❤️🔥 என் திமிர் தலை சாயா…!!❤️🔥
திமிர் 04
நேத்ரா கூறிய விடயத்தைக் கேட்டு ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. ஆம்! வீட்டிற்கு வந்தவுடன் சாணக்கியனை திருமணம் செய்யவிருக்கும் விடயத்தைக் கூறி விட்டாள்.
“என்ன நெனச்சிட்டு இருக்க நேத்ரா? யாரோ ஒரு பையன நீ எப்படி கட்டிக்கலாம்? அது யாரு குடும்பம் எப்படின்னு ஒன்னும் தெரியாது” தாரதி முதலில் மௌனத்திரையை தகர்த்தெறிந்தார்.
“யார்னே தெரியாத பையனா? எந்த அர்த்தத்தில் சொல்றீங்க அத்த?” என்று கேட்டாள்.
“முன்ன பின்ன அறியாதவன கல்யாணம் பண்ணிக்கலாமா? விஷால் உனக்கு தெரிஞ்ச பையன்” என்றவரைப் பார்த்து தலையசைத்தவள், “எல்லாரும் பழகிப் பாத்தா கல்யாணம் பண்ணுறாங்க? இப்ப கூட அர்ரேன்ஜ் மேரேஜ் நடக்குது. அவங்களுக்கும் முன்ன பின்ன தெரியாது. அவங்க தெரிஞ்சுக்கிட்டு புரிஞ்சுக்கிட்டு ஒன்னா வாழலயா? லாஜிக்கா பேசுங்க” இழுத்துப் பிடித்த பொறுமையோடு பேசிக் கொண்டிருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
“உனக்கு அந்த பையன புடிச்சிருக்கா நேத்ரா?” தேவி மகளை ஆழ்ந்து பார்த்தவாறு வினவினார்.
“சாணக்கியன கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் முடிவெடுத்துட்டேன்மா” அவ்வளவு தான் பதிலாக வந்தது.
அப்பதிலில் இருந்து தாயானவளுக்குப் புரிந்தது, அவரது கேள்விக்கான பதில் இல்லை என்பது தான் என்று.
தாரதியின் பார்வை நேசனைத் தொட்டது. அவர் எதுவும் பேசாமல் நின்றிருக்க, “என்னண்ணா இது? விஷாலுக்கு நேத்ராவ கட்டித் தர்றதா சொன்னீங்க. இப்போ அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” என்று கேட்டார்.
“இதோ பார் தாரு. நீ கேட்டப்போ நான் சொன்னேன் தான். அதுக்காக விருப்பம் இல்லாம கட்டி வைக்க முடியுமா? அப்படி நாம ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி வெக்க முடியாது. அப்படிப் பண்ணுறதால யாருக்குமே சந்தோஷம் இல்லாம போயிடும்” மென்மையாக எடுத்துச் சொன்னார்.
“மாமா சொல்லுறதும் உண்ம தான் தாரு. நேத்ரா வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்துட்டா. அப்படி இருக்கும் போது விருப்பம் இல்லாத கல்யாணத்த செஞ்சாலும் அதால அவளுக்கும் சந்தோஷம் இல்ல, நம்ம பையனுக்கும் இல்ல” மனைவியைப் பார்த்துக் கூறினார் சுதாகர்.
அங்கு நின்றிருந்த விஷால் அலைபேசியில் மூழ்கியிருக்க, “டேய்! உன்ன பத்தி தான் டாபிக் போகுது. நீ என்னன்னா கேம் விளையாடுற” அவன் தலையில் தட்டினான் விக்ரம்.
“யாரு என்ன ஆர்கியூ பண்ணாலும் அந்த நண்டு சொல்லுறது தான் நடக்கும். சோ நான் எதுக்கு அதைப் பாத்து டைம் வேஸ்ட் பண்ணனும்?” என்று சிரித்து விட்டு மீண்டும் விளையாடத் துவங்கினான்.
“நேத்ரா..! உன்ன நண்டுன்னு சொல்லுறான்” விக்ரம் சத்தமாக சொல்ல, “தெய்வமே! மாட்டி விட்றாத” அலறலுடன் அண்ணனின் வாயைப் பொத்தினான்.
“உங்க பொண்ணுக்காக யோசிக்கிறது சரி. ஆனா வாக்கு மீறக் கூடாது அண்ணா” தாரதி வாக்கு என்றதும் நேசனின் முகம் மாறியது.
“விஷால் இங்க வா” தங்கை மகனை அழைத்தார் நேசன்.
“சொல்லுங்க மாமா”
“உன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாம சொல்லனும். நேத்ராவ கல்யாணம் பண்ணிக்க விரும்புறியா?”
அவன் பார்வை நேத்ராவை ஒரு கணம் தொட்டு மீண்டது. அவனைத் தான் அவளும் பார்த்திருந்தாள். அவன் ஆம் என்றால் தந்தை தாரதிக்கு சார்பாக முடிவெடுக்க எண்ணுவார் என்பதுவும் தெரிந்தது.
“இல்ல மாமா” மறுப்பாகத் தலையசைத்தான்.
“நீ அவளுக்காக யோசிக்கிற விஷால். உண்மைய சொல்லு” என்று தாரதி கூற, “உண்மையா தான் சொல்லுறேன். எனக்கு நேத்ராவ கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல. அவளுக்கும் எனக்கும் செட்டாகாது. அவ டேஸ்ட் வேற என் டேஸ்ட் வேற” என்றான் மைந்தன்.
“என்னடா பெரிய டேஸ்ட்? அதை பாத்தா எல்லாரும் கல்யாணம் பண்ணுறாங்க?” தாரதியால் தன் பல நாள் கனவை சட்டென்று விட்டு விட முடியவில்லை.
“அது ரொம்ப முக்கியம்மா. உதாரணமா ஒன்னு சொல்றேன். என் ஃப்ரெண்டுக்கு கல்யாணம்னு வரும் போது நான் அதுக்கு என் வைஃப் கூட போகனும்னு நெனப்பேன். பட் நேத்ரா வர மாட்டா. அவ ஆஃபீஸ், பிசினஸ்னு இருக்கிற ஆள். இப்படி இருக்கும் போது நெறய முரண்பாடுகள் வரும். இது ஜஸ்ட் ஒரு விஷயம். இதே மாதிரி எத்தனையோ இருக்கு” என்று தாயிடம் சொல்ல, அவர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
“சாரி மாமா. அம்மாவுக்கு புரிய வைக்க தான் சொன்னேன். மத்தபடி நேத்ராவ நான் தப்பா எதுவும் சொல்லல. அப்படி நெனச்சுக்காதீங்க. நேத்ரா அய்ம் சாரி” என்று நேசன் மற்றும் நேத்ராவிடம் மன்னிப்பும் இறைஞ்சினான்.
“நோ தாங்க்ஸ்! நீ என்னை சரியா புரிஞ்சு வெச்சிருக்க. அப்படி வாழுறது ரொம்ப கஷ்டம். அந்த மாதிரி ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ், சென்டிமென்ட்னு வாழ என்னால முடியாது. எனக்கு அது செட்டாகாது. நெறய ப்ராப்ளம்ஸ், ஆர்கியூமண்ட்ஸ் வரும். சோ நீ சொல்ற எதுவும் தப்பில்ல” என்றவளுக்கு விஷால் சொன்னது ஒரு பொருட்டே இல்லை.
ஆனால் நேசன் மற்றும் தேவியை அவ்வார்த்தைகள் மிகவும் தாக்கின. தம் மகள் அன்புக்கும் உறவுக்கும் மதிப்பளிக்காமல் இருக்கிறாளே. அவளின் எதிர்காலம் எவ்வாறிருக்கும் என்று எண்ணமே அச்சத்தைக் கொடுத்தது.
“சாணக்கியன் அவங்க வீட்ல பேசிடுவார். உங்க கிட்ட நான் பேசிட்டேன். கூடிய சீக்கிரமே அவங்க இங்க வருவாங்க. வன் மன்த்ல கல்யாணம்” ஏதோ வெளிநாட்டுச் செய்தி போல் சொல்லி விட்டுச் சென்ற நேத்ராவைக் கண்டு வீட்டினரால் பெருமூச்செறியத் தான் முடிந்தது.
……………….
சிறுவர் பூங்காவுக்கு தன் தோழியுடன் வருகை தந்திருந்தாள் தாரா.
“அடியே! இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த? சைட் அடிக்கனும்னா பீச், ரெஸ்டாரன்ட்னு போகனும்” என்று தாரா சொல்ல, “இப்போ சில்ட்ரன் பார்க்கு கூட நெறய பசங்க வருவாங்க” கண்களால் அங்குமிங்கும் துலாவினாள் நித்யா.
“இதனால தான்டி சின்னப் பசங்களும் கெட்டுப் போறாங்க” என்று கூற, “இந்தக் காலத்துல நம்மள விட சின்னதுங்க உசார் தெரியுமா? எங்க அடுத்த வீட்டுல பத்து வயசுப் பையன் இருக்கான். அவனுக்கே லவ்வர் இருக்குன்னு என் கிட்ட ரோஜாப்பூ பறிச்சு கேக்கிறான்” உதடு பிதுக்கினாள் தோழி.
“காலக் கொடுமை. அப்படின்னா அவங்கள விட பச்சப் புள்ளையா இருக்கிற நான் எல்லாம் ஜெம் தெரியுமா?” பெருமையுடன் சொன்னாள் தாரா.
“அது சரி. நானாவது பசங்கள சைட் அடிக்கிறேன். உன்ன பசங்க சைட் அடிக்கிறது தெரிஞ்சும் அதை கண்டுக்காத மாதிரி மெயின்டெய்ன் பண்ணுற பாத்தியா நீ ஜெம் தான்”
“அதுக்கெல்லாம் ஒரு திறமை வேணும் டி” என்றவளைப் பார்த்து, “ஓவரா பண்ணாத. கூடிய சீக்கிரம் நீயும் யாரையாவது சைட் அடிக்க தான் போற” என்றாள் நித்யா.
“இல்லன்னு சொல்ல மாட்டேன். ஆனா நான் நெனக்கிற மாதிரி ஒருத்தன் அமையனும். அப்போ என் மனசு என்னை அறியாமலே சைட் அடிக்கத் தூண்டும்” கண் சிமிட்டிச் சொன்னாள்.
“பார்றா. நான் கூட நீ அர்ரேன்ஜ் மேரேஜ் தான் வேணும்னு பேசுவியோனு நெனச்சேன். லவ் பண்ணுற ஆச இருக்கு தானே?”
“லவ் பண்ண ஆச இல்லாம இருக்குமா? ஆனா அதுக்கேத்த ஆள் செட்டாகனும். இல்லன்னா அர்ரேன்ஜ் மேரேஜ் தான்” என்றவளைப் பார்த்துச் சிரித்தவள்,
“என் பெஸ்ட் ஃப்ரெண்ட் வந்திருக்கானாம். போய் பாத்துட்டு வர்றேன். நீ இரு” என்று செல்ல ஆயத்தமானாள்.
“அப்படி சும்மா போக முடியாது. என்னைக் கூட்டிட்டு வந்தல்ல. அதுக்காக ஒரு ஊஞ்சல் புடிச்சு குடு. ஆடிட்டே வெயிட் பண்ணுறேன்”
“இது சின்னப் பசங்க விளையாடுறது டி. யாராவது கண்டா திட்டுவாங்க”
“சின்னப் பசங்களுக்கு மட்டும் தான் விளையாட ஆச இருக்குமா? எனக்கும் வேணும். ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கெஞ்ச, மரத்திற்குப் பின்னால் மறைந்தவாறு யாரும் காணாத இடத்தில் இருக்கும் ஊஞ்சலைப் பிடித்துக் கொடுத்தாள்.
“இங்கயே இரு. எங்கேயும் போயிடாத சரியா? இதயும் வெச்சுக்கோ” லாலிபாப் ஒன்றைக் கொடுத்து விட்டுச் செல்ல,
“அய்ய்! தாங்க் யூ டி” அவளின் கன்னம் பிடித்துக் கொஞ்சி விட்டு ஊஞ்சலில் ஆட ஆரம்பித்தாள்.
என்ன தான் வயது சென்றாலும் சிறு பிள்ளைத்தனமான ஆசைகள் நம்மை விட்டுச் செல்லாது அல்லவா? தாராவுக்கும் அப்படித் தான். ஊஞ்சல் என்றால் அவ்வளவு பிரியம் அவளுக்கு. இப்படியான தனது ஆசைகளை நிறைவேற்றுகையில் வேறெதையும் கண்டு கொள்ள மாட்டாள்.
முகம் முழுக்க மகிழ்வை அப்பிக் கொண்டு சிறுமியாக மாறி விளையாடலானாள் வஞ்சி.
“எக்ஸ்கியூஸ்மீ” பின்னால் இருந்து யாரோ பேசுவது போல் இருக்க, “வேற வார்த்தயே தெரியாது. எல்லாத்துக்கும் நல்ல எக்ஸ்கியூஸ்மீ ஒன்னு இருக்கு” என்று இதழ் சுளித்தவள், “ஹேய் லாலிபாப்” எனும் குரலில் வெடுக்கென்று திரும்பினாள்.
ஒரேயடியாக அவள் திரும்பியதில் வேகமாக ஆடிக் கொண்டிருந்த ஊஞ்சல் சட்டென தடுமாற, “பாத்து பாத்து” இரு பக்க கைப்பிடிகளையும் பற்றிக் கொண்டான் ஒரு ஆடவன்.
தான் விழப் போனதையோ அவன் பிடித்ததையோ கூட உணராமல் “என் லாலிபாப் எங்க? நீ என்னை அப்படி கூப்பிட்டியே? அப்படின்னா உன் கிட்ட தான் இருக்கா?” என்று கேட்டாள் தாரா.
“ஆமா” என்று தலையசைக்க, “குடு” கையை நீட்டினாள் அவள்.
தன் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு “லாலிபாப் சாப்பிடுறது ஊஞ்சல் ஆடுறதுல்லாம் ஓகே. பட் கொஞ்சம் கவனமாவும் இரு. விளையாட்டுத்தனமும் கொஞ்சம் லிமிட்டோட இருக்கனும்” என அறிவுரை கூறத் துவங்கினான்.
“அத எடுத்தா என் கிட்ட தந்துட்டு போ. அத விட்டுட்டு ஏன் இப்படி அட்வைஸ் பண்ணுற?”
“உனக்கு இது வேணுமா இல்லயா?”
“வேணும்” தலையை வேகமாக ஆட்டினாள்.
“அப்படின்னா நான் சொல்லுறத கேக்கனும்” அவன் நிபந்தனை விதிக்க, வேறு வழியின்றி தலையசைத்தாள்.
“அஞ்சு நிமிஷம் என்னை சைட் அடிச்சிட்டு இரு” என்று சொல்ல, “சைட்டடிக்கவா?” வாயைப் பிளந்தாள் தாரா.
“எதுக்கு இவ்ளோ ஷாக்? தம் அடிக்கச் சொல்லல. ஜஸ்ட் சைட் அடி. அது போதும்”
“என்னை என்னன்னு நெனச்சிட்டு இருக்க?”
“நீ லாலிபாப் சாப்பிடுற சின்னப் பொண்ணுனு எனக்குத் தெரியும். ஆனா அங்கே இருக்கிற என் ஃப்ரெண்ட்ஸ்கு தெரியாது இல்லயா? ஒரு பொண்ணு கூட பேசி என்னை சைட் அடிக்க வெக்கிறேன்னு பெட் கட்டி இருக்கேன். சோ ப்ளீஸ்” தூரத்தில் இருந்த ஆடவர் கூட்டத்தைக் கண்களால் காட்டினான்.
“உன்னை எல்லாம் நம்ப முடியாது. இப்படி தான் ஏதாவது கோல்மால் பண்ணுவீங்க. அப்பறம் தெரியாம ஃபோட்டோ எடுத்து சோஷியல் மீடியால போடுவீங்க. உன் விளையாட்டுக்கு நான் வரல. எனக்கு அந்த லாலிபாப்பும் வேணாம். ஒன்னும் வேணாம்” அங்கிருந்து விறு விறுவென்று சென்றாள் சாணக்கியனின் தங்கை.
அவன் விழிகளில் வெறுமை குடிகொண்டது. செல்லும் அப்பெண்ணையே பொலிவிழந்த முகத்தோடு பார்த்தான் காளை.
சாயும்……!!
ஷம்லா பஸ்லி
2025-10-13