🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍
👀 விழி 09
தனதருகே நின்றவளை கைகளைக் கட்டிக் கொண்டு பார்த்தான் நிதின். நொடிகளுக்கு முன் அவள் செப்பிய வார்த்தைகள் அவன் செவிப்பறையில் எதிரொலி செய்தவாறே இருந்தன.
“என்ன சொன்ன? மறுபடி சொல்லு” நம்ப முடியாதவனாய் அதிர்வு விலகாது அவன் வினவ,
“நாம ஓடிப் போகலாமா நிதின்?” முன்னைய வாசகத்தையே மீண்டும் அச்சுப் பிசகாமல் கேட்டாள் ஆலியா.
“உனக்கென்ன புத்தி கித்தி பேதலிச்சு போச்சா? விளையாடாத ஆலியா. இந்த விபரீதப் பேச்சுக்களை கிண்டலுக்கு கூட யூஸ் பண்ணாத” அவள் கேலி பேசுகிறாளோ என்ற ஐயம் அவனுக்கு.
“கிண்டல் இல்லை. அய்ம் சீரியஸ் நிதின்” அவள் முகத்தில் அத்தனை திடம். துருவித் துருவி ஆராய்ந்து முடிவுக்கு வந்த பின்னே இதனைக் கேட்கிறாள் என்பதை அவள் முகபாவம் ஸ்திரமாய் பறைசாற்றியது.
“யோசிக்க டைம் இல்லை டா புரிஞ்சுக்க”
“என்ன தலை போற பிரச்சினை உனக்கு? நீ லூசுத்தனமா பேசிட்டு இருக்கேனு உன்னால புரிஞ்சுக்க முடியுதா இல்லையா?” பிடரியை அழுந்தக் கோதிக் கொண்டான்.
“என்னை பற்றி விடு. நான் சொன்ன விஷயத்தைப் பார். நீ என்னை லவ் பண்ணுற தானே?”
“இதில் உனக்கு சந்தேகம் இருந்தாலும் எனக்கு இல்லை. நான் உன்னை லவ் பண்ணுறேன். அதுக்காக ஓடிப் போக கூப்பிட்டா தலையாட்டிட்டு வரனுமா நான்?
முடியாது ஆலியா. சட்டுனு யோசிச்சு எடுக்குற முடிவுகள் என்னிக்கும் சரி வராது. ஆயிரம் தடவை யோசிச்சாலும் கூட நான் என்னிக்கும் இப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டேன். என் காதல்ல எவ்ளோ உறுதியா இருக்கேனோ அதேயளவு அம்மா என் மேல வெச்ச அன்பையும் நம்பிக்கையையும் பொய்யாக்ட கூடாதுங்குறதுலயும் உறுதியா இருக்கேன்” அழுத்தம் திருத்தமாக சொன்னான் நிதின்.
அவனை ஆச்சரியமாக தான் நோக்கவும் தான் செய்தாள் ஆலியா. இத்தனை நாள் தன்னோடு பேசுபவன் இவன் அல்லவே என நினைத்தான். அவனது கேலி கிண்டல்களுக்குப் பின்னால் இப்படி ஒரு உறுதியான நிதின் இருப்பான் என்று கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை.
“உன் கூட ஜாலியா பேசுறேன்னு கூப்பிட்ட உடனே வந்துருவேன்னு நெனச்சியா ஆலி? இந்த ஜாலியான முகத்திற்கு பின்னால எவ்ளோ வலிகள் இருக்குனு உனக்கு தெரியுமா? நான் முழு மனசோட சிரிக்கலடி. என் வலிகளை மறைக்க சிரிப்புங்கிற முகமூடியை அணிஞ்சிட்டு இருக்கேன்.
நான் சின்ன வயசா இருக்கும் போதே அப்பா அம்மா கூட கோச்சிட்டு வீட்ட விட்டு போயிட்டார். அவர் வேற கல்மாணமும் பண்ணிக்கிட்டதா சொல்லுறாங்க. அம்மா எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டாங்க. என் பசியை தீர்க்க அவங்க எத்தனையோ நாள் பசியில இருந்திருக்காங்க.
நான் படிப்பையும் நிறுத்திட்டு வயல்ல வேலைக்கு போனேன். அம்மாவை பார்த்துக்கிட்டேன். நான் எவ்ளோ சம்பாதிச்சு பார்த்துக்கிட்டாலும் அவங்களுக்கு என்னால கைம்மாறு செலுத்த முடியாது. என்ன தான் சொந்தங்கள் சுற்றி இருந்தாலும் அம்மாவுக்கு நான் கூட இருக்கிற மாதிரி வருமா?
நானும் விட்டுட்டு ஓடிட்டா அவங்களுக்குனு யார் இருக்கா? அப்பா இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க. கல்யாணம் பண்ணியும் கணவன் கூட சந்தோஷமா வாழ முடியாத வாழ்க்கை நரகம் டி. அப்படி கஷ்டப்பட்டவங்களை நானும் உன் கூட வந்து இன்னும் கஷ்டப்படுத்தனுமா?”
அத்தனை ஆத்திரத்துடன் கேட்டவனின் கண்களும் சற்றே கலங்கித் தான் இருந்தன. இவனுக்குப் பின்னால் இத்தனை வேதனைகளா? என்றிருந்தது பெண்ணவளுக்கு.
ஒருவனின் புன்னகையானது அவன் வாழும் வாழ்வின் சந்தோஷங்களின் பிரதிபலிப்பு என்று நாம் எண்ணுகிறோம். அது எல்லோருக்கும் பொருந்தாது. சிலர் இந்த நிதினைப் போலத் தான். கரடுமுரடான வாழ்க்கையை மறைக்கும் புதராக தன் உண்மை நிலையை சந்தோஷங்களால் போர்த்திக் கொள்கிறான்.
வெளித்தோற்றம் ஒரு விதத்தில் இருக்க உள்தோற்றமோ வேறு விதமாக இருக்கும். ஒவ்வொருவரும் இரு மாற்றங்களோடு தான் வாழ்கின்றனர். அத்தோற்றங்கள் ஒருவரது வாழ்வினை அறிந்தவர்களுக்கு மாத்திரமே புரியும் என்பது நிதர்சனம்.
“சாரி நிதின்! உன்னை தெரிஞ்சுக்காம, உண்மையை நிலையை புரிஞ்சுக்காம நான் இப்படி கேட்டது எனக்கே வெட்கமா இருக்கு. இனிமே இப்படி கேட்க மாட்டேன்” தலையைக் குனித்துக் கொண்டாள் ஆலியா.
“என்னடி சாரி கேட்கிற? அதெல்லாம் ஒன்னுமே இல்லை. அதை விட்டுத் தள்ளு. ஆமா! நீ திடீர்னு இப்படி கேட்டதுக்கான காரணம் என்னனு தெரிஞ்சுக்கலாமா?”
“அது… அப்பா” என தடுமாறியவளுக்கோ மறைக்க முடியாமல் இருக்க தந்தை வேறு திருமணம் பேசப் போவதையும் தான் மறுத்து நிதினைப் பற்றிக் கூறியதையும், அவரது எதிர்ப்பையும் மேலோட்டமாகக் கூறினாள்.
“அப்போ நீ என்னை லவ் பண்ணுற?” கேட்டவனுக்கோ தலைகால் புரியாத சந்தோஷம்.
“ம்ம்! இந்த தீஞ்ச சோறுக்கு காஞ்ச பிஸ்கட் மேல லவ்ஸ்” தனது கைகள் இரண்டையும் பிணைத்துக் காட்டினாள்.
“ஆலியாவுக்கு இந்த நிதின் மேல வவ்ஸ்னு சொல்லுறதுக்கு என்ன? அதை விட்டு நல்ல அடைமொழி எல்லாம் யூஸ் பண்ணுற” அவள் தலையில் மெல்லக் கொட்டினான்.
“ஹா ஹா! ஆனா அதான்டா நல்லா இருக்கு” முத்துப்பல் வரிசை தெரிய சிரித்தாள்.
தன்னைப் பார்த்துச் சிரித்தவனிடம் “நிதின்! நான் ருத்ரா மாமாவை லவ் பண்ணுனேன்னு சொன்னத பற்றி எதுவுமே கேட்காம நான் உன்னை லவ் பண்ணுறேன்னு சொன்னத ஏத்துக்கிட்டியே” என்று வினவினாள் அவள்.
“ஏன் கேட்கனும்? உனக்கு ருத் மேல வந்தது லவ்வா இல்லையானு எனக்கு தெரியாது. ஆனா இப்போ உனக்கு என் மேல லவ் இருக்குனு மட்டும் எனக்கு கண்டிப்பா தெரியும். என் மனசு அதை உணருது.
உனக்கு அவன் மேல வந்தது காதலாவே இருந்தாலும் அதுல எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை. நாம லவ் பண்ணுறவங்க எல்லாரும் நமக்கானவங்களா இருக்க மாட்டாங்க. நமக்கான ஒருத்தரை சந்திக்கும் போது இது வரை வந்தது எல்லாம் லவ்வே இல்லைனு தோணும். ஸ்பெஷலான, புதிய ஒரு பீலிங் நமக்குள்ள நாம லவ் பண்ணுற அந்த ஆள் மேல வரும்” அவன் கூறினான்.
“என் வாழ்க்கையில் அந்த ஸ்பெஷலான ஆள் நீயா தான் இருக்கனும். இனி என்னிக்கும் என் மனசு உனக்காக மட்டும் தான் டா” அவனைக் கண்கலங்க ஏறிட்டாள் அவள்.
“நீ எதை நெனச்சும் பீல் பண்ணாத. கண்டிப்பா நான் உனக்கானவனா வருவேன். இந்த கையை என்னிக்கும் விட மாட்டேன்” கோர்த்திருந்த அவள் கரத்திற்கு இன்னும் அழுத்தம் கொடுத்தவனின் பேச்சிலும் அத்தனை அழுத்தம் பொதிந்திருந்தது.
♡♡♡♡♡
ரோஜா செடிகளில் ரம்மியமாய் மலர்ந்து சிரித்தன ரோஜாக்கள். ருத்ரனின் வீட்டுத் தோட்டத்தில் மணம் வீசும் ரோஜாக்களுக்கு மத்தியில் மஞ்சள் நிற சாரியில் ரோஜாப் பூக்களை ரசித்துக் கொண்டிருந்தாள் ருத்ரன் அபய்யின் மனதில் வாசம் செய்யும் ரோஜா மலரானவள்.
அவற்றிற்கு நீர் பாய்ச்சினாலும் அஞ்சனாவின் மனம் என்னவோ மல்லிகையைப் பூக்களைத் தான் நாடியது.
நீர் பாய்ச்சலாம் என்று வந்து சித்ரா அஞ்சனாவைக் கண்டு ஒரு கணம் நின்றவர் திரும்பிச் செல்ல எத்தனிக்க “ஆன்ட்டி” என்ற அழைப்பில் திரும்பினார்.
அஞ்சனா தான் அழைத்திருந்தாள். அவளைப் பார்த்து “நீ என்ன இங்கிலாந்து நாட்டு ராணியா?” சற்றே கடுமையாகக் கேட்டார் சித்ரா.
“நீங்க மௌன தேசத்தின் அதிபதியா?” பதில் கேள்வி பிறந்தது அஞ்சனாவிடம்.
“ஆன்ட்டினு இங்கிளீஷ்ல பேசுனியே அதான் கேட்டேன். நீ என்ன கேட்ட?” புரியாது நோக்கினார் அவர்.
“அதே தான் நானும் கேட்டேன் ஆன்ட்டி. நான் இங்கிளீஷ்ல பேசினேன்னு அப்படி கேட்கிறீங்க. நீங்க அது கூட பேசலயே. அமைதியே உருவா இருக்கீங்க. மௌனமே மொழினு இருக்கிறதால தான் மௌன தேசத்திற்கு அதிபதியானு கேட்டேன்” நீர் பாய்ச்சியவாறே கேட்டாள் மங்கை.
“அது வந்து.. நான் அவரு” என தடுமாறியவருக்கு அவளுடன் பேசவும் ஆசை தான். ஆனால் கணவன் கண்டால் கதை கந்தல் என்ற அச்சமும் வேறு.
“உங்க அவரு வெளியே போயிட்டாரு. இப்போ பேசலாமே. எனக்கு பேச இங்கே யாருமே இல்லை” பாவமாகப் பார்த்தாள் அவள்.
“உன் புருஷன் இருக்கானே மா”
“யாரு புருஷன்? அவரு என் கையைப் பிடிச்சு கழுத்துல தாலி கட்டுனா புருஷன்னு ஆயிடுவாரா?”
“பின்ன வேற என்னமா பண்ணனும்? தாலி கட்டிக்கிட்டு வந்துட்டியே” புரியாமல் பார்த்தார் சித்ரா.
“தாலி கட்டினா என்ன? என் தாமரை டீச்சர் சொன்னானு தான் இங்கே வந்திருக்கேன். மத்தபடி புருஷனுங்கிற நெனப்பும் இல்லை காதலும் இல்லை” அதிகார தோரணையில் சொன்னவளைக் கண்டு அவரோ அதிர்ந்து போனார்.
“ஹா ஹா பயந்துட்டீங்களா அத்தை?” மெல்லிய சிரிப்பை உதிர்க்கும் போது “மம்மி பயந்துட்டீங்களா?” என வந்தான் ருத்ரன்.
“வேணாம் ருத்ரா போயிடு. நான் கோபமா இருக்கேன்” உள்ளே சென்று அமர்ந்து கொள்ள,
“பரவாயில்லை மா. நீ கோபமா இருந்துக்கோ. நான் உன் மடியில சாஞ்சுக்கிறேன்” தாயின் மடியில் தலை வைத்தான் காளை.
“ஏன்டா இப்படி பண்ணுன? அப்பா சும்மாவே அளந்து அளந்து தான் பேசுவார். இப்போ சுத்தமா பேச மாட்டேங்கிறாரே. நீ அவர் கோபத்துக்கு ஆளாகக் கூடாதுனு நான் எத்தனை எத்தனை போராட்டம் நடாத்தி இருக்கேன். கடைசியில் எப்படியோ கோவிக்கி மாதிரி பண்ணிட்டியே” கோபத்தோடு வருத்தமும் ஒருங்கே ஒலித்தது அவர் குரலில்.
தந்தைக்கும் மகனுக்கும் முறுகல் என்றால் நடுவில் மாட்டிக் கொள்வதும், அதனை எண்ணி வருந்தித் தவிப்பதும் தாய் அல்லவா? அதுவே இன்று சித்ராவின் நிலையாகிற்று. கணவன், மகன் இருவரும் வேண்டும் அவருக்கு. இருவரையும் விட்டுக் கொடுக்க முடியாதே.
இவர்களது பிணைப்பைப் பார்த்த அஞ்சனாவை ஏக்கம் தழுவிக் கொண்டது. தன்னையும் சாய்த்துக் கொள்ள ஒரு மடி கிடைக்காதா என ஏங்கியவளின் மனம் தந்தையை எண்ணியது.
“அவரோட கோபத்துக்கு ஆளாக கூடாதுனு உன் விருப்பத்தை நானும் இத்தனை வருஷமா நிறைவேத்திட்டு தான் வந்தேன். கடைசியில் என்னென்னவோ ஆச்சும்மா. நீ நம்புவியோ தெரியல நான் அம்முவுக்கு தாலி கட்டுறப்போ உங்களையும் அப்பாவையும் தான் முழுக்க முழுக்க நெனச்சிட்டு இருந்தேன். என்னை என்னம்மா பண்ண சொல்லுற” அவர் கையை எடுத்து முகத்தில் வைத்துக் கொண்டான்.
“சரி விடு கண்ணா! அவர் கோபமெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். எல்லாம் சரியாகிடும். நீ அதை பெருசா எடுத்துக்காம சந்தோஷமா இரு” அவன் தலையை வருடிக் கொடுத்தார்.
“சித்ராஆஆ” என்ற அழைப்போடு செல்வன் உள்ளே வரவும், “வா அம்மு” அவளை இழுத்துக் கொண்டு மாடிப் படிகளில் ஏறினான்.
“உங்கப்பாவுக்கு இவ்ளோ பயமா?” அறையினுள் வந்ததும் கேட்டாள்.
“பயம் தான். ஆனா அது பயம் என்றும் இல்லை அம்மு. ஒரு வித மரியாதை கலந்த பயம். அப்பாவுக்கு சீக்கிரம் கோபம் போகும். அதே சமயம் பாசமும் கூட. ஆனா அதை காட்டிக்க மாட்டார். சின்ன வயசுல இருந்து இப்படி தான். எனக்கு வேணுங்கிறத அம்மா கிட்ட சொல்லுவேன். அம்மா அப்பா கிட்ட கேட்டா அவர் வாங்கி தருவார்.
அப்பாவுக்கு செல்போன் நோண்டுறது பிடிக்காது. நான் வாசல்ல இருந்து ஃபோன் பார்த்துட்டு இருப்பேன். அவர் வரும் போது மெதுவா வெச்சிடுவேன். திருட்டுத்தனம் எல்லாம் இல்லை. ஆனா அவர் முன்னாடி பார்க்க மாட்டேன். அவருக்கு தெரியும் நான் அவ்ளோ நேரம் அதை தான் பார்த்தேன்னு. என்னை ஒரு போலீஸ் பார்வை பார்த்துட்டு போயிடுவார்” தந்தையைப் பற்றி சொல்லும் போது அவன் முகத்தில் புதுவித உணர்வு.
“நான்னா அப்பா கூட ஜாலியா பேசுவேன். அவர் மடியில சாஞ்சிட்டு விளையாடிட்டு ப்ரெண்டலியா இருப்போம். நீங்க இப்படி இருக்கீங்க. எல்லோரும் ஒன்னு மாதிரி இல்லையே. ஒவ்வொரு உறவுகளுக்கிடையிலும் பாசமும் பிணைப்பும் ஒன்னு தான். ஆனா அதை வெளிப்படுத்துற முறை வித்தியாசப்படும் இல்லையா?” புன்னகைத்தாள் அஞ்சனா.
அவள் கூறியதை தலையசைப்புடன் ஏற்றவன் “அம்மு! ரிசப்ஷன் வைக்கிறதுனா உனக்கு ஓகேயா?” எனக் கேட்டான்.
இவ்வளவு நேரமாக இருந்த புன்னகை சிதைந்து போக அவளுக்கோ மனம் தயங்கியது. அவனது தந்தையே தன்னை ஏற்கவில்லை. இதில் உறவுகள் கூடினால் வீண் பேச்சுக்கள், மனக்கசப்புகள் வருமோ என்ற சிந்தனை முள்ளாய்க் குத்தியது.
“உங்க இஷ்டப்படி செய்ங்க. ஆனா உங்கப்பா கிட்டவும் கேளுங்க. இதையாவது அவங்க கிட்ட கேட்டு விருப்பத்தோட பண்ணுனா நல்லா இருக்குமே”
அவளது ஆசையை நிறைவேற்ற சித்தம் கொண்டான். “அப்பா என்ன சொல்லுவாரோ தெரியல. இருந்தாலும் ட்ரை பண்ணுறேன்” என்றவன் “நீயும் ட்ரை பண்ணலாமே கொஞ்சம்” எனக் கூறினான்.
“சரி அப்போ நான் போய் பேசிட்டு வரேன்” என நடக்கத் துவங்கியவளைக் கண்டு “எங்கே போற?” அவள் முன் சென்று நின்றான்.
“எனக்கு ட்ரை பண்ண சொன்னீங்களே. அதற்கு தான் மாமா கிட்ட போய் பேசி பார்க்கலாம்னு போறேன்” தோளைக் குலுக்கினாள் காரிகை.
“அய்யய்யோ அப்பா கிட்ட போயிடாதம்மா. நான் அதை சொல்லல. என் லவ் பண்ண ட்ரை பண்ண சொன்னேன்” பட்டென சொல்லி விட்டான்.
“எதே லவ்வா?” விழிகளை விரித்து நின்றாள் அவள்.
“ஓய் முண்டகண்ணி அம்மு! எதுக்கு இவ்ளோ ஷாக்?” ஏற்கனவே அவள் விழிகளில் விழுந்திருந்தவனுக்கு விரிந்த விழிகளின் பாவனை சித்தம் தடுமாற வைத்தது.
அவள் கண்களையே தன் கூர் விழிகளால் ஊடுறுவி நின்றான். அப்பார்வையில் கட்டுண்டு போன பாவையின் முகம் வெட்கச்சாயை பூசிக் கொண்டது.
இதற்கு மேல் அவளை சோதிக்க விரும்பாது நகர்ந்து செல்ல அவனது பர்ஸ் கீழே விழுந்தது.
அவனை எப்படி அழைப்பது எனத் தெரியாமல் விழித்தவள் தொண்டையை செருமிக் கொண்டு “எ..என்னங்க” என்று அழைத்தாள்.
திரும்பி வந்து “எப்படி கூப்பிட்ட? என்னங்கன்னா?” என வினவினான் ருத்ரன்.
“என்னங்கனு மரியாதையா தானே பேசினேன். நீங்க என்னவோ மரியாதை இல்லாம வாடானு கூப்பிட்ட மாதிரி ஷாக் ஆகுறீங்க?”
“வாடானு கூப்பிட்டா கூட பரவாயில்லை. ஆனா இப்படி என்னங்க நொன்னங்கனு பேசாத. அச்சச்ச என்ன அதெல்லாம்” முகம் சுளிக்க,
அவனது முகபாவனையில் கடுப்பானவள் “மத்தவங்க முன்னால வாடானு கூப்பிட்டா நல்லா தான் இருக்கும். அப்பறம் வேறெப்படி மாமான்னா கூப்பிட முடியும்?” என முறைத்துப் பார்த்தாள்.
“அடடே டீச்சரம்மா! சூப்பர் ஐடியா எல்லாம் கைவசம் வெச்சி இருக்கீங்களே” புகழ் மாலை சூட்டியவன், “இனிமே என்னை அப்படியே கூப்பிடு” என்றான்.
“அப்படியேன்னா எப்படி?” தடுமாற்றமாகக் கேட்க,
“அழகா, கியூட்டா மாமானு கூப்பிடு. செம கிக்கா இருக்கும் அம்மு” முகத்தைக் கைகளால் மூடி வெட்கப்பட்டான் ருத்ரன்.
“மாமாவாஆஆ?” வாயைப் பிளந்து நின்றவளுக்கு தானே தனக்கு ஆப்பு வைத்துக் கொண்டதை எண்ணி தன்னை மானசீகமாக திட்டிக் கொண்டாள் அஞ்சனா.
“உடனே சொல்ல சொல்லல. இன்னிக்கு முழுக்க ப்ராக்டிஸ் பண்ணிட்டு நாளை காலையில் வந்து சொல்லுற சரியா?” முடியை ஸ்டைலாக கோதினான்.
“அப்படி கூப்பிடுவேன்னு முடிவே பண்ணிட்டீங்களா? என்னால முடியாது” என மறுத்தாள்.
“பரவாயில்லை. ஆனா பதிலுக்கு நாளை காலையில் நம்ம வீட்டு ஹால்ல உன்னை அப்பா முன்னாடி நான் தூக்கி காட்டுறேன்” சவால் விட்டான் ருத்ரன்.
“அப்பா முன்னாடி அம்மா மடியிலயே சாஞ்சுக்க மாட்றீங்க. இதுல என்னை தூக்க போறீங்களா? நம்பு மாதிரி சொல்லுங்க”
“என்னடி கொழுப்பா? அது அவரு பொண்டாட்டி அதனால அவர் கோபமா இருப்பார்னு எழுந்தேன். நீ என் பொண்டாட்டி. என் உரிமை. நான் உன்னை தூக்குவேன், கப்பிள் டான்ஸ் கூட ஆடுவேன்” கெத்தாக சொன்னான்.
“போங்க. உங்களுக்கு வாய் மட்டும் தான்” என்று பேசியவள் தன் பேச்சை சட்டென நிறுத்தினாள்.
தன்னைப் பற்றிய சிந்தனை அவளைச் சூழ்ந்து கொண்டது. அவனோடு எப்படி தன்னால் சகஜமாக பேச முடிகிறது? பெரும் யோசனை அவளை அலைக்கழிக்க நெற்றியில் சிந்தனை ரேகைகள் படர நின்றாள் அஞ்சனா.
தொடரும்…….♡
ஷம்லா பஸ்லி