“ஊட்டிக்குப் போகலாமான்னு சொன்னதுக்கு ஏன் ரெட் ஆகுற? அதுக்குள்ள அங்க போய் என்ன நடக்கும்னு இமேஜின் பண்ணிட்டியா?” கையைக் கட்டிக்கொண்டு ஷக்தி கேட்க,
“மகிழ்” என சிணுங்கினாள் அவள்.
‘இவள் ஏன் இவ்ளோ ரியாக்ட் பண்றா’ என்றிருந்தாலும் அவனுக்கும் அவளது சிணுங்கல்கள் பிடித்தது.
“ருதிடா… இந்த வீக்கெண்ட் என் ஆபிஸ்ல ஒர்க் பண்ற ஜி. எம்க்கு வெடிங். கோயம்பத்தூர்ல தான்… போகலாமா?” எனக் கேட்டதும் அவள் அரைமனதாக தலையசைத்தாள்.
“வெடிங் சண்டே தான். நம்ம சாட்டர்டே ஈவ்னிங் ரிசப்ஸன் மட்டும் அட்டென்ட் பண்ணிட்டு ஊட்டி போகலாமா? மேரேஜ் அப்போ நிறைய கூட்டம் வரும் ஐ திங்க்…” அதில் சற்றே நிம்மதியுற்றவள் வேகமாக தலையசைத்தாள்.
பின் அவனே, “ஊட்டில உனக்கு ஒரு சர்ப்ரைஸ் பிளான் பண்ணிருக்கேன். சோ ப்ரிப்பேர் ஆகிக்கோ” என்றிட, “என்னது?” எனக் கேட்டாள் கலவரத்துடன்.
“ட்ரீ ஹவுஸ் ஸ்டே. அப்பறம் உன்னோட போட்டோஸ் வச்சு ஒரு வீடியோ ஷோ” எனக் கண் சிமிட்டிக்கூற, மேலும் கலவரமானவள் “ட்ரீ ஹௌஸ் செட் ஆகுமா மகிழ்” எனக் கேட்டாள்.
“அங்க நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கலாம்டா. யாரும் வர மாட்டாங்க. அங்க இருக்குற வரை நீ உன் மாஸ்க் போடாம, ப்ரீயா இருக்கலாம். கூட்டமும் இருக்காது…” என்று விட, “அப்ப சரி… சர்ப்ரைஸ்க்காக வெயிட்டிங்” என்றாள் ஆர்வமாக.
சர்ப்ரைஸ் என்னவென்று சொல்லி விட்டாலும் கூட, அவளது முக மாற்றத்தைக் காண அவனுக்கும், இனிய அதிர்ச்சியை அனுபவிக்க அவளுக்கும் அதிக ஆர்வமாக இருந்தது.
கூடவே மற்றொரு யோசனையும் பிரகிருதிக்கு.
அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, ஷக்தி ஆரம்பித்தான்.
அவனது எண்ணம் முழுக்க, அவளது மனநிலை பற்றிய முக்கியத்துவம் மட்டுமே!
தானாய் இதழ்கள் விரிய, “நானே பிரிப்பேரா தான் இருக்கேன் மகிழ். எப்போ வேணாலும் போகலாம். நீங்க டு டூ லிஸ்ட்ல குறிச்சுக்கோங்க…” என்றதும், மறுநாளே இருவரும் மருத்துவரைச் சந்தித்தனர்.
குழந்தைக்கான முன்னெடுப்பு தான். அனைத்தையும் திடீரென ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருவருக்குமே இல்லை எனும்போது, ஒவ்வொரு சிறு விஷயத்தையும் ஆராய்ந்து நிதானமாகவே முடிவெடுத்தனர்.
இப்போதெல்லாம் முத்தமிடுவதையும் அணைப்பதையும் மட்டுமே தீவிரமாக ஆராய்வதில்லை. தோன்றும்போதெல்லாம் கொஞ்சிக் கொள்கின்றனர். அதைத் தாண்டி இருவரும் கூடும் ஒவ்வொரு நேரமும் இருவரின் மனநிலை, உணர்வுகளை பொறுத்தே அமையும்.
தினமும் இரவில் கூடிக்களிப்பவர்கள் இல்லை தான். ஆனால் ஒருவரின் அணைப்பின்றி மற்றவரால் உறங்க இயலாத பிணைப்பு ஏற்பட்டிருந்தது.
முதல் கூடலில் நேர்ந்த ஆச்சர்யங்கள், அதீத உணர்வுகளை சமன்படுத்தவே பிரகிருதிக்கு ஒரு வார கால அவகாசம் தேவையாக இருந்தது.
இருவருமே ஒருவரை ஒருவர் உறவிற்குள் வலுக்கட்டாயமாகத் திணிப்பதில்லை. அப்படியே ஆசை தோன்றினாலும் ஓர் பார்வையில் தங்களது மனதுணர்வைக் கடத்தி அதனைப் புரிந்து கொள்ளும் அளவு இருவருமே கற்று வைத்திருந்தனர்.
இப்போது மருத்துவரிடமும் ஆலோசனை பெற்று கொண்டு, குழந்தை விஷயத்தில் வெகு கவனமாக இருந்தனர். சற்று பிசிறினாலும் இருவரின் மனநிலையும் பாதிக்கப்படும் அவலம். அதன்பிறகு இருவரின் பெற்றோரும் அங்கு வரவே இல்லை. அலைபேசி அழைப்புகளும் இல்லை. பிரகாசம் மட்டும் மகனிடம் பேசிக்கொள்வார்.
“நீங்க உங்க வாழ்க்கையை வாழுங்க. உனக்குத் தேவைப்படுறப்ப உன் அம்மாவும் நானும் வருமாவோம்…” என்றார்.
லேகாவிற்கு இந்த நாள்கள் மனமாற்றத்தைக் கொடுத்திருந்தது. ஆகினும் இருவரையும் எதிர்கொள்ள சிறு தயக்கம் இருந்தது. அவர்களுக்கான நிமிடங்களில் இடைப்புகுற வேண்டாமென்ற கணவனின் ஆலோசனைப் படி அமைதியாக இருந்து கொண்டார்.
பிள்ளைப்பேறுக்கு பின், அவர்களைத் தாங்க அவரும் மனரீதியாகத் தயாராகி இருந்தார்.
இதற்கிடையில் ஊட்டியில் தேனிலவுக்கு ஏற்பாடாகினர்.
சொன்னது போன்றே கோவையில் சனிக்கிழமை ரிசப்ஷனை முடித்து விட்டு, மர வீட்டிற்குச் சென்று விட்டனர்.
என்ன தான் ஷக்தி கூறி இருந்தாலும், மர வீட்டில் தங்குவது எப்படி இருக்குமோ என்ற அச்சம் இருந்தது அவளுக்கு.
ஆனால் பயப்படவே தேவையில்லை என்பது போல, அவன் பார்த்து வைத்திருந்த ட்ரீஹௌஸ் ஸ்டே பிரமாண்டமும் அமைதியும் கலந்து மரங்களின் நடுவில் அத்தனை அழகாய் காட்சியளித்தது.
அவள் ஏறுவதற்கு ஏதுவாய் படிகளும் எளிதாக இருக்க, மர வீடென்றே சொல்ல இயலாத அளவிற்கு அந்த மிகப்பெரிய அறை நவீனமாகக் காட்சியளித்தது.
பறவைகளின் சத்தமும், மரங்களைத் தாண்டி ஊடுருவ முயலும் சூரியனின் முயற்சியும், குளிர் வெப்ப நிலையும் அவள் மனதினுள் அமைதியைக் கொடுத்தது.
“அழகா இருக்கு மகிழ். எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு!” என்றவள், மற்றவர்களின் முன் நேராய் நின்று நடிப்பது போல அல்லாமல் வளைந்து நின்று கையை ஆட்டிக் கொண்டே இருந்தாள்.
கூடவே அவளும் ஓரிடத்தில் நில்லாது நடந்துகொண்டே தன்னை தானே உலுக்கிக்கொண்டே அந்த சூழ்நிலையை ரசிக்க, அவன் அவளை ரசித்தான்.
வார இறுதி நாளில் நிச்சயம் அவள் அவளாக இருத்தல் வேண்டுமென ஷக்தி உத்தரவிட்டு இருந்தான். அந்த ஒரு நாள் மட்டும் அவளாக இருப்பவள் மறுநாளில் இருந்தே, உடுத்தும் உடையில் இருந்து நடை பாவனை அனைத்திலும் கனக்கச்சிதமாக நடிப்பை மெருகேற்றிக்கொள்வாள்.
அவளது உண்மைத் தன்மையை மட்டுமே பார்க்கப் பிடித்திருந்த ஷக்திக்கு தனியே அழைத்து வந்தால் தொடர்ந்து ஒரு சில நாள்கள் மாஸ்க்கிற்கு விடுதலை தருவாள் என சிந்தித்து இங்கு அழைத்து வந்திருந்தான்.
அவனது முயற்சி வீண்போகவில்லை. அவளது ரசிப்பிற்கும் அவனது ரசிப்பிற்கும் பஞ்சமின்றி நேரம் கரைய, இரவு உணவை முடித்ததும், “ஏதோ போட்டோ கொலாஜ் இருக்குன்னு சொன்னீங்க…” என்றாள் ஆர்வமாக.
“ம்ம்… எஸ். ரீடிங் முடிச்சுட்டு வரட்டா…?”
“ஓகே… வாங்க” என கட்டிலில் அமர்ந்து கொண்டாள். அவனும் அவளருகில் புத்தகத்தில் மூழ்கிட, ஷக்தியில் தோளில் சாய்ந்து கொண்டவள், அந்த நொடியை மனதினுள் சேமித்து வைத்துக்கொண்டாள்.
பின், “ரெடியா?” அவன் கேட்க,
“ம்ம்…” வேகமாக தலையாட்டினாள் அவள்.
அருகிலிருந்த மேஜையில் இருந்து டிவி ரிமோட்டை எடுத்தவன், அதனை ஆன் செய்தான்.
“என்ன எல்லாம் ரெடி பண்ணிருந்தீங்களா மேனேஜ்மெண்ட்ல சொல்லி?” பிரகிருதி வியப்பாகக் கேட்க, “மேனேஜ்மெண்ட்டே நம்ம தான!” என மீசையை நீவி விட்டான்.
“புரியல!”
“இந்த ட்ரீ ஹவுஸ் ஸ்பெஷலி மேட் ஃபார் யூ. உனக்காக நான் உருவாக்குனது. இங்க எப்ப தோணுதோ நம்ம மட்டும் தான் வந்து ஸ்டே பண்ண போறோம். இதை மெயின்டெய்ன் பண்ண ஆளுங்களை போட்டுட்டேன்” என இயல்பாக அவன் கூறியதில் திகைத்துப் போனாள்.
“எனக்காகவா?”
“ம்ம்… வேற இடம் எப்படி இருக்குமோ தெரியாதுல. உன்னை கம்பர்ட்டா வச்சுக்க தான் இப்படி ஒரு இடத்தை நானே வாங்கிட்டேன்” எனக் கண் சிமிட்டிட, அதிலேயே பேச்சற்று உறைந்து போனவளுக்கு,
சுவரில் பாதியை களவாடிய மிகப்பெரிய டிவியில் பிரகிருதியின் உருவம் பளிச்சென காட்சியளிக்க அதில் அசைவின்றி சிலையாகி விட்டாள்.
வரிசையாக அவளது புகைப்படம் ஒவ்வொன்றும் அத்தனை அழகாய் ஒளிர, பின்னணி இசையில் வந்த வரிகள் அவளை உருக்கியது.
ஏராளம் ஆசை
என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச
பல ஜென்மம் வேண்டும்
ஓ ஏழேழு ஜென்மம்
ஒன்றாக சோ்ந்து
உன்னோடு இன்றே
நான் வாழ வேண்டும்
காலம் முடியலாம்
நம் காதல் முடியுமா
நீ பாா்க்க பாா்க்க
காதல் கூடுதே
ஓ… ஓ……. ஓ…… ஓ…
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
உன் கைகள்
கோா்க்கும் ஓா் நொடி
என் கண்கள்
ஓரம் நீா்த்துளி
உன் மாா்பில்
சாய்ந்து
சாகத்தோணுதே…
தனது மன உணர்வுகளை துல்லியமாய் பாடல் வரியின் மூலம் தெரிவித்து இருந்தவன், தேர்ந்தெடுத்த புகைப்படங்கள் எல்லாம் அவன் பார்வைக்கு அழகாய் தெரிந்த தருணங்களை மட்டுமே.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தொளதொள உடை அணிந்து, முடியைக் கலைத்து விட்டு, முகத்தை அஷ்டகோணலாக வைத்து பேசும் அவள் அழகை மட்டுமே அவளே அறியாது புகைப்படம் எடுத்திருக்கிறான்.
உண்ணும் போதும் அங்கும் இங்கும் ஆடிக்கொண்டே உண்பதையும், பேசும்போது கையை உதறி உதறி பேசும் அழகையும், விழிகளை அகல விரித்து தேவையற்று என்னன்னவோ பேசும் அவளது பேச்சுக்களையும் வீடியோவாகவும் பதிந்திருந்தான். அதனையும் நேர்த்தியாக எடிட் செய்து, புகைப்படங்களுக்கு இடையில் இணைத்திருக்க, உயிரில் ஊடுருவி கைகள் நடுங்க கண்ணீர் நிறைய வைத்த ஆடவனின் காதலில் சிதைந்து போனாள் பிரகிருதி.
இறுதியில் அவன் கைப்பட எழுதிய கவிதையும் திரையில் தோன்றியது.
உன் மெய்யில்
மெய் மறக்க
உன் பொய்யில்
உன்னைத் தேடியே அலைகிறேன் உயிரே!
மெய்யன்பு கிடைத்தபோதும்
மெய்யான தோரணைகளைக் கண்டே
உன் மெய் மீது மோகம் கொள்கிறேன்
என்றும் என் மெய்யானவளே!
இதயம் படபடவென அடித்தது அவளுக்கு. இனிய அதிர்ச்சி என்னவென்று ஏற்கனவே கூறி விட்டான் தான். ஆனால் இந்த அன்பின் பாரம் தாள இயலவில்லை அவளுக்கு. அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளை ஒட்டுமொத்தமாக உடைத்தது.
“இந்த போட்டோஸ் எல்லாம் அழகாவா இருக்கு?” உதடு பிதுக்கி கேட்டவளுக்கு கண்ணீர் நின்றபாடில்லை.
“அழகா இருக்கே ருதிடா. பாரு… இன்னைக்கு முழுக்க பார்த்துட்டே இருக்கலாம். அவ்ளோ கியூட்!” என ஷக்தி ரசித்துக் கூறிட, கேவல் வெடித்தது.
அவன் நெஞ்சில் புதைந்து அழுது தீர்த்து விட்டாள்.
அதில் பயந்து போன ஷக்தி மகிழவன், “ருதி… ருதிடா… நான் ஹர்ட் பண்ணிட்டேனா?” எனப் புருவ முடிச்சுடன் வினவ,
சட்டென அமைதியாகி விட்டவனை உணர்ந்து, வேகமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்ட பிரகிருதி, “நான் அழுகல மகிழ். எனக்கு இந்த ரூம், போட்டோ கொலாஜ் எல்லாம் ரொம்ப பிடிச்சுருக்கு. ஐ லவ் யூ சோ மச்” என்று அவன் முகம் முழுதும் முத்தமிட்டாள்.
அம்முத்ததின் வெளிப்பாடாய் அவளது தூண்டல்கள் புரிய, தானும் அவளை முத்தமிட்டவன், “என் சர்ப்ரைஸ் ஹர்ட் பண்ணலை தான?” எனக் கேட்டுக்கொண்டதில், “ம்ம்ஹும்…” என்றபடி அவனது கழுத்தை வளைத்து கட்டிக்கொண்டாள்.
அதில் அவன் இதழ்களிலும் புன்னகை உதயமாக, “சரி அப்போ ஹனிமூன் செலெப்ரெட் பண்ணிடலாமா? அன்னைக்கு நீ ரெட் ஆனதுக்கு நியாயம் செய்யணும்ல ருதிடா…” அவளைப் பேச்சில் மட்டுமின்றி கரங்களின் எல்லை மீறலிலும் செங்கொழுந்தாக்கினான் ஷக்தி மகிழவன்.
இருவரின் உயிரும் ஒன்றொடுன்று கரைந்திட, மூச்சுக்காற்றின் வெப்பத்தில் உருகி மருகி நிறைந்தவர்களின் உறவாடுதல்களை கண்ணாடி ஜன்னல் வழியே ஊடுருவி உருக்கம் கொண்டது வெண்ணிலவு.