Episode – 34
தீரன் அத்துணை தூரம் சொல்லியும் கேட்காது,
தான் நினைத்ததை செய்து முடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன்,
அவனுக்கு சந்தேகம் வராத அளவுக்கு தனது தந்தையுடன் பேசியவள், அவரை குறித்த இடத்திற்கு வர சொல்லி விட்டு தானும் கிளம்பி சென்று விட்டாள்.
தீரன் ஒரு முக்கிய மீட்டிங்கில் இருக்கும் போது தான் இது நிகழ்ந்தது.
மனைவி தனது ஆபீஸ் ரூமில் தான் இருப்பாள் என எண்ணி அவன் கான்பிரன்ஸ் ரூமில் மீட்டிங்கை நடாத்திக் கொண்டு இருந்தான்.
மதியோ, அவன் மீட்டிங் கிளம்பியதும்,
மறு பக்கம், சத்தம் இன்றிக் கிளம்பியவள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த, ஒரு பாழடைந்த இடத்தில் வைத்து கோடீஸ்வரனை சந்தித்தாள்.
நகரின் பிரதான இடங்களில் சந்திப்பு நிகழ்ந்தால், அந்த செய்தி நொடிக்குள் தீரனின் காதுகளுக்கு சென்று விடும்.
அதற்குப் பிறகு, அவள் எங்கணம் தந்தை உடன் பேசுவது?, எப்படி அவருக்கு உதவி செய்வது?, என பலதும் எண்ணித்தான் அவள் தந்தையை தனியாக, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் சந்திக்க வர சொன்னாள்.
அவரைக் கண்டதும், “அப்பாஆஆ….” என சந்தோஷமாக அழைத்தவள்,
அவரை பாசமாக அணைத்துக் கொண்டு,
“ஏன்பா?, உங்களுக்கு பணம் வேணும்னா என்னைக் கேட்டு இருக்கலாமே. நானும் உங்க பொண்ணு தானே. நான் ஒருத்தி இருக்கிறதையே, நீங்க மறந்துட்டீங்களா?” என கேட்டு கண் கலங்க,
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லம்மா, உன்னை எதுக்காக வீணா சங்கடப் படுத்தணும்னு தான்…. வேற ஒண்ணும் இல்ல. எனக்கு நீயும், அபியும் ஒண்ணு தான்மா. இரண்டு பொண்ணுங்களும், இரண்டு கண்ணு மாதிரித் தான்மா.” என மதியை விடவும் கண் கலங்கிப் பேச,
அவளோ, “சரிப்பா. போனது போகட்டும் விடுங்க. இப்போ உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும் சொல்லுங்க. என்னோட அக்கௌன்ட்ல கொஞ்ச பணம் இருக்கு எடுத்து தரேன்.”
“இல்ல…. இல்லம்மா அது நீ கஷ்டப் பட்டு உழைச்சு சேர்த்த பணம்மா. அத எடுக்க வேணாம்.”
“ம்ம்ம்…. சரி அப்பா, அப்போ நான் எப்படித் தான் உங்களுக்கு பணம் கொடுக்கிறது?, எனக்கு குழப்பமா இருக்கே.” என மதி குழம்பி அவரைப் பார்க்க,
அவரோ, “இல்லம்மா இந்தப் பத்திரத்தில சைன் போட்டுத் தாம்மா. அது மட்டும் போதும்.” என கூறி அவளிடம் ஒரு பத்திரத்தை நீட்டினார்.
அவளோ, “என்ன பத்திரம்பா இது?” என அதனை வாங்கிக் கொண்டே கேட்க,
அவரோ, “அபியைப் போல, உனக்கும் பிறந்ததும், ஒரு குறிப்பிட்ட அமௌன்ட் போட்டு வைச்சேன். இப்போ அத எடுக்கணும்னா உன்னோட சைன் வேணும்மா. அப்பாவுக்காக போட்டுக் கொடும்மா.” என உருகியபடி கூறினார்.
மதியோ, “ஓகே அப்பா, புரிஞ்சிடிச்சு. கொடுங்க போட்டுக் கொடுக்கிறன்.” என கூறி,
பத்திரத்தில் அவர் காட்டிய இடத்தில் எல்லாம் சைன் பண்ணி கொடுத்தாள்.
அவரும், அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவர்,
அவள் சைன் போட்டு முடித்ததும், பத்திரத்தை வாங்கிக் கொண்டு,
“அப்போ நான் கிளம்புறன்மா, இங்க அதிக நேரம் நிற்க கூடாதும்மா. நீயும் கிளம்பும்மா.” என கூறியவர்,
மதி விடை பெற்று போகவும், அதுவரையும் புன்னகை முகமாய் நின்று இருந்த அவரின் முகம் விகாரமாய் மாற,
மறைந்து நின்ற, தனது ஆட்களை நோக்கி கண் காட்டினார் அவர்.
அவர்களும், ஏற்கனவே பண்ணி வைத்த ஏற்பாட்டின் பேரில், மதியை நோக்கி வண்டியை செலுத்தினர்.
மதியோ, ஏதோ ஒரு யோசனையில் சென்று கொண்டு இருந்தவள்,
பின்னால் வந்த வாகனத்தை கவனிக்க தவறி விட்டாள்.
அவளை வாகனம் இடிக்க நெருங்கிய அந்த நேரம்,
“மதிம்மாஆஆ….” என கத்திக் கொண்டு பாய்ந்து வந்து அவளை பக்க வாட்டாக பிடித்து இழுத்தான் தீரன்.
அவளை இழுத்தவன் சுழன்று திரும்பும் போது அவனின் வலது கையில் பலமாக இடித்து விட்டு சென்றிருந்தது அந்த வாகனம்.
அதே நேரம், “டேய் ஒரு பொண்ண ஒழுங்கா அடிச்சுத் தூக்கத் தெரியல.நீங்க எல்லாம் என்னடா ரௌடிங்க. சே….” என ஒரு குரல் கேட்டது.
“தான் கேட்ட குரல் சரி தானா?, அந்தக் குரல்…. என் அப்பாவோடதா…. அப்போ…. என் அப்பா….” என அந்த நிலையிலும் நடுங்கிப் போய் திரும்பிப் பார்க்க அச்சம் கொண்டு, கடைசி நம்பிக்கையை கண்களில் தேக்கி,
“இல்ல…. இருக்காது…. இருக்கவே கூடாது….” என எண்ணி நெஞ்சில் மத்தளம் கொட்ட, உடல் வியர்த்து ஒழுக, கால்கள் தடுமாற, எச்சில் விழுங்கி.
ஒருவாறு திரும்பிப் பார்க்க, அவளது மொத்த நம்பிக்கையையும் குழி தோண்டிப் புதைத்து விட்டு, அங்கு நின்று கொண்டு இருந்தார் அவளின் தந்தை கோடீஸ்வரன்.
தமயந்தி கண் கலங்கி உறைந்து போய் அவரைப் பார்க்கவும்,
அவளை நோக்கி, ஒற்றை விரலை நீட்டியவர்,
“இன்னைக்கு தப்பிச்சிட்டாய். ஆனா, கூடிய சீக்கிரம் உன்ன போட்டுத் தள்ளுறன் பாரு.” என கூறி விட்டு,
அங்கிருந்து விலகிச் செல்ல ஆரம்பிக்க,
அதற்குள், அங்கு வந்து சேர்ந்தனர் தீரனின் ஆட்கள்.
அவனின் ஆட்கள் கோடீஸ்வரன் உட்பட அவரின் ஆட்கள் அனைவரையும் சுற்றி வளைக்க,
கோடீஸ்வரனோ, “ஓஹ்…. ஷீட்…. இவனுங்க வேற எங்க இருந்து வர்றாங்களோ தெரியல.” என பல்லைக் கடித்தவர்,
ஒருவாறு போராடி, தன் ஆட்களுடன், அங்கிருந்து தப்பித்து சென்றார்.
அவர் போகும் போது, அவரிடம் இருந்த பத்திரம் தவறி விழுந்து விட்டது. ஆனால் அவர் அதனைக் கவனிக்காது சென்று விட்டார்.
அவர் போகும் வரைக்கும் திக் பிரமை பிடித்தது போல நின்று கொண்டு இருந்தவள்,
தீரனின் மெல்லிய முனகல் ஒலியில் தான் நனவுலகம் வந்து சேர்ந்தாள்.
சத்தம் வந்த இடத்தை நோக்கி பார்வையை திருப்பியவளுக்கு அந்த வலியிலும் அவன் பல்லைக் கடித்துக் கொண்டு தானாய் எழும்பி நின்றது மனதை உறுத்தியது.
“என்னால தானே, அவரு இப்படி அடிபட்டு இருக்கிறார்?” என்ற எண்ணத்தில்,
கண்களில் இருந்து பொல பொலவென கண்ணீர் வழிய,
அடுத்த கணம் எதையும் யோசிக்காது,
“தீராஆஆ….” என கத்திக் கொண்டு ஓடிச் சென்றவள்,
அவனை அணைக்கப் போக,
ஒற்றைக் கையால் “தன்னைத் தொட வேண்டாம்.” என்பது போல சைகை செய்து தள்ளி நிறுத்தியவன்,
தனது வாகனம் நோக்கி, தானே மெதுவாக நடந்து செல்ல ஆரம்பித்தான்.
அவனது விலகலில் மனம் வலித்தாலும்,
மறுபடியும், “தீரா….” என அழைத்த படி அவனின் பின்னால் செல்ல ஆரம்பித்தாள் மதி.
இப்போது, தான் இருக்கும் மனநிலைக்கு எதைப் பற்றி யோசித்தாலும் மொத்தமாய் உடைந்து விடுவோம் எனப் புரிந்து கொண்டவள்,
அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு,
“முதலில் கணவனைப் பார்க்க வேண்டும்.” என்ற எண்ணத்தில் அவனின் பின்னாக செல்லும் அதே நேரம் புயல் வேகத்தில் அங்கு ஒரு கார் வந்து நின்றது.
அடுத்த கணம் அதிலிருந்து “பாய்.” என கூவியபடி இறங்கி ஓடி வந்தான் ஆதிமூலன்.
வந்தவன் தீரனின் நிலையைக் கண்டு,
“என்னாச்சு அண்ணா?, நீங்க ஓகே தானே. இதுக்கு தான், நான் அப்பவே சொன்னன். கொஞ்சம் கவனமா இருங்கன்னு. இப்போ பார்த்தீங்களா அந்த ஆள் என்ன பண்ணி வைச்சு இருக்கார்னு?” என்று கூறி விட்டு,
மதியைப் பார்த்து, “ஏன் அண்ணி இப்படிப் பண்ணீங்க, அண்ணா உங்களுக்கு திரும்பத் திரும்ப சொன்னார் தானே, அந்த ஆள பார்க்கப் போக வேணாம்னு. அப்புறம் ஏன் அண்ணி?” என்று கேட்கவும்,
“என்னது அண்ணனா?” என வாயைப் பிளந்தவள்,
அதற்கு மேலும் எதையும் கேட்கவும் முடியாது, கிரகிக்கவும் முடியாது அப்படியே மூளை வேலை நிறுத்தம் செய்ய மயங்கி விழுந்தாள்.
அந்த நிலையிலும் தன்னவள் மயங்கி விழுவதைக் கவனித்துக் கொண்டிருந்த தீரன், அவளை மறுகையால் தாங்கிப் பிடித்தான்.
பிடித்தவன், அவளது முகத்தை ஒரு கணம் வெறித்துப் பார்த்தான்.
அதே நேரம் அவனது மனதில், “நான் அவ்வளவு சொல்லியும் நீ என்ன கடைசி வரைக்கும் நம்பவே இல்லயே பொண்டாட்டி.” என்ற எண்ணம் தான் உருவானது.
அதே நேரம் அவர்கள் பேசியவை அனைத்தையும் கேட்டபடி,
பித்துப் பிடித்தது போல நின்று கொண்டிருந்த இன்னொரு ஜீவன் வேறு யாரும் அல்ல அபர்ணா தான்.
“என்னது இவரும் தீரன் அத்தானும் அண்ணன் தம்பியா?” என முணு முணுத்துக் கொண்டவளுக்கு மயக்கம் வருவது போல் இருந்தாலும்,
“தான் இப்பொழுது மயங்கினால், நிலைமை இன்னும் சிக்கலாகிப் போகும்.” என எண்ணிக் கொண்டவள்,
ஓடிச் சென்று, “அக்கா எழுந்திரி அக்கா.” என மயங்கி விழுந்து இருந்த தமக்கையின் கன்னத்தை தட்ட ஆரம்பித்தாள்.
ஒருவாறு, அவளையும் சமாதானப்படுத்தி நால்வரும் ஹாஸ்பிட்டலை சென்று அடைந்தனர்.
அங்கே மதிக்கு சாதாரண மயக்கம் தான் என கூறப்பட்டு அவள் சற்று நேரம் ஓய்வெடுப்பதற்காக ஒரு அறை வழங்கப் பட்டது.
அதே நேரம் தீரனின் கையை பரிசோதித்த டாக்டர், அவனின் எலும்பில் சிறு முறிவு ஏற்பட்டிருப்பதாக கூறி,
அதனை சரி செய்வதற்கான சிகிச்சைகளையும் செய்ய ஆரம்பித்தார்.
கண் விழித்த மதியோ, தனது கணவனைத் தேடி ஓடி வர அவளைத் தடுத்து நிறுத்திய ஆதியோ,
“இப்போ அண்ணாக்கு சிகிச்சை நடந்து கொண்டு இருக்கு அண்ணி. பெருசா எந்த பாதிப்பும் இல்லை கொஞ்ச நேரம் பொறுத்துக்கோங்க. டாக்டர் வரட்டும்.” என்று கூறவும் சரியென தலையை மட்டும் ஆட்டியவள் அங்கிருந்த கதிரையில் அமர்ந்து கண்களை மூடி சுவரில் சாய்ந்தாள்.
அவளால், “என்ன?,எதற்கு?, எப்படி நடந்தது?, ஏன் இப்படி?” என எதையுமே யோசிக்க முடியாத நிலைமை தான்.
அதே போலத்தான் அபர்ணாவுக்கும்.
அவளும், தமயந்திக்கு பக்கத்தில் அமர்ந்து தமக்கையின் தோளில் தலையை சாய்த்து கண்மூடி அமர்ந்து கொண்டாள்.
சரியாக மூன்று மணி நேரம் கழித்து வழியே வந்த வைத்தியர் தீரனின் கைமுறிவு சரி செய்யப்பட்டு பி. ஓ.பி போடப் பட்டு இருப்பதாகவும், இன்னும் ஒரு மாத காலம் அவன் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறிவிட்டு,
வேறு எதற்கும் பயம் கொள்ள வேண்டாம் எனவும் கூறி அங்கிருந்து செல்ல ஆரம்பிக்க,
அப்போது தான் தமயந்திக்கு மூச்சே வந்தது.
“டாக்டர் நான் அவரைப் போய் பார்க்கலாமா” என செல்லும் வைத்தியரின் பாதையை மறித்து கேட்டாள்.
அவரோ, “இன்னும் கொஞ்ச நேரத்துல அவரை நாங்க நார்மல் வார்டுக்கு மாத்திடுவோம். அப்ப போய் பாருங்க. இந்த ஹாஸ்பிட்டலே மிஸ்டர். தீரனோடது தான். நீங்க அவர பார்க்குறதுக்கு எந்தவிதமான தடையும் இல்ல. ஆனா எப்பவுமே சரியான முறையில் ரூல்ஸ் ஃபாலோ பண்ணனும் என்கிறது தான் தீரன் சாரோட விருப்பம் அதனால தான்….” என அவர் இழுக்க,
“புரிந்தது.” என்பது போல தலையை ஆட்டியவள்,
“பரவாயில்ல டாக்டர், அவர வார்டுக்கு மாத்தினதுக்கு அப்புறம் நான் போய்ப் பார்க்கிறேன்.” எனக் கூறியவள்,
டாக்டர் போனதும், ஆதியின் பக்கம் திரும்பி,
“இப்பவாவது எங்கள் இரண்டு பேரோட வாழ்க்கையில என்ன நடக்குது என்கிறத நீங்க சொல்லுவீங்களா ஆதி?” என கேட்டதும்,
“இல்லை.” என மறுத்து தலையாட்டியவன்,
“சொல்லனும்னா எப்பவோ, அபர்ணா கிட்ட சொல்லி இருப்பேன் அண்ணி. அண்ணன் தான் சொல்ல வேணாம்னு சொல்லியிருந்தார். அவரோட அனுமதி இல்லாம என்னால வாயைத் திறக்கவே முடியாது. அண்ணி கவலைப்படாதீங்க இனி அண்ணாவே உங்ககிட்ட எல்லாம் சொல்லுவார். ஆனா நீங்க இவ்வளவு அவசரப்பட்டு இருக்க வேண்டாம். ஒரு வேள உங்க உயிர் போயிருந்தா….” என கேட்டு விட்டு பெருமூச்சுடன் அவன் நிறுத்த,
“புரிந்தது.” என்பது போல தலையை ஆட்டியவள்,
“நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் தான். அவரோட பேச்ச மதிக்காம போனது என்னோட பிழை தான். ஆனா என்ன நடந்ததுன்னு முதலிலேயே அவர் சொல்லி இருந்தா இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது இல்லையா?” என கேட்கவும்,
அதற்கு பதில் பேச வாய் திறந்த ஆதி,
முயன்று தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு,
“இதுக்கு பதில அண்ணனே சொல்லுவாங்க. எதுக்காக உங்ககிட்ட இவ்வளவு நாளும் உண்மைகளை மறைச்சாங்க?, ஏன் உங்கள இப்படி எங்கட கட்டுப் பாட்டுக்குள்ள வச்சிருந்தோம்?, இப்படி எல்லாத்துக்குமான பதில்களை அண்ணா கண்டிப்பா அவங்க வாயாலேயே சொல்லுவாங்க. ஆனா அண்ணி, உங்க மேல இப்போ அண்ணா செம கோபத்துல இருப்பாரு. அதையும் சொல்லிக்கிறன். அண்ணாவை வார்டுக்கு மாத்தினதுக்கு அப்புறம் நாங்க அவர வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போய்ட்டு மொத்தமும் பேசிக்கலாம்.” என கூறியவன்,
தமயந்தியின் பதிலுக்காக அவளைப் பார்க்க,
அவளும், “சரி.” என்பது போல தலையாட்டியவள்,
“ஆனாலும் எங்க அப்பா செய்தத என்னால இன்னமும் ஜீரணிக்க முடியல ஆதி. ஒரு அப்பாவால இப்படியும் நடந்து கொள்ள முடியுமான்னு யோசிக்க தோணுது.” எனக் கூறவும்,
தமயந்தியையும், அபர்ணாவையும் ஒரு பார்வை பார்த்த ஆதி,
“யாரு அவர் உங்களோட அப்பாவா?” என ஒரு கேலிச் சிரிப்புடன் கேட்டவன்,
சற்று இடைவெளி விட்டு,
“இன்பாக்ட் அவரு யாரு தெரியுமா? மிஸ்டர் கோடீஸ்வரன், அரி தீரன் அண்ட் ஆதி மூலனோட அப்பா.” என கூறி விட்டு,
அடுத்த நொடி, அங்கிருந்து விறு விறுவென செல்ல,
அவன் கூறியதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது, தமது காதில் விழுந்தது சரியா எனவும் புரியாது,
மொத்தமும் குழம்பிப் போய் அப்படியே நின்று கொண்டிருந்தனர் தமயந்தியும், அபர்ணாவும்.
கோடீஸ்வரனின் உண்மை முகம் எது?
தந்தை, மகன்களுக்கு இடையே உள்ள வன்மம் தான் என்ன?
தமயந்தி, அபர்ணா இரண்டு பேரும் உண்மையில் யார்?
அடுத்த எபி திங்கள் வரும் மக்காஸ் 😍😍😍
முடிந்தால் நாளை ஒரு எபி போடுறேன்.
கதையின் ட்விஸ்ட் எப்படி இருக்கு மக்காஸ் 😍😍😍😍😍
கதை சீக்கிரம் முடிஞ்சிடும்…. மக்காஸ். ஜாலியா படிங்க 💖💖💖
Super sis 💞
Interesting epiiii ❤️❤️❤️❤️❤️