Episode – 11
அபர்ணா குளித்து விட்டு அதே ஆடையுடன் கிளம்பி வரவும்,
தயாராகி சோபாவில் அமர்ந்து இருந்தவன்,
ஒரு கணம் புருவம் சுருக்கி அவளைப் பார்த்து விட்டு,
அவளை அங்கேயே இருக்க சொல்லி விட்டு, வெளியில் சென்றான்.
அவளும் தோளைக் குலுக்கி விட்டு அங்கிருக்கும் புக் செல்ப்பில் இருந்து ஒரு நாவலை எடுத்து படிக்க ஆரம்பித்து விட்டாள்.
சரியாக அரை மணி நேரம் கழித்து வந்தவனின் கைகளில் இரு பெரிய பைகள் இருந்தது.
அதனைப் பார்த்ததுமே அபர்ணாவுக்கு புரிந்து விட்டது.
அவன் ஆடைகள் வாங்கி வந்து இருக்கிறான் என்பது.
அவளுக்கு அவனிடம் அதனை வாங்க மனமே இல்லை.
அவனோ, அவளையே பார்த்தவாறு பைகளை நீட்ட,
அவனைக் கையைக் கட்டிக் கொண்டு தீர்க்கமாக பார்த்தவள்,
“இல்லை….” என்பது போல தலையாட்ட,
அவளை முகம் இறுக பார்த்தவன்,
“ஒரே ட்ரெஸ்சோட இன்னும் எத்தனை நாளைக்கு, இருக்கிறதா உத்தேசம் மேடம்?” என கேலிக் குரலில் கேட்டான்.
“ஹ்ம்ம்…. எனக்கு என்னோட அப்பா வாங்கிக் கொடுத்த ட்ரெஸ் நிறையவே இருக்கு. அத நான் யூஸ் பண்ணிக்கிறன்.”
“ஓஹ்…. சரிங்க மேடம். அப்போ ட்ரெஸ்ச மாத்திட்டு சீக்கிரம் வாங்க. ஸ்கூலுக்கு போகலாம்.” என கூறி தோளை குலுக்கியவன், அவளையே கூர்ந்து பார்க்க,
அவளோ, அவனின் பேச்சில் கையைப் பிசைந்து கொண்டு நின்று இருந்தாள்.
பின்னே அவளுடைய உடைகள், அனைத்தும் அவளது வீட்டில் அல்லவா இருக்கிறது.
உடனே மாற்றி வர சொன்னால் அவள் ட்ரெஸ்ற்கு எங்கே போவது?
“ஆத்தி…. ரொம்ப ஓவரா பேசிட்டம் போலயே…. இந்த ஹிட்லர் என்ன வைச்சு செய்யாம விட மாட்டாரே. இப்போ எப்படி சமாளிக்கிறது?” என எண்ணியவள், அவனைப் பாவம் போல பார்த்து வைக்க
அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு,
அவளின் உள்ளத்து உணர்வுகள் புரியாதா என்ன?
ஒரு உதட்டு வளைவுடன்,
“என்ன மேடம், தன் மானச் சிங்கம் மாதிரி எகிறி எகிறிப் பேசுனீங்க, இப்போ அப்படியே காத்துப் போல பலூன் போல நிக்குறீங்க?, என்ன விஷயம்?” என தெரிந்து கொண்டே கேட்க,
அவளோ, திக்கித் திணறி,
“இல்ல…. அப்பா வீட்டுல தான் ட்ரெஸ் எல்லாம் இருக்கு. இப்போ உடனே மாத்த சொன்னா…. எங்க போறது?” என இழுக்க,
“அத நீ வாய் கிழிய பேச முதல் யோசிச்சு இருக்கணும். ஏதோ பெரிய அப்பாடக்கர் மாதிரி வீர வசனம் எல்லாம் பேசினாய்.. இப்போ என்னாச்சுப் பார்த்தீயா?” என அவன் கேலி செய்ய,
பல்லைக் கடித்துக் கொண்டு தலை குனிந்து நின்றவளால் அவனுக்கு பதில் எதுவும் கூற முடியாது போனது.
தலை குனிந்து நின்றவளை ஒரு சில கணங்கள் கூர்ந்து பார்த்தவன்,
மீண்டும் ஒரு பெரு மூச்சுடன், “இதில இருக்கிற ஒரு ட்ரெஸ்ஸ போட்டுக் கொண்டு வா. இது மட்டும் இல்ல. இனி மேல் நீ வைக்கிற பொட்டு கூட நான் வாங்கிக் கொடுக்கிறதா மட்டும் தான் இருக்கணும்.”
“உன்னோட வீட்டுக்குப் போய் உன் புக்ஸ்ச எடுக்க மட்டும் தான் நான் உனக்கு அனுமதி தருவேன். புரிஞ்சுதா? அத விட அங்க இருந்து எந்த ஒரு ட்ரெஸ்சும் இங்க வரக்கூடாது. அப்படி வந்தா…. அடுத்த நிமிஷம் அந்த உடை நெருப்பில பொசுங்கி இருக்கும்.” என அவன் உறும,
அவனின் உறுமலில் ஒரு நொடி திகைத்துப் போனவள், சமாளித்து ஏறிட்டு அவனைப் பார்த்து,
“அது எப்படி…. என்னோட அப்பா வாங்கித் தர்றத…. நீங்க வேணாம்….னு சொல்லலா….ம். நான் எதுக்கு நீங்க வாங்கிக் கொடுக்கிறத மட்டும் தான் போடணும்.” என முயன்று வருவித்த குரலில் சற்று எரிச்சலுடன் கேட்க,
“ஓஹ் அப்படியா மேடம்…. அப்போ இதுக்கும் ஒரு டெமோ காட்டுவமா?” என கேட்டுக் கொண்டே,
அவளை நெருங்கி வர,
அவளோ, அவனின் குரலிலும், பார்வையிலும் விதிர் விதிர்த்துப் போனவள், “இ….ப்…. போ…. எதுக்கு என் பக்கத்தில வர்றீங்க?, எதுவா…. இருந்தாலும் அங்கயே நின்னு பேசுங்க…. கிட்ட வர்ற வேலை எல்லாம் வேணாம்.” என எச்சில் விழுங்கியபடி, குரல் கமறக் கூற,
அவனோ, “அப்படி எல்லாம் விட முடியாதுடி சண்டைக் கோழி.
உனக்கு எல்லாம் செயல்ல தான் காட்டணும்.” என உதட்டு வளைவுடன் மீண்டும் நெருங்க,
அவனின் குணம் பற்றி அறிந்தவள் அதற்கு மேலும் தாக்குப் பிடிக்க முடியாது,
“நீங்க சொல்றதுக்கு நான் சம்மதிக்கிறன். நீங்க வாங்கிக் கொடுக்கிறத தவிர எதையும் நான் போட மாட்டன். போதுமா?” என பட படவென கூறி விட்டு, அவனை அங்கயே நிற்கும் படி கையைக் காட்ட,
அவனுக்கு அவளின் செய்கையில் உதட்டுக்குள் ஒரு மெல்லிய சிரிப்பு வந்து போனது.
அவனும், அதற்கு மேல் முன்னேறாது நின்றவன்,
“என்னம்மா ஜான்சி ராணி, அதென்ன நான் பக்கத்துல வந்தா மட்டும் உனக்கு வாய் திக்குது. நான் சொல்றது எல்லாத்தையும் தட்டாம செய்றாய்?, அது என்னம்மா ரகசியம்?” என அவளின் பதட்டத்தை தெரிந்து கொண்டே கேட்க,
அவனை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தவள், பதில் எதுவும் சொல்லாது, அமைதியாக அந்த உடைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு,
“நான் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்.” என கூற,
“ம்ம்ம்ம்…. சீக்கிரம் வா.” என அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு கூறினான் ஆதி.
அவனின் பார்வையை எதிர் கொள்ள முடியாது, தலை குனிந்தபடியே அங்கிருந்து விரைந்து சென்றாள் பெண்ணவள்.
அவள் போனதும், “பக்கத்தில இருந்து இம்சை பண்றாளே.” என முணுமுணுத்துக் கொண்டு தனது இடது பக்க மார்பை வருடி விட்டான் ஆதி.
அவளின் மீது உண்டான பிடிப்பு நொடிக்கு நொடி அதிகமாகியதே தவிர கொஞ்சமும் குறையவில்லை அவனுக்கு.
அவளைப் பற்றியே எண்ணிக் கொண்டு இருந்தவன், கதவு திறக்கும் ஓசை கேட்டு நனவுலகுக்கு வந்தான்.
வெளியே வந்தவளை ஒரு கணம் மேலிருந்து கீழாக ஆழ்ந்து பார்த்தவனின் விழிகளில் யாரும் அறியாத ஒரு ரசனை உணர்வு நொடிக்கும் குறைவாக தோன்றி மறைந்தது.
மயில் நீல நிறத்தில் சுடிதார் அணிந்து, துப்பட்டாவை ஒழுங்காக போட்டு இருந்தவளின் ஒப்பனை அற்ற அழகு அவனின் மனதை சலனம் கொள்ள செய்தாலும்,
முயன்று அதனை ஒதுக்கி வைத்தவன்,
அவள் கூறிய வார்த்தைகளையும், தன் தழும்பு பற்றி அவள் கூறியதையும் ஒரு கணம் எண்ணிப் பார்த்தான்.
அடுத்த நொடியே முகம் இறுகிப் போனவன்,
“கிளம்பலாமா?” என அழுத்தமான குரலில் கேட்டு விட்டு முன் செல்ல, அவளும் அமைதியாக அவனுடன் சென்றாள்.
இருவரும், கோடீஸ்வரனின் வீட்டுக்கு சென்று, அங்கு அவளின் புத்தகங்களை மாத்திரம் எடுத்துக் கொண்டு கிளம்பினர்.
அபர்ணாவுக்கு தந்தையை விட்டு வர கொஞ்சம் கூட விருப்பமே இல்லை.
சிறு வயதில் இருந்து அவரைப் பிரிந்திராதவளுக்கு கண்கள் கலங்கி அழுகை வர ஒரு மூச்சு அழுது தீர்த்தவள்,
அவரையே அணைத்தபடி நின்று கொண்டு இருக்க,
இருவரையும் முகம் இறுக பார்த்துக் கொண்டு இருந்தானே தவிர,
இருவருக்கும் இடையில் ஆதி செல்லவும் இல்லை, அவளுக்கு ஆறுதல் சொல்லி அணைக்கவும் இல்லை.
அவள் அழுது ஓயவும், “ம்க்கும்…. இப்போ மேடம் என் கூட வர்றீங்களா…. இல்ல. இங்கயே இருக்கப் போறீங்களா?” என நேரத்தைப் பார்த்துக் கொண்டு ஆதி கேட்க,
பல்லைக் கடித்தவள், “இங்கயே இருக்கன்னு சொன்னா….
விட்டுட்டுப் போய்டுவீங்களா நீங்க?” என கண்கள் கலங்கினாலும் எரிச்சலாக கேட்டாள் அவள்.
அவளின் கேள்விக்கு புருவத்தை ஒரு முறை தூக்கி இறக்கியவன்,
“யெஸ் கண்டிப்பா.” என சிம்பிளாக சொல்ல,
அவளோ, அவனின் பதிலில் “உண்மையாகவா?” என்பது போல பார்த்தாள்.
அவனோ, கேலிப் புன்னகை ஒன்றை சிந்தியவன்,
“ஆனா நீங்க இரண்டு பேரும் தெருவில தான் ஒண்ணா நிற்பீங்க, ஐ மீன் நிற்க வைப்பன். டீல் ஓகேவா? என அவன் கேட்டதும் தான், அவன் தனது குணத்தையும், பழி வாங்கும் எண்ணத்தையும், எதற்காகவும் மாற்றிக் கொள்பவன் அல்ல என்பதும் கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல, அவனின் எண்ணம் முழுவதும் தங்களைப் பிரிப்பதில் தான் உள்ளது.” என்பதையும் புரிந்து கொண்டவள்,
அவனை எரிக்கும் பார்வை பார்த்து விட்டு,
“அப்பா இந்த கஷ்டம் எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். இன்னும் எத்தனை நாளைக்கு இவரோட ஆட்டம் செல்லுபடியாகுதுன்னு நானும் பார்க்கிறன். இப்போ நான் கிளம்புறன் அப்பா. நீங்க உங்க உடம்பை பத்திரமா பார்த்துக் கொள்ளுங்க. டைமுக்கு சாப்பிடுங்க.” என கூறியவள்,
தந்தையை நோக்கி சிறு தலை அசைப்பு ஒன்றை கொடுத்து விட்டு, தனது புத்தகப் பையை தூக்கப் போக,
அவளின் கையை எடுத்து விட்டு, அந்தப் புத்தகப் பையை தானே எடுத்துக் கொண்டவன்,
கோடீஸ்வரன் புறம் திரும்பி,
“அப்போ நாங்க வர்றோம் மிஸ்டர் கோடீஸ்வரன்.” என மட்டும் கூறி விட்டு செல்ல,
அவரும், “ஹ்ம்ம்ம்….” என மட்டும் கூறிக் கொண்டார்.
அபர்ணாவோ காரில் ஏறிய பின்பு , அவனின் மீது உள்ள எரிச்சலில் கார்க் கதவை ஓங்கி அடித்து சாற்ற,
அவனோ, “எதுக்குடி இப்போ என் கார்க் கதவை உடைக்கிறாய்?, ஏற்கனவே உங்க குடும்பத்துக்கு நான் தண்டத்துக்கு அழுதது போதாதா?” என கேலி ததும்பும் குரலில் கேட்டான்.
அவளும் அதே குரலில், “ஆமா சார், நீங்க பெரியஆஆ…. கொடை வள்ளல் தான், அதனால தான் கொடுத்த காசுக்கு பதிலா அவங்க வீட்டுப் பொண்ணையே தூக்கி இருக்கீங்க. எவ்வளவு பெரிய மனசு சார் உங்களுக்கு. உங்கள மாதிரி ஆட்களுக்கு மெரினாவில சிலை வைக்கணும்.” என அவள் கூற,
முகம் இறுகிப் போனவன்,
பல்லைக் கடித்துக் கொண்டு, “நான் உங்க அக்காவை கலியாணம் பண்ணத் தான் நினைச்சேன். அவ ஓடிப் போனதால உன்னை கலியாணம் பண்ண தூக்கி இருக்கேன். கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு சரியாத் தான் வரும். நீ உன் இஷ்டத்துக்குப் பேசாத சரியா?, அது சரி மேடம்…. இதுக்கு எல்லாம் ஆரம்ப புள்ளி யாரு வைச்சாங்கன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. சும்மா இருந்தவன, கோபப் படுத்தி இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது யாருங்க மேடம்?” என அவளைக் கூர்ந்து பார்த்துக் கேட்டான் ஆதி.
அவளோ, பதில் சொல்ல முடியாது, வெளியே பார்த்துக் கொண்டு,
“வண்டிய எடுங்க, ஸ்கூல் போகணும்.” என கூறினாள்.
அவனும், அவளின் பேச்சற்ற நிலையில் சத்தமாக சிரித்துக் கொண்டு வண்டியை எடுத்தான்.
காரில் அமர்ந்து இருந்தவளுக்கோ, “எப்படி பாடசாலையில் நண்பிகளை எதிர் கொள்ள போகிறோம் என்கிற தயக்கம், யாரை நண்பிகளிடம் கேவலமாகப் பேசினாளோ…. அவனுடனே திருமணம் என்றால் அவர்கள் அவளைப் பற்றி என்ன தான் நினைப்பார்கள்? இனி எப்படி ஸ்கூலில் அவள் தலை நிமிர்ந்து நடக்க முடியும்?, அவள் நேர்மையுடன் பேசியவை எல்லாம்இப்போது
கேலிக் கூத்தாக மாறி விடுமே.”
“அவள் என்ன சொன்னாலும், இனி அவளை ஒரு பரிதாப பார்வை உடன் தானே அனைவரும் பார்ப்பார்கள்.
இனி ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு நரகமாகத் தானே கழியும்.” இப்படி எல்லாம் அவள் எண்ணிப் பார்க்க,
அவளையும் அறியாமல் கண்களில் கண்ணீர் கோர்த்தது.
அதோடு, பெரு மூச்சு ஒன்றும் உருவானது.
காரை ஓட்டிக் கொண்டு இருந்தவனின் ஓரப் பார்வை அடிக்கடி அபர்ணாவையே தொட்டு மீண்டது.
அவளின் முகத்தை வைத்தே அவளின் அகத்தை படித்தவன்,
குரலை செருமிக் கொண்டான்.
அவனின் குரல் செருமல் அவளின் காதில் விழுந்தாலும், அவள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
மெதுவாக சீட்டில் தலை சாய்த்தவள் ஸ்கூல் வந்ததும் தான் கண்களை விழித்தாள்.
விழித்தவள் ஒரு வித பதட்டத்துடன் காரின் பிடியில் கை வைக்க,
மிக மிக மிருதுவான குரலில்,
“என்னைத் தாண்டித் தான் உன்னை யாரும் எதுவும் சொல்ல முடியும்டி, உனக்குள்ள நீயே யோசிச்சு குழம்பாமல் இறங்கு, என் கூட நீ தாராளமா தலை நிமிர்ந்து வரலாம்டி.” என கூறியிருந்தான் ஆதி.
அதுவரையும், அவனின் குரலிலும், அவன் தன் உணர்வுகளை சரியாக புரிந்து கொண்டு பேசியதிலும் சற்று இதமாக உணர்ந்தவள்,
அவனின் கடைசி வாக்கியத்தில் மொத்தமும் அழிந்து போக வெகுண்டு எழுந்தாள்.
“என்ன சொன்னீங்க?, உங்க கூட நான் தலை நிமிர்ந்து வரலாமா? அது எப்படி கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பேசுறீங்க?, நீங்க ஒரு கொலை காரன் உங்க கூட எப்படி நான் கெத்தா வர முடியும்?” என கேலியாக கேட்க,
அவளின் பேச்சில் முகம் இறுகியவன், அவளைக் கூர்ந்து பார்த்து,
“என்னை எரிக்கிற பார்வை பார்க்கிற இதே கண்கள்ல நூறு சதவிகிதம் காதல் ததும்ப, மனம் முழுக்க காதல சுமந்து கொண்டு, என்ன பிடிக்கலன்னு சொன்ன இதே வாயால, உங்கள மாதிரி ஒருத்தர் கிடைக்க நான் கொடுத்து வைச்சு இருக்கணும்னு நீ சொல்லுவாய் பார். இது கூடிய சீக்கிரம் நடக்கும்டி.” என ஆதி ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி சொல்ல,
அவனையே வெறித்துப் பார்த்தவள்,
“இதெல்லாம் உங்க கனவுல நடக்கும் சார். ஆனா நிஜத்தில இந்த ஜென்மத்துல நடக்காது.” என பதிலுக்கு சீறியபடி கூற,
“ஆஹ்…. அதையும் தான் பார்க்கலாமே.” என ஒரு வித சிரிப்புடன் கூறியவன், அவளை இறங்கும் படி சொல்ல,
கூந்தல் துள்ளி விழ, தலையை ஒரு முறை வெட்டித் திருப்பியவள், கட கடவென இறங்கி உள்ளே செல்ல,
அவளையே ஆழ்ந்து பார்த்தவன்,
“பார்க்கலாம்டி. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பிடிவாதம்னு. என்ன நடந்தாலும் நான் தான் உன் புருஷன். அத அந்தக் கடவுளே நினைச்சாலும் மாத்த முடியாது.” என முணு முணுத்தபடி, தானும் இறங்கி அவளின் பின்னால் கம்பீரமான நடையுடன் சென்றான்.
ஆதி தனது சவாலில் ஜெயிப்பானா?
அவளுக்கு அவனின் மீது காதல் அரும்புமா?
புதைந்த அவனின் வாழ்க்கைப் பக்கங்கள் மீளவும் வெளி வருமா?
அடுத்த பதிவில் பார்க்கலாம் ❤❤❤
கண்டிப்பா லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுங்க மக்காஸ் ❤❤❤
நாளைக்கு கண்டிப்பா எபி வரும் மக்காஸ் ❤❤❤
உங்கள காக்க வைச்சதுக்கு மன்னிக்கணும் மக்காஸ்.
கொஞ்சம் வேலைகளில் மாட்டிக் கொண்டேன்.
இனி தொடர்ந்து எபிகள் வரும்…
மறக்காம லைக்ஸ் கொடுங்க 😍😍😍
பெரிய எபி வந்தாச்சு மக்காஸ்.. 😍😍
Intha kathaiya already padicha mathiriye peel aaguthe ennava irukum🙄🙄🙄🧐🧐🧐
Super sis 💞
எனக்கும் தெரியலயே பார்ப்பம்மா 🥰🥰🥰💖