🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍
👀 விழி 06
ருத்ரனின் மனைவியெனும் பட்டத்துக்கு சான்றாய் கழுத்தில் தாலியுடன் அவனருகினில் நின்றவளைக் கண்டு உறைந்து தான் போயிருந்தனர் அனைவரும்.
முதலில் நிலைக்கு வந்தவர் செல்வன் தான். மகனின் செயலில் கொதித்துப் போனவரோ “என்ன பண்ணி வெச்சிருக்கான்னு அவன் கிட்ட கேளு” என மனைவியை உலுக்கினார்.
இயல்பு நிலைக்கு மீண்டு “ருத்ரா என்னடா இது?” இயலாமையுடன் வினவினார் அவர். கணவன் ஆடப் போகும் ஆட்டத்தை அறிந்து மனம் கலங்கியது அவருக்கு.
“கல்யாணம் மம்மி! இதோ உன் பையன் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கேன். அதுவும் என் அம்முவை. சந்தோஷப்பட மாட்டீங்களா?” பாக்கெட்டினுள் கையை விட்டுக் கொண்டு சாதாரணமாகக் கேட்டான் மகன்.
“கல்யாணம் புண்ணாக்கு எல்லாம் எனக்கு தெரியாதா? அது எப்படி எங்க கிட்ட கேட்காம நீ கல்யாணம் பண்ணலாம்? எங்க விருப்பத்தை கேட்க மாட்டியா?” மகனிடம் எகிறினார் செல்வன்.
தாயிடமிருந்த விழிகளை தந்தை மீது பதித்து “அப்போ என் கிட்ட கேட்காம நீங்க எப்படி ஆலியாவை எனக்கு கட்டி வைக்க முடிவு பண்ணலாம்? என் விருப்பத்தை கேட்க மாட்டீங்களா? எனக்கு மனசுனு ஒன்னு இல்லையாப்பா?” மிக மிக நிதானமாக கேள்விச் சரங்களை எய்தினான்.
அதிர்வுடன் பார்த்தனர் அனைவரும். இவனுக்கு எப்படி செய்தி கிடைத்தது? திக்கென்றிருந்தாலும் இந்தப் பெண் திடீரென எப்படி வந்தாள் என்ற குழப்பமே அதனை விட மேலோங்கி நின்றது.
“என்ன ருத்ரா எதிர்த்து கேள்வியெல்லாம் கேட்க ஆரம்பிச்சுட்ட?” செல்வனின் வார்த்தைகள் வன்மையாக வெளிவந்தன.
“எதிர்த்து கேட்கல. நியாயத்தை கேட்கிறேன்பா. என் மனசுல அம்மு இருக்கும் போது வேற யாரையும் கல்யாணம் பண்ணிப்பேன்னு எப்படி நினைக்கலாம்னு தான் கவலையா இருக்கு” அவனுக்கும் தந்தையிடம் இவ்வாறு நேருக்கு நேர் பேசுவது அவரை அவமதிப்பது போல் தோன்றியது. ஆனால் பேசாமல் இருக்கவும் முடியவில்லை.
“ஆலியா தான் உனக்கு பொருத்தமா இருப்பா…” என்ற செல்வனின் பேச்சை, “மாப்ள” எனும் கோபாலின் அழைப்பு தடுத்து நிறுத்தியது.
“போதும் மாப்ள! இனிமே தயவு செஞ்சு என் பொண்ணை ருத்ரன் கூட ஒரு பேச்சுக்கு கூட சேர்த்து வெச்சு பேசாதீங்க. இப்படி ஒரு கல்யாணப் பேச்சை நாம எடுத்தோம்னே மறந்துருங்க. இனி இந்த பேச்சை என் முன்னாடி யாரும் பேச வேண்டாம்” உறுதியாக கூறி விட்டு மகளையும் மனைவியையும் பார்த்தார்.
அவரது பார்வை கூறிய செய்தியை உணர்ந்த இருவரும் கிளம்ப ஆயத்தமாக, “அண்ணா” என தவிப்புடன் பார்த்தார் சித்ரா.
அவர் கோபம் கொண்டு விட்டாரோ என்று பயந்தார். தனக்கென இருக்கும் ஒரே உடன்பிறப்பு அவர். அவ்வுறவில் ஏதும் விரிசல் ஏற்பட்டு விடுமோ என அஞ்சியது அவருள்ளம்.
“மனசு சரியில்லமா! நான் அப்புறமா உனக்கு அழைச்சி பேசுறேன்” தங்கையின் மனம் அறிந்தவராகக் கூறி விட்டு மனைவி மற்றும் மகளோடு சென்றார்.
செல்லும் போது சற்றே திரும்பிய கோபாலின் விழிகள் அஞ்சனாவின் ஒரு கணம் மீது படிந்து மீண்டன.
“நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல நீ இவ்ளோ தூரம் போவேனு. கோபாலுக்கு குடுத்த வாக்கை பொய்யாக்க வெச்சிட்ட. இந்த பொல்லாத காதல் உனக்கு பெருசா போயிடுச்சுல்ல” அடங்கா சினத்துடன் கூறி செருப்பை அணிந்து கொண்டு தானும் வெளியேறியவரின் பார்வை அஞ்சனாவை வெறுப்புடன் தாக்கியது.
தனியாக நின்ற சித்ராவுக்கோ என்ன செய்வது என்று புரியாத நிலை. அவனை அப்படியே விடவும் மனமின்றி உள்ளே நுழைந்து ஆரத்தியை எடுத்து வந்து இருவருக்கும் சுற்றி விட்டு விறுவிறுவென சென்று விட்டார்.
தாயின் செய்கையில் இன்னும் ஒடிந்து போனான் ஆடவன். இருந்தும் தன் கரம் பிடித்து வந்தவளை கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்க பக்கவாட்டாக திரும்பி “அம்மு உள்ளே வா” என்றழைத்தான்.
சிலையாக சமைந்து நின்றவளின் கையைப் பிடிக்க பொம்மை போல் அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள் அஞ்சனா.
சோபாவில் அமர வைத்தவன் சமையலறைக்குள் நுழைந்து தண்ணீர் எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.
மறுப்பேதும் சொல்லாமல் க்ளாஸை வாங்கி நீரை ஒரே மூச்சில் குடித்து முடித்தவளின் மனம் ஒரே நாளில் தன் வாழ்வில் உண்டான அதிரடிப் புயலை நினைத்தது.
நேற்றுவரை காத்திருக்க வைத்தவள் இன்று கனவிலும் நினையாதது போல் தன் கரங்களுக்குள் மனைவியாகக் கிட்டிய அந்த எதிர்பாரா சம்பவத்தை நோக்கி ருத்ரனின் சிந்தையும் சுழன்றது.
இன்று காலையில் ஊருக்குச் செல்ல ஆயத்தமாகி தான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருக்கு வாடகையைச் செலுத்தி விட்டு வெளியே வந்தான் ருத்ரன்.
காரில் ஏற எத்தனித்தவனின் மனதில் உருவான உந்துதலில் சற்று நேரம் தரித்து எதிர்வீட்டை நோக்கினான்.
இந்த வீடு ஏன் தனக்கு ஒருவித பரவச உணர்வை ஏற்படுத்துகிறது? அதில் வசிப்பது யார் என நினைக்கும் போது அந்த வீட்டில் வாழும் பெண்ணுக்கு இன்று நிச்சயதார்த்தம் என்று அடுத்த வீட்டு சிறுவன் கூறியது நினைவுக்கு வந்தது.
அந்த வீட்டு படலையின் அருகே சென்று யாராவது இருக்கிறார்களா என பார்த்தான். கதவு மூடியிருந்தது. அந்த வீட்டுத் தோட்டத்தின் அழகும் நேர்த்தியும் அவனை கொள்ளை கொண்டது. பூத்துக்குலுங்கிய மல்லிகைப் பூவின் வாசம் நாசியைத் துளைக்க அவை ஏதோ செய்தி சொல்ல வருவன போல் இருந்தன.
“இந்த ஊருக்கு வந்ததில் இருந்து எனக்கு என்னமோ ஆச்சு. சீக்கிரம் போயிடனும். இல்லனா இந்த வீட்டு மேல கண்ணு வெச்சேன்னு போலீஸ்க்கு போக வேண்டி வந்தாலும் வரும். அப்படி ஏதோ மாயசக்தி இருக்கு இங்கே” காரில் ஏறி புறப்பட்டவனுக்குத் தெரியவில்லை வீட்டுக்கு மாயசக்தி இல்லை, அவனது காதல் மாயக்காரியே அவ்வீட்டின் சொந்தக்காரி என்பது!
மனம் ஏதோ போல் இருந்தது ருத்ரனுக்கு. காரை செலுத்துவதில் கவனம் செலுத்த முடியாது போனது. மனதை ஒருவித படபடப்பு பற்றிக் கொண்டது.
அவன் கண்களில் பட்டது ஒரு கோவில். அவனது கைகள் தானாக வண்டியை நிறுத்தின. கடவுள் நம்பிக்கை எல்லாம் அவனுக்கு அதிகம் இல்லை. சித்ராவின் நச்சரிப்புக்காக வருவான். நேரம் கிடைத்தால் வருவான் அப்படித் தான்.
ஆனால் இப்போது செல்ல வேண்டுமென மனம் உந்தித்தள்ள கோவிலுக்குள் நுழைய எத்தனித்தவனை நடுத்து நிறுத்தியது பூக்கடைக்காரனின் குரல்.
“பூ வாங்கிக்கங்க. பூ பூ”
“எனக்கு பூ வெச்சு விட யார் இருக்கா? என் அம்மு குட்டி எப்போ வருவாளோ” என நினைத்துக் கொண்டு ஷூவைக் கழற்றி விட்டு கோயிலினுள் காலடி எடுத்து வைத்தவனுக்கோ ஒரு வித உற்சாகம் ஊற்றெடுத்தது.
சாமி கும்பிட்டவனின் மனமோ அம்முவின் வரவிற்காய் உருகி வேண்டியது. அத்தோடு தன் பெற்றோருக்காகவும் வேண்டிக் கொண்டான். அவர்களது மனதை என்றும் சங்கடப்படுத்தவோ காயப்படுத்தவோ கூடாது என நினைத்துக் கொண்டான்.
கோயில் மணியைக் கண்டவன் அருகினில் சென்று, “அம்முவை என் கண்ணுல காட்டிடு முருகா! அவள் கைப்பிடிக்கிற பாக்கியத்தை எனக்கு கொடு” என்று உள்ளுக்குள் பிரார்த்தித்து மணியடித்தான்.
திரும்பி நடக்க ஆரம்பித்தவனுக்கு ஏனோ இதயம் துரித கதியில் துடித்தது. அவன் கண்கள் எதையோ தேடின. குளிர் காற்று வீசினாலும் அவனது முகத்தில் வியர்வை அரும்பியது. உள்ளுக்குள் பலவித மாற்றங்கள்.
ஜல் ஜல் கொலுசொலி செவி தீண்டியது. தேகத்தில் புதுரத்தம் பாய்ந்தோட இமைகளை மூடித்திறந்தவன் முன் அழகோவியமாய் நடந்து வந்து கொண்டிருந்தாள் ஒரு பெண்.
“இ..இது அம்மு தானே?” காண்பது கனவோ என நினைத்து கண்களை ஒன்றுக்கு இரண்டு தடவை மூடித் திறந்தான். கனவல்ல என்பதை உறுதிப்படுத்தியது மேனி தீண்டிய காற்றும், அக்காற்றோடு மிதந்து வந்த மழைத்துளியும்.
தான் என்ன உணர்கிறோம் என்றே புரியவில்லை அவனுக்கு. எத்தனை நாட்கள் காத்திருந்திருப்பான் அவளுக்காக? எத்தனை நொடிகள் அவளை நினைத்து நினைத்து உருகி மருகி ஏங்கித் தவித்துப் போயிருப்பான்?
“ஒரு வேளை இது அவளாக இல்லாவிட்டால்?” உள்மனம் ஐயத்தோடு கேட்க, “அவ தான். என் அம்மு தான். என் கண்ணு பொய் சொன்னாலும் வாய் பொய் சொன்னாலும் அவளுக்காக துடிச்சிட்டு இருக்கிற இந்த இதயம் பொய் சொல்லாது. அவளுக்காக உருவாகுற என் உணர்ச்சிகள் பொய் சொல்லாது” அத்தனை திடமாகத் தான் மொழிந்தான் மன்னவன் அவனும்.
இதுவரை கடலளவு பொறுமையைக் கைக்கொண்டு அவளுக்காக காத்திருந்தான். இதற்கு மேல் நொடி நேரம் கூட தாமதிக்கும் பொறுமை அவனிடம் எள்ளளவும் இல்லை. அவளையே இமைக்கவும் மறந்து பார்வையால் கவ்வி நிற்கலானான்.
🎶 காத்திருந்தேன் காத்திருந்தேன்…
காலடி ஓசைகள் கேட்கும் வரை… 🎶
🎶 பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை… 🎶
🎶 நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன்…
நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை… 🎶
🎶 வெளியில் சொல்ல முடியாதென்றும்…
நான் கூட அதே நிலை…
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை… 🎶
🎶 முகவரிகள் இல்லா ஒரு முதல் கடிதமாய்…
பல கதவு மோதும் காகிதம் ஆனேனே… 🎶
🎶 அறிமுகங்கள் இல்லா பல கதவுகளிலும்…
ஒரு முகத்தை தேடும் கார்முகில் நானேனே… 🎶
வேக எட்டுக்களுடன் சென்று தன்னையே மறந்தவனாய் “அம்மு” எனும் ஆனந்த அழைப்புடன் அவளை இறுக அணைத்துக் கொண்டான் அவள் மீது தீராக்காதல் கொண்ட ருத்ரன் அபய். அவளோடு மணிக்கணக்கில் கதைக்க ஆயிரம் கதைகளை சேமித்து வைத்தவனுக்கு இப்போது பேச வார்த்தைகள் வராது சதி செய்தன.
🎶 பேசாத கதை நூறு…
பேசும் நிலை வரும் போது…
வார்த்தை என எதுவும் வராது…
வராது வராது மௌனம் ஆனேனே… 🎶
🎶 காலம் உறைந்தே போகும்…
காற்று அழுதே தீரும்… 🎶
🎶 இந்த நொடி இறந்தாலும் சம்மதம்…
கண்ணீரின் மழையில் கடல்களும் நீராடும்… 🎶
🎶 காத்திருந்தேன் காத்திருந்தேன்…
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை…
நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன்…
நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை… 🎶
யாரென்றே அறியாத வேற்று ஆடவனின் எதிர்பாரா அணைப்பில் சர்வமும் அதிர்ச்சியில் உறைய விதிர்விதிர்த்துப் போய் நின்றாள் அஞ்சனா!
ருத்ரனின் கனவுக்காதலி!
அவளது கைகள் பயத்தில் நடுங்கின. அவளுக்கு மட்டுமல்ல! அஞ்சா நெஞ்சம் கொண்ட அந்த ருத்ரனுக்கும் தான் கைகள் நடுங்கின. கண்ணால் கண்டதோடு மார்பில் மலர்த்தடம் பதித்தவளின் முதல் ஸ்பரிசம் அவனுள் மெல்லிய நடுக்கத்தையும் ஏற்படுத்தத் தான் செய்தது.
“அம்மு அம்மு” என பிதற்றியவனின் கண்களில் இருந்தும் சிலீரிட்டுப் பாய்ந்த கண்ணீர் அவள் கழுத்தை நனைக்க, தன் ஒட்டுமொத்த பலத்தையும் தேக்கி அவனைத் தள்ளி விட்டாள் அஞ்சனா.
“யாரு நீங்க? நான் யாருனு உங்களுக்கு தெரியுமா?” அடக்கப்பட்ட சினத்துடன் சீறியவளுக்கு கண்களும் கலங்கித் தான் போயின.
அவனோ ஏதோ கூற விழைய, “அஞ்சு நிச்சயதார்த்தத்துக்கு டைம் ஆச்சு. மாப்பிள்ளை வீட்டாட்கள் கூப்பிடறாங்க” என்று அழைத்தார் தாமரை.
தாமரையைக் கண்ட ருத்ரனிற்கு புரிந்து போனது எதிர்வீட்டில் வாழ்பவளும் இன்று நிச்சயதார்த்தம் செய்யப் போவதும் தன் அம்மு தான் என்று! அவளைக் கண்ட சந்தோஷத்தை சிறிதும் அனுபவிக்க முடியாமல் ஏன் இப்படி ஒரு இடி என்றிருந்தது அவனுக்கு. அம்முவை இழக்கும் எண்ணம் அவனுக்கில்லை.
“டீச்சர் இந்த ஆள்…” என அஞ்சனா ருத்ரனைக் கையால் காண்பிக்க, “இந்த மாதிரி ஆட்கள் கிட்டலாம் பேசி என்ன ஆகப் போகுது அஞ்சுமா? நாம நம்ம வேலையை பார்ப்போம். ப்ரீயா விடு” என அவளது கையைப் பிடித்து அழைத்துச் சென்றார். நடைப்பிணமாய் அவர்களைப் பின்தொடர்ந்தான் ருத்ரன்.
தாமரை டீச்சரின் இழுப்பிற்கு சென்றவளுக்கோ புதிய ஆணின் செயலை ஜீரணிக்க முடியவில்லை. நிச்சயதார்த்தம் நடைபெறும் இடத்திற்குச் சென்றும் கலங்கும் கண்களை மறைக்க வழியின்றி திண்டாடித் தான் போனாள்.
தன் முன்னே சுஜித் அமர்ந்திருப்பதை உணர்ந்தாலும் அவனைப் பார்க்கும் எண்ணம் சிறிதும் இல்லை அவளுக்கு. தன்னை அணைத்தவனின் முகமே கண்முன் வந்து போனது. அவனது கண்ணீரின் ஈரம் தன்மீது இருப்பதாகத் தோன்ற அவளால் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்த முடியாது போயிற்று.
அவள் அங்குமிங்கும் தடுமாறுவதையும் கலங்கிய கண்களையும் கண்டுகொண்ட மாப்பிள்ளையின் தாயிற்கு ஏதோ சந்தேகம் குடிகொண்டது மனதில்.
ஐயர் நிச்சயதார்த்த ஓலையை எழுத ஆரம்பிக்கும் போது சட்டென நிமிர்ந்த அஞ்சனா சுஜித்தை பார்க்க, அதே சமயம் இருந்த இடத்தை விட்டும் வெடுக்கென எழுந்தான் சுஜித்.
அனைவரும் புரியாது நோக்க, “எனக்கு இந்த நிச்சயதார்த்தத்தில் இஷ்டம் இல்லை. இதை நிறுத்திடலாம்” என்றுரைத்தான் சுஜித்.
அஞ்சனாவுக்கு அதிர்ச்சி. மற்றவர்களும் விழி விரிக்க, “ஏன் வேணாம்? இந்த கூத்துக்காரி நிறுத்த சொன்னாளா?” அஞ்சனாவைச் சுட்டிக் காட்டினார் மாப்பிள்ளையின் தாய்.
தாமரை அதிர்ந்து நிற்க, என்ன நடக்கிறது என புரியா விட்டாலும் தன்னவளை பேசும் போது சீறி எழுந்தான் ருத்ரன்.
“என்ன சொல்லுறீங்கமா? அஞ்சு என்ன சொல்லனும்? எனக்கு புரியல”
“சும்மா என் கிட்டயே கேட்காத. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இவள் அதோ அந்த பையனை கோயில்னும் பார்க்காம கட்டிப்பிடிச்சிட்டு நின்னாளே அந்த கருமத்தை உன் கிட்ட சொல்லிருக்கா.
அதான் இப்போ அவ கண்ணை காட்டவும் நீ நிச்சயதார்த்தம் வேணாம்னு சொல்லி அவளை கல்யாணம் பண்ணிக்க நெனச்ச பாவத்துக்காக பழியை உன் மேல போட்டுக்க பார்க்கிற” கோபமாகப் பேசிய தாயை சுஜித் குழப்பமாக பார்த்தான் இது என்ன புது பிரச்சினை என்று.
இதை அவரும் பார்த்து விட்டாரோ எனும் அதிர்ச்சியை விட செய்யாத தவறுக்காக தன்னை குற்றம் சாட்டுகிறாரே என்று நொந்து போனாள் அஞ்சு.
“ஏண்டி உனக்கு அந்த மைசூர் மகாராஜாவை பிடிச்சிருக்குனா சொல்லித் தொலைக்க வேண்டியது தானே? எதுக்கு என் மகனைக் கட்டிக்க சம்மதிச்சிட்டு இன்னிக்கு அவனை கட்டிப்பிடிச்சி கொஞ்சுற?” என்று கத்தினார்.
“நிறுத்துங்க! என்ன நடந்துச்சுனு தெரியாம வாய்க்கு வந்தபடி பேச வராதீங்க. நீங்க பேசுறதை எல்லாம் தலையை குனிச்சு கேட்கவோ மனசு உடைஞ்சு போய் அழவோ நான் தப்பு பண்ணல. பொய்யான பழியை என் மேல தூக்கிப் போட்டா வாயை மூட்டிட்டு இருக்க மாட்டேன். எதிர்த்து கேட்பேன். எனக்குனு தன்மானம் இருக்கு. அதை என்னிக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்” காட்டமாக பேசினாள் அஞ்சனா.
இவள் இவ்வளவு பேசுவாளா என்று மற்றவர்கள் பார்க்க தன்னவளின் தைரியத்தை மனதினுள் மெச்சிக் கொண்டான் ருத்ரன்.
“எப்படி எப்படி? உங்க மகன் என்னை அவ்ளோ நேசிச்சாரா? அதனால தான் எனக்கு கெட்ட பெயர் வர கூடாதுனு எனக்காக நிச்சயதார்த்தத்தை நிறுத்தி பழியை ஏத்துக்கிறாரா அவ்ளோ தியாக சிந்தனையா அவருக்கு? கேளுங்க பார்ப்போம் என்ன விஷயம்னு உங்க அருமை மகன் கிட்ட” சுஜித்தின் தாயிடம் எகிறினாள் அவள்.
“ம்மா! அது வந்து நான் எங்க கம்பனில இருக்கிற மோனிஷாவை விரும்புறேன். அவ என்னை லவ் பண்ணுனா. எனக்கு அவ மேல லவ் வரலைனு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா அஞ்சனா கூட என்னால பழக முடியாம இருந்துச்சு.
அப்போ புரிஞ்சுருச்சு நான் மோனியை லவ் பண்ணுறேன்னு. உங்க கிட்ட சொல்ல தைரியம் வரவே இல்லை. இனியும் லேட் பண்ணா எல்லாம் கைமீறி போயிடும்னு சொல்லிட்டேன். அய்ம் சாரிமா! ஐ லவ் மோனிஷா” தலையைக் குனித்துக் கொண்டு சென்று விட்டான் சுஜித்.
அவனது அம்மா அஞ்சனாவை பார்க்க “இப்போ புரிஞ்சுருச்சா உங்க பையன் நிச்சயதார்த்தத்தை நிறுத்த என்ன ரீசன்னு? அதை புரிய வெச்சாச்சு. அடுத்தது யாரையோ கட்டிப் பிடிச்சேன் கொஞ்சினேன் குலாவினேன்னு சொன்னீங்களே அதையும் என்னால நிரூபிச்சு காட்ட முடியும் என்ன நடந்துச்சுனு. ஆனா அப்படி பண்ண மாட்டேன்.
நீங்களா ஒன்னு நெனச்சிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியாதே. நம்மள பத்தி நாலு பேரு நாலாயிரம் விதமா பேச தான் செய்வாங்க. அவங்களுக்கெல்லாம் நாம நியாயப்படுத்தி விளக்கம் கொடுக்க போனா நம்ம வாழ்க்கையை நிம்மதியா வாழ நேரம் இருக்காது இல்லையா. நான் இப்படி கடுமையா யார் கூடவும் பேசுனதில்ல. ஆனா பேச வெச்சிட்டீங்கள்ள” அவரை வெற்றுப் பார்வை பார்த்தாள் அஞ்சனா.
அங்கு பலரும் வந்து குழுமியிருக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசினர். தானாக மெல்லும் வாய்களுக்கு அவல் கிடைத்தால் கேட்கவா வேண்டும்? அஞ்சனாவுக்கோ முள் மேல் நிற்பது போல் தோன்றிற்று.
அவளது முகத்தில் தெரிந்த சோக ரேகை ருத்ரனை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கியது. தன்னால் தானே அவள் இந்த பேச்சு கேட்கிறாள் என்றிருந்தது. மற்றவர் முன் சென்று எந்த உரிமையில் அவளுக்காக வாதாடுவது என்றும் புரியவில்லை.
செய்வதறியாத நிலையில் உள்ளம் தவித்தவனின் வேல் விழிகளோ இமை சிமிட்டவும் மறந்து போய் அவளையே காந்தமாகக் கவர்ந்து நின்றன.
தொடரும்……♡
ஷம்லா பஸ்லி