2. வாடி ராசாத்தி

5
(2)

2. வாடி ராசாத்தி

 

மதிய உணவு வரை கீழேயே இறங்கி வரவில்லை கார்த்திக். அவனுக்கு தெரியும் இன்று நிச்சயம் அவனின் திருமண பேச்சு வரும் என்று. அதனால் முடிந்தவரை அதை தள்ளி போட்டான்.

நந்து பிறந்ததில் இருந்தே இவர்கள் வீட்டில் ஜெயந்தி இந்த பேச்சை ஆரம்பித்து விட்டார். அவர்கள் ஊரில் இப்படி பேசுவது பெரிய விஷயம் இல்லை என்பதால் யாரும் அதை பெரிதாக பொருட்படுத்துவது இல்லை. ஆனால் ஓரளவிற்கு வளர்ந்த பின் கார்த்திக்கிற்கு தெரிந்து போயிற்று தன்னால் நந்துவைத் திருமணம் செய்ய முடியாது என்று. கடந்த சில வருடங்களாகவே அவன் திருமணம் என்று வரும் போது ஏற்பட போகும் பிரளயத்தை சமாளிக்க தன்னை தயாராக வைத்திருக்கிறான் கேபி.

மதிய உணவிற்கு கீழே வந்தவன் பெரியம்மா, அக்கா முகத்தில் இருந்த தீவிரத்தை கண்டு கொண்டான். மனம் உடனேயே இனியும் இந்த விஷயத்தை தள்ளி போட வேண்டாம் என்று சொல்லியது. உணவருந்த ஆரம்பித்தவன்,

“அக்கா, நந்துவுக்கு மாஸ்டர்ஸ் படிக்க கோயம்புத்தூர்ல அட்மிஷன் வாங்கலாம்னு இருக்கேன்…. மாமா கிட்ட பேசணும், எப்போ அவர் ப்ரீ….?” என்றான்.

“மாஸ்டர்ஸா….? அவளுக்கும் உனக்கும் கல்யாணம்….” என்று விஜி ஆரம்பிக்க,

“அக்கா, என் கல்யாணம் நான் சொல்வேன்…. அப்போ ஏற்பாடு பண்ணா போதும்….” என்றான் பட்டென்று.

“அப்போ நந்து மேலே படிச்ச அப்புறம் உங்க கல்யாணம்னு சொல்றியா ராஜா….? அவ இன்னும் படிக்கணுமா உனக்கு….?” ஆசையாக கேட்டார் ஜெயந்தி.

“ரெண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை பெரியம்மா. இது வேற அது வேற….” என்று அவர்களை கலவரப்படுத்தினான் கார்த்திக்.

“அதெப்படி…. நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லு….அப்புறம் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்…. உங்க அக்கா வீட்டில கூட ரொம்ப ஆசையா இருக்காங்க….” ஜெயந்தி வலியுறுத்த,

“ஆமா கார்த்தி, மாமா கேட்டுட்டு வர சொன்னார் இன்னைக்கு முடிவா….” விஜியும் வேகமாக சொன்னாள்.

அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவனுக்கு அழைப்பு வர, அவன் எதிர்பார்த்த அழைப்பு என்பதால் ஆர்வத்துடன் அதை எடுத்தவன் எதுவும் பேசாமல் அந்த பக்கம் சொன்னதை மட்டும் கேட்டு கொண்டு கடைசியாக “நான் வரேன்….” என்று சொல்லி வைத்தான். பின்,

“முக்கியமான வேலை இது, நான் வெளில போகணும். சாயந்திரம் பேசலாம்….” என்றபடி வேகமாக உணவை உண்டு விட்டு கிளம்பிவிட்டான் வேகமாக.

***************

மாலை மாமனின் பிறந்தநாளிற்கு வந்த நந்துவுக்கும் குருவிற்கும் வருத்தமான அம்மாவின் முகத்தை கண்டவுடன் விஷயம் புரிந்து போனது. அம்மாவின் அருகில் வந்த நந்து, “என்ன மா, மாமா ஒத்துக்கலையா….?” என்றாள் சற்று வருத்தமாக. இவர்கள் சொல்லி சொல்லி, அவளுக்கு மனதில் ஆசை இருந்தது. மாமனும் சிறப்பானவன் அல்லவா!

“அதெல்லாம் ஒன்னுமில்லை, சீக்கிரமா இந்த வீட்டுக்கு மருமகளா வரத் தான் போற நீ….” என்றார் ஜெயந்தி. சற்று தள்ளி அமர்ந்திருந்த முருகர் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்.

“மாமா இல்லையா வீட்டில்….? நான் விஷ் பண்ணனும்!” என்றான் குரு.

“இப்போ தான் பத்து நிமிஷம் முன்னாடி வந்தான், நீ கொஞ்ச நேரம் கழிச்சு போலாம்….” என்ற ஜெயந்தி, நந்துவிடம்,

“இந்தா குட்டி…. போய் உன் மாமனுக்கு வாழ்த்து சொல்லிட்டு, நீயே அவன்கிட்ட உன்னை தான் கட்டிக்கணும்னு சொல்லிட்டு வா….! ஓடு….” என்றார்.

“அய்யோ! மாமா கிட்டேயா…. நான் போக மாட்டேன்…. இதெல்லாம் பேசினா திட்டுவாங்க….” அலறினாள் அவள்.

“இதுக்கே இப்படி பயந்தா, அவனை கட்டிக்கிட்டு நாளைக்கு எப்படி அவனுக்கு பிள்ளை பெத்து கொடுப்பே…. இந்த வீட்டுக்கு வாரிசு உன் மூலமா தான் வரணும்! அதில ஏதாவது கோளாறு நடந்துச்சு…. சும்மா இருக்க மாட்டேன் நான்….இப்போ போற நீ அவன் ரூம்க்கு” என்று பேத்தியை அதட்டிய ஜெயந்தி கோபமாக வேகமாக எழுந்து போய் விட்டார். அவருக்கு இந்த கல்யாணம் நடக்கவில்லை என்றால் எண்ணமே ஒரு மாதிரியாக இருந்தது.

ஜெயந்திக்கு பிடிக்காத முருகவேலின் சாது குணம் தான் விஜிக்கும், நந்துவுக்கும் வந்திருந்தது. தன் வாழ்க்கை வீணான காரணத்தால் அவருக்கு நந்து அப்படி இருப்பது பிடிக்காது. அதுவும் அப்படி இருந்தால் அவளால் கார்த்திக்கை சமாளிக்க முடியாது என்பதால் எப்போதும் அவளை திட்டுவார். பாட்டிக்கு பயந்து மாமனின் அறைக்கு சென்றாள் நந்து.

**************

“மாமா….! மாமா….!” வெளியில் இருந்து அவன் அறை கதவை தட்டி கொண்டு இருந்தவளின் பின் மண்டையில் ஒரு தட்டு தட்டினான் கார்த்திக்.

“உள்ளே ஆள் இருக்கா இல்லையானு கூட தெரியாம தட்டிக்கிட்டு இருக்கே…. இன்னைக்கு எனக்கு பர்த் டே இல்லைனா என்கிட்ட கொட்டு வாங்கி இருப்பே….” என்றான்.

பதில் சொல்ல தெரியாமல் அசடு வழிந்தவளை அறைக்குள் அழைத்து சென்று அக்கா மகளுக்கு தங்க மோதிரம் ஒன்று பரிசாக கொடுத்தான்.

“தேங்க்ஸ் மாமா….சூப்பர் மாமா…. உங்க பர்த்டேக்கு மத்தவங்களுக்கு கிப்ட் கொடுக்கிற ஆள் இந்த உலகத்திலேயே நீங்களா தான் இருப்பீங்க மாமா….” உற்சாகமாக பேசினாள் நந்து. எப்போதும் இது வழக்கம் தான் என்பதால் அவளுக்கு ஆச்சரியம் இல்லை.

“நீங்க எல்லாம் மத்தவங்க இல்லை…. குரு எங்கே….?”

“வருவான்…. ஆனா உங்களுக்கு ஏன் எங்களுக்கு கிப்ட் கொடுக்கணும்னு தோணுச்சு….?”

“என்னை இத்தனை கேள்வி கேட்டா, உன்னை நான் கேள்வி கேட்பேன், ம்ம்…. ரெடியா….கேள்வி கேட்கவா….?” அவளை சீண்டினான் கார்த்திக். எப்போதும் அவளிடம் ஏதாவது அறிவு பூர்வமாக கேள்வி கேட்டு வம்பு இழுப்பான்.

“இன்னைக்கும் மா….ப்ளீஸ் வேண்டாம்….” அழுது விடுபவள் போல் அவள் முகம் மாற சத்தமாக சிரித்தான் கார்த்திக். நந்தனா ஒன்றும் முட்டாள் இல்லை, ஆனால் மாமன் அவளை படுத்தும் பாடில் அவ்வாறு ஆகி விடுவாள். அவனிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற நினைப்பிலேயே நிறைய கோட்டை விடுவாள்.

கார்த்திக் சிரிக்கவும் அவன் அழகில் ஒரு நிமிடம் அசந்து விட்டாள் நந்து. அப்போது தான் பாட்டி சொன்னது நினைவில் வர,

“மாமா, பாட்டி உங்ககிட்ட ஒன்னு சொன்ன சொல்ல சொன்னாங்க….” அவள் என்ன பேச போகிறாள் என்ற யூகம் இருக்க அவன் முந்தி கொண்டான்.

“அதுக்கு முன்னாடி நான் ஒன்னு கேட்கணும்…. பெரியம்மா உன்னை இனிமே பாவாடை தாவணி தான் போடணும்னு சொன்னா என்ன பண்ணுவே….?”

“அதெல்லாம் போட மாட்டேன். அப்படி எல்லாம் முடியாது. எப்போவாவது கோயிலுக்குனா ஓக்கே….”

“குட்! அப்போ இப்போ என்ன சொல்லி அனுப்பினாங்களோ அதையும் கேட்காத… அவங்க சொல்றது எல்லாம் நமக்கு சரியா வராது!” என்றான் பெரியம்மா அக்காவின் எண்ணங்கள் பற்றி தெரிந்தவனாக.

“ஆனா மாமா எனக்கு….” அவள் மெதுவாக ஆரம்பிக்க,

“மாமாக்கு இஷ்டம் இல்லை நந்து….! இதை இதோட விட்ரு….”

“ஏன் என்னை பிடிக்கலையா மாமா உங்களுக்கு….?” அவனின் பட்டென்ற பதிலில் முகம் சுருங்க, மன சுணக்கத்துடன் கேட்டாள் நந்து. அவன் மேல் காதல் என்றெல்லாம் இல்லை, ஆனால் அவள் மாமா அவன், அவனை தான் எதிர்காலத்தில் திருமணம் செய்வோம் என்ற எண்ணம் மற்றவர்களால் ஏற்படுத்த பட்டு இருந்தது. அவ்வளவு தான். அது மாறும் போது நிச்சயம் துன்பம் வரும் ஆனால் தாங்கி கொள்ள முடியாததாக இருக்காது நிச்சயம்.

“அப்படி எல்லாம் இல்லை நந்து. இப்போதைக்கு நீ படிக்கணும்….! அது தான் முக்கியம்.”

“நான் படிச்சுடுவேன் மாமா….! அப்பாக்கு அம்மாக்கு எல்லாருக்கும் நீங்கனா இஷ்டம்…. எனக்கும்….”

“உனக்கு இருபது வயசு தான் ஆகுது நந்து…. அவங்க சொல்லி சொல்லி நீ அப்படி யோசிக்கிறே….”

“அதில் என்ன தப்பு….? என்னை யாருக்கோ எப்படியும் கல்யாணம் பண்ணி தானே கொடுப்பாங்க….” மாமன் முழுதாக மறுக்க, லேசாக அழுகை வரபார்த்தது நந்துவுக்கு.

ஒரு நிமிடம் அவளை ஆழ்ந்து பார்த்தவன், “எங்கே என்கிட்ட கோபப்படு பார்ப்போம்…. அதட்டி திட்டு பார்ப்போம்….”

முழித்தாள் நந்து…. அவளால் யாரிடமும் கோபப்படவே முடியாது…. இதில் அவள் மாமனிடமா…!

“எனக்கு…. நான்…. வராதே மாமா….” திணறினாள் நந்து.

“அதனால் தான் சொல்றேன்….”

“இதுக்கும் நம்ம கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்….?”

“யார்கிட்டயும் சொல்லக் கூடாது ஓகே வா…. இது உனக்கும் எனக்கும் மட்டும் உள்ள சீக்ரெட்…. ஓக்கே….?” அவன் மனதில் உள்ளதை சொல்லாமல் விளையாட்டாக பில்டப் செய்ய,

“ஓக்கே மாமா…. யாருக்கிட்டயும் சொல்ல மாட்டேன்…. சொல்லுங்க….” சத்தியம் செய்யாத குறையாக பேசினாள் நந்து.

“எனக்கு வர போற பொண்டாட்டிக்கு பயங்கரமா கோவம் வரணும்…. கோவத்தில அவ என்கிட்ட பயங்கரமா சண்டை போடணும்…. அவ சண்டை போடுற சாக்கை வைச்சு நான் அவளை அடி பிச்சு எடுக்கணும்…. எனக்கு பொண்டாட்டியை டெய்லி அடிக்கணும் நந்து…. அது தான் என் ஆசை…. இப்போ சொல்லு, நான் உன்னை எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது….? உன்னை அடிக்க முடியுமா என்னால….?” என்றான் கார்த்திக் சிரிப்பை அடக்கி கொண்டு.

“மாமா….” மிரண்டு போனாள் அந்த அப்பாவி. “சரி மாமா…. சரி மாமா…. நம்ம கல்யாணம் வேணாம் மாமா….” அவனின் நாடகத்தை நம்பி தெறித்து ஓடி விட்டாள் நந்து.

அவள் சென்றதும் வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தான் கார்த்திக்.

************

மறுநாள் காலை,

“என்ன பா என்ன வேலை இன்னைக்கு….?” வேலைக்கு கிளம்பி தயாராகி சாப்பிட வந்து அமர்ந்த மகனிடம் கேட்டார் ஞானம். அவனின் அன்றாட வேலைகளை தெரிந்து கொள்ள எப்போதுமே கேட்பார் ஞானம். அவரும் தொழில் இடங்களை ஒரு சுற்று சுற்றி விடுவார். முருகர் தான் முழுக்க சந்நியாசம் வாங்கி கொண்டது போல கோயில், குளம் அல்லது வீட்டில் இருந்தால் இருக்கும் இடமே தெரியாமல் இருப்பார். ஆனால் அதிகம் பேசாததால் அனைத்தையும் கண் பார்வையிலே வைத்திருப்பதை யாரும் உணர்ந்ததில்லை, அது தெரியாததால் அவரை யாரும் பொருட்படுத்துவதும் இல்லை.

“இன்னைக்கு ஒரு லேண்ட் ரிஜெஸ்ட்ரேஷன் பா…. அப்புறம் வழக்கமான வேலை தான்….” என்றவன்,

“நான் பெரியப்பாவை பார்த்திட்டு கிளம்புறேன் பா…. வரேன்….” என்று முருகரை தேடி சென்றான்.

“வாடா கண்ணா, சாப்பிடியா….? கிளம்பிட்டியா….?”

“ம்ம்…. நீங்க சாப்பிட்டாச்சா….?”

“உங்க அம்மா கல்யாணம் ஆகி வந்த அப்புறம் டெய்லி என்னை மூணு வேளையும் தவறாம கேட்பா…. அவளுக்கு அப்புறம் ஓரளவிற்கு விவரம் தெரிஞ்சதிலிருந்து நீ கேட்கிறே…. சந்தோஷமா இருக்கு டா….”

“எங்க அம்மா பிள்ளை தானே நான்! அதான்….” சொன்னவனின் முகத்தில் சிரிப்பு இருந்தாலும் பேச்சில் ஏக்கம் இழையோடியது.

“நேத்து என்னடா சொல்லி உன் அக்கா மகளை துரத்திவிட்டே….? குழந்தை இன்னும் பேய் அடிச்ச மாதிரி இருக்கா….?” சிரித்தபடி மகனை கேட்டார் முருகர்.

“அந்த குழந்தையை போய் என்னோட கோர்த்து விட பார்க்கிறாங்க…. நான் சொல்றது பொய், அதை நம்ப மாட்டேங்கிற மாதிரி கூட நந்து பார்க்கலை…. நம்பி பயந்து வேற ஒடுறா…. நான் யார் சொன்னாலும் நந்துவை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் பெரியப்பா.” கொஞ்சம் எரிச்சலாக பேசினான் கார்த்திக்.

“உனக்குன்னு ஒருத்தி இருப்பா, அவ வர வரைக்கும் எல்லாரும் எதையாவது பேசட்டும், நீ கண்டுக்காதே…. சந்தோஷமா இரு டா கண்ணா….!” வாஞ்சையுடன் மகனின் கன்னம் தட்டினார் முருகர்.

“வீட்டில் எல்லாரையும் எதிர்த்து நான் ஒரு பொண்ணை கல்யாணம் பண்றேன்னா…. சும்மா அதிரி புதிரியா இருக்கும் பெரியப்பா பொண்ணு…! சும்மா ஏனோ தானோ பொண்ணு எல்லாம் இல்லை!”

“அப்போ பொண்ணை முடிவு பண்ணிட்ட…?” மகனின் கண்ணில் வழிந்த கற்பனையை கண்டு கேட்டார் முருகர்.

“சீக்கிரம் சொல்றேன்….” என்றான் பெரியப்பாவிடம் மனம் திறந்து.

“உன்னை வைச்சு செய்யுற மாதிரி பொண்ணுனு தெரியுது மகனே…. உனக்கும் அவளுக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கும்! சந்தோஷம்!” மகனை கிண்டல் செய்தார் முருகர்.

அந்த அறையே அதிரும்படி சிரித்தவன் மனதில், நிச்சயமா வைச்சு செய்வா அந்த சில்மிஷம் என்ற எண்ணம் வந்தது. அவளின் நினைவில் முகம் கனிய, “கண்டிப்பா…. செமையா இருக்கும்!” என்றபடி உற்சாகமாக கிளம்பினான் கார்த்திக்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!