நாணலே நாணமேனடி – 06

5
(5)

உடலோடு மிகக் கச்சிதமாய் பொருந்தியிருந்த வெள்ளை நிற சட்டையின் மேலிரு பொத்தான்களை மூடி, கழுத்துப் பட்டியை நேர்த்தியாக கட்டிக் கொண்டு நிமிர்ந்தான், யதுநந்தன்.

மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்த கைக்கடிகாரத்தை சரி செய்தபடி கண்ணாடியில் தன் தோற்றத்தைப் பார்த்து திருப்தி அடைந்தவன், நெற்றியில் தவழ்ந்த கேசத்தைக் கோதி விட்டபடி மெத்தையில் வந்தமர்ந்தான்.

கழுத்து வரையான நேரிய குட்டை முடி தலையணையில் பரவிக் கிடக்க, தந்தை என நினைத்து ஆளுயர டெடிபியரை கட்டி அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள் யுவனி.

அவளது முகம் மறைத்த கூந்தல் கற்றைகளைக் காதுக்குப் பின்னால் ஒதுக்கி விட்டவன், அவளுக்கு நெற்றி முத்தமொன்றை பதித்து விட்டு அலைபேசியுடன் எழுந்து கொண்டான்.

கீர்த்தனாவுக்கு அழைப்பு விடுத்தபடியே நகரப் போனவன் கவனக் குறைபாட்டினால் மேஜையில் காலை இடித்துக் கொள்ள, இரு பக்கமாய் ஆடி தன் மீதிருந்த தண்ணீர் பாட்டிலையும், கவரையும் கீழே விழுத்தாட்டியது மேஜை.

“ஆவ்ச்!” என்ற முனகலுடன் தொப்பென்று கட்டிலில் அமர்ந்தவனின் பார்வையில் பதிந்தது, கீழே விசிறி விழுந்ததால் கவர் திறந்து கொண்டு உள்ளிருந்து வெளியே எட்டிப் பார்த்த புகைப்படங்கள்.

அப்போது தான் அதைப் பற்றிய நினைவே வந்தது யதுநந்தனுக்கு.

மூர்த்தி அதை மேஜை மீது வைத்து விட்டுச் சென்றும் நாலைந்து தினங்களாகி விட்ட உண்மை மண்டையில் உறைக்க, காலைத் தடவி விட்டவன் வலி குறைந்ததும் மெல்லக் குனிந்து, அவற்றைக் கையில் சேகரித்தான்.

“ஓ காட்! இதைப் பத்தி பேச தான் டேட் பல வாட்டி என்னைத் தேடி வந்திருப்பாரு போல.. நான் மறந்தே போய்ட்டேன்!” என முணுமுணுத்தவனுக்கு மூர்த்தியை நினைக்கும் போது சிரிப்பு தான் வந்தது.

மொத்தம் இருபது புகைப்படங்களாவது இருக்கும்! எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு மீண்டும் கட்டிலில் அமர்ந்தவன், கடமைக்கே என கையில் அடுக்கிக் கொண்டு அவற்றைப் பார்வையிட்டான்.

பார்த்தமட்டில் எதுவுமே திருப்திகரமாக இல்லாதது போல் தோன்றவும், சலித்துக் கொண்டவன் தவழ்ந்து வந்து மடியில் முகம் புதைத்த சிறியவளின் தலை வருடி,

“பாப்பா..” என்று அழைக்க, விழி மொட்டுக்களைத் திறந்து, திரும்பி, தந்தையை ஏறிட்டுப் பார்த்தாள் சிறியவள்.

“குட் மார்னிங், பிரின்ஸஸ்!” என மகளின் கன்னம் தட்டிக் கொஞ்சியவன், சிணுங்கியபடி கலைந்த தலையும், பிதுங்கிய இதழ்களுமாய் கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்தவளிடம்,

“பாப்பாவுக்கு என்ன?” என்று கேட்டான், சிரிப்பும் கொஞ்சலும் இரண்டறக் கலந்த குரலில்.

முகத்தை சுருக்கிக் கொண்டு சிணுங்கியவள் தந்தையின் கையிலிருந்த புகைப்படங்களை அள்ளி எடுத்து கட்டிலில் பரப்ப, யதுநந்தனின் முகம் வியப்பில் விகசித்தது.

அதே நேரத்தில், “மம்..மீ நிக்கி..” என்ற கூவலுடன் பச்சை நிற சேலையில் பக்கமாகத் திரும்பி சிரித்துக் கொண்டிருந்த அப்பெண்ணின் புகைப்படத்தை பாய்ந்து எடுத்த யுவனி,

“பப்பு..” என கண்களில் நட்சத்திரம் மின்ன தந்தையிடம் நீட்டினாள்.

இடை வரை தொங்கிய கருங்கூந்தலைத் தோளில் பக்கமாக வழிய விட்டு, அசைந்தாடும் நாணலாய் முறுவலித்துக் கொண்டிருந்தவள் ஒன்றும் பளிச்சென்ற வெள்ளை நிற அழகி இல்லை.

மாநிறத்தை விட சற்றுக் குறைந்த நிறத்தில், விரிந்த கோலிகுண்டு விழிகளுடன் மென்னகைத்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் குழந்தைத் தனத்துக்கு பதில், பக்குவம் தெரிந்தது யதுநந்தனுக்கு.

புகைப்படத்தைக் கையில் எடுத்தவன், சில நொடிகள் மாத்திரமே பார்வையால் அவளை ஆராய்ந்தான். பின்னர் ஆர்வம் பொங்கும் விழிகளுடன் தன்னையே பார்த்திருந்த மகளைப் பார்த்து விட்டு, புகைப்படத்தைத் திருப்பினான்.

“சம்யுக்தா, வயது 26..” எனத் தொடங்கி, அவளின் கல்வித் தரம், தற்போது வேலை பார்க்குமிடம், குடும்ப நிலை என அனைத்து விவரங்களும் மிகத் தெளிவாக பகிரப்பட்டு இருந்தன, அங்கே!

மனதில் ஏதோவொரு இனம்புரியாத ஒரு குறுகுறுப்பு! அவளை நிராகரிக்கத் தோன்றாத அளவுக்கு மெலிதான ஒரு பிடித்தம்!

மீண்டும் புகைப்படத்தின் முன் புறத்தைத் திருப்பிப் பார்த்தவனுக்கு, உணவகத்தில் அவள் யுவனியை நெஞ்சோடு அணைத்து ஆறுதல்படுத்திய விதம் நினைவில் வந்துதித்தது.

மனம் நிறைந்த திருப்தியுடன், அப்புகைப்படத்தை மட்டும் தன் கையில் எடுத்துக் கொண்டவன் யுவனியைத் தூக்கிக் கொண்டு வெளியே வர, கூடத்தில் அமர்ந்து கதையளந்து கொண்டிருந்த இருவரின் வாய்கள், பூட்டு போட்டது போல் சடாரென மூடிக் கொண்டன.

கீர்த்தனாவின் திருதிருத்த பார்வையை வைத்தே, தன்னைப் பற்றி தான் இவ்விடத்தில் அலசப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறது எனப் புரிந்து கொண்ட நந்தன், தந்தையுடன் சேர்த்து அவளையும் ஒருசேர முறைத்தான்.

“சார்..” எனப் பதறி போய் எழுந்து நின்றாள், கீர்த்தனா.

“என்னாச்சு.. ஏன் ஆளாளுக்கு கல்லு முழுங்கின மாதிரி முழிச்சிட்டு நிற்கிறீங்க?” என்று கடுகடுத்த குரலில் பொதுப்படையாக கேட்டபடி நாலெட்டில் அவர்களை நெருங்க, “அத்து..” என்ற கொஞ்சலுடன் அவளிடம் தாவப் போனாள் யுவனி.

அவளை கீர்த்தனாவிடம் கொடுக்காமல் தன்னோடு இறுக்கமாக அணைத்தபடி சோபாவில் அமர்ந்தவன், “அத்தைக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்கக் கூடாது பாப்பா. அத்தை வயித்துல உன்னைப் போலவே ஒரு குட்டிப் பாப்பா இருக்கு..” என்று கூற,

“சார்..” என சிரிப்பு மேலிட அழைத்த கீர்த்தனா,

“பாருங்க மூர்த்தி சார். குட்டிமாவுக்கு என்ன புரியுதுனு இவர் இப்படி புத்திமதி சொல்லிட்டு இருக்காரு?” என்று குறைபட்டுக் கொண்டாள், பெரியவரிடம்.

“பாப்பாவுக்கு புரியாது. ஆனா உனக்கு புரியும்ல?” என்று கண்டிப்புடன் கேட்டவனிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு தனி சோபாவில் அமர்ந்தவள்,

“கையில என்ன சார்?” என்று கேட்டு வைக்க, நொடி நேர தடுமாற்றம் குடி கொண்டது, ஆடவனின் கண்களில்.

அவஸ்தையுடன், புருவத்தை நீவி விட்டபடி, மூர்த்தியைத் திரும்பிப் பார்க்க, அவருமே, கண்களில் ஆவல் மின்ன, அவனின் கையிலிருந்த புகைப்படத்தைத் தான் பார்த்திருந்தார்.

“அது.. யுவனிக்கு புடிச்சிருக்கு டேட்.” என இறுகிய குரலில் கூறிக் கொண்டு புகைப்படத்தை மேஜை மீது வைத்தான் யதுநந்தன்.

காலில் சூடுநீரைக் கொட்டிக் கொண்டது போல் அவசர அவசரமாக அதை எடுத்துப் பார்த்த மூர்த்திக்கு, சட்டென்று முகம் தொங்கிற்று!

“ஏன்பா நந்தா.. கவர்ல இன்னும் நிறைய போட்டோஸ் இருந்துச்சே!”

“ஏன் டேட்? இதுக்கென்ன..” என கண்கள் இடுங்கக் கேட்டவனைப் பார்த்து நீட்டி முழக்கியவர், இறுதியில், “பார்க்க ஒன்னும் அவ்ளோ கலரா இல்லையே!” என்றார், உட்சென்ற குரலில்.

வெளிப்படையாகவே தலையில் தட்டிக் கொண்டவன், “அவங்களைப் பத்தி கொஞ்சம் தேடிப் பாருங்க டேட்! கீர்த்தி, பாப்பாவைப் பத்திரமா பார்த்துக்கோ..” என இறுதியான குரலில் ஆரம்பித்து, இறுதி வரியை கீர்த்தனாவிடம் கூறிவிட்டு,

“அழகுல என்ன இருக்குனு டேட் இப்படி பேசுறாரு? அதுவுமில்லாம அந்த பொண்ணு அவ்ளோ ஒன்னும் மோசமா இல்லையே!” என்ற முணுமுணுப்புடன் அங்கிருந்து அகலப் போக,

“நந்தா!” என்று அழைத்து நிறுத்தினார், கிருஷ்ணமூர்த்தி.

“என்ன டேட்?”

‘சம்மதித்த வரை சந்தோசம்’ என நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தவர், “பொண்ணு பத்தி கொஞ்சம் விசாரிச்சி பார்த்திடறேன் நந்தா. எல்லாம் ஓகேனா..” மேற்கொண்டு பேச முன்பு,

“திருப்தினா நான் அவங்களை மீட் பண்ண ஏற்பாடு பண்ணிடுங்க..” என்றான், உணர்வுகள் தொலைத்த இயந்திரக் குரலில்.

அன்றிரவு, வீட்டுக்கு வந்த கையோடு தோசை சுட்டு, தொட்டுக் கொள்ள வெங்காய சட்னி அரைத்த சம்யுக்தா, குளித்து, சோம்பல் முறித்தபடி தாயின் அறைக்குள் நுழைந்தாள்.

அங்கு அவளுக்காக காத்திருந்தது, அந்த தகவல்.

மகளின் வரவை எதிர்பார்த்து, அறைக் கதவையே பார்த்திருந்த சாவித்திரியின் கண்கள், வழமை போலன்று உட்சாகத்தில் தாரகையாய் பிரகாசித்தன.

“தூங்கலை? அதிசயமா கண் முழிச்சிட்டு இருக்கீங்களேம்மா..” தன் வியப்பை மறைக்காமல் வெளிப்படையாகக் காட்டியபடி அருகில் வந்து அமர்ந்த மகளுக்கு ஒரு தலை அசைப்பை பதிலாகக் கொடுத்தார் சாவித்திரி.

“என்ன? ஏதும் வேணுமாம்மா..”

மறுப்பாகத் தலை அசைத்தவர், “உனக்கு வரன் வந்திருக்கு யுக்தா. இன்னைக்கு தரகர் வீட்டுக்கு வந்திருந்தாரு!” என சோர்ந்த, மெல்லிய குரலில் பேச, பாவையின் இதழ்களில் விரக்திப் புன்னகையொன்று நெளிந்தது.

“வீடா, பெங்களாவா வேணுமாம்? எத்தனை பவுன்..” என்று கேட்க வந்தவள் தாயின் பார்வை உணர்ந்து வாயைக் கட்டுப்படுத்திக் கொள்ள,

“எதுவும் வேணாங்குறாங்க..” என்க, யுக்தாவின் முகத்தில் வியப்பின் சாயல்!

“உண்மையாவா? நம்ம நாட்டுல கூட முதுகு எலும்பு இருக்குற ஆம்பளைங்க இருக்காங்க இல்ல?” என்று திகைப்பாக கேட்டவளை சிறு தலை அசைப்பின் மூலம் தன்னருகே நெருங்கி அமரச் செய்தவர்,

“பையன் லாயரு. அப்பா பெரிய பிசினஸ் மேனாம். சொந்தமா கம்பெனி வேற வைச்சிருக்காராம். கொஞ்ச வருஷத்துக்கு முன்ன நடந்த ஒரு ஆக்சிடண்ட்டுல கால் உடைஞ்சு போனதுல இருந்து, நம்பிக்கைக்குரியவங்களை வைச்சு ஆபீஸை ரன் பண்ணிட்டு இருக்காராம். பையன் பேரு கூட ஏதோ..” என நிறுத்தினார். புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டுக் கொண்டன.

“பேரு, ஊரெல்லாம் விடுங்க. இந்த காலத்துல கூட எதுவுமே இல்லாம பொண்ணு எடுப்பாங்களா என்ன.. பையனுக்கு ஏதும் குறை இருக்குமோம்மா?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள் சம்யுக்தா.

“செச்சே! இருக்காது. என்ன பேசிட்டு இருக்க? தரகர் நம்ம கனிகா புருஷன்டி. பொய் ஏதும் சொல்லி ஏமாத்திப்புட மாட்டாங்க..” என உடனடி பதில் உகுந்தார் சாவித்திரி.

மூச்சை ஆழ இழுத்து வெளியேற்றிய யுக்தா, “இப்போ என்னனு சொல்லுறாங்க?” என்க,

“நாளைக்கு லீவு போட்டுடு யுக்தா. முதல்ல பையன் உன்கிட்ட தனியா பேச விரும்புறதா அவரோட அப்பா சொல்லிருக்காரு..” என்றார், சங்கடமாக நெளிந்தபடி.

அவருக்குமே இந்த விடயத்தில் பிடித்தமில்லை தான். எந்த தாய்க்குத் தான் மகளை ஒரு ஆடவனை, அதுவும் யாரென்று அறிமுகமே இல்லாதவனை தனியாக சந்திக்க விடப் பிடிக்கும்?

ஆனால் வேறு வழியில்லை. மகளுக்கும் இருபத்தியாறு வயதாயிற்று! அவளது வாழ்க்கை இப்படியே கழிந்து போய் விடுமோ என்ற பயம் வேறு அவரது மனதை தொற்று நோயாய் பாதித்து அச்சப்படுத்தத் தொடங்கியிருக்க, அவளைக் கரை சேர்த்தி விடுவதே தன் தலையாய கடமைகளில் ஒன்றென நினைத்துக் கொள்வார் அடிக்கடி.

அவரின் அதிகபட்ச வேண்டுதல், ‘என் புள்ளைக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடு. தங்கச்சிங்களை அவ என்னைக்கும் கைவிட மாட்டா.. அவளுக்கு உதவுற மாதிரி ஒரு நல்ல வரன் அமையனும்.’ – இதுவாகத் தான் இருக்கும்.

காலையில் தரகர் விடயத்தைக் கூறியதும் இறைவனை வேண்டிக் கொண்டு, ‘புத்திசாலிப்புள்ள.. பார்த்து பேசி அவளாவே முடிவெடுத்துக்குவா!’ என்ற அதீத நம்பிக்கையின் பேரில், தனியாக சந்தித்துப் பேச அரை மனதாக சரியென்று கூறி வைத்திருந்தார்.

அது மட்டுமன்றி, ‘பெண் பார்க்க’ வந்து செல்பவர்களை வரவேற்று உபசரிக்கவே பணம் வீணாக செலவழிகிறதே!

ஓடியாடி வேலை செய்ய சாவித்திரியின் உடலிலும் பலமில்லை என்றபடியால், அந்த நாட்களில் யுக்தாவுக்குத தான் ஓய்வே இல்லாமல் போய்விடும்.

சராசரிப் பெண்ணாக அவளுமே திருமண வாழ்க்கையை மிகவும் எதிர்பார்த்தாள். எதிர்பார்க்கிறாள் என சாவித்திரி அறியாமல் இல்லை. தாய் அறியாத சூல் உண்டோ?!

ஆனால் ஏழையாக பிறந்து விட்ட குற்றத்துக்காகவோ என்னவோ, ‘நீ இதற்கு எல்லாம் ஆசைப்படலாமா?’ என்று கேட்பது போல், வந்தவர்கள் வீடு வாசம் என மகனுக்குப் பேரம் பேசி விட்டு வெளிக்கிட்டுச் செல்கையில், ‘என்னடா வாழ்க்கையிது?’ என்ற ஒருவித வெறுமை சூழ்ந்து கொண்டு விடும் ஆரணங்கை!

அதனால் தான், முதலில் இருவரும் பேசி தங்களது விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்ளட்டும். பிடித்திருப்பின் மேற்கொண்டு யோசிப்போம் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் சம்மதித்து இருந்தார், சாவித்திரி.

சில நிமிடங்கள் வரை அன்னையின் முகத்தில் வந்து சென்ற பாவனைகளை ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்த யுக்தாவுக்கு, அவரின் சிந்தனையோட்டத்தை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது.

வலுக்கட்டாயமாக உதட்டில் ஒட்ட வைத்த புன்னகையுடன் சரியென்று தலை அசைத்தவள், “அவர் போட்டோ ஏதும் இருக்காம்மா?” எனத் தயங்கித் திணற, சாவித்திரியின் முகமதில் மெல்லிய முறுவல்!

‘இந்த சம்பந்தமாவது கைகூடி வரவேண்டும் கடவுளே!’ என அவசர வேண்டுதல் ஒன்றை மேலிடத்துக்கு அனுப்பி வைத்தவர், அப்போது தான் நினைவு வந்தவராக, “அடடே, இதை எப்படி மறந்தேன்? பாரு, சந்தோசத்துல தரகர் கிட்ட போட்டோ கேட்க மறந்துட்டேனே!” என நொந்து கொள்ள, பற்களைக் கடித்தவள்,

“அம்மா! நான் எங்க போய், எப்போ மீட் பண்ணனும்.. அப்படி ஏதாவது தகவல்? அட்லீஸ்ட் அவர் பேரு?” என்று வினவினாள்.

“பையன் பேரு ஏதோ நந்தன்.. நாதன்..” என்று யோசனையுடன் இழுவையாய் பேசியவரைப் பார்த்து இம்முறை வெளிப்படையாகவே நெற்றியில் அறைந்து கொண்டவள்,

“இங்க பாருங்க. உங்க மனசு தெள்ளுனு தெளிவா புரியுதும்மா எனக்கு.. நீங்க தானே எப்போவும் சொல்லுவீங்க? கூடி வரணும்னு கடவுள் விருப்பம் இருந்தா, இடைல குறுக்கிட்டு தடுக்க யாருக்கு தான் முடியும்னு கேட்பிங்களேம்மா..

ம்ம், பொறுமை! பொறுமை! நடக்கணும்னு இருந்தா நடக்கும். இங்க பாருங்க, உங்க பொண்ணு ஒன்னும் இப்போ கிழவி ஆகிடல..” என்று குரலில் கேலி இழையோட பேசி, தாயின் மனதில் சூழ்ந்த எதிர்பார்ப்புகளை தகர்த்து எறிய முனைந்தாள் சம்யுக்தா.

எங்கே, என்றும் போல் இந்தத் தடவையும் ‘இப்படியாகி விட்டதே!’ என மனமுடைந்து போய் விடுவாரோ என்ற தவிப்பு, பக்குவப்பட்ட பெண்ணவளுக்கு!

அன்னை-மகளின் உரையாடல்கள் அதன் பிறகும் வெகு நேரம் வரைக்கும் தொடர்ந்தன.

பேச்சினிடையே சாவித்திரிக்கு உணவூட்டி, தானுமே இரண்டு கவளங்களை பசி தணிக்க விழுங்கிவிட்டு, உணவுக்குப் பின்னரான மாத்திரைகளை போட வைத்து அவர் உறங்கியதும் தான் அறைக்கு வந்தாள்.

களைப்பும், மனச்சோர்வும் ஒரு சேரத் தாக்கியதில் அமுங்கிப் போன பழைய மெத்தையில் சுருண்டு விழுந்தாள் பாவை.

அப்போது “அக்கா..” என்ற அழைப்போடு புத்தக அடுக்குடன் சத்யா அறைக்குள் நுழைய, தூக்கத்தை தூர விரட்டி விட்டு தங்கைக்கு பாடம் சொல்லிக் கொடுத்தாள் மூத்தவள். இது வழமை தான்!

எது எப்படியோ, சமையலறையை சுத்தப்படுத்தி வீட்டு வேலைகள் யாவையும் செய்து முடித்தவள், தங்கையருக்கு இரவுணவை உண்ண வைத்து, இளையவளுக்கு மறுநாள் ஸ்கூல் செல்வதற்கான ஆயத்தங்களை செய்து கொடுத்து, விடுபட்ட அந்த இந்த சிறு வேலைகளையும் செய்து முடித்து விட்டு சம்யுக்தா மீண்டும் அறைக்குள் பதுங்கும் போது பதினொரு மணி தாண்டி இருந்தது.

வேலைகள் முடிந்து விட்டதால், நிம்மதியாக உறங்கி எழலாம் என்ற எண்ணத்துடன் சத்யாவை அணைத்தபடி கண்களை மூடியவள் அலைபேசி ஒலிக்கும் சத்தத்தில் எரிச்சலின் உச்சத்தைத் தொட்டாள்.

‘ப்ச், யாரிந்த நேரத்தில்?’ என சலித்தபடி கைப்பையைத் துழாவி, ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டிருந்த அலைபேசியை கையிலெடுக்கும் போது அழைப்பு கட்டாகி விட்டிருந்தது.

பட்டன்களை அமுக்கி, இந்த நேரத்தில் தனக்கு அழைத்தது யாரென்று பார்த்தவளின் கண்கள் சுருங்கின; புருவங்கள் யோசனையில் நெறிந்தன.

இரண்டு தடவைகள் ஏற்கனவே அழைப்பு வந்து கட்டாகியிருக்க, இது மூன்றாவது முரயோ. சேமிக்கப்படாத புதிய எண் வேறு!

‘யாராக இருக்கும்?’ என அவள் தீவிரமாக யோசிக்கத் துவங்க முன்பே, மீண்டும் அலைபேசி அதிர்ந்தது.

சிறியவளின் தூக்கம் கலைந்து விடாதபடி எழுந்து வெளியே வந்தவள், கூடத்தில் அமர்ந்து ஸ்மார்ட் கைப்பேசியில் மூழ்கிப் போயிருந்த சாந்தனாவை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு அழைப்பை ஏற்க,

“ஹலோ!” என்ற கம்பீரக் குரலொன்று, செவிப்பறையில் வந்து மோதி அவளுக்குள் பெரு அதிர்வலையை ஏற்படுத்தியது.

“ஹலோ, யாருங்க?”

நொடி நேர அமைதிக்குப் பின், “யதுநந்தன் ஸ்பீக்கிங் ஹியர்!” என்ற குரல் ஓங்கி ஒலிக்க, அதில் தெறித்த கம்பீரத்தில் பெண் மனம் அலை பாய்ந்தது. காந்தமாய் ஈர்த்தது அந்தக் குரல்.

“எ.. எந்த யது..நந்..” என்று தடுமாறியவளின் காதில் ஒலித்தது, சற்று முன் ‘பையன் பேரு கூட ஏதோ நந்தன்.. நாதன்..’ என்று இழுவையாய் நிறுத்திய சாவித்திரியின் குரல்.

‘அடடே! இது..’ என யோசித்தவள் பதற்றமாக பேச வாய் திறக்க முன்பே,

“ஹலோ, ஆர் யூ தேர்?” என்று ஆடவன் கேள்வி தொடுத்தான்.

“ஹான், இ.. இருக்கேன்..”

“ஓகே ஃபைன்!” என்றவன் படபடவென நாளைக்கு எவ்விடத்தில், எத்தனை மணிக்கு சந்திக்கப் போகிறோம் என்பதை ஒப்பித்து விட்டு அழைப்பைத் துண்டித்து விட, புயலடித்து ஓய்ந்தது போல் மூச்சை ஆசுவாசமாக இழுத்து விட்டாள் யுக்தா.

“ஃபோன்ல யாரு யுக்தா?” என சந்தேகப் பார்வையோடு வினா எழுப்பிய தங்கையை திரும்பிப் பார்த்து முறைத்தவள்,

“நான் யார்கிட்ட வேணா பேசிட்டு போறேன்? நீ இப்படியே விடியும் வரை உட்கார்ந்திருக்காம போய் தூங்குறியா?” என்று கேட்க,

‘நீ சொல்லி நான் செய்யணுமா?’ என்கின்ற தோரணையில் உதடு சுழித்தாள் சாந்தனா.

இந்த அலட்சியம், திமிரான நடத்தை என எல்லாவற்றையும் எண்ணி வருந்தி, கூனிக் குறுகி நிற்பாள் ஒருநாள். அந்நாள் ஒன்றும் வெகு தொலைவில் இல்லை என கைகொட்டி சிரித்தது விதி.

“நீ இப்படியே காலத்தை ஓட்டு! ரொம்ப நல்லா உருப்படுவ.. இதுல என்கிட்டே வேற கேள்வி கேட்க வர்றா பாரு!” என்று சோர்வு தந்த எரிச்சலில் முணுமுணுத்தவள்,

‘ப்ச்! என் நம்பர் எப்படி அந்தாளு கிட்ட?’ என்ற யோசனையோடு சென்று மெத்தையில் முகம் குப்புற விழுந்தாள்.

‘ம், யதுநந்தன்.. பார்க்க எப்படி இருப்பாரு?’

‘அதிசயமா, பொண்ணு வீட்டாளுங்க கிட்ட எதையும் எதிர்பார்க்காம திருமணம் பண்ணிக்க நினைக்கிறாரே.. காரணம் ஏதும் இருக்குமோ?’

‘ப்ச்! ஒருவேளை எல்லாம் ஓகே ஆகிட்டாலும் என்னை வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லிட மாட்டாரே? அப்பறம் நான் எப்படி அம்மா, தங்கச்சிங்களை கவனிச்சிக்குவேன்?’

‘ம்ம்கூம்! எதுக்கும் முதல்ல இதைப் பத்தி தெளிவா பேசிடனும் அவர்கிட்ட.. ஒத்துக்கிட்டா தான் இந்த கலியாணம், கந்தூரி எல்லாம்! இல்லனா குடும்பத்துக்காக தனியாளா வாழ்ந்துட்டு போகலாம். ஒன்னும் தப்பில்ல..’

‘இது வேற! கடவுளே, சாந்தனாவோட காதலுக்கு அம்மா ஓகே சொல்லிடனும். என்ன நடந்தாலும் நான் அம்மா பக்கத்துல உதவியா இருக்குற போல நீதான் பார்த்துக்கனும்..’

பலதரப்பட்ட கேள்விகளும், அதற்குண்டான பதில்களும், உள்மன வேண்டுதல்களும் என யுக்தாவின் ராத்திரிப் பொழுது, தூங்கா இரவாய் நீண்டு கொண்டே போனது.

கண்களை மூடினாலே பதில் கிட்டா கேள்விகள் மண்டையைக் குடைவதால், கொட்டக் கொட்ட இரவு பூரா விழித்திருந்தவள், விடியும் தருணத்தில் தான் கண் அயர்ந்து போனாள்.

அப்பப்பா! இப்பெண்ணுக்குத் தான் எத்தனை எத்தனை கஷ்டங்கள்?

தொடரும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!