நாணலே நாணமேனடி – 15

5
(4)

அடுத்து வந்த ஓரிரு நாட்களும் வெகு சாதாரணமாகத் தான் கழிந்து போனது, புதுமணத் தம்பதியினருக்கு.

முதல் நாளன்று இரவு நந்தன் சொன்னது போல், மறுநாளே சுவர் வார்ட்ரோபில் தன் உடைகளை நேர்த்தியாக அடுக்கி வைத்தவள் கூடவே, சற்று ஒழுங்கீனமாகக் காணப்பட்ட அவனது உடைகளையும் அழகாக மடித்து வைத்து, அவனிடமிருந்து மெச்சும் சிறு தலை அசைப்பைப் பெற்றுக் கொண்டிருந்தாள்.

வீடியோ காலில் பார்த்து வந்த மம்மியை இப்போதெல்லாம் இருபத்திநான்கு மணி நேரமும் தன் கண் முன்னே காண்பதில் குஷியோ குஷி, யுவனிக்கு!

மம்மி மம்மியென அவளைக் கட்டியணைத்து, கன்னத்தில் எச்சில் முத்தம் வைத்து கொண்டாடித் தீர்த்தாள்.

இருவரின் அந்நியோன்யம் ஆடவனை ரசிக்கத் தூண்டினாலும், மனதுக்குள் நெருஞ்சி முள்ளாய் ஒரு மெல்லிய வேதனை பரவிச் செல்லாமல் இல்லை. அந்த வலி தன் முகத்தில் பிரதிபலிக்காமலிருக்க பெரிதும் பாடுபடுவான் நந்தன்.

அநேகமாக வீட்டுக்கு வந்திருந்த உறவினர்கள் இப்போது கலைந்து சென்றிருக்க, நேற்றிரவே கீர்த்தனாவும் ஆதவனும் கூட விடைபெற்றுக் கொண்டு சென்று விட்டிருந்தனர்.

அந்த அழகிய விடியலில், காலையுணவை தயார் செய்தபடி அலைபேசி வழியே தோழியுடன் உரையாடிக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.

“சாந்தனா நேத்து முழுக்க வீட்டுலயே இருக்கல. எங்க போனனு கேட்டதுக்கு எதுவும் பதில் சொல்லாம ரூமுக்குள்ள அடைஞ்சிக்கிட்டா!” என குற்றப் பத்திரிகை வாசித்த வித்யா,

“எனக்கு கோபம் கோபமா வருது..” என அங்கலாய்க்க, இது சில நாட்களாகவே கேட்கும் வசவு வார்த்தைகள் தான் என்பதால் மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டு மிக்ஸியில் கடாயிலிருந்தவற்றைத் தள்ளி, சட்னிக்கு மிளகாய் அரைத்தாள் யுக்தா.

மிக்ஸியின் கதறல் நின்றதும், “நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் ஃப்ரீயானு அம்மா கேட்குறாங்க யுக்தா..” என அடுத்த கட்டத்துக்குத் தாவ,

“அதென்ன ஃப்ரீயானு கேட்குறது? கலியாணத்துக்கு அப்பறம் நான் வேலைக்கே போகல. நீட்டி முழக்காம என்ன விஷயம்னு கேட்டு சொல்லேன்..” என்றாள் சிரிப்புடன்.

“உனக்கில்லை. அண்ணாவுக்கு எதுவும் வொர்க் இருக்குமானு கேட்குறாங்கடி..”

“நான் கேட்டு பார்த்துட்டு சொல்லுறேன்டி. ஏன் திடீர்னு?”

“மறுவீட்டு விருந்துக்கு அழைக்கிறதை பத்தி அம்மாவும், ஆன்ட்டியும் நைட்டு பேசிக்கிட்டு இருந்தாங்க. அதுக்காகத் தான் கேட்குறாங்க போல..” என்றவள்,

“அதை விடு! நீ எப்போ வேலைக்கு வருவேனு நேத்து பாஸ் கேட்டாரு..” என்றாள் சலிப்புடன்.

“கலியாணத்துக்கு முன்தினமே ஒரு வாரம் லீவ் வேணும்னு சொல்லிட்டேனே வித்யா. அவர் சொல்லலையா என்ன?” என்று புரியாத பாவனையில் வினா எழுப்பியவள் அடுக்களைக்குள் நுழைந்த நந்தனைப் பார்த்து தலை அசைத்து விட்டு,

“கலியாணம் முடிஞ்ச கையோட வேலைக்கு வர முடியாதுனு நான் அவர் கிட்ட தெளிவா சொல்லிட்டேன். எதுக்கும் இன்னொரு வாட்டி கால் பண்ணி பேசிடவாடி?” என்று கேட்டாள்.

“நானே சொல்லிடுவேன் தான். ஆனா நீ சொன்னா பரவால்லனு தோணுது..”

“சரி! சரி! நான் பேசிக்கிறேன்..” என்றவள், சுட்டு வைத்திருந்த நெய் தோசையை விள்ளி வாயில் போட்டபடி, மிளகாய் சட்னிக்காக கிண்ணத்தை எடுத்து வைத்த நந்தனைக் கண்டு விட்டு,

“அப்பறமா பேசுறேன் வித்யா..” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

“எதுக்கு கட் பண்ணிட்ட சம்மு?” என்று வினவியவனை ஏறிட்டுப் பார்க்காமலே,

“பேசி முடிச்சிட்டா கட் பண்ண தானே செய்வாங்க? இதுல என்ன இருக்குங்க..” என இலகுவாகக் கேட்டபடி மிக்ஸியிலிருந்த சட்னியை கிண்ணத்தில் கொட்டினாள்.

“இதை எல்லாம் வழமை போல ராணி அக்காவே பார்த்திருப்பா. நீ தான் அவங்களை வேலைக்கு கூப்பிட வேணாம்னு சொல்லிட்ட சம்மு. இப்போ பாரு, உனக்கு வேலை வரிசை கட்டி நிற்குது..”

“வீட்டுல நான்தான் சமையல் செய்வேன். அடுத்தடுத்த வேலைகளையும் நானே தான் பார்ப்பேன். ஆனா இங்க வீட்டைக் கூட்டி பெருக்குற வேலை எனக்கு இல்லை. அதுனால நானே சமையலைக் கவனிச்சிக்குவேன்..

அதுவுமில்லாம மனசுக்கு புடிச்ச மாதிரி எங்க கையால சமைச்சி சாப்பிடற சந்தோசம் இருக்கே! அதை வார்த்தையால சொல்லி புரிய வைக்க முடியாது, தெரியுமா?” என நீண்ட விளக்கம் கொடுத்தபடி உணவு தட்டுகளோடு டைனிங் டேபிளுக்கு செல்ல,

“அம்மாவும் இப்படி தான்! வீட்டு வேலைக்கு எல்லாம் தனி தனியா ஆள் நியமிச்சாலும், தவறியும் கூட கிட்சேனுக்கு யாரையும் போக விட மாட்டாங்க. என் பையனுக்கும், புருஷனுக்கும் நான் என் கைப்பட சமைச்சி போடுவேன்னு சொல்லி வெரைட்டி வெரைட்டியா சமைச்சி தருவாங்க..” என இளம் பராய நினைவில் திளைத்துக் கூறியவனது முகம் புன்னகையில் விகசித்திருந்தது.

தோசையை விள்ளி வாயில் போட்டு மென்றபடி, தோசைத் தட்டை எடுத்துக் கொண்டு அவள் பின்னோடே சென்று டைனிங் மேஜையில் அமர்ந்தான்.

கூடத்தில் பத்திரிகை படித்துக் கொண்டிருந்த மூர்த்திக்கு, மகன் – மருமகளின் சகஜம் மனதை நிறைத்தது.

இருவரும் ‘நண்பர்கள்’ என மார்தட்டிக் கொள்ளும் அளவுக்கு தங்கள் உறவில் முன்னேறி விட்டிருந்ததைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது, அனுபவம் முதிர்ந்த அப்பெரியவரால்.

மகனைப் பற்றி அறியாதவரும் அல்லவே! அவ்வளவு சீக்கிரத்தில் யாரிடமும் சிரித்துப் பேசாத குணமுடையவன் யுக்தாவிடம் இவ்வளவு இயல்பாக நடந்து கொள்கிறான் என்றால்! தெளிவாகவே புரிந்தது. தொடர்கதையான இந்த உறவின் ஓட்டத்தை எண்ணித் தான் வருந்த வேண்டிய அவசியம் இல்லை என வெளிச்சமாகியது.

“மாமா, சாப்பிட வாங்க..” என மேஜையருகே நின்று நந்தனுக்கு பரிமாறத் துவங்க முன்பே குரல் கொடுத்தாள் யுக்தா.

“வர்றேன்மா..” என்றவருக்கு சிறு தலை அசைப்பை பதிலாகக் கொடுத்தவள், நாளைய தினம் அவன் வீட்டிலா அல்லது வேலை விஷயமாக எங்கேனும் வெளிக் கிளம்ப இருக்கிறானா என்பதை அறிந்து கொள்ளும் நோக்குடன்,

“பார்வதி ஆன்ட்டி நீங்க நாளைக்கு ஃப்ரீயானு கேட்டிருந்தாங்க..” என்றாள், மொட்டையாக.

“அதாரு பார்வதி ஆன்ட்டி?”

“வித்யாவோட அம்மா தான். அவங்க தங்கச்சிக்கும், அம்மாவுக்கும் உதவியா வீட்டுல இருக்காங்கனு சொல்லி இருந்தேனே..” என்றவள் சிறு இடைவெளி விட்டு,

“நீங்க எல்லாத்தையும் பார்த்துக்குறதா சொன்னிங்களேங்க! எந்த நாளும் வித்யாவையும், அவங்க அம்மாவையும் துணைக்கு வைக்க முடியும்னு தோணல. நீங்க ஏதும் ஐடியா பண்ணீங்களா என்ன?” என்று வினவினாள். தயக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது, அவளின் குரலில்.

‘நான் நார்மலா தானே பழகுறேன். இன்னும் என்ன தயக்கம் இவளுக்கு?’ என சுள் என்று கோபம் வந்தது நந்தனுக்கு.

நிமிர்ந்து அவளை முறைத்தவன், “உன் அம்மாவைப் பார்த்துக்க ஒரு நர்ஸ் நிய..” என மேற்கொண்டு பேச முன்,

“அது சரி வராது.” என இடையிட்டு அவசரமாக மறுத்த சம்யுக்தா, ‘அத்தைனு உரிமையா கூப்பிட தோணவே இல்லை. உன் அம்மாவாமே!’ என மனதினுள் பொருமித் தீர்த்தாள்.

“ஏன்?” என்றவனுக்கு யோசனையில் புருவங்கள் நெறிந்தன.

“ஏற்கனவே தலைக்கு மேல செலவிருக்கு. இன்னொரு செலவு எதுக்குங்க? அதுவுமில்லாம, அவங்க பணத்துக்காக மட்டுந்தான் அம்மாவைக் கவனிச்சுக்குவாங்க. உண்மையான அக்கறை இருக்காதுல..”

‘வாட் த ஹெல்! இவ ஏன் செலவு பத்தி யோசிக்கிறா.. நான் அதையெல்லாம் யோசிக்காம தான் முடிவு பண்ணேனா என்ன.. இங்க நான் எதுக்கு இருக்கேன்?’ என்று பற்களைக் கடித்தவன் அவளின் கூற்றிலிருந்த உண்மைத் தன்மையை அலசினான்.

இத்தனை வருடங்கள் அருகில் நின்று கவனித்துக் கொண்ட அன்னையை, இப்போது யாரென்றே தெரியாத ஒரு செவிலியின் கையில் ஒப்படைக்க அவள் விரும்பவில்லை எனப் புரிந்தது.

“என்ன பண்ணலாம்னு உனக்கு ஏதும் ஐடியா இருக்கா சம்மு?”

இடவலமாக தலை அசைத்தவள், “வித்யாவோட பேசி ஏதாவது ஐடியா கிடைக்குதானு பார்க்கறேன்..” என்றிட, உணவருந்தி முடித்து எழுந்து நின்றவன்,

“ம்ம். நான் நாளைக்கு ஃப்ரீ தான். இன்னைக்கு கோர்ட் வரைக்கும் போய் வரணும். வர லேட் ஆகும்.” என்றுவிட்டு நகர்ந்தான்.

அதன் பிறகு மூர்த்திக்குப் பரிமாறி, தானும் காலை உணவை முடித்துக் கொண்டவள் ‘நாளைக்கு ஓய்வு தான்’ என வித்யாவுக்குக் குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டபடி அறைக்குள் நுழைந்தாள்.

அப்போது தான் உறக்கம் கலைந்து சிணுங்கிக் கொண்டிருந்தாள் யுவனி.

அவளுக்கு விளையாட்டுக் காட்டியபடி வெள்ளை சட்டை, கறுப்பு பேண்ட் சகிதம், ஜெல் தேய்த்து கேசத்தை படிய வாரிக் கொண்டிருந்த நந்தன், உள்ளே நுழைந்தவளைக் கண்டுவிட்டு,

“உஃப்! வந்துட்டியா? பாப்பா உன்னைத் தான் தேடி அழறா..” என்றான், நெடு மூச்செறிந்தபடி!

அவன் கூறியதை காதில் வாங்காமல்,”அடடா! குட்டிமா.. எழுந்துட்டியா என்ன?” என்று கேட்டபடி யுவனியின் அருகே அமர்ந்தவள் ஒலிக்கத் தொடங்கிய அலைபேசியை அணைத்து வைத்தாள்.

“மம்மீ..” என்றவள் சிணுங்கி அழ, அலைபேசி மீண்டும் ஒலிப்பதைப் பொருட்படுத்தாமல், சிறியவளைத் தூக்கிக் கொண்டு குளியலறைக்கு நடந்தாள்.

“ஃபோன் அடிக்குது பாரு. என்னனு பார்க்க மாட்டியா என்ன? ஏதாவது முக்கியமான கால்’ஆ இருக்க போகுது..” என்றவனைப் பார்த்து ஆமோதிப்பாய் தலை அசைத்தவள்,

“போஸ் கிட்ட இருந்து வருது. பொறுமையா தான் பேசணும்னு அட்டென்ட் பண்ணாம இருக்கேன். ஒரு வாரம் லீவ் கேட்டிருந்தேன். ஆனா நேத்து வித்யா கிட்ட எப்போ யுக்தா வருவானு கேட்டிருக்காரு. அதைப் பத்தி பேச தான்!” என்றாள்.

தலை அசைத்தவன், சிறிது நேரத்தில் யுவனியை குளிப்பாட்டி விட்டுப் பூக்குவியலாய் துண்டில் சுற்றிக் கொண்டு வெளியே வந்தவளிடம், “கண்டிப்பா வேலைக்கு போய் தான் ஆகணுமா சம்மு?” என்று கேட்டுவிட,

“எ.. என்ன!” எனப் பெரிதாக அதிர்ந்தாள், சம்யுக்தா.

ஒரே நொடியில், அந்த துணிக்கடையின் சொச்ச சம்பளத்தை நம்பி தனக்கு இருக்கும் பற்பல பொறுப்புக்கள் யாவும் கண்முன் அணி வகுத்து, அதிர்ந்து நின்றவளைச் செயலிழக்கச் செய்தது.

யுவனியுடன் தொப்பென்று கட்டிலில் அமர்ந்தவளின் அமைதி நந்தனை யோசனைக்குட்படுத்த, ஆளுயர் கண்ணாடி வழியே மூச்சு வாங்கியபடி தலையில் கை வைத்து நின்றவளை நோக்கினான்.

“சம்மு, என்னாச்சு?”

கலங்கிய விழிகளுடன் தலை தூக்கிப் பார்த்தவள், “கடை சம்பளத்தை நம்பி எனக்கு நிறைய பொறுப்பிருக்குங்க. நீங்க ஏன் இப்படி கேட்டிங்கனு தெரியல.. நான்.. எனக்கு..” எனத் தடுமாறி விழிக்க,

“ஹேய், ரிலாக்ஸ்!” என்று கொண்டே இரண்டெட்டில் அவளை நெருங்கி தோள் தொட்டவன்,

“நீ புரிஞ்சிக்கிட்ட அர்த்தத்துல நான் சொல்லல சம்மு. உன்னை கண்ட்ரோல் பண்ண நினைக்கவும் இல்ல. போய் தான் ஆகணுமானு நார்மலா தான் உன்கிட்ட கேட்டேன். வேலை செய்துக்கிட்டு, வீட்டையும் கவனிச்சு, பாப்பாவையும் பார்த்துக்க கஷ்டமா இருக்குமோனு தான்..” என தன் பக்க நியாயத்தை எடுத்தியம்ப விழைந்தான்.

பிறகு தான் மூச்சே சீராகியது, யுக்தாவுக்கு!

தலையை இருபுறமாக ஆட்டி பலமாகப் பெருமூச்சு விட்டவள், “கஷ்டம்னு எதுவுமில்லங்க. என்னால மேனேஜ் பண்ணிக்க முடியும். சமாளிச்சுக்குவேன்.” என்றாள், குரலில் உறுதி தொனிக்க..

அதற்கு மேல் நந்தன் எதுவும் தெளிவு படுத்த முனையவில்லை. ‘வருகிறேன்’ என்றுவிட்டு கிளம்பிச் சென்றுவிட, யுவனியின் மழலைப் பாஷையை ரசிப்பதிலே நேரம் கழிந்து போனது யுக்தாவுக்கு.

அன்று மாலையில், சாவித்திரியின் சார்பில் பார்வதியிடமிருந்து அழைப்பு வந்தது மூர்த்திக்கு.

“நாளைக்கு நம்ம வீட்டு பொண்ணு, மாப்பிள்ளைக்கு விருந்து ஏற்பாடு பண்ணிருக்கோம் சம்பந்தி..” எனத் தொடங்கி முறையாக ‘இன்வைட்’ செய்து விட்டு அழைப்பைத் துண்டித்திருந்தார்.

முன் கூட்டிச் சொல்லிச் சென்றது போலே, இரவு யதுநந்தன் வீடு வரத் தாமதமாகியது.

களைத்துப் போய் வந்தவனிடம் சற்று நேரம் வேலை பற்றியும், பிற விடயங்கள் பற்றியும் உரையாடிக் கொண்டிருந்த மூர்த்தி, விடயத்தைக் கூறி, மறுநாள் இருவரையும் விருந்துக்கு அனுப்பி வைத்தார்.

கார் நிறுத்தப்பட்டதும், “வாங்க மாமா! வா யுக்தா!” என முகம் கொள்ளாப் புன்னகையோடு ஓடி வந்து வரவேற்றது சாந்தனா!

‘ஆரம்பமே அதிரடியா இருக்கே!?’ எனக் கலங்கி அமர்க்களப்பட்டதென்னவோ யுக்தாவின் மனம் தான்!

“குழந்தையை தாயேன்..” என சிறியவளை அள்ளிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தவளின் முதுகை கலவரம் படிந்த முகத்தோடு பார்த்திருந்தவள்,

“வாங்க!” என்று அழைத்துவிட்டு உள்ளே நுழைய, சூறாவளியாய் சுழன்று வந்து நண்பியைக் கட்டி அணைத்துக் கொண்டாள் வித்யா. அத்தோடு, “ஐ மிஸ் யூடி..” என்ற உருக்கம் வேறு!

“மொத்தம் மூணு நாள் தான். விடிஞ்சி கண் முழிச்ச கையோட ஒரு கால். ஈவினிங்ல இன்னொரு கால்! இவ்ளோ அலப்பறை பண்ணவ இப்போ வந்து மிஸ் யூனு சொல்றது கடவுளுக்கே அடுக்காதுடி..” என கேலி செய்தவளின் தோளில் கிள்ளியவள்,

“ஃபீல் பண்ணி சொன்னேன் அண்ணா! எப்படி கலாய்க்கிறா பாருங்க..” என்று நந்தனைத் துணைக்கு அழைக்கப் பார்த்தாள்.

“பாப்பா அழறால்ல?” என்று வினவியபடி தோழியரிடையே மாட்டிக் கொண்டு முழிப்பதற்கு அவசியமின்றி சட்டென்று கழன்று கொண்ட யதுநந்தன், இருக்கையை இழுத்து அமர்ந்து விட,

“பங்கம்!” என கிளுக்கிச் சிரித்தவள் அன்னையைக் காண விரைந்தாள்.

மகளைக் கண்டதும் சாவித்திரியின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கின. “யுக்தா..” என மெல்லிய குரலில் அழைத்தவரை இறுக அணைத்து விடுவித்தவள், அவருக்கு சக்கர நாற்காலியில் அமர உதவி புரிந்தாள்.

“நீ சந்தோசமா இருக்கியாம்மா?” என்று கேட்டவருக்கு என்னவென்று பதில் சொல்வது?

“என்னைப் பார்த்தா எப்படிம்மா தெரியுது? பாருங்க, நான் சந்தோசமா இருக்கேன். ஆனா உங்களை எல்லாம் அடிக்கடி பார்க்க முடியாதேனு வருத்தம்..” என்றவள் வீல்ஷேரைத் தள்ளிக் கொண்டு கூடத்துக்கு வரும் போது, நந்தனுடன் உரையாடிக் கொண்டிருந்தாள் சாந்தனா.

சத்யா பேசினாலாவது, ‘சரி தான். அவ துறுதுறு வாய்காரி ஆச்சே!’ என்று கண்டு கொள்ளாமல் விட்டிருப்பாள். ஆனால் பேசிக் கொண்டிருப்பது மூத்த தங்கையாயிற்றே!

கண்களைக் கசக்கி, தான் காண்பது கனவல்ல என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி உறுதி செய்து கொண்டவளுக்கு, ‘எலி ஏன் அம்மணமா ஓடுது?’ என்ற கேள்வி இயல்பாய் எழுந்தது.

“சந்தா!” என்ற விளிப்புடன் வித்யாவிடம் சாவித்திரியைக் கண் காட்டி விட்டு இருவரையும் நெருங்கிச் செல்ல,

“வா சம்மு. உங்க ரெண்டு பேருக்கு இடையில ஏதோ பெரிய டீலாமே! அதைப் பத்தி தான் சாந்தனா என்கிட்டே சொல்லிட்டு இருந்தா..” என உதட்டில் நெளிந்த முறுவலோடு விளம்பினான் நந்தன்.

“டீலை அக்ஸப்ட் பண்ணாதவங்க அதைப் பத்தி எல்லாம் வெளிய சொல்லிக்க கூடாது சந்தா..” என கிண்டலடித்தபடி வந்து மற்றொரு இருக்கையில் அமர்ந்தவளை கண்களை சுருக்கி முறைத்தவள்,

“அடுத்த வாரத் துவக்கத்துல இருந்து நான் வொர்க் போக போறேனாக்கும். இன்டெர்வியூவுக்கு எல்லாம் போய் வந்தாச்சு..” என்று உர்ரென்ற முக பாவனை மாறாமல் பதில் அளித்தாள்.

“என்ன?” என அதிர்ந்து கூவிய பிறகு தான், தான் சற்று அதிகமாகவே உணர்ச்சி வசப்பட்டு விட்டது புரிய, “அது.. உண்மையாவாடி?” என அசடு வழிந்தாள்.

“ஆமா!”

“எங்க?”

“வொய்.என் ஐடி கம்பெனில வேலை கிடைச்சிருக்கு. மாமா தான், போன வாரம் நான் அவர் கிட்ட பேசினப்போ அந்த கம்பெனி பத்தி ஸஜஸ்ட் பண்ணாரு..”

‘பேசுனாளா? அதுவும் சந்தா! எனக்கே தெரியாம இது எப்போ?’ என வியந்து போனவளாய்,

“வொய்.என்..” என இதழுக்குள் முணுமுணுத்தவளின் பார்வை நந்தன் மீது புரியாத பாவனையில் படிய, கண்ணசைவில் ‘எதுவும் பேசாதே!’ என அழுத்தமாகப் பணித்தான்.

அவர்களின் உரையாடல்களை செவியேற்றுக் கொண்டிருந்த வித்யாவிடம் இருந்து, “இப்போ சரி சம்பாதிக்கனும்னு மரமண்டைக்கு உரைச்சுதே! பெரிய விஷயம் தான்..” என்ற முணுமுணுப்பு வெளிப்பட்டது.

அது ஏனோ.. சம்யுக்தாவின் கஷ்டத்தைப் புரிந்து கொள்ளாத சாந்தனா மீது ஆரம்பம் தொட்டே ஒரு அதிருப்தி வித்யாவுக்கு. அவளைக் கண்டாலே ஆகாது!

இந்த நாலைந்து நாட்களில், சாந்தனாவின் முகத்தை உடைக்காமல் பொறுமை காப்பதே, யுக்தாவின் நிம்மதி கருதி தான் என்பது குறிப்பிடத்தக்கது!

தடல்புடலாக மதிய விருந்து தயார் செய்யப்பட்டிருந்தது.

தனக்கு தெரிந்த வகையில் தாறுமாறாக சமைத்துப் போட்டிருந்த பார்வதி, மணமக்களை நன்றாகக் கவனித்து உபசரித்தார்.

யுக்தா மனதில், பார்வதி, அவளின் குடும்பத்தினருக்கு செய்த உதவியால் எட்டா உயரத்துக்கு உயர்ந்து நின்றார். விடை பெற்றுக் கொள்ள முன்பு, அவரின் கரம் பற்றி யுக்தா கண்ணீரோடு உபகாரத்திக்கு நன்றி சொன்னதெல்லாம் மறைக்கப்பட்ட பக்கங்கள்!

சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த சாவித்திரியின் பார்வை அடிக்கடி யுவனியின் மீது பதிந்து மீண்டு கொண்டிருப்பதைக் கண்ணுற்றவளாய், சிறியவளைத் தூக்கி அன்னை மடியில் அமர வைத்தவள்,

“பாட்டினு கூப்பிடு பேபிம்மா!” எனக் கன்னம் தொட்டு கொஞ்சினாள்.

சாவித்திரியும் நடுங்கும் கரங்களால் சிறியவளைத் தொட்டுப் பார்த்தார்; தடவிப் பார்த்தார். யுக்தாவுக்கு அவரைப் பார்க்கையில் சிரிப்பு வந்தது.

மணித்துளிகள் மெல்லக் கரைந்தன.

சத்யாவின் மடியில் துள்ளி விளையாடியபடி ராகம் பாடிக் கொண்டிருந்தவளைத் தூக்கிக் கொண்ட யுக்தா,

“அம்மாவைக் கவனமா பார்த்துக்கோ சத்யா. சந்தா கிட்ட வீணா வம்பு வளர்க்காத! உனக்கு எந்த தேவையா இருந்தாலும் உடனே எனக்கு ஒரு கால் பண்ணு. விளையாட்டுப் புத்தியோட சுத்திட்டு இருக்காம, நல்லா படிக்கணும் என்ன..” என தலை வருடி அறிவுரை கூற,

“ம்ம் ம்ம்..” என தலை அசைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள் இளையவள்.

அப்போது வாசலில் வந்து நிறுத்தப்பட்டது, மூர்த்தியின் கார்.

“மாமாவா?” என வியந்தவளின் பார்வை கணவனில் பதிய, அதை உணராமல் தந்தையின் வரவுக்காக காத்திருந்தவன் எழுந்து சென்று அவரைக் கைத் தாங்கலாக அழைத்து வந்தான்.

சிறியவளை வித்யாவின் கையில் ஒப்படைத்து விட்டு மாமனாரை நன்முறையில் உபசரித்த யுக்தாவுக்கு, ஆழ்ந்த யோசனையில் மண்டை காய்ந்தது.

‘மாமா ஏன் திடீர்னு இங்க வரணும்?’

‘அவரும், மாமா வர வரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருந்த மாதிரி தெரியுதே! என்னவா இருக்கும்?’ எனப் பல கேள்விகள் பாவையின் தலையைக் குடைந்தன.

அவளை அதிகம் சிந்திக்க விடாமல், கிருஷ்ணமூர்த்தியே விடயத்தைப் போட்டு உடைத்தார்.

“சம்பந்தி! உங்க மக இப்போ எங்க வீட்டு மருமக.. மகாலக்ஷ்மி. என் பையனுக்கு பொண்டாட்டி. அவ மனம் வருந்திட்டு இருக்குறப்ப, அதுக்கான தீர்வு கைவசம் இருந்தும் அப்படியே விட்டு வைக்கிறது எந்த விதத்துல நியாயம்?” எனப் பீடிகை போட்டார்.

“மனம் வருந்துறாளா?” என சாவித்திரி முனகலாகக் கேட்டதை,

“மனசுக்குள்ள வருந்துற அளவுக்கு உனக்கு என்ன வருத்தம் யுக்தா?” என்று வேறு விதமாக, அவளின் காதருகே குனிந்து அதட்டினாள் வித்யா.

யுக்தா ஏதோ கூற வருவதற்குள்,

“சொன்னா, எதுக்கு மாமா கஷ்டப்படறீங்க.. நானே பார்த்துக்குவேன்னு மருமக மறுத்துடப் போறானு தான் விஷயத்தை நேரடியா உங்க கிட்ட கொணர்ந்திருக்கேன். மறுப்புக்கு இடமில்ல. நீங்களும் குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வந்திடனும்.” என முடிவாய் செப்பி விட்டிருந்தார் மூர்த்தி.

“என்ன!” என அந்நாளின் இரண்டாவது முறையாக திகைத்து நின்றாள், சம்யுக்தா!

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!