நாணலே நாணமேனடி – 05

4.8
(5)

தந்தையின் நெஞ்சணையில் சாய்ந்து சுகமாக உறங்கிக் கொண்டிருந்தாள் யுவனி. அவளின் தலை வருடி விட்டவாறே கட்டிலில் சாய்ந்து விட்டத்தை வெறித்திருந்தான் யதுநந்தன்.

கடலலை போல் மோதிச் சென்ற நினைவுகளில் எல்லாம், தெத்துப் பற்கள் தெரியும்படி அழகாக சிரித்துச் சென்றாள் பல்லவி.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன், ஆயிரமாயிரம் கனவுகளும் ஆசைகளும் போட்டி போட, பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தவளைத் தூக்கிக் கொண்டு இரவோடிரவாக மருத்துவமனைக்கு ஓடிய காட்சி மனக்கண் முன் தோன்றியதும் கண்கள் பனித்தன ஆடவனுக்கு.

சிலமணித் துகள்கள் காற்றோடு கரைந்த பிறகு, பூக்குவியலைக் கையிலேந்தி மனையாளின் முன் நெற்றியில் நேச முத்தமொன்றைப் பதித்துத் தன் சந்தோசத்தை வெளிப்படுத்த காத்திருந்தவனுக்கு கிட்டிய ஏமாற்றமோ, வானளவு விஷாலமாநதி தான்!

தன் உயிர் துளியால் உருவானவளை நடுங்கும் கரங்களால் ஏந்திய நொடியில், வருத்தத்துடன் ஓங்கி ஒலித்த மருத்துவரின் குரல் இன்றும் காதுக்குள் கேட்டுக் கொண்டிருப்பதாய் உணர்ந்தவனின் நெஞ்சம் நடுங்கியது.

‘மிஸ்டர் யதுந்தன். ஐம் சாரி!’

“நோ!” என ஈனஸ்வரத்தில் முனகியவன் மகளை மேலும் தன் நெஞ்சோடு இறுக அணைத்தபடி, விழி மூடினான்.

மூடிய இமை வழியே கோடாக வழிந்த கண்ணீர் துளிகள் அவனது உள்மன வேதனையை அப்பட்டமாய் பறைசாற்றின.

ஆசைகளை சுக்கு நூறாக்கி, எதிர்பார்ப்புகளை உடைத்தெறிந்து, நிரந்தரத் துயிலில் ஆழ்ந்து போனவளின் நிர்மலமான முகம் கண்முன் தோன்றி அவனை வருத்தியது.

நெஞ்சில் நீங்கா ஓவியமாய் பல்லவி சிரித்துக் கொண்டிருந்தாலும், அவள் தந்து சென்ற சிற்பக் குவியலின் சந்தோசத்துக்காக எதையும் செய்யத் துணிந்தவனின் மனம் மெல்ல ஆட்டங்கண்டது.

தன் மகள் தாயன்புக்காக என்றைக்கும் ஏங்கி விடக் கூடாது என்ற ஆசை மனதினுள் வலுப்பெற்றிருந்தாலும், வரப் போகிறவள் உண்மையான அன்புடையவளாக இருப்பாளா என்ற யோசனை வேறு அவனைப் பயமுறுத்த, தூக்கம் எட்டாக் கனியாய் போனது காளைக்கு.

‘டொக் டொக்’ என கதவு தட்டப்படும் ஓசையில் யோசனை கலைந்து நிகழுக்கு மீண்டவன், உள்ளே நுழைந்த மூர்த்தியைக் கண்டுவிட்டு கண்களை எட்டாத ஒரு சிரிப்பொன்றை உதிர்த்தான்.

அவன் இமை சிமிட்டி மறைக்க முயன்ற விழிநீர் துளியைக் கண்டு கொண்டவரின் மனம், வேதனைக் கடலில் மீனாய் நீந்தியது.

“நந்தா!”

லேசாக அசைந்து, மகளின் உறக்கம் கலையாதவாறு அவளை மெத்தையில் கிடத்தியவன் மெல்ல எழுந்து அமர,

“தூங்கலையா நந்தா?” என்று கேட்டபடி அவனருகே அமர்ந்தார் மூர்த்தி.

“நோ டேட்! இப்போ தான் பாப்பா தூங்கினா. உங்க பையன் சிங்கர், ஸ்டோரி டெல்லர், ஆக்டர்.. அப்படி இப்படினு மாறிட்டு, இதோ இப்ப தான் யதுநந்தனா உட்காந்திருக்கான்..” என சிரிப்பு இழையோடிய குரலில் மொழிந்தவன்,

“ஆமா, இந்த நேரத்துல தூங்காம என்னைத் தேடி வந்திருக்கீங்க. வாட்ஸ் அப் டேட்?” என்று நேரடியாகவே விடயத்தை அறிய முற்பட்டான்.

மூர்த்தி சற்றே தயங்கினார்.

அதைப் புரிந்து கொண்டவனாய், “அந்த பொண்ணு பத்தி ஏதும் பேசணுமா டேட்?” என்று உதட்டில் நெளிந்த முறுவலுடன் கேட்டான்.

“அது வந்து பா.. நந்தா!”

“ப்ச்! என்ன டேட் இது?” என சலித்துக் கொண்டவன், “பார்த்த பார்வைக்கே அந்த பொண்ணைப் புடிக்காம போய்டுச்சு டேட்! பன்ச்வாலிட்டி தெரியல. என்கிட்டே வெட்கபட்டுட்டே வேற பேசுனா. எனக்கு என்னவோ அவங்க என்கிட்டே வேறேதும் எதிர்பார்த்து, ஏமாந்திடுவாளோனு.” எனத் தயங்கி பாதியில் நிறுத்த,

‘பகவானே!’ என மனதினுள் அலறினார், மூர்த்தி.

“அந்த பொண்ணை ரிஜெக்ட் பண்ண இதுதான் காரணமா நந்தா?” என நொந்து போய் கேட்டவரின் கரம் பற்றியவன்,

“அவங்களைப் பார்க்கும் போது பாப்பாவை நல்லா கவனிச்சக்குவாங்குற நம்பிக்கை வரல டேட்! திஸ் ஈஸ் அனதர் ரீசன் வொய் ஐ ரிஜெக்டட் ஹேர்..” என்றான், உறுதி மிகுந்த குரலில்.

அதற்கு மேலும் மூர்த்தி எதுவும் பேசவில்லை.

கையோடு கொண்டு வந்திருந்த கவரை மேஜை மீது வைத்தபடி, “நீ சொன்னதுக்காக தான் நானே பார்த்தேன். ஆனா உனக்கு பொண்ணை பிடிக்காம போய்டுச்சு. சாட்டிஸ்ஃபைடா இருக்கல. இதுல உன்னோட கண்டிஷன்க்கு ஒத்து வரா மாதிரி பொண்ணுங்க போட்டோஸ் இருக்கு. நீயே பாரு என்ன..” என்று கூறியவர், மேலும் சில விடயங்களை மகனுடன் உரையாடி விட்டு அங்கிருந்து அகன்றார்.

திரும்பி கவரைப் பார்த்து முகம் சுழித்தவன், ‘எதுவும் வேண்டாம்!’ என நினைத்தபடி மறுபுறம் திரும்பி மகளை அணைத்துக் கொண்டே உறங்கிப் போனான்.

‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்..

தெய்வம் ஏதும் இல்லை.

நடந்ததையே நினைத்து இருந்தால்..

அமைதி என்றும் இல்லை.

முடிந்த கதை தொடர்வதில்லை

இறைவன் ஏட்டினிலே..

தொடர்ந்த கதை முடிவதில்லை

மனிதன் வீட்டினிலே..’ என்ற பாடல் எங்கோ ஓரிடத்தில் ஒலித்து, மெல்ல காற்றோடு கலந்து கொண்டிருந்தது.

    •••••••••

கதிரோன் தகிக்க ஆரம்பித்திருந்த நேரத்தில், என்றும் போல் மிகுந்த பரபரப்பாகக் காணப்பட்டது, கலெக்சி கிளோத்திங் ஸ்டோர்!.

ஆங்கு, யோசனையினூடே நீண்ட மேஜையில் புடவைகளை விரித்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.

சற்று நேரத்துக்கு முன்பு தான், அரைமணி நேரம் தாமதமாகி வந்ததற்காக காருண்யராஜின் வழமையான அர்ச்சனைகளை வாங்கிக் கொண்டு இவ்விடம் வந்திருந்தாள்.

வழமையாக முகத்தில் ஒட்டி வைக்கப்பட்டிருக்கும் கீற்றான புன்னகையோ, சிறு தலை அசைப்போ இன்றி, வந்ததிலிருந்தே கவனத்தை எங்கோ ஓரிடத்தில் விலைக்கு விற்று விட்ட பாவனையில் நடந்து கொண்டிருந்த தோழியின் மௌனம் வித்யாவை வதைத்தது.

அவளை நெருங்கிச் சென்று, ‘ஏதும் ப்ரோப்லமா என்ன?’ எனக் கேட்கக் கூட முடியாத அளவுக்கு கடைக்குள் மகளிர் கூட்டம் நிறைந்து வழிந்தது. மூச்சு விடவும் அவகாசம் கிடைக்காத அளவுக்கு வேலை!

இதில் எங்கனம் போய் தோழியிடம் பேச்சுக் கொடுப்பதுவும், ஆறுதல் கரம் நீட்டி அவளை ஆசுவாசப்படுத்துவதும்?

‘பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ எனப் பெருமூச்சு விட்டவள், நினைத்தது போலவே மதிய உணவு வேளையில் யுக்தாவை கையோடு பிடித்துக் கொண்டாள்.

“என்னாச்சுடி.. ஏன் உன் மூஞ்சி இவ்ளோ டல்லா இருக்கு? கொஞ்சம் சிரிக்க கூட முடியாத அளவுக்கு புதுசா என்னடி டென்ஷன் உனக்கு?” எனக் கேள்விக் கணைகளால் துளைத்து விட்டாள், சம்யுக்தாவை!

அதற்கு மேலும் துயரத்தை தனக்குள்ளே விழுங்குவானேன்? தட்டிக் கொடுத்துத் தூக்கி விட ஓருறவு முன் வந்ததும், மனச் சுமைகளை இறக்கி வைக்கும் பொருட்டு புலம்பத் தொடங்கி விட்டாள், அபலை.

“என்னனு சொல்லுவேன் வித்யா? என்ன பண்றதுனே புரியல. டென்ஷன்ல மண்டை ஏதும் சிதறி செத்துப் போய்டுவேனோனு பயமாருக்கு. எனக்கு அப்பறம் அம்மாவை யாரு பார்ப்பா? சத்யா வேற விவரம் புரியாத சின்ன பொண்ணுலடி..”

புலம்பல்கள் திசை திரும்பி வேறெங்கோ செல்வதை உணர்ந்து, “யுக்தா!” என அதட்டியவள், “என்ன பிரச்சனைனு சொல்லாம இப்படி புலம்பினா என்ன அர்த்தம்?” என்று கடிந்து கொள்ள,

“சந்தா ஒரு பையனைக் காதலிக்கிறா!” என்றாள், கலங்கிப் போன கண்களுடன்.

“எ.. என்னடி சொல்லுற? இந்த விஷயம் உனக்கு எப்படி தெரிய வந்துச்சு..”

“அவ நேத்து கூப்பிட்டதால தான், நேர காலத்தோட இங்கிருந்து கிளம்பிப் போனேன் வித்யா. ஃப்ரெண்ட்டை இன்ட்ரோ பண்ணி வைக்க போறேன்னு சொல்லி தான் என்னைக் வர சொல்லிருந்தா!

ஆனா போனதும் தான் உணமை தெரிஞ்சுது. அவங்க கலியாணம் பண்ணிக்க விரும்புறாங்கடி..” எனக் குரல் கமற சொல்லியவளின் நினைவுகள் நேற்றைய நினைவுகளை அலசின.

‘நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறோம்..’ என சாந்தனாவைப் பக்கமாக அணைத்தவாறு மொழிந்த அவினாஷ், தொடர்ந்து,

“இவ்ளோ நாள் பிரச்சனை இல்ல. எனக்கு இப்போ டுவேண்டி செவென் சிஸ்டர்! இப்போ வீட்டுல கலியாணம் பண்ணிக்கோனு நச்சரிக்க தொடங்கிட்டாங்க. தனாவுக்குமே இப்போ இருபத்திமூனு. திருமண வயசு தானே?” என்று வினவினான், ‘எங்கே இல்லையென்று சொல்லித் தான் பாரேன்’ என்ற தோரணையில்..

சம்யுக்தாவின் தலை அனிச்சையாக, ஆமோதிப்பாய் அசைந்தது.

ஆனால் இங்கே திருமண வயதல்லவே பிரச்சனை? திருமணம் செய்து வைப்பதற்கான சூழலும், ஆயத்தங்களும், ஏற்பாடுகளை செய்யுமிடத்து நேரிடக் கூடும் அடிப்படை சிக்கல்களும் தானே?

‘இதை ஏன் யோசிக்க மறந்தாய் சந்தா?’ என மனதினுள் புலம்பிய யுக்தாவுக்கு, தங்கையைக் குறை கூறவும் மனமில்லை.

எந்த பெண்ணுக்குமே இந்த வயதில் எழும் ஆசை அல்லவா அவளுக்குள்ளும் மலர்ந்திருக்கிறது?

சீதனம், வரதட்சணை என அலைகழிக்கப்பட்டு தனக்கு அமையாத ஒரு நல்வாழ்வு தங்கைக்கு மட்டுமாவது கிடைத்து விட்டால் அவளுக்கும் சந்தோஷமே! அதற்கென்று, உடனே மகிழவும் முடியவில்லை அவளால்..

எதையாவது பெண் வீட்டாரிடமிருந்து எதிர்பார்க்கிறார்களோ! அப்படி இல்லாவிட்டாலும், தாய் இதற்கு சம்மதம் தெரிவிப்பாரோ என்னவோ என பல யோசனைகள் பாவை மண்டையைக் குடைந்தது.

அழுத்தமாக கண்களை மூடித் திறந்தவள், “சந்தா இப்போ சின்ன பொண்ணு இல்ல தான். ஒத்துக்கறேன்! ஆனா.. எங்க வீட்டு நிலைமை பத்தி அவ எதுவும் சொல்..” மேற்கொண்டு பேச முன்பே,

“அக்கா, அவர் என்னை காதலிக்கிறாரு. கை பிடிக்க ஆசைப்படறாரு.. இதுல எங்கேர்ந்து குடும்பம் நிலவரம் அது இதுலாம்?” என இடை புகுந்தாள் சாந்தனா.

தங்களது குடும்ப கஷ்டங்களைக் காதலனின் முன்னிலையில் பகிர்ந்து கொள்ள அவள் சற்றும் விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட சம்யுக்தாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

தங்கள் நிலையை அறிந்தாலாவது ஏதேனும் ஒரு விதத்தில் இறங்கி வருவார்கள். இல்லையேல் அனைத்தும் தன் தலை மீதல்லவா வந்து விடியும் என்ற படபடப்பு அவளுக்கு.

“சந்தா நீ..” எனப் பேச வந்தவளைக் கடுமையாக முறைத்தவள் அவினாஷின் புறமாகத் திரும்பி அமர்ந்து, “அவ கொஞ்சம் பயப்படறானு நினைக்கிறேன். அவளுக்கு எதிலும் கொஞ்சம் பயம் ஜாஸ்தி தான்!” என்று சமாளிக்க, யுக்தா பற்களைக் கடித்தாள்.

இதற்கு மேலும் இவ்விடம் நின்றால் தன் பொறுமை எல்லை கடந்து விடும் என்பதைப் புரிந்து கொண்டவள் தங்கையை தீ விழி விழித்து விட்டு எழுந்து செல்லப் போக,

“சிஸ்டர் கொஞ்சம் பேசணும்னு சொன்னேனே!” என்று இழுவையாய் நிறுத்தி, மீண்டும் அவளை அமர வைத்தான் அவினாஷ்.

நொடிகள் சில கடந்தது.

இன்னுமே ‘என்ன பேசணும்?’ என வாய் திறந்து கேட்காமல் கல்லென சமைந்திருந்த யுக்தாவைப் பார்த்து கண்களை சுருக்கிய அவினாஷ், ஏதோ கூற வாயெடுப்பதற்குள், ஆர்டர் செய்திருந்த இரண்டு பட்டர்ஸ்கோட்ச் ஐஸ்க்ரீமும், குளம்பியும் மேஜைக்கு வந்தன.

இதற்கான பணத்தை தானே செலுத்த வேண்டுமோ என்று நினைத்தவளின் உள்மனம், கைப் பைக்குள் அதற்குப் போதுமான பணம் இருக்கிறதா என கணக்குப் பார்த்தது.

ஐஸ்க்ரீமை சுவைத்தபடியே, “பெண் வீட்டாளுங்க கிட்ட எதுவும் பெருசா எதிர்பார்க்க மாட்டோம் சிஸ்டர்!

தனாவைப் பார்த்து பிடிச்சுப் போய், அவளைக் கலியாணம் பண்ணிக்க விருப்பபடறதா சொன்னேன். ரெண்டு பேரும் மனமொத்து காதலிச்சோம் டூ இயர்ஸா! எவ்ளோ நாளைக்கு தான் இப்படியே ஓடறது, இந்த விஷயத்தை வீட்டுல பேசி, ஒரு முடிவெடுக்கலாம்ங்குற எண்ணத்துல தான் முதல்ல உங்ககிட்ட பேச வந்தேன். வீட்டுல ஒரே நச்சரிப்பு!” என அலுத்துக் கொண்டவன்,

“இப்போ வொர்க் பண்ற கம்பெனியோட கிளை நிறுவனம் அமெரிக்காவுல இருக்கு. மேரேஜ் முடிஞ்சதும், தனாவைக் கூட்டிட்டு அங்க போய் செட்டில் ஆகிடலாம்னு பிளான்..” என்றான், கனவு மின்னும் விழிகளுடன்.

அவன் மூச்சு விடாமல் பேசிய பேச்சில், ‘எதுவும் எதிர்பார்க்க மாட்டோம்’ என்று கூறிய வரி சம்யுக்தாவுக்கு பெருத்த நிம்மதியைக் கொடுத்தது.

‘நன்றி கடவுளே!’ என ஆசுவாசமாகப் பெருமூச்சு விட்டவள் காப்பியில் ஒரு சிப் இழுத்து, அதை ரசித்து விழுங்க முன்பே,

“ஆனா இங்க வர்ற நேரத்துல தங்கிக்க ஒரு சொந்த வீடாவது தேவைப்படும் இல்லையா? கார், பங்களா வேண்டாம். ஒரு சிறிய வீடாவது..” என நிறுத்த, யுக்தாவுக்கு விழுங்கப் பார்த்த காப்பி புரை ஏறியது.

இருமியபடியே கையில் குலுங்கிய காப்பி கப்பை மேஜை மீது வைத்தவளைப் பரிதாபமாகப் பார்த்த சாந்தனா, “ஆர் யூ ஓகே யுக்தா?” என்று கேட்க,

“விட்டா மேல அனுப்பிடுவ போலருக்கு!” என வாய்க்குள் முணுமுணுத்தவளுக்கு, ‘வீடு’ என நினைக்கும் போதே தலை சுற்றிக் கொண்டு வந்தது. ‘சந்தா!’ என மனதினுள் கருவினாள்.

 

மெல்ல தலை தூக்கியவளை பார்த்து புன்னகைத்த அவினாஷ், “நான் அம்மா, அப்பாவைக் கூட்டிட்டு வந்து உங்க அம்மா கிட்ட பேசவா?” என்று கேட்க, திணறி நின்றாள் சம்யுக்தா.

அவர்கள் இப்போது தங்கி இருப்பது சொந்த வீடாகவே இருந்தாலும், அதை சாந்தனாவுக்குக் கொடுத்து விட்டால் பிறகு பிரச்சனையாகி விடுமோ என்ற யோசனையில் மண்டை காய்ந்தது அவளுக்கு.

முதலில் தாயின் சம்மதம் வேண்டுமே என யோசித்தவளுக்கு ஏனோ, அது கிடைக்குமா என்பது பெருத்த சந்தேகமே!

தன்னைப் பார்க்க வந்த இருபதுக்கு மேற்பட்ட வரன்களும் வீடு, தோட்டந்துறவு என ஆரம்பிப்பதைப் பார்த்து, பல தடவைகள் ‘இந்த வீட்டை உனக்கே எழுதி வைக்கிறேன் யுக்தா’ என் சாவித்திரி கூறி இருக்கிறார்.

வேண்டாம் என மறுத்துக் கூறி, அவரது உள்ள வேதனையை தணிக்க முற்படுவாள் மூத்தவள்.

ஆனால் வீட்டில் சாந்தனா நடந்து கொள்ளும் முறை அவ்வளவு உவப்பானதாக இல்லை என்றபடியால், மனமுவந்து தனக்கு எழுதி தர முயன்ற அதே இரண்டறை கொண்ட வீட்டை, தங்கைக்கு கொடுக்க சம்மதிப்பார் என்பது நம்பிக்கையற்ற எதிர்பார்ப்பாகவே தோன்றிற்று யுக்தாவுக்கு.

மேலும் சிந்திக்க முடியாதபடி தலைவலி அவளைப் படுத்தி எடுக்க, மேற்கொண்டு அங்கு நின்றிருக்க முடியாமல் யோசிக்க வேண்டும் எனக் கூறியதோடு அவ்விடம் விட்டு நகர்ந்தவள் இரவு முழுவதையும் தங்கையின் காதல், தோல்வியில் முடியக் கூடாது என்ற வேண்டுதலுடனும், இனி என்ன செய்யலாம் என்ற யோசனையுடனும் தான் கடந்து வந்தாள்.

என்றும் போலல்லாமல் அதீத மனச் சோர்வுடனே விடிந்த அதிகாலைப் பொழுது, காருண்யராஜின் திட்டலில் அலுப்பை அள்ளிக் கொடுத்தது சம்யுக்தாவுக்கு.

நடந்தவற்றை நினைத்துக் கொண்டிருந்தவள், தோழியின் பலமான உலுக்கலில் சட்டென்று தெளிந்து திருதிருவென்று முழித்தாள்.

“திடீர்னு எங்க போயிட்டே?” என்று சாதாரணமாகக் கேட்க முயன்றாலும், வருத்தத்தில் வித்யாவின் குரல் கமறியது.

வலிய புன்முறுவலித்தவள், நேற்று உணவகத்தில் நடந்ததை அப்படியே தோழியிடம் ஒப்பித்து அவளிடம் ஆறுதல் தேடினாள்.

“என்னடி இப்படி ஆகிடுச்சு? சாந்தனா எதையும் புரிஞ்சிக்க மாட்டேங்குறா.. நீ ஏன் அவளுக்கு சொல்லி புரிய வைக்க கூடாதுடி?” என ஆதங்கமாகக் கேட்ட வித்யாவுக்கு, சாந்தனாவை இழுத்து நான்கு அறைகள் விட்டால் என்ன என்று தோன்றியது.

காதலிக்கலாம், தப்பில்லை. அதென்ன வீட்டு நிலவரத்தைக் கூட வெளிக்காட்ட விரும்பாத அளவுக்கு தலைக்கனம்?

எதுவும் வேண்டாம். காதலன் தன்னிடம் வீடு எதிர்பார்க்கிறான் எனத் தெரிந்த பிறகாவது வாய் திறந்து பேசியிருக்கலாமே! இல்லையேல் பேச முயன்றவளையாவது தடுக்காமல் இருந்திருக்கலாமே என ஆதங்கப்பட்டவளுக்கு சாந்தனாவை ஆரம்பித்திலிருந்தே பிடிக்காது.

தகுதிக்கு மீறிய ஆசை அவளை ஆட்டிப் படைக்கிறது என பல தடவைகள் யுக்தா முன்னிலையிலே முகம் சுழித்திருக்கிறாள்.

பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்படுவதில் தவறில்லை. அதற்கென்று மாடாய் உழைத்து, உண்ணப் போட்டு, வீட்டினர் தேவைகளைப் நிவர்த்தி செய்ய தடுமாறும் தமக்கையின் கஷ்டம் அவளை ஒரு முறையாவது உருக்கவில்லை. அவள் மனதைத் தொடவில்லையே!

வாயைத் திறந்தாலே மனம் புண்படப் பேசி, கெத்தாக பேசி விட்டதாய் நினைத்து இறுமாப்புக் கொள்ளும் இவளையெல்லாம் எந்த ரகத்தில் சேர்ப்பது என்ற எரிச்சல் வித்யாவை பாடாய்படுத்தியது.

பெருவிரலால் நெற்றியைக் கீறியபடி நெடு மூச்செறிந்த வித்யா,

“வீட்டு நிலைமையை நான் சொல்லி தான் புரிய வைக்கணுமாடி.. இப்போ சந்தா ஒன்னும் சின்ன பொண்ணு இல்லையே வித்யா.. ஆனா அவ எதையும் புரிஞ்சிக்க மாட்டேங்குறாடி!” என்றவளைப் பரிதாபமாக ஏறிட்டுப் பார்த்தாள்.

“என்னவோ போ, எனக்கு கோபம் கோபமா வருது யுக்தா!”

“உனக்கு கோபம் வராத நேரமிருக்கா, சொல்லேன்?”

“ப்ச்! வாராதடி. உன்னைப் போல பொய்யா எல்லாம் என்னால சிரிக்க முடியாது யுக்தா. இப்போ சொல்லு, இனி என்ன பண்ண போற?”

“என்ன பண்ண? யோசிச்சி யோசிச்சி மண்டை காயுது. ஆனா புது வழி மட்டும் கிடைக்கவே இல்லை..” என சலித்துக் கொண்டவள் எழுந்து செல்ல,

“சாந்தனா எதுவும் சொல்லலையா?” என்று கேட்டபடி பின்னோடே சென்றாள், வித்யாவும்.

“வெயிட் பண்ண முடியாதாம். அடுத்த வாரத்துக்குள்ள அவங்க பொண்ணு கேட்டு வந்திடுவாங்களாம்னு காலையில என்கிட்ட சொன்னா.. எனக்குமே அம்மா கிட்ட எப்படி பேசுறதுனு புரியல. வர சொல்லு, பார்த்துக்கலாம்னு சொல்லிட்டேன்..”

“லூசாடி நீ?” என எரிந்து விழுந்த வித்யா,

“அவ சொல்ற போலயெல்லாம் ஆடாத யுக்தா! நீ ரொம்ப செல்லம் கொடுக்குற. அந்த பையன் பத்தி முதல்ல தேடி பார்க்க வேண்டாமா!” என்று அக்கறையும், கண்டிப்பும் கலந்த குரலில் எச்சரித்தாள்.

“நீ கேட்ட அதே கேள்வியை உன்கிட்ட கேட்பேன் வித்யா.. நீ என்ன லூசா?” என்று கேலி பேசியவள்,

“தங்கச்சி லவ் பண்ணுறாளேனு யோசிக்காம, தேடி பார்க்காம அப்படியே ஓகே சொல்லிடுவேன்னு நீ எப்படி நினைக்கலாம்? கடைக்கு வந்ததுமே சார் கிட்ட பேசினேன். கொஞ்சம் தேடி பார்க்க சொல்லி, அவினாஷ் பத்தி சந்தா காலையில் சொன்ன தகவல்களை கூட சொல்லிட்டேன்..” என்றாள், புன்னகை முகமாய்.

“உன்னைப் பத்தி தெரிஞ்சும் நான் பதறினது என் தப்பு தான்!” என நொடித்து கொண்ட வித்யாவுக்கு, தோழியின் பொறுப்புணர்ச்சியும், முதிர்ச்சியும் வியப்பைத் தான் கொடுத்தது.

அவளது முகத்தில் வலுக்கட்டாயமாய் ஒட்டி வைக்கப்பட்ட புன்னகையில் மனம் அடிபட்டுப் போன வித்யா, தோழிக்காக வேண்டிக் கொண்டாள் மனம் திறந்து.

இதைத் தாண்டி தோழிக்காகவென்று அவளாலும் தான் என்ன செய்து விட முடியும்?

 

தொடரும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!