லைக்காவை உடனடியாக மிருக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவன், அங்கு அதற்கான ட்ரீட்மென்ட் ஆரம்பமாக அதனை அங்கேயே ஒரு நாள் தங்களது கவனிப்பிலேயே இருக்கட்டும் என வைத்தியர் கூற அப்படியே ஹோட்டலுக்கு வந்தவன் தனது வேலையாட்களைக் அழைத்து உணவுகளில் இன்றைய நாள் என்னென்ன ஓடர்கள் இருக்கின்றன என்று கேட்டு அதற்கேற்றால் போல் ஆட்களை நியமித்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அவனது தோளினை யாரோ தட்டியது போல் உணர திரும்பிப் பார்க்க அவனது அன்னையின் பாலிய சிநேகிதி கிருஷ்ணவேணி வந்திருந்தார்.
“ஹாய் கிருஷ்ணவேணி ஆன்ட்டி எப்படி இருக்கீங்க..?”
“நல்ல சுகம்பா நீ எப்படி இருக்க..?”
“இருக்கேன் ஆன்ட்டி வாங்க வந்து உட்காருங்க..” என்றவுடன் அவர் அருகில் உள்ள கதிரையில் அமர்ந்தார்.
“அம்மாவின் இறப்புக்கு வந்ததுக்கு இப்பதான் வந்திருக்கீங்க என ஆன்ட்டி… அதுக்கு பிறகு என்னோட ஞாபகமே உங்களுக்கு வரலையா..? அம்மா இருந்தா மட்டும்தான் வீட்டுப் பக்கம் ஒரே வருவீங்க.. அம்மா இல்லாவிட்டால் நாங்களும் தேவையில்லை…” என்று செல்லமாக கோபித்துக் கொண்டான் இளஞ்செழியன்.
“அப்படி இல்லடா கண்ணா உன் அம்மாட கடைசி ஆசையை நான் நிறைவேற்றனும் என்று எனக்கு ரொம்ப ரொம்ப ஆசை அதுதான் நான் உங்க அம்மாட இறப்புக்கு பிறகு அதை நிறைவேற்றனும் என்ற உறுதியோட அதை செஞ்சு முடிச்சிட்டு தான் உன்னை சந்திக்க வேண்டும் என்று இருந்தேன்..”
“அப்படியா அது என்ன ஆன்ட்டி அம்மாவோட கடைசி ஆசை…?”
“அது எங்களோட பிரண்ட்ஷிப்புக்குள்ள உனக்கெல்லாம் சொல்ல மாட்டேன்..”
“ஓகே அப்போ சொல்ல மாட்டீங்க சரி விடுங்க…”
“சரி சரி கோவிக்காத சொல்லுறேன்.. பெருசா ஒன்னும் இல்லப்பா உங்க அம்மாவுக்கு இந்தியாவுல இருக்க எல்லா சிவன் கோயில்களுக்கும் போகணும்னு ரொம்ப விருப்பம் அதனால ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு டூர் போகலாம்னு பிளான் பண்ணி இருந்தோம்… அதுக்குள்ள அம்மாக்கு இப்படி ஆகிடுச்சு. அதுதான் அவங்க இல்லாவிட்டாலும் அவங்க ஆசையை நிறைவேற்றனும் இல்லையா.. நான் தனியா போயிட்டு வந்தேன்.. உங்க அம்மாவுக்கு சிவன் என்றால் ரொம்ப இஷ்டம் என்று உனக்கு தெரியும் தானே.. இந்தியா முழுவதும் இருக்கிற சிவன் கோயில்களுக்கு மட்டும் போய் அங்கே இருக்கிற தீர்த்தமும், விபூதியும் கொண்டு வந்தேன்… இத உங்க அம்மாவோட படத்துக்கு முன்னுக்கு வை..,” என்றவுடன் அவனுக்கு அன்னையின் மீது கிருஷ்ணவேணி வைத்திருக்கும் அன்பை நினைத்து ஒரு கணம் மெய் சிலிர்த்தது.
“ரொம்ப ரொம்ப நன்றி ஆன்ட்டி நான் இத எதிர்பார்க்கவே இல்லை.. நீங்க அம்மாவோட ஆசையை நிறைவேற்றி வச்சிருக்கீங்க… இதுக்கு நான் உங்களுக்கு என்ன பிரதி உபகாரம் செய்யப் போறானோ தெரியவில்லை..”
“என்னடா பெரிய மனுஷன் மாதிரி பேசுற.. நான் உனக்காக செய்யல இதை என்னோட உயிர் தோழிக்காக செய்தேன்.. என்னோட நட்புக்காக செய்தேன்..” என்றவர் பேசிக் கொண்டிருக்கும் போது இளஞ்செழியனின் தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது.
அதனை எடுத்து காதில் வைத்து பேசிய பின் மேசையில் தொலைபேசியை வைத்தான்.
அந்தத் தொலைபேசியின் திரையில் இருந்த புகைப்படத்தை பார்த்ததும் கிருஷ்ணவேணிக்கு எங்கோ இந்த புகைப்படத்தை பார்த்தது போலத் தோன்றியது.
“இந்த போட்டோல..” என்று சிறு தயக்கத்துடன் கேட்க உடனே அந்த போனை எடுத்து கைக்குள் மறைத்துக் கொண்டான்.
“இளஞ்செழியன் அந்த போட்டோல இருக்கிற பொண்ண உனக்குத் தெரியுமா..?”
“இல்ல.. அது எங்க அம்மா நான் கனடாவில் இருக்கும் போது இந்த போட்டோவ அனுப்பி வச்சாங்க..”
“உனக்கு அப்போ எல்லா விஷயமும் தெரியுமா..?” என்று கிருஷ்ணவேணி கூறியதும் சிந்தனையுடன் புருவங்கள் சுருங்க,
“என்ன ஆன்ட்டி எல்லா விஷயமுன்னா..?” என்று அவன் கேட்டதும், கிருஷ்ணவேணி ஒன்று விடாமல் நடந்த அனைத்து விஷயங்களையும இளஞ்செழியனுக்கு கூறினார்.
கிருஷ்ணவேணி நடந்த அனைத்தையும் ஒவ்வொன்றாக கூற இளஞ்செழியனுக்கு கழுத்து நரம்புகள் புடைக்கத் தொடங்கின.
அவனது கண்கள் சிவந்து அவ்விடத்தில் இருக்க இயலாமல் கண்ணிமைக்கும் நேரத்தில் எழுந்து நின்றான்.
அவனது நிலையைப் புரிந்து கொண்ட கிருஷ்ணவேணி,
“இத உன்னிடமிருந்து மறைக்கனும் என்பதற்காக உங்க அம்மா ரொம்ப கஷ்டப்பட்டாள். உனக்கு இப்ப தெரிய வேண்டிய நேரமும், அவசியமும் வந்துட்டு அதுதான் என்னால அதை மறைக்க முடியல… சரி கண்ணா இதுதான் உண்மையில் நடந்தது நான் போயிட்டு வாரேன்… கவனமா இருடா..” என்று சொல்லி அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.
அவர் சென்றுவிட அவர் சென்ற இடத்திலேயே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த இளஞ்செழியன், உடனே வீட்டுக்கு புறப்படும் எண்ணம் தோன்ற காரை எடுத்துக்கொண்டு புயல் வேகத்தில் வீட்டை நெருங்கினான்.
காரில் இருந்து இறங்கி ஓடி உள்ளே சென்றவன், “ஸ்ரீ.. ஶ்ரீ…” என்று பெரும் குரல் எடுத்து அந்த வீடே அதிரும் வண்ணம் கத்தினான்.
அவனது கோபக் குரலைக் கேட்டு பயத்துடன் ஸ்ரீநிஷா மெதுவாக எழுந்து வெளியே வந்தாள்.
அவளது வதனம் பார்த்து அன்புடன் அருகில் சென்று சிறிது தயக்கத்துடன் “உ… உன்…உன்னோட பேரு ஸ்ரீ நிஷா வா..” என்று கேட்டான்.
உடனே ஆம் என்பது போல தலையாட்டினாள். அவனுக்கு உலகமே இருண்டது போல இருந்தது உடனே கண்களை மூடி நடந்த அனைத்து விடயங்களையும் ஒவ்வொன்றாக சிந்தித்தான்.
திடீரென கண்களைத் திறந்து “அப்போ உன்னோட பேரு..” என்று கூற வந்தவன் இடையில் நிறுத்திவிட்டு அருகில் இருந்த சோஃபாவில் தலையில் கை ஊன்றியபடி அப்படியே உட்கார்ந்து விட்டான்.
அவன் என் மனம் ஒரு நிலையில் இல்லை அங்கு இங்கு அலைபாய்ந்து கொண்டே இருந்தது எங்கு நான் இந்த தவறை விட்டேன் எங்கே எதில் இப்படி நடந்தது என்று யோசிக்க தலை சுற்றுவது போல இருந்தது.
அவனது நிலையைப் பார்த்த ஸ்ரீ நிஷா எந்தவித உணர்வையும் வழி காட்டாமல்
“சாப்பிடுறீங்களா..?” என்று கேட்டாள்.
உடனே அவளை நிமிர்ந்து பார்த்து, “இல்ல ஸ்ரீ.. ஸ்ரீநிஷா நான் உன்னோட கொஞ்சம் பேசணும்.. பிறகு சாப்பிடுறேன்..” என்று பரிவாகக் கூறினான்.
“சாப்பிட்டு பிறகு பேசலாமே..!”
“இல்ல முக்கியமான விஷயம்..” என்று தடுமாற்றத்துடன் கூற,
“எவ்வளவு முக்கியமான விஷயம் என்றாலும் பரவாயில்லை நேரம் பத்து ஆகுது இன்னும் நீங்க காலை சாப்பாடு சாப்பிடல… சாப்பிட்டுவிட்டு பேசுவோமே..!”
“சரி நான் ராமையாவ கூப்பிடுறேன் நீ இரு..”
“இல்ல இல்ல இன்னைக்கு நானே பரிமாறுகிறேன்.. நீங்க இருங்க அவர் தோட்டத்துல வேலையா இருக்காரு அவரை டிஸ்டர்ப் பண்ண வேணாம்..” என்று கூறிவிட்டு உணவினை எடுத்து வந்து தட்டில் இட்டு அவனுக்குக் கொடுத்தாள்.
ஏனோ அவனுக்கு உணவு சரியாக வயிற்றில் இறங்கவில்லை. அவனது சிந்தனையோட்டங்கள் அனைத்தும் ஸ்ரீநிஷாவிடம் இந்த விடயத்தை எவ்வாறு கேட்பது என்ற தடுமாற்றத்துடன் எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன.
ஸ்ரீ நிஷாவை அழைத்து சோபாவில் இருக்க வைத்து தானும் அருகில் அமர்ந்தான்.
அவன் அருகில் அவளை இருக்க வைத்து ஐந்து நிமிடங்களுக்கு மேலாகியும் இளஞ்செழியன் அவளது முகம் பார்த்து எதுவும் பேசவில்லை. தலையை குனிந்தபடி எதனையோ சிந்தித்தபடியே அமர்ந்திருந்தான்.
அவனது முகத்தில் ஏதோ ஒன்று குறைவது போல ஸ்ரீ நிஷாவிற்கு தோன்றியது. காலையில் வீட்டிலிருந்து செல்லும்போது இருந்த சந்தோசம் ஏனோ இப்போது அவனது முகத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
எதனையோ சிந்தித்துக் கொண்டு இருந்தவனின் சிந்தனையை ஸ்ரீநிஷாவே முதலில் குலைத்தாள்.
“இப்ப சொல்லுங்க என்ன பிரச்சனை..?” என அவனது முகத்தை வைத்து அவனை ஏதோ பிரச்சனையில் சிக்குண்டு உள்ளான் என்பதை கண்டுபிடித்தாள் ஸ்ரீ நிஷா.
இனியும் தாமதித்து பிரயோசனமில்லை என்பதை உணர்ந்த இளஞ்செழியன் தன்னுடைய சந்தேகங்களை உடனே கேட்டு அறிந்து கொள்ள எண்ணம் கொண்டு தனது கேள்விகளை கேட்க தொடங்கினான்.
“உன்னோட பேரு ஸ்ரீநிதி இல்லையா..?” என்று பெருக்கமும் எதிர்பார்ப்பும் நிறைந்த படி கேட்க,
“இல்ல..” என உடனே அவளிடம் இருந்து பதில் வந்தது.
நெற்றியில் தவழ்ந்து இருக்கும் புருவங்களை நீவி விட்டவன்,
“அப்போ.. ஸ்ரீநிதி..?” என கேட்க,
“என்னோட பிரண்டு பேரு தான் ஸ்ரீநிதி.. ஏன் கேக்குறீங்க அவளை உங்களுக்குத் தெரியுமா..?” என்று அவள் புரியாதபடி அவனிடம் மறு கேள்வி தொடுத்தாள்.
உடனே தொலைபேசியில் இருக்கும் புகைப்படத்தை எடுத்து காட்டியவன்
“இதில உனக்கு பக்கத்துல நிக்கிற பொண்ணா ஸ்ரீநிதி..” என்று கேட்டான்
“ ஆமா .. அதுதான்.. இந்த போட்டோ எப்படி உங்கட போன்ல வந்தது.. இது நாங்க. “
“அத நான் பிறகு சொல்றேன் முதல் நான் கேட்கிற கேள்விக்கு நீ பதில் சொல்லு.. அவ.. அவளை எப்படி உனக்குத் தெரியும்..?”
“ஊர்ல நடந்த திருவிழாவுக்கு நீங்க ரெண்டு பேரும் போனீங்களா..?”
“ஆமா… ஸ்ரீநிதி அவங்க அம்மா அப்பாவோட போறன்னு சொல்லி என்னோட ஹோமுக்கு வந்து தேவிம்மா கிட்ட கேட்டு பெர்மிஷன் வாங்கி கூட்டிப் போனாங்க.. ரொம்ப ஜாலியா இருந்துச்சு..”
“என்ன நீ தேவிம்மாட ஹோம்லயா இருக்க..?”
“ஆமா.. நான் மூன்று வயதில் இருந்து அங்க தான் இருக்கேன்..”
“அப்போ உனக்கு அம்மா, அப்பா..?”
“யாரும் இல்ல நான் ஹோம்ல தான் வளர்ந்தேன்.. அன்பு இல்லத்தில இருக்கிற சரோஜா தேவிமாதான் எனக்கு எல்லாமே..”
அப்போதுதான் அவனுக்கு அனைத்தும் மண்டையில் ஆணியில் அடித்தது போல உரைத்தது.
‘தேவி மா தனது இல்லத்தில் காணவில்லை என்று கூறிய பெண் இவள் தானா..? வீட்டில் உங்களை வைத்துக் கொண்டா நான் அவரை அங்கும் இங்கும் அலைய வைத்திருக்கின்றேன்..’
அவனது அனைத்து சிந்தனை முடிச்சுகளும் ஒவ்வொன்றாக கழறத் தொடங்கின.
இதனைக் கேட்டதும் இளஞ்செழியனுக்கு நெஞ்சை ஏதோ அடைப்பது போல் இருந்தது.