இறுதி பகுதி – உள்நெஞ்சே உறவாடுதே!

4.8
(24)

உள்ளமதில் உனையேந்தி
ஊனிலும் உனையே தாங்கும்
வரம் தந்தான் இவன்…

உன்னுயிரை என்னுள் ஊற்றி
என்னுயிரை உன்னுள் உருக்கி
உருமாற்றம் செய்து விட்டான் இவன்…

இடையில்லா இன்பங்களின்
இடைவெளியில் இளைப்பாறும்
இடமாய் – ஈரம் படர்ந்த
இதயம் கொடுத்தான் இவன்…

இனி என்ன நான் கொடுக்க…
நிதம் நிதம் என்னையே கொடுக்க
உத்தரவிட்டான் இவன்… என்னவன்!

——————

ஷக்தி மகிழவனின் கருவிழிகளில் முத்தாய் ஒரு துளி நீர்.

“கண்ல தண்ணி வந்தா நீங்க அழுகுறீங்கன்னு அர்த்தம் மகிழ். உங்களால ரொம்ப தாங்க முடியாத வேதனை அப்போ தான் உங்க கண் கலங்கும்.” அசிரீரியாய் பிரகிருதியின் குரல் செவியில் உறவாடியது.

நீர்த்துளியை சுண்டி விட்டவனுக்கு தாயின் வார்த்தைகள் எதுவும் கேட்கவில்லை.

“அவளை ஏங்க வைக்கப் போறியா ஷக்தி?” இந்த ஒரு வார்த்தை அவனை அதிகமாய் ஆட்டுவித்தது.

வேகமாக போனை எடுத்தவன், தன்னவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.

“நான் உன்னை ஏங்க வச்சுடுவேனா ருதிடா” என்று!

தாயின் பேச்சில் மலைத்து உடைந்திருந்த பிரகிருதியை அடைந்த ஷக்தியின் குறுஞ்செய்தியைக் கண்டு உள்ளம் நொறுங்கியே போனது.

பதிலுக்கு அவளும் குறுஞ்செய்தி அனுப்பினாள், “உங்ககூட வாழணும்ன்ற என்னோட எண்ணம் சுயநலமா மகிழ்?”

அக்கேள்வியில் அவனும் மானசீகமாக துண்டு துண்டாய் நொறுங்கினான்.

“ஆமா சுயநலம் தான். உன்னோட சுயநலத்துல தான் என்னோட ஒட்டுமொத்த வாழ்க்கையும் அடங்கி இருக்கு. நான் கேட்டதுக்கு பதில் வரல?”
லேசாய் எழுந்த கோபத்துடன் அவன் தட்டச்சு செய்து அனுப்ப, அதைக் கண்ட பிரகிருதியின் விழிகள் நனைந்தது.

“ஆமா என்னை ஏங்க தான் வைப்பீங்க. அந்த ஏக்கத்துக்குள்ள நம்ம காதல் இருக்கு மகிழ். அந்த ஏக்கம் எனக்கு வேணும் வாழ்க்கை முழுக்க… நான் என்ன செய்யட்டும். உங்களுக்காக யோசிக்கவா? எனக்காக யோசிக்கவா?” பதில் அனுப்பும்போதே கண்ணில் நீர் தளும்ப தேம்பினாள்.

சில நொடிகள் பொறுத்து அவன் மீண்டும் பதில் அனுப்பி இருந்தான்.

“நமக்காம யோசிக்கலாமேடா. என்னோட நீ இல்லன்னா, என் பேர்ல இருக்குற மகிழ் என்கிட்ட நிச்சயம் இருக்காது. அதுக்கு மேல உன் விஷ். உன் முடிவு எதுவா இருந்தாலும் நான் தடுக்க மாட்டேன்” எனப் பதில் அளித்து விட்டவன், தீயாய் காந்திய நெஞ்சத்தை என்ன செய்து தணிப்பதென்ற விடை புரியாது இறுகினான்.

அதில் தானாய் மீண்டும் அவளையே நாடினான்.

“ருதிடா…”

அவனது பதிலைக் கண்டு மனதினுள் தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்துக் கொண்டவள், மீண்டும் அவன் குறுச்செய்தி அனுப்பியதில் “ம்ம்” என்றாள்.

“நெஞ்செல்லாம் எரியுது. என்ன செய்யுது எனக்கு? கண்ல வேற தண்ணியா வந்துட்டே இருக்கு… நீ வேணுமே பக்கத்துல. ஐ காண்ட் ப்ரீத்… என்னை விட்டுப் போக போறதுன்னு முடிவு பண்ணிட்டா… ஒரே ஒரு டைம் வந்து என் கையைப் பிடிச்சுட்டு போறியா?” நடுக்கத்துடன் அனுப்பி விட்டு மீண்டும் தன்னிடம் புலம்பிக்கொண்டிருந்த தாயைப் பார்த்தான்.

இங்கோ, வீறிட்டு அழுதே விட்டாள் பிரகிருதி.

தான் சொல்வதைக் காதில் வாங்காமல் அலைபேசியில் கவனத்தைப் பதித்திருந்த மகளின் மீது கோபம் பொங்கிட ஆர்த்தி அலைபேசியை வெடுக்கென பிடுங்கினார்.

ரவிதரனோ, “அவனைப் பத்தி உனக்கு முன்னாடியே தெரிஞ்சுது தான. அப்பவே என்கிட்ட சொல்றதுக்கு என்ன… இவ்ளோ தூரம் இதை வளர விட்டிருக்க மாட்டேன். வீட்டுக்குப் போய் உன் திங்ஸ் எல்லாம் எடுத்து வச்சுடு ஒரு மணி நேரத்துல கிளம்புறோம்…” என்றார் உறுதியாக.

கண்ணை மூடி தன்னை நிதானித்த பிரகிருதி, “நான் எங்கயும் வரலப்பா” என்றாள் அமைதியாக.

“வரலையா? இங்க இருந்து என்ன செய்யப்போற?” விழி விடுங்க ரவிதரன் கேட்க,

“அங்க வந்து மட்டும் என்ன செய்யப்போறேன்?” விரக்தியாய் வெளிவந்தது அவளது பதில்.

ஆர்த்தியோ, “எங்களுக்கு நீ ஒத்த பிள்ளையா போய்ட்ட பிரகா. உனக்கு குறை இருக்குனு தெரிஞ்சதும் நாங்க போகாத கோயில் இல்ல. உனக்கு நல்லபடியா ஆரோக்கியமான பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சா, உனக்கு வர்ற குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு வராம இருக்க சான்ஸ் இருக்கு. எங்க வம்சமே குறையோட போய்ட கூடாதுன்னு நினைக்கிறதுல என்ன தப்பு இருக்கு? இப்டியே நம்ம குடும்பம் பட்டுப்போய்டுமோன்னு எங்களுக்கு இருக்குற பயம் உனக்குப் புரியுதா இல்லையா? நீயும் ஷக்தியும் சேர்ந்து இருக்குறதுல எந்த பிரயோஜனமும் இல்ல. ஷக்திக்கும் தான். ரெண்டு பேரும் ஒரே ரூம்ல வாழ்க்கை முழுக்க கழிச்சுட முடியாது. இந்தக் கல்யாணத்தைக் கெட்ட கனவா நினைச்சு மறந்துடு… உன் வாழ்க்கைக்கு எது நல்லதோ அதை நான் நாங்க செய்வோம் பிரகா” என்றார் இறுதியில் குரல் தழைத்து.

“மறந்துடுறேன்…” எங்கோ வெறித்தபடி கூறியவளின் கூற்றில் இரு பெரியவர்களின் நெஞ்சமும் நிம்மதி அடைந்தது.

அவளோ மேலும் தொடர்ந்து, “மகிழ் வர்றதுக்கு முன்னாடி இருந்த என் வாழ்க்கையை கெட்ட கனவா நினைச்சு மறந்துடுறேன். ஆனா மகிழை மறக்க முடியாதுமா. உங்க வம்சம் பட்டுப் போய்ட கூடாதுன்னு தான என்னை இவ்ளோ வருஷமும் வளர்த்தீங்க… ஒருவேளை எனக்கு அடுத்து குழந்தை பிறந்துருந்தா என்னை அநாதை ஆஸ்ரமம்ல விட்டுருப்பீங்க தான?” எனக் கேட்டதும் ஆர்த்தி துடித்துப் போனார்.

“என்னடி பேசிட்டு இருக்க… சத்தியமா எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்ல” மனம் பதறி கூறியதில், “உங்களுக்கு இல்லாம இருந்துருக்கலாம். ஆனா இவருக்கு இருந்துருக்கும்ல…” எனத் தந்தையைப் பார்க்க, அவரால் மகளை நிமிர்ந்து ஏறிட இயலவில்லை.

இரண்டாவதாக குழந்தை பிறந்தால் பிரகிருதியை ஆஸ்ரமத்தில் சேர்த்து விடும் எண்ணத்தில் தான் இருந்தார். ஆனால் அதற்கு வாய்ப்பற்று போய்விட, தங்களது பேர் சொல்ல வாரிசுகள் இல்லாது போய்விடுமென்ற பயத்தில் எப்பேர்ப்பட்டாவது பிரகிருதிக்கு என்று குடும்பத்தை உருவாக்க எண்ணினார்.

அதனை அவளாலும் புரிந்து கொள்ள முடிந்தது.

“உங்களுக்கு வாரிசு வேணும்னு, நீங்க சுயநலமா என் விருப்பம் இல்லாம கட்டாயப்படுத்தி, என் உணர்வுகளை மதிக்காம கல்யாணம் பண்ணிக் குடுக்கலாம். ஆனா, என் உணர்வை மதிச்ச, மதிக்க தெரிஞ்ச, என்னை வெறும் பொருளா இல்ல உயிருள்ள உணர்வுள்ள மனுஷியா நடத்தி, என் கண்ணசைவுல கூட என்னை ராணி மாதிரி நடத்துற என் மகிழுக்காக நான் சுயநலமா யோசிக்கக் கூடாதாப்பா?

உங்களுக்கு ஒரு நியாயம்… குறை இருக்குற எனக்கு ஒரு நியாயமா? குறை குறைன்னு நீங்க தான் அடிச்சுக்குறீங்க… எனக்குள்ள இருக்குற எந்த குறையையும் என் மகிழ் பக்கத்துல இருக்கறப்ப நான் உணர்ந்ததே இல்ல. நடிக்கத் தேவை இல்ல. ரிகர்சல் பண்ணி பேச தேவை இல்ல. பிடிக்கலைன்னாலும் பிடிச்ச மாதிரி போலியா சிரிக்க தேவை இல்ல. யாரும் பாத்துடுவாங்களோன்னு கண்ணீரை அடக்கத் தேவை இல்ல. பிடிக்கலைன்னு தோணுறதை பிடிக்கலைன்னு சொல்ற அளவு சுதந்திரத்தை, உணர்வை உணர முடியாதுன்னு சொல்ற மகிழ் தரும்போது, அவர் உணர்வை சாகடிச்சுட்டு அவருக்காகன்னாலும் அவரை விட்டுப் போறது எங்களை நாங்களே கொன்னுக்குறதுக்கு சமம்.

என்னை விட்டுடுங்கப்பா… உங்களை கௌரவப்படுத்துறதுக்காக நான் உங்களோட வரணும்னு நினைச்சீங்கன்னா, என் மகிழை விட்டு என்னைப் பிரிக்கிறதா சொல்லி, உங்க ரெண்டு பேர் மேலயும் கம்பளைண்ட் பண்ண வரும். என்னை இத்தனை வருஷம் வளர்த்த நன்றி கடனுக்காக இதை செய்ய எனக்கு விருப்பமில்லை. அதுவே மகிழுக்காகன்னு வந்தா கண்டிப்பா செய்வேன்.

என்னையும் மகிழையும் ஐ – கியூ டெஸ்ட் பண்ணுனா நாங்க மூளை வளர்ச்சி இல்லாதவங்கன்னு ரிசல்ட் வராது. அவரால என்னை உணர முடியும். அவர்கிட்ட என்னோட ஆட்டிசம் இயல்பா இருக்கும். ரெண்டு பேரும் சேர்ந்து வாழ லீகலி எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. எங்க உரிமையை பறிக்க நினைச்சா, அம்மா, அப்பா, மாமனார் மாமியார்னு யாரையும் பாக்க மாட்டேன். நான் கேஸ் போட்டா, இத்தனை நாள் நீங்க பொத்தி பொத்தி வச்ச உங்க கெளரவம் தெருவுக்கு வந்துடும்” என நிறுத்தி நிதானமாக தாய் தந்தையை மிரட்டியவளை மிரட்சியுடன் பார்த்தனர் இருவரும்.

ரவிதரனோ, “அப்படி ஒண்ணு நடந்தா நான் தூக்குல தொங்கிடுவேன்…” என சீற,

“அது உங்க இஷ்டம்! யாரோட வாழ்வுலையும் சாவுலையும் தலையிடுறது என் வேலை இல்ல…” பட்டென உரைத்து விட்ட பிரகிருதியைக் கண்டு வாயடைத்து உறைந்திருந்தனர் இருவரும்.

திடீரென தங்கள் வரவு அமைந்தும் சிறிதும் பதறாமல், தங்களை எதிர்க்கும் மகளை வியப்பாகப் பார்த்தார் ஆர்த்தி. இந்த அளவு தைரியம், இந்த அளவு நிதானம் அதுவும் அவளது ஆட்டிச பாதிப்பையும் மீறி அவளிடம் மெருகேறி இருக்கிறது என்றால், அதற்கு காரணம் காதலைத் தவிர வேறென்னவாக இருக்க இயலும்?

மகனின் அமைதியில் சிறு தைரியம் எழ, லேகா மீண்டும் விவாகரத்துப் பத்திரத்தை நீட்டினார்.

“இதுல சைன் போடு ஷக்தி… உனக்கு உன்னை நல்லா பாத்துக்குற பொண்ணா பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்”

தாயில் கூற்றில் பெருமூச்சை வெளியிட்டவன், அந்தப் பத்திரத்தை வாங்கி வேகமாக கையெழுத்திட்டான்.

பிரகாசத்திற்கே அதில் ஏமாற்றம் தான். ஆகினும், வாய் வார்த்தையால் சொல்வதை தானே இவன் நம்ப இயலும். அவனுள் ஊறிப்போன உணர்வை உணர்ந்து செயல்படும் அளவு அவனுக்கு விவரம் இருக்காது எனப் புரிந்திட, மிகவும் வருந்தினார்.

ஷக்தி மகிழவன் தான் சொல்வதைக் கேட்டு கையெழுத்திட்டதும் அதிகமாய் மகிழ்ந்தார் லேகா.

வேகமாக பத்திரத்தை வாங்கி பார்த்தவரின் முகம் செத்தே விட்டது.

அதில் “மகிழ் லவ்ஸ் ருதி” என இதயம் வரைந்து அம்பு விட்டிருந்தான் அவரது அருமை மகன்.

அதனைக் கண்டு லேகா சினத்தில் பொங்க, பிரகாசத்திற்கு சிரிப்பு முட்டியது.

“என்ன செஞ்சு வச்சுருக்க ஷக்தி?” லேகா பற்களைக் கடித்துக் கேட்க,

“என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?” பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து அவனும் அதிகாரமாகக் கேட்டான்.

“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ முடியாது ஷக்தி…” லேகா கோபமூச்சுடன் கூற,

“ஏன், ரெண்டு ஆட்டிசம் கபில் கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்க கூடாதுனு எதுவும் ரூல்ஸ் இருக்கா? இந்தியால ஆட்டிசமால பாதிக்கப்பட்டவங்க மேரேஜ் பண்ணிக்க தடை விதிச்சு இருக்காங்களாம்மா. அப்டின்னா எங்களை கம்பெல் பண்ணி இந்தக் கல்யாணத்துக்குள்ள இழுத்து விட்ட உங்களை தான் முதல்ல உள்ள தூக்கிப் போடணும். ருதியோட விருப்பமில்லாம குழந்தை கேட்டு ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போய் பேனிக் அட்டாக் வர வச்சதுக்கு உங்க மேல அவள் கேஸ் போடலாம் தெரியும்ல?” கூர்பார்வையில் தாயை வதைத்து எடுத்தான் ஆடவன்.

“கேஸ் அவள் போடுவாளா… இல்ல நீயே கேஸ் போட தூண்டி விடுவியா?”

அதற்கு பதில் கூறாமல் தோள் குலுக்கினான் ஷக்தி.

லேகாவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“உன்னைப் பெத்து வளர்த்ததுக்கு என்னை ஜெயில்ல போடுவ அப்படித்தான?” எனக் குமுறிட,

“பெத்து வளர்த்ததுக்காக தப்பை ஒத்துக்க முடியாதுலமா?” அவனும் புருவம் சுருக்கி நியாயமாகப் பேசியதில் மேலும் கேவினார்.

“உனக்கு அவள் வேணாம் ஷக்தி…” மீண்டும் லேகா கூற,

“எனக்கு அவள் வேணுமா வேணாமான்னு முடிவு எடுக்க வேண்டியது நான் தான? மூளைல பாதிப்பு தான். மூளையே இல்லைன்னு நினைச்சுடாதீங்கமா…” இறுக்கத்துடன் கூறியவனைத் திகைத்துப் பார்த்தார்.

“முடிவா என்ன சொல்ற?” லேகா நடுக்கத்துடன் கேட்க,

“என்னால என் ருதியை விட முடியாது. இந்த ஜென்மத்துல அவள் மட்டும் தான் என் வைஃப். அதை மாத்த நினைக்கிற யாரா இருந்தாலும் எனக்கு அவங்க தேவை இல்லமா. நான், என் வீடு, என் ருதி… இதுவரை ஹேப்பினெஸ் எப்படி இருக்கும்னு ஃபீல் பண்ணிருக்கேனான்னு தெரியல, ஆனா இப்பலாம் அடிக்கடி சந்தோஷம்ன்ற வார்த்தையை எக்ஸ்பிரஸ் பண்றேன். இந்த லைஃப் எனக்கு வேணும்மா…” என்றான் உறுதியாக.

“குழந்தையெல்லாம் பிறந்தா உன்னாலையும் அவளாலையும் அந்த ப்ரெஷர தாங்க முடியாது ஷக்தி…”

“அப்படி எங்களால முடியாதுனு தோணுனா, ஓரளவு வளர்ந்த குழந்தையைத் தத்து எடுத்து வளர்த்துக்குறோம். என் ஆர்கனைசேஷன்லேயே பேரண்ட்ஸ் சப்போர்ட் இல்லாத எத்தனையோ குழந்தைங்க இருக்காங்க. பணம் குடுத்தா அந்தப் பணத்துக்காகவாவது பாசத்தைக் காட்டுற வேலையாள்கள் எத்தனையோ பேர் கிடைப்பாங்கமா. என் வாழ்க்கையைப் பத்தி ரொம்ப யோசிச்சுட்டீங்க. இனி என் வாழ்க்கையை நான் பாத்துக்குறேன்” எனத் தெளிவாய் பேசிய மகனை பிரகாசம் வியப்புடனும் லேகா அதிர்வுடனும் பார்த்தனர்.

வார்த்தைகளைத் தேடி ஓய்ந்து போகிறவனுக்கு, நிறைய வார்த்தைகளை அந்த உணர்வுக்கும் சூழ்நிலைக்கும் ஏதுவாக உபயோகிக்க கற்றுக் கொடுத்து இருக்கிறாள் பிரகிருதி எனப் புரிய பிரகாசத்திற்கு பெருமையாக இருந்தது.

“உன் வாழ்க்கையைப் பாத்துக்குற அளவு உனக்குத் தெளிவு வந்துடுச்சோ. அப்போ உன் விஷயத்துல நான் தலையிட கூடாது அப்படி தான?” எனத் தேம்பிய லேகாவிற்கு கண்ணீர் மழையெனப் பொழிந்திட, சோபாவில் அமர்ந்து ஒரு மூச்சு அழுதார்.

அவரை அமைதியாகப் பார்த்திருந்த ஷக்தி மகிழவன், சில நொடிகள் பொறுத்து அவரருகில் அமர்ந்து லேகாவின் கையை மெல்லப் பிடித்துக் கொண்டான்.

அதில் லேகாவின் அழுகை சட்டென நின்று விட, அவரது கையை எடுத்து தனது கைக்குள் பொத்திக் கொண்டவன், “நான் ஹர்ட் பண்ணிட்டேனாம்மா? நான் என்ன செய்யணும் இப்போ?” என முதன்முறை வாய்திறந்து கேட்டதில், லேகா உறைந்து போனார்.

எத்தனை வருட ஏக்கம் இது! பெற்ற மகன் தன்னிடம் ஆதரவாய் பேச வேண்டுமென்பது லேகாவின் கனவல்லவா? ஆனால், அவனை அதற்கேற்றாற் போல கையாள வேண்டுமென்ற நிதர்சனம் அவருக்கு புரியவில்லை.

அவளுக்குத் தெரிந்திருக்கிறதே! அவனும் அவள் புகுத்திய மாற்றங்களை ஏற்றிருக்கிறானே! எப்படி இது? தாயன்பும் தந்தையன்பும் செய்ய இயலாத ஒன்றை முன்பின் அறியாத பெண்ணின் அன்பு செய்திட இயலுமா? இதற்கு பெயர் தான் காதலின் எதிரொலிப்போ?

சிலையாக அமர்ந்திருந்த லேகாவின் கண்ணீரும் கண்ணிலேயே உறைந்திருந்தது.

“நான் என்ன செய்யணும்மா?” பிரகிருதியிடம் கேட்பது போலவே தாயிடமும் கேட்டான். தன்னால் அவர் அழுகிறார் எனப் புரிகிறது. அவரது கண்ணீர் அவனைப் பாதிக்க, அதற்கு அவன் எதிர்வினை ஆற்றுகிறான். மற்றவரின் உணர்வைப் புரிந்து கொள்ள முயற்சி எடுக்கிறான். அதுவும் அவனவள் கற்றுத்தந்தது.

அவரை இயல்பாக்கும் வார்த்தைகளை அவன் உணர்ந்து கேட்கிறானா என்பது அவனுக்கே தெரியவில்லை. ஆனால், லேகாவின் கண்ணீர் நின்று விட்டதில் அவனுள் ஓர் இதம்.

“பிரகாவை விட்டுடு… அப்ப தான் என் கண்ணீர் நிக்கும்!” இம்முறை அவரே அரைமனதாக கூறினார்.

“ஆல்ரெடி நின்னுடுச்சே! அவளை நான் விடுறதுக்கும் உங்க கண்ல தண்ணி வர்றதுக்கும் என்ன சம்பந்தம்மா?” உண்மையில் அவன் லேசாக குழம்பி விட்டான்.

அவனது குழப்ப நிலையை லேகா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி விடுவாரோ என்ற பயம் பிரகாசத்திடம் துளிர்க்க, “அவளுக்கு பிரகாவை பிடிக்கலைல அதான் அப்படி சொல்றா. நீ இதை கன்பியூஸ் பண்ணிக்காத ஷக்தி” என்றார் வேகமாக.

“அவள் ஒன்னும் உங்ககூட இருக்கப் போறது இல்லையே! எனக்கு அவள் இருந்தா தான், என்னோட ரொட்டின் கரெக்ட்டா இருக்கும் போல தோணுது. அவ இல்லன்னா… இல்லன்னா… இல்லன்னா…” கருவிழிகள் அங்கும் இங்கும் அலைபாய ஆடவனின் இதயத்தில் மிகப்பெரும் அழுத்தம் ஒன்று அரங்கேறியிருந்தது.

அவசரமாக பிரகிருதிக்கு அழைத்தான்.

அவள் ஆட்டோவில் ஏறி அவர்களது வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்க, ஷக்தியின் அழைப்பை உடனே ஏற்றாள்.

எதிர்முனையில் ஆடவனின் திணறல் புரிந்தது.

“ருதிடா… நா… நீ…” எனப் பேச வந்தவனுக்கு என்ன பேசுவதென்றே ஒரு நொடி குழப்பம் நேர்ந்து விட்டது.

“ஆர் யூ ஓகே மகிழ்?” பிரகிருதி தீவிரத்துடன் வினவ,

“ஐ திங்க், ஐ ஆம் ஓகே…” என்றான் உணர்வின்றி.

“நான் பக்கத்துல வேணுமா மகிழ்?”

“வேணுமே!” வேகமாக அவனிடம் வந்த பதிலில் மென்முறுவல் அவளிடம்.

“எங்க இருக்கீங்க?”

“அம்மா வீட்ல…”

அந்த ஒரே சொல்லில் தனக்கும் மகனுக்குமாக உறவின் இடைவெளியை புரிந்து கொண்டார் லேகா.

ஒரு கணம் தயங்கியவள், “நான் அங்க வர்றதுல பிரச்சினை எதுவும் இல்லை தான?” எனக் கேட்க,

“நான் இங்க இருக்கும்போது, என்ன பிரச்சினை?” அவனும் எதிர்கேள்வி கேட்டதில் தயக்கத்தை தூக்கி எறிந்து விட்டு அவன் ஒருவனுக்காக மாமியார் வீட்டை அடைந்தாள்.

பிரகாசம் மகனிடம் பேச முயன்றும் அவன் திடீரென தனக்குள் நிகழ்ந்த குழப்பத்தில் அவரைப் புறக்கணிக்க, லேகாவின் கூற்றும் அவன் மூளையை எட்டவில்லை.

பிரகிருதியைக் கண்டதும், புயலென அவளை நெருங்கியவனின் நெற்றியில் படர்ந்திருந்த வியர்வைத் துளிகளை துப்பட்டா நுனியால் துடைத்தவள், “ப்ரெஷ் ஏர் வேணுமா மகிழ்? ஒரு காபி?” எனக் கேட்டதும் “ம்ம்” எனத் தலையசைத்தான்.

“நீங்க கார்டன்ல உக்காருங்க. டூ மினிட்ஸ்ல காபியோட வரேன்” என்றவள் துரிதமாக அடுக்களைக்குள் புகுந்து, காபி தயாரித்தாள். ஓரிரு முறை இங்கு வந்திருப்பதால், பொருட்களை எடுப்பதில் சிரமம் இருக்கவில்லை.

சொன்னது போன்றே சில நிமிடங்களில் காபி தயாரித்து அவன் முன் நீட்டிட, அதுவரை தோட்டத்தில் மலர்ந்திருந்த பூக்களை நிதானமாக பார்வையிட்டுக் கொண்டிருந்த ஷக்திக்குள் இதமாய் இறங்கியது அந்த சூடான காபி.

அவன் குடித்து முடித்து சற்றே இயல்பாகும் வரை பொறுமை காத்தவள், “இப்ப சொல்லுங்க… ஏன் டென்ஷன் ஆனீங்க?” எனக் கேட்க,

“அப்போ நான் டென்ஷனா இருந்தேனா? எனக்கே தெரியல ருதிடா. நீ என்கூட இல்லாம போனா என்ன ஆகும்னு யோசிச்சு அம்மாட்ட சொல்லப்போனேனா, ஒரு மாதிரி… லைக்…” எனத் திணறியதும்,

“நான் இல்லன்னா உங்களுக்கு கஷ்டமா இருக்கும். ரெகுலர் ரொட்டின் கூட பாலோ பண்றது சிரமம். இங்க வலிச்சுருக்கும்” என அவன் நெஞ்சை ஒற்றை விரலால் தொட்டுக் காட்டிட, அவனது இதயத்துடிப்பு சீரானது.

“இருக்கும்…” தாடையைத் தடவி அவன் பதில் கூறியதில் முறைத்தவள், “இருக்கணும்…” என்றாள் ஒற்றை விரல் நீட்டி மிரட்டலாக.

“இட்ஸ் வையலன்ஸ் ருதிடா” அத்தனை நேரம் இருந்த குழப்பங்கள் அனைத்தும் முற்றிலும் நீங்கி, சமுத்திரத்தோடு இணைந்த நதியைப் போல அவளுடன் இரண்டறக்கலந்து விட்ட நிம்மதியில் அவன் முகம் பிரகாசித்தது.

மற்றவர்களை போல என்ன ஆகிற்று, ஏன் பதற்றம் என அவளும் பதறவில்லை.

அவனை முதலில் நிதானமாக்கினாள். பின், அவனைக் கணித்து அவனது உணர்வுகளை உணர வைத்தாள்.

அவளது அணுகுமுறை தான் அவனை அவளுடன் பிணைக்கிறது எனப் புரிந்து கொண்ட லேகாவிற்கு இனி பேசுவதற்கு எதுவும் இருக்கவில்லை. அமைதியாய் உள்ளே சென்று விட்டார்.

“வீட்டுக்குக் கிளம்பலாமா ருதிடா? ஐ நீட் டூ கிஸ் யூ…” என ஷக்தி கூற வெட்கம் கலந்த புன்னகையுடன் தலையசைத்தாள் பிரகிருதி.

இருவரும் வீட்டை அடைந்த நேரம் மழைத்துளிகள் பூவாய் மண்ணை அடைந்தது.

மண்வாசம் இரு உள்ளத்தினையும் சிலிர்க்கச் செய்ய, மண்ணோடு மழைக்கு நேரும் காதல் போல அவர்களுக்குள்ளும் தீண்டி தீயை மூட்டும் காதலை உணர ஆசை எழுந்தது.

பிரகிருதி ஓரளவு மனதினுள் இதற்கு தயாராகி இருந்தாள். இணையதளமும், அவள் கேட்ட கேள்விகளுக்கு அழகாய் பதில் அளித்திருந்தது.

இதில் பிரச்சினை என்னவென்றால், அவனையே அவள் தான் உணர்வு ரீதியாகத் தயார் செய்ய வேண்டும்.

வெட்கம் ஒரு புறமும் படபடப்பு ஒரு புறமும் தாக்க அவனை அணுகும் வழி புரியாது தவித்துப் போனாள்.

ஷக்திக்கும் அந்த இரவின் ஏகாந்தம் மனதில் ஒரு வித மாயையைக் கொடுத்தது.

டின்னர் நேரத்தையும், அவனது ரீடிங் நேரத்தையும் ஒருவாறாக கடத்தினர்.

ஜன்னல் வழியே மழைச்சாரலை ரசித்திருந்த பிரகிருதியின் அருகில் மெல்ல நெருங்கினான் ஷக்தி மகிழவன்.

அவள் திரும்பியதும் அவளது கண்ணை நோக்கி ஒரு கணம் உத்தரவு கேட்டு விட்டு, அவளை இடையுடன் அணைத்துக் கொள்ள, அவனது நெஞ்சில் பாந்தமாக அடங்கினாள் பெண்ணவள்.

இருவரிடமும் பேரமைதி. அவன் என்ன யோசனையில் இருக்கிறான் எனப் புரியவில்லை. ஆனால் அவனது இதயம் தாறுமாறாகத் துடித்தது.

அதில் அவளது கையை அவன் நெஞ்சில் வைத்தவள், “ஏன் இவ்ளோ பாஸ்ட்?” எனக் கேட்க,

“தெரியலையே” என விழித்தான்.

“உனக்கு எதுவும் தெரியுதா?” பாவமாக ஷக்தி கேட்க, அவளும் விழித்தாள்.

“எனக்கும் தெரியல” என்றதும், அவனும் அவளது நெஞ்சைத் தொட்டுப் பார்த்து “உனக்கும் ஹார்ட் வேகமா துடிக்குது…” என்றான்.

அவனது தீண்டலில் நாணப் பெருவெள்ளம் அவளை சுழற்றியடிக்க, சிவந்து போனாள்.

அந்தச் சிவப்பைக் கண்ட ஷக்திக்கு இதயத்துடிப்பும் சீரானது.

அவன் நெஞ்சம் ஏங்குவது அவளது வெட்கத்தை கேட்டு தான் போலும்!

அவள் வெட்கப்பட்டு சிவந்தால் தானே அது அவனுக்கு ஒரு உந்துதல் கொடுக்கும். அதே உந்துதலில் பேரில் அவளது நெற்றியில் அழுத்த முத்தமிட்டான்.

“என்னவாம்…? இப்ப பீட் சரி ஆகிடுச்சு…” அவனைப் பார்த்தபடி அவள் கேட்க, அவனோ அவள் மீதிருந்த பார்வையை துளியும் மாற்றினான் இல்லை.

அதில் இதயம் இடறி தவிக்க, இருப்பினும் அவனது பார்வையை பிரகிருதி புறக்கணிக்கவில்லை. அது அவனை சோர்வடையச் செய்யும் எனப் புரிந்து வைத்திருந்தாள்.

“ருதிடா… நீ இப்படி என்னைப் பார்த்துட்டே இரு. என்னை டச் பண்ணிட்டே இரு. சோ நான் ஆட்டோமேட்டிக்கா உன்னை ஹக் பண்ணிப்பேன் இப்படி…” என அணைத்துக் காட்ட, சிரித்துக் கொண்டாள்.

“பிரென்ச் கிஸ்க்கு அப்பறம் என்ன கத்துக்கணும் நீ?” செவியோரம் சூடான மூச்சுக்காற்றை ஊதினான்.

“எல்லாமே கத்துக்குடுங்க…” நாணத்துடன் அவள் உரைக்க,

“இன்னைக்கே ஓகேவா?” என்றவனின் குரலில் அதீத ஆர்வம்.

“ம்ம்!”

“ஆனா உனக்கு டைம் வேணும்லடா. ரிகர்சல் பண்ணனும்… இடைல பேனிக் ஆகிட மாட்ட தான?”

“நானும் வயசுக்கு வந்த பொண்ணு தான். ஓரளவு இன்டர்நெட் தயவுல தெரிஞ்சு வச்சுக்கிட்டேன். ஆனா உங்களை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு நீங்க சொன்னா தான் தெரியும்…” தலையை ஆட்டி அவள் கூற, அவளது மூக்கோடு மூக்கை உரசியவன், “என்னைப் பார்த்துட்டே இரு. என்னை ஹக் பண்ணிட்டே இரு…” எனும்போதே அவளது கழுத்தில் முத்தமிட்டான்.

அதில் அவள் சிலிர்த்து சிதைய, “இப்படி ரியாக்ட் பண்ணிட்டே இரு. நானும் அதே ஃபீல் ட்ராக்கு வந்துடுவேன். ஐ திங்க்!” என புன்சிரிப்புடன் அவள் நெற்றியில் முட்டினான்.

“இன்னைக்கு வேணா ரிகர்சல் பாத்துக்கலாம் ருதிடா” என்றதும் அவள் மௌனமாகத் தலையசைத்தாள்.

ரிகர்சல் என்கிற பெயரில், அவளது நெற்றி தொடங்கி முத்தமிட்டவன், இறுதியாய் அவளது இதழ்களை அடைய அவளுள் மீண்டும் ஒரு சிலிர்ப்பு. அந்தச் சிலிர்ப்பில் அவனது உணர்வுகளும் இதமாகத் தூண்டப்பட, இதழ் முத்தம் இதழ் வதையாய் முடிவடைந்தது.

அவள் காதோரம் கிசுகிசுத்து நடைமுறைகளை நளினமாக விளக்கியவனின் கரங்கள் தானாய் அவளது மேனியில் ஊர்ந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் வார்த்தைகளால் அவளுக்குப் புரிய வைக்க இயலாதவனின் உடல் இயற்கையாகவே அடுத்தடுத்து அவளை நாடத் தொடங்க, மனதினுள் அவனுடன் கொண்டாட வரையறுத்து வைத்திருந்த நிமிடங்கள் தற்போது நிகழ்ந்ததில் அவளுள் பூரிப்பே நிறைந்தது.

அவளது ஒவ்வொரு அசைவிற்கும் அவளது கண்ணை ஒரு முறை பார்த்துக்கொண்டான்.

“வலிக்குமாமே… நீ ஓகே தான? என்கிட்ட நடிக்க மாட்ட தான? என் முன்னாடி மாஸ்க் போடல தான நீ…” ஓராயிரம் முறை கேட்டு விட்டான்.

ஒவ்வொரு முறையும் மறுப்பாகத் தலையசைத்தவளுக்கு கண்ணில் சிறு துளி நீர் வழிந்த வண்ணம் இருந்தது. அதனை அவனுக்கு காட்டாது துடைத்தபடியே இருந்தாள். அதீத மகிழ்வின் தாக்கம் என்று அவனுக்குப் புரிய வைக்க இது நேரமல்ல. தனது கண்ணீரைப் பார்த்தாலே அவனது இதயம் குழம்பி விடும் என்ற புரிதலில் ஆடவனின் ஒவ்வொரு முத்தத்தையும் ரசித்து ருசித்தாள்.

இடையிடையே தடுமாறியவனை இயற்கையுடன் இணைந்து அவளும் வழிநடத்த, அந்த இரவின் மெல்லிய மழையோசையினூடே காதல் நிரம்பித் தளும்ப இரு உள்ளங்களும் உடல்களால் மீண்டுமொரு முறை சங்கமித்தது.

அந்த இணைப்பு வெறும் உடல் உணர்ச்சி மட்டுமல்ல… இரு குறைகளும் ஒன்றோடொன்று நிறைவு பெற்று பூரணமாய் மாறிய தருணம். இருவருக்கும் பொக்கிஷமாய் உறைந்த நிமிடம்.

அவனுக்காக அவள் வெட்கம் துறந்திட, அவளுக்காக அவன் உணர்வலைகளை சீராய் கடைபிடித்து அவளுள் நிறைவைக் கொடுக்க முழுமனதாய் அவளை ஆட்கொண்டிருந்தான்.

இருவரின் மூச்சும் பலமாய் அறையை சுழற்றிட, அருகருகே சாய்ந்தவர்களின் கரங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, எப்போதும் போல ஷக்தியின் விழி வீச்சில் கட்டுண்டு போனவள், அவன் நெஞ்சில் ஏறி படுத்து அவனது கண்களை மூட முயன்றாள்.

“போதுமே… இன்னும் ஏன் தான் இப்படி பாக்குறீங்களோ! இதுக்குமேல உங்களை ஃபேஸ் பண்ண முடியாதுப்பா…” என சிணுங்கிட,

“அப்போ இந்த தடவை கண்ணை மூடிக்கோ ருதிடா… ரொம்ப ஓவர்டைம் பார்த்துட்ட…” அவனுக்கு சீரான உணர்வை உணர வைக்க முயன்றவளின் முயற்சியை சுட்டிக்காட்டி கூறியதில் வெட்கம் பீறிட, “அச்சோ மகிழ்” எனத் தனது முகத்தை அவனது நெஞ்சிலே புதைத்துக் கொண்டாள் பிரகிருதி.

ருதிக்கு மகிழவன் பாதுகாவலனாய் மாற, மகிழுக்கு ருதியவள் வழிகாட்டியானாள்.

மேகா
எபிலாக் உண்டு!!!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!