விமான நிலையத்தில் மயங்கி கிடந்த இளஞ்செழியன் தனது வீட்டில் உயிரற்ற உடலாய் இருக்கும் தாயின் முன் கண் விழித்தான்.
ஏன் அந்தச் செய்தி கேட்டு என் உயிர் போகாமல் உடலில் இன்னும் தங்கி இருக்கிறது, என்றெல்லாம் அவனது யோசனை அலை பாய்ந்தது.
ஆம் அவனது உயிருக்கு உயிரான ஒரே ஒரு பந்தம் என இவ்வுலகில் உண்டு என்றால் அது அவனது அம்மா மட்டுமே.
இளஞ்செழியன் பிறந்து ஒரு வயதிலேயே அவரது அப்பா வேறொரு பெண் மீது மோகம் கொண்டு தனது அம்மாவான பார்வதி தேவியை நடுத்தெருவில் விட்டு விட்டு அவரது சொத்துக்களையும், நகைகளையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டார்.
ஒரு வயது குழந்தையுடன் இளஞ்செழியனின் தாய் ஆதரவற்று ஒரு பிடி உணவுக்காக மிகவும் கஷ்டப்பட்டு இருக்க இடம் இல்லாமல் தெருவோரத்தில் எத்தனை நாட்கள் உறங்கி இருப்பார்.
என்ன தான் கணவர் கைவிட்டாலும் தனது மகனுக்காக உயிர் வாழ வேண்டும் என்ற உறுதியுடன் அனைத்து துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு துணிந்து வாழ்க்கையுடன் போராடினார்.
வேலை தேடி அனைத்து இடங்களும் அலைந்து திரிந்து இறுதியில் தனது நெருங்கிய தோழியின் உதவியுடன் வீதி ஓரத்தில் நடமாடும் உணவு கடை ஒன்றை சிறிதாக ஆரம்பித்தார்.
அவரது உணவு செய்யும் கைவண்ணத்திலும், அதன் சுவையிலும் நாளாக நாளாக அதிகளவானோர் கடையை தேடி நாடி வந்தனர். பின் வரும் வருமானத்தை சிறிதாக சேர்த்து பார்வதி உணவகம் என்று ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்தார்.
அதன் மூலம் அதிக வருவாயும் பெரிய அளவிலான விழாக்கள், திருமண நிகழ்வுகள், மங்கள நிகழ்வுகள் போன்ற ஆர்டர்கள் அதிக அளவில் அவரது உணவிற்கும், சுவைக்கும் வந்து குவிந்தன.
அதில் மேலும் மேலும் முன்னேறி சென்னையில் மூன்று கிளைகள் ஆரம்பித்தார். இவ்வாறு தனது தொழிலை முன்னேற்றிக் கொண்டு இளஞ்செழியனையும் நன்றாக படிக்க வைத்தார்.
இளஞ்செழியனும் பெரிய அளவில் அம்மாவிற்கு உதவும் வகையில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து அம்மாவின் தொழிலை தன்னகத்தே எடுத்துக் கொண்டு, பாரிய அளவில் பெரிய ஹோட்டல்களை அமைத்து அம்மாவின் கனவை விரிவு படுத்தினான்.
அத்துடன் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள், தமிழ் பண்பாடு மிக்க உணவுகளையும், பாரம்பரிய உணவுகளையும் உண்ண இயலாமல், வெளிநாட்டு உணவுகளின் தவிர்க்க முடியாத சுவையின்றி உணவுகளை கட்டாயத்தின் பெயரில் உண்டு அங்கு வேலை புரியும் புலம்பெயர் மக்களுக்காக தனது உணவகங்களை அங்கும் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கனடா சென்றான்.
அவன் நினைத்ததைப் போன்று அங்கு உள்ள தமிழர்களின் வாழ்த்துக்களும், அன்பும் மற்றும் ஆதரவும் அவனுக்கு அதிக அளவில் கிடைத்தது.
அதனால் அவன் சென்னையில் உள்ள ஹோட்டல்களை அன்னையிடம் பொறுப்பு கொடுத்துவிட்டு கனடாவில் தனது ஹோட்டல் பிசினஸினை விரிவுபடுத்திக் கொண்டான்.
அவன் உழைத்த பணத்தினை வைத்து அரண்மனை போல் அன்னைக்கு வீடு கட்டிக் கொடுத்து, விலை உயர்ந்த நகைகளையும், புடவைகளையும், கார்களையும் வாங்கிக் கொடுத்து, ராணி போல அவரை கவனித்துக் கொண்டான்.
அவ்வாறு கண்ணுக்குள் பொத்தி வைத்து காத்த தன்னுயிருக்கு உயிரான அன்னையை இன்று உயிரில்லா சடலமாக காண, அவனது கண்கள் சிவந்து எரிமலை போல் தகிக்கத் தொடங்கியது. ‘இறைவா… இன்று நான் காணும் காட்சி கனவாக மட்டும் இருக்க வேண்டும்..’ என்று மனம் இறைவனிடம் இரங்கி வேண்டிக் கொண்டது.
ஆனால் இறைவனும் அவன் பக்கம் இல்லாமல் அவனது வாழ்வில் சதி செய்து விட்டான்.
எழுந்து நிற்கவும் பலம் இல்லாமல், தட்டுத் தடுமாறி தள்ளாடி நடந்து, தாயின் கையினை பிடித்து தன் கைக்குள் வைத்துக் கொண்டு அப்படியேஅ அவர் அருகில் இருந்து கொண்டான்.
அப்படியே இருந்த படி கண் இமைக்காமல் தனது தாயினை பார்த்துக் கொண்டே இருந்தான்.
எங்கு கண்கள் மூடினால் அவர் மறைந்து போய் விடுவாரோ..! என்ற அச்சமோ என்னவோ தெரியவில்லை. அவன் அப்படியே சிலையென அவர் அருகில் அமர்ந்து இருந்தான்.
இதனைக் கண்டு தாங்க இயலாத ராமையா அருகில் வந்து, அவனது தோளை அழுத்திப் பிடித்து “என்ன தம்பி…. இப்படி அம்மாவை பாக்குறீங்க…. அம்மா நம்மள விட்டு போயிட்டாங்க…. அந்த நிதர்சனத்தை நீங்க ஏற்றுக் கொண்டு தான் ஆகணும்…. மனச விட்டு அழுதுருங்க தம்பி… மனசுக்குள்ளேயே போட்டு துக்கத்தை அடக்கி வைக்காதீங்க….. மனசு பாரமாயிடும்….
நீங்க என்கிட்ட கொடுத்த பொறுப்பை…. நான் சரியா செய்யல தம்பி…. அம்மாவை இன்னும் கவனமா நான் கவனிச்சி இருக்கணும்…. என் மேல தான் தப்பு… நீங்க தந்த பொறுப்ப… நான் சரியா செய்யல தம்பி…. என்ன மன்னிச்சிடுங்க…..” என்று ராமையா இளஞ்செழியனுக்கு ஆறுதல் சொல்ல வந்து பின்பு தானே உடைந்து அழத் தொடங்கினார்.
ராமையா இவ்வாறு கூறி விம்மி விம்மி அழ, ஒரு நிமிடம் அவரை நிமிர்ந்து பார்த்து விட்டு பின் மீண்டும் அன்னையின் வதனத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது செய்கை அங்கு இறந்த வீட்டிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் வியப்பாக இருந்தது.
அவனது பிசினஸ் வட்டாரங்களில் உள்ள அனைத்து பெரியவர்களும் வந்து சென்றனர். மற்றும் அரசியல் பிரமுகர்களும் வந்து ராமையாவிடம் விசாரித்து விட்டு சென்றனர். ஆனால் இளஞ்செழியனோ அவ்விடத்தை விட்டு அசையவும் இல்லை, யாரிடமும் எதுவும் பேசவும் இல்லை, ஒரு சொட்டு நீர் கூட அருந்தவில்லை.
தனது அம்மா தன்னுடன் இல்லை என்ற நிஜத்தினை ஏற்றுக் கொள்ள மனம் பெரும்பாடு பட்டு உள்ளுக்குள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது.
அந்தப் போராட்டத்தில் சிக்கி மனம் மற்றும் மூளை இரண்டும் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு நிஜத்தினை புரிய வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.
இறுதிக் கிரியைகள் செய்யும் நேரம் நெருங்கியதும் ராமையா மெதுவாக இளஞ்செழியனை எழுப்பி நீராட்டி, வேட்டி அணிவித்து, தலை முடியை மழித்து, ஐயர் கூறக் கூற ஒவ்வொரு கிரியைகளாக ராமையாவின் உதவியுடன் செய்து முடித்தான்.
அவன் எந்தவித உணர்ச்சிகளையும் வெளிக் காட்டாமல் அப்படியே முறுக்கிவிட்ட பொம்மை போல சொல்வதை அப்படியே செய்து கொண்டிருந்தான்.
இறுதியில் சடலத்திற்கு நெருப்பு வைக்கும் போது, அவனது ஒரு கண்ணில் இருந்து மட்டும் சிறு துளி நீர் கீழே விழுந்தது.
அவனது நடவடிக்கையைப் பார்த்து ரமையாவுக்கு மிகவும் பிரமிப்பாகவும் அதிசயமாகவும் இருந்தது.
பெற்று வளர்த்த தாயின் இறுதிப் பொழுதில் கூட அவன் சிறிதும் அழவில்லை என்பது அவருக்கு நெஞ்சில் நெருஞ்சி முள் தைப்பது போல மிகவும் வேதனையாக இருந்தது.
‘பின்பு இருக்காதா என்ன..? அம்மா பிள்ளை போன்றா இருவரும் பழகினர். இணை பிரியாத நண்பர்கள் போல் அல்லவா பழகினர். அன்னையும், மகனும் சேர்ந்து விளையாடும் விளையாட்டில் இந்த வீடே பெரும் ஆரவாரத்துடன் கலகலப்பாக மாறி விடும்.
தற்போது பார்வதி தேவி அம்மா இல்லாமல், எவ்வாறு செழியன் தம்பி இருக்கப் போகிறாரோ….! தெரியவில்லை’. என்று மனதளவில் இளஞ்செழியனைப் பற்றி எண்ணி ராமையா வருந்திக் கொண்டிருந்தார்.
செழியனின் அழகை மெருகூட்டுவதே அந்த சுருள் முடி தான். முடி இல்லாத வதனம் அவனது முக அழகை மாற்றி, அவனது சிவந்த கண்கள் அவனுக்குள் கொழுந்து விட்டெரியும் கோபக் கனலை நன்கு வெளிப்படுத்தியது.
இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக சேர்த்து அவனது வதனமோ வாழ்க்கையின் வெறுமையை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது.
‘இதற்கெல்லாம் காரணமான அவளை நான் விடமாட்டேன்… இதற்கு அவள் பதில் சொல்லியே ஆக வேண்டும்….. என் தாயின் இழப்பு எப்படி எனக்கு ரணங்களை முள்ளாக தைக்கிறதோ..! அது போல அவளுக்கும் அந்த வேதனையை நான் மறக்காமல் ஒன்றும் விடாமல் முழுதாக பரிசளிப்பேன்….’ என்று இளஞ்செழியனின் மனம் வஞ்சத்தை தத்தெடுத்துக் கொண்டது.
உடனே தன் கைத்தொலைபேசியை எடுத்து “ஹலோ ராகுல்… இம்மீடியட்டா எனக்கு ஒரு இன்ஃபோமேஷன் தேவைப்படுது…” என்று கூற மறுமுனையில் “ஹலோ சார்….. என்ன இன்ஃபோமேசன் சார் தேவை…. சொல்லுங்க சார்… சீக்கிரமா கண்டுபிடிச்சிடலாம்…” என்றான் இன்ஸ்பெக்டர் ராகுல்.
“நான் ஒரு போட்டோ உங்களுக்கு சென்ட் பண்றேன்… அந்த போட்டோல இருக்குற பொண்ணு யாரு..? எங்க இருக்காங்க…? அவங்களோட பேமிலி பேக்ரவுண்ட் என்னன்னு…? எனக்கு த்ரீ ஹவர்ஸ்க்குள்ள கண்டுபிடிச்சு சொல்லியாகணும்… ஓகே…,” என்று பற்களை கடித்துத் தனது கோபத்தை அடக்கிக் கொண்டு கூறினான்.
அவன் பேசுவதை வைத்தே கோபத்தில் இருக்கிறான் என்பது ராகுலுக்கு நன்றாகவே விளங்கியது. உடனே “ஓகே சார்… ஓகே சார்… இப்போ உடனே அனுப்புங்க…. போட்டோவ நான் பார்த்துட்டு, முதல் வேலையா உங்களுக்கு சொல்றேன்….” என்று படபடப்புடன் கூறினான்.
உடனே ராகுலுக்கு அந்த பெண்ணின் போட்டோவை அனுப்பி விட்டு அந்த போட்டோவை பார்வையாலேயே வெட்டி வீழ்த்துவது போல வெறுப்பை உமிழ்ந்த படி பார்த்துக் கொண்டிருந்தான். இதே கண்கள் தான் மூன்று நாட்களுக்கு முன் அன்பு ததும்ப காதல் உணர்வுடன் கண்கள் சொக்க பார்த்து இரசித்தது.
இளஞ்செழியன் மூன்று நாட்களுக்கு முன் காதலில் தகித்த அதே பெண்ணை ஏன் தற்போது கொல்லும் வெறியுடன் தேட வேண்டும். அவனது பழி வெறிக்கான காரணம் யாது…?