அன்று, ஸ்டோருக்குள் நுழைந்த சற்று நேரத்துக்கெல்லாம் சேமிக்கப்படாத ஒரு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது, சம்யுக்தாவுக்கு.
பொதுவாக அவள் வேலை நேரத்தில் அலைபேசியுடன் சரசம் புரியும் ரகத்தை சேர்ந்தவள் அல்ல. திருமணத்துக்கு முன்பு என்றால், பெரும்பாலும் துணிக்கடைக்குள் நுழையும் போதே அவளின் அலைபேசி சைலன்ட் மோடில் உறங்கிக் கொண்டிருக்கும்.
தான் அழைப்புக்கு பதில் கொடுக்கவில்லை என்றால், அடுத்த கணம் வீட்டிலிருந்து வித்யாவுக்கு அழைப்பு செல்லும் என்றபடியால் பயம், பதற்றம் எதுவுமில்லை.
ஆனால் இப்போது அவ்வாறு அலட்சியமாக இருக்க முடியவில்லை அவளால். தனக்கென்று ஒரு குடும்பம், மம்மி மம்மியென கன்னத்தை எச்சில் படுத்தி கொஞ்சித் தீர்க்க ஒரு குழந்தை என்று இருக்கும் போது, அலைபேசியை சைலன்ட் மோடில் வைக்க மனம் இடம் தரவில்லை.
அவசர நேரங்களில் உதவக் கூடுமென்ற எச்சரிக்கை உணர்வின் காரணமாக, அலைபேசி இப்போதெல்லாம் சைலன்ட் மோடில் வைக்கப்படுவதில்லை ஆதலால், அழைப்பு வந்ததும் கைப்பைக்குள் பத்திரப்படுத்தப்பட்டு இருந்த அலைபேசி பெருங்குரல் எடுத்து அலறியது.
‘இந்த நேரத்துல யாரா இருக்கும்.. புது நம்பரா வேற இருக்கே!’ என்ற யோசனையுடன் அழைப்பை இணைத்தவளின் முகத்தில்,
“ஹாய் அண்ணி!” என்ற உற்சாகமிழந்த அவினாஷின் குரல் செவிப்பறையைத் தீண்டியதும் சட்டென்று சிறு புன்னகை உதயமாகிற்று!
அவனின் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து சென்றதிலிருந்து அவள் மிகவும் எதிர்பார்த்திருந்த அழைப்பு இது என்பதால், அவ்வளவு பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.
அது மட்டுமன்றி, சாந்தனாவிடம் தான் எண்ணைப் பெற்றுக் கொண்டிருப்பான் என்று சந்தேகமின்றி ஊகிக்க முடிந்த பிறகும், என்னுடைய அலைபேசி எண்ணை எவ்வாறு பெற்றுக் கொண்டாய் என்று வினவி பேச்சை வெகு தூரத்துக்கு இழுக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை அவளுக்கு.
உன்னை இணங்கண்டு கொண்டேன் என்ற குறிப்புடன், “சொல்லுங்க அவினாஷ். எப்படி இருக்கீங்க?” என இயல்பாக பேச்சுக் கொடுத்தபடி, வித்யாவுக்கு கண் காட்டி விட்டு சற்றே நகர்ந்து சென்றாள்.
“நல்லாருக்கோம் அண்ணி!” எனத் தொடங்கி, வழமையான சுகநல விசாரிப்புகளைத் தொடர்ந்து, தலையை சுற்றி மூக்கைத் தொடாமல் தான் அழைப்பு விடுக்கக் காரணம் என்னவென்பதை இயம்பினான்.
“உங்க கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு அண்ணி. நாளைக்கு நீங்க ஃப்ரீயா? மீட் பண்ணலாங்களா..”
கெஞ்சல் தொக்கி நின்ற அந்தக் குரல் அவளுக்கு அவன்பால் இரக்கத்தைத் தோற்றுவிக்க, பந்தா காட்டாமல், தனக்கு வசதிப்பட்டாற்போல் இன்று அந்தி சாயும் பொழுதில், அன்று பார்த்த அதே ரெஸ்டாரண்ட்டில் சந்திப்பதாகச் சொல்லி விட்டு அழைப்பை துண்டித்துக் கொண்டாள்.
சொன்னது போலவே, மாலை ஐந்து மணியளவில் வீட்டுக்கு செல்ல வேண்டும் என அனுமதி வேண்டிக் கொண்டு காருண்யராஜின் முன்னிலையில் சென்று கை கட்டி நின்றாள், சம்யுக்தா.
இப்போதெல்லாம் நேரத்துக்கே அவள் வேலைக்கு வந்து விடுவதாலும், திருமணமாகி குடும்பப் பொறுப்பை வேறு சுமப்பதனாலும் கண்டதை எல்லாம் பேசி அவளை வருத்த விரும்பாமல்,
“நாளைக்கு நேரத்துக்கே வேலைக்கு வந்திடு!” என்ற அதட்டலுடன் அவளை அனுப்பி வைத்தார், காருண்யராஜ்.
வித்யாவிடம் கூறிக் கொண்டு, வேக நடையிட்டு அவள் ரெஸ்டாரண்ட்டை வந்தடையும் போது, ஆறு மணி தாண்டி இன்னும் சில நிமிடங்கள் தாராளமாகக் கழிந்து போயிருந்தன.
நேரத்துக்கு முன்னதாகவே அங்கு வந்து காத்திருந்த அவினாஷ், அவளைக் கண்டதும் வேகமாக இருக்கையிலிருந்து எழுந்து நின்று கை அசைக்க,
“ஹாய்!” என்ற தலை அசைப்புடன் அவனருகே வந்தவள் எதிரிலிருந்த இருக்கையை இழுத்து சொகுசாக அமர்ந்து கொண்டு, பார்வையை நாலாபுறமும் சுழற்றினாள்.
புது உறவுகள் இரண்டை அன்றொரு நாளில் எதேர்ச்சையாக சந்திக்க வைத்த பெருமையை சுமந்திருந்த அந்த ரெஸ்டாரண்ட், அவளுக்கு என்றும் ‘ஸ்பெஷல்’ தான்!
அவ்விருவரையும் முதல்நாள் கண்ட இடத்தில் தன் பார்வையை நிலைக்க விட்டவளின் இதழ்களில் அனிச்சையாய் இள முறுவலொன்று மலர்ந்தது.
‘அன்னைக்கு நீ நினைச்சு கூட பார்த்திருக்கல இல்லையா? இனி வரும் காலத்தில், மம்மினு கழுத்தைக் கட்டிக்கிட்ட அந்த பேபியும், சாரும் உன் வாழ்க்கைல இவ்ளோ முக்கியமானவங்களா மாறிப் போவாங்கனு?’ என மனம் எழுப்பிய வினாவிலிருந்த உண்மைத் தன்மை, அவளின் சிரத்தைத் தானாகவே ஆமோதிப்பாக அசையச் செய்தது.
தலை குனித்து, ஆள்காட்டி விரலால் நெற்றியை அழுத்தமாக நீவிக் கொண்டவளுக்கு,
‘அன்று நான் யதுநந்தனிடம் விடை பெற்றுக் கொள்ளும் போது, ஒரு பெண் வந்து உரிமை உணர்வோடு அவரை நெருங்கி நின்றாளே! அவள் யாராக இருக்கும்?’ என்ற ஐயம் தோன்றிய கணத்தில்,
‘உனக்கு முன்னதாக அவர் திருமண விஷயமா சந்திச்ச பொண்ணா கூட இருக்கலாம்..’ என உடனடி பதில் கிட்டியது, மனத்திடம் இருந்து!
அதை ஏற்றுக் கொண்டவளுக்கு, தான் நந்தனிடம் கூறாமல் தான் இவ்விடம் அவினாஷை சந்திக்க வந்திருக்கிறேன் என்ற விடயம் இப்போது தான் மண்டையில் உரைத்தது.
வேலை நேரம் ஆகையால், பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்து விட்ட தன் மடத்தனத்தை எண்ணி நொந்தவள்,
‘நீ ஒரு லூசு சம்மு! இப்படியா பண்ணுவ.. நீ எதுக்கும் அவர் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்க வேண்டாமா?’ என மனதினுள் தன்னைத் தானே கடிந்தபடி அலைபேசியை எடுப்பதற்காக கைப்பைக்குள் கை விட,
“அண்ணி!” என்று உரக்க அழைத்தான், அவினாஷ்.
ஏற்கனவே பலமுறைகள் அழைத்துப் பார்த்திருப்பான் போலும்! அவள் ஏதோ யோசனையில் இவ்வுலகிலிருந்து தூரமாகி நிற்பதை உணர்ந்து தான் சற்று குரல் உயர்த்தி அழைத்திருந்தான்.
“ஆங்!” என சட்டென்று தெளிந்தவளைப் பார்த்து உதடு விரித்தவன், “அது வந்து அண்ணி! பேசலாமா?” என்று தயங்க,
“சியூர்!” என்றாள், வீட்டுக்கு சென்ற பிறகே அனைத்தையும் நந்தனிடம் விலாவாரியாக விளக்கிக் கொள்ளலாம் என்ற முடிவுடன்.
தான் பேச வந்ததை, இடத்துக்கு ஏற்றவாறு ஏற்ற இறக்கங்களுடன், திக்கித் திணறி, தட்டுத் தடுமாறி கூறி முடிப்பதற்கு அரைமணி நேரத்தை பாரபட்சமின்றி எடுத்துக் கொண்டான், அவினாஷ்.
இருவரின் உரையாடல் தண்டவாளமாய் நீண்டு ஈற்றை எட்டும் போது மணி ஏழரையைக் காட்டி நின்றது, யுக்தாவின் மணிக்கட்டை அழகு படுத்திய பழைய கைக்கடிகாரம்!
“நான் வீட்டுல பேசிட்டு உங்களுக்கு ஃபோன் பண்ணுறேன் அவினாஷ்..” என்றவள் அவனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வெளியே வர,
“இருட்டிடுச்சு அண்ணி. வாங்க, நானே ட்ரோப் பண்ணுறேன்..” என பெரிய மனதுடன் உதவ முன் வந்தான், அவினாஷ்.
ஏழு மணியாகும் போது மீண்டும் துணிக்கடைக்கு முன்னால் வந்து நின்று கொண்டால், தன்னை அழைத்துச் செல்ல வரும் காரில் வீட்டுக்கு சென்று விடலாம் என்ற யோசனையோடு தான், காரை அனுப்பி வைக்க வேண்டாம் என்ற தகவலைக் கூட கிருஷ்ணமூர்த்திக்கு அனுப்பி வைக்காமல் இங்கு வந்திருந்தாள்.
இப்போது இங்கிருந்து ஸ்டோரை சென்றடைவதாக இருந்தாலும், மேலும் பதினைந்து நிமிடங்கள் தேவைப்படுமே என்ற யோசனையோடு நின்றிருந்தவள், அவினாஷ் கூறியதைக் கேட்டு விட்டு,
“இட்ஸ் ஓகே! நான் போயிக்குவேன் அவினாஷ்..” என பின் வாங்கினாள்.
“அட வாங்க அண்ணி! நான் ஒன்னும் ஸ்ட்ரேஞ்சர் இல்ல. என்னைக்கோ ஒருநாள் உங்க வீட்டுக்கு தான் வர போறேன்..” என குற்றம் சாட்டும் குரலில் கூறியவன் மீண்டுமொரு அழைக்க, மறுக்க வழியின்றி வழுக்கிக் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட காரில் ஏறிக் கொண்டாள்.
வழி முழுதிலும் அவன் சாந்தனா பற்றிக் கூறிய அனைத்து நல்ல தகவல்களும், அரிசி மூடையிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட கற்கள் போல் கடினப்பட்டு பொறுக்கி எடுக்கப்பட்டவையாகத் தான் இருக்குமென்று தோன்றியது, யுக்தாவுக்கு.
பதிலுக்கு எதுவும் பேசாமல் அமைதி காத்தவளுக்கு எப்போதடா வீட்டை சென்றடைவேன் என்று இருந்தது!
அது என்னவோ, இப்போதெல்லாம் வீட்டுக்கு செல்ல ஒருசில நிமிடங்கள் தாமதமானாலும் சிறியவளை எண்ணி மனம் பதைபதைக்கிறது. இத்தனைக்கும் யுவனி ஒன்றும் வீட்டில் தனியாக இருப்பவளும் அல்ல!
அப்போது, திடீரென்று யதுநந்தனின் எண்ணை திரையில் ஒளிர விட்டபடி இசைத்தது, அலைபேசி!
‘இந்த நேரத்துல இவர் ஏன் கால் பண்ணுறாரு?’ என யோசித்தபடி, முடிச்சிட்டுக் கொண்ட புருவங்களை பெருவிரலால் நீவி விட்டுக் கொண்டே அழைப்பை இணைத்தாள்.
“ஹலோ சம்மும்மா.. அங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்ற குரலில் சற்று பதற்றம் தெரிந்ததோ! உதட்டில் நெளிந்த முறுவலுடன்,
“அப்படிலாம் எதுவுமில்லை. ஏன்ங்க? என்னாச்சு?” என்று வினவினாள்.
“உன்னைக் கூட்டிட்டு வர ஸ்டோருக்கு வந்த காரை வித்யா திருப்பி அனுப்பி இருக்கா. நீ எங்க போய்ட்ட? எங்க இருக்க?”
“நான் இப்போ வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்ங்க. வந்ததும் பேசுறேன். இங்க எந்தப் பிரச்சனையும் இல்ல. ரிலாக்ஸா இருங்க..” எனக் கூறும் போதே கார் வீட்டின் இரும்பு கேட்டை நெருங்கி இருக்க,
“வர்றேன்..” என்றவள் அவன் கூற வருவதைக் கேட்டாமல் பட்டென்று அழைப்பைத் துண்டித்தாள்.
மீண்டும் அழைப்பு வந்தது அவனிடமிருந்து!
ஏற்காமல், அவினாஷுக்கு நன்றி நவின்று விட்டு வீட்டினுள் நுழைய, தலை கோதியபடி கூடத்திலே பதற்றமாக நின்றிருந்தான் நந்தன்.
மனையாளைக் கண்டதும் வேகமாக அவளை நெருங்கி வந்தவன், “காரை அனுப்பி வைச்சிட்டு நீ எதுல வீட்டுக்கு வந்த?” என்று படபடக்க, சத்யாவுடன் டைல்ஸ் தரையில் தத்தக்க பித்தக்கவென ஓடி விளையாடிக் கொண்டிருந்த யுவனியை அள்ளித் தூக்கியபடியே,
“மம்மி..” என வாயில் எச்சில் ஒழுக கொஞ்சியவளின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டுக் கீழிறக்கி விட்டு, அவினாஷிடம் இருந்து அழைப்பு வந்ததும் தான் சந்திக்கச் சென்றதைக் கூறியபடி அறைக்குள் புக,
“ஆனா நீ இதைப் பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல சம்மு..” என இடையிட்டுப் பேசியவன் கதவை படாரென அறைந்து சாற்றினான்.
“மீட் பண்ணிட்டு வந்து சொல்லுறது என்ன அழகு? அதுக்கு முதல் இல்லையா என்கிட்ட சொல்லி இருக்கணும் சம்மு?” என்றான், துளிர்விட்ட சினத்துடன்.
இதைப் பற்றி நான் இவ்வளவு ஆழமாக சிந்திக்கவில்லையே! கேட்டதும் தற்துணிவின் அடிப்படையில் சரியென்று விட்டேன். இதில் ஏதும் தவறுண்டா என்ன என யுக்தா யோசனையில் ஆழ,
“என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு தோணலையா உனக்கு? சொல்லிருந்தா நானும் வந்து கௌரவமான முறைல பேசி இருப்பேன். உனக்கும் உதவியா இருந்திருக்கும்..” என்றான், யதுநந்தன்.
“அவ்ளோ முக்கியமா எதுவும் பேசலைங்க. அவர் வீட்டுல பேசிட்டதாகவும், ஒரு சின்ன வீட்டைத் தவிர வேறு எதையும் அவங்க எதிர் பார்க்கலங்குறதையும் உறுதியா சொன்னாரு. அப்பறம், அன்னைக்கு அவங்க வரதட்சணை, நகைனு பெருசா பேசுறப்போ வாயைப் பொத்திட்டு நின்னது தப்பு தான்னு அதுக்கு சாரி கேட்டாரு.
தவிர, நம்ம சந்தாவை ரொம்ப லவ் பண்ணுறாவும், அவளை ரொம்ப நல்லா பார்த்துக்குவேன்னும் அரைமணி நேரத்துக்கு பேசுனாரு..” என மேலோட்டமாகக் கூற, அவன் எங்கே அதை எல்லாம் காதில் வாங்கினான்?
“நீ என்கிட்ட சொல்லி இருக்கலாம்..” என இறுகிய குரலில் மீண்டும் குற்றம் சாட்டினான்.
பொறுமையாக அவன்புறம் திரும்பி நின்றவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
‘உனக்கு நான் உதவியாக இருப்பேன். நீ யுவனிக்கு நல்ல தாயாக இரு’ என்று சொன்னான் அன்று! அதன்படி யுவனியை நன்றாகவே கவனித்துக் கொள்கிறாள். அதைத் தவிர உதவி அவசியம் என தோன்றினால் அன்றி வீணாக அவனுக்கு தொந்தரவு செய்வானேன் என முழித்தவள்,
தாம் தூமென வானுக்கும் நிலத்துக்குமாய் குதிக்கும் அளவுக்கு இங்கொன்றும் பெரிதாக நிகழ்ந்து விடவில்லை என மூளைக்குப் புரிந்தாலும், மனம் தான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறதே!
‘என்னிடம் இதைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளவில்லையே’ என்று ஆதங்கப்படும் மனம், அவளிடமிருந்து எதைத் தான் எதிர்பார்க்கிறதென்று அவனுக்குமே புரியவில்லை; தெரியவில்லை.
கண்களை இறுக்கமாக மூடித் திறந்தவன், “நீ தனியாவே அவினாஷை மீட் பண்ண போயிருக்க.. வேலை விட்ட கையோட உனக்கு கஷ்டமா இருந்திருக்கும் இல்லையா?” என சமாளிக்கப் பார்த்தான்.
“இதுல என்னங்க கஷ்டம்? கலியாணத்துக்கு முன்னாடி ஒவ்வொன்னையும் தனியா கவனிச்சுக்கிட்ட எனக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல..” என்றாள், சிரித்துக் கொண்டே!
‘அது அப்போ! ஆனா இப்போ தான் உதவிக்கு நான் இருக்கேன்ல?’ என்று கேட்க வாயெடுத்தவன் அதன்பிறகு தான், அந்த கூற்றுக்கான உள் அர்த்தத்தை ஊகித்தான்.
தான் இந்த திருமண உறவின் ஆரம்பத்தில் அவளிடம் அறிவுறுத்திச் சொன்னது என்ன.. ஆனால் இப்போது நடந்து கொள்ளும் முறை தான் என்ன என்று மனம் அதிர்ந்தது, முதல் முறையாக!
அவனை மேலும் யோசனை செய்ய விடாமல்,
“நீங்க இது பத்தி எதையும் தலைல போட்டுக்காதிங்க. நானே எல்லாத்தையும் ஒழுங்கா பார்த்துக்குவேன்ங்க..” என்றவள் புன்னகை மாறாத முகத்துடன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
“நீயே எல்லாத்தையும் பார்த்துக்கிறதா இருந்தா, புருஷன் நான் எதுக்கு இருக்கேன்?” என்று அவனை மீறி வார்த்தைகள் உதிர்ந்தன.
ஆனால் துரதிஷ்டவசமாக, அது அவளின் செவிப்பறையில் வந்து மோதவில்லை. அவற்றை செவியேற்று இருந்தால், பாவை மனம் சந்தோசத்தில் திளைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் தன் சொந்த வார்த்தைகளில் அவன் தான் பதறிப் போனான்.
‘புருஷன்!’
“இவ்ளோ உரிமையா சொல்லுறேன்! நான் அந்த உரிமையை அவளுக்கு என்னைக்கும் கொடுத்ததில்ல. என்னோட மனசுல பல்லவி..” தொடர்ந்து பேச முடியாதபடி தொண்டைக்குழிக்குள் வார்த்தைகள் சிக்கிக் கொண்டன.
கட்டிலில் மல்லாக்க விழுந்தான், யோசனை தீராமலே!
கூடத்திலிருந்து பலமுறைகள் அழைத்த யுவனியின் குரல் கூட அவனை வந்து அடையவில்லை. சிந்திதான்; சிந்தித்துக் கொண்டே இருந்தான்.
தன் நினைவில் வாழும் நிழல் பல்லவி! நிகழில் தன்னைச் சுற்றி வலம் வரும் நிஜம் சம்யுக்தா! என மூளைக்கு உறைக்கவே நெடுநேரம் தேவைப்பட்டது அவனுக்கு.
அப்போது, “காதல் இருக்கும் பயத்தினில் தான்.. கடவுள் பூமிக்கு வருவதில்லை..” என்ற பாடல் வரிகளை வாய்க்குள் முணுமுணுத்தபடி குளியலறையிலிருந்து வெளியே வந்த சம்யுக்தா,
“அட, இங்க தான் இருக்கீங்களா? யுவி உங்களைத் தான் ரொம்ப நேரமா கூப்பிடறா.. போய் என்னனு பார்க்கலயாங்க?” என்று கண்களை சுருக்கினாள்.
பதில் கூறாமல் கண்களை சுழற்றியவனின் அமைதி அவளைப் பெரிதும் வருத்தியது. நெருக்கமில்லாத நாட்களில் கூட அவன் இவ்வாறு மௌனம் காத்ததில்லை தன்னிடம். தேவைக்கு மட்டுமாவது பேசினானே என்ற உண்மை அவளை சுட்டது.
“ஐம் சாரிங்க! பாருங்க, நான் உங்ககிட்ட சொல்லாம போயிருக்க கூடாது தான்..” என்று தன் மீது தவறில்லை எனப் புரிந்தாலும், தானாகவே இறங்கி வந்து மன்னிப்பை யாசித்தாள்.
அந்நிலையிலும், தானாகவே மன்னிப்பு வேண்டும் இவள் எங்கே.. பிரச்சனைகளின் போது தானே சென்று மன்னிப்பு வேண்டும் வரை காத்திருக்கும் முன்னையவள் எங்கே என இருவரையும் ஒப்பிட்டது, ஆடவன் மனம்.
தலை வலித்தது.
சட்டென்று கட்டிலை விட்டுத் துள்ளி எழுந்தவன் முகத்தில் அடித்தாற்போல் விருட்டென்று கதவைத் திறந்து கொண்டு வெளியேறி விட,
“என்ன நடக்குதுனு புரியலயே!” என முழித்து நின்றதென்னவோ, சம்யுக்தா தான்.
அவனின் அமைதி இரவிலும் தொடர்ந்தது!
மறுநாள் காலையில், ஸ்கூல் செல்வதற்கு ஆயத்தமாகி ரிப்போர்ட் கார்டுடன் ஓடி வந்த சத்யா, “அக்கா இன்னைக்கு பேரன்ட்ஸ் மீட்டிங், ஒன்பது மணிக்கு..” என்று கூற,
“ரொம்ப நல்லது! இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு சொல்லி இருக்கலாமே..” என கடிந்து கொண்டார், சாவித்திரி.
யுக்தாவுக்குத் தான் ஒரே யோசனையாகப் போய் விட்டது.
நேற்றும் நேரகாலத்துடனே ஸ்டோரிலிருந்து வெளிக்கிட்டாயிற்று! இன்றும் ‘லீவ்’ வேண்டுமென்று சொல்வது எவ்விதத்தில் நியாயம் என்ற யோசனையுடன் நந்தனுக்கு உணவு பரிமாறியவள், வீல் ஷேரில் அமர்ந்திருந்த அன்னைக்கு கஞ்சி பருக்கினாள்.
“அக்கா, சாரிகா! நேத்தே சொல்ல தான் நின்னேன். அதுக்குள்ள மறந்துட்டேன்..”
ஒருகணம் யுக்தாவை ஏறிட்டுப் பார்த்த யதுநந்தன், “நேரம் என்னனு சொன்ன?” என்று சத்யாவிடம் கேட்க,
“ஒன்பது மணி..” என்றாள், அவசரமாக.
“இன்னைக்கு ஒரு முக்கிய வேலை விஷயமா நான் அந்த பக்கம் வந்தாலும் வருவேன் சத்யா. ஸோ நானே உன் மீட்டிங் அட்டென்ட் பண்ணிடறேன். அக்கா வேலைக்கு போகட்டும்!” என்று மனையாளுக்கு கேட்கும் பொருட்டு சற்று சத்தமாகவே பேசியவன் கை கழுவிக் கொண்டு எழுந்து நின்றான்.
“ரொம்ப நன்றி மாமா..” என்றவள் துள்ளலுடன் ஓடி மறைந்து விட,
“வர்றேன்..” என்றுவிட்டு யுக்தாவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல் வேக நடையிட்டு நகர்ந்தான், நந்தன்.
அவள் மீதான கோபங்கள் எதுவுமில்லை. ஆனால் சகல மனக் குழப்பங்களும் தெளிவாகும் வரை தனிமை மிக, மிக மிக அவசியமாகப்பட்டதன் விளைவு தான் இந்தப் பாராமுகம் போலும்!