Episode – 11
“சரிடா மச்சி. நீ கலியாணம் பண்ணிக்கிறது எனக்கும் சந்தோஷம் தான். ஆனா, எனக்கு தெரிய வேண்டிய ஒரே ஒரு விஷயம், நீ அந்தப் பொண்ணு மேல எந்த உணர்வும் இல்லாம கலியாணம் செய்யப் போறீயா?, இல்ல, உன் மனசார விரும்பி கலியாணம் பண்ணப் போறீயா என்கிறது தான்.”
“……………….”
“ப்ளீஸ்டா ஒரு பதில சொல்லு.”
“ஹ்ம்ம்…. பார்த்து இரண்டு நாள்ல காதல் வருமா என்ன?, அதுவும் இந்த திரயனுக்கு. இப்போதைக்கு சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லடா. அந்தப் பொண்ணுக்கு ஒரு தேவை இருக்கு. அதே போல எனக்கும் ஒரு தேவை இருக்கு. பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து,
எங்களுக்கு இருக்கிற பிரச்சனையில் இருந்து தப்பிக்கப் போறம் அவ்வளவு தான்டா. அதுக்கப்புறம் மீதிய பார்த்துக்கலாம்.”
“ஓஹ்…. சார் ஒப்பந்தக் கலியாணம் பண்ணப் போறீங்க?, ரைட். சோ, கலியாணம் முடிஞ்ச கையோட டிவோர்ஸ்ற்கு அப்ளை பண்ணப் போறாய் அப்படித் தானேடா.”
“நோ வேடா, வேதிகாவுக்கு டிவோர்ஸ் கொடுக்கிற எண்ணம் எல்லாம் எனக்கு சுத்தமா இல்லடா.”
(இவன் நம்மள லூசாக்காம விட மாட்டான் மக்காஸ்.)
“டேய், ஏதாவது ஒரு விஷயத்தையாவது நீ தெளிவா சொல்றீயாடா?”
“ம்ப்ச்…. நான் தெளிவா இருக்கேன், எனக்கு அது போதும்.”
“ஓஹ்…. ஓகே சார், அப்போ உங்க தெளிவான முடிவை உன்னையே நம்பி இருக்கிற அந்த அப்பாவிப் பொண்ணுக் கிட்ட சொல்லிட்டீங்களா?”
“அத எதுக்கு சொல்லணும்?” என தாடையைத் தடவியவன், தோளைக் குலுக்க,
பிரியனோ, “உன்ன நினைச்சா எனக்கு கொலை வெறி ஆகுதடா. அந்தப் பொண்ணு உன்கிட்ட உதவி கேட்டது ஒரு குத்தமா?, உன் இஷ்டத்துக்கு நீயே பிளான் போட்டு நடத்துக்கிறீயே, நீ செய்யப் போற காரியத்தால, வர்ற பின் விளைவுகள் பத்தி யோசிச்சீயாடா?, அந்தப் பொண்ணு உன்ன காலம் முழுக்க மன்னிக்காதுடா. இதனால உங்க இரண்டு பேரோட வாழ்க்கையும் நரகம் ஆகிடும்டா.”
“பிரியன், நீ என்ன சொன்னாலும் என் முடிவுல எந்த மாற்றமும் இல்லடா. நான் நினைச்சது தான் நாளைக்கு நடக்கும்.”
“அது தான் எனக்கு தெரியுமேடா. சரிடா அட்லீஸ்ட் அந்தப் பொண்ணுக்கிட்ட இப்பவாவது உன்னோட பிளானை சொல்லிடு.”
“நெவெர்.”
“டேய், அவ உன்ன கடவுள் ரேஞ்சுக்கு பில்ட் ஆப்பா நினைச்சுக் கொண்டு இருக்கா. அவ கிட்ட நாளைக்கு நீ நடந்து கொள்ளப் போற முறையில, நீ அவளுக்கு சாத்தானா மாறிடாத.” என கூற அவனை முறைத்துப் பார்த்த திரயன்,
“போதும்டா. போய் தூங்கு, நாளைக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு காலையில சீக்கிரம் கிளம்பணும்.”என கூறி அவனின் பேச்சுக்கு பட்டென்று ஒரு புல் ஸ்டாப் வைத்தான் திரயன்.
தான் சொல்வதை இனி அவன் கேட்கவே மாட்டான் என எண்ணிய பிரியனும் ஒரு பெரு மூச்சுடன் நண்பனின் வாழ்க்கையை எண்ணிக் கலங்கியவாறு படுத்துக் கொண்டான்.
மறு புறம், இலங்கையில் தனது மகன் பற்றிய விபரங்கள் கிடைக்காது நாளைக்குள் அவனைக் கண்டு பிடித்து தூக்கி வருமாறு பணித்து விட்டு,
நிம்மதியின்றி, தூக்கம் இன்றி “நாளைக்கு அமைச்சர் முன்னிலையில் என்ன செய்வது?, அந்த மனுஷன் முன்னாடி அவமானப்பட்டு நிற்கும் நிலை வந்து விடக் கூடாதே, அப்படி வந்தால் என் அரசியல் வாழ்க்கை என்ன ஆகும்?, அப்படி மட்டும் ஏதாச்சும் நடந்தா…. அந்த திரயன் உயிர் என் கையால தான் போகும்.
எங்க போய் இருப்பான். இந்த நாட்டில எங்க இருந்தாலும் என் ஆட்கள் கண்ணில இருந்து தப்பிக்கவே முடியாதுடா.” என எண்ணி புலம்பிக் கொண்டு இருந்தார் வாசு தேவன்.
நம்ம வேதிகாவோ, “எப்படியும், நாளைக்கு கலியாணத்த திரயன் சார் நிறுத்திடுவார். அதுக்கப்புறம், நான் அம்மாவையும், தங்கச்சியையும் கூட்டிக் கொண்டு இங்க இருந்து போய்டணும். நல்ல ஒரு ஹாஸ்பிட்டல்ல வேலைக்கு சேர்ந்து உழைச்சு காசு சேர்த்து தூரிகாவ படிக்க வைக்கணும். அம்மாவ ராணி மாதிரி பார்த்துக்கணும். புல்லா செட்டில் ஆகிட்டு, அதுக்கு பிறகு எனக்கு பிடிச்ச மாதிரி ஒருத்தர லவ் பண்ணி கலியாணம் பண்ணிக்கணும்….” என மனசுக்குள் ஆயிரம் கனவுகள் கண்டு கொண்டே இருந்தாள்.
(அம்மாடி, வேதிகா, உன் கனவுல ஒண்ணக் கூட உன் ஆபத்பாந்தவன் நடக்க விட மாட்டான் போலயே. விடிஞ்சதும் தெரியும் அவனோட முழு சுய ரூபம்.)
இப்படியே அந்த இரவு அவரவர்களின் எண்ணங்களின் வண்ணப்படியே நகர்ந்து போனது.
மறு நாள் காலை விடிந்ததும் தூரிகா, “என்ன நடக்கப் போகுதோ?, ஆண்டவா எப்படியாச்சும் இந்தக் கலியாணத்தை நிறுத்திடுங்க நான் உங்களுக்கு நூற்றி யெட்டு தேங்காய் உடைக்கிறன்.” என அவசரமாக வேண்டுதல் வைத்துக் கொண்டு புடவையை தூக்கிப் பிடித்துக் கொண்டு தனது அக்கா தயாராகும் அறையை நோக்கி ஓடிச் சென்றாள்.
துர்க்காவோ, கடவுள் மேல் பாரத்தைப் பொட்டு விட்டு, நடக்கும் அநியாயங்கள் எதையும் தட்டிக் கேட்க முடியாது உயிர் உள்ள சிலை போல நின்று கொண்டு இருந்தார்.
அவரின் நிலை அப்படி மக்களே.
தூரிகா அவசரமாக சென்றவள், யாரோ தன்னை அழைப்பது போல இருக்கவும்,
பின் புறம் பார்வையை திருப்பிய அந்தக் கணம் ஒரு திட மேனி கொண்ட ஆணின் மார்பில் முட்டி நின்றாள்.
முட்டிய வேகத்திற்கு நெற்றி மோதி வலிக்கவும்,
“யாருடா இது மலமாடு மாதிரி கொஞ்சம் விட்டா மோதியே கபாளத்தை பிளந்திடுவான் போல.” என எமுணு முணுத்துக் கொண்டு,
நெற்றியை வருடியபடி நிமிர்ந்து பார்க்க,
அவளை குறும்புப் பார்வை பார்த்த வண்ணம் நின்று கொண்டு இருந்தான் பிரியன்.
அவளோ, டார்க் க்ரெ கலர் சாரி அணிந்து இருந்தாள், அதற்கு மேட்ச்சிங்காக மரூன் கலர் பிரிண்ட்டட் பிளவுஸ் அணிந்து இருந்தவள் முடியை அழகாக கொண்டை போட்டு இருந்தாள்.
நெற்றியில் சிவப்பு நிற பொட்டு மாத்திரம் வைத்து இருந்தவளின் கூந்தல் முடிகள் நெற்றியின் இரு புறமும் அசைந்தாடியது.
சிம்பிளாக தேவதை போல இருந்தவளின் அழகை கண்களுக்குள் பூட்டி வைத்துக் கொண்டவன்,
அவளின் கழுத்து வெறுமையாக இருப்பதை கண்டு,
சற்றும் யோசிக்காது தனது கழுத்தில் இருந்த ஒரு செயினை கழட்டி அவளின் கழுத்தில் போட்டு விட்டு , இப்போ தான் பார்க்க செமையா இருக்காய்டி என கூறி விட்டு விரைவாக அங்கிருந்து சென்று விட,
அவனின் செய்கைகளில் அதிர்ந்து நின்றவள் சுதாரித்து அவனைத் திட்டுவதற்கு தேடுவதற்குள் அவன் சென்று இருந்தான்.
ஒரு கணம் தயங்கி செயினை தூக்கிப் பார்க்க,
“பொண்ண அழைச்சிட்டு வாங்கோ.” என்ற குரல் கேட்டது.
அதிலே அனைத்தையும் மறந்துஅக்காவை நோக்கி ஓடினாள் அவள்.
(அந்த செயினால தான் அம்மணி வாழ்க்கை மாறப் போகுது மக்காஸ்.)
அங்கே செந்நிற பட்டில் செங்காந்தள் மலர் போல ரெடியாகி இருந்த வேதிகாவைப் பார்த்து ஒரு கணம் தூரிகாவே அசந்து போனாள்.
நெட்டி முறித்து, “அக்கா செமையா இருக்காய்.” என கூறியவள்,
“என்ன அக்கா நான் டென்ஷனா இருக்கன்.நீ ஹாப்பியா இருக்காய்?” என கேட்டாள்.
அவளின் கேள்விக்கு மென் சிரிப்புடன், “ஏன்னா நான் பொறுப்பு கொடுத்து இருக்கிறது திரயன் சார் கிட்ட, அப்புறம் என்ன பயம்?” என கூறியவள் அசால்ட்டாக மாலையை எடுத்துப் போட்டுக் கொண்டு முன்னே செல்ல, தூரிகாவும் சிறு சிரிப்புடன் பின்னே சென்றாள்.
மண மேடையில் ஏறிய வேதிகாவின் கண்கள் முதன்முதலில் தேடியது திரயனைத் தான்.
பட்டு வேட்டி சட்டையில் அங்கும் இங்கும் திரிந்து தனது ஆட்களுக்கு வேலைகளை சொல்லிக் கொண்டு இருந்தவனை ஒரு நிம்மதியுடன் பார்த்தவாறே ரகுராமிற்கு அருகில் சென்று அமர்ந்தவளுக்கு ஒரு ஒவ்வாத தன்மை தான் தோன்றியது.
அதிலும் ரகுராம், அவள் அமர்ந்ததும் காதருகே குனிந்து,
“ரொம்ப அழகாய் இருக்கிறாய் செல்லம்.” எனக் கூற அவளுக்கு அவனை ஓங்கி அறைய வேண்டும் என்ற எண்ணம் தான் உருவாகியது.
ஆனாலும் பல்லைக் கடித்து கோபத்தை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தவளின் பார்வை அய்யர் சொன்ன மந்திரங்களை உச்சரித்த போதும் திரயனை நோக்கி செல்ல,
அவனுமே ஒரு கணம் அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு வேலைகளைக் கவனித்தான்.
அடுத்தடுத்த சடங்குகளும் விரைவாக முடிய அவளை முகூர்த்தப் பட்டு மாற்றி வரச் சொல்லி அனுப்பி வைத்தார்கள்.
அவளும் முகூர்த்தப் பட்டு மாற்றிக் கொண்டு வந்து மேடையில் ஏறும் போது அதுவரையும் இல்லாத பயமொன்று மனதில் உருவாகி உடலில் ஒருவித நடுக்கம் தோன்ற ஆரம்பித்தது.
அவள் சென்று ரகுராமிற்கு அருகில் அமர்ந்த அடுத்த சில நிமிடங்களில் கழுத்தில் தாலி ஏறி விடும் அல்லவா.
அதுவரையுமே திரயனும் எதுவுமே செய்யவில்லை என்றால் இனி என்ன செய்யப் போகின்றார் என்ற பயம் அவளுக்குள் முகிழ்த்தது.
“அவரை நம்பி தவறு செய்து விட்டோமோ?”, என எண்ணிக் கலங்கிப் போனவள் கால்கள் பின்ன மெதுவாக சென்று ரகுராமிற்கு அருகில் அமர்ந்தாள்.
அதற்கு அடுத்து வந்த ஒவ்வொரு நிமிடமும் நெருப்பில் இருப்பது போல ரகு ராமின் அருகில் தவித்தபடி உட்கார்ந்து இருந்தாள்.
ஓம குண்டத்தில் எரியும் நெருப்பை விட பல மடங்கு நெருப்பு அவளின் உள்ளத்தில் எரிந்து கொண்டு இருந்தது.
அவளின் விழிகளோ, மண மேடையை சுற்றிச் சுற்றி வீடியோ எடுக்க சொல்லிக் கொண்டு இருந்த திரயனில் படிந்து இருந்தது.
வேதிகாவோ, கண்களால் “இனியும் எப்படி இந்த கலியாணத்தை நிறுத்தப் போறீங்க?” என கேட்டாள்.
அவளின் கேள்விக்கு வெறுமனே கண்களை மாத்திரம் மூடித் திறந்தவன், புன்னகைக்கும் படி சைகை செய்தான்.
அதே நேரம் ஐயரோ, தாலியை தட்டில் வைத்து தூரிகாவிடம் அனைவரிடம் தொட்டுக் கொள்ள கொண்டு செல்லுமாறு கூறினார்.
வேதிகாவை பெரு மூச்சுடன் பார்த்துக் கொண்டு, தட்டினை வாங்கிக் கொண்டு கனத்த மனதுடன் சென்றாள் தூரிகா.
அவள் அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி விட்டு, தாலியை கொண்டு வந்து ஐயரிடம் கொடுக்க,
அவரோ, மாப்பிள்ளை கையில் கொடுத்து “கெட்டி மேளம்…. கெட்டி மேளம்….” என கூற,
“எல்லாம் முடிஞ்சுது என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு. ஏன் திரயன் உதவி செய்றேன்னு சொல்லி இப்படி கடைசி நேரத்தில கை விட்டுட்டீங்களே.” என எண்ணி கலங்கிப் போனவள், கண்களை மூடிக் கொண்டு கண்ணீர் உகுக்க,
அவளின் கழுத்தில் தாலி ஏறியது.
அதே நேரம் அவளின் கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றாய் தாலி கட்டியவனின் கைகளில் விழுந்தது.
அந்தக் கண்ணீரை கூர் விழிகளால் நோக்கிய, சற்று முன்பு உரிமையாக வேதிகாவுக்கு தாலி கட்டிய கைகளுக்கு சொந்தக்காரன்,
அவளின் கணவன்,
“இந்த திரயன் கை விடுறவன் இல்லடி பொண்டாட்டி, சொன்ன வார்த்தையை காப்பாத்துறவன்.” என அழுத்தமான குரலில் அவளின் காதில் கூறினான்.
அந்தக் குரலில் அதிர்ந்து கண்களைத் திறந்தவள்,
திரும்பி தனக்கு பின்னாக நின்று தாலி கட்டியவனை நிமிர்ந்து பார்க்க,
அவனோ, அவளைப் பார்த்து கண் சிமிட்டினான்.
அவனை முறைத்துப் பார்த்தவள்,
“இது தான் நீங்க காப்பாத்துற விதமா?, ஏன் எனக்கு தாலி கட்டுனீங்க?, உங்க கிட்ட இருந்து நான் இத எதிர் பார்க்கல.” என பல்லைக் கடித்துக் கொண்டு மென் குரலில் சீற,
“உன் விஷயத்தில முடிவு எடுக்கிற உரிமையை நீ எனக்கு கொடுத்து ஒரு நாளைக்கு மேல் ஆகுது.” என்றவன்,
“பாய்ஸ், ரெடி கிளிக் ஒன், டூ, த்ரீ….” என சத்தமாக கூறியவாறு,
பின்னிருந்து அவளின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தி நெற்றியில் அழுந்த முத்தம் இட்டான்.
அந்தக் காட்சியை அனைத்து கேமராக்களும் அவனின் பிளான் படி கிளிக் செய்து முடிக்க, அந்த மொத்த மண்டபமும் அவனின் செய்கையில் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போய் நின்றது.
கல்யாணராமனோ, “டேய்ஈஈஈ….” என கத்திக் கொண்டு அவனை நோக்கிப் பாய்ந்தார்.
இனி திரயன் ஆட்டம் ஆரம்பம்.
இந்த திருமணத்தை வேதிகா ஏற்றுக் கொள்வாளா?
இனி ரகுராம், கல்யாண ராமன் இருவரின் நிலை என்ன?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
லைக்ஸ் ப்ளீஸ்….😍😍😍
நாளைக்கு அடுத்த எபி வரும்..
சொன்னபடி எபி வந்தாச்சு மக்காஸ் 😍😍😍
வாவ் சூப்பர் மா ❤️❤️❤️❤️❤️😘😘😘😘🤩🌹🌹🌹🌹
Super sis