நாணலே நாணமேனடி – 14

5
(4)

திருமணம் நல்லபடியாக முடிந்து, சம்யுக்தா நந்தனின் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டாள்.

வர முன்பு, கண்களில் கண்ணீர் சொரிய நின்றிருந்த தாயைக் கட்டியணைத்து ஆயிரம் பத்திரங்கள் கூறிவிட்டு வித்யாவிடம் கண்ணசைவில் விடை பெற்றுக் கொள்ள மறக்கவில்லை.

வந்தவளை புகுந்த வீட்டு சாம்பிரதாயங்கள், சடங்கு முறைகள் என படுத்தி எடுத்தனர், வீட்டில் கூடியிருந்த யதுநந்தனின் நெருங்கிய சொந்தங்கள்.

யதுநந்தன் தன்னை சாதாரணமாகக் காட்டிக் கொள்ள பெரிதும் பாடுபட்டான். ஒவ்வொரு நிகழ்விலும் பல்லவியின் நினைவுகள் மேலெழுவதைத் தவிர்க்க முடியாமல் தவித்துப் போனவன் இடையிடையே சம்யுக்தாவின் கரங்களை அழுந்தப் பற்றி, நிதர்சனத்தை தன் மனதுக்குப் புரிய வைக்க முயன்றான்.

அந்நேரங்களில் யுக்தாவின் பார்வை தன் மீது புரியாத பாவனையில் படிவதை உணர்ந்து,  கூடியிருந்தவர்களைக் கண்காட்டி சிரித்து சமாளித்ததெல்லாம் வேறு கதை!

அவனது அருகாமையும், அவன் அடிக்கடி கரங்களைப் பற்றிக் கொடுத்த அழுத்தமும், ‘நான் இருக்கிறேன். இனி வாழ்நாள் பூராகவும் உன்னுடன் இருப்பேன்..’ என்ற ஆறுதலை தான் கேட்காமலே அவன் அளித்தது போன்ற பிரமையைத் தோற்றுவித்தது அவளுக்குள்.

மனதின் பாரங்கள் மெல்லக் கனம் குறைவதாய் உணர்ந்தவள், அதன் பிறகு தான் கடமைக்கே என முகத்தில் அணிந்து கொண்டிருந்த புன்னகையெனும் முகமூடியைக் கழட்டி எறிந்து விட்டு உண்மையாக முறுவலித்தாள்.

கிருஷ்ணமூர்த்தி பிடிவாதத்தினால், வீட்டைச் சுற்றி அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த தோட்டத்தில் நிற்க வைத்து மணமக்கள் இருவரையும் புகைப்படம் எடுத்துத் தள்ளினர், ஆதவனின் அழைப்பின் பேரில் வருகை தந்திருந்த போட்டோகிராஃபர்கள்.

யதுநந்தனின் பொறுமை மெல்ல காற்றோடு மாயமாகிக் கொண்டிருந்த நேரத்தில்,

“உனக்கு வேணா இது மறுமணமா இருக்கலாம்! ஆனா மருமகளுக்கு அப்படி இல்லடா நந்தா. மத்தவங்களோடது போல என் கலியாணம் நடக்கலையேனு அவ என்னைக்கும் கவலை பட்டுறக் கூடாதுனு தான் இவ்ளோத்தையும் செய்றேன். புரிஞ்சிக்குவேனு நம்புறேன்!” என கை பற்றி விளக்கம் தந்துவிட்டு சென்றார், மூர்த்தி.

யதுநந்தனுக்கும் தந்தை கூறியதில் இருந்த உண்மை புலப்பட்டதும், புகைப்படங்களுக்கு சற்று நல்ல விதமாகவே சிரித்து போஸ் கொடுத்தான்.

எல்லாம் நல்லபடியாக நிறைவுற்று விட, புகைப்படத்துக்காக தன் தோளோடு ஒட்டி நின்றவளை விட்டு மெல்ல நகர்ந்தவன், “ரொம்ப படுத்திட்டாங்களா சம்மு?” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டு வைக்க,

“என்னால முடியல..” என அலுத்துக் கொண்டாள் யுக்தா. ஆனால் உள்ளுக்குள் மனம் குத்தாட்டம் போட்டு துள்ளித் திரியாமல் இல்லை.

ஆரம்பத்தில் கடுவன் பூனை போல் முகத்தை வைத்திருந்தவன், மூர்த்தி எதையோ காதில் கிசுகிசுத்து விட்டுச் சென்ற பிறகு தான் கொஞ்சமாவது சிரித்தான் என்பதை அவளும் மனதில் குறித்துத் தான் வைத்திருந்தாள்.

எது எப்படியோ, கைகூடிய இனிய தருணங்களை எண்ணி அவளுக்கு அதீத சந்தோஷமே!

அங்கு வந்த கிருஷ்ணமூர்த்தியின் ஒன்றுவிட்ட சகோதரி, “ரொம்ப டயர்ட் ஆகிட்டேல? நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோம்மா..” எனப் புன்னகை முகமாகக் கூற,

“போ சம்மு. போய் ரெஸ்ட் எடு! ரொம்ப சோர்வா தெரியிற..” என்றவன் ஒலிக்கத் தொடங்கிய அலைபேசியை எடுத்துக் கொண்டு சற்று தள்ளிச் சென்றான்.

எங்கு செல்வதென்று தெரியாமல் சங்கடத்துடன் கை பிசைந்து நின்றிருந்தவள், “வாங்க அண்ணி. நான் கூட்டிட்டு போறேன்..” என்று ஆபத்பாந்தவனாக கரம் நீட்டிய கீர்த்தனாவைப் பின் தொடரப் போக,

“மம்மீஈ..” என வீறிட்டு அழுதாள், ஆதவனின் கையில் துள்ளிக் கொண்டிருந்த யுவனி.

‘அடடே! இவளை எப்படி மறந்தேன்?’ என்று நினைத்தவளின் இதழ்களில் புன்னகை அரும்பியது.

இவ்வளவு நேரமும் மம்மியிடம் செல்ல வேண்டுமென சிறியவள் செய்த அலப்பறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. திருமண சடங்குகள் சரிவர நிறைவு பெறட்டும் என அவளின் அடிகடிகளைப் பொறுத்துக் கொண்டு சமாளித்த பெருமை ஆதவனுக்குரியது!

“இருங்க கீர்த்தனா..” என்று கூறிக் கொண்டு ஆதவனை நெருங்க, சட்டென்று தாவி, அன்னையின் நெஞ்சில் முகம் புதைத்திருந்தாள் யுவனி.

அவள் சாய்ந்திருந்த தோற்றமும், யுக்தாவை இறுக அணைத்திருந்த விதமும் சிறியவளின் இவ்வளவு நேரத் தவிப்பை பட்டவர்த்தனமாய் பறைசாற்ற, தீ பட்டு உருகிய ஈயம் போல் சட்டென மனம் இளகியது பாவைக்கு.

“அந்த பொண்ணு கூட யுவனி ரொம்ப நல்லா ஒட்டிக்கிட்டா. நம்ம நந்தனுக்கு இவளுக்கும் கொஞ்சநாள் பழக்கமா தான் இருக்குமா என்ன?” என அருகில் யாரோ கிசுகிசுப்பது மெலிதாய் யுக்தாவின் காதிலும் விழ,

‘இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு!’ என எரிச்சல்பட்டபடி மெல்ல தன் பார்வையை சுழற்றினாள்.

அங்கிருந்த ஓரிருவரை அன்றி வேறு யாரையும் யதுநந்தன் அறிமுகம் செய்து வைத்திருக்கவில்லை என்பதால், கிசுகிசுத்த பெண் யாரென்று தெரியாமல் போனது அவளுக்கு.

அப்போது அலைபேசியுடன் அவளருகில் வந்து நின்ற நந்தன், “யா ஷ்யூர்! ஐ’ல் பீ தேர் இன் டுவேண்டி மினிட்ஸ்..” என்று பரபரப்புடன் கூறி அழைப்பைத் துண்டிக்க,

“யாரு ஃபோன்ல?” என்று யுவனியின் தலை வருடியவாறு வினவினாள்.

பேசுபவர்கள் எதையேனும் பேசிக் கொண்டே தான் இருக்கப் போகிறார்கள். அதுக்கெல்லாம் அஞ்சுவானேன் என வேண்டுமென்று தான் உரிமையுடன் வினா எழுப்பியிருந்தாள், யுக்தா.

அவள் சமூகத்தைக் கண்டு அஞ்சி ஒடுங்கும் ரகமல்ல. மாற்றமாக சமூகத்தை தைரியமாக எதிர்கொண்டு, பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு கடந்து செல்ல வேண்டும் என எண்ணும் சிந்தனைப் போக்குடையவள்!

நந்தனும், அவள் அத்தனை பேர் முன்னிலையில் கேள்வி கேட்டதைப் பெரிதாக கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

சாதாரணமான முக பாவனையுடன், “வேண்டப்பட்டவங்க தான். நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன் சம்மு..” என்றவன் யுவனியின் கன்னம் தட்டிவிட்டு அங்கிருந்து செல்ல, சிறியவளுடன் கீர்த்தனா கைகாட்டிய அறைக்குள் புகுந்து கொண்டாள் சம்யுக்தா.

சகல வசதிகளுடன் காணப்பட்ட அவ்வறை அவளைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. தன் மொத்த வீட்டின் வசதிகளை கூட்டி கழித்துப் பார்த்தாலும், இவ்விடத்தின் பரப்பளவுக்கு ஒப்பாகுமா என்ற மாபெரும் சந்தேகம் உதயமானது, அவள் மனதில்.

கட்டில் பஞ்சணை உறையிலிருந்து, சுவர் பெயின்டிங், திரைசீலைகள் என அனைத்தும் இண்டிகோ மற்றும் வெள்ளை நிறத்தினால் காட்சியளித்தது, அவளின் ரசனை உணர்வுக்கு விருந்தாய் அமைந்தது.

கீழ்க் கண் பார்வையின் மூலம் யுவனி உறங்கிப் போயிருப்பதை உறுதி செய்து கொண்டவள், அவளை மெல்லக் கட்டிலில் கிடத்திவிட்டு வித்யாவுக்கு அழைப்பு விடுத்தபடி பேல்கனிக்கு நடை போட்டாள்.

“சொல்லுடி! அங்க எல்லாம் ஓகேவா?” என அழைப்பை ஏற்றதுமே விசாரணையில் இறங்கினாள் வித்யா.

“எல்லாம் ஓகே தான். எனக்கு அம்மாவோட நினைப்பாவே இருக்கு வித்யா.. நீ எங்க?” என பேச்சைத் துவக்கி வைத்தவள், துணிப்பையுடன் வித்யா தன் வீட்டுக்கு வந்து விட்டாள் என்பதை அறிந்த பிறகே நிம்மதி அடைந்தாள்.

திருமண வீடு என்றபடியால் சொந்தங்கள் வருவதும் போவதுமாக இருக்க, அவர்களைக் கவனிக்க பார்வதியும் கூடவே வந்து விட்டார் என்ற தகவல் மேலும் ஆசுவாசத்தைக் கொடுத்தது, அவளுக்கு.

‘ஆனால் எத்தனை நாளைக்கு இப்படியே சமாளிக்க போற?’ என்ற கேள்வி மனதினுள் இயல்பாய் எழ, இதைப் பற்றி நந்தனிடம் மீண்டுமொரு தடவை பொறுமையாகப் பேச வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டாள்.

சற்று நேரம் தோழியுடன் அளவளாவி மகிழ்ந்தவள் அழைப்பைத் துண்டித்து விட்டு வந்து கட்டிலில் சரிந்தது வரை தான் நினைவில் இருந்தது.

களைத்துப் போயிருந்த உடம்பும், உயிரும் அவளை நல் உறக்கத்தில் ஆழ்த்திவிட, உலகம் மறந்து துயின்றவள் நந்தனின் குரல் மிக அருகே கேட்பது போல் தோன்றவும் தான் அடித்து பிரட்டிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

“உஃப்! எழுந்துட்டியா?” என மலைப்புடன் கேட்டவனுக்கு பெருமூச்சுடன், கூடவே சிரிப்பும் வந்து தொலைத்தது.

எவ்வளவு நேரமாக அவளை எழுப்பப் போராடிக் கொண்டிருக்கிறான் என அவன் மட்டுமே அறிவான். திருமண வேலைகளில் உறக்கத்தை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டாள் எனப் புரிந்து கொள்ள முடிந்தாலும் அவளை எழுப்பியாக வேண்டிய கட்டாயம்!

நெஞ்சில் பூங்கொடியாய் சரிந்திருந்த சிறியவள் அங்கிங்கு உருண்டு விழுந்து விடாமல் இருப்பதற்காக, அவளைச் சுற்றி இருகைகளால் அணை கட்டியபடி யுக்தா படுத்திருந்த தோற்றம், அவனுக்கு வியப்பைக் கொடுத்தது.

அவள் திடுக்கிட்டு படக்கென்று எழுந்து அமர்ந்ததும் யுவனி சிணுங்கத் தொடங்கிவிட, அவளைத் தட்டிக் கொடுத்தபடி அறைக்குள் கண்களை சுழற்றியவளுக்கு தான் எங்கிருக்கிறேன் எனப் புரியவே சில நொடிகள் தேவைப்பட்டது.

இடம், பொருள் உணர்ந்ததும் நுனி நாவை கடித்து விடுவித்தவள், இடுப்பில் கைகுற்றி தன்னைப் பார்த்திருந்தவனை ஏறிட்டுப் பார்க்காமலே, “ஹாய்ங்க..” என அசடு வழிந்தாள்.

சிரித்துக் கொண்டே, “பிரெஷ் ஆகிட்டு கொஞ்சம் வெளிய வர்றியா? தெரிஞ்சவங்க வந்திருக்காங்க..” என்றவனின் பார்வை, அவள் அணிந்திருந்த பட்டுச் சேலையில் பதிந்து மீண்டது.

“இதோ வந்திடறேன்..” என்று கூறிக் கொண்டு மெல்ல எழுந்து நின்றவள் அப்போது தான் கட்டிலின் ஓரத்தில், ட்ரான்ஸ்பேரன்ட் கவரினுள் பல்லிளித்த லாவண்டர் நிற ஷிஃபான் சேலையைக் கண்ணுற்றாள்.

அதன் பளிச்சென்ற நிறத்தில் மெய் மறந்து, “வாவ்!” என்றவள் விரிந்த கண்களோடு ஏதோ கேட்க வருவதற்குள், யதுநந்தன் புன்னகை முகமாய் அங்கிருந்து வெளியேறி இருந்தான்.

“சொல்ல வர்றதைக் கேட்காம போற அளவுக்கு என்ன அவசரம் இவருக்கு?” என கடுப்புடன் முணுமுணுக்க மட்டுமே முடிந்தது அவளால்.

அவன் சென்ற சற்று நேரதுக்கெல்லாம் கதவைத் தட்டிக் கொண்டு கீர்த்தனா உள்ளே நுழையும் போது, முகத்தில் நீர் சொட்டச் சொட்ட, கையில் சேலையோடு அமர்ந்திருந்தாள் சம்யுக்தா.

“வா கீர்த்தனா!”

“நான் அப்போவே வந்தேன் அண்ணி. நீங்க தூங்கிட்டு இருந்திங்க. சரிதான், ரெஸ்ட் எடுக்கட்டுமேனு சேலையை வைச்சிட்டு நான் போய்ட்டேன்..”

“ஆமா.. டயர்ட்டா இருந்துச்சு!” என்றவளுக்கு முகத்தை எங்கு வைப்பதென்று புரியவில்லை.

அதீத களைப்பின் காரணமாக, கீர்த்தனாவை அழைத்து தன்னுடைய சூட்கேஸ்கள் எங்கே எனக் கேட்க சோம்பேறித் தனப்பட்டு அப்படியே உறங்கிப் போன தன் லட்சணம் அழகோ அழகு என வஞ்சப்புகழ்ச்சி அணியில் தன்னையே இகழ்ந்து கொண்டவள்,

“அதுக்கென்ன அண்ணி? இப்போ உங்க முகத்துல சோர்வு நீங்கி தனிப் பொலிவு தெரியுது. நீங்க ரொம்ப டயர்ட்டா இருந்த மாதிரி எனக்குமே புரிஞ்சிது.” என்றவளைப் பார்த்து ஆமென்று தலை அசைத்தாள்.

“ஆமா, இந்த சேலை உங்களுக்கு புடிச்சிருக்கா அண்ணி?”

“அழகா இருக்கு. ஆனா நான் இப்போ ஸாரியா கட்டிக்கணும் கீர்த்தனா?”

“ஆமாங்க அண்ணி!”

“ஐயோ, நான் ஸாரி கட்டப் போனா ரொம்ப நேரமாகுமே! தெரிஞ்ச யாரோ வந்திருக்காங்கனு அவர் வேற அவசரமா வானு சொல்லிட்டு போனாரு..”

திடீரென வருத்தத்தை தத்தெடுத்துக் கொண்ட கீர்த்தனாவின் முகம், அடுத்த நொடி ‘அந்த வருத்தம் பொய்யோ’ என சிந்திக்க வைக்கும்படி சட்டென்று இயல்புக்கு திரும்பியது.

“இன்னைக்கு ஒருநாள் நானே கட்டி விடறேனே அண்ணி..” என்றவள் அடுத்த இருபதாவது நிமிடத்தில் மடிப்பெடுத்து சேலையை கணகச்சிதமாக கட்டி முடித்திருக்க,

“நன்றி கீர்த்தனா!” என மனம் நிறைந்து நன்றி நவின்ற யுக்தா, கண்ணாடியில் தன்னைப் பார்த்து திருப்திபட்டுக் கொண்டு அறைவிட்டு வெளியே வந்தாள்.

கூடத்தில் ஐம்பதுகளைத் தாண்டியிருந்த ஒரு தம்பதியுடன் இளம் யுவதியொருத்தி அமர்ந்திருக்க, அவர்களுடன் சகஜமாக உரையாடிக் கொண்டிருந்தான் நந்தன்.

அறையைத் திறந்து கொண்டு வெளியே வந்தவளைக் கண்டதும் அவனுடன் உரையாடிக் கொண்டிருந்த, இருபதுகளின் தொடக்கத்தில் இருந்த அப்பெண் எழுந்தோடி வந்து, என்ன ஏதென்று சுதாகரிக்க முன்னரே,

“கங்ராஜுலேஷன்ஸ் அக்கா!” என்ற வாழ்த்தோடு யுக்தாவை இறுக அணைத்திருந்தாள்.

தடுமாறிப் பின் நகர்ந்தவள், கண்களை உருட்டி நந்தனைப் புரியாத பார்வை பார்த்து வைக்க, அவன் ஏதோ கூற வருவதற்குள் மெல்ல விலகி நின்றவளின் கண்கள் கண்ணீரினால் பளபளத்தன.

அந்த ஈரளிப்புக்கான காரணம் என்னவெனப் புரியாமல் முழித்து நின்றாள் சம்யுக்தா.

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா! குறை சொல்றதுக்கில்ல. உங்க செலெக்ஷன் எப்போவும் சூப்பர் தான் மாமா..” என யுக்தாவிடம் தொடங்கி நந்தனிடம் முடித்தவளின் முகமதில் உண்மையான மலர்ச்சி தெரிந்தது.

சமாளிப்பாக தலை அசைத்தவன், “இவ பிரகதி. என்னோட கிளோஸ் ஃப்ரெண்டு! பல்லவியோட சிஸ்டர். இவங்க அவளோட அம்மா, அப்பா..” என அவர்களை அறிமுகம் செய்து வைக்க,

“வணக்கம்!” என கை கூப்பியவளின் மனம், சந்தோஷம் குன்றி, சோர்வில் தொட்டாற்சிணுங்கியாய் வாடிப் போனது.

வந்திருந்த பெண்மணி, யுக்தாவை நோக்கி மேலிருந்து கீழாக ஒரு ஆராய்ச்சிப் பார்வையை செலுத்திவிட்டு, திருப்திகரத் தலை அசைப்புடன்,

“ஏன்மா நின்னுட்டு இருக்க? வா, வந்து உட்காரு..” என்றிட, மறுப்பதற்கு வழியின்றி, கருமை படிந்த முகத்தோடு சென்று சோபாவில் அமர்ந்து கொண்டாள் யுக்தா.

உரையாடல்கள் தொடர்ந்தன. யுக்தாவுடைய பாட்டனின் பூர்வீகம் என்ன என்பது வரை பேச்சு வளர்ந்தது.

‘ஐயோ, போதும்! என்னை விட்டுடுங்களேன்!’ என எழுந்து நின்று சத்தம் வைக்கும் நிலையில் பொறுமை இழந்து நின்றிருந்தவளுக்கு, அக்கா அக்கா என மூச்சுக்கு முன்னூறு தடவைகள் உச்சரிக்கும் பிரகதியைப் பிடிக்காமல் போயிருந்தால் தான் அதிசயம்!

‘பல்லவியும் இப்படித் தான் கொழுகொழு கன்னங்களோட ரொம்ப அழகா இருப்பா போல! துறுதுறுனு இருக்கா அவ தங்கச்சி..’ என்று நினைத்தவள், ‘அப்போ பல்லவியோட துறுதுறுப்பு தான் யுவனிக்கும் வந்திருக்கு போல..’ என உறுதி செய்து கொண்டாள்.

வாய் வலிக்கப் பேசிவிட்டு அவர்கள் கிளம்பும் போது, நன்றாகவே நேரம் சென்றிருந்தது.

‘ஏன் வீட்டுல யாரையும் காணோம்? அவங்க இருக்குறப்போ கூட யாரும் ஹாலுக்கு வரலியே..’ என்று நினைத்தவள், தனக்குள் உதித்த முதலாவது கேள்வியை மாத்திரம் நந்தனிடம் கேட்க,

“அவங்க தோட்டத்துல! எல்லாரும் சேர்ந்து கதை அளந்துட்டு இருக்காங்க..” என்றான் சிரிப்போடு.

‘அப்போ ஏன் அவங்க பல்லவியோட அம்மா, அப்பா வந்தும் கண்டுக்காத மாதிரியே இருக்காங்க?’ என்ற கேள்விக்கு பதில் அறிய ஆர்வம் எழுந்தாலும் ‘வம்பை விலை கொடுத்து வாங்குவானேன்?’ என வாய் மூடி அமைதியாக நகர முயன்றாள்.

அதற்குள், “நீ வர முன்னாடியே அவங்க பல்லவியோட பேரன்ட்ஸ் கிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாங்க. நான்தான் கார்டன் சைடுக்கு அவங்களை அனுப்பி வைச்சிட்டு, உன்னை ஹாலுக்கு வர சொன்னேன்..” என அவள் மனம் புரிந்தவனாய் தானே செப்பினான்.

குடும்பத்தினர் முன்னிலையில் நான் சங்கடப்பட்டு நின்று விடக் கூடாது என்பதற்காகவா அவர்களை அனுப்பி வைத்து விட்டு தன்னை ஹாலுக்கு அழைத்தான் என்ற பலமான யோசனையுடன் ‘புரிந்தது’ எனும் விதமாகத் தலை அசைத்து விட்டு நகர்ந்தாள், சம்யுக்தா.

நேரம் கழிந்தது!

அன்றிரவு, காலங்காலமாக மாறிப் போகாத பழம் சம்பிரதாய முறைகேற்ப, சாதாரண ஷிஃபான் சேலையில் ஆயத்தப்படுத்தி, கூந்தலில் மல்லிகைச் சரம் கமகமக்க, பால் சொம்புடன் யதுநந்தனின் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள், பாவை.

அறை, அலங்காரங்கள் எதுவுமின்றியே கண்ணைப் பறித்தது.

மாலையில் அவள் ஓய்வெடுத்த அறையைப் போன்றே விஷாலமானதாக.. அதே நேரம், கருநீலமும் வெள்ளையும் கலந்த நிறத்தில் மனதைக் கொள்ளை கொண்டது.

ஒருபக்கம் சுவரில், இரவு வானில் நட்சத்திரங்கள் மின்னி ஜொலிப்பது போலவும், நடு மத்தியத்தில் நிலாமகள் கண் சிமிட்டிச் சிரிப்பது போன்றும் பெயின்டிங் செய்யப்பட்டிருந்தது.

ஆடவனின் ரசனைத் தன்மைக்கு, அவள் பாரிய ரசிகையானாள், வந்த ஒரே நாளில்!

பேல்கனியிலிருந்து சிறியவளின் கலகல நகைப்பொலி கேட்க, சொம்பை மேஜை மீது வைத்தவள் காலுக்குள் சிக்கித் தடுமாற வைத்த சேலையின் மடிப்புகளை ஒரு கையால் லேசாகத் தூக்கியபடி அங்கு சென்றாள்.

அவளின் வரவை உணராது, வானவெளியை அலங்கரித்த தாரகைக் கூட்டத்தைக் கை காட்டி, யுவனியை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான் யதுநந்தன்.

“ஹ்ஹ்ம்!” என தொண்டையை செருமினாள், யுக்தா.

“வா சம்மு..” என ஆர்ப்பாட்டமில்லாத அமைதிக் குரலில் அவளை வரவேற்று, மகளைத் தாங்கிகியிருந்த கரமன்றி மற்றொரு கரத்தை அவள் புறமாக நீட்டித் தலை அசைத்தான்.

இனி சொல்லவும் வேண்டுமா.. யுக்தாவைக் கண்டதும் அவளிடம் தாவிக் கொண்டு, தந்தையைப் பார்த்து தன் பால் பற்களைக் காட்டினாள் யுவனி.

அவ்விடத்தில், ரசிக்கத் தக்கதான யுவனியின் சிரிப்பு சத்தம் மட்டுமே நிறைந்திருந்தது.

சற்று நேரத்துக்கெல்லாம் கதவைத் தட்டி, அவளைத் தன்னோடு அழைத்துச் சென்றார் கிருஷ்ணமூர்த்தி.

“என்னை விட, அப்பா கூட தான் அவ அதிகமாக தூங்குவா..” என கேட்காமலே அதற்கும் காரணம் சொல்லியவன் அவள் நீட்டிய பால் சொம்பை வாங்கி, அதில் பாதியை அருந்தி விட்டு அவளுக்கே கொடுத்தான்.

மீதிப் பாலை பொறுமையாக அருந்தி முடித்தவள் வாயைப் புறங்கையால் துடைத்து விட்டபடியே, “அது.. என்னோட சூட்கேஸ்..” என்று இழுவையாய் நிறுத்த,

“அங்க..” என அறை மூலையைக் கை காட்டினான்.

“நான் நைட்டி உடுத்திக்கலாமா? அதுல எதுவும் ப்..”

“முதல்லயே சொன்னது தான் சம்மு. ஆனா நீ தான் பாதியிலே மறந்துட்டேனு நினைக்கிறேன். இந்த மறுமணம் என் பெண்ணுக்காக மட்டுந்தான்! உனக்கு எந்த விஷயத்துலயும் தடை இருக்காது. நான் சப்போர்ட்டா இருப்பேன். உனக்கு நினைச்சதை நீ தயங்காம பண்ணலாம்..” என இடையிட்டுப் பேசினான், நந்தன்.

மீண்டுமொரு முறை இந்தத் திருமணத்துக்கான நோக்கத்தை அவன் நினைவூட்டியது மனதை வருத்தினாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்தாள் யுக்தா.

“அந்த கார்னர்ல இருக்குற கபோர்ட் எம்ட்டியா தான் இருக்கு. நாளைக்கு உன்னோட ட்ரெஸஸ் அங்க அடுக்கி வைச்சிடு சம்மு! சூட்கேஸ்ல வைச்சிருக்குறது உனக்கு அனீசியா இருக்கும்ல?” என்றவன் சுவற்றோடு பொறுத்தப்பட்டிருந்த உயர் வார்ட்ரோபைக் கை நீட்டிக் காட்டினான்.

“ம்ம்..”

“தூங்கு சம்மு!” என்றவன் பெருமூச்சுடன் கண்களை மூடிப் படுத்து விட, சற்று நேரம் பொறுத்துப் பார்த்தவள் அவனிடமிருந்து மூச்சு சத்தத்தை அன்றி வேறெந்த சத்தமும் எழாதது கண்டு,

“நான் எங்க தூங்கிக்கட்டும்?” என வினவினாள்.

“பெட் பார்க்க அவ்ளோ குட்டியாவா இருக்கு? கீழ, மேல! நீ சோபாவுல, நான் பெட்ல.. இந்த சீனெல்லாம் கிடையாது. நீ பெட்லயே தூங்கிக்கலாம்..”

அவன் கூறிய பாவனையில் சட்டென்று சிரிப்பு வந்துவிட, வாயில் கை வைத்து நகைத்தவளின் சிரிப்பு அவனையும் தொற்றிக் கொண்டது!

தன்னை இரவுடைக்குள் புகுத்திக் கொண்டு வந்து கட்டிலின் மறுமுனையில் சாய்ந்தவளுக்கு தூக்கம் வருவேனா என்றது.

நந்தன் பல்லவியின் தங்கையை தன் ‘கிளோஸ் ஃபிரென்ட்’ என அறிமுகம் செய்து வைத்த புள்ளியில் அவளது நினைவுகள் தேங்கி நின்றது.

தன்னிரு தங்கையரிடம் ஒரு நாளாவது சிரித்து என்ன.. சாதாரணமாகவேனும் இரண்டு வார்த்தைகள் பேசியதில்லையே என்ற உண்மை அவளை சுட்டு, வருத்தியது.

ஏதேதோ சிந்தித்தாள்.

சாந்தனாவின் திருமணம், சத்யாவின் படிப்பு, சாவித்திரியின் மருத்துவ செலவு.. இலவச இணைப்பாக திருமண வாழ்க்கை அவளுக்குத் தந்த பாரிய பொறுப்புக்கள்! இவை யாவும் தன்னால் நிவர்த்தியாக வேண்டியவையாயிற்றே! நினைக்கும் போதே தலை சுற்றியது யுக்தாவுக்கு.

மொத்தத்தில், அவள் இரவின் பெரும்பகுதி கழிந்து போகும் வரை உறங்கவுமில்லை. திருமண வாழ்வு அவளுக்கு நிம்மதியையோ, ஆறுதலையோ, சந்தோசத்தையோ தரவுமில்லை.

அவ்வளவே!

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!