஸ்பைடர் மேன்… நீ தான் ஃபிளாட்டுக்கு ஃபிளாட் நல்லா தாவுவியே… தாவுடா தாவு…” என அவள் கூற வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான் அவன்.
“அடப்பாவி… இப்போ மட்டும் நீ போகல… எங்க அம்மா என் தோலை உரிச்சு உப்பு தடவி விட்டுடுவாங்க… ப்ளீஸ்டா… இங்கிருந்து போயிரு…”
“நான் இன்னும் குல்ஃபி சாப்பிடவே இல்லையே…”
“மண்ணாங்கட்டி குல்ஃபியா… முக்கியம்…” என சீறியவளின் கரத்தில் இருந்த குல்ஃபியைப் பறித்துக் கொண்டவன்,
“நீ போய் கதவைத் திற… உங்க அம்மா என்ன பாக்க மாட்டாங்க… நான் பல்கனில நிக்கிறேன்…” என்றவாறு அவன் பல்கனிக்கு நகர்ந்து விட துடித்த இதயத்தை தன் கரத்தால் அழுத்திவிட்டவள் கதவைத் திறந்தாள்.
“மிட் நைட்ல தூங்காம என்னடி பண்ற…”
“என்னமா… இப்படி கேட்டுட்ட… உன் பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கிறேன்னு உனக்கு தெரியுமா… 60 பேஜ் ப்ராஜெக்ட் இருக்கு… நெட்ல ஏஐ கிட்ட எல்லாம் நோட்ஸ் கேட்டு கஷ்டப்பட்டு கண் முழிச்சி எழுதிட்டு இருக்கேன்…
என்னப் போய் திட்டுறியே… இப்படி சின்சியரா படிக்கிற பொண்ண நீங்களே டி மோட்டிவேட் பண்ணினா எனக்கு எப்படி படிப்பு மேல ஆர்வம் வரும்…?” என அவள் போட்ட போடில் அவளுடைய அன்னையோ
“தங்கமே… நீ படிமா நான் கிளம்புறேன்…” என்றவர் கையெடுத்து கும்பிடாத குறையாக வெளியேறி விட்டார்.
நிம்மதி பெருமூச்சுடன் அறைக் கதவைப் பூட்டிவிட்டு திரும்பியவள் தன் படுக்கையில் அமர்ந்து குல்ஃபியை ரசித்து குடித்துக் கொண்டிருந்த ஸ்பைடர் மேனை முறைத்துப் பார்த்தாள்.
“நீ செஞ்ச குல்ஃபி சும்மா டக்கரா இருக்கு…” என்றான் அவன்
“நல்லா இருக்கா…”
“ம்ம்… செம…” என்றான் அவன்.
“சரி… உன் பேர் என்ன…”
“நீ உன்னோட பேரை சொன்னியா இல்லதானே… நான் மட்டும் எதுக்கு என்னோட பேரை சொல்லணும்…” எனக் கேட்டாள் அவள்.
“சரி… நீ எனக்கு ஸ்பைடர்மேன்னு பேர் வெச்ச மாதிரி நான் உனக்கு குல்ஃபின்னு பேர் வெச்சுட்டேன்… இனி நீ எனக்கு குல்ஃபிதான்…”
“சரி… நல்லாதான் இருக்கு… ஓகே நீ கிளம்பு… எனக்கு தூக்கம் வருது…” என்றாள் அவள்.
“போறதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒன்னு சொல்லணும்…”
“சொல்லுங்க ஸ்பைடர் மேன்…”
“ஐ லவ் யூ…” என்றான் அவன் பட்டென்று.
“வாட்…” என அவனை அதிர்ந்துப் பார்த்தாள் அவள்.
“ஐ லவ் யூ… நான் உன்னை காதலிக்கிறேன்…” என்றான் அவன் அழுத்தமாக.
“என்ன… விளையாடுறியா…”
“நோ… ஐ ஆம் சீரியஸ்…”
“நீ யாருன்னு எனக்குத் தெரியாது… என்ன பத்தி உனக்கும் தெரியாது… பார்த்ததுமே காதலா…?”
“ஆமா… நேத்து உன் முகத்துல டாச் அடிச்சு பார்த்ததுமே அப்படியே என் நெஞ்சுக்குள்ள ஏறி உக்காந்துட்ட…
திருட போற எனக்கு எங்க போனாலும் உன் முகமாகவே தெரியுது… ஒழுங்கா திருட்டுல ஃபோக்கஸ் கூட பண்ண முடியல… உன் ஞாபகமாவே இருக்கு… அதான் காலம் பூரா உன்ன கல்யாணம் பண்ணிட்டு உன் காசுல பிரியாணி வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்… என்ன கண்கலங்காம பார்த்துப்பியா…?” எனக் கேட்டவனைப் பார்த்து “ஙே…” என விழித்தாள் அவள்.
“செருப்பாலேயே அடிப்பேன்.. டெய்லி உனக்கு பிரியாணி கேக்குதா…? மரியாதையா நீயே குதிச்சு ஓடிப்போயிரு… இல்ல நானே உன்னைத் தள்ளி விட்ருவேன்…” என்றாள் அவள் முறைத்தபடி.
அவனுக்கோ உதடுகளில் அடக்கப்பட்ட சிரிப்பு.
“எதுக்கு குல்ஃபி… கோபப்படுற…?”
“அட போடா… இந்த லவ்வ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல…”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொல்லி இருந்தா எஸ் சொல்லிருப்பியா…”
“இல்ல… என்கிட்ட ஒரே ஒரு குல்ஃபிதான் இருந்துச்சு… அத உனக்கு கொடுக்காம இருந்திருப்பேன்…” என்றாளே பார்க்கலாம்.
‘என்ன மேக் டா இவள்…’ என மனதிற்குள் எண்ணிச் சிரித்துக் கொண்டான் அவன்.
“இங்க பாரு ஸ்பைடர் மேன்… நீ அழகாதான் இருக்க…”
“ஆஹான்…”
“ம்ம்… அதுக்காக எல்லாம் என்னால உன்ன லவ் பண்ண முடியாது… ஆல்ரெடி அஞ்சு பசங்க பின்னாடி சுத்துறாங்க… வேணும்னா வெயிட்டிங் லிஸ்ட்ல வச்சிக்கிறேன்…”
“எதே வச்சுக்கிறியா…”
“யோவ் யோவ்… நீ நினைக்கிற மாதிரி இல்ல… வெயிட் பண்ணு… அந்த அஞ்சு பேர்ல யாரையும் பிடிக்கலைன்னா உன்ன பத்தி திங்க் பண்றேன்…” என்றாள் அவள்.
“அவனுங்க எல்லாம் உனக்கு செட் ஆக மாட்டானுங்க… ஒரு ப்ராஜெக்ட் கூட உனக்கு பண்ணி கொடுக்கல… பட் நான் அப்படியா… உனக்காக மிட்நைட் வந்து ப்ராஜெக்ட் பண்ண ஹெல்ப் பண்ணினேன்… இன்னைக்கு திருடப் போகாம என் தொழில மறந்துட்டு உன்னை பார்க்க வந்திருக்கேன்… என்ன மாதிரி ஒரு ஸ்வீட்டான ஹேண்ட்ஸம் பையன் உனக்கு கிடைப்பானா…?”
“வெவ்வே… நீ எப்படி பேசினாலும் இந்த வர்ணா அசர மாட்டா…” என்றாள் அவள்.
“சோ… உன் பேரு வர்ணா ரைட்..?”
சட்டென தன் தலையில் கொட்டிக் கொண்டவள் “உளறிட்டியேடி…” என்றாள்.
அதே கணம் தூரத்தில் விசில் அடிக்கும் சத்தம் கேட்க சட்டென அவனுடைய உடல் இறுகியது.
“ஓகே குல்ஃபி… பை… நான் கிளம்பணும்…” என்றவன் அடுத்த நொடியே மாயமாகிப் போனான்.
🥀🥀
கமெண்ட் ப்ளீஸ்
Super super super super super super super super