வஞ்சம் – 10
அவன் கூறிய வார்த்தைகளில் அப்படியே அதிர்ச்சியில் சிலை என ஸ்ரீநிஷா சமைந்து நிற்க, இளஞ்செழியன் அவளது கண்களுக்கு முன் கிண்டலாக கையினை ஆட்டி, “ஏய்… என்ன..? சொன்னது மறந்து போச்சா..? போ… போய்… என் செல்லக் குட்டிகள குளிப்பாட்டு…” என்று ஆணையிடுவது போல கூற,அவளும் வேறு வழியில்லாமல் “ஆம்..” என்று சோகமாக மேலும் கீழும் தலையை ஆட்டி விட்டு வெளியே தளர்ந்த நடையுடன் வந்தாள்.
‘எப்படி இதுகள குளிப்பாட்டுறது… ஏதாவது செஞ்சாகணுமே… இவனும்… இவனோட பனிஷ்மென்ட்டும்…. குளிப்பாட்டலைனா…. இவனும் விடமாட்டான்…. ஸ்ரீநிஷா… யோசி…. யோசி… மூளையை கசக்கி யோசி….’ என்று நாடியில் கை வைத்துக் கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்து யோசித்துக் கொண்டிருந்தாள்.
திடீரென முகத்தில் பிரகாசம் ஒளிர “ஆஹ்…. அது தான் சரி… அப்படியே செஞ்சிருவோம்…” என்று அந்த நாய்கள் இருக்கும் பெரிய கூட்டிற்கு அருகே சென்றாள்.
மூன்று நாய்களும் ஆறு வறுத்த கோழிகளை முழுமையாக நன்றாக உண்டு விட்டு உறங்கிக் கொண்டிருந்தன.
இது தான் நல்ல சான்ஸ் என்று அதன் கூட்டிற்கு பின்னே சென்று அரவம் எழுப்பாது அமைதியாக, மெது மெதுவாக அதனுடைய சங்கிலியை எடுத்து கூட்டுக்குள் இருக்கும் கம்பிகளில் ஒவ்வொன்றையும் பிணைத்துக் கொண்டாள்.
பின்பு சத்தமே வராமல் கைத்தட்டி தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொண்டு, தனக்குத்தானே கை குலுக்கி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு, சிறு பிள்ளைத் தனமாக தனது வெற்றியை மிகவும் விமர்சையாக மனதிற்குள் கொண்டாடி விட்டு, அருகில் உள்ள நீர் பம்பியில் குழாயினை பொருத்தி, அந்த குழாயினை நேராக அந்த நாய்கள் படுத்திருக்கும் கூட்டிற்கு அருகில் கொண்டு வந்தாள்.
“டேய்… செல்லக்குட்டிகளாடா நீங்க….? விட்டிருந்தா…. என்னைய தின்னு இந்நேரம் ஏப்பம் விட்டு இருப்பீங்க… பார்க்க எமண்ட வாகனம் மாதிரி இருந்துகிட்டு…. என்ன ஆட்டம்
போடுறீங்க…. உங்கள…. பொறுங்க…..” என்று கூறிவிட்டு அங்கும் இங்கும் யோசனையுடன் நடந்தாள்.
“அஹ்ஹ…. உங்க முதலாளி நினைச்சுக்கிட்டாரு…. எனக்கு பனிஷ்மென்ட் தாரதா…. ஆனா உண்மையிலேயே இது உங்களுக்குத் தான் பனிஷ்மென்ட்…. ஏன் என்று சொல்லுங்க பார்ப்போம்…” என்று நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் அந்த நாய்களிடம் கேட்டாள்,
“நான் யாருன்னு நினைச்சீங்க…. ஸ்ரீ நிஷா டா… உங்கள உண்டு இல்லன்நு பண்ணிருவேன் பாத்துக்கோ….” என அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே நடுவில் படுத்து இருக்கும் லைக்கா மெதுவாக தலையை அசைக்கத் தொடங்கியது.
எங்கிருந்து தான் அவ்வளவு பயம் வந்ததோ தெரியவில்லை. இரண்டடி பின்னே பாய்ந்து விட்டாள் நமது ஸ்ரீநிஷா.
“அச்சச்சோ…. எழுந்துட்டானா…? என்னதான் சங்கிலியால கட்டி வச்சாலும்… அது எழும்பி குரைக்கும் போது என் உடம்பிலிருந்து உயிர் வேளியே போய்ட்டு வர்ற மாதிரியே… ஒரு ஃபீலிங்கு….. எப்படித் தான் இதுகளை குளிப்பாட்ட போறேனோ……! முடியல….. அவன் கிட்ட ஏதோ…. ம்ன்னு பெரிய ஜான்சி ராணி போல தலையாட்டி விட்டு வந்துட்டேன்….. ஆனா இதுகள் குபேரனுக்கு சொந்தக்காரர் போல இப்படி தூங்கி கொண்டு இருக்குதுகள்…. எப்படித் தான் இந்த மிஷனை முடிக்கிறதோ…! தெரியலையே…!”
“ஓகே…… டைம் வேற போய்கிட்டு இருக்கு….. இப்போதைக்கு மை டியர் செல்லங்களா….? உங்கள எழுப்பிட்டு தான் குளிக்க வைக்கணும்…. சுச்சு…. சுச்சு… சுச்சு…. சுச்சு….” என்று அவளுக்கு தெரிந்த ராகத்தில் ஏதோ அவள் இனிமையாக பாடுவது போல கண்களை மூடி பாடிக் கொண்டிருந்தாள்.
சிம்பா மெதுவாக காதை அசைத்து உறுமியது. உடனே பாடலை நிறுத்தி விட்டு “என்னடா… சிம்பா…? நான் பாடுற பாட்டு…. உனக்கு அவ்வளவு இனிமையா இருக்கா……? நித்திரையிலும் நல்லா கேட்கிறே…..?” என்று கூறி விட்டு மீண்டும் அவள் அதே பாடலை அதே தோரணையில் பாட உறுமிய சிம்பா எழுந்து நின்று குரைக்கத் தொடங்கியது.
“அச்சச்சோ வேலியில போற ஓணானை… தூக்கி வேட்டியில விட்ட கதையா போயிட்டே….! சும்மா இருந்ததை சொறிஞ்சு விட்டுட்டனே…!”
“டேய் சிம்பா குரைக்காத டா….. நான் தான்…. நான் தான் பாடினேன்….. நான் இனிமே பாடவே மாட்டேன்….. சும்மா இருடா…. சத்தம் போடாதே….. சத்தம் போடாதே….. ப்ளீஸ்….. ப்ளீஸ்… காம் டவுன்…..” என்று அவள் சத்தமிட அது பாய்ந்து பாய்ந்து குரைக்கத் தொடங்கியது.
அதன் சத்தம் கேட்டு மற்ற லைக்காவும், டைகரும் நண்பனுக்கு ஏதோ ஆபத்து என்று நினைத்து எழுந்து விட்டது. அதுவும் அதனுடன் சேர்ந்து ‘எனது நண்பன் சிம்பாவையா….? சீண்டி பாக்குறா….. யாருகிட்ட…’ என்று இரண்டு நாய்களும் நண்பனுக்கு துணையாக சண்டைக்கு வந்து நின்றன.
இருந்தும் அதனால் நகர முடியாதல்லவா, நம்ம தைரியசாலி ஸ்ரீ நிஷா தெனாவட்டாக….. இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டு தூக்கிப், “எங்கே….. கிட்ட வாங்கடா…. பாப்போம்…..” என்று சவால் விட்ட படி கையில் இருந்த குழாயினை பிடிக்க, அதிலிருந்து நீர் சீறிப்பாய்ந்து வெளியே தெறிக்க, மூன்று நாய்களும் ஒவ்வொரு திசைக்கு பாய்ந்து ஓடத் தொடங்கின.
பாவம் அந்த நாய்களுக்கு நீர் என்றால் ஆகாது போல. அதனால் நீரைக் கண்டதும் எமனைப் பார்த்தது போல் எங்கு ஓடுவது என்று தெரியாமல். மாறி, மாறி பாய்ந்து கொண்டு திரிந்தன.
ஆனால் ஸ்ரீநிஷாவால் பிணைக்கப்பட்ட சங்கிலியினால் அவ்விடத்தை விட்டு நாய்களால் அகல முடியவில்லை.
ஸ்ரீ நிஷா உடனே அந்த மூன்றையும் தனது கையில் உள்ள நீர் குழாயினால், நீரினை வாரி தெளித்தாள். அதிலிருந்து வரும் வேகமான நீர் மூன்று நாய்களையும் நன்றாக நனைத்தது.
அந்த மூன்று நாய்களும் நனைவதை பார்த்து ஸ்ரீநிஷா கைதட்டி ஆட்டம் போட்டு சிரித்தாள். “இதை மாதிரி உங்க பாஷையும்…. ஓட… ஓட… நான் விரட்டல… என்னைப் பற்றி…. என்ன நினைச்சுகிட்டு… இருக்கீங்க…. ஊருக்குள்ள என்ன பத்தி விசாரிச்சு பாருங்க…. என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் என்னைய ஒரு குட்டி சொர்ணாக்கான்னு…. தான் சொல்லுவாங்க…. தெரியுமா…? பிச்சி புடுவேன்…. பிச்சி….” என்று தன்னைப் பற்றி அப்பட்டமாக பொய்யினை கூறி ஒற்றை காலை தூக்கி தொடையில் கையால் அடித்து அந்த நாய்களை பார்த்து சவால் விட்டாள்.
அப்போது இவளது குறும்புத்தனத்தை பார்த்து இந்திரனுக்கு பெரும் நகைப்பு ஏற்பட்டதோ… தெரியவில்லை… கருமேகங்கள் ஒன்று கூடி ஒன்றை ஒன்று உரச பெரும் இடி இடித்தது.
அச்சத்தை கேட்டு பயத்தில் உடல் அதிர கையில் உள்ள குழாயினை கீழே போட, அப்போது தான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது.
இடி இடித்த சத்தத்தின் மூலம் மூன்று நாய்களும் இன்னும் தறி கெட்டு ஓட, அதில் பிணைத்திருந்த ஒரு சங்கிலி நாய்களின் பாய்ச்சலினால் பூட்டி இருந்த லாக் எதிர்பாராத விதமாக விரிசல் ஏற்பட, அது உடைவுற்று…. அதுவும் டைகரோட சங்கிலி…. டைகர் சும்மா விடுமா…? முதலாவதாக ஸ்ரீநிஷா மீது வெருண்டு பாய எண்ணம் கொண்டு திரும்பி ஸ்ரீனிஷாவை பார்த்து உறுமியது…. அப்படியே அசையாமல் அதிர்ந்து நின்ற ஸ்ரீநிஷா டைகரின் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தால், வேட்டையாடும் சிங்கத்தைப் போல அவள் மேல் பாய தயாராக இருந்தது.
அதனுடைய லாக் செய்யப்பட்ட சங்கிலி உடைவுற்றது கூட தெரியாமல்… “ஏய்… என்ன உருமுற…. இந்த சேட்டை எல்லாம்…. இங்க செல்லாது…. உன் பாஸ் கிட்ட வச்சுக்க…. கை, கால் இரண்டையும் உடைச்சி சூப்பு வெச்சி…. உனக்கே தந்துவிடுவேன்….” என்று அவள் நீர் குழாயினை மீண்டும் எடுத்து அதன் மீது தெளிக்கப் போக, அது ஒரே பாய்ச்சலில் அவள் முகத்திற்கு அருகில் வந்து நெருங்கி நின்றது.
அவளாலேயே அவளது கண்களை நம்ப முடியவில்லை. கட்டி வைத்த நாய் எவ்வாறு இப்படி ஓடி வரும் என்று திகைத்துப் போய் கண்கள் இரண்டும் கீழே விழும் அளவிற்கு பேர் அதிர்ச்சியில் நின்றிருந்த ஸ்ரீ நிஷா, உடனே ஓட்டம் பிடித்தாள்.
அவளது ஓட்டத்திற்கெல்லாம் அந்த டைகர் அசருமா…? அவ்வேளை இவர்களது விளையாட்டை கண்டு இதோ வருகிறேன் என மழையும் கூட்டு சேர்ந்து மண்ணை நனைக்கத் தொடங்கியது.
மழையில் டைகர் துரத்த, ஸ்ரீ நிஷா படு வேகமாக ஓடத் தொடங்கினாள். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு எதிரில் இருப்பது என்னவென்று கூட புரியாமல் தலை தெரிக்க ஓடிக் கொண்டே இருந்தாள். அவள் ஓடும் வேகமானது அதன் இரண்டு எட்டு பாய்ச்சலே போதும் என்பது போல் விடாமல் ஸ்ரீநிஷாவே பின் தொடர்ந்து கொண்டே இருந்தது.
இடி இதனுடன் போராட முடியாது அதற்கு எனக்கு தென்பும் இல்லை என்றபடி உயிரை கையில் பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடிச் சென்று கதவை சாத்தி விடலாம் என்றபடி திடீரென அவளின் மூளையில் உதித்த யோசனையுடன் தோட்டத்திலிருந்து வீட்டிற்கு ஓடிச்செல்லும் போது அப்போதுதான் வீட்டிலிருந்து வெளியே வந்த இளஞ்செழியன் வருவது தெரியாமல் எதிர்பாராத விதமாக அவன் மீது மோதி நின்றாள்.
ஸ்ரீ நிஷா இளஞ்செழியன் மீது மோதிய பின்பு என்ன நடந்திருக்கும் என்பது தெரியனுமா…. ? அதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்….