மைவிழி மக்களுக்கு மத்தியில் நின்று திணறுவதைக் கண்ட அருண் அவள் அருகே வண்டியை நிறுத்தினான்.
சினிமாவில் நடிக்கத் தொடங்கி முன்று வருடங்களைக் கடந்திருக்க, தீரனோடு அவனுக்கு நட்பு எனும் உறவும் இருந்தது.
மைவிழியோ அருண் காரில் இருந்து இறங்கி வருவதைக் கண்டவள் அவனை பார்த்து இயந்திரம் போல புன்னகைத்தாள்.
“ஹாய் விழி ஏன் இங்கே நிற்கிறீங்க.? உங்க கார் எங்க.? தீரன் வரலையா?” எனக் கேட்க, அவளுக்கோ முனுக்கென கண்ணீரே வந்தது.
எதுவோ சரியில்லை எனப் புரிந்து கொண்டவன்,
“கம் வித் மீ.” எனத் தன் கார்க் கதவை திறந்து விட்டான். அடுத்த கணம் அந்தக் காரினுள் ஏறி அமர்ந்தவளுக்கோ அழுகை பொங்கியது.
அவளுடைய அழுகையை பார்த்த அருணோ எதுவும் பேசாது அவளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றான்
தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்ததும் வாடிப்போன முகத்துடன் இருந்தவளைப் பார்த்து அவனுடைய மனமோ சற்றே கலங்கியது
“என்னாச்சு விழி ஏன் டல்லா இருக்கீங்க.? ஏதாவது பிரச்சனையா தீரன் உங்க கூட வரலையா” என்ன கேட்டான் அருண்.
அவள் பதில் கூற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கையில் அவனுடைய வீட்டிற்குள் நுழைந்தார் டேரக்டர் வாசு தேவன்.
“ஹாய் அருண், அட நம்ம விழியும் இங்கதான் இருக்காங்களா.? எனக்கு கேட்டவாறு உள்ளே நுழைந்தார் வாசுதேவன்.
“ஆமா சார் உள்ளே வாங்க. இப்பதான் விழி வந்தாங்க.” என்றான் அருண்.
“ஓகே ஓகே நான் அக்ரீமெண்ட் ரெடி பண்ணிட்டேன் உன்கிட்ட சைன் வாங்கிட்டு போகலாம்னு வந்தேன் அருண்.” என்றார் அவர்.
“ஓகே சார் நான் சைன் பண்ணிடுறேன்” என்றான் அருண்.
“எப்படி இருக்கீங்க விழி” என கேட்டார் வாசுதேவன்.
“நான் நல்லா இருக்கேன் சார் நீங்க எப்படி இருக்கீங்க.?” என்றாள் விழி.
அவளுக்கு சற்று நேரம் தனியாக இருந்தால் நிம்மதியாக இருக்கும் போல இருந்தது. முகத்துக்கு நேரே புன்னகையோடு பேசுபவர்களை புறக்கணிக்க முடியாது அவர்களுக்குரிய பதிலை வழங்கிக் கொண்டிருந்தாள் அவள்.
அவளுடைய மனமோ உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்தது.
“நான் நல்லா இருக்கேன் மா. அடுத்த படம் பண்ற ஐடியா உங்களுக்கு இல்லைன்னு கேள்வி பட்டேன். அப்படிப் படம் பண்றதா இருந்தா சொல்லுங்க என்னோட அடுத்த படத்துக்கு உங்களையே ஹீரோயினா போட்டுரலாம்” என்றார் வாசுதேவன்.
அவர்களின் பேச்சில் உடனடியாக குறுக்கிட்ட அருணோ “இல்ல சார் அவங்க இனி நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.” என்றான்.
“ஓ ஆனா ஒரு படத்திலேயே இவங்க நல்ல பேமஸான நடிகையாகிட்டாங்க. நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. நடிச்சா நல்லது தானே நடிக்கிறதுக்கு ஆர்வம் இருந்தா சொல்லுங்க இப்போ எடுக்கிற படத்துல உங்களை ஹீரோயினா போடுறேன்.” என்றார் அவர்.
சட்டென மூளையில் மின்னல் வெட்ட உடனடியாக அவருடைய பேச்சுக்கு ஒத்துக் கொண்டாள் மைவிழி
“ஓகே சார் எனக்கு உங்க படத்துல நடிக்க ஆர்வமாதான் இருக்கு நான் உங்க படத்துல நடிக்கிறேன்.” என்றாள் அவள்
ருத்ர தீரனின் மேலிருந்த கோபம் அவளை இவ்வாறு பேசச் செய்தது.
அவளுடைய வார்த்தைகளைக் கேட்ட அருணோ திகைத்துப் போய் அவளைப் பார்த்தான்.
“வாவ் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை ரொம்ப ரொம்ப நன்றி மா. அப்போ நாம இன்னைக்கே ஒப்பந்தம் போடலாமா.? எனக் கேட்டார் வாசுதேவன்.
“ ஓகே சார்.” என்றவளுடன் படம் தொடர்பாக விவரித்தவர் நாளை படத்தின் பூஜைக்கு வருமாறு அழைத்து விட்டுச் சென்றுவிட அருணோ அவளுடைய முகத்தை அழுத்தமாக பார்த்தான்.
“என்ன அருண்.? ஏன் இப்படிப் பார்க்கிறீங்க.?”
“ஏன் அவசரப்பட்டு அவரோட படத்துல நடிக்க சம்மதம் சொன்னீங்க.? அந்த படத்துல ஹீரோ யார்னு தெரியுமா.?”
“தெரியும் தீனாதானே ஹீரோ.” என சாதாரணமாக கூறினாள் அவள்.
“என்ன விழி நம்ம தீரனுக்கும் தீனாக்கும் ஒத்து வராதுன்னு உங்களுக்கே தெரியுமே. அவன் பொண்ணுங்க விஷயத்துல அவ்வளவா நல்லவன் இல்ல விழி.” என எச்சரித்தான் அருண்.
“இந்த உலகத்துல யாருமே உத்தமன் இல்ல அருண். எல்லாருமே ஒரு தேவைக்காகத்தான் நம்ம கூட இருப்பாங்க. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா.?”
“சொல்லுங்க விழி. என்னால முடிஞ்ச உதவியை கண்டிப்பா பண்றேன்”
“தேங்க்ஸ்.. எனக்கு ஒரு வீடு பார்த்து கொடுக்க முடியுமா.? மன்த்லி ரென்ட் பே பண்ணிடுறேன்.” என்றாள் அவள்.
“எனக்கு இன்னொரு வீடு இருக்கு விழி. இஃப் யு டோன்ட் மைன்ட் நீங்க அங்கேயே தங்கிக்கோங்க. வாடகை எல்லாம் வேணாம்.” என்றான் அவன்.
“இல்ல வாடகை வேணாம்னா எனக்கு வீடும் வேணாம் அருண்.” என்றாள் அவள்.
“சரி சரி நான் ரென்ட் வாங்கிக்கிறேன். நீங்க அங்கேயே தங்கிக்கோங்க. உங்களுக்கு உதவிக்கு அங்கே மீனம்மாவும் இருக்காங்க” என்றவன் அவளை தன்னுடைய மற்றைய வீட்டில் வாடகைக்கு தங்க வைத்தான்.
மைவிழியை தன்னுடைய வீட்டில் விட்டவன் தன்னுடைய வீட்டிற்கு வந்ததும் தீரனுக்கு அழைத்து நடந்த அனைத்தையும் கூறினான்.
“வாட்..? நீ சொல்றது உண்மையாடா?” எனக் கேட்டான் ருத்ர தீரன்.
“ஆமான்டா அவ தீனா கூட படம் பண்ணப் போறாளாம். வாசுதேவன் சார் அக்ரிமென்ட்டை உடனே போட்டுட்டாரு. நாளைக்கு படத்தோட பூஜையாம்.”
“இடியட் இவள் யாரைக் கேட்டு அந்த பைத்தியக்காரன் கூட நடிக்க ஒத்துக்கிட்டாள்.? என்னவோ பண்ணட்டும்.” என உறுமியவன் போனை வைத்துவிட அருணோ தலையில் அடித்துக் கொண்டான்.
அன்றைய இரவில் முதன் முதலாக ஒரு அறையில் தனியாக உறங்கினாள் மைவிழி. இப்போது அவளுக்கு பேயை நினைத்து எல்லாம் கவலையே இல்லை.
தன் காதலையும் தன்னையும் நினைத்தே கவலை கொண்டாள் அவள்.
கடந்த ஐந்து மாதங்களும் அவனுடைய கை வளைவிலும் மார்பிலும் உறங்கிப் பழகியவளுக்கு அன்றைய தனிமை கொடுமையாக மாறிப் போனது.
கானலாகிப் போன தன் காதலை எண்ணி கண்ணீர் சிந்தியவள் படுக்கையில் படுத்து கண்களை மூட, மூடிய விழிகளுக்குள் தோன்றினான் அவளுடைய தீரன்.
அவள் சற்று தள்ளிப் படுத்தால் கூட தூக்கம் வராது படுக்கையில் புரண்டு கொண்டே இருப்பவன் இப்போது தூங்கியிருப்பானா.? என அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள் அவள்.
ஒரு தடவை அவள் காய்ச்சலில் துவண்டு போய் கிடந்த போது அவளை குழந்தை போல பார்த்துக் கொண்டானே அதுவும் வெறும் நடிப்பு தானா?
ஆடை மாற்றும் நேரம் கூட என்னை விட்டு பிரிய முடியாது எனக் கூறியவனின் நேசம் யாவும் என் சதைப் பற்றான உடலில் மாத்திரம்தான் போலும்.
நடந்தவற்றை நினைத்து துடித்துப் போனவளுக்கு அழுகையில் தேகம் நடுங்கியது.
‘எதுக்காக இப்படி என்னை ஏமாத்தினீங்க.? ரொம்ப வலிக்குது. என்னால இந்த வலியைத் தாங்கவே முடியல சார்.’ என்றவள் வெடித்து அழத் தொடங்கினாள்.
அன்று ஒரு முறை அவள் தன் அம்மாச்சியின் நினைவில் வாடிப் போய் அழுத போது அவன் அவளுடைய இதழ்களை அழுத்தமாக கவ்வி முத்தமிட்டு அவளோடு காதல் மொழிகளை பரிமாறி கொஞ்சிக் கொண்ட காட்சிகள் நினைவில் தோன்ற, மீண்டும் வேதனையில் சுருண்டு போனாள் மாது.
அன்றைய நாள் காதல் தோல்வி எப்படி இருக்கும் என புரிந்து கொண்டாள் மைவிழி.
அவளுடைய உறக்கம், நிம்மதி, மகிழ்ச்சி யாவும் அன்று அவளிடம் இருந்து சொல்லாமலேயே விடை பெற்றுச் சென்றது.