🤎 நேசம் நீயாகிறாய்! 🤎
நேசம் 13
தொண்டையைச் செருமிக் கொண்டு சென்று இருவருக்கும் குளிர்பானம் வழங்கி விட்டு அறையினுள் ஓடினாள் தேன் நிலா.
அவள் காதுகளில் சற்று முன் கேட்ட வார்த்தைகளே மீண்டும் மீண்டும் எதிரொலிக்க, தனுஜா சொன்னதை ஒரு தடவை மீட்டிப் பார்க்கலானாள்.
“நீ ரஷ்யாவில் இருக்கும் போது ஒரு பொண்ணை லவ் பண்ணுனியே. அது என்னாச்சு? உன் லவ் சக்ஸஸ் ஆச்சா?”
ராகவ்விற்கு ஒரு பெண் மீது காதலா? அதுவும் தன்னிடம் மறைத்து விட்டானா? அவளால் ஏற்க முடியவில்லை.
இல்லை என்று சொல்லி விடு. அப்படி எதுவும் இல்லையென மறுத்து விடு என்று மானசீகமாய் மன்றாடிய போதும், அவனும் அவள் நம்பிக்கையை சிதறடித்து விட்டான் அல்லவா?
“இல்லை. லவ்வ சொல்ல நெனச்சு இருந்தப்போ திடீர்னு கல்யாணம் முடிவாச்சு. அது நடந்தும் முடிஞ்சுருச்சு. இனி என் வாழ்க்கை இப்படித் தான் போகும் போல” அவன் குரலில் விரக்தியின் சாயல்.
“நோஓஓஓஓ” மனையாளின் மனம் ஓவென்று அலறியது.
அப்படியென்றால் அவனுக்கு தன் மீது எந்த அபிப்பிராயமும் இல்லை. தாலி கட்டியதால் கடனே என்று வாழ்கிறானா? யதார்த்தம் பேசியது, தனக்கும் அவ்வாறு நடந்து கொள்ளக் கூறியது எல்லாம் அவனும் அவ்வாறு ஏற்றுக் கொண்டதால் தானா?
நேரங்கள் கரைந்த போதும் அவளால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர முடியவில்லை. அடுத்து என்ன செய்வதென்று அவளால் கற்பனை செய்ய இயலாமல் நிற்க,
“திருமதி தேன் நிலா ராகவேந்திரன்!” என்று அருகாமையில் கேட்ட அழைப்பில் திடுக்கிட்டுத் திரும்பினாள்.
மார்புக்குக் குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்தான் ராகவேந்திரன்.
“என்ன? என்ன வேணும்?” வெடுக்கென்று கேட்க, “சும்மா நடிக்காதீங்க மேடம். தனு கிட்ட எவ்ளோ அழகா சொன்ன. இப்போ மட்டும் எதுக்கு முறுக்கிக்கிற?” என்று கேட்டவனுக்குத் தெரியாதல்லவா அவள் இருக்கும் மனநிலை?!
“நான் முறுக்கிக்கல. எல்லாத்தையும் யதார்த்தமா ஏத்துக்கிட்டு, அந்த பொத்தான் இருக்குல்ல பொத்தான், அதைப் போல பொருத்திக்கிட்டு போக ட்ரை பண்ணுறேன்” எவ்வளவு முயன்றும் அவளால் சாந்தமாகப் பேச முடியவில்லை.
“எதுக்கு இவ்ளோ கோபமா இருக்கே. ச்சில் ஹனி மூன்” என்று சொல்ல, அவளுக்கு வந்ததே கோபம்.
“இதோ பாருங்க. இந்த ஹனி மூன் சனி மூன்னு சொல்லுற வேலை இனி வெச்சுக்காதீங்க. வேற பெயரே கிடைக்கலயா உங்களுக்கு?” மூக்கு நுனி சிவக்க சீறினாள் வஞ்சி.
அவனோ தனுஜா விடயத்தில் கோபமாக இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டான். எனவே வழக்கம் போல் அவளை சீண்டிப் பார்க்கச் சொல்லியது அவனது சில்மிஷம் சூழ் உள்ளம்.
“ஹனிமூன் மேல உள்ள ஆசையோ என்னவோ உன்னை அப்படி கூப்பிடத் தான் தோணுது. ஒரு தடவை கொடைக்கானல் போயிட்டு வருவோமா? அப்போ அப்படி கூப்பிட மாட்டேன்” என்று கண்ணடித்துக் கூற,
“இல்ல மகாராஜா! போகவும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம். நீங்க தாராளமா என்னை ஹனி மூன்னே கூப்பிட்டுக்கோங்க” கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளைத் துப்பினாள்.
“நாங்க பீச் போறோம். நீயும் ரெடியாகிட்டு வா” என்று அவன் சொல்ல, “நான் வரல” உடனடியாக மறுப்புக் கொடி தூக்கினாள் தாரகை.
“ஏர்போர்ட் போறதுக்கே கூட வருவேன்னு அடம்பிடிச்ச. இப்போ கூப்பிட்டாலும் வர முடியாதுனு சொல்லுற. நான் என்ன சொன்னாலும் மறுபக்கமாகவே பண்ணனும்னு வைராக்கியமா?” அவள் மறுத்ததும் சற்று கடுமையாகக் கேட்க,
“என்ன வேணா நெனச்சிக்கங்க. நீங்க சொன்ன உடனே வரனும்னு எந்த அவசியமும் இல்லல்ல. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு இருக்கிற ஆள் நான் கிடையாது”
சம்பந்தமே இல்லாமல் அவள் கோபப்படுவது போல் அவனுக்குத் தோன்றியது.
“ஏன் தான் இப்படி டென்ஷன் பண்ணுறியோ? போற இடத்துக்கு சந்தோஷமா போக விடறியா?”
“உங்க சந்தோஷத்துக்கு யாரும் குறுக்கா வரல. நீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா போயிட்டு வாங்க” என்று சொன்னதும், அவளை முறைத்து விட்டு வெளியேறினான்.
“கல்யாணம் வேணானு சொன்னத நம்பி அதை நான் நிறுத்துவேன்னு நெனச்சுட்டாரா? அவர் விரும்பிய பொண்ணு கூட வாழ விடாம அந்த சந்தோஷத்தை நான் பறிச்சுட்டேனா?” அவளது மனம் எது எதையோ யோசித்து குழம்பிப் போனது.
ராகவ்வும் நண்பர்களும் கடற்கரைக்குச் செல்ல ஆயத்தமாக, தேனுவும் ரெடியாகி வந்திருந்தாள்.
“யாரோ வர மாட்டேன்னு சொன்னாங்க” அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக சொல்லவும், “லிரிஷா ரொம்ப கெஞ்சினா. அதான் வர்றேன்” உனக்காக வரவில்லை என்று முகத்தகலடித்தாற் போல் சொல்ல அவனுக்கு முகம் வாடியது.
நகுல் கார் ஓட்ட, அவனோடு வந்தவர்கள் அதில் சென்றனர். ராகவ் பைக்கில் செல்ல, அவனோடு தேனு செல்ல வேண்டியதாகிற்று.
“எதுக்கு மூஞ்சை இப்படி வெச்சுட்டு வர்றே? என்ன தான் ஆச்சு உனக்கு?” அவள் அவ்வாறு இருப்பது அவனுக்கு ஏதோ போல் இருந்தது.
“நான் முகத்தை எப்படி வெச்சுக்கிட்டாலும் உங்களுக்கு என்ன? நான் சிரிச்சா சில்லறை கிடைக்கிறதும் இல்ல, அழுதா அவார்டு கிடைக்கிறதும் இல்ல. என்னை விட்டுட்டு ரோட்டை பார்த்து போங்க” அவனோடு பேசவே அவளுக்கு மனம் உறுத்தியது.
அவனும் அதற்கு மேல் பேசாமல் மௌன ஆயுதத்தை ஏந்தி செல்லுமிடம் வந்ததும் வண்டியை நிறுத்தினான்.
“வர முடியாதுனு சொல்லிட்டு ரொமான்ஸ் மூட்ல வந்திருக்கீங்களே தேனு” என லிரிஷா சிரிக்க,
‘அட அல்ப! என்னைப் பார்த்தா ரொமான்ஸ் மூட்ல இருக்கிற மாதிரி இருக்காமா? நானே கொலை காண்டுல இருக்கேன். விட்டா இந்த ரஷ்ய பீஸை பீஸ் பீஸா கட் பண்ணி பீட்சா செஞ்சுருவேன்’ உள்ளுக்குள் கருவிக் கொண்டாலும், வெளியில் இளித்து வைத்தாள்.
மற்ற மூவரும் நீரில் விளையாட, ஓரமாய் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்த தம்பதியினரிடம் வந்த தனுஜாவோ “நீங்க புது ஜோடி தானே? ஏன் அந்த அறிகுறியே இல்லாம இருக்கீங்க?” என்று தேனுவிடம் கேட்டாள்.
“அறிகுறின்னா நாங்க புதுசா கல்யாணம் ஆனவங்கனு முன்னும் பின்னும் போஸ்டர் அடிக்கனுமா? இல்லனா மைக் போட்டு அறிவிக்கனுமா?” உதட்டில் புன்னகையும் குரலில் கோபமுமாக வந்து விழுந்தன தேனுவின் வார்த்தைகள்.
“புதுசா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கனா அவங்களைப் பார்க்கும் போதே அது விளங்கும். அந்த வைப் உங்க கிட்ட இல்லனு தோணுச்சு. அதான் கேட்டேன்” அவளது நக்கலில் எழுந்த அவமானத்தை வெளிக்காட்டாமல் சமாளித்தாள் தனுஜா.
“உங்களுக்கு தோணுனா அதுக்கு நாங்க பொறுப்பாக முடியாது. அன்ட் புதுசா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு எங்களுக்கு தெரிஞ்சா போதும். மத்தவங்களுக்கு காட்ட தேவையில்லை. எங்க வைபை பார்க்காம, பீச்ல இருக்கிற அழகான வைப்ஸ்ஸ பார்த்து ரசிங்க” என அவள் சொல்ல, தனு தலையாட்டலுடன் நகர்ந்தாள்.
இருவரின் சம்பாஷணையை கவனித்துக் கொண்டிருந்த ராகவ்வின் மீது அவன் மனையாளின் பார்வை அனலுடன் படிந்தது.
“அவ என்னென்னவோ பேசுறா. நீங்க என்னன்னா என்டர்டெயின்மென்ட் ஷோ மாதிரி இன்ட்ரெஸ்டா பார்த்துட்டு இருக்கீங்க” என்று கேட்டவளின் வார்த்தைகளிலும் அனல் தெறித்தது.
“எக்ஸாட்லி நிலா! டிவி சீரியலை விட செம இன்ட்ரெஸ்டா இருந்துச்சு” என்றவன் அவளது முறைப்பைக் கண்டு, “அவ என் கிட்ட கேட்டா நான் பதில் சொல்லியிருப்பேன். உன் கிட்ட கேட்டதால நீ பதில் சொன்ன. நீங்க ரெண்டு பேரும் பேசும் போது நான் எதுக்கு இடையில் வரனும்னு இருந்துட்டேன்” என்றவாறு கடலை நோக்கினான்.
“என்னவோ சமாளிச்சு வைங்க” என்று அவள் சலிக்க, “ஷ்ஷ்! வாயை மூடிட்டு அங்கே பார்” அவளது வாயைப் பொத்தி விட்டு வானத்தைச் சுட்டிக் காட்டினான்.
அவன் காட்டிய திசையில் அவளது கவனம் திரும்பியது.
அந்தி நேரமதில் சூரியன் மறைந்திடும் சோகத்தில் வானம் அழுதழுது சிவந்து போயிருக்க, அதனை மெது மெதுவாய் கடல் அசுரன் விழுங்கிக் கொண்டிருந்தான்.
அந்தக் காட்சியை பார்க்கப் பார்க்க சலிக்கவில்லை. இயற்கையின் எழில்களில் மனம் என்றைக்குத் தான் லயிக்காமல் போகும்?
அவளும் மனக்குழப்பங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு சூரிய அஸ்தமனத்தை அழகாய் விழித்திரைக்குள் படம் பிடித்துக் கொண்டாள்.
“ஹோய் சூப்பர்” என்ற சத்தத்தில் இருவரும் சட்டென நிமிர, நகுல் தான் எடுத்திருந்த புகைப்படத்தைக் காட்டினான்.
ராகவ் அவளது வாயில் கை வைத்து அவளைப் புன்னகையோடு பார்ப்பது போலவும், தேனு விழிகளை விரித்து அவனை நோக்குவது போலவும் அழகாய் படமாக்கப்பட்டிருந்தது.
“இதுக்கு என்ன பெயர்னு தெரியுமா நகுல்?” என்று அலெக்ஸ் கேட்க, “வேற என்ன?காதல் தான்” என பதிலளித்தாள் லிரி.
“எஸ்! கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்” ராகமிசைத்துப் பாடினான் நகுல்.
ராகவ் புன்னகையோடு தலை கோத, ‘அந்த பொண்ண நினைக்கிறார் போல’ என இவள் நினைத்துக் கொண்டாள்.
அவ்வாறு சிரிப்பும் ஆட்டமுமாக இருந்து விட்டு அனைவரும் வீட்டிற்குச் சென்றனர்.
பைக்கில் இருந்து இறங்கிய மனைவியை இடைமறித்து, “இன்னும் மூனு நாள் தான் பேலன்ஸ்” என்றதும் அவளுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை.
பின்னர் ஏதோ யோசித்து விட்டு “என்னது? அந்த தனுஜா மூஞ்சை இன்னும் மூனு நாளைக்கு பார்க்கனுமா?” என அலுத்துக் கொண்டாள்.
“அவங்க நாளைக்கே போயிடுவாங்க. நான் சொன்னது அது இல்லை. உனக்கு நான் தந்த டைம் முடியுறதை சொன்னேன்” என்று விட்டுச் செல்ல, அவளோ திகைத்தாள் தேனு.
“கொஞ்சம் கூட அந்தப் பொண்ணோட ஞாபகம் இல்லையா? இவ்ளோ ஈசியா காதலை மறந்துட முடியுமா? இல்லனா அட்ஜஸ்ட் பண்ணிட்டு என் கூட வாழப் போறாரா?” மேலும் குழம்பிப் போனது அவள் மனம்.
அவள் சமயலறைக்குள் சென்று இரவு உணவுக்காக மரகதத்திற்கு உதவி செய்தாள்.
“நீ போய் ரெஸ்ட் எடு தேனு. பார்க்கவே டயர்டா இருக்கே” என்று மாமியார் கூற, “சரிங்கத்தை” என்றவளுக்கு உண்மையில் களைப்பாக இருந்தது.
அறையினுள் செல்ல, அங்கு கணவனைக் காணாதில் தேடுதல் வேட்டை நடாத்தினாள்.
பல்கோணியில் புகை வருவதைக் கண்டு அதிர்வுடன் நின்றவளோ “ஓஹ்ஹோ சாருக்கு சிகரெட் பிடிக்கிற பழக்கம் கூட இருக்கா?” எனக் கேட்க, அவனோ திடுக்கிட்டுத் திரும்பினான்.
அவனது அதிர்ந்த முகமே அவளை இப்போது எதிர்பார்க்கவில்லை என்பதை அப்பட்டமாக எடுத்துரைக்க, அவன் கைகளில் இருந்த தீப்பற்றிய காகிதம் கீழே விழுந்தது.
“சிகரெட் பிடிக்கலயா? அப்படினா என்ன இது?” அவள் தரையைப் பார்க்க, உறைந்து போனாள்.
பாதி எரிந்த காகிதத்தில் ஒரு பெண்ணின் உருவம் வரையப்பட்டிருப்பதைக் கண்டாள். அவள் முகம் ஏற்கனவே கருகியிருக்க, மீதியும் கண்முன்னே எரிந்து சாம்பலானது.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி
2024-11-18