🤎 நேசம் நீயாகிறாய்! 🤎
நேசம் 04
“உனக்கு ரெண்டு நாள்ல கல்யாணம் டி. அதுக்குள்ள தைக்க துணி வாங்கனும்கிற” சுசீலா மகளை ஏச, “ம்மா! ரெண்டு நாள் இருக்குல்ல. சும்மா இருக்க போரடிக்குது. புது டிசைன் பார்த்திருக்கேன். துணி வாங்கினா தைக்கலாம்” இட்லியை வாயினுள் அடைத்தாள் தேன் நிலா.
“நீ என்னம்மா ஒன்னும் தெரியாம இருக்கிற? அழகழகா தச்சு ராகவ் அண்ணாவுக்கு உடுத்தி அழகு காட்டனும்னு அக்காவுக்கு ஆசை” என துருவன் நக்கலாகக் கூற,
“ஒரு நாள் உன் வாயையும் சேர்த்து தச்சு விடுவேன் டா. அப்போ என்னை நக்கல் பண்ண வர மாட்ட” தம்பியை முறைத்தாள் அவள்.
“ஆமா துருவா. நானும் அப்படித் டிசைன் டிசைனா உடுத்தி உங்கப்பா முன்னால நிற்பேன்” சுசீலா வெட்கப்பட,
“அப்பா மயங்கிப் போய் ‘உடையழகா உன் நடையழகா’னு பாட்டு பாடினாரா?” என துருவன் கேட்டதும், சல்லிக்காசுகள் சிதறியதைப் போல் நகைத்தாள் தேனு.
“உங்கப்பாவா? டெரரா ஒரு லுக்கு விட்டுட்டு நிப்பாரு. என் நேரம் தான் வேஸ்ட்டு. ஆனாலும் அப்பப்போ புகழுவார்” பாவமாகக் கூறினார் சுசீலா.
“வெட்கம், வேதனை, அவமானம்” என சொன்னவளுக்கு, ஒரு விடயம் நினைவுக்கு வந்தது.
எந்த ஒரு பெண்ணும் ஆசைப்படும் விடயம் அது. அதிலும் தேன் நிலாவுக்கு தான் உடையணிந்து அலங்காரம் செய்தால் ‘அழகா இருக்கே! செம கியூட், ஏஞ்சல்’ என்றெல்லாம் தனக்கு வருபவன் புகழ வேண்டும் என்பதில் அதீத ஆசை.
ஆனால் இந்த ராகவேந்திரன் அப்படிச் சொல்வானா? அவனுக்கு ரசனை என்பது இருக்குமா?
தனக்காக கவிதை சொல்வானா? பாட்டுப் பாடுவானா?
அவள் யோசனை இறக்கை கட்டிப் பறக்கலானது.
சாப்பிட்டு முடித்தவள் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் துணிக் கடைக்குச் சென்றாள்.
விதவிதமான துணிகள் கண்ணைக் கவர, ஒருவாறு போராட்டத்துடன் ஒன்றைத் தெரிவு செய்து கொண்டு வெளியில் வந்தவளுக்கு எதிரில் இருந்த காரைப் பார்த்ததும் கண்கள் பளிச்சிட்டன.
அது ராகவ்வின் கார். அன்று அவனுக்குப் பிடித்த பிடவையை எடுக்க வைத்ததை நினைத்தவளுக்கு கடுப்பாக, ஏதோவொரு யோசனையில் காரருகே சென்றாள்.
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு குனிந்தவள் பின்னாலிருந்த டயரை பஞ்சர் செய்து விட்டு நிமிர, அவன் வருவதைக் கண்டதும் வேறொரு காரின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
பார்மசியில் இருந்து வெளியில் வந்து காரை எடுத்தவன், காரைச் சோதித்ததும் பஞ்சரானதை அறிந்து பதற்றம் கொண்டான்.
“ஷிட்! அர்ஜன்டா ஹாஸ்பிடல் போயாகனுமே” கையைத் திருப்பி வாட்சைப் பார்த்தவன் ஆட்டோ வருகிறதா என அங்குமிங்கும் பார்க்கும் போது, அவனது வேல் விழிகளுக்கு தப்பாமல் சிக்கினாள் தேன் நிலா.
விறுவிறுவென அவளிடம் சென்று, “இதை நீயா பண்ணது?” எனக் கேட்டதும் அவள் முழித்துப் பார்த்தாள்.
“சொல்லு” கூரிய விழிகளால் அவளை அளவிட, “ஆமா” தலையசைத்ததும் அவன் முகம் சிவந்து போனது.
“என்னடி நெனச்சிட்டு இருக்கே உன் மனசுல? எல்லாம் உனக்கு விளையாட்டாப் போச்சுல்ல? அங்கே ஒருத்தர் உசுருக்குப் போராடிட்டு இருக்காரு. நீ இவ்ளோ லூசுத்தனமா ஏதோ பண்ணி டென்ஷன் ஏத்துற” வார்த்தைகளைக் கடித்துத் துப்ப, அவள் அதிர்ந்து நின்றாள்.
“எ..எனக்கு உங்க நிலமை தெரியாது. சாரி” அவள் மன்னிப்புக் கேட்க,
“கல்யாணத்தை நிறுத்தனும்னா உன் அப்பா கிட்ட போய் சொல்லு. அதை விட்டுட்டு இந்த மாதிரி சில்லித்தனமா பண்ணுனே மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்றவன் அவளது கையில் இருந்த ஸ்கூட்டர் சாவியைப் பிடுங்கினான்.
“அன்ட் இன்னொரு விஷயம் சொல்லுறேன் நல்லா கேட்டுக்க. இனி என்ன நடந்தாலும், நீயே வேணாம்னு சொன்னாலும் உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்தே தீரும்” விரல் நீட்டி எச்சரித்து விட்டு, அவளது ஸ்கூட்டரில் ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தான் டாக்டர் ராகவேந்திரன்.
அவனைச் சாதாரணமாகவே பார்த்திருந்தவளுக்கு இந்தக் கோபமுகம் புதிது. சிலையெனவே வீடு வரை நடந்து சென்றவள் கட்டிலில் விழுந்தாள்.
அவளை இதுவரை யாரும் இவ்வளவு கோபமாகத் திட்டியதில்லை. தனது பக்கம் தவறு என்ற போதும் அவளால் அந்தக் கோபத்தை ஏற்க முடியவில்லை.
“கல்யாணம் ஆகும். என்னால இதை நிறுத்த முடியாதுனு புரிஞ்சு போச்சு. ஆனா உனக்கும் எனக்கும் என்னிக்குமே செட்டாகாது. எனக்காக வர்றவன் என் கிட்ட இவ்ளோ ஹார்ஷா நடந்துக்க கூடாதுன்னு நெனச்சேன்.
அந்த எண்ணத்தைக் கூட நீ பொய்யாக்கிட்ட. எனக்கும் உனக்கும் ஒத்து வராது. ரோஸ் மில்க் மாதிரி ஸ்வீட்னு பார்த்தா, நீ ரெட் சில்லி போல காரமா இருக்கே” அவனாக நினைத்து தலையணைக்கு குத்தியவளின் கண்களில் கண்ணீர் மட்டும் நில்லாமல் அருவியென வழிந்தது.
சாயங்காலம் அவளது ஸ்கூட்டர் சத்தம் கேட்க, வேகமாக வெளியில் ஓடினாள். தாயார் காணும் முன் அவனிடம் அதனை வாங்கிக் கொண்டு அனுப்பியாக வேண்டும் என்பது அவள் எண்ணம்.
சிறிது தாமதித்து சுசீலாவிடம் மாட்டி அவருக்கு நடந்தது தெரிந்தால் தன்னை திட்டித் தீர்த்து விடுவார் என நினைக்க, அவள் நினைப்பைப் பொய்யாக்குவது போல் ராகவ்வோடு கதைத்துக் கொண்டிருந்தார் சுசீலா.
வந்த வேகத்தில் திரும்பும் முன் அவளைக் கண்டு கொண்ட தாயவள் முறைத்துப் பார்க்க, ‘ரஷ்யா ரோபோட் காரை பஞ்சர் பண்ணதைச் சொல்லிட்டானா? என் மம்மி இனி என்னை பஞ்சர் பண்ண போறா’ உள்ளுக்குள் புலம்பித் தள்ளினாள் மகள்.
“ஸ்கூட்டியில் சாவியை வெச்சுட்டு அது மறந்து வீட்டுக்கே வந்துட்டியா? நல்ல வேளை ராகவ் தம்பி கண்டதால எடுத்து ஹாஸ்பிடல் போய்ட்டு கொண்டு வந்து கொடுத்திருக்கார். வேற யாராச்சும் கண்டிருந்தா கொள்ளையடிச்சுட்டு போயிருப்பானுங்க. ஆள் வளர்ந்திருக்கே தவிர அறிவு வளரல” பொறிந்து தள்ளி விட்டு உள்ளே சென்றார் சுசீலா.
“ஸ்கூட்டர்ல சாவியை வெச்சுட்டு போக எனக்கு மூளை இல்லையா? இவன் தான் அறிவு கெட்ட தனமா பொய் புளுகினா இவங்களும் நம்பிட்டாங்களே” சத்தமாகவே அவள் சொல்ல அது ராகவ்வின் செவிகளிலும் நன்றாகவே விழுந்தது.
“அப்போ நான் உண்மையைச் சொல்லிடுறேன்” என உள்ளே செல்லப் போனவனின் கையைப் பிடித்தாள் அவள்.
அவனோ தன் கையைப் பிடித்த அவள் கரத்தைப் பார்க்க, “சா..சாரி தெரியாம” வெடுக்கென கையை எடுத்துக் கொண்டாள்.
“இன்னும் ரெண்டு நாள்ல இப்படி கையைப் பிடிச்சுக்க போறோம். அக்னியை வலம் வரப் போறோம். சோ சாரி சொல்லத் தேவையில்லை” அவன் சின்னச் சிரிப்போடு தோளைக் குலுக்க,
அவன் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவளுக்கு அந்தச் சிரிப்பு மட்டுமே மனதில் ஆழமாய்ப் படிய, “உங்களுக்கு கோபம் போச்சா?” எனக் கேட்டாள்.
காலையில் எவ்வளவு கோபமாகப் பேசினான். அப்படி கோபப்பட்டவனா இப்போது சிரிப்பது என ஆச்சரியம் பெருகியது. அவள் கேட்ட கேள்வி அவனுக்கும் புரியவே செய்தது.
“நீ தப்பு பண்ணின திட்டினேன். திட்டுனதால கோபம் போயிருச்சு” எனக் கூற,
“அம்மா கிட்ட உண்மையை சொல்லிட்டீங்களோனு நெனச்சேன்” என்றவளுக்கு திடீரென்று கண்களில் மின்னல் வெட்ட, “கோபம் போச்சுன்னா கோபமா சொன்ன வார்த்தைகளும் அவ்ளோ தான்ல?” எனக் கேட்டாள்.
திருமணம் நடந்தே தீரும் எனக் கூறினானே. அதை மையப்படுத்தி அவள் கேட்க,
“கோபம் போச்சே தவிர, சொன்னது சொன்னது தான். எனக்கும் உனக்கும் கல்யாணம் கண்டிப்பா நடக்கும்” என்று திடமாகச் சொன்வனோ அவளது முகத்தில் தெரிந்த வாட்டத்தைக் கண்டு,
“அப்படினு சொல்லவே மாட்டேன். தாராளமா என்ன செஞ்சும் கல்யாணத்தை நிறுத்திக்கலாம். நான் கூட ஐடியா தர்றேன். ஆனால் நீ தான் நிறுத்தனும்” என்று கூற அவன் முகத்தை ஆழ்ந்து நோக்கினாள்.
அவனுக்கு தன்னைப் பிடித்திருப்பதால் தான் கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறானோ என்ற சந்தேகம் சில நாட்களாக ஏற்பட்டிருந்தது. ஆனால் அவனே கல்யாணத்தை நிறுத்த யோசனை சொல்வதானால்? அவனுக்குமே பிடிக்கவில்லையா? அப்படியாயின் அவன் நிறுத்த வேண்டியது தானே?
நாலாபக்கமும் யோசனை சென்று, தலை சுற்றிப் போனாள் அவள்.
“ஆனால் முக்கியமான தகவல் நிலா! கல்யாணத்துக்கு ரெண்டே நாள் தான் மிச்சம் இருக்கு. முடிஞ்சதை பண்ணிக்கோ. வரட்டா?” என தலையசைத்துச் செல்ல அவனையே பார்த்திருந்தாள் தேன் நிலா.
வீடு சென்றவனை எதிர்கொண்ட ப்ரீத்தி, “மாமா! அத்தை பார்க்க கூட்டி போங்க” என ஓடி வர,
“அத்தை உள்ளே போயிட்டாங்களே. நாளைக்குப் போகலாம் ப்ரின்சஸ்” அவளைத் தூக்கிக் கொண்டான் ராகவ்.
“டேய் ராகவ்! அவளை இறக்கி விடு. நீ தூக்கி தூக்கி பழக்குற மாதிரி இல்ல. வீட்டுக்குப் போனாலும் இவளை நாங்க தூக்கிக்க வேண்டியிருக்கு. அஞ்சு வயசாச்சு டா” உணவுத் தட்டோடு வந்தாள் ரேஷ்மா.
“அஞ்சு தானே ரேஷு. ஐம்பதான மாதிரி சொல்லுற” என்று அங்கு அமர்ந்திருந்த மாதவன் சொல்ல,
“ஆமாமா நீங்க வேலைக்கு போயிடுவீங்க. அவளைத் தூக்கிட்டு வேலையும் பார்க்கிறது நான் தானே” கணவனை முறைத்தாள் அவள்.
“மாமா கூட சண்டைக்கே போறியேக்கா” இருவரையும் பார்த்துச் சிரித்தான் ராகவ்.
“பின்ன என்னடா? அவரு வேலைக்கு போயிட்டு வரும் வரை நான் காத்துக்கிட்டு இருக்கனும். லவ் பண்ணும் போது மட்டும் உன்னை விட்டு நொடியும் பிரிய மாட்டேன்னு டயலாக் விடறது” ரேஷ்மா கிடைத்த சாக்கில் குற்றங்களை அடுக்க,
“லவ் பண்ணும் போது அப்படி. கல்யாணமானாலும் அப்படியே இருக்க முடியுமா? என் கிட்ட பூதம் ஒன்னு இருக்குனா அதை வெச்சு வேலை வாங்கிட்டு ஒரு செக்கன் கூட பிரியாமல் இருக்கலாம். ஆனா அப்படி இல்லையே. எத்தனை பொறுப்பு இருக்கு” நக்கல் போல் யதார்த்தத்தை உரைத்தான் மாதவன்.
“அதுவும் சரி தான் மாது” கணவனோடு அவள் சமாதானமாகி விட,
‘அதுக்கு தான் இந்த டயலாகே வேணாம்னு இருக்கேன். சொல்லிட்டு செய்யாம இருக்கிறத விட, சொல்லாம இருந்தா அப்படில்லாம் இருக்கனும்கிற கடன் இருக்காது. ஆனால் அதை கடமையா நெனச்சு நம்மளால முடிஞ்ச வரை அவங்க கூட இருக்கனும்’ என்று ராகவ் மனதினுள் சொல்லிக் கொண்டான்.
“மாமா மாமா. அங்கே பாருங்க தேனு” ப்ரீத்தி ஆவலுடன் எதிர் வீட்டை சுட்டிக் காட்ட, சடாரென திரும்பிப் பார்த்த அவன் விழிகளிலும் அத்தகைய ஆவல் இருந்ததுவோ?
அவளது வீட்டுத் தோட்டம் ராகவ்வின் அறையின் பல்கோணியில் இருந்து பார்த்தால் நன்றாகத் தெரியும். அங்கிருந்து அவன் பார்வையை வீசிட, பூச்செடிகளை வருடியவாறு ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் தேனு.
பூக்களைப் பார்க்கும் அவள் விழிகளில் அத்தனை மென்மை. முகத்தில் கொத்துக் கொத்தாய் ஆனந்தம்.
ஆனால் தன்னைப் பார்க்கும் போது மட்டும் எங்கிருந்து தான் கடுகடுப்பு வந்து விடுகிறதோ? அவளைப் பார்க்கும் போதெல்லாம் கல்யாணத்தை நிறுத்தும் அவளது எண்ணம் தான் மனக்கண் முன் வந்து நிற்கும்.
“பிடிக்கலனா வீட்டுல பட்டுனு சொல்லிட வேண்டியது தானே? அதை விட்டு ஏன் இந்த ரெண்டுங்கெட்டான் நிலை?” அவளிடம் இங்கிருந்து கேட்க,
அவன் சொல் அவளை எட்டியதோ?!விலுக்கென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“ரஷ்யாக்காரன் எதுக்கு இங்கே லுக்கு விடுறான்?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்ட சமயம், “இட்ஸ் லவ் அக்கா” என தனது பின்னால் நின்று பதில் கூறிய தம்பியை அடிக்கத் துரத்தினாள் ஏந்திழை.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி
2024-11-10