கண்களை திறந்து பார்த்தவள், அப்படியே என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீ நிஷா. ஆம் கடற்கரையில் விழுந்து இளஞ்செழியனின் கையில் ஏந்தி கொண்டு வந்தது ஸ்ரீநிஷா தான்.
தற்போது இருளில் மாட்டி இருப்பதும் ஸ்ரீநிஷா தான். அவளுக்கே பெரும் ஆச்சரியமாகவும் இருந்தது. எங்கு பார்த்தாலும் இருள் மயமாகவே இருந்தது. ஒரு சிறிது வெளிச்சம் கூட இல்லை.
அப்போது தான் அவளது நினைவலைகள் என்ன நடந்தது என்று மீட்டிப் பார்த்தன. “ஆம் கடற்கரைக்குச் சென்றோம்…. நானும் பிரண்ட்ஸும் ஒன்னா விளையாடினோம்…. பந்து அலை அடிச்சிட்டு போக…. நான் அதுக்கு பின்னுக்கு ஓடிப் போனேன்…. போய் பந்த எடுக்கும் போது…. அதை பெரிய அலை வந்து அடிச்சுட்டு போயிட்டு…… அப்புறம்….. என்ன நடந்துச்சு….? அப்புறம்….. ஒன்னும் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குதே….!”
“ஒரு வேளை அந்தப் பெரிய அலை நம்மள அடிச்சுகிட்டு போயிட்டோ… நான் தண்ணியில விழுந்து மூழ்கி செத்துப் போயிட்டேனா…?
அச்சச்சோ…. அப்போ நான் செத்துப் போயிட்டேனா…?” என்று ஒரு நிமிடம் அப்படியே அசையாமல் தனது கனவுகளையும், தனது நண்பர்களையும், இல்லத்தில் உள்ள சிறுவர் முதல் முதியோர்கள் அனைவரையும் நினைத்து அவர்களின் பிரிவை எண்ணிப் பார்த்து கவலையில் கண் கலங்கத் தொடங்கினாள்.
பின்பு தன்னை தேற்றிக் கொண்டு தான் எங்கு இருக்கின்றோம் என்ற ஆராய்ச்சியில் இறங்கி மனதில் ஒவ்வொன்றையும் நினைத்து இதுவாக இருக்குமோ… அதுவாக இருக்குமோ என்று சிந்திக்கலானாள்.
இதில் “செத்தா… எங்க போவன்…. சொர்க்கத்துக்கா….? நரகத்திற்கா…….? நான் தான் ஒரு தப்பும் பண்ணலையே….! அப்ப சொர்க்கத்துக்கு தான் போவேன்…. சொர்க்கம் எப்படி இருக்கும்…? இப்படி இருட்டகவா இருக்கும்…?
“ஒரு வேலை இருக்குமோ…! யாருக்குத் தெரியும்… சரி கொஞ்சம் நேரம் இருந்து பார்ப்போம் என்ன நடக்குதுன்னு…” இருக்க இருக்க நேரம் நகர்ந்து போனது மட்டும் தான் மிச்சம்.
கடலில் விளையாடிய களைப்பு வேறு அத்துடன் கடலில் மூழ்கி எழுந்து இருந்ததில் உடைகள் வேறு ஈரமாக இருந்தது.
மயக்கத்தில் இருந்து எழும்பியதிலிருந்து தலை வின் வின் என்று வலித்துக் கொண்டிருந்தது. இன்னும் முழுதாக மயக்கம் தெளியவில்லை.
உடல் முறித்துப் போட்டது போல் மிகவும் களைப்பாக உறக்கத்தை நாடியது.
அந்த இருள் வேறு அவளது பயத்தை சற்று கிளப்பி விட கண்களை மூடி சிறிது நேரம் சிந்தித்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.
எவ்வளவு நேரம் உறங்கி இருப்பாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
கண் விழித்துப் பார்த்த போது மீண்டும் அதே இருள் தான் அவள் கண் முன்னே வந்து நின்றது. மெதுவாகத் தட்டுத் தடுமாறி எழுந்து ஏதாவது தெரிகிறதா என்று கையினால் ஒவ்வொன்றையும் தேடத் தொடங்கினாள்.
கைக்கு எட்டிய தூரத்தில் ஒன்றுமே தென்படவில்லை, உணரவும் இல்லை.
“கடவுளே என்ன சோதனை இது… ஒருவேளை கனவாக இருக்குமோ..! கனவில் நான் இருளில் மாட்டிக் கொண்டது போல… கனவு தான் கண்டு கொண்டிருக்கின்றேன்… அப்படியாகத்தான் இருக்கும்… ” என்று நினைத்தபடி அப்படியே வெறும் தரையில் அமர்ந்து இருந்தாள்.
“ஒரு கனவு இவ்வளவு நேரம் நீண்டு கொண்டிருக்குமா…? அப்போ இது கனவாக இருக்க முடியாது…” என்று கையில் கில்லிப் பார்த்தால் ஆஹ்…. வலிக்கிறதே…” அப்படி என்றால் இது கனவும் இல்லை.
அந்த இருள் அவளை மனதளவில் மிகவும் பயத்தை ஏற்படுத்தியது. சற்று நேரத்தில் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “யாராவது இருக்கீங்களா…?. ஹலோ…. சார்….. மேடம்…. யாராவது இருக்கீங்களா…? ஹெல்ப் மீ ப்ளீஸ்…..”. என்று பெரிய சத்தமாக கத்தத் தொடங்கினாள்.
கத்தி கத்தி ஓய்ந்து போய் ஒரு கட்டத்துக்கு மேல் அமைதியாகி விட்டவள், இதற்கு மேல் கத்த முடியவில்லை. தொண்டை வறண்டு காய்ந்து போய் விட்டது.
கடலில் மூழ்கிய போது உப்பு நீரை அதிகளவு குடித்ததால், தொண்டை காய்ந்து தற்போது கத்தியதாலும் நா வறண்டு போனது. நீர் எங்காவது கிடைக்குமா என்று சுற்றும் முற்றும் கைகளால் துலாவித் தேடினாள். இருந்தும் ஒரு பயனும் இல்லை. “இவ்வளவு நேரமும் கத்தியும் பிரயோஜனம் இல்லை… என்னோட எனர்ஜி தான் சும்மா வேஸ்ட் ஆகுது…” என்று வாய் திறந்து புலம்பத் தொடங்கினாள்.
ஒரு கட்டத்துக்கு மேல் இயலாமல் அவளது கண்களில் தன்னை அறியாமல் நீர் சொட்டத் தொடங்கியது.
நேரமும் சென்று கொண்டிருக்கு, ஆனால் நான் எங்கு மாட்டி இருக்கின்றேன் என்று தெரியாமல் அவள் மனதளவில் பயத்துடன் சோர்ந்து போகத் தொடங்கியவள் பசி, தாகம் அத்துடன் இயற்கை வேறு அவளை அழைத்துக் கொண்டே இருந்தது. இது இரவா… பகலா என்று ஒன்றும் புரியவில்லை. இரவு இவ்வளவு நேரமும் நீண்டு கொண்டிருக்குமா…
அதுவும் அவளுக்கு பெரும் ஆச்சரியமாகவே இருந்தது.
இவை அனைத்தையும் இரு கண்கள் பார்த்து கொடூர புன்னகையுடன் ரசித்துக் கொண்டு இருந்தன.
சரியாக இரண்டு நாட்கள் கடந்து கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அவளது கண்ணில் அப்போது தான் இரண்டு நாட்கள் கழித்து வெளிச்சம் பட்டது. வெளிச்சத்தை கண்டு கண்கள் திறக்க மறுத்து கூசத் தொடங்கின.
கண்களை இரு கையாலும் அழுத்தி துடைத்து, இமைகளை சிமிட்டி சிமிட்டி மூடித் திறந்து ஒருவாறு முழுதாக கண்ணை திறந்து கதவை திறந்தது யார் எனப் பார்த்தாள்.
ஆறடிக்கு மேலான உருவம் ஒன்று அவளை நெருங்கி வந்தது. அவ்வுருவத்தைப் பார்த்து பயந்து பின்னால் நகர்ந்து போனவள், “யார் நீ…ங்…க… கிட்ட வராதீங்க…. நீங்க யாருன்னு முதல் சொல்லுங்க… ப்ளீஸ் கிட்ட வராதீங்க. எனக்கு பயமா இருக்கு….” என்று கூறியதும் சற்று நடையை நிறுத்திய அந்த உருவம் பின்பு மீண்டும் நடந்து வந்து, அவளின் இரு கைகளையும் பிடித்து தூக்கித் தர தர என அந்த அறையை விட்டு வெளியே இழுத்து வந்தது.
வெளியே வந்ததும் மீண்டும் கண்களை கசக்கி சுற்றும் முற்றும் கண்களை சுழற்றிப் பார்த்தால், அழகிய பெரிய அரண்மனை போல கண்ணாடிகளினாலும், பளிங்கு கற்களினாலும் உயர்ந்து மேலோங்கி வண்ணமயமாக காட்சியளிக்கும் அந்த பங்களாவைக் கண்டு அவள் கண்களால் வியந்து தான் போனாள்.
அவளது கண்களின் பார்வையில் அந்த வியப்பு நன்கு பிரகாசத்துடன் வெளிக்காட்டப் பட்டது. அதனைப் பார்த்து அவ்வுருவம் ஏகத்தாளமான ஒரு சிரிப்பினை ஏந்தி கொண்டு அவளின் கண்கள் முன் சொடக்கிட்டு தன்னை பார்க்கச் சொல்லி அவளது சிந்தனையை குழைத்தது.
அப்போது தான் அங்கிருக்கும் உருவத்தை அவள் திரும்பிப் பார்த்தாள். “ஆறடிக்கு மேல் உயர்ந்தவன்…., அத்துடன் தலையில் சிறு முடி கூட இல்லை…. இப்போது தான் மொட்டை அடித்திருப்பான் போல…. சிவப்பு நிற கண்கள், முகத்தில் மீசையும் தாடியும் வளர்ந்து, பார்ப்பதற்கு ஒரு சைக்கோ போல இருந்தான்.
இதற்கு முன் இவனை நான் எங்கும் பார்த்ததில்லையே…! எதற்காக என்னை கடத்தி வைத்திருக்கின்றான்… ஏதும் காசு பணம் கேட்கவோ…! காசு பணம் என்று என்னிடம் கேட்டால், அதை விட பெரிய காமெடி இந்த உலகத்தில் இல்லை…. நானே இல்லத்தில் தான் வளர்கிறேன்…. எனக்கே எதுவும் நடந்தால் கேட்க யாரும் இல்லை… அந்த அன்பு இல்லம் தான் என்னுடைய ஒரே சொத்து அப்படி இருக்கிற என்னை ஏன் கடத்த வேண்டும்….,”
“ஆள் மாறிக் கடத்தி இருப்பான்…. நான் யார் என்று அவனுக்கு முழுவதும் சொன்னால், அவன் என்னை விட்டு விடுவான்…” என்று நினைத்தவள் அவனிடம் பேசி எவ்வாறாவது தன்னிலை உணர்த்த வேண்டும்.
உணர்த்தி இங்கிருந்து எப்படியாவது சென்று விட வேண்டும் என்று சிந்தித்து தன் பயத்தை ஒதுக்கி வைத்து விட்டு, சிறு தயக்கத்துடன் தனது மனக் கதவை அவனிடம் திறக்க எண்ணி பேசத் தொடங்கினாள்.
“சா…..ர்… நீ…ங்…க நினைக்கிற மாதிரி நான்…..” என்று கூறிக் கொண்டு இருக்கும் போது அவளது கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விழுந்தது.
என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்று அறியும் முன்னே அவளது கண்ணம் சிவந்திருந்தது.
‘அப்படி என்றால் என்னை அறைந்து விட்டானா…? என்று கண்ணில் கண்ணீர் குலங்கட்டி வழியத் தொடங்கியது.
இளஞ்செழியனோ ருத்ர தாண்டவம் ஆடுவது போல் அருகில் இருந்த பூச்சாடியை எடுத்து சுவற்றில் எறிந்தான். ஆம் அந்த உருவம் இளஞ்செழியனே தான். அவனது அந்தக் கோபம் ஸ்ரீநிஷாவை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
உடல் பயத்தின் வீரியத்தால் நடுங்குவது வெளிப்படையாகவே விளங்கியது. அப்படியே கன்னத்தை தடவிய படி இருந்தவளது அழுகை அவனை மீண்டும் அதிக கோபத்தை தூண்டத் தொடங்கியது.
“ஏய் இங்க பார்… நீ என் முன்னாடி வாயை திறக்க கூடாது… அப்படி உன் வாயில இருந்து ஒரு வார்த்தை வந்துச்சு…. உன் உடம்புல உசுரு இருக்காது…. அந்த பூச்சாடியை போல உன்னையும் சுக்குநூறா ஆக்கிருவேன் மைண்ட் இட்…” என்று ஆக்ரோசமாக கத்தினான் இளஞ்செழியன்.
பூச்சாடி உடைந்த சத்தம் கேட்டு ராமையா இளஞ்செழியனுக்கு அருகில் வந்து “தம்பி..! என்னப்பா இது…” என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.
அப்போதுதான் அங்கு நிற்கும் ஸ்ரீநிஷாவை கவனித்தார். ஒரு சிறு சந்தேகத்துடன் “யார் தம்பி இந்தப் பொண்ணு….” என்று கேட்க, இளஞ்செழியன் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு, அவளிலிருந்து பார்வையை எடுத்து ராமையாவை திரும்பிப் பார்த்து,
“ராமையா இந்தப் பொண்ணு இனிமே இங்கதான் இருக்கும்… அவளுக்கு தேவையான எல்லா வசதியும் செய்து கொடுங்க…. அதோட இங்கே இனிமேல் எந்த வேலையும் நீங்க செய்யக் கூடாது…. சமையல்ல இருந்து வீடு சுத்தம் செய்வது, தோட்ட வேலைகள் என எல்லா வேலைகளும் இவள் தான் இனி செய்வாள்….. இந்த வீட்டை விட்டு இவ எங்கேயும் போகக்கூடாது…” என்று கூறிவிட்டு வேக நடையுடன் மாடிப்படிகளில் பாய்ந்து ஏறிச் சென்றான்.
ஸ்ரீ நிஷாவுக்கும் என்ன நடக்கின்றது என்று ஒன்றும் புரியவில்லை. ‘வெளியே இழுத்து வந்தான், அறைந்தான், பூச்சாடியை எரிந்து உடைத்தான், காச்சி மூச்சின்னு கத்தினான், அருகில் இருக்கும் வயதானவரிடம் எதனையோ கூறிவிட்டு சென்றுவிட்டான்.. யார் இவன்…? நான் எங்காவது இது வரைக்கும் அவனை பார்த்திருக்கின்றேனா…? ஏன் என்னை அறைய வேண்டும்… சைக்கோ கொலைகாரனோ…!
ஐயையோ எப்படியாவது இங்கிருந்து நான் தப்பித்து செல்ல வேண்டும்…. அன்பு இல்லத்தில் என்னை தேடிக் கொண்டிருப்பார்கள்…. எப்படியாவது இந்த வயதானவர் ஏமாற்றி விட்டு சென்றுவிடலாம்…’ என்று சிந்தித்து கொண்டு இருந்தாள்.
ராமையா அருகில் வந்து அவளது கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு “என்னம்மா யோசிக்கிற… பசிக்குதா…?” என்று வாஞ்சையுடன் கேட்டார்.
அவரது வார்த்தைகளில் அன்னையின் அன்பை உணர்ந்தவள் உண்மையிலேயே குலுங்கி குலுங்கி அழத் தொடங்கினாள்.
“இப்படியே அழுதுட்டு இருந்தா சரியா மா….” என்று ராமையா கூறிக் கொண்டிருக்கும் போதே மேலிருந்து வேறு உடை மாற்றிக்கொண்டு இளஞ்செழியன் அவள் அருகில் கோபம் கக்கும் பார்வையுடன் வந்தான்.
என்ன நடக்கப் போகின்றது என்று புரியாமல் பயத்துடன் அவளது இதயமோ படபட என அடிக்க, கைகளை பிசைந்தபடி தலையை குனிந்து, அவன் அருகில் வர வர இரண்டு அடி பின்னோக்கி கால்களை வைத்து நின்றாள்.
இளஞ்செழியன் ஸ்ரீநிஷாவை தாக்குவதற்கான காரணம் யாது….?