Episode – 33
காலையில் அவசரமாக தந்தை பத்திரத்தை நீட்டவும் குழப்பமாக அவரைப் பார்த்தவள்,
“என்னாச்சு அப்பா நேற்று என்னோட பர்த்டேக்கு கூட நீங்க விஷ் பண்ணல. ஏதும் பிரச்சனையா?, இன்னைக்கு உங்கள பார்க்க வரலாம்னு இருந்தன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க.” என கூறவும்,
“அதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம். முதல்ல இதுல சைன் போடும்மா. அப்போ தான் என்னால எதுவும் யோசிக்க முடியும். நீ போடப் போற ஒரு சைனால தான் நம்ம வாழ்க்கையே மாறப் போகுது. நம்ம கடன் எல்லாம் தீரப் போகுது. இன்னையோட நம்ம கஷ்டம் எல்லாம் ஓடிப் போகப் போகுது.” என கூறியவர்,
பேனையை அவளிடம் நீட்ட,
அவள் அப்போதும் எதுவும் புரியாதது போல அவரைப் பார்த்து வைத்தவள்,
“இல்லப்பா எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. நீங்க கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.” என கேட்டாள்.
அவரோ, “அட என்னம்மா நீ இப்ப போய் விளக்கம் எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறாய்?, அதற்கான நேரம் இது இல்ல. முதல்ல சைனைப் போடும்மா. அதுக்கு அப்புறமா அப்பா உனக்கு எல்லாம் டீடைல்ஸ்சா சொல்றேன்.” என கூறவும்,
“சரிப்பா ரொம்ப டென்ஷன் ஆகாம உட்காருங்க. நான் இப்பவே பண்ணித் தரேன்.” எனக் கூறியவள்,
பேனையை வாங்கி அவர் காட்டிய இடத்தில் சைனை போடப் போக,
சரியாக அந்த நேரம் வந்து அவளிடம் இருந்த பேனையைப் பறித்து எடுத்தான் ஆதி.
அவளோ, அவனது செய்கையில் புரியாது அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு,
“என்ன பண்றீங்க நீங்க?, பேனையைக் கொடுங்க. அப்பா இந்தப் பத்திரத்தில சைன் போடணும்னு சொல்றார்.” என கூறவும்,
கோடீஸ்வரனும் தன் பங்குக்கு, “ஆமாம் மாப்பிள்ளை இந்த பத்திரத்துல சைன் போட்டா உங்க கிட்ட நான் வாங்கின பணம் முழுவதையும் இன்னைக்கே திருப்பிக் கொடுத்துடுவன். எந்த பிரச்சனையும் இருக்காது.” என சற்று பதட்டமாகவும் ஒரு விதமான புன்னகையுடனும் கூற,
அவரையே கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதி.
அவனது பார்வை அவரைத் துளைத்து எடுத்தது.
அவரோ அவனது பார்வையைப் புரிந்து கொள்ளாது,
“என்னாச்சு மாப்பிள்ளை?, நான் எதுவும் தப்பா சொல்லிட்டனா?” என மறுபடியும் கேட்கவும்,
அங்கிருந்த சோபாவில் காலுக்கு மேலே காலைப் போட்டுக் கொண்டு அமர்ந்தவன்,
“அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா. அபியோட பதினெட்டாவது வயசு நேத்து தான் ஆரம்பமே ஆச்சு. அதுக்குள்ள அவசரமா வந்து இருக்கீங்களே…. அப்படின்னு தான் யோசிச்சன். அப்படி என்ன மாமா அவசரம்?, நான் உங்க மாப்பிள்ளை தானே. இன்னும் கொஞ்ச நாள் போனதும் அவகிட்ட சைனை வாங்குங்க. இல்ல நானே வாங்கித் தரேன்.” என சிம்பிளாக கூறியவாறு பேனையை கையில் வைத்து சுழற்றினான்.
அவரோ, “இல்ல மாப்பிள்ளை அது எனக்கு சங்கடமா இருக்கும். அவளோட பதினெட்டாவது வயசுக்கு பிறகு எடுக்கலாம்னு, நான் போட்டு வச்ச பணம் தானே அது. இப்போ அத எடுக்கிறதுல என்ன பிரச்சனை உங்களுக்கு?, அம்மாடி, அப்பாக்கு பணம் தர்றதில உனக்கு ஏதும் பிரச்சனை இருக்காம்மா?” என மகளைப் பார்த்து கடைசியாக கேட்டு முடிக்க,
அவளோ, வேகமாக இல்லை என்பது போல தலையாட்டியவள்,
“எனக்கு எதுக்குப்பா பணம்?, அது உங்களோட பணம். அத எடுக்கிறதுக்கு, உங்களுக்கு முழு உரிமை இருக்கு. நீங்க சொல்லுங்கப்பா நான் சைன் பண்ணித் தரேன்.” என மீண்டும் அழுத்தமாக கூற,
அவளை ஒரு கணம் கூர்ந்து பார்த்தவன்,
கோடீஸ்வரனைப் பார்த்து, “இப்போ அவளோட புருஷன் என்கிற உரிமை எனக்கு இருக்கு தானே. அந்த உரிமையில நான் சொல்றேன். என்னோட பொண்டாட்டி உங்களுக்கு சைன் பண்ணித் தர மாட்டா மாமா. அதுக்காக அவ தரவே மாட்டான்னு நான் சொல்லல. ஒரு மாசம் போகட்டும். நானே அந்தப் பத்திரத்தில சைன் வாங்கித் தரேன். உங்களுக்கு புரியும்னு நினைக்கிறன் அங்கிள்….” என அவன் சற்று இழுத்துக் கூற,
அந்தக் குரலில் இருந்தே, அதற்கு மேல் அந்தப் பேச்சை வளர்க்கக் கூடாது என்கிற ஒருவித அழுத்தம் ஒளிந்து இருப்பதைக் கண்டு கொண்டவர்,
ஒரு பெருமூச்சுடன், “சரி மாப்பிள்ளை. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நான் கிளம்புறன். ஒரு மாசம் கழிச்சு வரேன்.” எனக் கூறியவர் அந்தப் பத்திரத்தை எடுத்துக் கொண்டு, சோர்வான நடையுடன் வெளியேறிச் சென்றார்.
அவர் போனதும் கோபமாக அபி ஆதியைப் பார்த்து ஏதோ கேட்க ஆரம்பித்து அவனை நோக்கிக் திரும்ப ,
அவனோ, ஒரு தோள் குலுக்கலுடன் இவ்விரு படிகளாக தாவி ஏறி அறைக்குள் செல்ல ஆரம்பித்து இருந்தான்.
“இவர….” என பல்லை கடித்துக் கொண்டு அவனின் பின்னாக வேகமாக சென்றவள்,
அவன் அறைக்குள் நுழையவும் பின்னால் தானும் நுழைந்து கதவை பூட்டிவிட்டு,
“எதுக்காக இப்படி பண்ணீங்க உங்களுக்கு கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா?” என கத்த ஆரம்பித்தாள்.
ஆதியோ, அவளை அமர்த்தலாக திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.
இம்முறை அவனின் பார்வையை அலட்சியமாகப் பார்த்தவள்,
“இப்படி மிரட்டி மிரட்டியே உங்க காரியத்தை சாதிக்கலாம்னு பார்க்காதீங்க மிஸ்டர் ஆதி.” எனக் கூறி முடிக்கவும்,
அடுத்த நொடி பேசும் அவளின் இதழ்களை தனது இதழ்களால் அணைத்து அவளின் பேச்சினை நிறுத்தி இருந்தான் அவன்.
அவளை சிறிது நேரம் கழித்து விடவும் உதட்டினை துடைத்துக் கொண்டு அவனை மீண்டும் கோபமாக பார்த்தவள்,
“இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன். நீங்க எப்படி இப்படிப் பண்ணலாம்?” என கேட்கவும்,
அவளைப் பார்த்து கண்ணடித்தவன்,
“இப்படித்தான் பேபி.” எனக் கூறி மீண்டும் அவளை இழுத்து முகம் முழுவதும் முத்தமிட்டு,
கடைசியாக அவளது உதடுகளில் இளைப்பாற, அவள் தான் பேச்சு மறந்து ஸ்தம்பித்துப் போனாள்.
அவளை விடுவித்தவன் அவளின் கன்னத்தில் தட்டி,
“அப்புறமா சேர்த்து வச்சு கோபப்படலாம் பொண்டாட்டி. இப்ப போய் ஸ்கூலுக்கு கிளம்புற வழியைப் பாரு.” என கூறவும்,
“இருங்க உங்கள அப்புறம் வைச்சுக்கிறன். நீங்க பண்றதுக்கு எல்லாம் நான் போய் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன்.” என ஒரு வேகத்தில் அவள் கூறவும்,
அவளைப் பார்த்து மென் சிரிப்பு ஒன்றை சிந்தியவன்,
“இப்போ வக்கீல் போய் போலீஸ் வந்தாச்சா சூப்பர் நல்ல இம்ப்ரூவ்மென்ட் தான் பேபி. போய் என்னோட புருஷன் என்னை கிஸ் பண்ணிட்டாருன்னு கம்ப்ளைன்ட் குடு. நான் அந்த கேஸ கோர்ட்ல பார்த்துக்கிறன்.” எனக் கூறி விட்டுச் செல்ல,
அவனின் கேலிப் பேச்சில் காலைத் தரையில் உதைத்து விட்டு,
ஸ்கூலுக்கு ரெடியாக சென்றாள் அபர்ணா.
ஸ்கூல் விட்டு வந்த பிறகும் அவளது மனது ஒரு நிலையில் இல்லாது போகவே,
இரவு நேரம் தமயந்திக்கு போனைப் போட்டு நடந்தவை அனைத்தையும் கூறி முடித்தவள்,
“உன்னால அப்பாக்கு ஏதாவது உதவி பண்ண முடியும்னா பண்ணு அக்கா. அப்பா பாவம்.” என கூறிவிட்டு வைத்து விட்டாள்.
தமயந்தி போன் எடுத்ததிலிருந்து பேசியவை அனைத்தையும் அவளுக்கு அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த தீரன்,
அவள் போனை வைத்ததும் யோசனையில் இருந்தவளின் முன்பாக சொடக்கிட்டு அழைத்து,
“எனக்குத் தெரியாம உங்க அப்பா காட்டுற எந்தப் பத்திரத்திலயும் நீ சைன் பண்ணக் கூடாது. ஏன் எனக்குத் தெரியாம அவருக்கு எந்தப் பணமும் நீ கொடுக்கக் கூடாது. அவர சந்திக்கவும் போக கூடாது.” என கர்ஜித்தான்.
அவனது அந்த திடீர் அவதாரத்தில் முதலில் மிரண்டு விழித்தவள்,
பின்பு, “அத எப்படி நீங்க சொல்லலாம்?, என்னோட அப்பாக்கு நான் என்னோட பணத்துல மொத்தமும் கொடுப்பன். ஏன் நூறு வெற்றுப் பத்திரத்தில சைனும் பண்ணிக் கொடுப்பன். என்னோட அப்பாக்கும், எனக்கும் இடையில நீங்க எதுக்கு வர்றீங்க?, அவர் என்னோட அப்பா…. இந்த விஷயத்தில நீங்க எதுவும் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது.” என சற்று கோபமாகக் கூறினாள் தமயந்தி.
அவளின் பேச்சில், கை முஷ்டிகள் இறுக,
இழுத்து சுவரில் சாய்த்தவன் தனது கை வளைவிற்குள் அவளை வைத்துக் கொண்டு,
“உனக்கு இப்ப நான் பேசுறது அபத்தமா கூட தெரியலாம். என்ன வில்லாதி வில்லன்னு கூட நீ நினைக்கலாம். ஐ டோன்ட் கேர். ஆனா நான் சொல்றத நீ செய்து தான் ஆகணும். உங்க அப்பாவ நீ சந்திக்கப் போகக்கூடாது அவ்வளவு தான். அவருக்கு உன் மூலமா எந்த சொத்தும் போகவும் கூடாது புரிஞ்சுதா?, நான் ஒரு விஷயம் சொல்றேன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும் புரிஞ்சுக்கோடி.” என அவளை மிரட்டியவனின் பார்வை அவளது கலங்கிய விழிகளைக் கண்டு கனிந்து போக,
மென்மையாக அவளை அணைத்து விடுவித்தவன்,
“எனக்காக இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோடி, உனக்கு எல்லாம் தெரிய வரும்.” எனக் கூறி,
மீண்டும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
அது மட்டும் இல்லாது, அன்று அவளை அணைத்துக் கொண்டு தான் உறங்கினான்.
அன்று மட்டும் அல்லாது, அடுத்து வந்த ஒரு கிழமையும், அவளை தனது கண்காணிப்பிற்குள்ளயே வைத்து இருந்தான் அவன்.
அவளை அங்கு, இங்கு என எங்கும் நகர விடவில்லை அவன்.
அப்படி இருந்தும், அவனுக்கு தெரியாமல், தந்தைக்கு கால் பண்ணியதோடு மட்டும் அல்லாது,
அவனையும் மீறி, தந்தையை சந்திக்க சென்றாள் மதி.
அந்த ஒற்றை சந்திப்பு தான், அவளின் வாழ்க்கையின் போக்கை மொத்தமும் புரட்டிப் போடும் பெரிய நிகழ்வு ஒன்று நடக்க காரணமாக இருந்தது.
கோடீஸ்வரன் நல்லவரா இல்லை கெட்டவரா?
அவரின் மேல் இத்தனை கோபம், வன்மம் கொள்ளக் காரணம் என்ன?
அடுத்த எபி நாளை வரும் மக்காஸ் 😍😍😍
முடிந்தால் நைட் எபி போடுறேன்.
இங்க தான் கதையின் ட்விஸ்ட்டே இருக்கு.. எனி கெஸ் 😍😍😍😍😍
கதை சீக்கிரம் முடிஞ்சிடும்…. மக்காஸ். ஜாலியா படிங்க 💖💖💖