3. நேசம் நீயாகிறாய்!

5
(7)

🤎 நேசம் நீயா


கிறாய்! 🤎

 

நேசம் 03

சரியாக மூன்று மணிக்கு தன் வருங்கால மனையாளின் வீட்டு முன்னால் நின்று கார் ஹாரனை அழுத்தினான் ராகவேந்திரன்.

அவனது காத்திருப்பிற்குக் காரணமானவளோ தனது அறையில் “ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு..” என பாட்டுப் பாடியவாறு ஆடிக் கொண்டிருந்தாள்.

ஹாரன் சத்தம் காதில் விழுந்ததும், “ஷார்ப்னர் ஷார்ப்பா வந்துருச்சு. கொஞ்சம் வெயிட் பண்ணு மாப்பி” என நடனம் பயில,

“வாவ் ஃபயரா இருக்கே” எனும் சத்தத்தில் திரும்பியவள் துருவன் வீடியோ எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு விழி விரித்தாள்.

“ச்சும்மா அசத்திட்டக்கா. ராகவ் அண்ணா கிட்ட காட்டுறேன்” என அவன் ஓட, “டேய் துரு! டேய் இரு” அவள் துரத்திக் கொண்டு சென்று‌ அவனது டிஷர்ட்டைப் பிடித்தாள்.

“இப்போ என்னடி விளையாட்டு? ராகவ் தம்பி வந்திருக்கார். சீக்கிரம் போ. எப்போ பாரு எலியும் பூனையுமா சண்டை போட வேண்டியது” இருவரையும் அதட்டினார் சுசீலா.

“பெரிய தம்பி. ஹூம்” என தாயிடம் கவனம் செலுத்திய சமயம், அவள் பிடியிலிருந்து நழுவி ஓடினான் துருவன்.

“எஸ் ஆகிட்டானே. டேய் துருவா” அவனைப் பின்தொடர்ந்து ஓடிச் செல்ல, அவனோ ராகவ்வோடு கார் கண்ணாடியினூடாக கதைத்துக் கொண்டிருந்தான்.

“பார்த்து மெதுவா வா’க்கா. மாமாவைப் பார்க்கிற அவசரத்தில் எங்கேயும் விழுந்துடப் போற” எனக் கூறிய தம்பியை முறைத்துப் பார்க்க,

“சீக்கிரம் வா போகலாம். எனக்கு கொஞ்சம் வர்க் இருக்கு” என ராகவ் கூற, “லேட் ஆகனும்னு தானே பண்ணுறேன்” நடையின் வேகத்தை மட்டுப்படுத்தி மெதுவாக நடந்து வரலானாள் தேன் நிலா.

“ராகவ் அண்ணாவைப் பார்க்கப் போற ஆசையில் டான்ஸ் பண்ணிட்டு இப்போ அன்ன நடை நடக்கிறியே இது உனக்கே நல்லா இருக்கா?” என துருவன் கேட்க,

“பின்ன காஞ்சனா மாதிரி நடக்கவா?” அதீத கடுப்புடன் காஞ்சனா பேய் போல் நடந்து காட்டியவள் தம்பியின் தோளில் அடித்து விட்டே காரினுள் ஏறினாள்.

காரைச் செலுத்தியவனோ தொண்டையைச் செரும, “நான் டான்ஸ்லாம் பண்ணல அவன் சும்மா” என்றாள்‌ அவள்.

“டான்ஸ் இல்லையா? அப்போ ஜிமிக்கி பொண்ணுக்கு போட்ட ஸ்டெப்புக்குப் பெயர் என்ன?” அவன் அவள் புறம் திரும்பாமல் சாலையில் கவனம் பதித்தவாறு வினவ, விழி விரித்தவளது மனதில் நன்றாக திட்டு விழுந்தது உடன் பிறந்தவனுக்கு.

‘எரும எரும. என்னை டேமேஜ் பண்ண நீ ஒருத்தனே போதும்டா’ என திட்டித் தீர்த்தாள்.

பிடவைக் கடை வந்து விடவே இருவரும் உள்ளே நுழைந்தனர். மரகதம் பார்த்து வைத்த பிடவைகள் கடை பரப்பப்பட்டன.

“உனக்குப் பிடிச்சதை எடு” என்றவன் பக்கத்தில் வேடிக்கை பார்க்கத் துவங்க,

“கல்யாணமே பிடிக்கலங்கிறேன். இதுல பிடிச்ச பிடவையா?” என கடுகடுத்தாள் தேனு.

“கல்யாணத்தை நிறுத்துறதை அப்பறமா ப்ளான் பண்ணிக்க. இப்போ பிடவை எடு சீக்கிரம்” அவனுக்கு ஆறு மணிக்கு ஹாஸ்பிடல் செல்ல வேண்டியிருந்தது.

அவன் இளஞ்சிவப்பு வர்ணப் பிடவையைக் காட்ட அவன் முகம் மலர்ந்தது.

‘ஓஹோ ரஷ்ய ரசகுல்லாவுக்கு இது பிடிச்சிருக்கு போலவே. அப்படினா இதை எடுக்கக் கூடாது’ என அதை வைத்து விட்டு இளம் நீல நிறப் பிடவையைக் காண்பித்தாள்.

அவனோ முகச்சுளிப்போடு பார்க்க, அதை உடனே எடுத்து பில் போடக் கொடுத்து விட்டாள்.

வாங்கிக் கொண்டு காரினுள் சென்று அமர்ந்தவளுக்கு தன்னை நினைத்தே வேடிக்கையாக இருந்தது. ஏன் இப்படிச் செய்கிறோம் என்றெல்லாம் அவளுக்குத் தெரியவில்லை.

ஆனால் அவனை கடுப்பேற்ற வேண்டும். தான் வேண்டாம் என்பதைச் செய்வதால் அவனுக்குப் பிடிக்காததை செய்ய வேண்டும் என்று அவள் உள்ளம் பிடிவாதம் பிடித்தது.

“எனக்கு லைட்டா தலை வலிக்குது. அந்த கடைக்கு போய் ஒரு கப் காஃபி குடிச்சுட்டு வரலாமா?” என்று கேட்டான் ராகவ்.

“தலை வலியா? ஏன் என்னாச்சு?” சட்டெனக் கேட்டாள், உள்ளூர எழுந்த படபடப்போடு.

அவன் புருவம் சுருக்கிப் பார்க்க, “அது வந்து.. எங்க எதிர் வீட்டுக்காரர் என்கிற அக்கறையில் கேட்டேன். நீங்க போலீஸ்காரன் மாதிரி ஆராய்ச்சிப் பார்வை பார்க்காதீங்க” அவளே விளக்கமும் கொடுத்தாள்.

காஃபி வாங்கிக் குடித்தவாறே, “நான் போலீஸ்காரன் இல்லம்மா டாக்டர். அதுவும் இல்லாம நான் எதுவும் கேட்கக் கூட இல்லை. நீயே எதுக்கு வான்டட்டா இதெல்லாம் சொல்லுற?” என்று சற்று கடுமையாகக் கேட்டவனுக்கு அவள் கையில் இருந்த சாரியைப் பார்த்ததும் இதழ் கடையோரம் குறுநகை பூத்தது.

“அப்பறம் ஒரு விஷயம் சொல்லவா? எனக்குப் பிடிச்சது இந்தப் பிடவை தான். அதையே உன்னை எடுக்க வெச்சுட்டேன்” வெற்றிப் பொருமிதத்தோடு அவளை ஏறிட்டான் வேங்கை.

“நீ நெஜமாவே கில்லாடி தான்யா” அவள் கடுமையாக முறைக்க, “நீயே கில்லாடி. உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேன்னா எனக்கும் நிச்சயம் அந்தக் தகுதி வேணும்” என்றவனை ஆவென்று பார்த்தாள் இவள்.

“நீ..நீங்க பேசுவீங்களா?” அவள் ஆச்சரியமாகக் கேட்க,

“எனக்கு பேச வராதுனு கல்யாணம் பேசும் போது சொன்னாங்களா? அதனால பயந்து போய் ஊமை கூட வாழ முடியாதுன்னு கல்யாணத்தை நிறுத்த சொன்னியா?” எதிர்க் கேள்வி கேட்டான் காளை.

“ச்ச இல்லல்ல. இப்படிலாம் பேசுவீங்களானு கேட்டேன்”

அவன் தன்னோடு பேசியே இல்லாத போது இப்படியாக சற்று ஹாஸ்யமாகப் பேசியது அதிர்ச்சியும் ஆச்சரியமும் தான். அவள் யோசிக்கத் தவறியது முன்பும் இன்றும் ஒன்று போல் இல்லை என்பதையே.

“உனக்கு வேணும்னா கல்யாணத்தை நிறுத்த என்ன வேணா பண்ணிக்கோ. நான் தடுக்க மாட்டேன். சேம் டைம், நான் நிறுத்தவும் மாட்டேன். பார்ப்போம் வாழ்க்கை நம்மளை சேர்க்குதா இல்லையானு” என்றவாறு காரை எடுத்தான்.

அவன் கூறியதை உள்வாங்கி சிந்தனையுடனே வந்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தலை சுற்றிப் போனது.

வீட்டிற்கு வந்தவளை எதிர்கொண்ட சுசீலா பிடவையைப் பார்த்து, “அழகா இருக்கு தேனு. ராகவ் தம்பி எவ்ளோ அழகா எடுத்து தந்திருக்கார் பாரேன்” ஆஹா ஓஹோவென புகழ்ந்து தள்ளினார்.

“ம்மா! ஒரு டவுட்டு. நீங்க எனக்கு அம்மாவா அந்த ரஷ்யாக்காரனுக்கு அம்மாவா?” என கோபமாகக் கேட்டாள் மகள்.

“என்னது ரஷ்யாக்காரனா? அவர் உன்னை கட்டிக்கப் போறவர். மரியாதை கொடுத்து பேசனும்” கண்டிப்போடு உரைத்தார் தாய்.

“இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்குமாம்மா?” அவள் கேட்டதும், “உனக்கு என்னடி ஆச்சு? வந்ததில் இருந்து கிறுக்குத் தனமாவே பேசிட்டு இருக்கே. உன் சம்மத்ததைக் கேட்டு தானே ஏற்பாடு பண்ணுறோம். அவங்க வீட்டுலயும் முழு சம்மதம். கல்யாணம் கண்டிப்பா நடந்தே தீரும்” உறுதியுடன் கூறி விட்டு சமயலறையினுள் நுழைந்து கொண்டார் சுசீலா.

அறையினுள் புகுந்தவளுக்கு ராகவ்வின் ஞாபகமாகவே இருந்தது. தனக்கென வருகின்றவன் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என அப்போதிலிருந்தே வரையறையை விதித்து கற்பனைக் கோட்டை கட்டியிருக்கிறாள்.

ஆனால் திடீரென்று ராகவ்வுடனான திருமணத்தை ஏற்க முடியவில்லை. தனது கற்பனையைப் போல் அவன் இல்லை என்றே அவள் மனம் வாதிட்டது.

அந்நேரம் துருவன் வந்து யோசனையில் ஆழ்ந்திருந்தவளைப் புருவம் நெறித்துப் பார்த்தான்.

“எந்தக் கோட்டையை பிடிக்க இவ்ளோ யோசனை பண்ணுற?” என்றவாறு அவளருகே வந்து அமர,

“கொஞ்சம் பேசாம இரேன்டா” சோர்ந்து போன குரலில் மொழிந்தாள்.

“உனக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டம் இல்லையாக்கா?” விளையாட்டைக் கைவிட்டு சீரியசாக கேட்டான்.

“தெரியல துரு. மனசெல்லாம் ஒரு மாதிரி இருக்கு. என் மனசுல என்ன ஓடுதுனு என்னாலேயே புரிஞ்சுக்க முடியல. தலையை வலிக்குது”

“டாக்டர் கிட்ட தான போகப் போற. இனி தலை வலி வந்தா பயமில்லை” என்று சொன்னவன் அவளது முறைப்பைக் கண்டதும்,

“ஓகே எதுவும் பேசல. ஷ்ஷ்” வாயில் விரல் வைத்து அமைதியானான்.

சிறு வயதில் இப்படி அவன் செய்வது நினைவில் உதிக்க, இதழில் துளிர்த்த மென் சிரிப்புடன் அவன் தோளில் தலை சாய்த்து இமை மூடினாள் சகோதரி.

மறுபுறம் எதிர்வீட்டில் அவளைப் பற்றிய எண்ணத்தில் தான் அவனும் இருந்தான்.

தேன் நிலாவைக் கட்டிக் கொள்ள சம்மதமா என்று கேட்ட போது தலையாட்டி விட்டான். மறுப்பதற்கு அவனிடம் எந்தக் காரணமும் இருக்கவில்லை.

ஆனால் அவளுக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்பது மட்டுமே நெருஞ்சி முள்ளாய் நெருடியது. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என விட்டு விட்டு லேப்டாப்பில் கவனம் செலுத்தினான்.

அறையினுள் வந்த மரகதம் அவனருகே அமர்ந்து கொள்ள, “என்னம்மா?” பக்கவாட்டாகத் திரும்பி அவரை நோக்கினான்.

“நீ சாப்பிடவே இல்லை. அது கொஞ்சமாவது நினைவு இருக்கா? எப்போ பாரு ஹாஸ்பிடல் வேலைனு திரிஞ்சு உன்னை மறந்துரு” செல்லமாகக் கடிந்து கொண்டார்.

“என்னை நானே மறந்தாலும் நீங்க மறக்க மாட்டீங்களே. சோ எனக்கு பயமே இல்லை” கண் சிமிட்டியவனுக்கு சிரிப்புடனே உணவூட்டினார்.

“இன்னும் கொஞ்சம் நாள் தான். அதுக்குப் பிறகு உனக்குக் கல்யாணம்ல?” சந்தோஷத்துடன் கூடவே ஏக்கமும் தொனிக்கக் கூறினார்.

மருமகள் வந்து விட்டால் தனக்கும் மகனுக்குமான உறவு தூரமாகி விடுமோ என்பது அவரது பயம். அதற்கு எந்தத் தாயும் விதி விலக்கல்ல.

“என்னம்மா நீங்க? நான் கடல் கடந்து ரஷ்யாவுக்குப் போகும் போது கூட இவ்ளோ கவலைப்படல. ஆனால் இப்போ இப்படி பண்ணுறீங்க. நான் அடுத்த வீட்டுக்குக் கூட போகல. இந்த வீட்டுலயே தான் இருக்கப் போறேன்” தாயைத் தோளோடு சேர்த்து அணைத்தான் மைந்தன்.

“போடா உனக்கு என் மனசு புரியாது” என்றவர், “பிடவை எடுக்க போனப்போ தேனு உன் கூட நல்லா பேசினாளா? உனக்கு அவளைப் பிடிச்சிருக்குல்ல?” எனக் கேட்டார் மரகதம்.

“பிடிக்கலனா கல்யாணமே வேணானு சொல்லிருப்பேன். கல்யாணத்தை பக்கத்தில் வெச்சுட்டு இந்தக் கேள்வி கேட்குறீங்களே” என சொன்னவனைத் தாயானவள் நிறைவோடு பார்க்க,

‘ஆனா அவளுக்குத் தான் என்னைப் பிடிக்கல போல. கல்யாணமே வேணாங்குறா’ உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான் அவன்.

அவன் தன் எண்ணப்படி இல்லை என அவள் நினைக்க, அவளுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என இவள் நினைக்க காலம் யாருக்கும் காத்திராமல் நகர்ந்து, மூன்று நாட்களில் திருமணம் எனும் நிலையும் வந்து விட்டது.

ஏதாவது செய்து திருமணத்தை நிறுத்த வேண்டும் என அவள் செய்த காரியம், கல்யாணம் செய்தேயாக வேண்டும் என அவனைச் சொல்ல வைக்கப் போவதை அவள் அறியவில்லை.

மறுநாள் கண்களில் எரிமலைப் பிளம்பு வெடிக்க, அவள் முன் புதியதொரு அவதாரத்தில் நின்றிருந்தான் ராகவேந்திரன்.

 

தொடரும்…..!!

 

ஷம்லா பஸ்லி

2024-11-08

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!