காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! 🖌️ – 03

5
(8)

“சோரி பாட்டி அவ ஏதோ தெரியாம பண்ணிட்டு இருக்கா.” என்று கூறிவிட்டு அவளை இழுத்துக் கொண்டு போய் அறைக் கதவை அடைத்து புலம்ப ஆரம்பித்து விட்டாள் அபி.

 

“இதுங்கள சமாளிக்கிறதுக்குள்ள எனக்கு போதும் போதும்னே ஆகிடுச்சு. அதுல கார்த்திகா அத்தை வேற. கேள்வி மேல கேள்வியா கேட்டு சாகடிச்சிட்டாங்க.” என்று புலம்பியவளின் முலம்பலைக் கேட்டு உடைகளை அடுக்கிக் கொண்டிருந்த யூவி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

 

அதில் கடுப்பான அபி “ஹேய்… என்னடி சிரிக்கிற? அவன் அவன் கஸ்டம் அவன் அவனுக்கு. நல்ல வேளை கார்த்திக் மட்டும் இல்லை. அவன் இருந்திருந்தான்னா நம்ம வண்டவாளத்தை தண்டவாளமாக்கி தோலை உரிச்சு மரத்துல கட்டி தொங்க விட்டுடுவான்.” என்று கூறிக் கொண்டே அவளை இழுத்து உர்கார வைத்துஅவள் கன்னத்தில் ஆருந்த காயத்திற்கு மருந்து போட்டுக்கொண்டே தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்.

 

“நான் கேட்குறேன்னு தப்பா எடுத்துக்காத யூவி. நேத்து என்னவோ நீ சாக போறேன்னதும் எவ்ளோ அழுத? இப்போ இப்படி மாறிப்போய்ட்ட? என்ன நடிக்கிறியா?” என்று அவள் அர்த்தமாக கேட்ட கேள்வியை எதிர்பார்த்தவள் இல்லை என்றவாறு தலையாட்டிவிட்டு

 

“நான் சாகப்போறேன்னு டொக்டர் சொன்னதும் நானும் சாதாரணமா எல்லாரையும் போலதான் ரியேக்ட் பண்னேன்டி. ஆனால் உன்னைப் பாத்ததும் என் குடும்பம்தான் கண்ணு முன்னாடி வந்து நின்னது. எனக்கு எல்லாமாவா இருந்த என் அம்மா அப்பாவே என்ன விட்டு போய்ட்டாங்க. இதுக்கு பிறகு நான் எதுக்கு வாழணும்? எனக்கு கடவுள் இன்னும் ஆறு மாசம் கொடுத்திருக்கான். அத நினைச்சு நான் ரொம்ப சந்தோசப் படுறேன். அந்த ஆறு மாசத்தையும் அழுது வீணாக்க விரும்பல. ஒவ்வொரு நொடியையும் சந்தோசமா வாழணும்னு நினைக்கிறேன். எல்லாரும் ஒருநாளைக்கு சாகத்தானே போறோம். ஆனால் என்ன? எனக்கு நான் எப்போ சாகப் போறேன்னு முன்னாடியே தெரியும். ஆனால் மத்தவங்களுக்கு அது தெரியாது. அவ்ளோதான்.” என்று கண்களில் கண்ணீருடனும் உதட்டில் புன்னகையுடனும் சொன்னாள். அவள் கூறிய வார்த்தைகளில் மனது வெளுத்துப் போன அபி யூவியை இறுக்கமாக கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

 

“அழாதடி. நீயே அழுதா எனக்கு யார் சமாதானம் சொல்லுவா? நான் இன்னைக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா? நான் என் வாழ்க்கையிலேயே இவ்ளோ சந்தோசமா இருந்தது இல்ல. என்ன சுத்தி நிறையப் பேர் இருக்காங்க. அது ரொம்ப நல்ல ஒரு பீல் கொடுக்குது. எல்லாம் உன்னாலதான். செத்துப் போனாலும் உன்னை இந்த உதவிக்காக மறக்க மாட்டேன் அபி.” என்று கதையை வேறு திசையில் மாற்றி விட்டாள் யூவி.

 

இதன் பிறகும் எதையும் கேட்பது சரியில்லை என்று எண்ணி வெளியில் போய் விட்டாள் அபி. யூவியும் குளித்து உடைகளை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தாள். அவள் வந்த உடனே குழந்தைகளுடன் மிகவும் நெருங்கிவிட்டாள். அதற்குக் காரணம் அவள் வந்து இரண்டு மணித்தியாலமும் நொண்டி விளையாடிவது, கண்கட்டி விளையாடுவது, ஒளித்து விளையாடுவது என்று இதையே செய்து கொண்டிருந்தாள். அது மாத்திரமல்லாமல் அனைவருடனும் சகஜமாகவும் சமமாகவும் நெருங்கிப் பழகி விட்டாள்.

 

உறவு முறை கூறிக் கூப்பிடும் அளவுக்கு. சமையல் வேலைகளில் மகாலக்ஷ்மிக்கு உதவுவது, மீராவுடன் சேர்ந்து பலகாரம் செய்வது, உடைகளை தானே மடித்து அடுக்கி வைப்பது, துணிகளை மாடியில் காயப்போடுவது, பாட்டி தலைவலி என்று சொன்னதும் அவருக்கு மருந்து எடுத்துத் தருவது, குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருவது என்று அனைவருக்கும் விழுந்து விழுந்து உதவி செய்தாள்.

 

மகாலக்ஷ்மி எத்தனை தடவை “நீ இந்த வீட்டு விருந்தாளி. இதெல்லாம் செய்யக் கூடாது.” என்று கூறியும்

 

“உங்க வீட்டுப் பொண்ணுன்னு சொன்னீங்க. அபி வேலை செஞ்சா இப்படிதான் சொல்லுவீங்களா?” என்று கேட்டு அவர் வாயை அடைத்து விட்டாள். இவள் இவ்வாறு நடந்து கொள்வதைப் பார்த்து பாட்டியே சற்று அசந்துதான் போனார். இவ்வாறு இருக்கையில் அந்த வீட்டில் அனைவரும் ஆடுவதில் பல்லவியை விட யாரும் திறமை இல்லை என்று பேசிக் கொண்டார்கள்.

 

“நானும் நல்லாத்தான் ஆடுவேன். இந்த பல்லவிக்கு நான் ஒன்றும் குறைஞ்சவ இல்லை.” என்ற எண்ணம் யூவிக்குள் தோன்றிற்று. வந்த முதல் நாளே வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல்

 

“நாங்களும் நல்லாதான் ஆடுவோம். வேணும்னா வர சொல்லுங்க. நானா பல்லவியான்னு பாத்துடலாம்.” என்று பந்தையம் கட்டி விட்டாள்.

 

“நீயே சிட்டில இருந்து வந்திருக்க. இதுக்குள்ள என் பேத்திய விட அழகா ஆடிடுவியா? நானும் பாக்குறேன்.” என்று பாட்டி நாற்காலியில் அமர அனைவரும் அவரை சுற்றி நின்று கொண்டார்கள்.

 

யூவியின் நடனம் பல்லவியை விட பல மடங்கு நேர்த்தியாகவும் நாட்டியத்திற்கே உரிய நவரசத்துடனும் இருந்தது. அனைவரும் அவள் ஆடும் அழகைப் பார்த்து பூரித்தார்கள். அனைவரும் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாட்டி கூட யூவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்க, இதைக் கண்ட பல்லவிக்கு கோபம் வந்துவிட்டது.

 

“என்ன பாட்டி? நான் உங்க கண்ணுக்கு தெரிய மாட்டேங்குறேன்ல? நான் ஒத்துக்குறேன். அந்த பொண்ணு என்னவிட நல்லாதான் ஆடுறா. ஆனால் அதுக்காக என்ன பார்க்கவே மாட்டேங்குறீங்க?” என பொய்க் கோபம் கொண்டு அங்கிருந்து நகர அனைவரும் அவளை சமாதானப்படுத்த சென்று விட்டார்கள். ஆனால் யூவி நடப்பது என்னவென்று தெரிந்தும் அசையாமல் அப்படியே நின்று விட்டாள்.

 

குழந்தைகள் ஓடி வந்து “அக்கா நீங்க ரொம்ப அழகா ஆடுறீங்க. பல்லவி அக்காவோட நீங்கதான் பெஸ்ட். நீங்க எங்களுக்கு கத்து தரீங்களா?” என்று அழகாய் கேட்க

 

“பரத நாட்டியம் என்ன? எல்லாமே கத்துத் தரேன். பாட்ட போடுங்க.” என்று கூறியதும் குழந்தைகள் பாட்டை போட்டு விட்டன.

 

🎶🎶🎶

 

கண்ணோடு

காண்பதெல்லாம் தலைவா

கண்களுக்குச் சொந்தமில்லை

கண்களுக்குச் சொந்தமில்லை

 

கண்ணோடு

மணியானாய் அதனால்

கண்ணை விட்டுப் பிரிவதில்லை

நீ என்னை விட்டு பிரிவதில்லை

 

தக்ர தக்ர தக்ரதிம்

தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர

தக்ரதிம் தக்ர தக்ர தகஜம்

 

சலசல சலசல

இரட்டைக் கிளவி தகதக

தகதக இரட்டைக் கிளவி

உண்டல்லோ தமிழில்

உண்டல்லோ

 

பிரித்து வைத்தால்

நியாயம் இல்லை பிரித்துப்

பார்த்தால் பொருளும் இல்லை

இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ

 

தினக்கு தினக்கு

தின திந்தின்னானா

நாகிருதானி தோங்கிருதானி

தினதோம்

 

 

🎶🎶🎶

 

பாடலுக்கு குழந்தைகளுடன் யூவியும் சேர்ந்து ஆட அதே நேரம் வெளியே சென்றிருந்த ஆதி தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வீட்டிற்கு வந்திருந்தான்.

 

வீட்டில் நாலா திசையிலும் பாடல் ஒலிக்க உள்ளே தன் கண்களை விட்டு ஆராய்ந்தபடியே ஸூவை கழட்டி வெளியில் வைத்துவிட்டு உள்ளே நுழைந்தான். அப்போதுதான் குழந்தைகளுடன் ஆடிக் கொண்டிருந்தவளை நோக்கினான். அவள் ஆடும் அழகை கண் இமைக்காமல் ஒரு கையை தூணின் மீது வைத்து தலையை சாய்த்து பார்த்தவன் அவளைக் கண்டு பூரித்தே போய் விட்டான்.

 

வீட்டில் இருக்கும் அனைவரும் பல்லவி அழகாக ஆடுவாள். நன்றாகப் பாடுவாள் என்று புகழ் கீதம் இசைப்பார்கள். ஆதி அதை நேரில் பார்த்ததில்லை. இன்று இப்படி அழகாக அவள் ஆடுவதைப் பார்த்ததும் அவன் அவளை பல்லவி என்று தவறாக நினைத்து கொண்டான்.

 

யூவி திரும்பி ஆட முன்னரே குழந்தைகள் திரும்பி ஆட ஆரம்பிக்க ஆதியைக் கண்டு கொண்டார்கள். ‘கார்த்திக் அங்கிள்…’ என்று கத்த முன்னரே வாயில் கையை வைத்து சத்தம் போட வேண்டாம் என சைகை காட்டி குழந்தைகளை உள்ளே அனுப்பி வைத்தான் ஆதி. குழந்தைகளும் ஆதி வந்த விசயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் கூற சிட்டாய் பறந்து விட்டன.

 

இவள் ஒருத்தி தனியாக இரசனையுடன் பாடலினுள் மூழ்கி ஆட அவளையே பார்த்திருந்தவனுக்கு இப்படியே நின்றால் தன் திட்டத்தை முன் வைக்க முடியாது என்று ஓடிச்சென்று பின்னாலிருந்து அவள் இடையை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்து சுற்ற ஆரம்பித்து விட்டான். கூரையில் விழுந்து கிடந்த பூக்கள் இருவர் மீதும் சொரிந்தது இயற்கையின் ஆசிர்வாதத்திற்கு அறிகுறியாக வைத்துக் கொள்ளலாம்.

 

அவளுக்கு வியர்வை நெற்றியில் இருந்து சொட்டுச் சொட்டாக ஊறி தாடை வரை சென்று அதன் பின் எங்கு போவது எனத் தெரியாமல் கீழே சொட்டிக் கொண்டிருந்தது. யாரே தன்னிடம் இப்படி நடந்து கொள்கின்றார்கள் என்றதும் அவளுக்கு கோபம்தான் வந்தது.

 

அவன் வேகமாக சுற்றியதில் தலை சுற்றல் ஒரு பக்கம் அவளுக்கு எரிச்சலை கிளப்பியது. “ஆ…” எனக் கத்தி கூப்பாடு போட ஆரம்பித்துவிட்டாள். அவள் கத்திய கத்தலில் காதுதான் அடைத்தது அவனுக்கு. அவளை கீழே நிறுத்தியவன் அவளது வாயை கைகளால் இறுக்கமாக பிடித்துக் கொண்டு அவள் காதினருகில் சென்று,

 

“கத்தாத பல்லவி. யாராவது வந்துட போறாங்க. நான் தான். ஆதி வந்திருக்கேன். வாவ். வட் அ பியூடிபுல் டான்ஸ். யூ ஆர் க்ரேட். எல்லாரும் என்கிட்ட உன் புகழ்தான் வாசிப்பாங்க. ஆனால் அத இன்னைக்குதான் நேர்ல பார்க்குறேன். மூனு வருடத்துக்கு முன்ன பார்த்தது. இவ்ளோ வளர்ந்துட்ட. நானே இவ்ளோ மாறிப் போகும் போது நீ மட்டும் எக்ஸெப்ஸனா? அப்போவே ரொம்ப அழகா இருப்ப. இப்போ… சொல்லவா வேணும்?” என்று கட்டாயத்தின் பெயரில் அவன் காதல் வசனம் பேச அவள்தான் இவன் கையை தன் வாயில் இருந்து பிரிப்பதிலேயே கருத்தாக இருந்தாள். அது நடந்தால்தானே. அவன் கைகள் இவள் வாயை விடுவிப்பதாக தெரியவில்லை.

 

அவன் அது எதையும் கண்டு கொள்ளாமல் தடையாக இருக்கும் அவள் முடிக் கற்றைகளை ஒதுக்கி விட்டு “உன்ன பாக்கதான் இவ்ளோ தூரம் வந்தேன்.” என்று பொய் உரைத்தான் வேறு வழி இல்லாமல்.

 

அவன் செய்கைகளின் உறைந்து போனவளின் இதயம் வேகமாகத் துடித்து “இவன்தான் உனக்கானவன்.” என்று கூறியும் அதை புரிந்து கொள்ளாதவள் எந்த அசைவும் இல்லாமல் நின்று கொண்டிருந்தாள்.

 

அங்கே குழந்தைகள் ஆதி வந்த விசயத்தைக் கூற எல்லோரும் சந்தோசத்தில் முற்றத்தை நோக்கி ஓடி வந்தார்கள். அதிலும் பல்லவி… சொல்லவா வேண்டும்? உயிருக்கு உயிராக நேசிப்பவனை பார்க்க ஓடோடி வந்து கொண்டிருந்தாள்.

 

அப்போதுதான் ஆதியையும் யூவியையும் நெருக்கத்தில் பார்த்தவள் இதையம் சில நொடிகள் துடிக்காமலே நின்று விட்டது.

 

“கார்த்திக்… கார்த்திக்… கார்த்திக்…” என்று அவன் பெயரை ஏலம் போட்டுக் கொண்டு மஹாலக்ஷ்மி வர அவர் குரலில் சிந்தை கலைந்து ஆதி பார்க்க முன்னாள் கண்ணீருடன் நின்றிருந்தாள் பல்லவி.

 

முதலில் அதிர்ந்தவன் யூவியை விட்டுத் தள்ளிப் போக அவள் என்னமோ இன்னும் அவன் சிலையாகத்தான் நின்று கொண்டிருந்தாள். ஆதிக்கு “இது பல்லவி இல்லை என்றால் யார்?” என்ற சந்தேகம்.

 

அவள் முன் சென்று காற்றில் அசைந்து ஆடி அவள் முகத்தில் ஒட்டி அவள் அழகை மறைத்திருந்த முடிக் கற்றைகளை விலக்கி அவளை பார்க்க அப்படியே அதிர்ந்தே போய்விட்டான் ஆதி.

 

இவனை பார்த்த ஒரு நொடியில் உறைந்திருந்த யூவி அவன் முகத்தைப் பார்த்தும் தன்னிலைக்கு வந்து விட்டாள்.

 

ஒருவரை ஒருவர் ஏக சமயத்தில் “நீயா…?” என்று கோபத்துடன் நோக்கினார்கள். யூவி மேலே பேசத் தொடங்கினாள்.

 

“என்ன தைரியம் இருந்தா என்ன அடிச்சிட்டு இங்கேயே வருவ? ஹா? நீ எப்போ என் கைல மாட்டுவன்னு நினைச்சேன்டா. இன்னைக்கே நீ மாட்டிட்ட.” என்று ஆதியைப் பிடித்துக் கத்த ஆரம்பித்து விட்டாள்.

 

“வட் த ஹெல் இஸ் திஸ்? நீ யார்க்கிட்ட என்ன பேசுறன்னு தெரிஞ்சிட்டுதான் பேசுறீயா?” என்று கடுமையான குரலால் கத்திக் கேட்டான் ஆதி.

 

“உன் பெயரு ஊரு எல்லாம் தெரிஞ்சிட்டு பேசுற அளவுக்கு நீ எல்லாம் பெரிய ஆள் இல்ல. சும்மா சும்மா நான் யாருன்னு தெரியுமா? நான் யாருன்னு தெரியுமான்னு சினிமா டயலொக் எல்லாம் பேசாதடா. நீ எல்லாம் ஒரு ஆளு… உனக்கெல்லாம் என்னடா மரியாதை? இடியட். பண்றது தப்பு. அதை தட்டிக் கேட்டா அதுக்கும் நீ அடங்கிப் போகமாட்டேங்குற? உன் ஆட்டத்துக்கு அடங்கிப் போற சாதாரண பொண்ணு இல்லடா நான். தொலைச்சிடுவேன்.” என்று நடக்கப் போகும் விபரீதங்கள் என்னவென்றும் தெரியாமல் அவனைப் பகைத்துக் கொண்டு அபி பக்கம் திரும்பினாள்.

 

“என்னை ஒருத்தன் அடிச்சான்னு சொன்னேன்ல? அது இவன்தான்டி.” என்று சொல்ல அபியின் கால்கள் பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தன.

 

இதில் சீரியஸ்னஸ் புரியாமல் யூவி வேறு “என்னடி காலாட்ற?” என்று அவளது கோலத்தை பார்த்து கேட்டாள்.

 

“நான் எங்கடி ஆட்டுறேன்? தானா ஆடுதுடி.” என்று நடுங்கியவாறே கூறிக் கொண்டாள் அபி.

 

“அதெல்லாம் சரி. உனக்கிட்ட சொன்னேன் பாரு. ” என்று அவளை நினைத்து சலித்துக் கொண்டு அறைக்குள் சென்று அவன் விட்டெரிந்த பணத்தை எடுத்துக் கொண்டு வந்து அவன் முன் நின்றவள்

 

“என்ன சொன்ன? பணம் இல்லன்னாவா? எனக்கு உன் பணம் தேவையே இல்லை.” என மீண்டும் அவன் முகத்திலேயே விட்டெறிந்துவிட்டாள் யூவி.

 

இந்த நிகழ்வைப் பார்த்து ஒட்டு மொத்த குடும்பமும் திருதிருவென்று விழித்தது. அபி கொஞ்ச நேரம் கோமாவிற்கே போய் விட்டாள். இவள் செய்த காரியத்தால் ஆதியின் கண்களின் நரம்புகள் வெடித்து சிவக்க இரத்தம் கொதித்தெழ அவன் கைகள் ட்ரௌஸர் போக்கெட்டினுள் இருந்து மருத்துவர் கொடுத்த ஸ்மைலி போலை எடுத்து கோபத்தின் உச்சக் கட்டத்தில் அழுத்த அது ப்ரஸர் தாங்காமல் வெடித்துப் பஞ்சு பஞ்சாய் பறந்தே போய் விட்டது.

 

அவன் வந்த முதல் நாளில் அனைவரின் மனநிலையையும் மாற்ற வேண்டாம் என்ற எண்ணத்தில் கையை முறுக்கிக் கொண்டு அனைத்துயும் பல்லைக் கடித்தவாறு தாங்கிக் கொண்டிருந்தான். இல்லையென்றால் இந்த நொடி கட்டாயம் ஏதாவது சம்பவம் நிகழ்த்தி இருப்பான். விஜயன், மகாலக்ஷ்மி, மீரா, விக்ரம், விஷ்ணு, சரஸ்வதி ஆகியோருக்கு யூவியை ஆதி ஏதாவது செய்து விடுவானோ என்ற பயம்.

 

பாட்டி, பல்லவி, திவ்யா, சிவனேசன் நால்வருக்கும் ஆதியை இப்படி இவள் அவமாப்படுத்தி விட்டாளே என்ற எண்ணம். சக்தி, சிவராமன், கார்த்திகா, அனூயா ஆகியோர் ஆதியை அசிங்கப்பட்டதை நினைத்து சந்தோசப் பட்டுக் கொண்டார்கள்.

 

“உனக்கெல்லாம் அசிங்கமா இல்லை? படிக்காத முட்டாள் மாதிரி பண்ணிட்டு இருக்க? சென்ஸ், மேனர்ஸ், டீஸன்ட், டிஸ்ஸிப்ளின் எதுவும் இல்ல?” என்று அவனை திட்டித் தீர்க்க அதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த  பாட்டிக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்துவிட்டது. இவள் இப்படிக் கத்தி அவன் மீண்டும் போய் விட்டால் யார் பல்லவியை கல்யாணம் பண்ணுவது?

 

“நிறுத்து… யார் வீட்டுல வந்து யார பத்தி தப்பா பேசுற? இது அவன் வீடு. என் பேரன். அவன எங்க எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்த உனக்கு என்ன துணிச்சல்?” என்று கத்தினார்.

 

பாட்டியின் பேச்சில் தடுமாறியவள் “என்னாது? பேரனா?” என்று அபியைப் பார்த்தாள் அப்பாவி யூவி.

 

அவளும் “ஆம்.” என்றவாறு மேலும் கீழும் தலையாட்ட

 

“போச்சா… எல்லாமே போச்சா… பாட்டி வீட்ட விட்டு போக சொல்லிடுவாங்களோ?” என்று மனதிற்குள் கற்பனைக் கோடுகளை வரைந்து கொண்டாள் யூவி.

 

அபிக்கு என்னவென்றால் ஆதிக்கு அவளும் யூவியும் சேர்ந்து போடும் நாடகம் தெரிந்தால் நிச்சயமாக நிம்மதியாக இருக்க விட மாட்டான் என்ற பயம் ஒரு பக்கம். ஆதி நாட்டில் இல்லை என்ற தைரியத்தில் தான் அவள் யூவியை வீட்டுக்குள் அழைத்துவர சம்மதித்தாள். ஆனால் இப்போது அவனே இங்கு வந்து நின்று ப்ளட் ப்ரஸரை ஏற்றி விட்டான்.

 

இன்னொரு பக்கம் பல்லவி அவனை காதலிக்கிறாள். அப்படிப்பட்டவள் கண்ணிற்கு முன்னாலேயே ஆதி ஒரு பெண்ணிற்கு தனக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுத்துள்ளான் என்று எண்ணி உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கிளாள்.

 

ஆதியை கெஞ்சிக் கூத்தாடி கஷ்டப்பட்டு இங்கு அழைத்துள்ளார் பாட்டி. அவன் ஊ என்றாலே உச்சாணிக் கொம்பில் ஏறி நிற்பான். இப்பொழுது மீண்டும் கோபித்துக கொண்டு போய் விடுவானோ என்ற பயத்தில் பாட்டி ஒரு பக்கம். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தின் மீது கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர்.

 

இப்போதைக்கு ஆதியை சமாதானம் செய்ய யூவியைத்தான் தாட்ட வேண்டும் என்று அறிந்த பாட்டி “என் பேரனை நீ தரம் குறைச்சு பேசுறீயா?  நீ அவனை கைநீட்டி பேசிட்டியா? இனிமேல் இந்த வீட்டுல உனக்கு இடமில்லை. இங்க இருந்து வெளில போ.” என்று கத்தினார்.

 

அதைக் கேட்டதும் யூவிக்கு திக்கென்றது. திரும்பவும் அநாதையாகி விட்டோமோ என்ற உணர்வு அவளுக்குள் எழுந்தது. ஆனால் ஆதி அதனை தடுக்கும் முகமாக. ஆதிக்கு இந்த நாடகமெல்லாம் தெரியாமல் இல்லை.

 

“வேணாம் பாட்டி. எனக்கும் இவளுக்கும் இடையில இருக்குறத நானே தீர்த்துக்குறேன். அதுக்கு இவ இங்கேயே இருக்கணும்…. என்ட்… வன் மோர் திங். இவளை இங்க இருந்து யாருமே வெளில அனுப்பக் கூடாது. இவ வெளில போகனும்னா என்கிட்ட கேட்டுட்டு தான் போகணும்.” என்று கூற யூவி சற்று நிம்மதியுடன் மெல்ல நகர அவளை மறுபடியும் சொடக்கு போட்டு அழைத்தான் ஆதி.

 

அவள் திடுக்கிட்டு திரும்ப “நீ இந்த வீட்டுல இரு பரவால்ல. ஆனால் என் கண்ணுல மட்டும் மறுபடியும் பட்டுடாத. விளைவு விபரீதமா இருக்கும்.” என்று எச்சரிக்க யூவி தப்பித்தோம் பிழைத்தோம் என்று அபியின் அருகில் போய் நின்று விட்டாள்.

 

மகாலக்ஷ்மி தன் மகனை பல வருடம் கழித்து காண ஓடிச் சென்று அவனை கட்டி அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார். ஆதி என்றால் மகாலக்ஷ்மிக்கு உயிர். என்னதான் தனக்கு விக்ராந்த் என்ற மூத்த மகன் இருந்தாலும் ஆதியின் மீதுதான் மகாலக்ஷ்மிக்கு அதிக பாசம். அது ஏனென்று அவருக்கே தெரியாது.

 

அவனும் தாயை அணைத்துக் கொண்டு அவரை சமாதானம் செய்தான். பாட்டி அவனை ஆரத்தி காட்டி உள்ளே வரவேற்றார். பல்லவி இன்று நடந்த விடயத்தில் ஆதியின் மீது உச்சகட்ட கோபத்தில் இருந்தாள். இதற்குள் கார்த்திகா வேறு பல்லவியை யூவிக்கு எதிராக ஏற்றிவிட ஆரம்பித்தார்.

 

“என்னடி எல்லாம் கைய மீறிப் போற மாதிரி தெரிது. கார்த்திக்கு நல்லா சமைச்சு போட்டு கைக்குள்ளேயே வெச்சிக்க. இல்லன்னா என் கதை மாதிரி தான் உன் கதையும் ஆகிடும். பிறகு கார்த்திக்கை தொலைச்சிட்டு முழிச்சிட்டு நிப்ப.” என்றார் விஷமமாக.

 

“என்ன சித்தி சொல்ற? அது ஆதித்யா மாமா. இது கார்த்திக் மாமா. ஆதித்ய வர்மா வேற ஆதிஷேஷ கார்த்திக்கேயன் வேற. ரெண்டு பேரும் ஒன்னாகிட முடியாது. அவர் நான்னு நினைச்சி தானே அவக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டார். அப்போ என் மேல அவருக்கு காதல் இருக்கு தானே? என் கார்த்திக் மாமா என்னை மட்டும்தான் காதலிப்பாரு. வேற எந்த பொண்ணையும் அவர் காதலிக்க மாட்டார். அதுவும் இல்லாம அவ பண்ணதுல அவ மேல ரொம்ப கோபத்துல இருக்காரு.” என்றாள் தன் மனதை ஆசுவாசம் செய்தவாறு.

 

“ஹ்ம்… இப்படித்தான் நானும் நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் இந்த பூனையும் பால் குடிக்குமாங்குற மாதிரி அந்த ஆதித்ய வர்மா எவளோ ஒருத்திய கட்டிக்கிட்டு வந்து நிக்கல? அவனும் வெளி நாட்டுல படிச்சவன். இவனும் வெளி நாட்டுல படிச்சவன். அவன மாதிரி தானே இவனும் இருப்பான். இந்த பொண்ணு வேற சிட்டில இருந்து வந்திருக்கு. ஒருவேளை அவன் காதல் காத்து அவ பக்கம் வீசுச்சுன்னா என் நிலைமைதான் உன் நிலைமையும். அதுதான் எதுக்கும் அவ மேல ஒரு கண்ணு வெச்சிருக்கேன். அவ முழியே சரியில்லை. அவ மேல எனக்கு ஏதோ சந்தேகமாவே இருக்கு. நீயும் கார்த்திக்க அவளை விட்டு கொஞ்சம் தள்ளியே வெச்சிக்க.” என்று எச்சரித்தார் கார்த்திகா.

 

“சரி சித்தி. நானும் பாத்துக்குறேன்.” என்று கூறிவிட்டு ஆதியை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பல்லவி. ஆனால் அவனுக்கு அவள் எல்லாம் கணக்கிலே இல்லை. பல்லவி என்றால் அவனுக்கு வெறும் வெறுப்புத்தான் மிஞ்சி இருக்கிறது. (நீங்க யோசிக்கிறது புரிது… அதைப் பத்தி பிறகு சொல்றேன்.)

 

ஆதிக்கு பசியின் அகோரம் தாங்க முடியவில்லை. அவன் முக வாட்டத்திலேயே மகாலக்ஷ்மி தன் அவன் மனதில் என்ன ஓடுகிறது என்று புரிந்து கொண்டு

 

“முகம் கழுவிட்டு வா கார்த்திக். சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.” என்று கூறி அவனை அனுப்பி வைத்தான். அவன் வருவதை அறிந்து அவனுக்காக விருந்தே ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள்.  அவனும் குளித்துவிட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தான். இத்தனை நாளும் எப்படி சாப்பிட்டிருந்தாலும்… இப்படி தரையில் இரு கால்களையும் மடித்து உட்கார்ந்து கொண்டு இலையில் உணவை வைத்து குடும்பமாக வரிசையில் இருந்து சிரித்துப் பேசி சாப்பிடுவதே ஆதிக்கு மிகவும் பிடிக்கும்.

 

ஆதியின் வருகையில் மூன்று வருடத்திற்கு பிறகு வீட்டில் கலகலப்பும் சந்தோசமும் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அந்த வீட்டின் அர்த்தமே காவ்யாவும் ஆதியும்தான்.  காவ்யா போன பிறகு ஆதி நிரந்தரமாக யூ. எஸ்ஸில் தங்கி விட்டான். இல்லை.. ஆதியின் மீதிருந்த கோபத்தில் மொத்தமாக குடும்பமே வெறுத்து அவனை தனிமரமாக்கி தனியே இருக்கும் நிலமையில் தள்ளி விட்டார்கள்.

 

அபியும் வெளியூரில் படிப்பதற்காக வந்துவிட்டாள். அகல்யா தன் கணவன் மரணத்தில் தன்னை அறையிலேயே சிறை செய்து கொண்டாள். இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் போக குடும்பமே சிதறி சின்னாபின்னமாகி விட்டது.

 

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! 🖌️ – 03”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!