8. வாடி ராசாத்தி

5
(1)

வாடி ராசாத்தி – 8

மணி இரவு ஒன்றை தொட, உச்சு கொட்டியப்படி எழுந்து அமர்ந்தாள் அம்மு.

உறக்கம் கிட்டே வருவேனா என்றது…. எதுக்கு இப்படி வேண்டாதது எல்லாம் நினைக்கிறேன்…. கடவுளே….! எவ்வளவு புலம்பினாலும் மனம் மாலை நடந்த வாக்குவாதத்தை விட கேபியின் அண்மையை தான் நினைத்து நினைத்து பார்த்தது. அந்த திண்மையான தோளும், அகண்ட மார்பும், அழுத்தமான அணைப்பும் மென்மையாக சுவைத்து அவன் கொடுத்த முத்தமும் அவளுக்கு கிறுக்கு பிடிக்க போதுமானதாக இருந்தது.

எவ்ளோ தைரியம் அவனுக்கு…. என்ன நினைச்சு முத்தம் கொடுத்து இருப்பான்? ராஸ்கல்…. ஆனா அவன் சொன்னது போல இதை எப்படி நல்லதா பார்க்கிறது….? அவன் பெரியம்மா ஊரெல்லாம் அவங்க பேத்தி தான் அந்த வீட்டு மருமகள்னு சொல்லிட்டு இருக்காங்க….

அவங்க சொன்னா ஆச்சா….? அவன்….? அவன் உன்னை கட்டிக்கிறேன் சொன்னா நீ கட்டிக்கிறியா….? அய்யோ வேண்டாம் பா, அப்பா பாவம்….

இப்படியாக அவளை பல எண்ணங்கள் அலைக்கழிக்க, இப்படி உருடுறதுக்கு கொஞ்சம் நேரம் டிவி பார்க்கலாம் என்று எழுந்து ஹாலிற்கு வந்தாள் அம்மு. எழுந்து வந்தவள், அம்மாவையும் அப்பாவையும் அங்கே கண்டு அதிர்ச்சி அடைந்தாள். அவர்களும் அவளை அங்கே எதிர்பார்க்காததால் திகைத்து விழித்தனர்.

“என்ன அம்மா…. என்ன அப்பா…. என்ன ஆச்சு….?” அம்மு பதட்டப்பட,

“ஒண்ணுமில்லை மா, வா…. இங்க வந்து உட்கார்…. பேசுவோம்….” என்றார் செல்வராஜ். வாசு, அம்முவுக்கும் ஒரு டீ போட்டுட்டு வா என்றார். அம்மா எழுந்து போக,

“அப்பா ப்ளீஸ் எதுவானாலும் மறைக்காம சொல்லுங்கப்பா ப்ளீஸ்….”

“சொல்றேன் சொல்றேன்…. உன்கிட்ட கலந்துக்காம நான் இதில முடிவு எடுக்க முடியாது….” என்றவர் நாராயணன் அனுப்பிய செய்தியை பற்றி சொன்னார்.

“ஓ! ஏன் பா, வேற பார்ட்டி யாரும் வாங்க வர்றாங்களா….? நாம கொஞ்ச நாள் வெய்ட் பண்ணலாமே பா….” என்றாள் தயக்கமும் சங்கடமுமாக. அப்பாவின் பிரச்சனை தெரிந்தாலும் அவள் திருமணத்திற்கு தயார் இல்லை இப்பொழுது…. ஏன் என்று காரணம் புரிந்தாலும் அதை ஆராய விரும்பவில்லை அவள்.

“நிலத்துக்கு ஒருமாதிரி பிரச்சனை வந்ததுனா, இப்போ வீட்டுக்கு ஒரு மாதிரி வந்து இருக்கு. இந்த நாராயணன் மார்க்கெட்ல எல்லாருக்கும் தெரியுற மாதிரி நம்ம வீட்டை அவர் தான் வாங்க போறதா விஷயத்தை பரப்பி விட்டுட்டார். அதனால் அவர் பெரிய இடம், எதுக்கு அவர்கிட்ட மல்லுகட்டணும்னு பல பேர் ஒதுங்கி போய்ட்டாங்க. புதுசா யாரும் வர்ற வரை காத்திருக்க நம்ம நிலைமை சரியில்லை மா…. எனக்கும் ஒன்னும் புரியலை….” என்றார் செல்வராஜ். அவர் குரலிலும் சொல்ல முடியாத அளவு சங்கடம், தவிப்பு இருந்தது.

அதற்குள் வாசுகியும் வந்துவிட, அவர்,

“கண்டவன் கிட்ட போய் கெஞ்சுறதுக்கு, சொந்த தங்கச்சி பையன், அவன் கிட்ட பேசலாம்….” என்றார் காட்டமாக.

செல்வராஜ், பதிலே பேசவில்லை. அமைதியாகவே இருந்தார். “மாமனை மாதிரி தான் அந்த தம்பிக்கும் பிடிவாதம் இருக்கு…. என்னவோ பண்ணுங்க…. ஆனா என் பொண்ணு வாழ்க்கையை மட்டும் கெடுத்துடாதீங்க….” என்று ஆற்றாமையுடன் சொல்லி விட்டு அமைதியாகி விட்டார் வாசுகி.

“அம்மா, அப்பாவை எதுவும் சொல்லாத மா, ப்ளஸ்…. அப்பாவும் பாவம் மா…. அப்பா, அவங்க கிட்ட கல்யாணம் மட்டும் இப்போ வேண்டாம்,கொஞ்ச நாள் போகட்டும், இதுக்கும் அதுக்கும் முடிச்சு போடாதீங்கன்னு பேசி பாருங்களேன்.”

“ம்ம்…. ஆமாங்க அவங்க ஒத்துகிட்டா நல்லது தானே….?” வாசுகியும் சேர்ந்து கொண்டார்.

“ம்ம்….பார்ப்போம்…. எனக்கு என்னவோ அவங்க வீட்டை வாங்கிறதே உன்னை அவங்க வீட்டு மருமகளா கொண்டு போக தான்னு நினைக்கிறேன்.”

“ஓ!” என்றவள், மார்க்கெட்ல எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும்னா அந்த லொடுக்கு பாண்டிக்கும் தெரிஞ்சு இருக்குமே…. அவன் ரியாக்ஷன் என்னவா இருக்கும்…. பார்க்கணுமே…. மனதிற்குள் ஆர்வமானாள் அம்மு. இவ்வளவு சிந்தனையில் அந்த மாப்பிள்ளை யார், எவர் என்று எதிலும் ஆர்வம் காட்டவில்லை அம்மு. அவன் பெயரை கூட கேட்கவில்லை.

*************

மறுநாள் காலை, நான் நாராயணன் கிட்ட பேசி பார்க்கிறேன் பர்ஸ்ட், என்ன சொல்றார்னு பார்ப்போம் என்றபடி கிளம்பிபோனார் செல்வராஜ். மதியம் போல் வீட்டுக்கு வந்தவரிடம், வாசுகி விவரம் கேட்க,

“நான் சொன்னதும், அவரா எதுவும் சொல்லலை…. வீட்டில கலந்து பேசிட்டு சொல்றேன்னு சொல்லிட்டார். நான் நினைச்ச மாதிரி அவங்களுக்கு வீடு குறி இல்லை, கல்யாணம் தான்.”

“அப்புறம்….?”வாசுகி படபடக்க,

“அப்புறம் என்னை வெய்ட் பண்ண சொல்லிட்டு, ஒரு இருபது நிமிஷம் உள்ள போய் போன் பேசிட்டு வந்தார். வந்தவர், சரி இப்போதைக்கு கல்யாணம் பத்தி பேசலை, ஆனா எப்போ கல்யாணம் பண்றதா முடிவு பண்ணாலும் எங்களுக்கு தான் முதல்ல சொல்லணும்னு சொன்னார்.”

“அவங்ககிட்ட சொல்றது அப்புறம், நீங்க சொன்னீங்களா…. எல்லாம் பொருந்தி வரணும்…. ரெண்டு பேருக்கும் பிடிக்கணும், அது தான் முக்கியம். அதுக்கு அப்புறம் தான் உறுதினு….” அவசர அவசரமாக கேட்டார் வாசுகி.

“ஏய், இப்போ என்னடி…. நான் என்ன முட்டாளா….? அதான் இப்போ கல்யாணம் இல்லைனு பேசிட்டு வந்துடேன்ல….” எகிறினார் செல்வராஜ்.

“அப்படி இல்லைங்க, இது நம்ம பொண்ணு வாழ்க்கை…. நாளைக்கு அவங்க ஏதாவது பிரச்சனை பண்ண கூடாது, நாமளும் அதுக்கு இடம் கொடுக்கிற மாதிரி இதை சாதாரணமா எடுத்துக்க கூடாதுங்க….”

“நீயேன் இவ்ளோ யோசிக்கிற…. நான் தான் சொல்லிட்டேனே அவங்ககிட்ட…..” சமாதானம் சொல்லும் செல்வராஜின் குரல் உள்ளே சென்று விட்டதை உணரவில்லை வாசுகி.

“யாராவது பெரியவங்க ஒருத்தங்களை வைச்சு பேசி இருக்கலாம்…. நாம தைரியமா இருக்கலாம் அப்போ தான்…. பேசாம நாளைக்கு யாராவது அழைச்சிட்டு போய் அவங்க முன்னாடி ஒரு தடவை உறுதியா சொல்லிட்டு வாங்களேன்….”

“நீ கொஞ்சம் அமைதியா இரு வாசுகி, நான் கொஞ்சம் படுக்கிறேன்….”

“சாப்பிட்டு போங்க….”

“பசிக்கலை மா, கொஞ்சம் நேரம் ஆகட்டும்….” சொல்லியவாறு அறைக்குள் வந்து படுத்தவருக்கு மனதே சரியில்லை. இன்று வாசுகி சொன்னது போல் எல்லாம் அவருக்கு எந்த யோசனையும் இல்லை. சொல்லி விட்டோம் அவ்வளவு தான் என்ற மனப்பான்மையில் இருந்தார். அதனால் நாராயணன், அட்வான்ஸ் என்று கொடுத்த ஒரு லட்ச ரூபாய் வாங்கி கொண்டார். வாங்கி அவர் கொடுக்க வேண்டிய ஒருவரிடமும் கொடுத்து விட்டார். வாசுகி பேசும் வரை இதை வாசுகியிடம் மறைக்கும் எண்ணம் அறவே இல்லை அவருக்கு. ஆனால் வாசுகியின் ஒவ்வொரு வார்த்தையும் அவர் செய்து இருக்க வேண்டியதை சரியாக எடுத்து சொல்ல, உள்ளூர பயம் வந்து அப்பி கொண்டது. இனி தான் செய்ததை சொன்னால் வாசுகியும் பயந்து, நிம்மதி இழந்து விடுவார் என்று மறைத்து விட்டார். கடவுளே, எதுவும் தவறாகி விட கூடாது என்று வேண்டி கொண்டார்.

************

“நீங்க எப்படி பா கல்யாணம் இல்லைன்னு அவர் சொன்னதை ஒத்துக்கீட்டிங்க…. நான் எவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்…. நீங்க என் பிளான் மொத்தமும் சொதப்பி வைச்சு இருக்கீங்க….” நாராயணன் வீட்டில் கிஷோர் தாம் தூம் என்று குதித்தான்.

“அமைதியா இருடா…. எல்லாம் சரியா நடக்கும்…. நீ மட்டும் என்னை கேட்காம உன் அவசரப் புத்தியை யூஸ் பண்ணிடாதே…. நான் சொல்றதை கேட்டா, நிச்சயம் அந்த பொண்ணோட தான் உனக்கு கல்யாணம்!”

உர்ரென்று தந்தையை முறைத்த படி சென்றான் கிஷோர். மனம் அமைதியின்றி அலைந்தது. அம்ரிதா, எப்ப டி என் கைக்குள்ள வருவே….? புலம்பினான் கிஷோர். அம்ரிதா பள்ளிக்கு இவர்கள் கடை வழியே தான் சைக்கிளில் செல்வாள். அப்போது இருந்து அவளை பார்ப்பான். ஒரு நாள் மழை அடித்து பெய்ய, அம்ரிதா இவர்கள் கடை வாசலில் மழைக்கு ஒதுங்க, அவன் மனம் மொத்தமாக அவளிடம் சென்று விட்டது. அதுவரையிலும் சும்மா பார்த்து கொண்டு இருந்தவன் அதன் பின் மனதில் உறுதி செய்து கொண்டான்.

***********

மாலை, வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவனை பிடித்து கொண்டார் ஜெயந்தி.

“என்னடா ராஜா, உன் கல்யாணத்தை பத்தி பேசினாலே ஏதோ ஒரு காரணம் சொல்லி ஓடிப் போய்டுற….?”

“தெரிஞ்சுடுச்சுல்ல பெரியம்மா…. அப்போ இனிமே பேசாதீங்க….” சொல்லி விட்டு அவன் சிரிக்க,

“அக்கா பாவம் டா, மாமா கோவப்படுறாராம்…. உன் தம்பிக்கு பதில் சொல்ல தெரியாதா கேட்கிறாராம்…. அக்கா கஷ்டப்படுறா…. நாமளே அவளுக்கு ஒரு கஷ்டம் கொடுக்கலாமா….?” எப்படி பேசினால் காரியம் நடத்தலாம் என்று யோசித்து யோசித்து செயல்பட்டார் ஜெயந்தி. சற்று தள்ளி அமர்ந்திருந்த முருகர் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தார். மகன் பெரியம்மாவை அசால்ட்டாக சமாளிப்பான் என்று தெரியும் அவருக்கு.

“சரி இப்போவே நான் மாமா கிட்ட, நந்துவோட காலேஜ் அட்மிஷன் பத்தி பேசுறேன். கொஞ்சம் பிசியா இருந்தேன்….இல்லைனா அன்னைக்கே மாமா கிட்ட பேசி இருப்பேன்….” என்றவன் ஜெயந்தியின் மறுப்பான தலையாட்டலை கண்டு கொள்ளாமல் நகர்ந்தான்.

அவன் நகரும் நேரம் சரியாக அவர் அறையில் இருந்து வெளியே வந்த ஞானம்,

“ரிலாக்ஸ் பண்ணிட்டு என் ரூமுக்கு வா கார்த்தி, கொஞ்சம் பேசணும்.” என்றார்.

“சரி பா, அரை மணி நேரத்தில் வரேன்….” சொல்லி விட்டு அவன் செல்ல,
முருகரை நெருங்கினார் ஜெயந்தி.

“நீங்க சொல்லுஇங்க ராஜா கிட்ட, நம்ம பேத்தியை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு….”

“அவனுக்கு இஷ்டம் இருந்தா அவனே சொல்லுவான்…. இதில நான் சொல்ல ஒன்னுமில்லை….” பிடி கொடுக்காமல் பேசினார் ஞானம்.

“என்ன இப்படி சொல்றீங்க….? நம்ம வீட்டிலேயே பொண்ணும் மாப்பிள்ளையும் இருக்கும் போது நாம ஏன் வெளில போய் தேடணும்…. அதை விட அவனுக்குன்னே பொறந்த பொண்ணு நந்து….”

இருங்க இருங்க…. இது அவன் வாழ்க்கை…. அவனுக்கும் ஆசைகள் இருக்கும்…. ஞானம் பேசி முடிக்கும் முன்,

“அவன் கல்யாணத்தையே அவன் தான் தீர்மானிச்சான்…. அதை மறந்துட்டியா ஜெயந்தி…. அப்படி இருக்கும் போது இப்போ எப்படி அவன் பையன் கிட்ட ஞானம் பேச முடியும்?”

முருகர் பேச பேச, ஆத்திரம் வந்தது ஜெயந்திக்கு…. சற்றும் யோசிக்காமல்,

“ஆமா அவ்ளோ அவசரப்பட்டு அவர் பண்ணது தான் பாதியில் போயிடுச்சு…. அவர் வாழ்க்கையே வீணா போச்சு….”

“போதும்…. அம்ரிதவல்லியோட நான் எப்படி வாழ்ந்தேன்னு எனக்கு தெரியும்…. யாரும் எங்க வாழ்க்கையை பத்தி பேசவேண்டாம்….” பட்டென்று சொன்னார் ஞானம்.

அப்போதும் அடங்காமல்,

“அப்புறம் ஏன் உங்களுக்கு அப்படி ஒரு அவப்பெயர் வாங்கி கொடுத்துட்டு போய் சேர்ந்தா மகராசி….? இருந்தவரைக்கும் வாயே திறக்க மாட்டா மகராசி எதுக்கும், அவ்ளோ அழுத்தம், பிடிவாதம்…. ஜெயந்தி புலம்ப ஆரம்பிக்க,

ஜெயந்தி பேசுவது பிடிக்காமல், ஞானம் அவர் அறைக்கு செல்ல தொடங்கினார்….

“அப்பா!” கேபியின் குரல் கேட்க அப்படியே நின்றார் ஞானம்.

உரக்க அழைத்து அறைக்குள் செல்பவரை நிறுத்திய கேபி, ஜெயந்தியை பார்த்து,

“பெரியம்மா அடிக்கடி என்னை பத்தி பெருமையா ஒன்னு சொல்வீங்களே, அதை சொல்லுங்களேன் இப்போ….” என்றான்.

“என்ன சொல்வேன்….? நிறைய இருக்கே ராஜா….”

“அதான் ஜெயந்தி, ராஜா மாதிரி அழுத்தமா அமைதியா காரியத்தை சாதிக்க இன்னொரு ஆள் பிறந்து தான் வரணும் சொல்வியே….அது” என்றார் அதுவரை அமைதியாக இருந்த முருகர்.

“இம்ம்ம்…. அதுக்கு என்ன ராஜா இப்போ….?” இந்த கிழவன் இப்போ இதை சொல்லணுமா…. என்று முருகர் மேல் தோன்றிய கடுப்பை எல்லாம் அடக்கி கொண்டு கேட்டார் ஜெயந்தி.

“நான் அப்போ எங்க அம்மா மாதிரி தான்…. இவ்ளோ நாள் நீங்க ரசிச்ச குணம் எங்க அம்மாகிட்ட இருந்து வந்திருக்குனு எனக்கு இப்போ தான் தெரியுது பெரியம்மா…. இதே மாதிரி இனிமே எங்க அம்மாவோட சூப்பர் குவாலிட்டி எல்லாம் அடிக்கடி சொல்லுங்க…. கேட்க நல்லா இருக்கு….என்னப்பா நான் சொல்றது கரெக்ட் தானே….?” என்றான் கேபி.

இனி அம்ரிதவல்லி பத்தி பேசுவா ஜெயந்தி….? வாய்ப்பில்லை…. என் மகனுக்கு எவ்ளோ அறிவு, அவனும் அவன் அம்மாவும் ஒன்று என்று சொல்லி, அவன் அம்மாவை பத்தி யாரும் ஒரு குறை சொல்லாத முடியாத படி செய்து விட்டானே….தனக்குள் சிரித்து கொண்டார் முருகர்.

ஜெயந்தியின் மனக் கட்டுப்பாட்டையும் மீறி அவர் முகத்தில் அவர் மனதில் இருந்த அதிருப்தி வெளிப்பட்டது. நான் வளர்த்தும் அவன் அம்மாவை பத்தி பெருமையா பேசுறான்…. இதில நான் வேற அவ பெருமை பேசணுமா….? இத்தனை நாள் இல்லாம இப்போ என்ன புதுசா அவளை பத்தின பேச்சு ஆரம்பிக்குது….? இதை முளையிலேயே கிள்ளி போட்டுடணும்…. அவ ஒரு வீணா போனவ…. நல்லது போய் சேர்ந்தா….” என்று மனதினில் நினைத்து கொண்டு,

“என் பிள்ளையை பத்தி ஊரே பேசுது…. அது கேட்க தான் எனக்கு ரொம்ப சந்தோஷம்…. என்று கேபி சொன்னதற்கு சற்றும் சம்பந்தமே இல்லாமல் பேசி விட்டு, ஞானவேலிடம் தன் கடுப்பை எல்லாம் காட்டினார் ஜெயந்தி.

“பாருங்க, உங்ககிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன், இந்த ஊமைச்சி பேத்தி இருக்காளே அவளுக்கு காலேஜ் பீஸ் கட்ட நிறைய பணம் வேணுமாம்….உங்களை பார்க்கணுமாம்…. உங்க சம்சாரத்தோடவே சுத்திக்கிட்டு இருந்தாள்ல அந்த உரிமை அவளுக்கு உங்ககிட்ட…. நான் சொல்லிட்டேன், இங்க எல்லாம் இப்போ நான் தான் பொறுப்பு, நான் தான் முடிவு பண்ணுவேன்…. எவ்ளோ வேணும்னு மட்டும் சொல்லு, கொடுக்கிறேன்னு…. உங்களுக்கு எவ்ளோ வேலை இருக்கு….! அவ கையில காட்டுற வித்தையை புரிஞ்சுக்க உங்களுக்கு ஏது நேரம்….? சரி தானே…. நான் சொல்றது….?”

பணம் கொடுக்கிறேன் என்று ஜெயந்தியே சொன்ன பிறகு அதில் என்ன சொல்வது….? “நேரம் இருந்தா பார்க்கிறேன் நான்…. வர சொல்லுங்க….” என்றதோட நிறுத்தி கொண்டார் ஞானம். மற்ற இரு ஆண்களும் கூட அமைதியாக இருந்தனர்.

அது தானே ஜெயந்தி எதிர்பார்ப்பதும்….! நமுட்டு புன்னகை புரிந்த ஜெயந்தி,

இது என் வீடு! என் மக்கள் தான் இங்கே நிலையா இருக்கணும்…. ராஜா என் பிள்ளை….! பிறந்தது மட்டும் தான் அவளுக்கு….! நான் நினைச்சது தான் நடக்கணும் இங்கே!! என்று சொல்லி கொண்டார் மனதில்.

மூத்த தலைமுறை அம்ரிதாவை ஓரங்கட்டிய ஜெயந்தியால் இந்த தலைமுறை அம்ரிதாவை ஒன்றும் இல்லாமல் ஆக்க முடியுமா…? கேபி என்ன செய்வான்….?

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!