நாணலே நாணமேனடி – 03

4.9
(8)

“எனக்கு இன்னுமே நம்ப முடியல சார். நீங்க மறுமணத்துக்கு சம்மதிச்சு இருக்கீங்க! விஷயம் தெரிஞ்சதும் ஐ வாஸ் ரியலி சர்ப்றைஸ்டு..” என உவகை பொங்கப் பேசிக் கொண்டிருந்தவளை யதுநந்தன் சற்றும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.

இயந்திரகதியில் இரண்டு தோசைகளை உள்ளே தள்ளியவன், “லொட லொடனு பேசிட்டு இருக்காம குட்டிமாவைப் பார்த்துக்கோ!” என்று விட்டு எழுந்து கொள்ள,

“பல்லவியை நினைச்சி நீங்க இப்படியே உங்க வாழ்க்கையை ஓட்டிடுவீங்களோனு பயந்துட்டு இருந்தேன் சார்!” என முணுமுணுத்தவளின் கண்களில் கண்ணீர் ஊர்வலம்.

தன் வயதை மறந்து, விடலைப் பருவ வாலிபன் போல் மூர்த்தி சில தினங்களாகவே பரபரத்துக் கொண்டிருப்பதை அவளும் அவதானித்துக் கொண்டு தான் இருக்கிறாள்.

இன்று காலையில் தான் அவரது சுறுசுறுப்பான காரணம் என்னவெனத் தெரிய வந்தது அவளுக்கு.

வேலைக்காரப் பெண், “சின்னையா மறுமணத்துக்கு ஓகே சொல்லிட்டாராம் கீர்த்தி! அதுனால தான் பெரிய ஐயா கால்ல சக்கரம் கட்டாத குறையா இப்படி ஓடித் திரியிராரு!” எனக் காதோடு உதடுரச ரகசியமாய் பகிர்ந்து கொண்ட தகவலில், கீர்த்தனாவிற்கு ஜில்லென்று உச்சி குளிர்ந்து போயிற்று!

“என்ன!” என்று இன்ப அதிர்ச்சியில் சற்று சத்தமாகவே கூவி விட்டவளுக்கு, ‘ஐயையோ, காலும் ஓடல! கையும் ஓடல!’ என்கின்ற நிலைமை தான்.

கீர்த்தனாவின் கையளவான இதயம் அதீத சந்தோசத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஏறி இறங்க, தாமதிக்காமல் மேல்மாடிக்கு விரைந்து சென்றாள், யதுநந்தனைக் காண!

அவள் யுவனியைக் கவனித்துக் கொள்வதற்கு ‘கேர்டேக்கராக’ நியமிக்கப்படுவதற்கு முன்பே, பல்லவியின் சிறந்த தோழி! சொல்லிக் கொள்ளா விட்டாலும் நந்தனுக்கு குட்டித் தங்கை போன்றவள். முதன் முதலில் பல்லவி நந்தனுக்கு அறிமுகமாகியது கூட அவள் மூலமாகத் தான்!

‘சார், இவ என்னோட பிரண்ட் பல்லவி!’ என முதல் முறையாக கல்லூரி வளாகத்தில் வைத்து அவள் அறிமுகம் செய்து போது,

‘ஓ, ஹாய்!’ என அசுவாரஷ்யத் தொனியில் கை அசைத்து பல்லவியை அசாத்தியமான முறையில் கடுப்பேற்றிய நந்தனின் முகபாவனைகள் இன்றும் நினைவில் இருந்தது, கீர்த்தனாவுக்கு!

கிருஷ்ண மூர்த்தியின் தயவில் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு, இன்று திருமணமாகி சந்தோசகரமான வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாதியற்ற அனாதைப் பெண் தான், கீர்த்தனா!

மூர்த்தியின் மீதான நன்றியுணர்ச்சி தான் அவரின் ஒற்றைப் புத்திரனது வளவாழ்வை எண்ணி அவளைப் பெருமளவில் கலங்க வைத்ததும், அவனின் முடிவை அறிந்து உவகை வெள்ளத்தில் அவளைப் பிடித்துத் தள்ளியதும்!

மாடிக்கு விரைந்தவள், கோர்ட்டுக்கு செல்வதற்கு ஆயத்தமாகி வெளியே வந்தவனின் முன் மூச்சிறைக்க வந்து நின்று, தொண்டைக் குழியில் நீர் வற்றிப் போகும் அளவுக்கு தன் சந்தோசத்தை வார்த்தைகளால் பகிர்ந்து கொண்டாயிற்று!

ஆனால் ஆடவன் அவள் சொன்ன எதையும் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.

யுவனியின் எதிர்காலமும், அவளது சந்தோசமும் பெரிதாகப்பட்டதால் தான் ஒரு வார கால பலத்த சிந்தனையின் பிறகு மறுமணத்துக்கு சம்மதித்ததாக இறுகிய குரலில் சொல்லி வைத்தான். அவ்வளவே!

வெகு சாமர்த்தியமான முறையில் தாயன்பைப் பறைசாற்றும் காட்சிகளைக் கை காட்டி, கஷ்டமின்றி மூளைச் சலவை செய்து அவனை மறுமணத்துக்கு சம்மதிக்க வைத்த பெருமை கிருஷ்ண மூர்த்தியையே சாரும்!

தன் மனதை துல்லியமாக அறிந்து வைத்திருக்கும் கீர்த்தனாவே இப்படி வானுக்கும் பூமிக்குமாய் துள்ளுவதைப் பார்க்கும் போது எரிச்சல் எக்கச்சக்கமாக வந்து தொலைத்தது நந்தனுக்கு.

தான் பேசிக் கொண்டிருக்கும் போதே கடுகடுத்த முகத்துடன் சாப்பிட்ட பாதி, பட்டினி மீதியாய் எழுந்து சென்றவனை கண்களில் கண்ணீர் ததும்பப் பார்த்திருந்த கீர்த்தனா,

‘நீங்க நல்லார்க்கணும்னு வேண்டிக்கிறேன் சார். என்னைக்கா இருந்தாலும் அதைத் தான் பல்லவியும் விரும்புவா!’ எனப் பெருமூச்சுடன் நினைத்துக் கொண்டாள்.

அப்போது கீழறைக்குள் யுவனி சிணுங்கும் சத்தம் கேட்கவே, கடைக் கண்ணோரம் வழிந்த கண்ணீரைப் பெருவிரலால் சுண்டி விட்டபடி அறை நோக்கி நடை கட்டினாள் கீர்த்தனா.

மூர்த்தி நீட்டிய உதவிக் கரத்தைக் கொழுகொம்பாகக் கொண்டு வாழ்வில் இத்தனை தூரம் வந்து விட்டவளுக்கு வரன் தேடி திருமணம் செய்து வைத்ததும் அவரே!

வாய் விட்டு சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும், அவள் அவர்களின் வீட்டு பெண். மூர்த்திக்கு சொந்த மகள் போன்றவள் தான்!

பல்லவி இறந்து போனதும் நந்தன் யுவனியைக் கவனித்துக் கொள்ள ‘கேர் டேக்கர்’ தேடும் தகவல் அறிந்து அவளே ஓடி வந்து யுவனியைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

‘நானே அவளுக்கு கேர்டேக்கராக இருந்து கொள்கிறேன் சார்!’ எனக் கூறி இறைஞ்சி நின்றவளிடமிருந்து குழந்தையைப் பறித்துக் கொள்ள, கண்டிப்பாக எவருக்கும் மனம் இடம் கொடாது!

அன்றிலிருந்து தோழியின் கருவறை சிற்பத்துக்கு அவளே தாயாகி, தராசை சரி நிகராக்கும் முயற்சியில் அன்பை மழையெனக் கொட்டி வளர்க்கிறாள்.

திருமணமாகி மூன்று வருடங்கள் கடந்த நிலையில், இப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக வலம் வருபவளுக்கு யுவனியின் மழலைச் சிரிப்பொலி மனதுக்கு இதத்தைக் கொடுக்கும் என்பதால், இருவரின் பாசப் பிணைப்புக்குள் தலையிடாமல் தந்தையும், மகனும் சற்றுத் தள்ளியே இருந்து கொண்டனர்.

இன்னும் இரண்டு மாதங்கள் கடந்து விட்டால் அவளின் நிலையைக் கருத்திற்கொண்டு, ‘இனிமேல் நீ இங்கே வராதே’ என மூர்த்தி சத்தம் வைப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

யுவனியை இன்னொருத்தியிடம் ஒப்படைப்பதில் அவளுக்கு இஷ்டமில்லை. பணத்தை முதன்மையாகக் கொண்டு செயற்படுவோர் மத்தியில் எல்லோரும் உண்மையான அன்பைச் சொரிவோர் அல்லரே? அதனாலோ என்னவோ ஆரம்பத்திலிருந்தே யதுநந்தனுக்கு மறுமணத்தைப் பற்றி வலியுறுத்திக் கொண்டிருந்தாள்.

அவள் முயற்சியொன்றும் வீண் போகவில்லை. கண்களைக் கசக்கியபடி அவள் தினமும் காலையில் எடுக்கும் அரைமணி நேர லெட்சர் யதுநந்தனைப் பல நாட்கள் சிந்திக்க வைத்திருக்கிறது.

அத்துடன் மூர்த்தியின் சாமர்த்தியமும் சேர்ந்து கொண்டதில் யதுநந்தன் மறுமணத்துக்கு தலையாட்ட வேண்டிய நிர்ப்பந்தம்!!

இன்னுமென்ன.. தித்திக்கும் மனதுடன் அறைக்குள் நுழைந்தவள் கட்டில் விளிம்பில் கீழிறங்க போராடிக் கொண்டிருந்தவளைக் கண்டு பதறி, “குட்டிமா..” என்ற அழைப்புடன் ஓடிச் சென்று அள்ளி அணைத்தாள்.

“அத்து, பப்பு கித்த போணும்!” என மழலையில் சிணுங்கியவளின் உச்சி முகர்ந்த கீர்த்தனா,

“பப்பு இதோ இப்ப வந்திடுவாரு குட்டிமா. அதுக்குள்ள நம்ம போய் பிரெஷ்ஷாகி மில்க் குடிப்போமாம் என்ன..” என்று கொஞ்சியபடி குளியலறைக்குள் நுழைந்தாள்.

இங்கே, “பொண்ணுக்கு எந்த குறையும் இருக்க கூடாது. நல்ல பண்பானவளா, பார்த்ததுமே மனசை நிறைக்கிற மஹாலக்ஷ்மி போல இருக்கணும்..” என விரல் மடக்கித் திறந்து தரகரிடம் மருமகளுக்கான தகுதிகளை அடுக்கிக் கொண்டிருந்தார், கிருஷ்ணமூர்த்தி.

அப்போது, மறந்து விட்டுச் சென்றிருந்த கார் சாவியை எடுப்பதற்காக வீட்டினுள் நுழைந்த யதுநந்தன், அவர் கூறிவற்றை செவியேற்று விட்டு பலமாக தொண்டை செருமினான்.

சட்டெனப் பதறி ‘அட்டேன்ஷன் மோடு’க்கு தாவியவரின் பார்வை, தன்னைக் கடந்து சென்று கீய் போர்ட்டிலிருந்த கார் சாவியை எடுத்துக் கொண்டு திரும்பியவனில் நிலைத்தது.

‘பணக்கார வீட்டுல பெண் எடுக்கணும்னு கனவுலயும் நினைக்காதீங்க. வரதட்சணையா ஒரு பைசா கூட வாங்க கூடாது டேட். டிவோர்ஸீ வேணாம். விதவையா இருந்தா பரவால்ல.. அவ யுவனிக்கு அன்பான அம்மாவா இருக்கணும். அழகு முக்கியமில்லை, பண்பானவளா இருக்கணும்..’ என மறுமணத்துக்கு சம்மதித்த கையோடு அவன் வைத்த ‘கண்டிஷன்கள்’ அவரது காதுக்குள் ரீங்காரமிட,

“நந்தா!” என்று அழைத்தார், பற்களைக் காட்டியபடி.

அவரை நக்கலாகப் பார்த்தவன், “எஸ் டேட்!” என்க, அவனது குரலில் வழிந்த கேலியைப் புரிந்து கொண்டு மெல்ல தலையைத் திருப்பி தரகரை ஏறிட்ட மூர்த்தி,

“பொண்ணு பணக்காரியா இருக்க கூடாது. பண்பானவளா, நந்தாவுக்கு பேர்ஃபேக்ட்டான ஜோடியா இருக்கணும்..” என்றார், சுருங்கிப் போன முகத்தோடு!

தரகரை அழுத்தமாகப் பார்த்து விட்டு அடுத்த நிமிடமே அங்கிருந்து அகன்றிருந்தான், யதுநந்தன்.

“ஷப்பா! முடியல. இவனுக்கு மறுமணம் பண்ணி வைச்சி, பேரன் பேத்தி காணுறதுக்குள்ள நான் குழிக்கு போய்டுவேன் போல..” என சலித்துக் கொண்டவர்,

“பொண்ணு பார்க்க லட்சணமா, அழகா இருக்கணும். பார்த்த பார்வைக்கே என் பையன் பிளாட் ஆகிடணும் தரகரே!” என்று கிசுகிசுப்பான குரலில் முணுமுணுத்தார்.

‘யுவனிக்கு அம்மா ஆகுறவ அழகும், பண்பும் நிறைந்தவளாக இருந்தால், அப்படியே என் பையனுக்கும் பொண்டாட்டி ஆகிட மாட்டாளா? அவன் மனசும் காலப் போக்குல மாறிப் போய்டும்..’ என்பது அவரின் எண்ணப்போக்கு!

களைத்துப் போய் மாலையில் நந்தன் வீடு வருகையில், கூடத்தில் கீர்த்தனாவுடன் அமர்ந்து மழலையில் கொஞ்சிக் கொண்டிருந்தாள் யுவனி.

சோர்வு நீங்கப் பெற்று முகம் விகசித்தவன், “பாப்பா!” என்ற கொஞ்சலுடன் மகளை நாலே எட்டில் நெருங்கி கைகளில் அள்ளிக் கொள்ள, சற்றிலும் குண்டுக் கண்களை உருட்டிய சிறியவள்,

“பப்பு, மம்மீஈ..” என்றாள், அழுகையில் பிதுங்கிய இதழ்களுடன்.

“ம.. மம்மியா?” என முழித்தவன், “என்ன கேட்குறா இவ? யாரு வந்தா இங்க..” என்று கீர்த்தனாவிடம் விசாரிக்க,

“ஹாஹா, சார்! அவ புது மம்மியைப் பத்தி கேட்குறா. இன்றைக்கே நீங்க கூட்டிட்டு வந்திடுவீங்கனு நினைச்சிட்டா போல.. இல்ல குட்டிமா?” என கலகலத்துச் சிரித்தாள்.

“கீர்த்தி நீ ரொம்ப ஓவரா போற!” எனப் பற்களை நறநறத்தவன் யுவனியை தூக்கிக் கொண்டு அறைக்குச் சென்று விட, ரகசியமாக உதட்டுக்குள் நகைத்துக் கொண்டாள் கீர்த்தனா.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் வழமை போல் தான் கழிந்து போனது, யதுநந்தனுக்கு.

அன்றிரவு ஒரு கவரை நீட்டி, “இதுல பொண்ணு போட்டோ இருக்கு. நீ கேட்டபடி பார்த்து பார்த்து நானே செலக்ட் பண்ணினேன் நந்தா!” என உருகினார் மூர்த்தி.

கவரைக் கையில் வாங்காமலே, “உங்களுக்கு பொண்ணைப் பார்த்தா ஸாட்டிஸ்ஃபைடா இருக்கா டேட்?” என்று கேட்டானே பார்க்கலாம்,

“எதே!” என அலறியே விட்டார், முதியவர்.

திரும்பி தந்தையை முறைத்து, “பார்றா! ரொம்ப தான் ஆசை..” என நொடித்துக் கொண்டவன், “உங்களுக்கு ஓகேனா நான் ஏன் டேட் சும்மா தடுமாறனும்?” என்று கேட்க, மூர்த்திக்கு முகம் மலர்ந்திற்று!

“அடுத்த வாரம் பொண்ணு பார்க்க போறோம் நந்தா. சென்னைல தான்..”

சலித்துக் கொண்டவன், “நான் பொண்ணு கிட்ட தனியா பேசணும் டேட். முதல்ல அதுக்கு ஏற்பாடு பண்ணுறீங்களா?” என்று வினவ,

“என்னடா மகனே.. இவளோ ஃபாஸ்ட்டா இருக்க?” என வாய் பிளந்தார் மூர்த்தி.

கண்களை மூடித் திறந்தவன், “டேட், நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன். டோன்ட் டேக் இட் ஆஸ் அ ஜோக்!” என்றுவிட்டு,

“நான் அவகிட்ட டைரக்ட்டா எல்லாத்தையும் பேசிடறேன். ஓகேனா அதுக்கு பிறகு இந்த பொண்ணு பார்க்குறது, நிச்சயதார்த்தம், அது இதுனு எதை வேணா பார்த்துக்கங்க. என்னை அறுக்காதீங்க. எல்லாம் குட்டிமாக்காக மட்டும் தான்!” என்றான், இறுகிய குரலில்.

எங்கே முதலுக்கு மோசமாகி விடுமோ என அஞ்சி அவசரமாகத் தலையாட்டி வைத்தவர், அடுத்த இரண்டு நாட்களிலே அதற்கான ஏற்பாடுகளைப் பக்காவாக செய்து முடித்திருந்தார்.

“இது அந்த பொண்ணு காண்டாக்ட் நம்பர். நாளைக்கு ஈவினிங் பைவ் ஓ’கிளாக்! **** ரெஸ்டாரண்ட்.” என்று கூறி தந்தை நீட்டிய காகிதத் துண்டை எடுத்து வைத்தவன், மறுநாள் யுவனியையும் அழைத்துக் கொண்டு உணவகத்துக்குச் சென்றான்.

இதோ கேட்பான், அதோ கேட்பான் என எதிர்பார்த்திருந்து, படு மோசமான முறையில் ஏமாந்து, ‘என்ன! இவன் ஏன் இப்படி இருக்கான்? பொண்ணு பேர் என்னனு கூடவா இவனுக்கு கேட்க தோணல?’ என முழித்து நின்றதென்னவோ, கிருஷ்ணமூர்த்தி தான்!

   ••••••••

மாலை ஐந்து மணி இருக்கும்! குனிந்த தலை நிமிராமல் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தாள் சம்யுக்தா.

“என்னமா விளையாடறியா? வர்றதே லேட்டு! இதுல நேர காலத்தோட வீட்டுக்கு வேற போகணுமாமே.. இப்படியே போனா எப்படி? உன்னை உதாரணம் காட்டி இன்னும் சிலர் பொறுப்புல இருந்து நழுவப் பார்க்குறாங்க. நீ இப்படி பொறுப்பே இல்லாம இருக்கியே சம்யுக்தா!” என்று மூச்சை இழுத்துப் பிடித்து கத்திக் கொண்டிருந்த காருண்யராஜிடம் தன் தரப்பை நியாயப்படுத்த விரும்பாமல், ‘அமைதியே என் வழி’ என மௌனம் காத்து நின்றாள் பாவை.

‘அவரின் கோபமும் நியாயம் தானே?’ என அவர் மீது பெருமதிப்பு கொண்ட ஒருமனம் பரிந்து கொண்டு வர, அதிலிருந்த உண்மைத் தன்மை உணர்ந்தவளுக்கு பேச நா எழவில்லை.

உள்ளங்கை வியர்வைக்குள் நனைந்து கொண்டிருந்த டப்பா அலைபேசி வேறு ஓய்வின்றி வீறிட்டுக் கொண்டே இருக்க, ‘ஐயோ’ என்றாகிப் போனது அபலைக்கு.

இப்போது காருண்யராஜின் கவனம் மெல்ல அலைபேசி பக்கம் திரும்பிற்று!

அவளின் அமைதி முகம் அவரது கோபத்தை கொஞ்சமாய் தணிக்க, பாட்டிலில் இருந்த நீரை மடமடவென தொண்டைக்குழிக்குள் சரித்துக் கொண்டவர், “யாரு கூப்பிடறா?” என்று கேட்டார், பரிவுடன்.

“த்.. தங்கச்சி சார்!”

சில நொடி நேரத்துக்குப் பிறகு, “ம்ம், நீ போ!” என்ற அனுமதி புறப்பட்டது அவரிடமிருந்து.

“சா..சார்!”

“இது தான் லாஸ்ட்! இனிமே பாதி நேரத்துல போகணும், அது இதுனு காரணம் சொல்லிட்டு வந்து என் கண்ணு முன்னாடி நிற்க கூடாது, சொல்லிட்டேன்!” எனக் கராறாகக் கூறியவரைப் பார்த்து பெருமூச்சுடன் தலை அசைத்தவள், இதற்கு முன்பும் இதைப் போன்ற பல ‘லாஸ்ட்’களைக் கடந்து வந்தவள் தான் என்பது நகைப்புக்குரிய தகவல்!

“ரொம்ப நன்றி சார்!” என்றவள் மீண்டும் கதறத் தொடங்கிய அலைபேசியைக் கடுப்புடன் முறைத்து விட்டு அழைப்பை இணைக்க,

“நீ வரியா, இல்லையா?” என மறுபுறத்தில் எரிந்து விழுந்தாள் சாந்தனா.

“புரிஞ்சி தான் பேசுறியா சந்தா? நான் நினைச்சதும் ஓடி வர இது ஒன்றும் நான் கட்டிப்போட்ட துணிக்கடை இல்ல..” என களைப்பும், திட்டு வாங்கிய சோர்வும் ஒரு சேரத் தாக்கியதில் எகிறினாள் சம்யுக்தாவும்.

“என்னவோ போ! நீ எப்போ வருவ?”

“இதோ கிளம்பிட்டேன். ஹாஃப் அன் அவர்ல வந்திடுவேன் சந்தா!”

“சரி, நீ வீட்டுக்கு வராத. **** ரெஸ்டாரண்ட் வந்திடு! அவர் அங்க தான் வெயிட் பண்ணுறாராம். இப்போ தான் தெரிஞ்சுது!” என்றவள் பட்டென்று அழைப்பைத் துண்டித்து விட,

“ரெஸ்டாரண்டுக்கா?” என திகைத்தவளின் மனதினுள் பல யோசனைகள் சூழ்ந்து அவளைப் பயமுறுத்தின.

முகத்தை நீரால் அடித்துக் கழுவிக் கொண்டு பத்து நிமிட தூரம் தான் என்பதால் உணவகத்தை நோக்கி வியர்க்க விறுவிறுக்க நடக்கத் தொடங்கினாள் சம்யுக்தா.

உணவகத்தில், ஐந்து மணி எனக் கூறி விட்டு ஐந்தரை மணியாகியும் இன்னுமே வந்து சேராதவளை நினைத்து சலிப்புடன் அமர்ந்திருந்தான் யதுநந்தன்.

ஏனோ, முதலிலே ‘அவள்’ மீதான ஒரு அதிருப்தி சூழ்ந்து கொண்டது, அவன் மனதில்! அந்த அதிருப்தி அவளைக் கண்டதும் பஞ்சாய் போகுமா.. இல்லை, வலுப்பெறுமா..

ஆமாம், யாரந்த ‘அவள்’?

தொடரும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!