கூடத்தில் அமர்ந்து, சத்யாவின் பாடம் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை தீர்த்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.
அவள் ஒன்றும் அவ்வளவு பெரிய படிப்பாளி இல்லை தான் என்றாலும் கல்வியறிவு அறவே இல்லாதவள் அல்ல என்பதால், டியுஷன் செலவுகளுக்கு பணத்தைக் கரைக்க வழியின்றி தன்னால் இயன்ற அளவு தங்கைக்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறாள்.
சொல்லிக் கொடுத்ததை கவனம் சிதறாமல் உள்வாங்கிக் கொண்ட சத்யா, சரியென்ற தலை அசைப்புடன் புத்தகத்தில் மூழ்கி விட, அவளைப் பார்த்தபடி சுவற்றில் முதுகு சாய்த்தவளின் மனம், காலைநேர யதுநந்தனின் சந்திப்பில் மூழ்கிப் போனது.
ஒரு பெண் குழந்தைக்கு தந்தை! ஏற்கனவே மணமாகி, மனைவியை இழந்தவன் என்பதை அறிந்த பிறகும், ‘ஐயோ, இரண்டாந் தாரமா!’ என சோர்ந்து பின்வாங்க முன்வரவில்லை, பாவை மனம்.
வீட்டுக்கு வந்ததும், ‘பையனைப் பிடிச்சிருக்கு’ என்பதோடு நிறுத்திக் கொண்டாளே தவிர, தரகர் தங்களிடம் கூற மறந்த மேலதிக தகவல்கள் எதையும் தாயிடம் பகிர்ந்து கொண்டிருக்கவில்லை.
தங்களின் மனம் உவந்த சம்மதத்தைக் கூறியதும் நிலவாய் விகசித்த தாயின் முகம் இப்போதும் கண்ணுக்குள்ளே வந்து நின்றது, அவளுக்கு.
யதுநந்தன் பற்றிய உண்மையை அறிந்த பிறகும் இதே ஆர்வம் தொடருமா என்றால், கண்டிப்பாக இல்லையென்று தான் கூறவேண்டும்.
போதாதென்று, ‘என் பொண்ணுக்கு அவ்ளோ பெருசா என்னத்த வயசாச்சு? ரெண்டாந்தாரமா போக வேண்டிய அவசியம் தான் என்ன..’ என்று கதறி விடுவார் எனத் தெரிந்தாலும், அவனுக்கு மறுக்க ‘மணமாகியவர்’ என்பதைத் தாண்டி வேறெந்த வலுவான காரணங்களும் சிக்கவில்லை என்பதால் தன் சம்மதத்தை உளமார தெரிவித்து விட்டிருந்தாள் தாயிடம்.
கூடவே, மேலதிக தகவலாக, “இந்த ஞாயிறன்று அவரும், அவரோட அப்பாவும் இங்க வர்றதா சொன்னாரும்மா..” என்றும் கூறி வைத்திருந்தாள்.
இன்று முழு பூசணியை சோற்றில் பதமாய் மறைத்தாயிற்று! ஆனால் ஒருநாள் தெரியாமலா இருந்துவிடப் போகிறது?
அன்றைக்கு தாயிடமிருந்து புலம்பல்களும், எதிர்ப்பும் எழாமல் இருக்காது. சுற்றத்தினரின் அகல வாய்களும் சும்மா இருந்து விடாது. அவை மனதை ரணப்படுத்தும் வண்ணம் குத்திக் கிளறத் தான் போகின்றன.
யோசனையின் மத்தியில் நெடுமூடுச்செறிந்த யுக்தா, “சமாளிச்சுக்கலாம்..” என்று முணுமுணுத்து தன்னைத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டாள்.
‘நீங்க எதைப் பத்தியும் கவலைப்பட அவசியமில்லை. எந்த சந்தர்ப்பத்துலயும், உங்களோட எந்த சுதந்திரமும் மறுக்கபடாது. உங்க தங்கச்சிங்க பொறுப்புல எனக்கும் பங்கிருக்கு! அம்மாவைப் பத்தி மண்டைய பிச்சிக்கிட்டு யோசிக்க வேண்டிய தேவை கூட உங்களுக்கு இல்ல. டிரஸ்ட் மீ!’ என காதினுள் ரீங்காரமிட்ட கம்பீரக்குரல் அவளுக்குள் ஒருவித இதத்தைப் பரப்பிச் செல்ல, இதழ்களில் சிறு முறுவலொன்று எட்டிப் பார்த்தது.
‘எந்த பிரச்சனையும் வந்துற கூடாது..’ என மனமார வேண்டுதல் வைத்தவள் சத்யாவின் அழைப்பில் தெளிந்து, அடுத்த ஒருமணி நேரம் வரை அவளுடனே தான் நேரத்தை செலவு செய்தாள்.
இரவில் வித்யாவிடமிருந்து அழைப்பு வந்தது.
கடைக்கு வராத காரணத்தை காருண்யராஜிடம் காலையில் அதிக பிரயத்தனப்பட்டு பூசி மெழுகியது போலன்றி, காரணத்தை வெளிப்படையாகவே கூறி முடித்தாள் அவளிடம். அதில் யதுநந்தன் பற்றிய எதுவும் சொல்லப்படவில்லை என்பது ‘ஹைலைட்’!
‘அவரைப் பிடித்திருக்கிறது. அவருக்கும் தான்..’ எனத் தொடங்கி, நந்தன் தன் மனதுக்கு ஆறுதலளிக்கும் விதமாகப் பேசியவை, அந்த ஒருமணி நேரத்தில் அவனிடம் அவள் கண்ட குணாதிசயங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டவள் மறந்தும் குட்டி யுவனியைப் பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை.
முதலில் அன்னையை சமாளித்த பிறகு, ஓரமாக முளைக்கும் வித்யா உட்பட்ட ஓரிரு தோழியரின் கண்டிப்பை இலகுவாகக் கடந்து வரலாம் என்பது அவளுடைய யூகம்.
அது மட்டுமன்றி, இதைப் பற்றி அலைபேசியில் தோழியிடம் கிசுகிசுக்கும் போது, தாய்க்கோ அல்லது இளையவளுக்கோ தான் கூறும் விடயம் கேட்டு விடுமோ என்ற சிறு தயக்கமும் இல்லாமல் இல்லை.
அவளுடன் அரைமணி நேரம் சலம்பியவள் எஞ்சியிருந்த வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு இரவுணவுடன் அமரும் போது, செருப்பை திசைக்கு ஒன்றாக கழட்டி வீசியபடி துள்ளலும் நடையுமாக வீட்டினுள் நுழைந்தாள் சாந்தனா.
ஓரம் சென்று விழுந்த செருப்பைப் பார்த்து பற்களைக் கடித்த சம்யுக்தா, “எங்கே போய்ட்டு வர?” என்று குரலில் அழுத்தம் தொனிக்க வினவ,
“ஃபிரெண்ட்ஸ் கூட வெளியே போயிருந்தேன்..” என்றாள், உள்மனப் பதற்றம் வெளியில் தெரியாமல் சமாளிப்பாக புன்னகைத்தபடி.
விழி பார்த்து தங்கை மனம் புரிந்து கொண்டவள், “சந்தா லிஸின். நான் சொல்லி நீ தெரிஞ்சுக்க வேண்டியதில்லை. நீ படிச்ச பொண்ணு இல்லையா? கண்ட மாதிரி ஏமாந்து தொலைச்சிடாத என்ன.. கவனமா இருந்துக்கோ!” என்று கண்டிப்புடன் அறிவுறுத்த,
“ப்ச்!” என்ற சலிப்பு சாந்தனாவிடமிருந்து வெளிப்பட்டது.
‘அறிவுரை சொல்லக் கேட்டால், அது தன்னை விட வயதில் சிறியவளாக இருந்தாலுமே, அதிலிருக்கும் நல்ல விடயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.’ என வழிப்படுத்தும் சாவித்திரியின் வளர்ப்பில், சாந்தனா மட்டும் ஒரு தனிரகம் தான்!
‘எனக்கு நினைச்சதை தான் நான் செய்வேன், போவியா..’ என்கின்ற அலட்சியப் போக்கு என்றுமே அவளிடமுண்டு! அறிவுரை கூறுவது யாராக இருந்தாலுமே அவளுடைய ஒரே பதில் இந்த முகசுழிப்பு மட்டுமே..
அலைபேசியின் தொடுதிரையைத் தட்டியபடி இருக்கையில் அமர்ந்தாள் சாந்தனா. அதுவும் கூட பலமாதங்களாக சிக்கனப்படுத்தி சேர்த்து வைத்த பணத்தில், தங்கை ஆசைப்படுகிறாளே என சம்யுக்தா வாங்கிக் கொடுத்தது தான்!
“போய் வாஷ் போட்டுட்டு வந்து சாப்பிடு சந்தா..” என அக்கறையும், கண்டிப்பும் இரண்டறக் கலந்த குரலில் பெரியவள் அதட்ட,
“அதெல்லாம் சாப்பிட்டாச்சு..” என்றவள் சிறு இடைவெளிக்குப் பிறகு, “எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது யுக்தா!” என்றாள் நல்ல பிள்ளையாக..
“எதுக்கு?”
“புது ட்ரெஸ் வாங்கணும். வெளிய போறதா இருந்தா உடுத்திட்டு போக எதுவுமே இல்ல..”
“என்னது.. இல்லையா? ஏன்கா போன வாரம் தானே அக்காவோட உண்டியல் கிண்டி நீ புது ட்ரெஸ் வாங்கிட்டு வந்தே?” என முந்திக் கொண்டு பேசி, மூத்தவளிடம் மற்றவளைக் கோர்த்து விட்டாள் சத்யா.
அவளை முறைத்தவள், யுக்தாவின் அலட்டிக் கொள்ளாத பார்வையை வைத்தே சத்யா கூறிய விடயம் அவளுக்கு முன்பே தெரியும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள்.
“யுக்தா.. அது வந்து..” எனத் தடுமாறியவளை கண்கள் சுருக்கி அழுத்தமாகப் பார்த்திருந்தவள் வெற்றுத் தட்டுடன் எழுந்து சமையலறைக்குச் சென்று விட,
“ஏன்கா.. படிப்பை பாதில நிறுத்திட்டு அவ நம்மைப் பத்தி யோசிச்சா! உன்னை ரொம்ப மெனக்கெட்டு படிக்க வைச்சா, இல்லையா? படிச்ச பிறகும் நீ இன்னொருத்தங்க கையை எதிர்பார்த்துட்டு இருக்க பாத்தியா? உன்னை நெனச்சா ரொம்பப் பெருமையா இருக்கு.” என நக்கலடித்தாள் சத்யா.
“மூடிட்டு வேலைய பார்க்கறியா?” என எரிந்து விழுந்தவளை முறைத்தவள்,
“போய் உருப்படியா எதையாவது பண்ணு அக்கா! எவ்ளோ நாளைக்கு தான் யுக்தா அக்காவும் இப்படியே உழைச்சிட்டு இருப்பா? உனக்கு கொஞ்சம் கூட, அவங்களுக்கு ஹெல்ப்பா இருந்தா என்னனு தோணவே இல்லையா?” என்று கேட்க,
“சத்யா!” என பற்களை அரைத்தாள் சாந்தனா.
சிறியவள் வாய் மூடவில்லை.
“ஐடி கம்பெனி இன்டெர்வியூஸ்க்காவது அப்ளை பண்ணுகா. நீ ஏன் இப்படி இருக்க? இப்படி பொறுப்பில்லாம சுத்த தான் அக்கா உனக்காக ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்றாங்களா?” என தன் உள்மன ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தாள்.
படக்கென்று இருக்கையிலிருந்து எழுந்து நின்றவள், “நீ வயசுல சின்னவ! எனக்கு சொல்லி தர வராத..” என கத்தி விட்டு நகர,
“ஆள் வளர்ந்து மட்டும் பத்தாது. புத்தியும் வளரனும். இப்போ நான் சொன்னதை நீயே சுயமா புரிஞ்சிக்கிட்டா நான் ஏன்கா சொல்லி தர போறேன்?” என்று கடுப்புடன் குரல் உயர்த்தினாள் சத்யா.
அந்நேரம் சமையலறை விட்டு வெளியே வந்தவள், இருவரையும் ஒரு சேர முறைத்து விட்டு, “சாப்பிட்டுட்டு போய் தூங்கு சத்யா. நாளைக்கு ஸ்கூல் இல்ல?” என்று கேட்க,
“நீ எப்பவும் அவளுக்கு தான் சப்போர்ட்டு. போக்கா!” என சிணுங்கியவளின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.
வேகமாக அடித்து சாற்றப்பட்ட அறையைப் பார்த்து விட்டு தங்கையை ஏறிட்டவள், “சில விஷயங்களை நம்ம சொல்லி புரிய வைக்கிறதை விட, அவங்களாவே புரிஞ்சிக்கிறது தான் பெஸ்டு குட்டிமா. விடு! நான் நல்லா தான் இருக்கேன்..” என ஆறுதல் படுத்த,
“அவ ஏன் இப்படி இருக்கா?” என விம்மினாள் சத்யா.
“ஐ டோன்ட் க்னோ! கம் ஹியர்..” சிரிப்புடன் அவளை அணைத்து உச்சி முகர்ந்து தலை கோதி விட்டவளின் மனமோ, சிறியவளின் கள்ளமற்ற அன்பில் நெகிழ்ந்து போயிருந்தது.
நாட்கள் வழமை போல் கடந்து, ஞாயிற்றுக் கிழமையும் புலர்ந்தது.
அன்றைய சந்திப்பின் போது சொன்னது போலவே, முந்தினம் இரவு அழைப்பு விடுத்து நாளைக்கு தந்தையுடன் வருவதாக நினைவூட்டி விட்டு அழைப்பை துண்டித்துக் கொண்டிருந்தான் யதுநந்தன்.
எடுத்ததுமே, சுகநல விசாரிப்புகள் கூட இன்றி அவன் படபடவென பேசிவிட்டு வைத்தது பாவை மனதினுள் சிறு சுணக்கத்தை ஏற்படுத்தினாலும்,
‘இந்த மேரேஜுக்கான ஒரே காரணம், என்னோட பொண்ணு! கலியாணம் பண்ணிக்க போறவங்க மனசைப் பத்தி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். நீங்க எதையும் என்கிட்ட எதிர்பார்த்திட கூடாதுனு தான் இப்போவே சொல்லி வைக்கிறேன்..’ என அவன் முதலிலே கூறி விட்டிருந்ததை நினைத்து மனதை தேற்றிக் கொண்டாள் யுக்தா.
ஞாயிறன்று ஓய்வு என்பதால், ஆக வேண்டிவற்றை அவளே தான் கவனித்துக் கொண்டாள்.
சாந்தனா காலையிலே வெளிக் கிளம்பிச் சென்றிருக்க, ஒத்தாசையாக சத்யாவும், பக்கத்து வீட்டு மாமியும், வித்யாவின் தாய் பார்வதியும் மட்டுமே அங்கிருந்தனர்.
உதவியாகத் தான் இருக்க முடியவில்லை, அருகிலாவது இருக்கலாமே என்ற எண்ணத்துடன் சமையலறை கதவருகே சக்கர நாட்காலியில் அமர்ந்திருந்த சாவித்திரியின் மனம், கடவுளின் காலடியே மண்டியிட்டு இறைஞ்சிக் கொண்டிருந்தது.
‘என் பொண்ணு, வாழ்க்கைல எந்த சந்தோசத்தையும் அனுபவிக்கல. அவளுக்கு எல்லா இன்பத்தையும் இந்த கலியாண வாழ்க்கை கொடுத்துரனும்..’ என்ற அன்னையின் வேண்டுதல் ஒருபுறமிருக்க,
“கடவுளே! எந்த பிரச்சனையும் வரக்கூடாது..” என மூச்சு விட மறந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.
இங்கே, இளஞ்சிவப்பு வண்ண உடையில் மூர்த்தியின் மடி மீது துள்ளி விளையாடிக் கொண்டிருந்தாள் யுவனி.
அவளின் உப்பிய கன்னத்தைக் கிள்ளி விட்ட கீர்த்தனாவின் பார்வை, சோபாவில் சம்மணமிட்டு அமர்ந்து மடிக் கணனியில் மூழ்கிப் போயிருந்த யதுநந்தனை அவ்வப்போது தொட்டு மீண்டு கொண்டிருந்தது.
அவளிடமிருந்து வெளிப்பட்ட பெருமூச்சுக்கான காரணத்தை ஊகித்தவராய், “ஆதவன் வர இன்னும் எவ்ளோ நேரமாகும் கீர்த்தி? டைம் ஆகிடுச்சே!” என்றார், மகனைப் பார்வையால் அளவிட்டவாறே..
“இப்போ வந்திடுவாரு அங்கிள்..” என்றுவிட்டு வாய் மூடவில்லை, வெளியே பைக்கொன்று புழுதியைக் கிளப்பிக் கொண்டு வந்து நின்ற சத்தம் காதைக் கிழித்தது.
“வந்துட்டாரு..” எனக் கூறியபடி அவசர கதியில் சட்டென்று எழுந்து நின்றவள் யுவனியைத் தூக்கிக் கொண்ட நேரத்தில், அறக்கப்பறக்க உள்ளே ஓடி வந்தான் ஆதவன்.
கீர்த்தனாவுக்கு கணவனாக முன்பே யதுநந்தனுக்கு உற்ற தோழனாக இருந்து, பின் கிருஷ்ண மூர்த்தியின் நம்பிக்கைக்குரிய பிஏவாக மாறிப் போனவன் என ஒரே வரியில் அவனை அறிமுகம் செய்து வைக்கலாம்.
நண்பனின் முடிவில் மெய் மறந்து போயிருந்தவன் வந்ததும் வராததுமாய், “கங்கிராட்ஸ் நந்தா!” எனக் கூவியபடி சோபாவில் விழுந்து, யதுநந்தனைப் பக்கமாக அணைத்து விடுவித்தான்.
மூர்த்தி சிரிப்பினூடே இருவரையும் பார்த்திருந்தார்.
இவ்வளவு நேரம், ‘யாருக்கு விருந்து’ என்பது போல் லேப்டாப்புடன் சரசம் புரிந்து கொண்டிருந்தவனை என்ன சொல்லி கிளப்புவேன் என்ற சோகத்தில் நின்றிருந்தவருக்கு, ஆதவனின் வரவு ஆசுவாசத்தைக் கொடுத்தது.
“அடிங்! என்னடா கொழுப்பா?” என நண்பனிடம் எகிறிக் கொண்டு வந்தவனைப் பார்க்கும் போது சிரிப்பு பீரிட்டது.
கடினப்பட்டு சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டவர், “ஆதவா! அவனைக் கூட்டிட்டு வா என்ன.. நான் போய் வெளியே வெயிட் பண்ணுறேன்..” என்று விட்டு நகரப் போக,
“ப்ச்! நீ வேற.. என் பையன் சும்மா அசத்துற மாதிரி வேற லெவல்ல ரெடியாகிட்டு, பின்னாடியே பொறுமையா வரேன்னு சொல்லுறான்டா ஆதவா! வா நம்ம போகலாம்..” என்றவரைப் பார்த்து ஏதோ கூற வருவதற்குள், சலித்துக் கொண்டே சோபாவை விட்டு எழுந்து நின்றிருந்தான் யதுநந்தன்.
ஆதவனைப் பார்த்து கண் சிமிட்டி விட்டு திரும்பி நடந்த மூர்த்தியின் உதட்டில் இன்னதெனத் தெரியாத புன்னகையொன்று நெளிந்திருந்தது.
கீர்த்தனா ஏறிக் கொண்ட காரை, பெண்வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டிய சீர்தட்டுக்களை ஏற்றி விட்டு ஆதவனே ஓட்ட, மற்றொரு கார் யதுநந்தனின் கையில் வேகமெடுத்தது.
சரியாக ஒன்றரை மணி நேரம்!
ஐந்து நிமிட இடைவெளியில் கார்கள் இரண்டும் தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ள, வெளியே நின்றிருந்த சத்யா,
“அவங்க வந்துட்டாங்க..” என்ற கூவலுடன் வீட்டினுள் ஓடினாள்.
ஆதவன் தட்டுக்களை காரை சூழ்ந்து கொண்ட வாண்டுகளின் உதவியுடன் உள்ளே எடுத்துச் செல்ல, கீர்த்தனாவும் மூர்த்தியும் அவனைப் பின் தொடர்ந்தனர்.
ஓரிரு நிமிடங்கள் கார் சீட்டிலே கண் மூடி அமர்ந்திருந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் யுவனியையும் தூக்கிக் கொண்டு வர, யுக்தாவின் தூரத்து சொந்தங்கள் ஓரிருவர் கௌரவம் தப்பாது அவர்களை வாசலில் வரவேற்று உபசரித்தனர்.
உள்ளே நுழைந்ததும், “அத்து..” என்ற அழைப்புடன் யுவனி கீர்த்தனாவிடம் தாவிக் கொண்டதால் ஆரம்பத்தில் ‘குழந்தை யாரோடது?’ என பலர் மனதில் இயல்பாய் எழுந்த கேள்வி மெல்ல மறைந்து போயிற்று!
பேச்சு வார்த்தைகள் இனிதே முடிவுற, காப்பித் தட்டுடன் கூடத்துக்கு வந்தாள் சம்யுக்தா.
அவ்வளவு நேரமும் ஆட்கள் நிறைந்திருந்த அவ்விடம் ஒவ்வாமல் போனதால் இடைவெளி விடாமல் அழுது கொண்டிருந்த யுவனி, குனிந்த தலை நிமிராமல் அமைதியே உருவாக அன்ன நடையிட்டவளை உறுத்துப் பார்த்தாள்.
எல்லாம் சில நொடிகள் தான். யுக்தாவை அடையாளங்கண்டு கொண்டதும் முகம் செந்தாமரையாய் விகசிக்க, “மம்மிஈ..” என மழலையில் கூவி அழைத்தாள் சிறியவள்.