14. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

4.7
(3)

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍

 

👀 விழி 14

தாய் மடியில் சாய்ந்திருந்தான்‌ நிதின். ஆலியாவின் அழுத முகம், அழுத்தமான வார்த்தைப் பிரயோகம்,‌ ஆணித்தரமான‌ முடிவு அனைத்தும்‌ அவன்‌ மனத்தினுள் தோன்றி வாட்டி வதைத்தன.

 

“நித்தி! ஆலியாவை பற்றி‌ யோசிக்கிறியா?” அவனிடம்‌ பரிவாகக் கேள்வியெழுப்பினார் தாய்.

 

“ஆமா. அவள் மறுத்தும்‌‌ விட்றாம பின்னால் போனேன். அவளும் என்னை லவ் பண்ண வெச்சேன். இப்போ அந்த நம்பிக்கையை பொய்யாக்க முடியலம்மா. அவ கிட்ட அம்மாவுக்காக கட்டிக்க முடியாதுனு சொல்லிட்டேன்.

 

இப்போ அதே வாயால அவளுக்காக கேட்கிறேன் மா. ப்ளீஸ் எனக்கு ஆலியா வேணும். நினைச்ச உடனே தூக்கி எறியுற இடத்தில் அவளை வைக்கல. தூக்கி எறிய நினைக்கவே முடியாத இடத்தில் இருக்கா. அவளை மறக்க சாகும் வரைக்கும் முடியாது” கரகரத்தது அவன் குரல்.

 

“அவ வேணாம் பா நமக்கு. அப்பா இல்லாமல் நீ எவ்ளோவோ கஷ்டப்பட்டுட்ட. இனியாவது சந்தோஷமா வாழனும்னு ஆசைப்படுறேன்”

 

“ம்மா அதுக்கு தான் நானும் உன் கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்கேன். என் சந்தோஷம் அவ கூட வாழ்வதில் இருக்கு. அவளை விட்டு என்னால வாழ முடியாது. விட்டதுக்கப்பறம் நான் கஷ்டப்பட்டேன்னு நீ மனசு மாறினாலும் அவ கிடைக்காம போயிட்டா? அப்புறம் நீயும் குற்ற உணர்ச்சியில், நானும் செத்துட்டே வாழனுமா?

 

என் மனசை புரிஞ்சுக்கமா. எனக்கு நீயும் வேணும் ஆலியாவும் வேணும். அவன்னா எனக்கு உயிரு! எனக்கு அவ வேணும்மா வேணும்” பிதற்றியவனை மறுகணம் நித்ராதேவி ஆட்கொண்டிருந்தாள்.

 

மகனின் தலையை வருடி விட்டார் அந்தத் தாய். அவர் கண்கள் கண்ணீர் சொரிந்தன.

 

“உன் வாழ்க்கையில் பிரச்சினை எதுவும் வர கூடாதுனு தான் இப்படி கல்நெஞ்சக்காரி மாதிரி நிக்கிறேன். அப்பா இல்லாம சின்ன வயசுலயே வேலைக்கு போய் உழைச்சு களைச்சு எனக்காக அனுபவிச்ச கஷ்டம் எல்லாம் போதும். இனி நீ நல்லா வாழனும்” மகனின் முகத்தை மெல்லத் தடவினார் தாய்.

 

மறுநாள் வழக்கத்தை விட நேரம் சென்றே எழுந்த நிதின். முகம் கழுவி விட்டு வரும் போது சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார் அவனது தாய்.

 

அவர் கண்களில் கண்ணீர் சொட்டுவதைக் கண்டு பதறியவனோ “அம்மா என்னாச்சு?” எனக் கேட்க,

 

சட்டென அதிர்ந்து விழித்து “ஒன்னும் இல்லைப்பா ஏதோ யோசனை?” கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டார்.

 

“ஏன்மா உனக்கு ஆலியாவைக் கல்யாணம் பண்ணிக்கிறது பிடிக்கல?” மீண்டும் அவள் பேச்சில் வந்து நின்ற மகனைக் கண்டு எரிச்சல் மூண்டது அவருக்கு.

 

“அவ நம்ம குடும்பத்துக்கு ஒத்து வர மாட்டானு சொன்னேன். இனி அந்த பேச்சை எடுக்க கூடாது. அவ்ளோ தான் சொல்லிட்டேன்” முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு கூறினார்.

 

“ஏன் ஒத்து வர மாட்டா? அதைக் கேட்கிறேன். ஒழுங்கான பதில் வேணும் எனக்கு”

 

“அது அவ குடும்ப சூழ்நிலை வேற நம்ம சூழ்நிலை வேற. அந்த பொண்ணு இங்கே வந்து எப்படி அட்ஜஸ் பண்ணிப்பா?” என்ற தாயை கூர்ந்து நோக்கினான்.

 

“எது எது? அட்ஜஸ் பண்ணிக்கிறது அவள் தானே? அதைப் பற்றி உனக்கென்ன அவ்ளோ கவலையும் அக்கறையும்?” தாயைத் துளைக்கும் பார்வை பார்த்தவன் வார்த்தைகளை அழுத்தமாக உபயோகித்தான்.

 

“அவ அப்பன் சொன்னதை நீயும் கரக்டா தான் அச்சுப்பிசகாம ஒப்பிக்கிற”

 

திக்கென்றது தாயுள்ளம். இவனுக்கு எப்படித் தெரிந்தது? படபடப்புடன் மகனை நோக்கினார்.

 

“ஆலியாவோட அப்பா உன் கிட்ட வந்து ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்துக்காது. அவங்க பொண்ணு சந்தோஷமா வாழ்ந்தவ. அவளை பிசினஸ்மேனுக்கு தான் கட்டிக் கொடுக்கனும்னு ஆசைப்படுறேன். இவனை பிடிக்கல எனக்கு. அதனால மரியாதையா என் பொண்ணு வாழ்க்கையில் இருந்து போயிட சொல்லுங்கனு உன் கிட்ட சொன்னார். சொன்னாரா இல்லையா?”

 

“சொன்னாரு. எனக்கும் வேற வழி தெரியல. அவரு பொண்ணை அவர் சம்மதம் இல்லாம கட்டிக்க முடியாதே. அப்படியே கட்டினாலும் உனக்கும் தான் சங்கடம். பிடிக்காத ஒருத்தர் வீட்டுல மாப்பிள்ளைனு நீ இருக்க முடியாதே. அதனால தான் வேணானு சொன்னேன் நித்தி” தலையைக் குனித்துக் கொண்டார்.

 

“ப்ச் இன்னிக்கு இதையெல்லாம் உன் ப்ரெண்டு பரிமளம் ஆன்ட்டி சொன்னாங்க. என் கிட்ட மறைச்சிட்டனு கோவத்துல ஒரு மாதிரி கடுமையா பேசிட்டேன். சாரிமா” தாயை அவ்வாறு பேசியமைக்கு வருந்தினான் நிதின்.

 

“நீ தான்டா என்னை மன்னிக்கனும். காதலிச்ச பொண்ணை விட சொல்லி கஷ்டப்படுத்துறேன்” அவன் முதுகை ஆதரவாக தடவி விட்டார்.

 

“வேணாம்மா! அவ கிட்ட வேண்டாம்னு சொல்லிட்டேன். அது அப்படியே இருக்கட்டும். அவ அப்பா சொன்ன மாதிரி அவளுக்கு நான் ஒத்து வர மாட்டேன்” என்று சொல்லிக் கொண்டவனின் மனமோ எதையோ நினைத்துக் கலங்கியது.

 

♡♡♡♡♡

 

சொந்தங்கள் கூடி இருந்த வீடு தற்போது அமைதியே உருவாக வீற்றிருந்தது. செல்வன் க்ளைன்ட் மீட்டிங் ஒன்றிற்காக சென்றிருந்தார். மற்றவர்கள் வீட்டில் இருந்தனர்.

 

செல்வனின் தங்கை மகள் நிரா அங்கு தங்கியிருந்தாள். இங்கு வந்தாள் தங்கி விட்டுச் செல்வது அவளது வழக்கம்.

 

வழமைக்கு மாறாக புது உற்சாகத்துடன் எழுந்தாள் அஞ்சனா. கட்டிலின் ஓரமாக அமர்ந்து லேப்பில் வேலை செய்து கொண்டிருந்தான். கணவன்.

 

“குட் மார்னிங் அம்மு குட்டி” திரையில் கண்களைப் பதித்திருந்தவன் லேசாக தலையை சரித்து கூறினான்.

 

“வெர்ரி குட் மார்னிங்” அவன் தன்னை அவதானித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து குறுநகை பூத்தாள்.

 

“உன் ஸ்மைல்ல ஏதோ வித்தியாசம் தெரியுதே. எழுந்த உடனே ஏதாச்சும் ஸ்பெஷலா தர போறியா எனக்கு” வலது கண்ணை நளினமாக சிமிட்டினான் குறும்பழகன்.

 

“ஸ்பெஷலா? சூடா காபி தரட்டுமா?” அவன் கூறியதன் அர்த்தம் புரிந்தும் ஒன்றுமறியா குழந்தை போலத் தான் பார்த்தாள் பாவை.

 

“டியூப் லைட் அம்மு! காபி வேணாம். வேற சம்திங் சம்திங்”

 

“வாங்க தரேன்” அவனருகே வந்தவள் அவன் கன்னம் கிள்ளி விட்டாள்.

 

“அடிக்கள்ளி” அவன் எழுந்து வருவது போல் செய்கை செய்ய, ஓடிப் போய் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

அவளின் ஓட்டத்தைக் கண்டு சிரிப்பைப் போர்த்திக் கொண்டு வாசலுக்குச் சென்றான். அவள் இவ்வாறு இயல்பாக பேசுவது அவனுக்கு பிடித்திருந்தது.

 

குளித்து விட்டு கண்ணாடி முன்னால் நின்று தலை துவட்டிய அஞ்சனாவுக்கு ருத்ரனை நினைக்க வெட்கம் முகத்தில் கோலமிட்டது. அவன் காதலை திகட்டத் திகட்ட அனுபவிக்க அவளுள்ளம் துடித்தது.

 

காதலைச் சொல்லி விடலாமா என்று நினைக்கும் போது,

 

“நம் காதல் சொல்ல மொழி தேவை இல்லை

என் ஜீவன் என்றும் நீ தானே…” என விசிலடித்துப் பாடியபடி உள்ளே வந்தான் அவன்.

 

அருகில் வந்தவனை விழி மூடாமல் பார்த்தாள்.

வித்தியாசமாக, புத்தம் புது தோரணையில் அவன் தெரிந்தான்.

 

இந்தக் காதல் விசித்திரமானது!

பல வருட காலம் பார்த்த நபரையும் அவர் மீது திடுமெனக் கொள்ளும் காதல் அவரைக் கண்ணுக்கு புதிதாக தெரிய வைக்கும். ரசிக்க வைக்கும். பார்த்தலுக்கும் ரசித்தலுக்கும் வேறுபாடு உண்டல்லவா?

 

அற்ப சொற்பமல்ல, சொற்களில் கற்பிக்க முடியா ஆசைகள் கரைதிரண்டு வந்தன. இவனுக்காய் எதையும் செய்யலாம் என்ற சிந்தனையும் வந்து போனது.

 

ஒரு நாளுக்கே இப்படியா? இதுவரை காதலை உணர்ந்திராதவளுக்கு ஆச்சரியமும் ஆர்ப்பரித்தது.

 

ஒரு நாள் என்றால் என்ன? ஒரு வருடம் என்றால் என்ன?

காதல் என்றால் காதல் தானே?

காதல் அப்படித் தான். யாரையும் விரல் நுனியில் ஆட்டிப் படைக்கும் பூதாகர சக்தியது!

 

“ஓய் டீச்சரம்மா” முகத்தின் முன் கையை ஆட்டினான் ருத்ரன்.

 

“ஆ..ஆங்” சிந்தனை வலை அறுபட்டதும் தடக்கென விழிப்புக்கு வந்து அவனை அமைதியாக பார்த்தாள்.

 

கன்னங்களைத் தாங்கியவன் அவளது கயல் விழிகளை ஆழமாகப் பார்த்து “ஏதாவது சொல்ல நினைக்கிறியா அம்மு?” எனக் கேட்டவன் குரலில் அன்பு ஒழுகியது.

 

அவன் அன்பில் உருகிப் போனவளுக்கு தொண்டைக்குழி வரை சொற்களை வெளியில் கூற முடியவில்லை.

 

தந்தைக்குப் பின் அவளுக்கும் கிடைக்கும் அன்பு! அதுவும் எதிர்பார்ப்பின்றி அதிரடியாய்க் கிட்டும் பேரன்பு! அவனுள் புதைந்து விட வேண்டும் போல் தோன்றிற்று.

 

“உங்களை கட்டி பிடிச்சுக்கவா?” மெல்லக் கேட்டாள்.

 

“வேண்டாம்” ஒற்றை வார்த்தையில் பதிலளித்து விட்டுத் திரும்பியவனை ஓடிச் சென்று கட்டிக் கொண்டாள்.

 

“உங்க பேனையை கொஞ்சம் எடுக்கவானு அடுத்த பென்ச்ல இருக்கிற தெரியாதவங்க கிட்ட கேட்கிற மாதிரி கேட்கிற. நான் உன் புருஷன், என் கிட்ட கேட்காமலே கட்டிக்கனும். அனுமதி கேட்க தேவையா?” செல்லக் கோபத்தோடு முறைத்தான்.

 

“அனுமதி தந்துட்டீங்களே. இனிமே அனுமதி கேட்க மாட்டேன். அதிரடி ஆட்டம் தான்” கண்சிமிட்டினாள் அஞ்சு.

 

“எனக்கு கொண்டாட்டம் தான்” கண்ணடித்தவனுக்கு வானத்தில் பறப்பது போலிருந்தது.

 

அவனுக்கு காபி போட சமலறைக்குச் சென்றாள்.

 

சித்ரா கடைக்கு சென்றிருந்தார். சமையல் பொருட்களை தானே வாங்க வேண்டும். யார் மறுத்தாலும் கேட்காமல் செல்வார். இவள் புன்னகையோடு காபி போட்டாள். ஏனோ இதழ்கள் விரிந்தவாறே இருந்தன.

 

தந்தையின் இழப்பிற்குப் பிறகு சிரிப்பையே மறந்திருந்தவளுக்கு இன்று சிரிப்பை அடக்கும் வழி மறந்து போனது. ருத்ரனை நினைக்க நினைக்க காதல் ஆங்காரமாய் கொந்தளித்தெழுந்தது. உள்ளுக்குள் கிளர்ச்சிகள் பல செய்தது.

 

காபி போட்டு வந்தவள் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த நிராவுக்கும் கொடுத்தாள்.

 

அவளை மேலிருந்து கீழாக வெறுப்போடு பார்த்தாள் நிரா.

“ஹலோ! நீ யார்னே தெரியாம தான் ருத்ராவை கட்டிட்டு வந்தனு கேள்விப்பட்டேன். உண்மையா?”

 

ஆம் எனத் தலையாட்டி வைத்தவளுக்கு நிராவின் பேச்சும் பார்வையும் பிடிக்கவில்லை.

 

“அப்பறம் எப்படி அவர் கட்டுன தாலியை சுமந்து இங்கே வந்திருக்க? லாஜிக் இல்லாம இருக்கே?” தாடையில் விரல் தட்டி யோசித்தாள்.

 

“லாஜிக் இல்லாத விஷயங்கள் உலகத்தில் நடக்கிறது கடவுளோட மேஜிக் நிரா. அப்பறம் அந்த தாலிக்கான விளக்கம் விளக்கெண்ணெய் வெள்ளை வெங்காயம் எல்லாம் உன் கிட்ட சொல்லிட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை” புன்னகை மாறா முகத்தோடு தான் சொன்னாள் அஞ்சனா. ஆனால் வார்த்தைகள் சுழல்வீச்சில் வந்தன.

 

“இந்த சொத்துக்கு உரிமையாகிட்டனு திமிருல பேசுறியா?”

 

“எஸ் நிரா! கொஞ்சம் இல்லை ரொம்பவே திமிரு இவளுக்கு. சொத்துக்கு உரிமையாகிட்டானு அனுமதி இல்லாமலே சொத்தை கட்டிக்கிட்டு ஆள போறா” என்ற சத்தத்தில் இருவரும் நிமிர இரண்டு இரண்டு படியாக தாவிக் கொண்டு வந்து நின்றான் ருத்ரன் அபய்.

 

“உனக்கும் விளங்கிருச்சா இந்த அஞ்சனாவோட நடிப்பு?” குரூர நகையோடு வினவினாள் நிரா.

 

“ஆமா இவளை இனி சும்மா விடுறதா இல்லை” பல்லைக் கடித்துக் கொண்டு சொன்ன ருத்ரன் மனைவியின் கையைப் பிடித்தான்.

 

அஞ்சனா சொத்துக்கு ஆசைப்பட்டு வந்ததாக தான் கூறியதைக் கேட்டு ருத்ரனும் அவ்வாறு நினைத்து விட்டான். இனி அஞ்சனாவைத் துரத்தி விடுவான் என்று கண்கள் மின்னியது வஞ்சகப் புத்தி கொண்ட நிராவுக்கு.

 

“சொத்துக்கு ஆசைப்பட்ட தானே நீ?” அஞ்சனாவைப் பார்த்து அவன் கேட்க, முழித்துப் பார்த்தாள் அவள்.

 

“இந்த சொத்து வேணாமா உனக்கு?” அவள் விரலைத் தன் நெஞ்சில் வைத்துக் காட்டினான்.

 

“எனக்கு அவ முத்துனா நான் அம்முவுக்கு பெரிய சொத்து. நான் அவளுக்கு மட்டுமே உரிமையா இருக்கனும்னு ஆசைப்படுறா. இந்த சொத்தை என்னிக்கும் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டா.

 

நான் முழு உரிமை கொடுத்துட்டேன். அனுமதி இல்லாமலே இந்த சொத்தை கட்டி ஆளப் போறேன்னு சொல்லிட்டா. இனி அடிக்கடி கட்டிப்பிடி வைத்தியம் தான்” காதலுடன் தன்னவள் தோளில் கை போட்டான் ருத்ரன்.

 

நிரா அதிர்ந்து பார்க்க, அவன் சொன்னதில் மகிழ்ந்து போன அஞ்சுவுக்கு வெட்கமும் வந்து தொலைத்தது.

 

“அதை தான் இப்போ சொன்னேன். இனி அவளும் என்னை விட மாட்டா. நானும் அவளை விட மாட்டேன். ஒரே ரொமான்ஸ் தான்” என்றவனின் முகம் சட்டென மாற,

 

“இவளை ஏதாவது சொல்லுற வேலை வெச்சுக்கிட்ட உன்னையும் சும்மா விட மாட்டேன். அத்தை பொண்ணாச்சேனு உறவு கொண்டாடி பாவம் பார்க்க மாட்டேன். இவ என் பொண்டாட்டி. என்னை நம்பி வந்தவ. அவளுக்கு ஏதாவது சொன்ன கழுத்தை பிடிச்சு எல்லாம் தள்ள மாட்டேன், உனக்கு இந்த வீட்டுல அடியெடுத்து வைக்கவே கூசுற அளவுக்கு பண்ணிருவேன் ஜாக்கிரதை” விரல் நீட்டி எச்சரித்தான்.

 

அவமானமாகவும், கோபமாகவும் இருந்தது நிராவுக்கு.

 

“சொத்துக்கு ஆசைப்படறது நீ தான். அந்த கண்ணோட்டத்தில் பார்க்கிற உனக்கு எல்லார் மனசுலயும் அந்த ஆசை இருக்கிற மாதிரி தான் தோணும். கறுப்பு கண்ணாடி போடுறவனுக்கு காணுற எல்லாம் கறுப்பா தெரியும் இல்லையா? இந்த சொத்து இன்னிக்கு வரும் நாளைக்கு போகும். அழியாத சொத்து அன்பு தான். அதோட எல்லாரையும் பார். உலகமே அன்பா, அழகா தெரியும் உனக்கு” மென்குரலில் கூறி விட்டுச் சென்றான் அவன்.

 

அறையினுள் வந்த அஞ்சனா அமைதியாக இருந்தாள்.

 

“இப்போ எதுக்கு ஒரு மாதிரி இருக்கே? அவ சொன்னதுக்கு நான் பதில் சொல்லியாச்சு. கோபமும் போயாச்சு. நீ மறுபடி அப்சட்டா இருந்தா உன் மேல கோபம் வருமோனு பயமா இருக்கு அம்மு. உன் மேல கோபப்படக் கூடாதுனு இருக்கேன்” முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் கூறினான்.

 

இயல்பு நிலைக்கு மீண்டு முயன்று புன்னகைத்தாள்.

 

“டீச்சருக்கே நான் சார் ஆக வேண்டியிருக்கு”

 

“அது கூட நல்லாத் தானே இருக்கு. டீச்சரையும் டாச்சர் பண்ண ஒருத்தர்”

 

“அடியே! நான் டாச்சர் பண்ணுறேனா?”

 

“ஆமா டாச்சர் தான். அழகான லவ் டாச்சர்” என்றவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.

 

அவன் பார்வை உணர்ந்து “நான் இவ்ளோ பேசுவேனானு பார்க்கிறீங்களா? அப்பா கூட இருக்கிற வரைக்கும் நல்லா பேசுவேன். அவரும் நானும் இருந்தா சத்தத்துக்கு பஞ்சம் இருக்காது. அடுத்த வீட்டு பாட்டி அடிக்கடி வந்து சத்தத்தை குறைங்கனு திட்டுவா.

 

வீட்டு முன்னால க்ரிக்கெட் ஆடுவோம். வயலுக்கு போவோம். திருட்டுத்தனமா மாங்கா பறிச்சிட்டு ஓடி வருவோம். மாறி மாறி ஜோக் பண்ணுவோம். கதை சொல்லுவோம்” தந்தையுடனான நினைவுகளில் கண்களும் கலங்கியது அவளுக்கு.

 

“ஆனா அவருக்கு அப்பறம் அந்த வீட்டில் பேச்சு சத்தமே இல்லை. நூன் யார் கூட பேசுறது? தோட்டத்தில் பூத்திருக்கிற மல்லிகைப் பூக்களோட பேசுவேன். கொஞ்சம் கஷ்டப்படுவேன். அப்பறம் சட்டுனு சரியாகிருவேன்” விரக்திப்புன்னகை அவளிதழில்.

 

“ஆனா இப்போ உங்களால நான் சிரிக்கிறேன். என் அப்பாவுக்கு நான் சிரிக்கிறது பிடிக்கும். ஆனா அவரில்லாம போனதுக்கு அப்பறம் சிரிக்க முடியல. மறுபடி அதே சிரிப்பை எனக்குள்ள உருவாக்கிட்டீங்க அபய். எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு” வார்த்தைகளில் இருந்த சந்தோஷம் குரலிலும் குறைவுறாது கலந்திருந்தது.

 

“இந்த சந்தோஷத்தை உனக்கு என்னிக்கும் தருவேன். என்னால முடிஞ்சளவுக்கு உன் கண்ணுல இதே சந்தோஷத்தை நான் பார்க்கனும் அம்மு குட்டி” அவள் தலையை வருடி விட்டான்.

 

“அபய்….!!” அவனது சர்ட் பட்டனோடு விளையாடிக் கொண்டு அழைத்தாள்.

 

“ம்ம் சொல்லு டி” கேள்வியாய் பார்த்தான்.

 

“நீங்க என்னை லவ் பண்ணுனீங்கனு சொன்னீங்களே. எப்போ கண்டீங்க? எப்படி என் மேல லவ் வந்துச்சு?” அண்ணாந்து அவன் முகம் பார்த்தாள் அஞ்சனா.

 

அவள் கேட்டது அத்தனை ஆனந்தமாக இருந்தது. காதல் தேவதை மீது காதல் பூத்த தருணமதை கூறத் துவங்கினான் ருத்ரன் அபய்.

 

தொடரும்………♡

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!