Episode – 35
“என்னது அவரு இவங்க அப்பாவா?, அப்போ நாங்க யாரு?, எங்க அம்மா, அப்பா யாரு?, எங்களுக்கும் கோடீஸ்வரனுக்கும் என்ன சம்பந்தம்?, அவர் எதுக்காக எங்க அப்பான்னு பொய் சொல்லணும்?, அப்படி என்ன வன்மம் எங்க மீது?, இவ்வளவு நாளும் எதுக்காக எங்கள வளர்க்கணும்?, இப்போ எதுக்காக கொல்லப் பார்க்கணும்?, தீரனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?, அப்போ தீரனும், ஆதியும் இவ்வளவு நாளும் எங்கள பாதுகாத்து வைச்சு இருந்தாங்களா?, நாங்க தான் தப்பா புரிஞ்சு கொண்டமா?, யாரு நல்லவங்க?, யாரு கெட்டவங்க?….” என பல கேள்விகளை மனதிற்குள் கேட்டுக் கொண்டு, எதற்கும் விடை தெரியாது, தெரியும் மார்க்கமும் புரியாது, மொத்தமும் குழம்பி போய் நின்று கொண்டு இருந்தனர் அபர்ணாவும், தமயந்தியும்.
இதில் அபர்ணாவை விட மொத்தமும் உடைந்து போய் நின்றது என்னவோ தமயந்தி தான்.
அவளுக்கு, “அபர்ணாவாவது சின்னப் பொண்ணுன்னு சொல்லலாம். ஆனா நான் எப்படி இப்படி ஏமாந்து போனன்?” என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்ற தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
நேரம் கடந்து போனதே தவிர, அவள் நிமிரவில்லை.
அவள் மீண்டும் நிமிர்ந்ததே, நர்ஸ் அழைக்கும் சத்தத்தில் தான்.
வந்தவர், “உங்க ஹஸ்பண்ட்ட நார்மல் வார்ட்ற்கு மாத்தியாச்சு. நீங்க போய்ப் பார்க்கலாம். பட் அவரு கண் விழிக்க இன்னும் ஒன் ஹவர் ஆகும்.” என கூற,
சோர்வுடன், “ஓகே.” என கூறியவள்,
அபர்ணாவை அங்கயே இருக்க வைத்து விட்டு, அவன் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அங்கு தீரன், கையில் கட்டுப் போட்டபடி படுத்து இருக்க,
அவனையே இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“என்னால தானே உங்களுக்கு இந்த நிலைமை?, ஒரு வார்த்தை முன்னமே சொல்லி இருக்கலாமே தீரா…. உண்மை இது தான்னு. நான் உங்க கூட சந்தோஷமா வாழ்ந்து இருப்பனே. உங்கள ஆரம்பத்துல எனக்கு பிடிக்கல தான். ஆனா போகப் போக உங்கள எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சுது. உங்க அன்பு, நல்ல குணம், அடுத்தவங்களுக்கு உதவி செய்ற குணம் எல்லாமே பிடிச்சுது.”
“ஆனா…. மறுபடியும் கலியாண விஷயத்தில உங்க மேல எனக்கு கோபம் வந்தது தான். அப்பவும், உங்கள என்னால முழுசா வெறுக்க முடியல. என்ன தான் வெறுக்கிறன், பிடிக்கலன்னு சொன்னாலும், அடியோட வெறுக்க முடியல. உங்க மேல எனக்கு எப்போ அப்படி ஒரு பாசம் உண்டாச்சுன்னு எனக்கே தெரியல. என் மனசுக்குள்ள உங்களுக்கான அசைக்க முடியாத இடத்த நான் கொடுத்து ரொம்ப நாள் ஆகுது. இப்போ, என் மனசுக்குள்ள மொத்த இடத்தையும் உங்களுக்கு கொடுக்கணும்னு தோணுது. ஆனா நீங்க என்ன ஏத்துக்கணுமே….” என தனக்குள் பேசிக் கொண்டவள்,
அவனின் அருகில் சென்று அமர்ந்து, அவனின் நெற்றியை வருடி, நெற்றியில் மென் முத்தமும் பதித்தாள்.
அவன் விழித்து இருக்கும் போது, அவளால் அவனை நெருங்க கூட முடியாது.
இருக்கும் கோபத்திற்கு வெளியே போக சொன்னால் கூட ஆச்சரியப் பட முடியாது.
அதனால் தான் அவன் மயக்க நிலையில் இருக்கும் போதே ஆசை தீரப் பார்த்து பேசிக் கொண்டாள் அவள்.
ஒரு மணி நேரம் கழித்து, தீரன் கண் விழிக்கும் நேரம், உடனடியாக எழுந்து வெளியே சென்று விட்டாள் அவள்.
தீரன் கண் விழித்ததும், முதலில் அவனைப் பார்க்க சென்றது என்னவோ ஆதி தான்.
“அண்ணாஆஆ….” என அழைத்துக் கொண்டு தீரனின் அருகே சென்றவன்,
“நீங்க ஓகேவா அண்ணா…. பெரிசா எதுவும் இல்லன்னு டாக்டர் சொன்னார். வேற எங்கயும் வலி இருக்கா?” என கேட்க,
“இல்லை.” என்பது போல தலையாட்டியவன்,
“நாடகம் மொத்தமும் முடிஞ்சுது இல்லடா?, சரி போகட்டும். எங்க அந்த ஆளு?, கண்டு பிடிச்சீயா?”
“இல்ல அண்ணா, ரொம்ப சேப்பா எங்கயோ இருக்கார் போல அண்ணா. இருக்கட்டும், ஒரு கட்டத்துல வெளில வரத் தானே வேணும். அப்போ பார்த்துக்கலாம் அண்ணா. விடுங்க. நீங்க சீக்கிரம் குணமாகி வாங்க அண்ணா.”
“ம்ம்ம்…. ஆனா இவ்வளவு கவனமா இருந்தும் அந்த ஆள் தமயந்திய கொலை பண்ண முயற்சி செய்து இருக்கானே. அத தான் என்னால ஜீரணிக்க முடியல.” என முகம் இறுகிப் போய் தீரன் கூற,
“இல்ல அண்ணா. இதில உங்க பிழை எதுவும் இல்ல. அந்த ஆள் அப்படி பக்காவா பிளான் போட்டு காய் நகர்த்தி இருக்கார். அதில அண்ணி புரியாம சிக்கிக்கிட்டாங்க. அந்த ஆள் சரியா வலை விரிச்சு இருக்கான் அண்ணா.” என கூற,
தீரனின் முகம் முன்னிலும் அதிகமாக இறுகிப் போக,
ஆதியைக் கூர்ந்து பார்த்தவன், “இல்ல ஆதி, அந்த ஆள் என்ன சொன்னாலும், உன்னோட அருமை அண்ணி நம்பி இருக்கலாமாடா?, நான் எவ்வளவு தூரம் ரிஸ்க் எடுத்து அவள பாதுகாத்து வைச்சு இருந்தன். நான் அவ்வளவு தூரம் சொல்லியும் கேட்காம மேடம் போய் இருக்காங்க. அப்படினா என் மேல ஒரு துளி அளவு கூட அவங்களுக்கு நம்பிக்கை இல்லன்னு தானே அர்த்தம்?”
“அண்ணா…. அண்ணி அவர் தனக்கு அப்பா என்கிற ஒரு உறவினால அப்படி நடந்து கொண்டு இருக்கலாம் தானே. நாங்க அந்த ஆங்கிள்ளயும் யோசிக்கணும் தானே….”
“ஓஹ்…. சார் உங்க அண்ணி பக்கம் பாய்ண்ட்ஸ் சேர்க்கிறீங்க போல வக்கீல் இல்ல அதான்….”
“அய்யோ அண்ணா. என்ன பேசுறீங்க நீங்க?, எனக்கு நீங்களும், அண்ணியும் ஒண்ணு தான். நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா இருந்தா அது மட்டும் போதும் அண்ணா.” என பதறியபடி கூறினான் அவன்
“ஹ்ம்ம்…. உன் அண்ணி பண்ணி வைச்சு இருக்கிற வேலைக்கு, அவளப் பார்த்தா நான் கொந்தளிக்காம இருக்கிற வரைக்கும் நல்லதுன்னு நினைடா.” என பெரு மூச்சுடன் கூறியவனின் வலி ஆதிக்கும் புரியத் தான் செய்தது.
“சரி அண்ணா, உங்கள எப்போ டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு கேட்டுட்டு வரேன். நீங்க ரெஸ்ட் எடுங்க.” என கூறி விட்டு அவன் செல்ல ஆரம்பிக்க,
“எங்கடா அபர்ணாவ காணல?” என கேட்டான் தீரன்.
ஆதியும், “அவ வெளில தான் நிக்குறா அண்ணா, கூப்பிடவா?
“இல்ல…. வேணாம்டா…. சின்னப் பொண்ணுடா அவ பாவம். அவளுக்கு இத எல்லாம் தாங்குற சக்தி இருக்கான்னு எனக்கு தெரியல, பக்கத்துல இருந்து பார்த்துக்கோடா. ஏங்கிப் போக விட்டுடாத.”
“ம்ம்ம்ம்…. சரி அண்ணா.”
“சரிடா, நீயும் சாப்பிட்டு அவங்களுக்கும் சாப்பாடு வாங்கிக் கொடுடா.”
“அவங்கன்னா யாரு அண்ணா, அண்ணியும், அபர்ணாவும் தானே அண்ணா….” என ஆதி தெரிந்து கொண்டே கேட்க,
அவனை முறைத்துப் பார்த்தவன்,
“சொன்னத மட்டும் செய், என்ன கேள்வி கேட்கிற வேலையை விடுடா. என்ன போட்டு வாங்குறீயா? நான் உன் அண்ணன்டா. உன்னோட அண்ணிய அவ்வளவு சீக்கிரம் நான் மன்னிக்கவே மாட்டன். போய் வேலையப் பாருடா.” என கூறவும்,
அவனும், “ஓகே அண்ணா.” என கூறி விட்டு செல்ல,
தீரனும், “அண்ணியாம் அண்ணி. அவ செய்து வைச்சு இருக்கிற வேலைக்கு அவளுக்கு இவன் சப்போர்ட் வேற.” என முணு முணுத்துக் கொண்டவன்,கண் மூடி சாய்ந்து அமர்ந்தான்.
ஆனால் அவனின் மூடிய கண்களுக்குள் அடிக்கடி வந்து போனது என்னவோ, அவனின் மதியை வாகனம் மோத வந்த காட்சி தான்.
“சே….” என்றபடி கண்ணை விழித்தவன்,
“எல்லாம் அவளால வந்தது. இப்படி பண்ணி வைச்சு இருக்கா?” என முணுமுணுத்து விட்டு முடிந்த வரையிலும் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தான்.
அந்த நாள் மட்டும் ரெஸ்ட் எடுத்து விட்டு, மறு நாள் காலையே அவன் வீட்டுக்கு போகலாம் என சொல்லப் பட்டது.
மதியத்திற்குப் பிறகு, அவனுக்கு உணவு கொடுக்க ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் மதி.
அவள் வந்ததும், அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன்,
எதுவும் பேசாது அமர்ந்து கொள்ள,
மதியும் கையைப் பிசைந்து கொண்டு, சற்று நேரம் நின்றாள்.
ஆனால், அவன் அமைதியாக இருந்தானே தவிர, அவளைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை, அவளை அமரும் படி கூறவும் இல்லை.
ஒரு கட்டத்தில் மதி தான், “தீரா, சாப்பாடு ஊட்டி விடட்டுமா?” என கேட்டாள்.
அவளின் கேள்வியில் ஒரு கணம் அவளை நிமிர்ந்து பார்த்தவன்,
“எனக்கு ஒரு கைல தான் அடி பட்டு இருக்கு. இன்னொரு கை நல்லாத் தான் இருக்கு. எனக்கு சாப்பிட தெரியும். சாப்பாட போட்டுக் கொடு, ஒரு ஸ்பூனும் கொடு போதும்.” என முகத்தில் அடித்தது போல கூறி விட்டு வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்து இருந்தான்.
அவனின் முகத் திருப்பலில் முற்றிலும் உடைந்து போனவள்,
“தீரா நான் செய்தது தப்புத் தான்.” என ஆரம்பிக்க,
“சாப்பாட்டை எடுத்து வைச்சிட்டு நீங்க கிளம்பலாம் தமயந்தி.” என இறுகிய குரலில் தீரன் கூறவும்,
அவனின் அந்த அழைப்பு சொன்ன விஷயம், நீ வெளியில் போக வேண்டும் என்பது மட்டும் இல்லை. அவனுக்கு தமயந்தியை பார்க்க விருப்பம் இல்லை என்பதும், நெருக்கமாக அழைக்கும் அளவுக்கு நீ இப்போது இல்லை என்பதுமே ஆகும்.
அந்த ஒற்றை அழைப்பில் அவளை ஒதுக்கி வைத்தவன், அவள் அறையை விட்டு வெளியில் போகும் வரைக்கும் அவளின் புறம் திரும்பவே இல்லை.
அந்த நேரம் மட்டும் அல்ல, அவள் அவனை நெருங்கிப் பேசும் போது எல்லாம், அவனது பதில் ஆம், இல்லை என்பது மட்டும் தான்.
அதுவும் ஒரு முகத் திருப்பலுடன் தான் வரும்.
அவன் ஆதியுடனும், அபர்ணாவுடனும் மிகவும் நல்ல விதமாகவே பேசினான். ஆனால் தமயந்தியிடம் அவன் பேசிய விதமே வேறு தான்.
அவளால் அதனை நேரடியாக அவனிடம் கேட்கவும் முடியவில்லை.
அதற்கான சந்தர்ப்பத்தை அவன் வழங்கவும் இல்லை.
மறு நாள் வீட்டுக்கு போனதும், தமயந்தி கேட்க முதல்,
அபர்ணாவே, “அத்தான் தயவு செய்து உண்மை என்னன்னு சொல்லுங்க. இதுக்கு மேல எங்களால தாங்க முடியாது. ப்ளீஸ் சொல்லிடுங்க.” என கை எடுத்துக் கும்பிட,
ஆதி, அவளின் கையைப் பிடித்துக் கொண்டான் என்றால்,
தீரனோ, “என்னம்மா நீ பெரிய வார்த்தை எல்லாம் பேசுறாய்?, அதான் அந்தக் கோடீஸ்வரனாலயும், உன்னோட அருமை அக்காவினாலயும், உண்மை சொல்ல வேண்டிய நிலை வந்துடிச்சே. அப்புறம் என்ன?, இப்பவே சொல்றேன்மா. ஆனா அத நீங்க இரண்டு பேரும் எப்படித் தாங்கப் போறீங்கன்னு தான் எனக்குத் தெரியல.”
“சரி, இங்க வைச்சு எதுவும் பேச வேண்டாம், என்னோட ஆபீஸ் ரூமுக்கு வாங்க. எல்லாமே சொல்றேன்.” என்றவன்,
ஆதி, மதி, அபி வந்ததும், ஒரு பெரு மூச்சுடன் மதியைக் கூர்ந்து பார்த்தவன்,
“ஏற்கனவே ஆதி சொன்னது போல, அந்த ஆள் உங்க அப்பா இல்லை. எங்களோட அப்பா. அத விட….” என ஒரு கணம் நிறுத்தியவன்,
“நீங்க இரண்டு பேரும் உண்மையான அக்கா, தங்கச்சி இல்லை.” என கூறி முடிக்கவும்,
மீண்டும் அங்கு ஒரு அதிர்வலை உருவாகி மறைய,
தீரனின் நினைவுகள் பின்னோக்கி செல்ல, அவன் நடந்த அனைத்தையும் கூற ஆரம்பித்தான்.
இதில் யார் யாருக்கு சொந்தம்?
பழைய கதையில் மறைந்து உள்ள உண்மைகள் என்ன?
நால்வரின் வாழ்க்கையும் எப்படி இணைக்கப் பட்டது?
அடுத்த எபி நாளை வரும் மக்காஸ் 😍😍😍
கதையின் அடுத்த ட்விஸ்ட் எப்படி இருக்கு மக்காஸ் 😍😍😍😍😍
கதை சீக்கிரம் முடிஞ்சிடும்…. மக்காஸ். ஜாலியா படிங்க 💖💖💖