Episode – 32
எப்போதுமே அபர்ணாவும் ஆதியும் எலியும் பூனையும் மாதிரியான ஜோடிகள் தானே.
அதிலும் அபர்ணா திருமணத்துக்கு பிறகு அவனின் மீது கொலை வெறியில் இருந்தாள் என்று சொல்லலாம்.
அவன் இருக்கும் இடத்தில் கூட அவள் இருக்க விரும்புவது இல்லை.
ஆனாலும் ஆதி விடாது தேடிப் போய் அவளிடம் வம்பு இழுப்பான்.
அபர்ணா ஒன்றும் தமயந்தி மாதிரி அமைதியாக போகின்றவள் இல்லையே.
ஆகவே அவளும் அதிரடியாக அவனிடம் வம்பு இழுத்து விட்டு எங்கேயாவது போய் ஓடி ஒளிந்து கொள்வாள்.
அவளுக்கு ஆதியின் மீதும் அவனது செயற்பாடுகளின் மீதும் என்னதான் பயம் இருந்தாலும் அவள் துடுக்குத்தனம் நிறைந்த பெண் அல்லவா.
இப்படித்தான் ஒவ்வொரு நாளும் அவன் ஏதாவது செய்வதும் பதிலுக்கு அவள் ஏதாவது சுவாரசியமாக செய்வதும் என பொழுது கழிந்தது.
ஆதிக்கு ஒரு நாள் அவள் அமைதியாக இருந்தால் அந்த நாள் விடியாதது போலத்தான் இருக்கும்.
அவனின் மனதில் அவள் என்றோ சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டாள் அல்லவா.
அவனைப் பொறுத்த வரைக்கும் அவள் தனக்கென கிடைத்த சொர்க்கம் என அவன் எண்ணினான்.
அவளும், தன்னை அப்படியே எண்ண வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் மலையளவு இருந்தாலும் ஒரு நாளும் அதனை வெளியில் சொன்னதே இல்லை.
எப்போது அவள் தன்னை விரும்புகிறாளோ அப்போது விரும்பிக் கொள்ளட்டும் என அவளுக்கான இடை வெளியை கொடுத்தவன் அவளிடம் சீண்டி விளையாடுவதை மாத்திரம் நிறுத்தவில்லை.
வீட்டில் மாத்திரம் தான் அவன் அவனாகவே இருப்பது.
தன்னவளிடம் மட்டும் தான் செல்லக் குறும்புகளும் செல்லச் சண்டைகளும் போடுவது.
வீட்டுக்கு வெளியில் அவன் எப்போதுமே கர்ஜிக்கும் சிங்கம் தான்.
ஒரு தப்பைக் கண்டால் வேங்கையாய் சீறுபவன் தான்.
பிழை என்று தெரிந்தால் பின்னி எடுத்து விடுவான் அவன்.
ஆனால் அபர்ணா விடயத்தில் மட்டும் நெருப்பாய் இருப்பவன் அப்படியே பனியாய் மாறி விடுவான்.
அபர்ணாவோ, ஆதியிடம் அடிக்கடி,
“கல்யாணம், பாடம் விளங்கல, உங்களால எல்லாரும் என்னைக் கேலி பண்றாங்க….” அப்படி இப்படி என ஆயிரம் காரணங்கள் தேடிப் பிடித்து சண்டை பிடித்தாலும்,
அவளுக்காக அவன் பிரிட்ஜ்ஜில் வாங்கி வைத்திருப்பவைகளை கண்டதும் கோபம் எல்லாம் மறந்து ஓடிப்போய் அவற்றை எடுத்துக் கொண்டு வந்து அவனுக்கும் ஊட்டி, தானும் சாப்பிட ஆரம்பித்து விடுவாள்.
அவ்வளவு தான் அவளின் கோபம்.
அதனாலேயே ஆதி எப்போதும் அவளுக்கு என்ன பிடிக்கும் என தெரிந்து கொண்டு, அத்தனையும் வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் குவித்து வைத்து விடுவான்.
அதே போல சண்டை பிடித்து விட்டு அவள் உம்மென்று இருந்தால் வேண்டுமென்றே ஃப்ரிட்ஜில் உள்ளவற்றை காட்டியும், ஐஸ்கிரீமைக் காட்டியும் அவளை ஈசியாக சமாதானமும் செய்து விடுவான்.
அன்றும் அப்படித் தான்,
மாதவிடாய் காரணமாக ஏற்கனவே வயிற்று வலியில் இருந்தவளுக்கு, பாடசாலையில் பாடங்கள் நெருக்கடியினாலும், மன உளைச்சல்களினாலும் கடும் கோபம் உண்டாகவே,
மொத்தக் கோபத்தையும் கணவனிடம் காட்டுவோம் என எண்ணி வீட்டுக்கு வந்தவளுக்கு அவன் அங்கு இல்லாதது வேறு இன்னுமே கோபத்தைக் கிளப்பியது.
என்ன தான் சண்டை போட்டாலும் தான் வீட்டுக்கு வரும் போது ஆதி வீட்டில் இருக்க வேண்டும் அல்லது அவனே வந்து அவளைப் பாடசாலையில் இருந்து ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டும்.
இவை இரண்டும் தான், எப்போதும் அபியின் விருப்பமாக இருக்கும்.
ஆனால் இரண்டில் எதுவும் நடக்காத காரணத்தினால், கோபத்தில் நகத்தைக் கடித்தவள்,
“எங்க போயிட்டாரு இவரு?, தாலி கட்டினா மட்டும் போதுமா?, கொஞ்சமாச்சும் பொறுப்பு வேணாமா?, நான் ஒருத்தி பொண்டாட்டின்னு வீட்ல இருக்கன். அந்த ஞாபகம் கொஞ்சமாச்சும் இருக்கா அவருக்கு?, இன்னைக்கு வரட்டும் பேசிக்கிறேன்….” என அவனைக் கண்ட மேனிக்கு தாளித்து எடுத்தவள்,
அவன் வரும் வரையும் உணவு உண்ண மாட்டேன் என அடம் பிடித்து வயிற்று வலியுடன் சுருண்டு படுத்துக் கொண்டாள்.
அன்று கோர்ட்டில் வேறு முக்கிய கேஸ்கள் இருக்கவே,
அனைத்தையும் முடித்து விட்டு, தீரன் வீட்டுக்கு வரவே மால ஆறு மணிக்கு மேல் ஆகி இருந்தது.
அவன் வரும் போது கையைப் பிசைந்து கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்தார் பட்டம்மா.
வந்தவன் புருவம் சுருக்கி அவரைப் பார்த்து விட்டு,
“என்னாச்சு அம்மா எதுக்கு இவ்வளவு பதட்டமா இருக்கீங்க?” என கேட்டான்.
அவரும், “நம்ம அபர்ணா வந்து அப்படியே போய்ப் படுத்துட்டாங்க தம்பி. எவ்வளவு கேட்டும் எதுவுமே சாப்பிடல தம்பி. அதோட அவங்க முகமும் சரியில்ல தம்பி.” என கூற,
ஒரு கணம் புருவம் சுருக்கி யோசித்தவன், காலண்டரையும் பார்த்து விட்டு,
“ஓகே அம்மா நான் பார்த்துக் கொள்றன். நீங்க கவலைப் படாதீங்க.” என கூறி விட்டு தமது அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அவன் அறைக்குள் நுழைந்ததும் கண்டது பாடசாலை ஆடையைக் கூட மாற்றாது கட்டிலில் சுருண்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அபர்ணாவைத் தான்.
ஒரு கணம் அப்படியே நின்றவன்,
பின்பு, ஒரு பெருமூச்சுடன் குளித்து விட்டு வந்து,
அவளின் அருகில் அமர்ந்து அவளின் தலையைக் கோதினான்.
அவனது வருடலில் கண் விழித்தவள்,
அவனை உறுத்து விழித்து விட்டு, கையை தட்டி விட்டு,
எழும்பி அமர்ந்து அவனை கோபமாக முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அவளின் கோபம் கூட அவனுக்கு சிரிப்பையே வரவழைத்தது.
மென் சிரிப்புடன், “என்னாச்சு அபி?, எதுக்காக இப்படி சாப்பிடாமல் அடம் பிடிக்கிறாய்?, இன்னைக்கு உனக்கு பீரியட்ஸ் தானே?, வயிறு ஏதும் வலிக்குதா?” என கேட்டதும்,
விழி விரித்து அவனைப் பார்த்தவள்,
“நான் வரும் போது எங்க போனீங்க?, நான் வரும் போது வீட்ல இருக்கணும்னு உங்களுக்கு தெரியாதா?, இன்னைக்கு ஸ்கூல்ல என்ன ஆச்சு தெரியுமா உங்களுக்கு?” என அவள் கதை கதையாக சொல்ல ஆரம்பிக்க,
அவனும், “ம்ம்ம்ம்…. ஓகே…. ஓகே….” என தலையை ஆட்டிக் கொண்டு அவளிடம் கதை கேட்டவன்,
பட்டம்மாவிடம் சொல்லி உணவைக் கொண்டு வரச் செய்து,
அவரை அனுப்பி விட்டு அவளுக்கு தானே அருகில் இருந்து ஊட்ட ஆரம்பித்தான்.
அவளோ, உணவை வாங்காது, “எனக்கு சாப்பாடு வேண்டாம். நான் உங்க மேல கோவமா இருக்கேன்.” என மறுபடியும் கையை கட்டிக் கொண்டு அமர,
சிறு குழந்தையாய் அவளைப் பாவித்து அவளுக்கு உணவை ஊட்டி விட்டவன், அவளது வயிற்று வலிக்கு மருந்தும் போட வைத்தான்.
அதோடு நிறுத்தாது, “பிரிட்ஜில நான் உனக்காக என்ன எல்லாம் வாங்கி வச்சிருக்கேன் பாரு.” எனக் கூறி,
அவளுக்கு பிடித்த ஐஸ்கிரீமை எடுத்து ஊட்டியும் விட்டான்.
ஐஸ்கிரீமை உண்டு விட்டு இடையில்,
“இதெல்லாம் கொடுத்து நீங்க என்ன ஏமாத்தப் பார்க்கிறீங்க என்ன?” என கேட்டுக் கொண்டே,
அவளது வாய்க்கு அருகில் தீரன் நீட்டிய கரண்டியைத் தட்டி விட,
அவனது முகத்தில் அந்தக் கரண்டி பட்டு ஐஸ்கிரீம் முழுவதும் அவனது முகத்தில் தெறித்து இருந்தது.
அப்போது தான், தான் செய்ததை உணர்ந்தவள் பாவமாக தீரனைப் பார்த்து, வைக்க,
அவனோ, கூலாக அங்கிருக்கும் டிசுவினை எடுத்து தனது முகத்தை துடைத்துக் கொண்டவன் கோபப்படாமல் அவளுக்கு அடுத்த வாய் ஊட்ட ஆரம்பித்தான்.
அவனின் செய்கையில், அவனையே இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்த அபி,
“உங்களுக்கு என் மேல கோபமே வரலயா?” என கேட்டாள்.
அப்போதும் புன்னகை மாறாத முகத்துடன்,
“என்னால என் மேலயே கோபப்பட முடியாதுடி.” என கூறி தோளைக் குலுக்கினான்.
அவன் கூறிய அந்த ஒற்றை வரியில் நீயும் நானும் வேறு இல்லை எனும் பெரிய விடயத்தை அவன் தெளிவாக கூறி விட்டான்.
அவன் கூறியதில் கண்கள் கலங்கி அவனைப் பார்த்தவள்,
“உங்களுக்கு என்ன அவ்வளவு பிடிக்குமா?” என கேட்க,
அவளது கண்களை ஒரு முறை ஆழ்ந்து பார்த்து விட்டு,
“பிரியம் என்கிறது சொல்லிப் புரிய வைக்கிறது இல்ல. சொல்லாம செயல் மூலம் புரிய வைக்கிறது. இன்னும் ஒரு கிழமையில உன்னோட பதினெட்டாவது பர்த்டே வருது அப்போ பாரு பேபி.” என கூறியவன்,
அவளின் கன்னத்தில் தட்டி விட்டு சென்றான்.
அடுத்த ஒரு கிழமையும் கண் இமைக்கும் நொடிக்குள் ஓடிப் போக, அபர்ணாவின் பிறந்த நாளுக்குரிய நாளும் விடிந்தது.
காலையில், அவள் கண் விழிக்கும் போதே, அறைக்குள் மலர்த் தோட்டமா…. இல்லை மலர்த் தோட்டத்திற்குள் அறையா? என வியந்து போகும் அளவுக்கு மலர்களை குவித்து வைத்து இருந்தான் தீரன்.
அபர்ணாவுக்கு காலையிலேயே அவனின் அன்பு மூச்சு அடைக்க வைத்தது.
அந்த நொடி மட்டும் அல்ல…. அந்த நாளின் ஒவ்வொரு நொடியும் அவளை ராணியாக உணர வைத்தான் ஆதி.
அவளுக்காக அவளின் பெயர் பதித்த சேலை, அவளுக்காக பிரத்தியேக பூஜை, அவளின் கையால் வேலை செய்யும் அனைவருக்கும் உணவு, மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்க வைத்தது, இருவரும் மட்டுமே சமைத்து உணவு ஊட்டி கொண்டது, மதியம் வெளியில் அழைத்து சென்றது, ரோட்டுக் கடைகளில் அவளுக்கு பிடித்த உணவு, சிறு சிறு பொருட்கள் வாங்கிக் கொடுத்தது.
அனைத்திற்கும் மேலாக ஹை லைட்டாக தீரனின் ஏற்பாட்டின் பேரில்,
இருவரும் மட்டும் தனியாக இரவில் கடற் கரையில் கை கோர்த்து நடை பழகி, ஹாண்ட்டில் லைட் டின்னெர் உண்டு, கேக் கட் பண்ணி ஊட்டி விட்டு…. என அவளுக்காக அவன் அந்த ஒரு நாளில் செய்தவைகள் எண்ணில் அடங்காதது.
அவளுக்காகவே அந்த நாள் வந்தது போல அவளைக் கொண்டாடியவன், இறுதியில் பட ஸ்டைலில் அவளுக்கு பதினெட்டு கிப்ட்களும் கொடுத்து முடித்தான்.
அபர்ணாவுக்கு, அவனின் அன்பில் பேச்சு வர மறுத்தது.
அதன் விளைவு, தன் ஈர இதழ் மூலம் அவனின் கன்னத்தில் மாறி மாறி இதழ் பதித்து தன் அன்பை அவனுக்கு வெளிக் காட்டினாள் பெண்ணவள்.
அவளின் அந்த செய்கை ஆடவனின் மனதில் அழியாத காதல் கோலமாய் பதிந்து போனது.
அந்த நாள், இனிய நினைவுகள் பலவற்றை இருவருக்கும் அள்ளிக் கொடுக்க,
வீடு திரும்பி, கை கோர்த்து, கண்ணுடன் கண் கலந்து, புன்னகை முகத்துடன் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு உறங்கிப் போயினர் இருவரும்.
மறு நாள் காலையில், கண் விழித்த அபர்ணாவை, வந்தடைந்தது என்னவோ அவளின் தந்தையின் பேச்சுக் குரல் தான்.
“அப்பா வந்து இருக்கார் போல….”என அவசரமாக கிளம்பி கீழே இறங்கி வந்தவள்,
அவரை அழைக்க, அவரோ, “இதில ஒரு சைன் போடும்மா.” என அவசரமாக அவளிடம் ஒரு பத்திரத்தை நீட்டினார்.
அந்தப் பத்திரத்தில் இருப்பது என்ன?
ஆதி, அபர்ணா காதல் சுமூக நிலை நீடிக்குமா?
அடுத்த எபி நாளை வரும் மக்காஸ் 😍😍😍
கதையை மறக்காம இருப்பீங்கன்னு நினைக்கிறன்…. கண்டிப்பா தொடர்ந்து படிங்க 😍😍😍😍
கதை சீக்கிரம் முடிஞ்சிடும்…. மக்காஸ். ஜாலியா படிங்க 💖💖💖