இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

5
(8)

Episode – 10

“இவர் எப்போ வந்தார்?, எதுக்காக இப்போ என்னை இப்படி முறைச்சுப் பார்க்கிறார்?” என திடுக்கிட்டு பயந்து போனவள்,

அவனை மிரண்டு போய் எச்சில் விழுங்கியபடி பார்க்க, 

“ஏய்….” என ஒற்றை விரலை அவளை நோக்கி நீட்டியவன், 

“யாரைக் கேட்டு நீ இப்போ பாட்டு படிக்கிறாய்?, என்ன பாட்டுப் பாடி இங்க இருக்கிறவங்கள மயக்கப் பார்க்கிறீயா?, உன்ன பார்த்து இங்க யாரும் மயங்க மாட்டாங்க.” என இளக்காரமாக கூற,

அவனின் அர்த்தமற்ற குற்றச்சாட்டில், முதன் முறை கடும் எரிச்சல் உருவாக, 

“சார்ஈஈஈ…. என்ன பேசுறீங்க நீங்க?, முதல்ல இந்த விடியல்ப் பொழுதுல இங்க யாரு சார் மயங்க இருக்கப் போறாங்க. சுற்றி இருக்கிறது எல்லாம் இந்தப் பறவைகளும், மரஞ் செடி கொடிகளும் தான். அதுங்க மயங்கி எனக்கு என்ன கிடைக்கப் போகுது சார். கொஞ்சம் கூட யோசிச்சுப் பேச மாட்டீங்களா நீங்க?, அத விட இப்போ இங்க இருக்கிற இரண்டு பேர் நீங்களும் நானும் மட்டும் தான். எனக்கு உங்கள மயக்கிற எந்த ஐடியாவும் இல்ல. அப்படியே நான் மயக்க நினைச்சாலும் ஒரு வேலைக்காரிக் கிட்ட  மயங்குற ஆளா சார் நீங்க?, உங்க ஸ்டேட்டஸ் என்ன?, தகுதி என்ன?” என அவள் சற்று கேலி கலந்த குரலில் கூற,

முகம் இறுக பல்லைக் கடித்தவன்,

“என்ன என்னையே சீண்டிப் பார்க்கிறீயாடி?” என அவன் எகிற,

வெகு அமைதியாக அவனைப் பார்த்தவள், 

“இல்ல சார், நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன் சார். நீங்க அப்படி ஒரு கேள்வி கேட்ட பிறகும் அமைதியா இருந்தா அது எனக்கு நல்லது இல்லை சார். அப்படி இருந்தா…. நீங்க சொன்னதை நான் ஏற்றுக் கொண்ட மாதிரி இருக்கும். அதான் என் பக்க நியாயத்த உங்களுக்கு புரிய வைக்க ட்ரை பண்றேன். நான் என்னோட மன நிம்மதிக்காக சாமிப் பாட்டு பாடினனே தவிர உங்கள மயக்க இல்ல சார். இது என்னோட சின்ன வயசுப் பழக்கம். அத நீங்க தப்பா பேசினா அது ரொம்ப தப்பு சார்.” என அழுத்திக் கூற,

அவளின் வார்த்தைகளில் உள்ள உண்மை அவனுக்கு புரிந்தாலும், அவளை சும்மா விட மனம் இன்றி, 

“நீ என்ன தான் காரணம் சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது. இனி மேல் நீ பாடக்கூடாது. அப்படியே பாடணும்னாலும் உனக்கு கொடுத்து இருக்கிற வீட்டுக்குள்ள வைச்சுப் பாடிக்கோ. இனி மேல் உன் பாட்டு சத்தம் என் காதில விழவே கூடாது.” என எச்சரிக்கும் குரலில் கூறியவன்,

அவளிடம், தனது துவாலையையும், தண்ணீர் போத்தலையும் எடுத்துக் கொள்ள  சொல்லி கட்டளை இட்டான்.

தமயந்தியும், அதற்கு மேலே வாதிட விரும்பாது, அவன் பின்னால் செல்ல,

அவனோ, அவளைக் கண்டு கொள்ளாது ஜாக்கிங் செய்ய,

அவள், ஒரு குறித்த இடத்தில் நின்று கொண்டு சுற்றி வர பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அந்த அழகான தோட்டத்தைக் காணக் காண தெவிட்டவில்லை அவளுக்கு.

தீரனோ, ஒரு ரவுண்ட் ஜாக்கிங் முடித்ததும் அவளுக்கு அருகில் வந்தவன்,

“என்ன மேடம் உங்கள கை கட்டி நிற்கிறதுக்கா இங்க வர சொன்னன். நான் ஓடும் போது நீயும் பின்னால வரணும் புரிஞ்சுதா?” என கேட்க,

“அது தானே பார்த்தன். நான் கொஞ்சம் நிம்மதியா இருந்தா கூட இவருக்குப் பிடிக்காதே. உடனே வந்துடுவார் ஏதும் திட்ட….”  என மனதிற்குள் எண்ணிக் கொண்டாள் அவள்.

அவளின் எண்ணத்தின் நாயகனோ, அவளின் முகத்தை கூர்ந்து பார்த்து விட்டு, 

“ஆமா…. உன்ன நிம்மதியா இருக்க விடக் கூடாதுன்னு என்கிறது தானே என்னோட முதலாவது டாஸ்க் மேடம். அப்புறம் நீ இப்படி நிம்மதியா ஒரே இடத்தில நின்னா எப்படி?” என கேட்டவனைக் கண்டு,

அவள் அதிர்ந்து பார்க்க, 

அவனோ உதட்டு வளைவுடன், “நான் தீரன்டி, உன் மனசுல என்ன நினைக்கிறாய் என்கிறத ரொம்ப ஈஸியா கண்டு பிடிச்சிடுவன். சோ, என்னப் பத்தி நினைக்கிறத விட்டுட்டு என்ன பொல்லொவ் பண்ணு.” என கூறியவன்,

மீண்டும் ஜாக்கிங் செய்ய ஆரம்பித்தான். 

அவளும், மெதுவாக அவனின் பின்னால் ஓட ஆரம்பித்தாள்.

சற்று நேரம் கழித்து, தீரனோ தன் பின்னால் வருபவளை ஓரக்கண்ணால் நக்கல் தொனிக்கப் பார்த்தவன், 

அடுத்த கணம் வேகமாக ஓட ஆரம்பித்தான்.

புடவை கட்டிக் கொண்டு கஷ்டப் பட்டு அவனின் பின்னால் ஓடிய பெண்ணவளுக்கு, அவன் வேகத்தை அதிகரிக்கவும், அதற்கு தகுந்தது போல ஓட முடியாது போனது.

முயன்று, விரைவாக ஓட முயன்றவள், 

“அம்மாஆஆ….” என கால் தடுக்கி சரியப் போக, மின்னல் வேகத்தில் திரும்பி வந்தவன், அவள் நிலத்தில் விழும் முன் தாங்கிப் பிடித்து தூக்கினான்.

தமயந்தியோ,  சுய நினைவுக்கு வரவே சில நிமிடங்கள் பிடித்தது.

ஒரு பெரு மூச்சுடன் கண்களைத் திறந்தவள், அப்போது தான், தன்னை தீரன் தூக்கி வைத்து இருக்கிறான் எனப் புரிய பயந்து போய் அவனைப் பார்த்தாள்.

அவள் எண்ணியது போலவே, அவளை கொலை வெறியுடன் பார்த்துக் கொண்டு இருந்தவன்,

 “இது என்ன என்னை நெருங்க அடுத்த திட்டமா?” என கேட்க,

அவனின் கேள்வியில் உடம்பு கூச,

அவனிடம் இருந்து திமிறி இறங்கியவள், அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.

அவனோ, அவளின் கண்களை ஒரு கணம் கூர்ந்து பார்த்து விட்டு, 

தலையைக் கோதிக் கொண்டவன்,

“உடனே, நான் தெரியாம தான் விழுந்தன், புடவை தடக்கிடிச்சு. நான் ஒண்ணும் அப்படிப் பட்டவ இல்லை…. அது இதுன்னு…. கதை விடாம ஒழுங்கா என் பின்னாடி வரப் பார்.” என்றவன்,

ஒரு கணம் நின்று அவளைத் திரும்பிப் பார்த்து, 

“அப்புறம் நாளைக்கு வரும் போது, சுடிதார் போட்டுக் கொண்டு வா. இந்த சாறீ வேண்டாம். இல்லன்னா. நீ அடிக்கடி விழ, நான் அடிக்கடி உன்னப் பிடிக்க வேண்டி இருக்கும். அத நான் விரும்பல.” என அவன் எரிச்சலுடன் கூற,

அவளோ, தயங்கி அவனைப் பார்த்தவள்,

“என்கிட்ட வேற ட்ரெஸ் எதுவும் இல்லையே.” என தலை குனிந்து கம்மிய குரலில் கூற,

அவளையே ஆழ்ந்து பார்த்தவன் பதில் எதுவும் கூறாது, தன் பாட்டிற்கு ஓட ஆரம்பித்தான்.

அவளும் பெரு மூச்சுடன் அவனைப் பின் தொடர ஆரம்பித்தாள்.

அதன் பின்பு அவன் ஜாக்கிங் முடித்து விட்டு வீட்டுக்கு போக,

அவள் களைத்து போய் தன் வீடு நோக்கி சென்றாள்.

அன்றைய நாள் முழுவதும், அவள் அதற்குப் பிறகு, அவனைக் காணவே இல்லை. 

தனது வேலைகளில் கவனமாக இருந்தவள், 

தனக்கு காலை சாப்பாடு கொண்டு வந்த வயதான பெண்மணியிடம் தான் கட்டிய மாலையை கொடுத்து, பெரிய வீட்டில் உள்ள சாமிப் படங்களுக்கு சூட்ட சொன்னாள்.

அந்தப் பெண்மணியோ, தமயந்தியை ஒரு கணம் கூர்ந்து பார்த்து விட்டு, சுற்றியும் தன் பார்வையினை செலுத்தியவர்,

“அம்மாடி, உன்னப் பார்த்தா…. ரொம்ப நல்ல பொண்ணாத் தெரியுது. உன்னோட குழந்தைத் தனமான முகத்தில இந்தக் கிழவியால கள்ளம், கபடம்னு எதையும் கண்டு பிடிக்க முடியல. ஆனா எங்க ஐயா உன்னை கொடுமைக்காரின்னு சொல்றார். அவர் சொல்லி இதுவரைக்கும் எதுவும் தப்பா இருந்தது இல்லை. ஆனா உன் விஷயத்துல….” என்றவர் வார்த்தையை முடிக்காது நிறுத்த,

அவரின் அந்த அன்பான வார்த்தைகளில் தமயந்திக்கு கண்கள் கலங்கிப் போனது.

பேசக் கூட யாருமே இல்லாத நிலைமையில் அந்தப் பெண்மணியின் ஒற்றை அன்பான வார்த்தை அவளின் மனதை உருக வைத்தது.

அவளின் கண்களின் கலக்கத்தை கண்டு கனிவாக நோக்கியவர்,

“அம்மாடி, தீர்க்க முடியாத பிரச்சனைன்னு ஒன்னு இங்க இல்லவே இல்லை. எல்லாம் தீரும் காலம் வரும். 

அது வரைக்கும் பொறுமையா இரும்மா, போராடித் தான் ஆகணும்னா அதையும் நீ செய்து தான் ஆகணும்.”

“நம்ம ஐயா எவ்வளவு அவமானப் படுத்தினாலும், அந்த வீட்டுக்கும் சேர்த்து மாலை கட்டி இருக்கிற உன்னோட குணம் சொல்லுதும்மா உன்னோட நல்ல மனசு என்ன என்கிறத….” என மென்மையாக கூறி அவளின் தலையை வருடி விட, 

கண்ணீர் வழிய மென் புன்னகை உடன் அவரின் கைகளைப் பற்றிக் கொண்டாள் அவள்.

“நான் உனக்கு சாப்பாடு கொடுக்க வரும் போது, கண்டிப்பா உன் கூட பேசுவேன்மா. என்னை யாரும் தடுக்க முடியாது.”

“ஆனா அம்மாஆஆ…. அவர் உங்கள ஏதும் சொன்னா….” என அவள் தடுமாற,

“தம்பி என்னை ஒண்ணும் சொல்லாதும்மா. அவர் கூட நான் பதினைஞ்சு வருஷமா இருக்கேன்மா. அவரும் என்னை அம்மான்னு தான் கூப்பிடுவார். ஏதோ ஒரு முதியோர் இல்லத்தில, கிடந்து சாக வேண்டிய என்ன தம்பி தான் இங்க கூட்டிக் கொண்டு வந்து வைச்சு இருக்கார். 

இங்க இருக்கிறவங்கள்ள பாதிப் பேர், ஏதோ ஒரு வகையில பாதிக்கப்பட்டு வந்தவங்க தான்மா.” என அவர் கூற,

தீரனின் இன்னொரு முகத்தைக் கண்டு உள்ளுக்குள்  வியந்து போனாள் பெண்ணவள்.

“அவனுக்குள் இப்படி ஒரு நல்லவனும் இருக்கிறானா?” என அவள் எண்ணிக் கொண்டு இருக்கும் போதே,

“என்னம்மா யோசிக்கிறாய்?, எங்க ஐயா ரொம்ப நல்லவர். அது போகப்போக உனக்கே புரியும்மா. அப்புறம் பெரிய வீட்டில, பூஜை அறையை யாரும் திறக்க மாட்டாங்க. அந்த அறையோட சாவி, நம்ம ஐயாக் கிட்ட மட்டும் தான் இருக்கு. இந்த பதினைஞ்சு வருஷத்தில, அவர் ஒரு நாளும் அந்த அறைப் பக்கம் போய் நான் பார்த்தது கூட இல்லம்மா. 

அவரோட, மனசுலயும் ஏதோ ஒரு தீர்க்க முடியாத கவலை இருக்கும்மா. அது என்னன்னு தான் தெரியல. இந்தப் பூவை நீயே தலையில வைச்சுக்க. மகா லட்சுமி மாதிரி இருப்பாய்.” என கூறியவர், சொன்னதோடு மட்டும் இல்லாது, அவள் மறுத்தும் கேட்காது பூவை வைத்து விட்டார். 

அதோடு அவளிற்கு நெட்டி யும் முறித்து விட்டார்.

அன்னையின் பாசமே தெரியாது வளர்ந்தவள் அவள்.

அப்படிப் பட்டவளுக்கு 

இந்த அன்னை காட்டிய பாசத்தில் நெஞ்சம் விம்மியது. 

சில முக்கிய நேரங்களில் கிடைக்கும் சிறிய அரவணைப்பு, பாசம் கூட விலை மதிக்க முடியாத சொத்து அல்லவா.

 

அதனை உணர்ந்தவள், “அம்மா உங்க பேரு?” என மென்மையாக கேட்க,

அவரும், சிறு புன்னகை உடன் “சிவகாமி.” என கூறி விட்டு சென்றார்.

அவளும் ஒரு பெரு மூச்சுடன், “இந்த வீட்டுக்குள்ள இன்னும் எத்தனை விஷயங்கள் தான் ஒளிந்து இருக்கோ தெரியலயே, எல்லாருக்கும் நல்லவர் எனக்கு மட்டும் ஏன் இப்படி வில்லனா இருக்கார்?” என எண்ணிக் குழம்பிப் போனவளுக்கு அப்போது தெரியவில்லை.

அவளுக்கான முழு உண்மைகளும் தெரிய வரும் போது, அவள் உலகமே கேள்விக் குறியாகி இருக்கும் என்று.

அன்றைய இரவுப் பொழுதில் அவனுக்காக காத்துக் கொண்டு இருந்தாள் பெண்ணவள்.

அன்று பத்து மணிக்கே, வீட்டுக்கு வந்தவன், அவளை வர சொல்லி கை காட்டினான்.

அவளும் அவனின் முன்னாக சென்று நின்றவள், 

“குட் நைட் சார். இனி நான் போய் தூங்கலாம் தானே.” என கேட்க,

“ஹ்ம்ம்….” என தலையைக் கோதிக் கொண்டவன், அவளை நோக்கி ஒரு பையை எறிந்தான்.

அதில், அவளுக்கு தேவையான மூன்று செட் சுடிதார்களும், இரு பச்சை நிற புடவைகளும் இருந்தன.

அவளோ, விழி விரிய ஆடைகளைப் பார்த்து விட்டு அவனைப் பார்க்க,

அவனோ, “உனக்கு இனாமாத் தர்ற அளவுக்கு, நீ எனக்கு ஒர்த் இல்லை. இந்தா பில். இந்தப் பணம் உன்னோட மாச சம்பளத்தில இருந்து கழிபடும்.” என கூற,

அவளும், “ம்ம்ம்ம்…. எனக்கும் எதையும், யார்க்கிட்டயும் இனாமா வாங்கிப் பழக்கம் இல்லை சார்.” என மாத்திரம் தெளிவான குரலில் கூறியவள், 

பில்லை ஒரு முறை பார்வை இட்டாள்.

அவளின் பதிலில் உதட்டை வளைத்தவன், 

“இது எதுக்கு தெரியுமா?, காலையில என் மேல விழாம என் பின்னால வர்றதுக்கு. என்னால உன்னை அடிக்கடி  விழாம காப்பாத்தமுடியாது. அப்படி கூட என் கை உன் மேல படுறத நான் விரும்பல.” என இளக்காரமாக கூற, 

அவனின் பேச்சில், அவனை வெறித்துப் பார்த்தவள், எதுவும் கூறாது அங்கிருந்து சென்றாள்.

தீரனும் விழிகளில் ஒரு பளபளப்புடன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

****************************************************

காலையில் கண் விழித்த அபர்ணாவுக்கு, உதட்டில் ஒரு வித எரிச்சல் உருவாக,

“என்னாச்சு எனக்கு?” என எண்ணியவளுக்கு அப்போது தான் முதல் நாள் இரவு நடந்தவை அனைத்தும் நினைவுக்கு வந்தது.

ஆதி தன்னிடம் நடந்து கொண்ட முறையை எண்ணிப் பார்த்து கோபம் கொண்டவள்,

அறையை சுற்றிப் பார்த்து விட்டு, 

அவனைக் காணவில்லை என்றதும், 

“இன்னைக்கு அவர நாலு கேள்வி கேட்டே ஆகணும்.” என எண்ணிக் கொண்டு, பால்கனிப் பக்கம் போக,

அங்கே அவனோ, சொகுசாக இதழ்களில் உறைந்த புன்னகை உடன் உறங்கிக் கொண்டு இருந்தான்.

அவனைக் கண்டதும், எரிச்சல் மிக, “முதல்ல எழுந்திரிங்க.” என சத்தமாக கத்தினாள் அவள்.

அவளின் சத்தத்தில் துயில் களைந்தவன், வேண்டும் என்றே கண்ணை மூடி இருக்க,

அவன் எழும்பவில்லை என எண்ணி மூன்று முறை கத்தியவள்,

“அடுத்து என்ன செய்வது?” என யோசித்து விட்டு,

வேறு வழி இன்றி மெதுவாக அவனின் தோளைத் தொட்டு உலுக்கினாள். 

அவளின் செய்கையில் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு,

வெளியில் எதுவும் தெரியாதது போல, கண்களைத் திறந்தவன்,

அவளின் முகத்தை அருகே கண்டு ஒரு கணம் சிலிர்த்துத் தான் போனான்.

ஆனாலும் அதனை வெளியே காட்டாது, தன்னை நிலைப் படுத்திக் கொண்டவனின் பார்வை ஒரு நொடிக்கும் குறைவாக அவளின் உதடுகளில் நிலைத்து பின் மீண்டது.

அடுத்த கணம், “ம்ப்ச்…. இப்போ எதுக்கு காலங் காத்தால இப்படி அவசரமா எழுப்புறாய்?” என அவன் சலிப்புடன் கேட்க,

“சும்மா தெரியாத மாதிரி நடிக்காதீங்க. நேத்து நைட் நீங்க என்ன….” என்றவள் அதற்கு மேல் வெளிப்படையாக எதுவும் கூற முடியாது நிறுத்த,

“ம்ம்ம்ம்…. சொல்லுங்க மேடம், மீதியையும் சொல்லி முடிங்க.” என அவன் கேலியாக கேட்க, 

அவனை இடுப்பில் கை வைத்தபடி முறைத்துப் பார்த்தாள் அவள்.

அவளை ஒரு கணம் மேலிருந்து கீழாக பார்த்தவனின் கண்கள், அவனையே ஏமாற்றி அவளின் தாவணி வழியே பளிச்சென்று தெரிந்த வெண்ணிற இடையில் பதிந்தது.

“ஓஹ் மை கோட்….” என தலையை அழுந்த கோதிக் கொண்டவன்,

“சே…. என்ன இது?, நினைப்பு எல்லாம் வேற எங்கயோ போகுதே. இது சரி இல்லையே.” என எண்ணியவன்,

அவளின் புறம் திரும்பாது, “சீக்கிரம் குளிச்சு கிளம்பு, உங்க வீட்டுக்கு போய் உன்னோட புக்ஸ் எல்லாம் எடுக்கணும், அப்படியே நீ இன்னையில இருந்து ஸ்கூல்ற்கு போறதுக்குரிய ஏற்பாடுகளும் பண்ணனும்.” என கூறி விட்டு அறைக்குள் நுழைய,

அவனின் பின்னாக கோபத்துடன் நுழைந்தவள்,

“என்னப் பார்த்தா உங்களுக்கு பைத்தியக் காரி மாதிரி இருக்கா?” என கீச்சிடும் குரலில் கேட்க,

“ஸ்ஸ்ஸ்ஸ்….” என காதைக் குடைந்து கொண்டவன்,

“எதுக்கு இப்போ கத்துறாய்?, பக்கத்தில தானே இருக்கேன்.” என அவன் சிம்பிளாக கூற,

“இப்போ அதுவா முக்கியம்?, கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லுங்க.”

“ம்ப்ச்…. உன்ன பார்த்தா பைத்தியம் மாதிரி இல்ல. ஆனா நீ செய்றத பார்த்தா கொஞ்சம் டவுட்டா தான் இருக்கு.” என்றவன், கப்பேர்ட்டை திறந்து துவாலையை எடுக்க,

கோபத்தில் “உங்கள….” என்றவள்,

“நான் எனக்கு நீங்க கிஸ் பண்ணினத பத்திக் கேட்டன்.” என அவள் சீற,

திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவன், 

“நான் அத நேற்றே மறந்துட்டன். நீ இன்னும் நினைவு வைச்சு இருக்காய்ன்னா…. என் முத்தம் உன்னை டிஸ்டர்ப் பண்ணி இருக்குன்னு அர்த்தம். உனக்கு வேணுன்னா இன்னொரு தடவை….” என அவன் உதடுகளை நாவால் வருட, 

அவளோ, அவனின் பேச்சில் ஆவென வாயைப் பிளந்து போய் நின்றாள்.

அவனோ, “என்ன கிளம்புறீயா?, இல்ல ட்ரையல் பார்ப்பமா….” என கேட்டு அவளை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைக்க,

“உங்கள…. அப்புறம்…. பார்த்துக்கிறேன்.” என்றவள் குளியல் அறைக்குள் ஓடி மறைந்தாள்.

அவள் போனதும், ஆதியின் உதடுகளில் ஒரு மென் புன்னகை பல ஆண்டுகளுக்கு பிறகு,

அவனின் மனம் உணர்ந்து உருவாகி மறைந்தது.

அவனின் புன்னகை நீடிக்குமா?

ஆதி அவளின் மீது காதல் கொள்வானா?

தீரனுக்கு தமயந்தி மேல் நல்ல எண்ணம் வருமா?

அடுத்த பதிவில் பார்க்கலாம் ❤❤❤

கண்டிப்பா லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுங்க மக்காஸ் ❤❤❤

நாளைக்கு மாக்ஸிமம் எபி போட ட்ரை பண்றேன் ❤❤❤

மறக்காம லைக்ஸ் கொடுங்க 😍😍😍

பெரிய எபி வந்தாச்சு மக்காஸ்.. 😍😍

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!