கழுத்து வரைக்கும் நீண்டு வளர்ந்திருந்த நரைத்த முடியும், முகத்தை முழுவதுமாக மூடியிருந்த தாடி மீசையுமென எழுபதுகளின் ஆரம்பத்தில் கால் வைத்திருந்த முதியவர் ஒருவர், யுகேந்த்ராவின் வீட்டு வாசலில் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
“கிராண்ட்ப்பா..” என்ற அழைப்புடன் மாடியிலிருந்து நான்கு படிகளை ஒரே எட்டில் தாண்டியவாறு கீழிறங்கி ஓடோடி வந்த யுகன்,
“வாட் அ சர்ப்பிறைஸ்!..” என அரிதான ஒரு புன்னகையுடன் குதூகலத்துடன் கூறியபடி அவரை இறுக அணைத்து விடுவித்தான். நெஞ்சில் சொல்லொணா நிம்மதி.
“சொல்லி இருந்தா நானே வந்திருப்பேனே! உங்களுக்கு எதுக்கு வீண் அலைச்சல்? ரொம்ப டயர்ட் ஆகிட்டிங்களா என்ன..” என்று அக்கறையுடன் கேட்டவாறு அவரின் கரம் பற்றி வீட்டினுள் அழைத்து வந்தவன்,
“என் பேரனைப் பார்க்க வந்தேன். இதை அலைச்சல்னு சொல்லாதடா..” என்ற உரிமையான அதட்டலுடன் தன் தோளில் வலிக்காதவாறு அடி வைத்தவரை சோபாவில் அமர வைத்தான்.
“பேரனை நீங்க பார்க்க வந்தா என்ன.. பேரன் உங்களைப் பார்க்க வந்தா தான் என்ன கிராண்ட்பா? ரெண்டும் ஒன்னு தானே?” என்று கேட்டுக் கொண்டே அவரது காலடியில் சம்மணமிட்டு அமர்ந்தவன்,
“யுகேந்த்ரா!” என அதட்டியவரைக் கனத்த மனத்துடன் ஏறிட்டான்.
இந்த அழைப்பு.. ஆமாம், ருத்ரவமூர்த்தி அவனை அழைக்கும் அதே பிரத்தியேகமான அழைப்பு! தந்தையைத் தவிர, யுகனை ‘யுகேந்த்ரா..’ என உரிமையும், கண்டிப்புமாய் அன்புருக அழைப்பது இவர் மட்டுமே!
ஒவ்வொரு முறை செவியேற்கும் போதும் உள்ளுக்குள் உடைந்து போவான் யுகன். தந்தையின் நினைவில் சட்டென கண்கள் பணித்து, நெஞ்சம் கனமேறி விடும்.
இப்போதும் கூட இந்த அழைப்பை செவியுறுவதற்காகத் தான், அவரின் காலடியில் ஏக்கம் சொட்டும் விழிகளுடன் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டானென்பது அவனின் உள்மனம் மட்டுமே அறிந்த ரகசியம்!
ஆறுதலாக அவனது கன்னம் தட்டியவர், “ஏன்டா கண்ணா, இத்தின நாளா என்னைப் பார்க்க வரவே இல்ல? வேலையோ..” என்று வினவ,
இப்போதைக்கு அவன் தன் இயல்பு மாறாமல் சுயத்தோடு இருப்பது அவர் முன்னிலையில் மாத்திரமே! ஆறுதல் வேண்டுமென மனம் அடம்பிடிக்கும் நேரங்களிலெல்லாம் அவரைக் காணச் செல்வான். அவனுக்கு துணையென, நெருங்கிய உறவென இருப்பது அவர் தான்! பெயர், லிங்கேஸ்வரன்.
“நேத்து தான் ஹைதராபாத்ல இருந்து வந்தேன். உங்களைப் பார்க்க வரணும்னு நினைச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டிங்க கிராண்ட்பா..” என்றவனின் தலை, தொடை மீதிருந்த அவரது சுருக்கம் விழுந்திருந்த கையில் மெல்ல சாய்ந்தது.
மற்றொரு கையால் அவனது தலையை மிகுந்த ஆதூரத்துடன் வருடிக் கொடுத்தார் லிங்கம்.
“மனசு நிம்மதி இல்லாம தவிக்குது!” சிறு குரலில் வாய்க்குள் முனகினான்.
“எதுனா பிரச்சனையா யுகேந்த்ரா?”
அன்னிச்சையாய் அவனது தலை ஆமென்பதாய் அசைந்தது.
“நிஜத்தை ஏத்துக்க முடியாம, கடந்து வந்ததை மறக்க முடியாம இரு தலைக் கொள்ளி எறும்பா திணறி நிற்கிறேனே கிராண்ட்பா. இதைத் தவிர வேறெந்த கஷ்டம் வந்தாலும் ஈஸியா கடந்து வந்திருப்பேன்..”
“எல்லாம் சரியாகிடும்..” என்றும் ஓதும் அதே தாரக மந்திரம்! பெரியவரின் மனம் குற்றவுணர்ச்சியில் மௌனமாய் கண்ணீர் வடித்தது.
“அவ இல்லாத ஒரு வாழ்க்கை.. சூ.. சூனியமா இருக்கு கிராண்ட்பா!” குரல் பாதியிலே உடைந்தது. லிங்கத்தின் கரம் ஒரு நிமிட வேலை நிறுத்தத்தின் பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது.
“நோ கிராண்ட்பா, நோ! நான் மறக்கல. மறக்கவும் போறதுல்ல..” என அவசரமாக மறுத்தவன் மூச்சை ஆழமாக இழுத்து வெளியேற்றி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
லிங்கந்திடமிருந்து பெருமூச்சொன்று வெளிப்பட்டது. ‘சிற்சில சமயங்களில் இந்த சூழ்நிலைகள் கூட நம்மை கைதியாக்கிக் கொள்கின்றனவே!..’ என அவரது மனம் ஆழியாய் ஆர்ப்பரித்தது.
யுகனைக் காணும் நேரங்களில், அவனின் முடிவுறாத புலம்பல்களைக் காது கொடுத்துக் கேட்க நேரிடும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இவ்வாறு தான் அவரின் நெஞ்சம் துடிதுடிக்கும். அதற்கென்று அவராலும் என்ன தான் செய்துவிட முடியுமாம்? ஒரு சில காரணங்கள் அல்லவா அவரது வாயை பூட்டிட்டாற்போல் மூடச் செய்திருக்கின்றன?
வீட்டுக்கு வெளியே கலவரச் சத்தம் காதை எட்டியது. கண்களை இறுக மூடித் திறந்தவனுக்கு வெளியே என்ன ஆர்ப்பாட்டமாக இருக்குமென்பதை ஊகிக்க முடியாமல் போனால் தான் அதிசயம்.
“என் குடும்பத்துக்கு மூணு வேளை சாப்பாடு போடறதே இந்த தொழிலை செஞ்சி தானம்மா, அதையும் கெடுத்து விட்டுறாத! நில்லுடா பாப்பா..” புது செக்யூரிட்டியில் கெஞ்சல் குரலைத் தாண்டி,
“அட! என்ன பையா.. பாப்பா, பாப்பானு கூப்பிடறீங்களே தவிர, அவ வாழ்க்கை கரை சேர்றதுக்கு உதவி செய்ய முன் வர மாட்டேங்குறிங்களே! திஸ் ஈஸ் நோட் ஃபேர்..” என நியாயதர்மம் பேசிய ஒரு கிள்ளைக் குரலொன்று கீச்சிட்டது.
“யுகேந்த்ரா!” லிங்கத்தின் புருவங்கள் முடிச்சிட்டுக் கொண்டன.
“அவ தான்..” என நெடுமூச்சோடு கூறியவன் அவரின் பார்வையை எதிர்கொள்ளத் தயங்கி,
“எனக்கு இதுக்கு மேல என்ன பண்ணுறதுனு தெரியல கிராண்ட்பா. அவளை வருத்துற ஒவ்..” மேற்கொண்டு தொடர முன்பே,
“யுகன்ன்ன்..” என்ற முழக்கத்துடன் வீட்டினுள் நுழைந்தாள் மான்ஷி.
யுகனின் பேச்சு தடைப்பட்டு, கண்கள் அவளை முறைத்தன.
“பாரு யுகன்! இந்த ஆளு பின்னோடே விரட்டிட்டு வர்றாரு. இந்தளவு ஸ்ட்ரிக்ட் வேணாம். சீக்கிரமா செக்யூரிட்டி மாத்துடா..” என சிணுங்கினாள் மான்ஷி. இத்தனைக்கும் இந்த செக்யூரிட்டி வேலைக்கு சேர்க்கப்பட்டு முழுதாக ஒருநாள் கழிந்திருக்கவில்லை.
அவள் தன்னைக் கேலி செய்வதைத் தெளிவுறப் புரிந்து கொண்டவனது முறைப்பின் உஷ்ணம் கூடிப் போனது.
“ரோமியோவா இருந்தவன் இப்போ கடுவனா மாறிப் போய்ட்டான். எப்போ பாரு முறைச்சிட்டே திரியிறான்?” என முணுமுணுத்தவள், அவனின் முறைப்பைக் கண்டு கொள்ளாமல் கையோடு கொண்டு வந்த சூட்கேஸை சுவரோடு ஒட்டினாற்போல் வைத்து வைத்துவிட்டு எட்டிப் பார்த்தாள். வாசல் வரை வந்த செக்யூரிட்டியைக் காணவில்லை.
“போய்ட்டாரு..” என அசட்டுச் சிரிப்புடன் சொல்லியபடி திரும்பியவள் அப்போது தான் புதிதாய் ஒருவர் கூடத்தில் இருப்பதைக் கண்ணுற்றாள்.
“ஹாய் பெரியவரே! யுகனுக்கு வேண்டப்பட்டவங்களா என்ன..” என இயல்பாய் கேட்டவளை நோக்கி, கட்டுப்பாடுகளை இழந்து சட்டென்று நீண்டது லிங்கத்தின் கரம்.
முன்பெல்லாம் தன் காலைக் கட்டிக்கொண்டு திரிந்த குட்டி மான்ஷியின் வளர்ச்சி அவரை மலைக்க வைத்தது. அவளின் வருகை கண்டு முதலில் யுகனை அதட்டி முறைத்த அவரின் பார்வை, தற்போது தன் கைக்குள் வளர்ந்த செல்லப் பிள்ளையைக் கண்ணார ரசித்தது.
‘ஆனா என்னைக் கொஞ்சம் கூடவா இவளுக்கு அடையாளம் தெரியல?’ – நெஞ்சில் சிறிதாய் வருத்தம் வேறு!
யுகன் தொண்டையை செருமினான்.
சட்டென்று இயல்புக்கு மீண்டவர், “கெளம்புறேன்..” என்ற ஒற்றை வார்த்தையோடு அங்கிருந்து நகரப் பார்க்க,
‘கிராண்ட்பா..’ என அழைக்க வாய் திறந்தவன் எதையோ நினைவு கூர்ந்தவனாய், கண்களை மூடித் திறந்தார்.
“ஓ, டோனேஷன் எதுனா வந்திங்களா? நீங்க பயப்படாதிங்க தாத்தா. வேண்டிய நேரம் யுகன் கிட்ட கேளுங்க. இல்லைனு சொல்லாம வாரி வழங்குவான். ஊருக்கே வள்ளல், உங்களுக்கு கொடுக்காம போய்டுவானா என்ன?” என தானாகவே ஏதோவொன்றை ஊகித்துக் கொண்டு வினவியவள்,
“அப்படியே என்னையும் ஆசீர்வாதம் பண்ணுங்க தாத்தா. நான் யுகனைக் கட்டிக்க போறவ!” என சிறு வெட்கத்துடன் கூறி அவரின் கால் தொடப் போக,
“நன்னா இரும்மா..” என மனதார வாழ்த்தியவர் தன்னை மீறிக் கலங்கிய கண்களை யுகன் கண்டு விடாமல் இருப்பதற்கான விரைந்து வெளியேறினார்.
யுகனின் கண்களுக்கு தென்பட்டு அவளது தலையில் கைவைத்து கூறியவர் விருட்டென வெளியேறி விட்டார் அங்கிருந்து. ‘நல்லா இரு’ என்று அவரது வாய் தான் கூறியதே தவிர, மனம் கூறிவிடவில்லை என்பதுவே உண்மை!
லிங்கம் செல்லும் திசையில் பார்த்திருந்த மான்ஷி, “ஆனா நான் இவரை எங்கேயோ பார்த்திருக்கேன் யுகன். ஆனா எங்கேன்னு தான் தெரியல..” என தீவிரமான யோசனையுடன் கூறினாள்.
எங்கேயோ பார்த்த அதே முகம்! அதே குரல்! நினைவடுக்குகளின் அடி ஆழத்தில் புதைந்து போயிருந்ததை அவ்வளவு இலகுவதில் வெளிக் கொணர முடியுமா என்ன..
‘யாரிவர்?’ என மூளையை கசக்கிப் பிழிந்து யோசிக்க ஆரம்பித்தவளின் சிந்தனைக்குத் தடை போட்டது,
“பொட்டி படுக்கையோட இங்கே வானு உன்னை யாரும் கூப்பிட்டதா எனக்கு நினைவில்ல..” என சத்தமாய் ஒலித்த யுகனின் கர்ச்சனைக் குரல்.
திடும்மென இயல்புக்கு மீண்டவள், “உன்கூடவே இருந்துக்கலாம்னு ஓடி வந்துட்டேன்யா..” என குழைவாய் கூறியவாறு கெந்திக் கெந்தி அவனருகில் நெருங்கி வர, அப்போது தான் அவளது கட்டுப் போட்டிருந்த காலைக் கண்டான். கட்டைத் தாண்டி இரத்தம் கசிந்து டைல்ஸ் தரையில் திட்டித் திட்டாய் படிந்திருந்தது.
“ஏய்! உன் காலைப் பாரு பிளட் வருது. உங்கப்பனா வந்து டைல்ஸ்ல படியிற பிளட்டை துடைச்சு விடுவான்..” என குரலுயர்த்தி கத்தியவனை பாவமாக பார்த்தவள்,
“அந்த மனுஷன் கேட்டை தாண்டி உள்ளே விட மாட்டேன்னாரு. போங்கு காட்டிட்டு அவரைத் தாண்டி ஓடி வரப் போய் கால் தடுக்கி தொப்புனு கீழ விழுந்துட்டேன். அடிபட்ட அதே காலுல திரும்ப அடி! ஆனா பாரு, நீ சொன்னதுக்கு அப்பறம் தான் காலுல ரத்தம் வருதுன்னே தெரியும்..” என்று அசட்டுச் சிரிப்புடன் கூறினாள். இவ்வளவு நேரம் வலிக்கவில்லை, ஆனால் இப்போது ஏனோ காலிலிருந்த காயம் வலிப்பது போலிருந்தது.
“பிளட் கறை டைல்ஸ்ல படியிது..” என பற்களை நறநறத்தவாறு கூறியவன் அவளை இரண்டெட்டில் நெருங்கி, என்ன ஏதென்று சுதாரிக்க முன்பே பூக்குவியலென தன் கைகளில் ஏந்தியிருக்க, மைனர் அட்டாக்கால் துள்ளி விழுந்தாள் மான்ஷி.
முட்டைக் கண்களை பெரிதாக விரித்து அவன் முகம் பார்க்க, வேக எட்டுக்களுடன் கூடத்தைத் தாண்டி நடந்தவன் மூடியிருந்த கதவைத் காலால் உதைத்துத் தள்ளிக் கொண்டு அறைக்குள் நுழைந்து, கிறங்கி நின்றிருந்தவளை தொப்பென அரையடி அமுங்கும் மெத்தையில் போட்டான்.
“ஐயோ என் இடுப்பு..” என பெருங்குரலெடுத்து கத்தியவள்,
“ஸ்ஸ், இதுக்கு நீ என்னை தூக்கிட்டு வராமலே இருந்திருக்கலாம் யுகன் பைத்தியம்! நடக்க தான் முடியல, இவ இடுப்பையும் உடைச்சு கட்டிலோடயே படுக்க வைக்கலாம்னு ஆசைப்படறியா என்ன?” என கனவுகள் கலைந்த கோபத்தில் கேட்டாள்.
நகரப் போனவன் நின்று திரும்பி, “உன்னை ஆசைக்காக தூக்கிட்டு வந்தேன்னு நினைச்சா, அது உன் தப்பு. உன் பிளட்டால என் வீட்டு டைல்ஸ் வீணாப் போகுது. அதான் தூக்கிட்டு வந்து, இங்கேயே கிடனு போட்டேன்..” என்றான், இறுகிய குரலில்.
பற்களை அரைத்தவள், “என்ன பண்றேன்னு பாரு..” என்று கூறிக்கொண்டே கட்டிலை விட்டு எழுந்து நிற்க, “ஏய்!” என்ற கத்தலுடன் மீண்டுமொரு முறை அவளைக் கட்டிலில் தள்ளிய யுகன்,
“பெட்டை விட்டு கீழ இறங்கினா உன்னை கொன்றுவேன். எங்கேயாவது போய் தொலையாம என் உசுரை வாங்கணும்னே வரீங்க!” என எரிந்து விழுந்தான்.
“ஓ, நான் இல்லைன்னா நீ ரொம்ப சந்தோசமா இருந்திடுவியாக்கும்!”
“ஏன் இவ்ளோ நாள் நீ இல்லாம இருக்கலையா?” என எதிர்க் கேள்வி கேட்டவன் மேற்கொண்டு வாயாடாமல் விருட்டென வெளியேறி விட்டான் அறையிலிருந்து.
கட்டிலில் முகம் குப்புற விழுந்து அங்குமிங்குமாய் உருண்டவள், “நான் இல்லைனா நீ நிஜமாவே சந்தோசமா இருப்பியா யுகன்? நான் உனக்கு வேணாமா? நான் உன்னை எவ்ளோ லவ் பண்ணுறேன் தெரியுமா..” என கண்களை மூடியபடி புலம்பித் தீர்த்தாள்.
கால்வலியில் உயிர் போனது. மனம் வேறு ரணமாய் வலித்தது.
‘அவொய்ட் பண்றானே!’ என அவனை வெறுக்க மனம் இடம் தரவில்லை; ‘காயப்படுத்தறானே!’ என கோபப்படவும் முடிவதில்லை.
மாறாக, ‘அவொய்ட் பண்றதுக்கு தக்க ரீசன் எதுனா இருக்கும். இல்லைன்னா என் யுகன் என்னை இப்படி இக்னோர் பண்ணுவானா என்ன?’ என வெட்கங்கெட்ட மனம் அவனுக்காகப் பரிந்து பேசியது.
அவன் மீதான நம்பிக்கையை அறியா வயதிலேயே விதைத்து விட்டான் மாயவன்! அப்படி இருக்கையில், எப்படி சந்தேகப் படுவாள் அவனையும், அவன் காதலையும் நேசத்தையும்?
‘மானு..’ என அவன் அழைக்கும் உருக்கமான அழைப்பு இன்னும் நெஞ்சில் ஈரத்தை வார்த்துக் கொண்டிருந்தது. அந்த அழைப்புக்காய் ஏங்கிக் கொண்டிருக்கிறாள் பாவை! அவன் தான் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறான்.
“யுக..ன்.” என வாய் மூடாமல் புலம்பிக் கொண்டிருந்தவள்,
“மான்ஷி மேடம்!” என்ற காமினியின் தயக்கமான அழைப்பு செவிப்பறையில் மோதியதும் மறுபக்கமாய் உருண்டு, அவள் முகம் பார்த்தாள் என்னவென்பது போல்!
“உன் கால் காயத்துல இருந்து பிளட் வருதாமே! டைல்ஸ் வீணாப் போகுதாம்னு ஐயா கட்டு போட்டுக்க சொன்னாரு..” என்றவள் தன் பின்னோடு வந்த இளம் வைத்தியரைக் கை காட்டினாள். வந்திருந்தவன், யுகனின் குடும்ப வைத்தியர் சேதாசலத்தின் ஒற்றைப் புத்திரன்.
கட்டிலில் கால்நீட்டி அமர்ந்து சுவற்றில் தலை சாய்த்தவள், “சேதாசலம் அங்கிள் எப்படி இருக்காரு?” என்று கேட்டாள், தன் காலிலிருந்த பழைய கட்டை பிரிக்க ஆரம்பித்தவனிடம்.
“ஹீ ஈஸ் ஃபைன் மாளவிகா!” எனப் புன்னகையுடனே பதிலளித்தவன் மருந்து போட்டு விட்டு அங்கிருந்து அகலும் வரை மான்ஷி மீண்டும் வாய் திறக்கவே இல்லை.
காலை அங்குமிங்குமாய் ஆட்டி எரிச்சலை மட்டுப்படுத்த முயன்றவள் வைத்தியர் போட்டு விட்டுச் சென்ற தூக்க மருந்தின் உதவியுடன் லேசாகக் கண்ணயர்ந்தாள். இப்போதைக்கு அவளுக்கு ஓய்வு மிகவும் தேவைப்பட்டது.
மருந்தின் உதவியுடன் நெடுநாட்கள் கழித்து நிம்மதியான உறக்கத்தினுள் ஆழ்ந்து போயிருந்தவள், தூக்கம் கலைந்து எழுந்து நிற்கும் போது நன்றாகவே இருட்டி விட்டுருந்தது. கண்களைக் கசக்கியவாறு எழுந்தமர்ந்தவள் மூடப்படாத ஜன்னல் வழியாய் தன்னைப் பார்த்து பள்ளிலித்த நிலவைப் பார்த்து பெரிதாய் திகைத்தாள்.
“இவ்ளோ நேரமாவா தூங்குவே மான்ஷி?” எனத் தன்னையே கடிந்து கொண்டவள் காலை மெதுவாய் தரையில் ஊன்றி கட்டிலை விட்டு எழுந்து, திறந்திருந்த சாரளமருகே சென்று நின்றாள். கால்வலி சற்றே மட்டுப்பட்டு இருந்தது.
நிலவைப் பார்க்கும் போது மனமெங்கிலும் ஜிவ்வென்ற ஒரு குளிர்மை பரவியது. பல வருடங்களுக்கு முன் தொலைந்து போயிருந்த ரசனை, ‘தன்னவன் வீட்டில் தான் இருக்கிறேன்’ என்ற குளுகுளுப்பில் மீண்டும் வந்து அவளோடு ஒட்டிக் கொண்டது.
‘உனக்கும் எனக்குமான உறவுக்கு சாட்சி இந்த நிலா தான். நீன்னா எனக்கு உயிருடி. உன் அளவுக்கு முக்கியமானவங்கனு எனக்கு இந்த உலகத்துல யாருமே இல்ல, தெரியுமா?’
‘என்னை விட்டு எங்கேயும் போயிடாதடி!’
‘ உன் சிரிப்பில் தான், என் மொத்த நிம்மதியும் அடங்கியிருக்கு..’
ஆடவனின் பற்பல குரல்கள் மீண்டும் மீண்டும் செவிகளில் ஒலித்து அவளை அலைக் கழித்தன.
வேதனையுடன் விழி மூடி திறந்தவள், ‘நான் எங்கேயும் போகல யுகன். நீ தான் என்னை வேணாம்னு ஒதுக்கி தள்ளிட்ட! தோள்ல சாய்ச்சு பலமணி நேரமா கதை பேசி என்னை சிரிக்க வைச்சவனை இன்னைக்கி காணோம். தொலைஞ்சு போகல, என் பக்கத்துல தான் இருக்கான்… ஆனா ரொம்ப தொலைவுல இருக்குற மாதிரி ஒரு ஃபீலை கொடுக்குறான்..’ என மனதோடு பேசி, நிலவை வருத்தத்துடன் வெறித்தாள் மான்ஷி.
‘தொலைஞ்சி போனவன் இனி திரும்ப வரவே மாட்டான்னா, ப்ளீஸ் என் உயிரை இன்னைக்கே எடுத்துக்கிட்டாலும் சம்மதம்! அவனுக்கு நான் நிஜமாவே தொல்லையா தெரியுறேனா..
நான் அவன் பக்கத்துல இருக்குறது அவனுக்கு சந்தோசத்தை கொடுக்கலைன்னா என்னை இந்த உலகத்துல வாழ விடவே வேண்டாம்!’ என கடவுளிடமும் மனமுருகி வேண்டிக் கொண்டவளின் விழியோரம் ஈரம் கசிந்தது.
“நிஜமாவே அவனுக்கு நான் வேணாம்னா, என் சந்தோசத்தை மொத்தமா அவனுக்கே கொடுத்துடு! என்னை உன்கிட்ட வரவழைச்சுக்கோ ப்ளீஸ்..” என வாய் விட்டே கூறியவள் வெடித்த விம்மலை வாயில் கை வைத்து அடக்க முயன்றாள்.
“விலகி நின்னு என்னை கொல்லாத யுகன்! உன் கையால விஷத்தை கொடுத்தாலும் குடிப்பேன்னு தானே சொல்லுறேன்? பேசாம அதைப் பண்ணு..” எனக் கூறி விம்மியழுதவள் பின்னிருந்து கேட்ட செருமல் சத்தத்தில் கண்ணீருடனே திரும்பினாள்.
இவ்வளவு நேரம் யாரைப் பற்றி புலம்பித் தீர்த்ததாளோ அவனே தான் எதிரில் நின்றான். கண்களை சுருக்கி அவளையே உறுத்துப் பார்த்திருந்தான்.
“யு..கன்..” என அழைத்தபடி கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டாள் அவசரமாக!
“அதான் கால்ல கட்டுப் போட்டு நிம்மதியா தூங்கி எழுந்துட்டே இல்ல.. இனியாவது கிளம்புற ஐடியாஸ் இருக்கா இல்லையா?” என சற்றுக் காட்டமாகவே கேட்டவன் அவள் பதில் கூறுவதற்குள்,
“உன் திங்ஸை எல்லாம் டிரைவர் கைல கொடுத்து உன் வீட்டுல சேர்ப்பித்தாச்சு..” என்றான் கூலாக..
“நோ! நான் எங்கயும் போகல யுகன். அதான் உன்கூடவே இருக்க போறேன்னு சொன்னேனே.. நீ ஏன் கேட்க மாட்டேங்குற? அப்பாக் கிட்டே சண்டை போட்டுட்டு வந்தேன். இனிமே நான் அவர் மூஞ்சியையும் பார்க்க போறதில்ல.. “
“ச்சு!” பரிதாபமாய் உச்சுக் கொட்டினான்.
“ப்ளீஸ், நான் உ..ன்கூட.வே இரு.ந்துக்குறேன்யா..” என அழுகையினூடே கூறியவள் விறைப்பாய் நின்றிருந்தவனின் நெஞ்சில் சாய, அவளது கையைப் பற்றி இழுத்துக் கொண்டு அங்கிருந்து நடந்தவன்,
“அப்படியே ஓடிப் போயிரு! இல்ல, குளிர்ல விறைச்சு இங்கேயே செத்துப் போ.. ஐ டோன்ட் கேர்! நிம்மதியா பீல் பண்ணுவேன்..” என இறுகிய குரலில் கூறி, அவள் என்ன ஏதென்று புரிந்து கொள்ள முன்னரே அவளை வெளியில் தள்ளி கதவை சாற்றியிருந்தான்.
“உன்னை நேசிச்ச பாவத்துக்கு ரெண்டு சொட்டுக் கண்ணீர் வேணா சிந்துறேன். நீ நிம்மதியா தூங்கிப் போகலாம்!” என்ற யுகனின் கேலிக் குரல் வீட்டினுள்ளிருந்து கேட்டது.
மூடிய கதவைக் கைகள் சோர்ந்து போகும் வரை தட்டிக் களைத்தவள் ஏதோவொரு பிரமையில் எழுந்து நடந்தாள் அங்கிருந்து. யுகன் கூறிய வார்த்தைகள் இன்னுமே காதுக்குள் கேட்டுக் கொண்டிருந்தது.