ஆரல் – 24
ஆரோன் அவளுடைய பிளவுஸில் நாட்டை போட்டவன், அவளுடைய முதுகைத் தொட்டு அவளுடைய கழுத்தில் முத்தம் பதித்தான்.
அதில் ஷாக் அடித்தது போல இருந்தது யாராவிற்கு..
அவளுடைய கை கால்கள் உதற ஆரம்பிக்க அவளுடைய இதயமோ வேகமாகத் துடித்தது.
எங்கே குதித்து வெளியே விழுந்து விடுமோ என்ற அளவுக்குத் துடித்தது அவளுக்கு.
மிக நெருக்கத்தில் இருந்த ஆரோனோ அவளுடைய இதயத் துடிப்பை துல்லியமாகக் கேட்டான்.
அவளுடைய முதுகில் இருந்த தன்னுடைய கையை எடுத்து அவளுடைய இதயத்தின் மேல் பதித்தவன்,
“இப்ப எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற.. ஏன் உன் இதயம் இவ்வளவு வேகமா துடிக்குது.. காம்டவுன்..” என்று கூலாக சொல்ல அவளுக்கோ ஐயோ என்று இருந்தது. அவனிடமிருந்து எப்படி விலகிச் செல்வது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தவள், அங்கு அவர்கள் அறையில் கேட்ட தருணின் “மாமா..” என்ற அழைப்பில் அவனிடம் இருந்து விடுபட்டு ஓடியே விட்டாள். தன்னுடைய கைச்சிறைக்குள் இருந்து அவள் துள்ளி ஓடியதும் தான் தான் செய்த காரியம் அவனுக்குப் புரிந்தது.
தன்னுடையத் தலையை அழுந்தக் கோதிக் கொண்டவன், தருணின் புறம் திரும்ப அவனோ,
“மாமா எல்லாரும் ரெடியாகிட்டாங்க.. நீ மட்டும் இன்னும் ரெடியாகலையா..?” என்று கேட்க, அவனோ அவனுடைய உயரத்திற்கு முட்டிக்கால் போட்டு அமர்ந்தவன் அவனுடைய கன்னத்தை இரண்டு கைகளால் பிடித்து ஆட்டியவாறே “மாமா எப்பவோ ரெடி.. கிளம்பலாமா..?” என்று சொல்லியவன் அவனைத் தனது கையில் தூக்கிக் கொண்டு கீழே வந்தான்.
கீழே அனைவரும் புறப்பட்டு ரெடியாக இருக்க ஆரோன் கீழே வந்தவனுடைய கண்கள் யாராவைத் தேடியது.
அவளோ அவனுடைய அன்னையின் முதுகுக்குப் பின்னே ஒளிந்தவாறே நின்று கொண்டிருந்தாள்.
அனைவரும் அங்கிருந்து அவர்களது பாட்டியின் ஊருக்கு கிளம்ப அப்பொழுது சர் என்று வேகமாக வந்து அவர்களின் முன்னே நின்றது ஒரு கார்.
அனைவரும் வந்தது யார் என்று பார்க்க யாராவோ பயத்தில் ஆரோனுடைய கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
அவனும் அதை உணர்ந்தவன் போல் தானும் அவளுடைய கையை இறுக்கமாக தன் கையோடு பிடித்துக் கொண்டான்.
அப்பொழுது அந்த காரில் இருந்து இறங்கிய உருவத்தை கண்டு அனைவரும் அதிர்ச்சியாகப் பார்த்தனர்.
அந்த காரில் இருந்த இறங்கிய உருவம் நேராக அவர்களின் முன்னே வந்து,
“என்ன எல்லாரும் என்னைய மட்டும் விட்டுட்டு போகலாம்னு பிளான் பண்ணுனுங்களா..? எப்படி கரெக்டா வந்தேன் பாத்தீங்களா..” என்று கூலிங் கிளாஸை கண்ணில் போட்டவாறே தோரணையாக அவர்கள் முன்னால் நின்றான் ஷாம்.
“நீதானா நாங்க கூட வேற யாரோன்னு நினைச்சோம்.. சரி சரி வந்தது தான் வந்துட்ட லக்கேஜ் எல்லாம் எடுத்து வை..” என்று திவ்யா அவனை பெட்டிகளை எடுத்து வைக்க கூப்பிட அவனோ தன்னுடைய கூலிங் கிளாசை கழட்டியவன்,
“அக்கா என்ன ரொம்ப இன்ஸல்ட் பண்றீங்க நீங்க..” என்றான். “என்னடா அக்காவுக்காக இது கூட பண்ண மாட்டியா..?” என்று அவனை பாசமாக லாக் செய்ய அதற்கு மேல் அவன் மாட்டேன் என்று சொல்லவா செய்வான்.
பூனை குட்டி போல திவ்யாவின் பின்னே சென்று அவள் சொன்ன வேலை எல்லாம் செய்தான்.
அதன் பிறகு அனைவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
வண்ணக்கிராமம் என்ற ஊருக்கு தான் அவர்கள் சென்றது.
ஹோலி பண்டிகையை முன்னிட்டும் அதைத்தொடர்ந்து அந்த ஊரில் கோவில் திருவிழா நடைபெறுவதால் அந்த ஊரே ஜெகஜோதியாக மின்னியது.
ஊரின் எல்லையை வந்து அடைந்தவர்களை அந்த கிராமத்தின் மண்வாசனை அனைவரையும் கவர்ந்தது.
நேராக ஆரோனின் பாட்டியின் வீட்டின் முன்னே வண்டியை நிறுத்தியவர்கள் ஒவ்வொருவராக இறங்கி வர அவர்களை எதிர்பார்த்து காத்திருந்தார் அந்த வயதான பாட்டி.
அவருடைய கணவர் வயதின் முதிர்வு காரணமாக தாத்தா இறந்துவிட்டார்.
பாட்டி மட்டுமே அங்கு வாழ்ந்து கொண்டிருந்தார்.
ஆரோனின் அப்பா அவர்களை தங்களுடன் வந்து இருக்குமாறு அழைக்க, அவரோ தன் கணவனுடன் வாழ்ந்த இடத்தை விட்டு வரமாட்டேன் என்று அங்கேயே இருந்து கொண்டார்.
ஆனால் ஒவ்வொரு பண்டிகையின் போதும் மொத்த குடும்பமும் இங்கு வருகை தந்து விடுவார்கள்.
அதுவே பாட்டிக்கு போதுமானதாக இருந்தது.
அவர்களுக்கும் அது நிம்மதி அளித்தது.
“வாங்க வாங்க உங்களுக்காக தான் இவ்வளவு நேரமா காத்துகிட்டு இருந்தேன்..” என்று பாட்டி அனைவரையும் வரவேற்க ஷாமோ அனைவரையும் முந்திக்கொண்டு “பாட்டி எப்படி இருக்க..?” என்று நேராக பாட்டியின் அருகே வந்தவன் பாட்டியை தூக்கினான்.
“இறக்கி விடுடா குமரி பிள்ளையை தூக்கி சுத்துற வயசுல என்ன போய் தூக்கி சுத்திகிட்டு இருக்க இறக்கி விடுடா..” என்று பாட்டி சொல்ல, “என்ன பாட்டி பண்றது உன் பேரன் கூட சேர்ந்தா மொத்த பொண்ணுங்களும் இவன தான் பார்க்குறாங்க.. எங்க நம்மள பார்க்கிறாங்க..”
“அதுக்கு என்னடா நம்ம கிராமத்தில் இல்லாத பெண்களா எதையாவது ஒன்னை புடிச்சுக்கோ..” என்று சொல்ல அந்த இடமே கலகலப்பாக மாறியது.
பின்பு பாட்டி யாராவைப் பார்த்து “இங்க வாமா..” என்று அழைக்க அவளோ ஆரோனின் முகத்தைப் பார்க்க,
அவன் “போ..” என்று கண்ணால் சைகை காட்டினான்.
அவளும் பாட்டியின் முன்னாள் வர “நீ தான் என் பேரனோட பொண்டாட்டியா..? ரொம்ப லட்சணமா இருக்க பேராண்டி இங்க வாடா..” என்று ஆரோனை அழைக்க அவனும் யாராவின் அருகில் வர இருவருடைய தலையிலும் பாட்டி கை வைத்து “இரண்டு பேரும் நூறு ஆயிசுக்கு ரொம்ப நல்லா இருக்கணும்.. சீக்கிரமா இந்த பாட்டிக்கு ஒரு கொள்ளு பேரனையோ பேத்தியையோ மட்டும் பெத்து கொடுத்துடுங்க..” என்று சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
யாரா வெட்கத்தில் முகம் சிவக்க தலையைக் குனிந்து கொண்டாள். உடனே திவ்யா,
“என்ன பாட்டி எங்க எல்லாத்தையும் வெளிய நிக்க வச்சு கேள்வி கேட்க போறீங்களா..? இல்ல உள்ள கூட்டிட்டு போக போறீங்களா..?” என்று கேட்க,
“அடடே ஆமா மறந்தே போயிட்டேன். சரி சரி வாங்க வாங்க சாப்பாடு ரெடியா இருக்கு.. எல்லாரும் போயி சாப்பிட்டு வாங்க அதுக்கப்புறம் நம்ம ஹோலி பண்டிகையை கொண்டாடலாம்..” என்று உள்ளே அழைத்துச் சென்று அனைவருக்கும் சாப்பாடு பரிமாறி கோலி பண்டிகையை இனிதாக கொண்டாட ஆரம்பித்தனர்.
சுற்றி எங்கும் அனைவரும் வெள்ளை உடை அணிந்து இருக்க பல வண்ணங்களில் கலர் பொடிகள் வைக்கப்பட்டிருந்தது.
அதன் பக்கத்தில் லஸ்ஸி தயாரித்துக் கொண்டிருந்தனர்.
ட்ரம்ஸ் சத்தம் காதை பிளக்க பலர் அங்கு ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டும் கலர் பொடிகளை மற்றவர்கள் மீது வீசிக்கொண்டும் தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இங்கு இவர்களும் ஒருவருக்கொருவர் கலர் பொடியை தூவிக் கொண்டிருக்க அப்பொழுது யாரா அனைவரையும் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் அருகே வந்த ஆரோன்,
“நீ ஏன் இங்க தனியா நின்னுட்டு இருக்க.. இங்கு வர்றதுக்கு ரொம்ப ஆசைப்பட்டியே அப்புறம் எதுக்கு தனியா நின்னுகிட்டு இருக்க..?” என்று கேட்க,
அவளோ “இல்ல எனக்கு ஆசையா தான் இருக்கு ஆனா இங்க யாரையுமே எனக்குத் தெரியாது.. சட்டுனு அவங்க கிட்ட ஒட்டிக்க கொஞ்சம் தயக்கமா இருக்கு..” என்று யாரா சொன்னாள்.
“இதுல என்ன தயக்கம் இருக்கு.. நீயும் அவங்களோட போய் என்ஜாய் பண்ணு..” என்க, அதற்குள் அவர்கள் அருகில் வந்த பாட்டியோ தன்னுடைய கையில் வண்ணப் பொடியை கொண்டு வந்தவர் ஆரோனிடம் நீட்டி,
“பேராண்டி இப்பதான் உங்களுக்கு கல்யாணம் ஆனது.. அதனால உங்க ரெண்டு பேத்துக்கும் இது முதல் ஹோலி பண்டிகை.. இது ரொம்ப ஸ்பெஷல் இல்லையா..? என் பேத்திக்கு நீதான் முதல்ல கலர் பூசணும்..” என்று அந்த கலர் பொடியை நீட்ட அவனோ,
“என்ன பாட்டி இது..” என்று கேட்க, “பாட்டிக்காக டா பூசி விடுடா..” என்க, அவனோ சரி என்றவன், அந்த சிகப்பு வண்ண பொடியை எடுத்து அவளுடைய இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி பூசினான்.
“போதுமா பாட்டி..” என்று கேட்க, “பேரான்டி அப்படியே அவள் வகிட்டில வச்சு விடுடா..” என்று சொல்ல, அவனும் பாட்டியின் சொல்லைத் தவிர்க்காமல் மீண்டும் அந்த வண்ணப் பொடியை எடுத்தவன் அவளுடைய உச்சி வகுட்டில் வைத்து விட்டான்.
அதன் பிறகு பாட்டி அவளையும் அவனுக்கு பூசி விட சொல்ல அவளோ தயங்கியவாறே பொடியை எடுத்து அண்ணாந்து அவனுடைய முகத்தை பார்க்க அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
பின் மெதுவாக தன்னுடைய கையை உயர்த்தி அவனுடைய தாடி அடர்ந்த கண்ணத்தில் அந்த பொடியை அவனுக்கு வலிக்குமோ என்று மெதுவாக பூசி விட்டாள்.
அவளின் பிஞ்சி விரலின் ஸ்பரிசத்தில் கண்களை மூடினான் ஆரோன்.
Super sis