வஞ்சம் 13
சோபாவில் இருந்த சரோஜா தேவிக்கு திடீரென தூக்கி வாரி போட்டது போல் இருந்தது. அதிலிருந்து அதிர்ச்சியுடன் எழுந்த படி சுற்றி முற்றிப் பார்த்தவர், மனதில் ஏதோ பதற்றம் தொற்றிக்கொள்ள அங்குமிங்கும் கண்களை மேய விட்டார்.
அப்போது அங்கு வந்த இளஞ்செழியன், புருவத்தைச் சுருக்கியபடி “என்னம்மா..?” என்று கேட்க,
“இல்ல தம்பி, இங்க வந்ததுல இருந்து ஏதோ மனசுக்குள்ள ஒரே படபடப்பா இருக்கு.. ஏனென்று தெரியல்ல. கொஞ்ச நாளா மனசும் சரியில்ல அதனால தான் இப்படி இருக்குன்னு நினைச்சேன்… ஆனா இப்போ யாரோ தெரிஞ்ச பழக்கப்பட்ட ஒரு பொண்ணோட குரல் கேட்ட மாதிரி இருந்துச்சு அதுதான்…” என்றதும் இளஞ்செழியனின் கண்கள் விரிந்து சுருங்கின.
“ஏன்..? என்ன பிரச்சனைமா..? ஏன் மனசு சரியில்ல..? ஆசிரமத்தில ஏதும் பிரச்சனையா..?”
“ஆமா தம்பி.. ஒரு பொண்ண காணும். ஒரு வாரமா தேடிகிட்டு இருக்கோம்.. ஆனா ஒரு தகவலும் கிடைக்கல ரொம்ப நல்ல பொண்ணுபா எங்க போச்சோ தெரியல..”
“எப்படி காணாம போச்சு..?”
“தெரியலப்பா காலேஜ் முடிந்து பிரெண்ட்ஸ் கூட வெளியே போயிட்டு வரேன்னு சொல்லுச்சு.. ஆனா வரவே இல்லை அவங்களும் ஒன்னும் தெரியாதுன்னு சொல்றாங்க..”
‘லவ்வு ஏதும்..”
“சேச்சே.. அந்த மாதிரி பொண்ணு எல்லாம் இல்லப்பா…”
“போலீஸ் கம்ப்ளைன்ட் எதுவும் கொடுத்தீங்களா..?”
“இல்ல தம்பி கொடுத்தா ஆசிரமத்துக்கு கெட்ட பெயர் வந்துரும் என்று கொடுக்கல..”
“சரி, எனக்குத் தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் ஒருத்தர் இருக்காரு பெயர் ராகுல்.. அவன் கிட்ட சொல்லி அந்த பொண்ணத் தேடச் சொல்லுறேன் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க.. அந்தப் பொண்ணோட போட்டோ வச்சிருக்கீங்களா..?”
“இல்ல.. ஆசிரமத்தில இருக்கு..”
“இட்ஸ் ஓகே.. ராகுல மப்டில உங்களுடைய ஆசிரமத்துக்கு இப்ப போகச் சொல்றேன்.. நீங்க போட்டோவ அவனோட கைல கொடுத்துடுங்க.. அவன் எப்படியும் கண்டுபிடிச்சு தந்திடுவான்..”
*ரொம்ப நன்றி தம்பி..” என கண்கள் கலங்க கூறினார்.
“கூல்மா.. டேக் இட் ஈசி.. எல்லாமே நல்லதாவே நடக்கும்..” என்று தன்னால் முடிந்த வரை ஆறுதல் கூறி அவரது மனதை தேற்றினான்.
“ஆனா, இங்க வந்ததுல இருந்து ஒரே அவள் நினைப்பாவே இருக்கு… ஏதோ இங்க பக்கத்துல எங்கேயோ இருக்கிற மாதிரி மனசுக்குள்ள தோணுது..” என்று அவன் கொடுத்த தேநீரை அப்படியே கீழே வைத்துவிட்டு எழுந்தார்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.. இங்கே யார் இருக்கப் போறாங்க..? நான் மட்டும்தான் இருக்கேன் ராமையாவும் அவங்களோட தம்பிக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி ஊருக்கு போய்ட்டாங்க.. அதுதான் நானே உங்களுக்கு டீ போட்டு கொண்டு வந்தேன்..” என்று கூறிய இளஞ்செழியனை பார்த்து,
“நான் கிளம்புறேன் நிறைய வேலை இருக்கு..” என்று கூறிவிட்டு மிகவும் தடுமாற்றத்துடன் அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.
இளஞ்செழியனும் வாசல் வரை சென்று அவரை வழி அனுப்பி விட்டு கதவை மூடிவிட்டு திரும்பி குளிக்கச் சென்று விட்டான்.
மேலே இருந்து இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ நிஷா ‘இந்த நிலைமையில் எவ்வாறு சரோஜா அம்மா முன்பு போய் நிற்பது..?’ என யோசித்துக் கொண்டிருந்தாள்.
‘அரைகுறையாக டவலுடன் அங்கங்கு சிறு சிறு தழும்புகளுடன் இந்நிலையில் எப்படி அவருக்கு முன் போய் நிற்பது..? எவ்வாறு உதவி கேட்பது..? என்னை இந்த நிலைமையில் பார்த்தால் அவர் மிகவும் வேதனை அடைவார். அதற்கு நான் இங்கேயே எதையாவது செய்து இறந்து போவதே மேல்.. என்னை தன் பிள்ளை போல வளர்த்தவர்.. எந்தப் பிள்ளை தான் இப்படி ஒரு நிலையில் அன்னையை எதிர்கொள்வாள்… அன்னை வேதனையில் மூழ்கித் தவிக்க எந்த மகளாவது எண்ணுவாளா..? அப்படி ஒரு நிலையை என்னுடைய அம்மாவிற்கு நான் உருவாக்க மாட்டேன்… கடவுள் என்னை சோதிப்பதற்கு காரணம் தான் என்ன என்று சிந்தித்தவள்..’ அழுது அழுது கரைந்து போனாள்.
குளித்து முடித்து வெளியே வந்தவனின் நெற்றியில் சிந்தனை ரேகைகள் படர்ந்தன. விடிந்து இவ்வளவு நேரமாகியும் ஸ்ரீநிஷா இன்னும் கீழே வராதது எண்ணி அவனுக்கு யோசனை பூத்தது.
மேலே சென்று பார்த்தால் ஸ்ரீநிஷா அவ்வறையில் இல்லை.
அவனுக்கு மனதில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றின. நேற்று நடந்த விடயத்திற்காக அவள் எங்காவது சென்று தற்கொலை பண்ணி கொண்டாலோ அல்லது வேறு ஏதும் விபரீதமாக செய்துவிட்டாலோ என்று எண்ணவே மனம் மிகவும் பாரமாகக் கனத்தது.
தலையில் கை வைத்தபடி ‘சரிி.. எல்லாம் முடிந்து விட்டது..’ என்று நினைத்து கொண்டு அவன் திரும்பிய போது காலில் ஏதோ தட்டுப்பட குனிந்து பார்த்தவன் கட்டிலின் அருகில் மயங்கிக் கிடந்த ஸ்ரீநிசாவைக் கண்டதும் அவனுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது போல் இருந்தது.
சரோஜாதேவியைப் பார்த்த பின்பு அவரிடம் செல்ல முடியாத தனது நிலையை எண்ணி வருந்திய ஸ்ரீ நிஷா அப்படியே மெல்ல மெல்ல நடந்து வந்த வேலை கால் தடுமாறி அப்படியே தலையின் பின்புறம் அடிபட விழுந்து மயங்கி விட்டாள்.
இதனை அறியாத இளஞ்செழியன் ஸ்ரீ நிஷா எங்கேயும் போகவில்லையா? இங்கதான் இருக்கியா..? இன்னும் தூங்கி எழும்பல போல..’ என்று அருகில் சென்று பார்த்த போது தான் அவனுக்கு விளங்கியது, அவளது தலையில் இருந்து இரத்தம் சிறிதளவு கசிந்திருப்பது.
உடனே அவளை தூக்கித் தனது மடியில் படுக்க வைத்து தலையின் பின்புறம் ஏற்பட்ட காயத்தைத் தனது கரத்தினால் தொட்டுப் பார்த்தான்.
அவள் சுயநினைவு இன்றி இருப்பதை அவனால் கொஞ்சம் கூட ஏற்கவே முடியவில்லை. அருகில் இருந்த நீரை எடுத்து முகத்தில் தெளிக்க,
அவளது பட்டாம்பூச்சி இமைகள் படபட என அடித்துக் கொண்டன.
பின்பு மெதுவாக கண்களைத் திறந்து பார்த்த போது அவளது கண்ணின் முன் இளஞ்செழியன் பரிதவிப்புடன் இருப்பதைக் கண்டவள், உடனே உடலில் தீ சுட்டால் போல் பதறி எழுந்தாள்.
திடீரென மடியில் இருந்து எழுந்த ஸ்ரீநிஷாவைப் புரியாத பார்வையுடன் உற்று நோக்கினான் இளஞ்செழியன்.
ஸ்ரீநிஷாவோ அனல் கக்கும் பார்வையுடன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க,
“என்ன தொடாத.. நீ எல்லாம் ஒரு மனுஷனா…? ச்ச்சே… உங்க மேல நான் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் வச்சிருந்தேன் தெரியுமா..? நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை…” என்று அவள் கூற அவனது கண்கள் சிவந்து கோபச் சாயலை பூசிக் கொண்டது.
எதுவும் பேசாமல் அப்படியே உடல் இறுக அதே இடத்தில் அசையாமல் சிலை போல நின்றான்.
“என்னுடைய சம்மதம் இல்லாம நீங்க எப்படி என்னை தீண்டலாம்…? அதுக்கு உங்களுக்கு யார் உரிமை தந்தது..? இப்படி ஒரு கேவலமான காரியத்த செய்வீங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல..
ஒரு பொண்ணோட எப்படி பழகணும்..? பெண்கள எப்படி மதிக்கணும்..? பெண்ண எப்படி கண் கொண்டு பாக்கணும்..? என்று தெரியாத அளவுக்கு தான் உங்கள உங்க அம்மா வளர்த்து வெச்சிருக்காங்க… அம்மா இறந்ததும் அம்மா.. அம்மா.. என்று உருகினா மட்டும் பத்தாது… புள்ளைக்கு ஒழுங்கான பழக்கவழக்கங்கள சொல்லிக் கொடுத்திருக்கணும்… முதல்ல வளர்ப்பு சரியில்ல… வளர்ப்பு நல்லா இருந்திருந்தால் நீங்க இப்படி ஒரு பொண்ணு மேல அத்துமீறி நடந்திருக்க மாட்டீங்க…” என்று கூறியதும் எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் அவனுக்கு வந்ததோ தெரியவில்லை.
அவனது கைகள் இரண்டும் புயல் வேகத்தில் அவளது கழுத்தை நெரித்து சுவற்றோடு ஒட்டி மேலே தூக்கி நிறுத்தினான்.
அவளது கால்கள் தரைக்கு மேலே ஒரு அடி அந்தரத்தில் ஆடிக் கொண்டிருந்தது.
இதுவரை இளஞ்செழியனை இப்படி ஒரு கோணத்தில் அவள் பார்த்ததே இல்லை.
அவனது உணர்ச்சிகளில் ரௌத்திரம் தாண்டவம் ஆட அவன் கோபக் கனலை கக்கும் டிராகனாகவே மாறி விட்டான்.
இவ்வாறு இளஞ்செழியன் செய்வான் என்று எதிர்பாராத ஸ்ரீ நிஷா அவனது திடீர் செயலினால் மூச்சடைத்து தன்னுயிரை கையில் பிடித்துக் கொண்டு போராடினாள்.
அவளது போராட்டங்கள் எல்லாம் அவனது கண்களின் முன் சிறு புழு துடிப்பது போலவே இருந்தது.
இளஞ்செழியன் இவ்வாறு ஸ்ரீ நிஷாவுடன் நடந்து கொள்வதற்கான காரணம் யாது..?
அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்…