நாணலே நாணமேனடி – 10

5
(2)

அன்று ஞாயிற்றுக் கிழமை! மற்றைய தினங்களைப் போலன்றி பொழுது சற்று உட்சாகமாகப் புலர்ந்தது, சம்யுக்தாவுக்கு.

 

எழுந்ததும் அறையை சுத்தப்படுத்தி, கால்களை அகட்டி சுகமாக உறங்கிக் கொண்டிருந்த சத்யாவின் நெற்றியில் முத்தமொன்றைப் பதித்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தவளின் இதழ்களில் முறுவலொன்று நெளிந்திருந்தது.

சத்யாவுக்குத் தான் இந்த வயதிலே எவ்வளவு பக்குவம்.. குடும்ப கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து, அதற்கேற்றாற்போல் நடந்து கொள்ளும் அவளுடைய வயதுக்கு மீறிய முதிர்ச்சியும், அக்காளின் தலை மீதிருக்கும் பெரும் சுமையை இறக்கி வைக்க தன்னால் இயன்றளவு முயலும் அன்பாதரவும் சில நேரங்களில் யுக்தாவின் கண்களை ஈரப்படுத்தும்.

வாரத்தின் இறுதி நாளில் மாத்திரமே அவளும் விடிந்த பிறகு நேரம் செல்லும் வரை உறங்குவாள்.

மற்ற தினங்களில் தமக்கைக்கு உதவியாகவென்று அதிகாலையிலே கண் மலர்ந்து, தனக்குத் தெரிந்தவற்றைச் செய்து கொடுத்துவிட்டு புத்தகத்தோடு ஐக்கியமாகி விடுபவளுக்கு, தான் கற்று, இத்தனை நாட்கள் அக்காளின் தலையை கனக்கச் செய்து கொண்டிருக்கும் பாரத்தில் பாதியை தானும் சுமந்து, அவளுக்கு நிம்மதியை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமேயன்றி வேறில்லை.

தன்னை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது தாயாகவே இருந்தாலும், தனக்கு வேண்டியவற்றைப் பார்த்துப் பார்த்து செய்து தந்து, அன்னையாய், தந்தையாய் நின்று ஆராட்டி சீராட்டி வளர்த்தெடுத்தவள் அக்கா தான் என்ற நெகிழ்ச்சி என்றுமே அவளுக்குண்டு!

அதை யுக்தாவும் அறிந்து தான் வைத்திருந்தாள்.

சத்யாவை சொல்லியும் குற்றமில்லை. வளர்ந்து, மண்ணில் மூன்றிலை விட முன்பே சாவித்திரி கட்டிலோடு ஆகிவிட, அவர் குடும்பத்துக்காக செய்தவற்றை அவள் அறியாமல் போனதினால், யுக்தாவின் மீது அன்பும், மரியாதையும் மேலோங்கி நிற்கிறது அவள் மனதில்.

இதில் தவறென்று ஏதுமுண்டோ?!

தங்கையின் நினைப்பில் மொட்டவிழ்ந்த புன்னகை மாறாமலே, குளித்து நீர்சொட்டும் கூந்தலோடு யுக்தா அறையை விட்டு வெளியே வரும் போது, கையில் ஆவி பறக்கும் தேநீர் கப்புடன் கூடத்தில் அமர்ந்திருந்தாள் சாந்தனா.

இருக்கும் இதமான மனநிலையை சற்று நேரம் அனுபவிக்க விரும்பியவளாய், தங்கையின் முகத்தருகே கை நீட்டிய யுக்தா,

“போய் நீ வேற டீ போட்டுக்கோ சந்தா!” என்க, என்ன நினைத்தாளோ, தேநீர் கப்பையும் நீட்டப்பட்ட அக்காளின் கரத்தையும் ஒன்றுக்கு பல தடவைகள் மாறி மாறிப் பார்த்தவள்,

“ம்ம்..” என்ற முனகலோடு அதைக் கொடுத்துவிட்டு எழுந்து கொண்டாள்.

யுக்தா திகைப்புடன் தேநீர் கப்பை வாங்கிக் கொண்டு இருக்கையில் வசதியாக சாய்ந்தாள்.

தேநீரின் சுவை, குறை சொல்ல அவசியமில்லை என்பது போல் சுமாராகத் தான் இருந்தது.

தன்னால், வாரத்தின் இறுதி தினமன்று மாத்திரமே நிம்மதியாக அமர்ந்து தேநீரை ருசித்துப் பருகவாவது முடிகிறது என்ற நினைப்பு எழ, “ம்ப்ச்!” என சலித்துக் கொண்டாள்.

மற்ற தினங்களை எழுந்தது தொட்டு, கைப்பையுடன் துணிக்கடை நோக்கி ஓடும் வரை இயந்திரத் தனமாய் அல்லவா சுழற்ற வேண்டும்? இன்றேல், காருண்யராஜின் திட்டல் வழமை போலன்றி இன்னும் அரைமணி நேரத்துக்கு நீண்டு விடுமே!

பருகி முடித்து வெற்றுக் கப்பை மேஜை மீது வைக்கும் போது மீண்டும் கூடத்துக்கு வந்த சாந்தனா, “நீ எப்போ அம்மா கிட்ட பேச போற யுக்தா?” என்றாள், தவிப்பு மிகுந்த குரலில்.

“எது பத்தி?”

சற்றும் அலட்டிக் கொள்ளாத யுக்தாவின் கேள்வி சாந்தனாவுக்கு எரிச்சலை எக்கச்சக்கமாகக் கிளப்பி விட்டிருக்க வேண்டும்,

“நான் எதைப் பத்தி பேசிட்டு இருக்கேன்னு உனக்கு புரியுது யுக்தா. சும்மா கடுப்பேத்தாத!” எனக் கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.

இதழ் குவித்துப் பெருமூச்சு விட்டவள் சில நிமிட சிந்தனைக்குப் பிறகு, “ஒரு டீல் சந்தா!” என்று நிறுத்த,

“வாட்?” என்று சலித்துக் கொண்டே இருக்கையை இழுத்து அமரப் போனவள், அறைக்குள் யுக்தாவின் டப்பா அலைபேசி தன் இருப்பை உணர்த்தி அலறத் தொடங்கியதும்,

“இந்த நேரத்துல யாரு?” என்று கண்களை சுருக்கினாள்.

“ஹே, ஏதும் முக்கியமான கால்’ஆ இருக்க போகுது. அப்படியே ரெண்டெட்டு எடுத்து வைச்சு என் ஃபோனை எடுத்துட்டு வாயேன் சந்தா. சத்யா தூங்குறா!”

மறுப்புக் கூறாமல், முறைப்புடனே நகர்ந்து சென்று அலைபேசியை எடுத்து வந்தவள், “யாரந்த பேபி டாடி?” என்று திரையில் மின்னிய பெயரைப் பார்த்து கேட்க,

“ஃபோனை இங்க கொடு!” என சடுதியில் எழுந்து நின்று அலைபேசியைப் பறித்தாள், சம்யுக்தா.

பாவையின் கன்னங்கள் வெட்டி வைத்த ஆப்பிள் போல் சிவப்பேறிப் போயிருக்க, தன்னையே குறுகுறுவென்று பார்த்திருந்த தங்கையைக் கண்டு கொள்ளாமல் படபடக்கும் இமைகளோடு அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ!”

“ஹ.. ஹலோ, சொல்லுங்க!” என்றவள் திடீரென சார்ஜ் தீர்ந்து உயிரை விட்ட அலைபேசியை கொலைவெறியுடன் முறைத்துப் பார்க்க,

“மாமாவா யுக்தா?” என்று அரிதான முறுவலோடு வினவினாள் சாந்தனா.

“ம்ம், பாரேன். அதுக்குள்ள ஃபோன் ஆஃப் ஆகிடுச்சு சந்தா..” என சலித்துக் கொண்டவள்,

“அவரை உனக்கு புடிச்சிருக்கா யுக்தா?” என்று இருக்கையில் அமர்ந்தபடி வினவியவளை ஏறிட்டுப் பார்த்தாள்.

இன்னதெனத் தெரியாத ஓரிதம் மனதை மயிலிறகாய் வருடிச் செல்ல, “ம்ம்..” என்று முனகியவளின் கரங்கள், அவள் அணிந்திருந்த பழைய சுடிதாரை இறுக்கமாகப் பற்றி மெல்ல விடுவித்தன.

அவளை உற்றுப் பார்த்தபடி, “அப்பறம் ஏன் பேபி டாடினு அவர் நம்பரை சேவ் பண்ணனும்?” என்று கேட்டுவிட, சுடர் விட்டெறிந்த தீபத்தில் நீர் துளி பட்டாற்போல் முறுவல் கருகி, சட்டென்று வாடிற்று பூவையின் வதனம்!

‘இந்த மறுமணத்துக்கான இன்டென்ஷன் யுவனியை தவிர வேற எதுவுமில்லை. நான் உங்களுக்கு எல்லா விஷயத்துலயும் சப்போர்ட்டா இருப்பேன். நீங்க என் பொண்ணுக்கு ஒரு நல்ல தாயா இருக்கணும். ஐ டோன்ட் க்னோ வொய், உங்களைப் பார்க்குறப்போ எனக்கு சாட்டிஸா இருக்கு. நம்பிக்கை வருது..’ என்ற யதுநந்தனின் கம்பீரக் குரல் காதினுள் ஓங்கி ஒலித்தது.

ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டவள் தன் உள்மன சுணக்கத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாமல், “ஏன் அந்த பேருக்கு என்ன.. நல்லா தானே இருக்கு?” என்றாள், முகத்தில் ஒட்ட வைத்த புன்னகையுடன்.

“ஏதோ போ! உனக்கு புடிச்சிருந்தா சரிதான்.” என்றவள் தொடர்ந்து,

“நான் அன்னைக்கு நினைச்சு பண்ணல யுக்தா. சீக்கிரம் வந்திடலாங்குற நம்பிக்கைல தான் அபிதாவுக்கு உதவியா ஹாஸ்பிடல் போயிருந்தேன். அவளுக்கும் ஹெல்ப்க்குனு இங்க யாரையுமே தெரியாதில்லையா..

ஆனா போனது தான், அம்மா பக்கத்துல இரு. நான் வீட்டுக்கு போய் பிரெஷ்ஷாகி, லஞ்ச் எடுத்துட்டு வர்றேன்னுட்டு போனவ திரும்ப வரும் போது லேட்டாகிடுச்சு. நான் பண்ண கால், மெசேஜஸ் எதுக்குமே ரெஸ்பான்ஸ் பண்ணல.

எனக்கு ரொம்ப கோபம் வந்திச்சு. ஆனா நான் கோபமா இருக்கேன்ங்குறதுக்காக அவ அம்மாவை அப்படியே ஹாஸ்பிடலில் விட்டுட்டு வர முடியாதேனு யோசிச்சி தான் அமைதியா நின்னேன். அதுனால தான் வீட்டுக்கு வர அவ்ளோ லேட்டு!

வந்தும் கூட, உன்னை எப்படி ஃபேஸ் பண்ணுறதுனு சத்தியமா புரியல யுக்தா. அன்னைக்கு நான் அவரை பார்க்கல. போட்டோ ஏதும் உன்கிட்ட இருக்கா யுக்தா?” என்று கேட்டாள். இறுதியில் அவள் குரல் சற்றே கரகரத்து ஒலித்தது.

அவளது குரலில் இழையோடிய உண்மையான வருத்தம், யுக்தாவின் மனதிலிருந்த வேதனையின் வடுக்களை துடைப்பம் வைத்து மெல்லத் துடைத்து எறிந்தது.

அவள் தன் ‘இல்லாமை’ நினைத்து உண்மையில் வருந்துகிறாள். அவள் கூறிய காரணம் வேறு யுக்தாவுக்கு பெருத்த ஆறுதலைக் கொடுக்க, ஓரிரு வாரங்களாக மனதை அழுத்திய பாரம் சற்றே குறைந்தது போல் மனம் இளகினாள்.

வந்ததே தாமதமாக! போதாதென்று அவள் வந்ததும் அறைக்குள் புகுந்து கொண்டது வேறு யுக்தாவின் மனதை அரித்துக் கொண்டிருந்தது. அதற்கான காரணம் ‘குற்றவுணர்ச்சி!’ என்பதை இப்போது தான் புரிந்து கொண்டாள்.

இளகிய முகபாவனையை மீண்டும் கடினப்பட்டு இறுக்கத்துக்கு மாற்றிக் கொண்டவள், “ம்க்கும்! ரொம்ப அவசரமா கேட்டுட்டே! போவியா?” என்று நொடித்துக் கொள்ள,

“உன்கிட்ட எப்படி பேசுறதுனு புரியாம அமைதியா இருந்தேன் யுக்தா..” என்ற சாந்தனாவின் முகம் கசங்கியது.

யுக்தாவின் உள்மன வெட்டவெளி கற்கள் அகற்றப்பட்ட, புட்கள் வெட்டப்பட்ட அழகிய மேடையாகி, பின் முன்பே தூவப்பட்டிருந்த நேச விதைகளின் பயனால் நந்தவனமாய் உருமாறியது.

அகம், தங்கை தன் விடயத்தில் வேண்டுமென்றே அலட்சியமாக இருக்கவில்லை. மாறாக, சூழ்நிலை அவளை தன் கைவசம் சிறை வைத்துள்ளது என்று புரிந்து கொண்ட பூரிப்பில் திளைத்திருந்தது.

எவ்வளவு தான் திமிரும், அகங்காரமும் தலைக்கு மேலே காவடியாய் ஆட்டங் காட்டினாலும், முகம் சுழிக்காமல் சகலத்தையும் செய்து கொடுக்கும் உறவின் மீது கொஞ்சமும் கூடவா அன்பு சுரக்காமல் இருக்கும், உடன் பிறந்தவளுக்கு?

அந்த அன்பு தான், தன் தரப்பு நியாயத்தை அக்காளிடம் எடுத்தியம்ப சாந்தனாவை உந்தியது என்றால், அதில் தவறில்லை!

மனப்பாரம் நீங்கப் பெற்றவளாய் முகம் விகசிக்க நின்றிருந்த யுக்தா,

“அவர் சொட்டைத் தலையனா? வயிறு தொப்பையா.. பார்க்க எப்படி இருப்பாரு? ப்ளீஸ் போட்டோ காட்டேன் யுக்தா..” என்ற சாந்தனாவின் கெஞ்சல் குரலில் திடுக்கிட்டு நிமிர, இதழ்களோ,

“எதே!” என அதிர்ச்சியுடன் முணுமுணுத்தன.

“ஏன்டி இப்படி?” என்றவள், தனக்கு துணையாகப் போகிறவனின் புகைப்படம் தன்னிடம் இல்லையே என முதல் முறையாக தீராக் கவலை கொண்டாள்.

“பேபி வேறு இருக்குனு சத்யா சொல்லிட்டு இருந்தா!”

தங்கையை முறைத்தவள், “அவருக்கு இன்னும் வயசு முப்பது கூட ஆகலடி. பார்க்க எப்படி இருப்பாரு தெரியுமா? ஒரு குழந்தைக்கு அப்பானு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.” என்க,

“ஆமா, அவர் எப்படி இருப்பாரு?” என்று எதிர்கேள்வி எழுப்பினாள் சாந்தனா.

அகன்ற நெற்றியில் அலையலையாய் அசைந்தாடும் சுருண்ட கேசமும், காதோரத்தில் எட்டிப் பார்த்த ஓரிரு வெள்ளி முடிகளும், மின்னலை ஒத்த பார்வை வீச்சை செலுத்தி அகம் கொள்ளச் செய்யும் கூரிய கண்களும், அடிக்கடி முடிச்சிட்டுக் கொள்ளும் கருமையான அடர் புருவங்களுமென மாமையை விட சற்றே வெளிர் நிறத்தில், ஆறடியை விட ஓரிரு அங்குலங்கள் கூடிய, நெடுநெடுவென்ற ஆஜானுபாகுவான தோற்றத்தைக் கொண்ட வசீகரிக்கும் மாயக் கண்ணன், வஞ்சியின் மனக்கண் முன் வந்து கண் சிமிட்டிச் சிரித்து மறைந்தான்.

இனிய அவஸ்தையாய் போனது, சம்யுக்தாவுக்கு.

மேற்கொண்டு பேச முடியாதவாறு வெட்கம் அவளைக் ஆட்கொள்ள, “அதெல்லாம் என்னால சொல்ல முடியாதுடி. நீயே பார்த்துக்கோ!” என்றவள் சடாரென்று திரும்பி அறைக்கு நடை போட்டாள்.

“பார்க்க தானே போறேன்..” என்று உதடு சுழித்தவள் அப்போது தான் நினைவு வரப் பெற்றவளாக,

“ஆமா, ஏதோ டீல் பத்தி சொன்னியே! அது என்ன?” எனக் கேட்டு, தன் முழுநேர ஓய்வில் ஒரு டிப்பர் மணல் அள்ளிப் போட்டுக் கொள்ள அத்திவாரமிட்டாள்.

“அடடே! சொல்ல மறந்துட்டேன் பாரு..” என்று கொண்டே ஓடி வந்து அவளருகே நின்ற யுக்தா,

“உனக்கு ரெண்டு வாரம் டைம். அதுக்குள்ள நீ ஏதாவது கம்பெனி இன்டெர்வியூல செலக்ட்டாகி, வொர்க் போக ஆரம்பிச்சிடணும். அப்படி இல்ல, ஸ்கூல்ல பேசி டீச்சிங்க்கு தான் போவேன்னு சொன்னாலும் பரவால்ல. எப்படியோ, இனி நீ வீட்டுல இருக்க கற்பனை பண்ணக்கூடாது!” என்று அலுங்காமல் தன் திட்டத்தின் முதல் அடியை எடுத்து வைத்தாள்.

“வாட்!” என பெரிதாக அதிர்ந்த சாந்தனாவின் முகத்தில் ஈயாடவில்லை.

“வாத்து, கொக்குலாம் இல்ல. அவினாஷ் வீட்டுல, பெண் வீட்டாளுங்க கிட்ட என்ன என்னலாம் எதிர்பார்க்குறாங்கனு உனக்கே தெரியும்ல? யோசிச்சி நடந்துக்கோ சந்தா!

அப்பறம் நானும், உன் இஷ்டம்னு கண்டுக்காம ஒதுங்கி நின்னுட்டேன்னா உனக்கு கஷ்டமாகிடும். நீ உருப்படியா எதையாவது பண்ணினாலாவது, எனக்கு அம்மாவைக் கன்வின்ஸ் ஈஸியா இருக்கும். புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்..”

சாந்தனா கீழுதட்டைக் கடித்தாள். அழகு நிலையத்தின் உபயத்தால் நேர்த்தியாக்கப்பட்டிருந்த அவளின் புருவங்கள் ஒன்றுக்கொன்று முரணாய் நெறிந்தன.

அவளது முகத்தில் வந்து சென்ற பாவனைகளை அவதானித்துக் கொண்டிருந்த யுக்தாவுக்கு, மனதினுள் நம்பிக்கைத் தீபம் மெல்லச் சுடர் விட்டது.

“ஆனா நீ சம்பாதிக்கிற பணம் எனக்கு வேணாம் சந்தா. இத்தனை நாள் எப்படியோ, அதைப் போல நானே இனியும் பார்த்துக்குவேன். பொறுப்பு உன்மேல விழுந்திடுமோங்குற பயம் உனக்கு வேணாம்.

நீ எடுக்குற சொச்சத்துல எதையாவது சேமிச்சு வைச்சிட்டு, மீதியை உன் கைச் செலவுக்கு வைச்சிக்கலாம் இல்ல? அதுனால சொல்றேன்!” என்று தெளிவுறப் பேசியவள் வேலைகளைப் பார்க்கவென அங்கிருந்து அகன்று விட, இருக்கையில் தொப்பென்று விழுந்தாள் சாந்தனா.

பின்மதிய நேரத்தில், கஞ்சிக் கோப்பையுடன் அன்னையின் அறைக்குள் நுழைந்தாள் சம்யுக்தா.

அரவம் கேட்டு, ஏதேதோ யோசனைகளுடன் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த சாவித்திரியின் பார்வை, ஒரு நொடி மகள் மீது பதிந்து, மறுகணமே மீண்டது.

அன்னையின் பாராமுகத்தைப் பார்க்கையில் மனம் வலித்தது யுக்தாவுக்கு.

இரண்டு வாரங்களாகவே இப்படித்தான் என்றாலும், நடுங்கும் கரத்தால் கன்னம் வருடி வலிய முறுவலிக்கும் அன்னையின் அன்பு சொட்டும் பார்வைக்காக நெஞ்சம் விம்மியது.

பெருமூச்சுடன் கட்டிலில் வந்து அமர்ந்தவள் கஞ்சை சூடாற்றி அவருக்கு ஊட்ட, மறுக்காமல் வாங்கிக் கொண்டவரின் கண்களில் வலியின் சாயல்.

‘புடிச்சிருக்கும்மா. ப்ளீஸ் மறுக்காதீங்களேன்!’ என்று மகள் இறைஞ்சிய பிறகும் மறுக்க முடியாத ஒரே காரணத்தினால் தான் அன்று மௌனம் சாதித்தாரே தவிர, அவருக்கு இந்த சம்பந்தத்தில் துளியும் விருப்பமில்லை.

‘போயும்! போயும்! தங்கமான என் பொண்ணு ரெண்டாந்தாரமா போறதா? ரெண்டு வயசுல குழந்தை வேற இருக்கே..’ என்ற ஆதங்கம், அவரை யுக்தாவிடம் பேச விடாமல் செய்து கொண்டிருக்கிறது இத்தனை நாட்களாக!

அவரின் ஆதங்கமும், மனதை வறுத்தும் கவலையும் புரிந்தாலும், போக போகத் தன்னாலே சரியாகி விடும் என்று நம்பிக்கையில் அமைதியாக இருக்கிறாள் யுக்தா.

அதற்கென்று அன்னையின் மௌனம் அவளை வதைக்கவில்லை, வேதனைப்படுத்தவில்லை என்றெல்லாம் அர்த்தம் ஆகிவிடாது.

உணவூட்டி முடித்ததும், சிந்திய பருக்கைகளைத் துடைத்தெடுத்தவள்  நீர் பருக்கி விட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட, அவளின் முதுகை வெறித்தது சாவித்திரியின் பார்வை!

சென்றவள் அடுத்த ஐந்தே நிமிடங்களில் மீண்டும் வந்து, அறையைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து விட்டு நிமிரும் போது தான், அவளின் கலங்கிச் சிவப்பேறிப் போயிருந்த கண்களை சாவித்திரி கண்டு கொண்டாள்.

மனம் மலையாய் கனத்தது, அவருக்கு.

‘அவ தான் பிடிச்சிருக்குனு சொல்லிட்டால்ல? அவ ஒன்னும் நல்லது, கெட்டது தெரியாத சின்ன பொண்ணு இல்ல. குடும்ப பொறுப்பை மொத்தமா சுமக்குற அளவுக்கு பக்குவம் இருக்குறவளுக்கு, தனக்கு வரப் போறவன் பத்தி ஐடியாஸ் எதுவுமேவா இல்லாம போய்ட போகுது?

எது எப்படி இருந்தாலும், அவளுக்குப் புடிச்சிருக்கு! இன்னும் நீயும் வருந்தி, எதுக்கு அவளையும் வருத்திக்கிற சாவித்திரி?’ என கேள்விக் கணை தொடுத்த மனதை அமைதிப்படுத்தியவர் அவளை அழைக்க நினைத்த நேரத்தில்,

“அம்மா..” என்ற அழைப்புடன் அருகே வந்து அமர்ந்திருந்தாள் சம்யுக்தா.

‘என் பொண்ணு எப்போவும் சந்தோஷமா இருக்கணும்..’ என வழமை போல் வேண்டிக் கொண்டவரின் கரம் நீண்டு, அனிச்சையாய் மகளின் கன்னத்தை வருடிக் கொடுத்தது.

பெதும்பையின் விழிகளில் சட்டென நீர் நிறைந்திற்று!

“ஐம் சாரிம்மா! சத்தியமா உங்களுக்குப் பிடிக்காததை செய்ய நினைக்கல. ஆனா உண்மையிலே எனக்கு அவரை ரொம்பப் புடிச்சிருக்கும்மா.

கனிகா அக்கா புருஷன் எங்ககிட்ட பாதி உண்மையை மறைச்சது நினைச்சு முதல்ல எனக்கு வருத்தமா தான் இருந்துச்சு. ஆனா அவரை மீட் பண்ணி பேசுனதுக்கு அப்பறம், அவர் மறைச்சது கூட பரவால்லனு தோணுச்சும்மா. சொல்லிருந்தா நான் அவரை சந்திக்க போயிருப்பேனோ இல்லையோ.. யார் கண்டது?” என்று கேட்டவள்,

“இது மறுமணம்னு தெரிஞ்சதும் உடனே மறுக்க நினைச்சேன். ஐ தோட் ஹீ ஹேட் டிவோர்ஸ்ட் ஹிஸ் ஃபர்ஸ்ட் வொய்ஃப்! ஆனா இல்ல. அவர் டிவோர்ஸீ இல்லம்மா. முதல் மனைவி பிரசவ நேரத்துல இறந்து போயிருக்கா..

ரெண்டு வருஷம் குழந்தைக்காக மட்டுமே வாழ்ந்திருக்காரு. அவரோட அன்பு எந்தளவு உண்மைனு புரிஞ்சுதும்மா. எனக்கு புடிச்சி இருந்துச்சு.

அவருக்கு ரெண்டாந்தாரமா போறதுல எனக்கு எந்த கவலையும் இல்ல. ப்ளீஸ் நீங்களும் சும்மா டென்ஷனாகி உடம்பைக் கெடுத்துக்காதிங்க. ப்ளீஸ்ம்மா..” என்றாள் உட்சென்ற குரலில்.

மறந்தும், ‘மறுமணம் யுவனிக்காக’ என்று யதுநந்தன் சொல்லியதை கக்கி விடவில்லை. அதன்பிறகு, அன்னையை சம்மதிக்க வைப்பது வான்கோட்டை தானென அறியாதவளா என்ன, சம்யுக்தா?

“அதுவுமில்லாம சாந்தனாவுக்கும் கலியாண வயசாச்சும்மா. நான் சீதனம், வரதட்சணைனு காரணம் காட்டி இப்படியே இருந்துட்டா அவளை எப்படி கட்டிக் கொடுக்குறது?” என்று கேட்டவள் எதையோ சொல்லத் தயங்கி ஈன்றவள் முகம் நோக்க,

‘புரிந்தது’ எனும் விதமாய் லேசாகத் தலை அசைத்தார் சாவித்திரி.

“ப்ளீஸ், இப்படி அமைதியா இருக்காதீங்கம்மா. நீங்க மூஞ்சை உம்முனு தூக்கி வைச்சிருந்தா நான் எப்படி சந்தோசமா இருப்பேன்?” என்று கேட்க, சிறு இதழ் விரியல் மூலம் வெள்ளைக் கொடி காட்டினார் சாவித்திரி.

பிறகென்ன.. வாய் வலிக்கப் பேசினாள் யுக்தா.

யதுநந்தனை உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்து புகழ் பாடித் தொலைத்தாள். இப்பொழுது தான் அகத்தில் மலரத் தொடங்கியிருந்த நேச அரும்பை, ஆலமரம் என கற்பனை செய்யும் அளவுக்கு சித்தரித்து, அதில் லயித்தாள்.

கேட்டுக் கொண்டிருந்த சாவித்திரிக்கு, தன் கலக்கம் தேவையற்றதோ என்று கூடத் தோன்றியதென்றால், யுக்தாவின் பேச்சுத்திறமையை பாராட்டித் தானே ஆக வேண்டும்?

யுவனியைப் பற்றி ரசனை பாதியும், சிரிப்பு மீதியுமாய் சொல்லிக் கொண்டிருந்த யுக்தா,

“அக்கா..” என்ற சத்யாவின் கத்தல் கூடத்திலிருந்து கேட்டதும், “என்னடி?” என இங்கிருந்தே குரல் கொடுத்தாள்.

“இங்க வாயேன்!”

“எதுக்கு?”

“ஓடி வாயேன். அர்ஜென்ட்டு!”

“வர்றேன் இரு..” என்றவள் சாவித்திரின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு, “அன்றங்கே வந்ததும் இந்த நிலவா.. இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா..” என்ற முணுமுணுப்புடன் கூடத்துக்கு வந்தாள்.

“இன்பம் பெறும் பெருவல் கண்மூட.. வெண்ணிலவு ஒ..ன்..” மேற்கொண்டு பாட முன்பே, வாசலில் நின்றிருந்தவனைக் கண்டதும் சட்டென்று பவளவாய் மூடிக் கொண்டது.

“இப்.. இப்போ தான் வந்திங்களா? உள்ள வாங்க.” என்று வரவேற்றவள், நமட்டுச் சிரிப்புடன் புத்தகத்தினுள் முகம் புதைத்திருந்த தங்கையை முறைக்க,

“உள்ள வாங்கனு நானே கூப்பிட்டேன்க்கா. இல்ல, போயாகணும்னு மாமா தான் வர மறுத்துட்டாரு..” என தலை நிமிராமல் சொல்லியவள் மெல்ல அவ்விடம் விட்டு நழுவினாள்.

‘அச்சோ, இவர் முன்னாடி இப்படி தான் அசிங்கபடணுமா?’ என நொந்து கொண்டு கை பிசைந்தபடி நின்றிருந்த யுக்தா,

“பாப்பா கார்ல. வெளிய வா! உன்கிட்ட பேசணும்..” என்றுவிட்டுத் திரும்பி நடந்தவனைப் பார்த்திருந்து விட்டு, மெல்லக் குனிந்து தன்னைத் தானே ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.

‘வீட்டு வேலைக்காரியா இருப்பாளோங்குற சந்தேகம் கண்டிப்பா அவருக்கு வந்திருக்கணும். அதுனால தான் வெளிச்சத்துக்கு வெளிய வானு சொல்லுறாரு..’ என நினைத்தவள், இருந்ததில் நல்ல சுடிதார் ஒன்றை உடுத்திக் கொண்டு, சில்கி கூந்தலை கையால் வாரிவிட்டபடி வெளியே வரும் போது மொத்தமாகப் பத்து நிமிடங்கள் மொத்தமாகக் கடந்திருந்தது.

யதுநந்தனின் கார் வீட்டுக்கு முன்னே இளைப்பாறிக் கொண்டிருந்தது.

உள்ளே, யுவனியை மடியில் அமர்த்திக் கொண்டு அலைபேசி பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் வருவதைக் கண்டு, கதவைத் திறந்துவிட்டான்.

நாலாபுறமும் பார்வையை சுழற்றியபடி உள்ளே ஏறி அமர்ந்தவள், “நீங்க வருவீங்கனு எதிர்பார்க்கல சார்..” என்று கூறிய பிறகு தான், காலையில் அவன் அழைத்த மாத்திரத்தில் அலைபேசி தன் உயிரை மாய்த்துக் கொண்ட நினைவு வந்தது யுக்தாவுக்கு.

சாந்தனாவுடன் பேச்சு கொடுத்த சுவாரஷ்யத்தில், அதை சார்ஜ்ஜில் வைக்க மறந்து போன மடத்தனத்தை எண்ணி நொந்தவள் நந்தனைப் பாவமாக ஏறிட்டாள்.

அதேநேரம் அவனும், “உன் ஃபோன் எங்க?” என்று கேட்டிருந்தான், லேசான முறைப்புடனே!

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!