ஒன்றரை மாதங்களில் திருமணமென முடிவாகி விட்டதும் சிறு தலையசைப்புடன் விடைபெற்றுக் கொண்டவனிடமிருந்து ஒரு வாரம் கழிந்தும் எந்தவொரு அழைப்பும் வரவில்லை.
அவளும் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்பதாய் காட்டிக் கொண்டாலும், ‘வாழ்க்கை இப்படியே அசுவாரஷ்யமா கழிஞ்சி போய்டுமோ?’ என்ற பயம் அடிமனதில் எழாமல் இல்லை.
ஆனால் அவன் தான் ஆரம்பத்திலே, மறுமணம் யுவனிக்காக மட்டுந்தான் என தெளிவாய் உரைத்து விட்டானே.. பிறகும் எதை நீ எதிர்பார்க்கிறாய் அவனிடம் என நியாயமாக கேள்வி எழுப்பிய மனசாட்சிக்கு பதில் கூறத் தெரியாமல் அடிக்கடி முழித்து நிற்பாள் பேதைப் பெண்.
எத்தனை கட்டுப்பாடுகள் தான் விதித்தாலும், மனம் என்பது எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் குவிந்த ஒரு வெட்டவெளி தானே?
‘யுவனிக்காக’ என்ற வார்த்தை மறந்து, இந்த திருமணம் சாந்தனாவின் நலனை எண்ணி மட்டுந்தான் என்ற நினைப்பு மூலையில் பதுங்கி, சிலநேரங்களில் அவள் அவனிடமிருந்து எதையோ எதிர்பார்க்கத் தான் செய்தாள்.
அன்று, இருள் சூழத் துவங்கியிருந்த நேரத்தில், துணிக் கடைக்குள், இருக்கையை இழுத்துப் போட்டுக் கொண்டு அதில் சோர்வுடன் சாய்ந்து கண்மூடியிருந்தாள் சம்யுக்தா.
கடிகாரத்தின் நிமிட முள்ளும், மணித்தியால முள்ளும், மணி ஏழு இருபது எனக் காட்டி நின்றன.
அவளைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி, மேஜை மீது இழுத்துப் போட்டிருந்த சேலைகளை மடித்து அடுக்கிக் கொண்டிருந்தாள் வித்யா.
“நேரமாகுதுடி.. நான் அப்போவே கிளம்பியிருந்தா இந்நேரம் வீட்டுல இருந்திருப்பேன் இல்ல?” என்று கண் திறமாவலே கேட்டவளை முறைத்தவள்,
“வீட்டுக்கு போய் இப்படி அஞ்சு நிமிஷமாவது நீ ரெஸ்ட்ல உட்கார மாட்ட! அந்த வளர்ந்த கழுதைக்கு பொறுப்புனு ஒன்னு இருக்கா இல்லையா? நீ அளவு கடந்த செல்லங் கொடுக்குறதால வந்த வினை இது.
வாயை மூடிட்டு இரு யுக்தா.. இல்லாட்டி ஏதேதோ பேசிடுவேன், ஆமா! இப்போவும் அறக்கப் பறக்க போய் வீட்டு வேலை, கிட்சேன் வேலைனு தானே பம்பரமா சுழல போற? அதுக்கு தான் இரு, நானே உன்னை ட்ரோப் பண்ணிடறேன்னு சொல்லிட்டேன். பொறு, இன்னும் பைவ் மினிட்ஸ்ல வந்திடுவேன்!” என படபட பட்டாசாய் பொறிந்தாள்.
அன்று காலையிலே இதோ வந்து விடுவேன் எனக் கூறிப் புறப்பட்டுச் சென்ற சாந்தனா, யதுநந்தனின் வீட்டினர் வந்து செல்லும் வரை வீடு திரும்பவில்லை. அவளின் எண்ணுக்கு விடாமல் அழைத்த யுக்தாவின் அலைபேசி அழைப்புகளும் கூட விழலில் இறைத்த நீர்போல் வீணாகித் தான் போயின.
அன்று காருண்யராஜ் வேறு, கையில் வேறொரு பொறுப்பை ஒப்படைத்து விட்டதால், தன்னாலும் அங்கு வர முடியாமல் போனதில் ஏக வருத்தம் வித்யாவுக்கு!
“யுக்தாவுக்கு துணையா சாந்தனா இருப்பா!” என்ற அதீத நம்பிக்கையில் மனதை ஆறுதல்படுத்திக் கொண்டவளின் நினைப்பில் ஒரு லாரி மண்ணை அள்ளிப் போட்டார், யுக்தாவுக்கு உதவியாகச் சென்றிருந்து விட்டு வீடு திரும்பிய அவளின் அன்னை பார்வதி.
“இந்த சாந்தனா பொண்ணு எங்க போச்சுனு தெரியலடி. யுக்தா பாவம், யாருமில்லாம தனியா நின்னுட்டு இருந்தா.. நீயாவது வந்திருக்கலாம்.” என்று வந்ததும் வராததுமாகப் புலம்பித் தள்ளியவரிடம், அங்கு நடந்தவற்றை கேட்டறிந்து கொண்டவளுக்கு இரத்தம் கொதித்தது.
யுக்தாவின் இந்த முடிவிற்குக் காரணம், தங்கையின் திருமணத்தை எண்ணி அவள் கொண்ட கலக்கமாகத் தான் இருக்கும் என சந்தேகத்துக்கு இடமின்றி ஊகிக்க முடிந்தது அவளால்.
அவள் தங்கைக்காக மட்டுமே சிந்திக்க, சாந்தனாவோ அக்காளின் விஷேசத்தில் கூட வீட்டில் இல்லாமல் ஊர் மேயச் சென்று விட்டாளே என்ற ஆதங்கம் ஒரு வாரம் கடந்தும், இன்னுமே வார்த்தைகளால் வெளி வந்து கொண்டு தான் இருக்கிறது அவ்வப்போது..
“என்கிட்டே பேசுனப்போ கூட நீ எதையும் சொல்லல. இது அவருக்கு மறுமணம்னு நீ என்கிட்டே சொல்லாம மறைக்கிற அளவுக்கு நான் வேண்டாதவளா ஆகிட்டேனா?” என்று அவள் வானுக்கும் பூமிக்குமென குதித்ததை நினைக்கும் போது, இப்போதும் யுக்தாவிடமிருந்து நெடிய மூச்சொன்று வெளிப்பட்டது.
வெளிக் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், தங்கையின் அலட்சியமான இந்த நடத்தையில் அவளுக்கும் சொல்லொணா வருத்தம் தான்!
எது எப்படியோ.. தங்கையின் விருப்பங்களை அறிந்து அவற்றை செய்து கொடுப்பது அல்லவா தன் கடமை என தன்னிடமே கேட்டுக் கொண்டு மனதை அமைதிப்படுத்தி வைத்திருந்தாள், அபலை.
வித்யாவின் புலம்பல்கள் மேலும் தொடர்ந்தன.
‘ரோட்டுல போற ஓணானை எடுத்து வேட்டியில விடுவானேன்?’ என்ற எண்ணத்தில், வாய்மூடி அவற்றை ஒரு காதால் வாங்கி மறுகாதால் வெளியேற்றிக் கொண்டிருந்தவள், அடுத்த பத்தாவது நிமிடத்தில் வித்யாவுடன் கடையை விட்டு வெளியேறி இருந்தாள்.
“புத்தியில உறைக்கிற மாதிரி நாலு கேள்வி கேளு யுக்தா, அவகிட்ட.. எனக்கு மனசே ஆற மாட்டேங்குதுடி!” எனப் பேராழியாய் கொந்தளித்தபடி ஸ்கூட்டியை இயக்கினாள் வித்யா.
“ப்ம்ச்! அதை விடேன்டி. முடியல..” என ஒரு கட்டத்துக்கு மேல் அலுத்துப் போனவளாய் சலித்துக் கொண்டவளை முறைத்தவள்,
“அதுசரி! அவ எதை செய்தாலும் நான் பேச கூடாதில்ல?” என்று எரிந்து விழுந்தாள்.
“அப்படிலாம் இல்லைடி..”
“வேற எப்படிங்குற? அவளைப் பத்தி யோசிச்சி தானே, இது அவருக்கு மறுமணமா இருந்தாலும் பரவால்லனு நீ ஒத்துக்கிட்ட.. ஆனா பாரு, அவ உன்னைப் பத்தி யோசிக்கவே இல்லடி. எவ்ளோ செல்ஃபிஷா இருக்கா..”
‘திரும்பவும் முதலில் இருந்தா?’ என தலை சுற்றி நின்றது யுக்தாவுக்கு.
முகத்தை சுருக்கியவள், “நீ ஏன் இப்படி யோசிக்கிற? சத்தியமா எனக்கு அவரைப் புடிச்சிருந்துச்சுடி.. அதுக்காக தான் ஓகே சொன்னேன்.” என்க,
“அப்படியா?” என கேலி நகைப்புடன் வினவியவளின் விழிகள், ‘உன்னை நான் அறிவேன்’ என்ற சேதியைத் தாங்கி நின்றன.
நொந்து போனவளாய், “போதும், நிறுத்துடி. நாளைக்கு புலம்பவும், என்னைத் திட்டி தீர்க்கவும் கொஞ்சத்தை மிச்சம் வை!” என்று கொண்டே ஸ்கூட்டியில் ஏற எத்தனித்த நேரத்தில், பின்னிருந்து கேட்டது செருமல் ஒலியொன்று!
வித்யாவின் தோளில் பதிந்திருந்த கையின் அழுத்தத்தைக் கூட்டியபடி சட்டெனத் திரும்பிய யுக்தாவின் கண்கள், எதிர்பாராத் திகைப்பில் சாசர் போல் சட்டென விரிந்து கொண்டன.
“ந்.. நீங்க?” வார்த்தைகள் திக்கின, பாவைக்கு.
அவளின் பிடி இளகியதும் பார்வையைத் திருப்பிய வித்யாவின் முகத்தில், ‘யாரிவர்?’ என்ற கேள்வி தொக்கி நின்றது.
“ஹாய்!” என இலகுவாய் புன்னகைத்தபடி பொதுப்படையாக கை அசைத்தது வேறு யாருமல்ல, சாட்ஷாத் யதுநந்தனே தான்!
பதிலுக்கு புன்முறுவலிக்க முடியாத அளவுக்கு யுக்தாவின் இதயம் ஓடும் ரயிலாய் தடதடத்தது. தான் வித்யாவிடம் கூறியது இவருக்கும் கேட்டிருக்குமோ என்ற எண்ணமே தொண்டைக்குழியில் நீர் வற்றச் செய்தது.
முதல் சந்திப்பன்று, விடைபெற்றுக் கொள்ளும் தருணத்தில், ‘இந்த திருமணம் யுவனிக்காக மட்டும் தான். நீங்க எதையும் என்கிட்டே எதிர்பார்த்திட கூடாதுங்குறதுக்காக தான் திரும்ப திரும்ப இதை சொல்றேன்..’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியது காதுக்குள் இன்றும் ஒலிப்பது போன்ற பிரமை.
‘கடவுளே! இந்த பைத்தியத்தைக் கன்வின்ஸ் பண்ண பொய் சொல்லப் போய், எனக்கு இந்த நிலைமையா? இவருக்கு கேட்டிருக்குமோ.. கேட்டிருந்தா என்னாகும்..’ என்று சிந்தனை குதிரையை விரட்டி விட்டவளுக்கு வியர்த்துக் கொட்டியது.
நேரங்காலம் தெரியாமல், ‘அப்போ உனக்கு அவரைப் புடிக்கவே இல்லைங்குறியா? வித்யா கிட்ட நெஜமாவே நீ பொய் தானே சொன்னியா சம்யு?’ என குறுக்கு விசாரணை செய்தது, அவள் மனம்.
அதை இருதட்டு தட்டி அடக்கியவள் மெல்ல இமைக் குடைகளைத் தூக்கிப் பார்த்தாள்.
அன்றைக்குப் பிறகு ஒரு வாரம் கழித்து இன்று தான் பார்க்கிறாள், அவனை. அவளின் நீள் நயனங்கள் ஆடவனை மேலிருந்து கீழாக அளவெடுத்துப் பார்த்து திருப்திபட்டுக் கொண்டன.
‘நீங்க திடுதிப்புனு இப்படி என் முன்னாடி வந்து நிற்பிங்கனு நான் என்ன கனவா கண்டேன்?’ எனக் மனதினுள் நினைத்துக் கொண்டவளுக்குள் பதற்றத்தையும், தயக்கத்தையும் மீறி ஒரு புதுவித பரவசம்!
“யுக்தா!” என நான்காவது முறையாக உரத்து அழைத்து, அவளது தோளில் தட்டி, நிகழுக்கு அழைத்து வந்தாள் வித்யா.
அவள் சிலையென நின்றிருக்கும் போதே, ஸ்கூட்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு இருவருக்கருகே வந்து நின்று விட்டிருந்தாள், வந்திருப்பது யாராக இருக்குமென்ற ஊகத்தோடு!
“ஆங்!” என தெளிந்து விழிகளை உருட்டியவள், “நீங்க வருவீங்கனு நான் எதிர்பார்க்கல. சொல்லி இருக்கலாமே!” எனத் தயங்கித் தயங்கி பேசினாள், கைகளை கால்சட்டைப் பாக்கெட்டினுள் இட்டு கால்களை அகட்டி இலகுவாக நின்றிருந்தவனிடம்.
ஆடவனின் தோற்றம் அவளுக்குள் ஒருவித மயக்கத்தை உண்டு பண்ண, நெற்றியில் துளிர்த்த வியர்வையை அடிக்கடி புறங்கையால் துடைத்துக் கொள்ள மறக்கவில்லை.
“சொல்லி இருக்கலாம் தான். உன் ஃபோன் எங்க?”
தோளில் தொங்கிய பையைத் துழாவி கைப்பேசியை எடுத்துப் பார்த்தவள், அது சார்ஜின்றி உயிரை விட்டிருந்தது கண்டு நுனி நாவைக் கடித்து விடுவித்தாள்.
“ஆஃப் ஆகியிருக்கு..”
“ஈவினிங்ல இருந்தே ட்ரை பண்ணேன். கால் போகல. அதுனால தான் தேடி வந்துட்டேன்..” என்றவனின் பேச்சில் கூட இனிப்பு சொட்டுவதாய் உணர்ந்தவள் தன் நினைப்பை எண்ணி மானசீகமாய் தலையில் தட்டிக் கொண்டு, இருவரையும் மாறிமாறிப் பார்த்திருந்த வித்யாவிடம்,
“இவர் தான் வித்யா.. நான் சொன்னேனே!” என்றாள், சங்கடத்தில் நெளிந்தபடி..
“நீ என்ன சொன்ன?” என சீண்டும் விதமாய் பேசினாள் வித்யா, இருவரின் ஜோடிப் பொருத்தத்தை கண்ணார ரசித்தவாறே!
மணமாகி மனைவியை இழந்தவர் என்றதும் மண்டைக்குள் ஓடிய தொப்பையுடன் கூடிய முன்சொட்டைத் தலை ஆசாமி பின்னங்கால் பிடரியில் படும்படியாக ஓடிவிட, நெடுநெடுவென கம்பீரமே உருவாய் நின்றிருந்தவனை பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போயிற்று அவளுக்கு.
அவளை கடைக்கண்ணால் முறைத்தவள், “இவ என் பெஸ்டு பிரண்ட். வித்யா!” என யதுநந்தனுக்கு அறிமுகம் செய்து வைக்க,
“வணக்கம், வந்தனம்!” என இடை வரை வளைந்து நாடகபாணியில் மொழிந்தவள், “தென்றல் ஏன் இந்த பக்கமா வீசுதுனு நான் தெரிஞ்சுக்கலாமா அண்ணா?” என்று கேலி சொட்டும் தொனியில் வினவ,
“வித்யா!” என சிறுகுரலில் அதட்டிய யுக்தா, அவளை கள்ளத்தனமாய் சுரண்டினாள்.
மெலிதாகச் சிரித்தபடி, “தென்றலுக்கு வீடு போற வழி மறந்து போய்டுச்சோ என்னவோ..” என்றவன் மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்துவிட்டு, “நேரம் போகுது. இன்னும் இருட்ட முன்னாடி நீங்க வீடு போய் சேருங்க..” என்க,
“நானும் நினைச்சேன் தான். சரி அப்போ, நாங்க போயிட்டு வரோம் அண்ணா..” என்றவள் ஸ்கூட்டியில் ஏறப் போக,
“இல்ல, நான் உங்க பிரண்ட்டை வீட்டுல ட்ரோப் பண்ணிடறேன். நீங்க தனியா போய்ப்பிங்க தானே வீட்டுக்கு?” எனப் பின்னிருந்து கேட்டான் யதுநந்தன்.
கருமணிகள் வெளியில் தெறித்து விடுமோ என அஞ்சும்படி விரிந்தன, சம்யுக்தாவின் விழிகள்!
“இல்ல, நான் போகனும். ஏற்கனவே நேரமாகிடுச்சு. அம்மா தேடப் போறாங்க..” எனக் கூற வாயெடுப்பதற்குள்,
“அதுக்கென்ன.. நான் போய்ப்பேன். யுக்தா, உன் வீட்டுல நானே சொல்லிடறேன் என்ன..” என்று கூறி, நந்தன் காணாத நேரத்தில் பட்டென்று கண் சிமிட்டி விட்டு சிட்டென ஸ்கூட்டியில் பறந்திருந்தாள் வித்யா.
“பாப்பா உன்னைத் தேடி அழுதுட்டே இருந்தா. கீர்த்தியால கூட அவ அழுகையை நிறுத்த முடியல. அதுனால தான் கால் செய்தேன். உன் ஃபோன் ஆஃப்ல இருந்துனால, இங்க தான் இருப்பேனு கெஸ் பண்ணி இங்க வந்துட்டேன்..” என அவள் கேட்காமலே விளக்கம் அளித்தவன் திரும்பி நடக்க,
“பேபி எங்க?” என்று கனிந்த குரலில் வினவியபடி பின்னோடு ஓடினாள் யுக்தா.
“தூங்கிட்டா! வந்தது, அப்படியே உன்னை மீட் பண்ணிட்டே போகலாம்னு நினைச்சேன்..”
“பாப்..”
“அவ கார்ல..” என்றவன் ஏதோ நினைவு வந்தவனாய் நின்று திரும்ப, அவனின் நடைக்கேட்ப பின்னாலே ஓடி வந்தவள் சட்டென்று அவனில் மோதி தடுமாறி பின்னால் சாய்ந்தாள்.
“ஹேய், விழுந்துட போற!” என்று சத்தம் வைத்தவனின் வலக்கரம் அவளது கையை சடுதியில் அழுத்தமாகப் பற்றி, அவள் கீழே விழாதபடி நேராக நிற்க வைத்திருந்தது.
“த்.. தேங்க்ஸ்..” என்ற யுக்தாவுக்கு, தன் கவனயீனத்தை நினைத்து கோபம் தான் வந்தது. மாறாக, கன்னங்கள் செந்தூர நிறமாய் மாறிப் போனதற்கான காரணம் தான் என்னவோ..
அவளின் முகச் சிவப்பை, சுற்றிலும் இருள் படர்ந்திருந்ததால் அவன் அவதானிக்கவில்லையா.. இல்லையேல், கண்டும் காணாத பாவனையில் இருந்து விட்டானா என்பது அவனுக்கே வெளிச்சம்!
தோளை உலுக்கியபடி, “இட்ஸ் ஓகே!” என்று கொண்டே மெல்ல நகர்ந்து நின்றவன், “தினமும் எப்படி வீட்டுக்கு போவ? ஃப்ரெண்ட் கூடவா?” என்று வினவ,
மறுப்பாகத் தலை அசைத்தவள்,
“எப்போதாவது ஃப்ரெண்ட் கூட போவேன். இல்லனா பஸ் தான். வீட்டு சந்தியில இறங்கிட்டா, ரெண்டு நிமிஷ நடை..” என்றாள் விளக்கமாக.
சிறு தலை அசைப்பு அவனிடமிருந்து.
“ஆமாம், நான் இந்த நேரத்துக்கு ஸ்டோர்ல தான் இருப்பேன்னு எப்படி கெஸ் பண்ணீங்க சார்?”
அவளின் ‘சார்’ என்ற விளிப்பு தந்த அசட்டுச் சிரிப்புடன், “உன் போட்டோ பின்னாடி டீடெயில்ஸ் கொடுத்து இருந்தியே! அதுல வோர்கிங் டைம் மார்னிங் எட்டுலேர்ந்து, ராத்திரி ஏழுமணினு இருந்துச்சு..” என்று கொண்டே காரின் பின் சீட்டைத் திறந்து விட்டான்.
உள்ளே, ஏசியின் குளிரில் தந்தையின் மேல்கோர்ட் தந்த கதகதப்புடன் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தாள் யுவனி.
அழகிய ஓவியமாய் ரோஸ் நிற உதடுகளை குவித்தபடி சிறியவள் உறங்கிக் கொண்டிருந்த தோற்றம் அத்தனை ரசனையைக் கொடுத்தது சம்யுக்தாவுக்கு.
சிரிப்புடனே அவளின் கன்னம் கிள்ளி முத்தமிட்டவள், யதுநந்தனிடம், “வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று கேட்க, அவளின் ‘எல்லாரும்’ என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை ஊகித்து அறிந்தவன்,
“ம்ம் இருக்காங்க. கீர்த்தனா உன்னைத் தேடுனதா சொல்ல சொன்னா..” என்று கூறிக் கொண்டே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து, அவளுக்கு கண்களால் பணித்தான்.
யுவனி பின்னிருக்கையில் சுகமாய் உறங்கிப் போயிருப்பதைப் பார்த்தவள் நந்தனைப் புரியா பார்வை பார்க்க,
“அங்க வேணாம். அவ தூங்கப் போனா பின் சீட்ஸ் ரெண்டையும் பின்னால வளைச்சி, எல்லாம் கம்ஃபர்டபிளா ரெடி செய்து கொடுத்தாகனும். இல்ல, என்னை வைச்சு செய்துடுவா! நீ முன் சீட்டுல உட்காரு..” எனக் கூறி அவளுக்காக கதவை திறந்து விட்டான்.
தயக்கமும், ஒருவித கூச்ச உணர்வும் அவளைப் பிடித்து மனசாட்சியின்றி ஆட்டிப் படைக்க, காரில் ஏறி அமர்ந்து கதவோடு ஒன்றினாள் சம்யுக்தா.
ஆனால் எது எப்படியோ.. தான் வித்யாவிடம் கூறியது நந்தனின் செவிகளில் விழவில்லை என்பதை அவனின் அமைதியை வைத்தே உறுதிப்படுத்திக் கொண்டவளுக்கு நிம்மதியோ நிம்மதி!
கார் மெல்ல வேகமெடுத்தது.
அடிக்கடி பின்னால் திரும்பிப் பார்த்து யுவனியின் உறக்கம் கலையா நிலையைப் பார்த்து ஆசுவாசப்பட்டுக் கொண்டவளைக் கடைக் கண்ணால் பார்த்திருந்தவன், “அவ சேஃப் தான்..” என்க,
“ஹ்.. ஹான்.. நான் சும்மா பார்த்தேன். தூக்கம் கலைஞ்சி எழுந்துடுவாளோனு..” என்று சமாளித்தவள் அதன் பிறகும் கூட அவன் காணாத நேரத்தில் சிறியவளைப் பார்வையால் வருடிக் கொள்ளாமல் இல்லை.
அவளின் அக்கறையை உள்வாங்கிக் கொண்டே வாகனம் செலுத்திக் கொண்டிருந்தவனுக்கு மனதில் பெருத்த நிம்மதி! தன் கடமையை சரிவர செய்கிறேன் என்ற நினைப்பினால் எழுந்த இதம் மனம் முழுதும் இனிய சுகந்தத்தைப் பரப்பிச் சென்றது.
சற்று நேரத்தில் வீடு வந்துவிட, காரிலிருந்து இறங்கிக் கொண்டவள் உள்ளே அழைக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கும் போதே,
“பாப்பா தூங்குறா. நான் இன்னொரு நாள் கண்டிப்பா வர்றேன் சம்யு..” என்றுவிட்டு காரைக் கிளப்பிக் கொண்டு பறந்து விட, அவனின் சுருக்க அழைப்பு தந்த மயக்கத்தில் பனிக்கட்டியாய் உறைந்தாள் சம்யுக்தா.
இன்று தலைக்கு மேலே பனிமழைப் பொழியச் செய்தவனே, பின்நாளில் தன் அகத்தின் தன்மான ஊற்றைத் திறந்து விடப் போகிறான் என்பதை அவள் அறியாமல் போனது தான் விதியோ!?